Kathambari Novels
அத்தியாயம் – 25
“அது… அது…” என்று தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருந்தாள் பாவை!
அதைக் கண்டு, “நீ மாறப்போறது இல்ல! எப்பவும்…” என்று சொல்ல, “ப்ளீஸ் ப்ளீஸ் எதும் சொல்லிடாதீங்க! இது ரொம்ப முக்கியமான விசயம்” என்று மடமடவென பேசினாள்.
“சரி சொல்லு”
எப்படிச் சொல்ல என்று யோசித்துக் கொண்டே, அறையைச் சுற்றிப் பார்த்த போது அவன் கொண்டு வந்த பை கண்களில் பட, “அது என்ன பேக்?” என்றாள், சம்மதத்தைச் சொல்ல சம்மந்தமில்லாமல் ஒரு கேள்வி எழுப்பி!
“ஒரு ப்ரோக்ராம் இருக்கு, ஃபார்மல் டிரஸ் எடுத்திட்டு வந்திருக்கேன்” என்றான் சுருக்கமாக!
“என்ன ப்ரோக்ராம்” என்றாள் விரிவான பதிலை எதிர்நோக்கி!
“நீயும் வரப்போற! அப்போ தெரிஞ்சிக்கோ” என்றான் அதைவிட சுருக்கமாக!
‘அய்யோ’ என்றிருந்தது பாண்டியனின் பாவைக்கு!
அவள் பேசுவது போல் தெரியவில்லை என்றதும், “வந்து பேசிக்கலாம் பாவை! கிளம்பு. லேட்டாகுது” என்று எழுந்து விட்டான்.
“இப்பவேவா?” என்றாள் எழுந்தவனை நிமிர்ந்து பார்த்து!
“ஆமா!” என்றதும் வேறுவழியில்லாமல் ‘சரி’ என்று எழுந்தாள்.
“நீ கிளம்பு! ஒரே ஒரு கால் பண்ணிட்டு வந்திடறேன்” என்று கதவைத் திறந்து முற்றத்திற்குச் சென்று பேசினான். மாலை வெயிலில் நின்று அலைபேசியில் பேசுபவனை சற்று நேரம் பார்த்துவிட்டு கிளம்பச் சென்றாள்.
அவள் தயாராகி அறையிலிருந்து வெளிவரும் போது பாண்டியன் அலைபேசி பேச்சை முடித்து உள்ளே வந்திருந்தான். அவனைப் பார்த்தபடி புடவையைச் சரி செய்தாள். எப்படிப் பேச்சைத் தொடரலாம் என்று நினைத்தவளுக்கு ஒரு யோசனை வந்தது.
உடனே, ‘எப்படி இருக்கிறேன்?’ என்று கேட்பது போல் அவன் முன்னே சென்று நின்றதும், ‘என்ன?’ என்பது போல் பார்த்தவன், “ஓ! கிளம்பியாச்சா? குட்” என்று பாராட்டி, தன் உடையை எடுக்கச் சென்றான்.
‘கிளம்பியாச்சா-வா?’ என்று அலுத்துக் கொண்டவள், மீண்டும் கணவன் முன் சென்று, “நான் எப்படி இருக்கேன்னு சொல்லுங்க?” என்றாள் ஆர்வமாக!
“ம்ம்ம்! லுக்கிங் ஹாட்” என்றான் ஆர்வக் கோளாறாய்!
‘ஆங்’ என்று லேசாக வாய் திறந்து நின்றவளிடம், “ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வந்திடறேன்” என்று நகர்ந்துவிட்டான்.
இவருக்கு என்னாச்சு? ஏன் இப்படிப் பேசறாங்க? என்று நினைத்தாலும், அவன் எதிரே மீண்டும் சென்று நிற்க, ‘இப்போ என்ன?’ என்பது போல் நின்றான்.
“நான் நல்லா இருக்கேனா இல்லையானு கேட்டேன்” என்றாள், ‘உன் ஆர்வத்தில் கோளாறு உள்ளது’ என்பது போல!
“ஓ!” என ஓகார ஒலியசைவில் ஆரம்பித்து, “அப்படி சாய்ஸ் கொடுத்திடு ஹனி. இல்லனா சான்ஸ் எடுக்கிறேன் பார்த்தியா” என்று, விவகார விழியசைவில் முடித்தான்.
‘இவங்க இப்படியெல்லாம் பேசமாட்டாங்களே!?’ என்று குனிந்து யோசித்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால் கஷ்டப்பட்டு, அதைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
மேலும், இவ்வளவு நேரம் அவளின் செயல்களைக் கவனித்தவனுக்கு, அவள் மனமாற்றத்தைக் கணிக்க முடிந்தது. அப்படிக் கணித்தவனின் காதல் மனம் எக்கச்சக்க இறக்கைகள் கட்டிப் பறந்தது.
பாவை நிமிர்ந்து பார்த்ததும், “என்ன விஷயம்?” என்றான் ஏற்ற இறக்கம் இல்லாத குரலில்!
‘இரக்கமே இல்லையா?’ என்பது போல் பார்த்து நின்றாள்.
“இப்போ என்ன? நீ எப்படி இருக்கன்னு சொல்லணும்! அவ்வளவுதான?” என்று ஆறுதலான குரலில் கேட்டான்!
அவன் சொல்லும்போதே தன் எண்ணத்தை சொல்லிவிட வாய்ப்பு அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன், ‘ஆமா! ஆமா!’ என தலையாட்டினாள்.
“டூ நைன் பைவ் டூ” என்று எண்ணத்தை எண்களால் சொல்லிவிட்டு, சிரித்தபடி கடந்து செல்லவும், ‘திரும்பவும் நம்பரா’ என்று நொந்து போன தோற்றத்துடன், மீண்டும் அவன் முன்னே வந்து நின்றாள்.
“என்ன ஹனி?” என்றான்.
“சத்தியமா எனக்குப் புரியலைங்க, இந்த நம்பருக்கு என்ன அர்த்தம்?” என்று பாவமான குரலில் கேட்டாள்!
“ஹே ஹனி! உன்னை கியூட்ன்னு சொன்னேன்” என்றான் குதூகலமாய்!
“இதுவும் அதே பீரியாடிக் டேபிள்?” என்றாள் குதறும் பார்வையுடன்!
‘ம்ம்’ என்று தலையாட்டினான் பதறாமல்!
“ஏன்? புரியிற மாதிரி பேசற ஐடியாவே இல்லயா?” என்றாள் அவனைச் சாடும் குரலில்!
“முதல புரியிற மாதிரிதான சொன்னேன். நீதான்…” என்று அவளைச் சீண்டும் குரலில், தன் ‘ஆர்வக் கோளாறு’ பற்றிப் பேசும் போதே, “ப்ச் அத விடுங்க” என்று சிடுசிடுத்தாள்.
“ஓகே ஓகே பேசல”
“எப்பவும் மூளையால மட்டும்தான் யோசிப்பீங்களோ?” என்றாள், அவனைக் குற்றம் சாட்டும் குரலில்!
“எனக்கு மனசே கிடையாதானு இன்டேரெக்ட்டா கேட்கிற நீ?”
“ச்சே ச்சே அப்படியில்ல” என்று அவசரமாக மறுத்தாள்.
“அப்படித்தான்” என்று அடித்துச் சொன்னான்.
“சரி அப்படித்தான்! பதில் சொல்லுங்க” என்றுவிட்டாள்.
“மூளை யோசிக்கிறதை மனசு ஒத்துக்கப் போய்தான், பேச்சு மாறாம இருக்க முடியுது!” என்றான்.
“இதுக்குப் பதில் சொல்லாமலே இருந்திருக்கலாம்” என்றாள் உள்நாக்கிற்குள்.
“சத்தமா பேசு” என்றான்.
‘எனக்கென்ன பயமா?’ என்பது போல பார்த்துவிட்டு, “அப்போ நீங்க மனசால யோசிக்க மாட்டிங்களா?” என்றாள்.
“யோசிப்பேனே?”
“அப்படியா!? எங்கே இப்போ உங்க மனசு என்ன யோசிக்குதுனு சொல்லுங்க பார்ப்போம்” என்று அவனை வம்பிழுப்பது போல் பேசினாள்.
வம்பிழுத்தவளின் தோள்களை வாகாகப் பற்றி… வசமாகக் குனிந்து… அவள் கன்னத்தில் ஒரு காதல் முத்தம் வைத்தான் பாவையின் பாண்டியன்!
முத்தத்தின் முடிவில், எதற்கிந்த முத்தம்? என்ற அர்த்தங்களுடன் அவனை அவள் பார்க்க, “நீதான கேட்ட, மனசு இப்போ என்ன யோசிக்குதுனு” என்றான்.
‘அதற்கென்ன?’ என்பது போல் ஒரு பார்வை! ‘ஆமாம்’ என ஒரு தலையசைப்பு! மொத்தத்தில் முரண்பாடாய் பாண்டியனின் பாவை!!
“இதான் யோசிச்சது” என்றான், முத்தம் வைத்தக் கன்னத்தை மெத்தனமாகச் சுட்டிக் காட்டியதும், கன்னத்தைத் தொட்டுப் பார்த்து, “என்ன யோசிக்குதுனு சொல்லத்தான சொன்னேன். எதுக்கு செஞ்சி காட்டினீங்க?” என்றாள்.
‘ஓ! அவ்வளவு விவரமா நீ?’ என்று உள்ளுக்குள் சிரித்தவன், “சாரி கேள்விய சரியா கவனிக்கலை” என்று சொல்ல, ‘பரவால்ல’ என்பது போன்று தோளைக் குலுக்கிக் கொண்டாள்.
“மனசு இப்போ இன்னொன்னும் யோசிக்குதே ஹனி” என்று அவன் சொல்ல, ‘இன்னொரு முத்தமா?’ என்பது போல் மற்றொரு கன்னத்தைக் காட்டினாள்.
“உனக்கு வேணும்னா சொல்லு ஹனி” என்றான் தாறுமாறான தாராளத்துடன்!
‘வேண்டாம்’ என்று தலையசைத்து, “நீங்க… உங்க மனசு என்ன யோசிக்குதுனு சொல்லுங்க” என்று அவன் தாராளத்திற்குத் தடை போட்டாள்.
“என் மனசு ஹனி ஏன் கிஸ் பண்றதேயில்லனு யோசிக்குது” என்று மீண்டும் அவளைத் தடுமாறித் தத்தளிக்க வைத்தான்.
அவனிடம் முத்தம் வாங்கித்தானே வரலாறு இருக்கிறது. அவள் கொடுத்தே வழக்கமில்லை என்பதால், “அதுக்கு” என்றாள் காற்றாகிப் போன குரலில்!
‘கன்னத்து முத்தமொன்று தா’ என்று காதலுடன் கேட்டுக் கொண்டு நின்றான், பாவையின் பாண்டியன்!
“இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு, பேசறதெல்லாம் இப்படியே பேசிக்கிட்டு இருக்கீங்க?”
“உனக்கு என்னாச்சுனு சொல்லு? சும்மா குறுக்க குறுக்க வந்து நின்னுகிட்டு, ஒன்னுமே சொல்லாம, கிளம்பவும் விடாம” என்று கிளம்பச் சென்றான்.
அவன் அப்படிச் சொன்னதும், ஒரு முடிவோடு மீண்டும் அவன் முன்னே வந்து நின்று, “எனக்கு என்னாச்சுன்னு கேட்டீங்கள? சொல்றேன்” என்றாள்.
‘சொல்லு’ என்பது போல் கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றான்.
“பைவ் த்ரீ செவன் ஒன் டூ த்ரீ நைன் டூ ” என்று எண்களுக்கு இடைவெளிவிட்டு இதயத்தின் எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டு, “இப்ப போங்க… போய் எங்க கிளம்பணுமோ கிளம்புங்க” என்று போய்விட்டாள்.
இப்பொழுது அவன் முறை! அதாவது குறுக்கே வந்து நிற்பது!!
முன் வந்து நின்றவனிடம், “அதான் சொல்லிட்டேனே. அப்புறம் என்ன?” என்று அசட்டையாக சொல்ல, “இது என்ன நம்பர்” என்று புரியாமல் கேட்டான்.
‘ஆங்! என்ன நம்பரா?’ என்று அதிர்ச்சியில், “லவ் சொல்றதுக்கு நீங்க சொல்லுவீங்களே, அதான்” என்றாள் அந்த அதிர்ச்சி மாறாத குரலில்!
அவன், “ஓ!” என்று சொன்னதும், “உங்களுக்கே மறந்துடுச்சா” என்று சிரிக்க, “ச்சே, ச்சே அதெப்படி மறக்கும்?” என்றவன், “நீ சொன்னது அந்த நம்பர் இல்ல. அதான் கேட்டேன்” என்றான் சாவகாசமானக் குரலில்!
சட்டென சிரிப்பை நிறுத்தி, “ஐயோ தப்பா?” என்று நொந்து போய் கேட்டாள், சிறப்பாய் சொல்ல ஆசைப்பட்டு தவறாய் முடிந்த செயலை நினைத்து!
“ம்ம்ம் தப்புதான்” என்றான்.
“என்ன சொல்றீங்க? நல்லா மனப்பாடம் பண்ணி வச்சிருந்தேனே? அதெப்படி தப்பா போகும்??”
“நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன். எனக்குத் தெரியாதா ஹனி? நீ சொன்னது தப்பு”
‘தப்பா’ என்று தனக்குள் கேட்டு, அலைபேசியை எடுத்துப் பார்க்கப் போனாள்.
ஆனால் அதற்கு பாண்டியன் விடவில்லை. அவளைத் தடுத்து, “ஹலோ! என்ன பண்ணப் போற?” என்று கேட்டான்.
“ஃபோன்ல பார்த்து சரியா…” என்று அவள் சொல்லும் போதே, “சொல்ல போறது ஐ லவ் யூ! இத பார்த்து வேற சொல்லுவியா?” என்றான் நக்கலாக.
நீயென் ஜீவஸ்வரம் என்று சொல்வதற்குள் என் ஜீவனுக்கே ஜுரம் வந்துவிடும் என்பது போல அவனைப் பார்த்தாள்.
“எதுக்கு இதெல்லாம்? நீ எப்படிச் சொல்லணும்னு நினைச்சியோ அப்படியே சொல்லு” என்றான்.
முதலில் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தாள். அடுத்து, “பாண்டியன்” என்று ஆசையாக அழைத்து, அவன் புஜத்தை ஆதரவாகப் பிடித்து, அவளுக்குத் தோதாக குனியச் செய்து அழுத்தமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ” என்று ஆற, அமரச் சொன்னாள்.
அவன் ஏதோ பேச வர, அதற்கு இடம் கொடுக்காமல், “நீங்க கேட்ட மாதிரி கிஸ் பண்ணிட்டேன், மூணு தடவை ஐ லவ் யூ சொல்லிட்டேன். போதுமா?” என்றாள்.
‘போதும்’ என்ற ஒரு சிரிப்பு… “ஆனா கௌன்ட் தப்பே ஹனி” என்ற ஒரு சீண்டல் அவனிடம்!
‘தப்பா, அதெப்படி மூனுதான?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், “நாலு தடவையா, நிஜமாவா” என்று கேட்டாள்.
‘ஆமா’ என்று தலையாட்டி, “தேன்பாவை” என்று தீஞ்சுவையாக அழைத்து தீராத காதலுடன் அணைத்துக் கொண்டான்.
“அப்ப நான் முதல சொன்ன நம்பர் சரிதான், இல்லயா” என்று அவன் அணைப்பிலிருந்து அகல முயற்சித்துக் கொண்டே கேட்டாள்!
‘ஆமாம்’ என்ற அர்த்தங்களோடு சிரிக்கத் தொடங்கினான். மேலும், அகலாதே என்ற அர்த்தங்களுடன் அணைத்துக் கொண்டான்.
செல்லக் கோபத்துடன், “உங்கள… பொய் பொய்” என்று அணைத்திருந்தவனை அடிக்க தொடங்கினாள்.
சற்று நேரமாகவே அவள் செயல்களை ரசித்தவன் இதையும் ரசித்தான். “ஹனி இப்படி உன்கூட பேசறது நல்லாதான் இருக்குது! ஆனா லேட்டாகுது” என்றதும், அவள் விலகிக் கொள்ள, “வந்து பேசலாம்” என்று உடை மாற்றப் போனான்.
அறையைச் சுற்றிப் பார்த்தாள். இத்தனை நாட்கள் எப்படி இங்கே இருந்தோம் என்று தோன்றியது. இனி ஒரு நொடிகூட இங்கே இருக்க முடியாது என்ற எண்ணம் வலுத்துவிட்டது. சற்றுநேரம் அப்படியே நின்றவள், உடை மாற்றிக் கொண்டு வந்தவனை வேகமாகச் சென்று கட்டியணைத்துக் கொண்டாள்.
“என்னாச்சு ஹனி?” என்றான் கனிவோடு!
“என்னை இன்னைக்கே உங்ககூட கூட்டிட்டுப் போங்க. இங்க தனியா இருக்க பிடிக்கல” என்றாள்… கவலையிலும் காதலிலும் தோய்ந்தெடுத்தக் குரலில்!
கன்னத்து முத்தம், களிப்புடன் சொல்லப்பட்ட ‘ஐ லவ் யூ’-கள் வெளிப்படுத்திய
காதலை விட, இப்பொழுது வெளிப்பட்ட காதல் அதீதம் என்று தோன்றியது பாண்டியனுக்கு!
உணர்ச்சிவசப்பட்டு அமைதியாக இருந்தான்.
“என்ன யோசிக்கிறீங்க? கூட்டிட்டுப் போக மாட்டிங்களா?” என்றாள்.
“ப்ச், என்ன பேசற?” என்று கண்டித்தவன், “அம்மாக்கு மட்டும்தான் தெரியும்! மத்தவங்ககிட்ட சொல்லணும். ப்ரோக்ராம் முடிஞ்சி வீட்டுக்குப் போனதும் எல்லார்கிட்டையும் பேசிட்டு, உன்னை கூட்டிட்டுப் போறேன்” என்றான்.
“அவங்க என்ன சொல்லுவாங்க??” என்றாள் ஒரு பரிதவிப்புடன்.
“அவங்ககிட்ட சொல்லணும்னுதான் சொன்னேன். பர்மிசன் கேட்கணும்னு சொல்லலை” என்றான்.
“அப்ப நான் போய், வீடு காலி பண்றேன்னு ஓனர்கிட்ட சொல்லட்டுமா” என்று அடுத்த நொடியே அவனுடன் சென்று விடவேண்டும் என்பதுபோல் கேட்டாள்.
அவன் யோசித்தான்.
“என்ன திரும்பவும் யோசிக்கிறீங்க?
“ஒன்னுமில்ல போய் சொல்லிட்டு வா” என்று சொல்ல, கடகடவென ஓடினாள்.
அவள் சென்ற உடனே தன் அம்மாவை அலைபேசியில் அழைத்தான்.
“சொல்லு கண்ணா” என்றார் அழைப்பை ஏற்று!
“ம்மா! அப்பா, நளினி, பிரவீன்கிட்ட கொஞ்சம் பேசணும். டின்னர் சாப்பிட்டு வெயிட் பண்ணச் சொல்றீங்களா?”
“எதுக்கு சிவா?”
“பாவை வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டா”
“கூட்டிட்டு வரவேண்டியதுதானே? இவங்ககிட்ட என்ன பேசப் போற?” என்றார் சந்தோஷத்தில்!
“இத்தனை நாள் அவ தனியா இருந்ததைப் பத்திச் சொல்லணும். நளினியோ அப்பாவோ ஏதாவது கேட்டா, நானே விளக்கம் சொல்லி முடிச்சிடலாம்னு பார்க்கிறேன். பாவை வந்தப்புறம், அவகிட்ட யாரும் ஏதும் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது பாருங்க” என்று காரணத்தையும் சொன்னான்.
“அதுவும் சரிதான்” என்றவர், “நானும் மேலோட்டமா விஷயத்தைச் சொல்லி வைக்கிறேன்” என்றவர், “பாவை இருக்காளா?” என்று அவளிடம் பேச வேண்டுமென்ற ஆசையில் கேட்டார்!
“கீழே போயிருக்கா” என்றவன், “ப்ரோக்ராம்க்கு லேட்டாகுது. வீட்டுக்கு வந்து பேசறேன் மா” என்று அழைப்பைத் துண்டித்தான்.
************************
2952:
Copper (Cu): Atomic number 29.
Tellurium (Te): Atomic number 52.
53712392 :
53 (I): Iodine
71 (Lu): Lutetium
23 (V): Vanadium
92 (U): Uranium

