Kathambari Novels
அத்தியாயம் – 27
சிவா பேசப் போவதாக சொன்னதால் நளினி, பிரவீன், செண்பகம் மற்றும் மதி அனைவரும் வீட்டின் வரவேற்பறையில் இருந்தனர்.
செண்பகம் அனைத்தையும் சொல்லியிருந்தார்.
ஏற்கனவே பாவை மீது கோபம் உண்டு. இப்பொழுது ‘தனியாக இருக்கிறாள்’ என்று சொன்னதும், நளினிக்கும் மதிக்கும் கோபம் மேலும் அதிகரித்தது.
நளினி, ‘ஏன் பாவை இப்படி?’ என்று தன் அதிருப்தியை அம்மாவிடம் கொட்டிக் கொண்டிருந்த நேரத்தில், பாவையைக் கூட்டிக் கொண்டு சிவா வந்தான்.
வெகு நாட்கள் கழித்து இருவரையும் சேர்ந்து பார்த்ததில் செண்பகம் முகம் முழுதும் சந்தோஷம் தெரிந்தது. உள்ளே வந்த பின்னும் தயக்கத்துடன் நின்ற மருமகளை, “வா பாவை” என எந்த நெருடலும் இல்லாமல் அழைத்தார்.
“ம்மா” என்று சிவா ஆரம்பிக்கும் போதே, “முதல ரெண்டு பேரும் உட்காருங்க” என்றதும், ‘என்னுடன் வா’ என்பது போல் சிவா தலையசைக்க, அவன் கூடவே சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டாள் பாவை.
நிரம்ப உணர்வுகள் கலந்த உடல்மொழியை பாவை வெளிப்படுத்தினாள். அன்று நடந்த நிகழ்வுகளின் நினைவுகளின் தாக்கமும் வெளிப்பட்டது.
கூடவே எல்லார் முன்பும் எல்லாவற்றையும் எப்படிச் சொல்ல என்ற தயக்கம் வந்திருந்தது. சொன்னபின் எப்படி எடுத்துப்பார்களோ என்ற தவிப்பும் கூடச் சேர்ந்து கொண்டது.
இப்படி நிறைய!
அம்மாவும், மகனும் யாரையும் காயப்படுத்தாமல் இந்த கணங்களை தாண்டி விடவேண்டும் என்ற முடிவில் இருந்தது போல் தெரிந்தார்கள்.
மதி, நளினி முகம் ஒருவித உடன்பாட்டின்மையை காட்டிக் கொண்டிருந்தன. பிரவீன் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், “ஹாய் பாவை” என்று சிரித்தான்.
சிரிக்க வேண்டுமே என்று மெல்லச் சிரித்து வைத்தாள்.
“ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?” என்று செண்பகம் கேட்டதும், “இல்லை. அப்புறம் பார்த்துக்கலாம்” என்றவன், “நீங்க உட்காருங்களேன் ம்மா” என்றான்.
“ஏன் சிவா?” என்று கேட்டுக் கொண்டே உட்கார்ந்தார்.
“அவ ஏதோ பேசணும்னு சொல்றா!”
“என்ன பேசணும் கண்ணா, அம்மா எல்லாம் சொல்லிட்டேன்” என்றார்.
“இருங்கம்மா” என்றபடி பாவையைப் பார்த்தவன், “ம், ஏதோ சொல்லணும்னு சொன்னீயே… சொல்றியா?” என்று கேட்டதும், ‘சொல்கிறேன்’ என்பது போல் தலையாட்டினாள்.
இப்பொழுது அனைவரின் பார்வையும் பாவை மீது இருந்தது. மேலும், என்ன பேசப் போகிறாள் என்ற பொருளில் இருந்தது.
பாண்டியனைப் பார்த்தவாறே, “எப்பவும் எனக்கு கௌசி மேல ஈர்ப்பு உண்டு. அது என்ன மாதிரி சொல்ல” என்று யோசித்தவள், “எனக்கு கௌசி வாழ்க்கை ஒரு முழுமையான வாழ்க்கையா தோணும்” என்றாள்.
எல்லோரும் அமைதியாக இருக்க, “அவங்களைப் பத்தி இப்ப எதுக்கு?” என்று பாண்டியன் கேட்டான்.
“உங்களைப் புரிஞ்சிக்காம நடந்துகிட்டதுக்கு கௌசிக்கு கிடைக்கிற மாதிரி அன்பு, அக்கறை எனக்கும் கிடைக்க நினைச்சதுதான் காரணம்” என்றாள்.
காரில் வரும்போது பேசியதையும், இதையும் இணைத்துப் பார்த்தான். அவள் தன்னை புரிந்து கொள்ளாமல் நடந்த கொண்ட நிகழ்வுகளை எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் கௌசியுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறாள் என்று புரிந்தது. மீண்டும் அவளைப் பார்த்தான்.
“ஃபர்ஸ்ட் நீங்க ஒரு ட்ரிப் போனீங்கள, அப்ப டிரைவர்…” என்று ஆரம்பிக்க, “பாவை” என அழைத்து, ‘போதும்’ என்பது போல், அவள் மணிக்கட்டில் தட்டி, “அவங்களோட கம்பேர் பண்ணிப் பார்த்திருக்க. அவ்வளவுதான?” என்றான்.
“ஆமா” என்றவள், “அந்த ட்ரிப்…” என்று மீண்டும் ஆரம்பிக்க, “டீடெய்லா நாம பேசிக்கலாம். இப்ப இது போதும்” என்று மெலிதான குரலில் உரியவளிடம் சொல்லிவிட்டு, உறவுகளைப் பார்த்தான்.
கணவன் பேச்சில் பாவையின் உடல்மொழியில் இருந்த தயக்கம், தவிப்பு இரண்டும் சற்று அடங்கியது.
“அவங்க மாமா பேமிலி பத்தி அம்மா சொல்லியிருப்பாங்கள! அதனாலதான், அவளால முதல எதும் சரியா புரிஞ்சிக்க முடியல. வேற ஒன்னுமில்லை” என்று நளினி, மதி இருவரையும் பார்த்துச் சொன்னான்.
உடனே நளினி, “ஸோ, நீதான் புரிஞ்சிக்காம நடந்திருக்க. கரெக்ட்டா?” என்று பாவையைப் பார்த்துக் கேட்டாள்.
“ம்ம் ஆமா” என்றாள் பாவை மெதுவாக.
“நீ புரிஞ்சிக்காம இருந்ததுக்கு, உன் பாட்டி வந்து என் அண்ணன் சட்டையைப் பிடிச்சி கேள்வி கேட்பாங்களா?” என்று கேட்டாள்.
சிவா ஏதோ சொல்ல வருகையிலே… பாவை “புரிஞ்சிக்காம இருந்தது நான். என்னய பத்திப் பேசுங்க. வேணிம்மா பத்தி எதும் சொல்லாதீங்க” என்றாள்.
அதற்கு நளினி பதில் தர எத்தனிக்கும் போதே, “இல்லாதவங்களைப் பத்தி பேச வேண்டாம் நளினி” என்று மதி மகளை நிதானப்படுத்தி, “இப்படித் தனியா இருக்கிறது என்ன பழக்கம்?” என்று பாவையைப் பார்த்துக் கேட்டார்.
“நல்லா கேளுங்கப்பா” என்று நளினி சொல்ல, ‘இவள் ஏன் இப்படி?’ என்பது போல் சிவாவும் செண்பகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அப்போ அதுதான் சரினு தோணிச்சி. இப்ப அ.. அவங்க மேல…” என்று பாவை எப்படிச் சொல்ல என்று தடுமாறும் போது, “என்கிட்ட சொல்லிட்டுத்தான் இருந்தா ப்பா” என்று சிவா முடித்துவிட்டான்.
மகன் பேச்சை ஒத்துக் கொள்வது போல் தலையசைத்து, “உங்க மாமா-க்கு தெரிஞ்சி ஏதாவது கேட்டா” என்று மதி மீண்டும் பாவையைப் பார்த்தார்.
“அவங்க யாரும் கேட்க மாட்டாங்க” என்றாள் பாவை மெதுவான குரலில்.
“நான்தான் சொன்னேன்ல, அவ பாட்டி குடும்பம் பத்தி” என்றார் செண்பகம்.
“அப்புறம் எதுக்கு நம்ம பையன்கிட்ட கோபமா பேசினாரு?” என்றார் மதி.
“அது அவரோட அம்மாகிட்ட கோபமா நடந்துக்கிட்டதுனால, சிவாகிட்ட அப்படிப் பேசியிருப்பாரு” என்று செண்பகம் சமாளித்தார்.
இதைத் தன்னிடம் சொல்லவே இல்லையே என்று பாவை கணவனைப் பார்த்தாள். இதைப் பற்றிப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று பார்வையாலே பதில் சொல்லி முடித்தான்.
நளினி, “உனக்கு யாரும் கேட்க இல்ல. கேட்க மாட்டாங்க” என்று பாவையின் குறையைச் சொல்லி, “ஆனா எங்க ரிலேட்டிவ்ஸ்க்கு தெரிஞ்சி, அண்ணாகிட்ட கேட்டா… அவனுக்கு எப்படி இருக்கும்னு நீ யோசிக்கலைல” என்று பாவை முடிவைக் குற்றம் சொன்னாள்.
பாவை, “அப்படிச் சொல்லாதீங்க. அவங்க மேல எனக்கு…” என்று தவிப்போடு பேச வர, அவள் கைப் பிடித்துத் தடுத்தான் பாண்டியன்.
மெதுவாகத் திரும்பி கணவனைப் பார்த்தாள்.
“சொல்லணும்னு நினைச்சதை சொல்லியாச்சுல? அவ்ளோதான் முடிஞ்சிருச்சு! ஏதாவது கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன்” என்றுவிட்டான்.
“அண்ணா” என்று சலுகையுடன் அழைத்துக் கொண்டு நளினி எழுந்து வர, “என்ன வேணும் உனக்கு” என்று செண்பகம் மகளின் முன் வந்தார். கணவர் கேட்பதே தேவையில்லை என்று நினைத்தவருக்கு, மகளின் கேள்விகளைப் பொறுக்க முடியவில்லை.
அம்மாவின் கேள்வியில் கொஞ்சம் அதிர்ந்தாலும், “ம்மா! அவகிட்ட கேள்வி கேட்காம என்கிட்ட வந்து கேட்கிறீங்க?” என்று கேட்டு நின்றாள்.
“அவகிட்ட என்ன கேட்கணும்?” என்று கேட்டார் அசராமல்!
“இப்படித் தனியா இருந்தது தப்பில்லையானு கேட்க வேண்டாமா?”
“உன் அண்ணங்கிட்ட சொல்லிட்டுத்தான இருந்திருக்கா! எதும் கேட்கணும்னா அவனைக் கேளு!” என்று மகனைக் கை காண்பித்தார்.
சிவாவும், “உனக்கெதும் கேட்கணும்னா என்கிட்ட கேளு நளினி, நான் பதில் சொல்றேன்” என்றான் தங்கையைப் பார்த்து!
நளினி அமைதியாக இருந்தாள். கேட்கமாட்டாள். கேட்க முடியாது. அவளால் அண்ணனை எல்லாம் கேள்வி கேட்க முடியாது.
“அவன்கிட்ட சொல்லாம ஏதும் செஞ்சிருந்தா, நானே கேட்டிருப்பேன். ஆனா இப்போ அப்படி இல்லை. அதனால அவளைக் கேள்வி கேட்காத!” என்றார் செண்பகம் விடாமல்!
அந்த அறையில், மீண்டும் ஓர் அசப்தம் நிலவியது. ஏன் அம்மா இப்படி என்ற கேள்வியுடன் நளினி நின்றாள். மனைவி மகளைக் கேள்வி கேட்டுக் கொண்டு நிற்பதில் துளியும் உடன்பாடில்லாமல் இருந்தார் மதி.
யாரையும் காயப்படுத்தாமல் இந்த சூழ்நிலையைக் கையாள வேண்டுமென சிவா நினைத்தான். தன் முடிவால்தான், இத்தனை களேபரமோ என்று பாவை மனதிற்குள் கலவரப்பட்டுக் கொண்டிருந்தாள்.
மகன் வாழ்க்கையில் மகளின் தலையீடு இருக்க கூடாது என்று நினைத்த செண்பகம், “ஆரம்பத்திலேயிருந்தே பாவையோட உனக்கு ஒத்துப் போகலை நளினி. அதான் உண்மை!” என்றார்.
“எதை வச்சி சொல்றீங்க?” என்றாள் மகள்.
“கல்யாண புடவை எடுக்கிறப்போ நீ சொன்ன மாதிரி எடுக்கலனு உனக்கு பாவை மேல கோபம்” என்றார் செண்பகம்.
“மேடைல நிக்கிறப்ப பர்பெஃக்ட் ஜோடியா தெரியணும்னு சொன்னேன், அதுல என்ன தப்பு” என்றவள், “இதோ இப்பகூட பாருங்க. அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ் எப்படி இருக்குனு?” என்று நளினி பாவையைச் சுட்டிக் காட்டினாள்.
“அதுல உனக்கென்ன பிரச்சனை நளினி” என்று சுள்ளென கேட்ட செண்பகம், “அன்னைக்கு ரெண்டு பேரும் ஒரே மாதிரி புடவை எடுக்கலாம்னு உன்கிட்ட பாவை கேட்டப்ப நீ ஒத்துக்கிட்டியா?” என்று கேட்டார்.
“ம்மா! பார்க்கிற வேலைக்கு ஏத்த மாதிரிதான் ட்ரஸ் போட முடியும்” – நளினி.
“அதேதான் அவளுக்கும். கோயிலுக்குப் போறா, கச்சேரி விசயமா ஆளுங்கள பார்க்கப் போவா. இல்ல அவங்க பார்க்க வருவாங்க. இப்படி இருந்தாதான் சரியா இருக்கும்னு நினைக்கிறா” என்றார் செண்பகம்.
“சரி அத விடுங்க. அண்ணன்கூட வெளிய போறப்பவாது, அவனுக்கு மேச்சா இவ கொஞ்சம் டிரஸ் பண்ணலாமே?” – நளினி.
“சிவா” என்று மகனை அழைத்த செண்பகம், “பாவையோட ட்ரெஸ்ஸிங்ல உனக்கு எதுவும் பிரச்சனை இருக்கா?” என்று கேட்டார்.
‘இல்லை’ என்று அவன் தலையசைத்ததும், “போதுமா! கூடப் போறவனுக்கே பிரச்சனை இல்லை. நீ ஏன்மா பிரச்சனை பண்ணற?” என்றார் மகளிடம்!
செண்பகத்தின் பேச்சிலிருந்த கடுமையை அனைவரும் உணர்ந்தனர். அதில் சிவா மட்டும், “ம்மா போதும் விடுங்க” என்றான்.
“உனக்கு சில விஷயம் தெரியாது. அதனால நீ பேசாம இரு. பாவை உன்னய எப்படி கூப்பிட்டா இவளுக்கென்ன? அதையும் பெரிய கம்பளைண்ட் மாதிரி வந்து சொன்னா” என்றார் செண்பகம் மகனிடம்.
“அப்படிக் கூப்பிடறது அண்ணனுக்குப் பிடிக்காது. அப்ப நான் சொல்லத்தான செய்வேன், அதுல என்ன தப்பு இருக்கு” என்றாள் நளினி.
“நீகூடத்தான் மாப்பிளையை ‘நீ, வா, போ’னு சொல்றது எனக்குப் பிடிக்காது. சொல்லிப் பார்த்தேன்? நீ கேட்டியா?”
“ம்மா! அது அன்புல… ஒரு உரிமையா கூப்பிடறது”
“அதே உரிமை, அதே அன்பு… பாவைக்கு சிவா மேல இருக்காதா”
நளினியிடம் பதிலேதும் இல்லை. அமைதியாக நிற்கும் மகளைப் பார்த்த செண்பகம், “உன்கிட்ட ஒன்னு சொல்லட்டுமா. அன்னைக்கு மாப்பிள்ளைகூட சண்டை போட்டு, இங்க வந்து இருந்தியே ஞாபகம் இருக்கா?” என்றார்.
நளினி யோசிக்க ஆரம்பித்தாள்.
“சிவா கூட… வெளியிலருந்து வந்து, ‘இவ ஏன் இங்க இருக்கா?’னு கேட்டதுக்கு, ‘மாப்பிள்ளை கூட சண்டை’னு நான் சொன்னேனே?” என்று அவள் யோசிக்க வசதியாகக் குறிப்புக் கொடுத்தார்.
ஞாபகம் வந்திருந்தது நளினிக்கு! ஆனால், ‘இது எதுக்கு இப்போ?’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ சிவா உன்கிட்ட அதைப் பத்தி ஏதாவது கேட்டானா?”
‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
“மாப்பிள்ளை உங்ககிட்ட வந்து சிவா எதும் கேட்டானா?” என்று பிரவீனைப் பார்த்துக் கேட்டார்.
“இல்லை அத்தை” என்ற பிரவீன், எழுந்து நளினி அருகில் வந்து நின்றான்.
“இப்ப ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க?” என்றாள் நளினி இன்னும் புரியாமல்.
“அவன் எப்படி நம்ம பர்சனல் விஷயத்தில தலையிடாமா இருக்கானோ, அது மாதிரி இருனு சொல்றாங்க” என்று மனைவிக்குப் புரிய வைத்தான் பிரவீன்.
நளினியின் முகம் ஒருமாதிரி ஆனதும் மதியும் எழுந்து வந்து மகளின் அருகில் நின்று, “செண்பா…” என்று ஆரம்பிக்க, “புரிஞ்சிக்காம இருந்தாங்க. இப்போ புரிஞ்சிக்கிட்டாங்க. அவ்வளவுதான்” என்று தணிந்த குரலில் சொன்னார்.
மதி கேள்வியாக மனைவியைப் பார்க்கவும், “ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க. நான் பார்த்திட்டேன். நீங்களும் பார்ப்பீங்க” என்றார் செண்பகம் கணவரின் பார்வையைப் புரிந்து!
எல்லா கேள்விகளுக்கும் செண்பகத்திடம் பதில் இருந்தது! கேட்பதற்குத்தான் கேள்விகள் இல்லை!!
கடைசியில் நளினி, “நீங்க எப்பவும் பாவைக்குத்தான சப்போர்ட் பண்ணி பேசுவீங்க” என்றாள் கரகரத்த குரலில்!
“இவ்வளவு பேசினதுக்கப்புறம் இதை நீ சொல்லாம இருந்தாதான் ஆச்சரியம்” என்றவர், “அவங்க ரெண்டு பேருக்கும் டின்னர் ரெடி பண்ணனும், நான் போறேன்” என்று சமயலறைச் சென்றுவிட்டார்.
“பிரவீன் நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று கண்கலங்க நளினி சொல்லும் பொழுது, “ஒரு நிமிஷம்” என்று சிவா பாவையிடம் சொல்லிவிட்டு, தங்கை முன்னே வந்து நின்றான்!
அண்ணனைப் பார்த்தும் கண்ணீர் வந்துவிட, “நான் பேசினதில எதும் தப்பு இருக்கா ணா” என்றாள்.
“நான் ஒண்ணே ஒன்னு கேட்கிறேன். நீயே முடிவு பண்ணிக்கோ” என்றான் சிவா தங்கையின் கண்ணீரைத் துடைத்து விட்டபடியே!
‘என்ன?’ என்பது போல் அண்ணனையே பார்த்தாள்.
“நீ… அவ வளர்ந்த சூழ்நிலையால புரிஞ்சிக்காம நடந்துக்கிட்டதை மட்டுமே பேசற! ஏன் நான் பண்ண தப்ப பத்தி எதுவும் சொல்ல மாட்டிக்கிற?”
“நீ என்னண்ணா தப்பு பண்ண?”
“அன்னைக்கு அவளை வெளியே போ-ன்னு சொன்னது. அது எவ்வளவு பெரிய தப்பு, நீ ஏன் அதைப் பத்தி எதுவுமே பேசலை?”
“ஆனா அவளும்…” என்று ஆரம்பிக்கவும், “அதேதான் நளினி! ரெண்டு பேரும் புரிஞ்சிக்காம நிறைய பேசிருக்கோம். அதுல ஒருத்தரை மட்டும் சொல்லக் கூடாது” என்றான் சிவா.
“சரி-ண்ணா சொல்லல” என்றவள், “ஆனா, அவகூட ஃபிரீயா மூவ் பண்றதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றும் கேட்டுக் கொண்டாள்.
சிவா எதுவும் சொல்லவில்லை. புரிந்து கொள்வதற்கு பாவைக்கு ஒரு கால அவகாசம் தேவைபட்டது போல் நளினிக்கும் தேவை என்று தோன்றியது. மேலும் இதில் உரிமைப் போராட்டம் இருப்பது போலவும் உணர்ந்தான்.
ஆதலால் எதுவும் பேசவில்லை.
“அப்புறம் இந்த அம்மா ரொம்ப திட்றாங்க. இப்போ இல்லை. முதல இருந்தே! நீ இத என்னென்னு கண்டிப்பா கேட்கணும் ண்ணா” என்று அம்மாவைப் பற்றி அண்ணனிடம் தங்கை முறையிட்டாள்.
சிவா சிரிக்க மட்டும் செய்தான்.
இதற்கிடையே பாவை தனியாக அமர்ந்திருப்பதை பார்த்த பிரவீன், “போதும் வா! நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று நளினியை அழைத்துச் சென்றான்.
மகளும் மருமகனும் சென்றதும், “சாப்பிடுங்க” என்று பொதுவாகச் சொல்லி, மதியும் அறைக்குச் சென்றுவிட்டார்.
அதன்பின் சற்று நேரத்திற்கு செண்பகம் பரிமாறினார்! இருவரும் உண்டனர்! மூவரும் பேசிக் கொண்டனர்! இவை மட்டுமே அந்த அறையில்!!
சாப்பிட்டு முடித்தபின் இருவரும் அவர்களது அறைக்குள் வந்தனர். இனிமேல் தனித்தனியாக இருக்கப் போவதில்லை என்ற ஒன்றே இருவருக்கும் கனியாக இனிக்கச் செய்தது.

