Kathambari Novels
அத்தியாயம் – 24
அடுத்து எட்டு நாட்கள் கடந்திருந்தன! கச்சேரி பாடலுக்கான பயிற்சி, அபங் பயிற்சி வகுப்புகள், வீட்டு வேலைகள் பார்ப்பது, பாண்டியனுடன் பேசுவது என இளைப்பாற நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.
அன்று வகுப்புகள் இல்லை என்றதும், கச்சேரிக்கு உடுத்தப் போகும் பட்டுப் புடவைக்கு குஞ்சம் வைக்க நினைத்தாள்.
பழக்கமான ஒன்றுதான்!
பட்டுநூல் வாங்கி வந்திருந்தவள், அதில் சிறு மணிகள் கோர்ப்பது, குஞ்சங்கள் அமைப்பது, அதை புடவை முந்தானையில் வைத்து தைப்பது என்று… மூழ்கிப் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்றைய நாள் மத்தியான நேரத்தைக் கடந்து சென்றபொழுது பாண்டியன் வந்தான். வெளிச்சத்திற்காகத் திறந்து வைத்திருந்த கதவருகே நின்று, “ஹாய்” என்றான் காலணிகளைக் கழட்டிக் கொண்டே!
நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். பின் தைக்க ஆரம்பித்தாள். உள்ளே வந்தவன், கொண்டு வந்த பையை ஓரமாக வைத்துவிட்டு, “இதலாம் பண்ணுவியா” என்று கேட்டான்.
“ம்ம்” என்றாள் செய்யும் வேலையில் கவனம் இருந்தபடியே!
புடவை அழுக்காகாமல் இருக்க பாவை விரித்திருந்த பாயில் அமர்ந்த சிவா, அவளுடன் பேசியபடி இருந்தான். சரியான கவனத்துடன் அவள் பேசவில்லை. என்று தெரியவும் பாயின் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டான்.
பாவை அவள் வேலையில் மும்முரமாக இருந்தாள். அது முடிந்ததும், கணவன் படுத்திருந்ததைப் பார்த்துவள்… எழுந்து சென்று கதவை அடைத்துவிட்டு வந்து புடவையை மடித்து வைத்தாள்.
அவன் அருகில் அமர்ந்து தோளில் கை வைத்ததும், “முடிச்சாச்சா?” என்றவன், கையைத் தலைக்கு அணைவாக வைத்துக் படுத்து கொண்டான்.
“ம் பாட்டு ப்ராக்டிஸ், வீட்டு வேலை அப்படினே இருந்ததா, அதான் கொஞ்சம் ரிலாக்ஸாக…” என்று சொல்லுகையில், “மீ டைம்” என்று மட்டும் சொன்னான்.
சட்சட்டென சில நிகழ்வுகள் கண் முன் வந்து நின்றன பாவைக்கு!
‘ஒரு ஒன் அவர் கொடு, ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்து பேசறேன்’ என்று அவன் சொன்னது! ‘இல்லை என்னிடம் பேசு’ என்று அவள் சொன்னது! பின், ‘அவாய்ட் பண்றீங்க’ என்று வாக்குவாதம் செய்தது!
இப்படியெல்லாம் கண்முன் காட்சிகளாக விரிந்தன!
‘ஏன் அப்படி?’ என்று நினைக்கும் போதே, இன்று தனக்கான நேரத்தை அவன் தொந்தரவு செய்யாதது புரிந்தது.
“பாவை” என்றான். படுத்திருந்தவனைப் பார்த்தாள்.
“நம்மளோட ரொட்டின் லைஃப்ல, கண்டிப்பா மைன்ட் டயர்ட் ஆகும். மைன்ட் ரிலாக்ஸ் ஆகாம ஓடிக்கிட்டு இருந்தா, ஒரு கட்டத்திலே என்ன வாழ்க்கைனு சலிப்பு வந்திடும்!
ஸோ இந்த மாதிரி மீ டைம் எடுத்து மைன்ட்அ ரீசார்ஜ் பண்ணிக்கணும்.
ரிலாக்ஸ் ஆகமாலே இருந்தா கண்டிப்பா அது ரிலேஷன்ஷிப்ப பாதிக்கும். ரிலாக்ஸ் ஆகிட்டா, போரிங்நெஸ் போயி ரிலேஷன்ஷிப் ஸ்ட்ராங் ஆகும்.
சிம்பிளா அது உனக்கான நேரம்! உனக்கு என்ன செய்ய பிடிக்குதோ அதைப் பண்ணனும். அந்த நேரத்தை நான் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது!!” என்று தன் அன்பின் அறிவியலை விளக்கினான்.
“இப்ப புரியுது, ஆனா அன்னைக்கு நீங்க என்னை அவாய்ட் பண்றீங்களோனு நினைச்சேன்” என்றாள்.
“ஹே ஹனி! உன்னை அவாய்ட் பண்ணிட்டு நான் என்ன பண்ண போறேன்?” என்றான், உன்னை தவிர்க்கவில்லை! நீ என் வாழ்வில் தவிர்க்க முடியாதவள் என்பது போல!
சொன்னதோடு நிற்காமல் தன்னவள் மடியில் தலை வைத்துக் கொண்டான்.
“என்ன இது?” என்றாள் திகைப்பு, தித்திப்பு இரண்டும் சரிவிகிதமாக கலந்த குரலில்!
“மீ டைம் முடிஞ்சிருச்சுல? இது வி டைம்! இப்படிதான்!!” என்றான், அவள் குரலிலிருந்த திகைப்பை ஒதுக்கிவிட்டு, தித்திப்பை எடுத்துக் கொண்டு!!
அவனது பேச்சில் அவளின் திகைப்பு ஓடிப்போயிற்று! தித்திப்பு முழுவதுமாய் ஓட்டிக் கொண்டது! அவனது கேசத்தை நேசத்துடன் கோதிவிட ஆரம்பித்தாள்!
“இப்ப எப்படிப் பேசி புரிய வைக்கிறீங்க, ஏன் முன்னாடி பேசவேயில்லை?”
“நாம எப்போ முழுசா பேசியிருக்கோம்?” என்றான்.
யோசித்தாள். ‘அக்கறை இல்லை’ என்று அவள் சொன்ன போது, அவன் பேச சொல்லியும் பேசாமல் ‘பாட்டு பயிற்சி’ என்று சென்றது! அவன் கோவிலுக்குள் வரவில்லை என்று கோபம் கொண்ட போது, பால்கனியிலிருந்து அவன் பேச அழைத்தும்… அவள் பேசாமல் படுத்துறங்கியது!
கடைசியாக கச்சேரி அன்று, ‘ரூம்ல போய் பேசலாம்’ என்று அவன் சொன்ன பின்னும் எல்லோர் முன்னிலும் நின்று பேசியது!
அவள் யோசிப்பின் முடிவில், அவன் பேச வரும்பொழுது அவளும் பேசியிருக்க வேண்டுமோ என்று தோன்றியது. சுயஅலசலில் அடுத்த கட்டமாக தன்னை எது தடுக்கிறது என்று யோசிக்கையில், ‘ப்ச் வேண்டாம்!’ என்று விட்டுவிட்டாள்.
காரணம்?
சுயஅலசலில் பெரும்பான்மையான புரிதலின்மை தன்னிடம் இருப்பது போல் தெரிவதால் அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக ஆரம்பித்தது.
அதனால் விட்டுவிட்டாள்! மேலும் யோசனையில் ‘ தலைகோதுவதை நிறுத்தி இருந்தாள். அதை உணர்ந்தவன், “ஹனி நடந்ததை நினைக்காத” என்றான் அவளைப் புரிந்து.
சிரித்துக் கொண்டே மடியில் தலைசாய்த்திருக்கும் கணவனைப் பார்த்தபடி மீண்டும் தலைகோத தொடங்கினாள்.
பாண்டியன் சொன்னது போல் ஆரோக்கியமான விவாதத்தை சண்டை என்று தவிர்க்காமல் இருந்திருந்தால் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்திருக்க முடியும் என்று தெரிந்தது.
இந்தப் பிரிவும் வந்திருக்காது என மனம் வருந்தியது.
அவனுக்குத் தன்மீது அன்பு, அக்கறை இருக்கிறது என்ற உண்மை புரிந்தது. இதற்கு மேலும் புரிந்து கொள்ளாமல் இருந்தால்… தன் புரிதலில்தான் பிழை என்பதும் தெரிந்தது.
அவன் அருகில், ‘தனக்கென யாருமில்லை’ என்பது போயொழிந்து, ‘யாதுமாய் நானிருக்கேன்’ என்பது மேலோங்கியிருப்பதை உணர முடிந்தது. அவனுடன் வாழப் போகும் நாட்கள் யாவும் வசந்தம் தரும் வரம் வாங்கி வைத்திருக்கும் நாட்கள் என்பதையும் உணர்ந்தாள்.
கூடவே, ராக்கிங் சேர், கூழாங்கற்கள், போன்சாய் மரங்கள், பால்கனி … இந்த இடங்களில் அவனுடனான பேச்சுகள் அனைத்திற்கும் மனம் ஏங்கியது.
இனி இவனைப் பிரிந்து வாழ முடியாதென தன் உள்ளம் உணர்ந்ததை, எப்படி அவனுக்கு உணர்த்த என்று யோசித்தாள். தீவிர யோசனை என்பதால் தலை கோதுவதை நிறுத்தியிருந்தாள்.
மெனக்கெடல் எடுத்து சிறப்பாய் உணர்த்த வேண்டுமென்பதால், இப்படி ஒரு தீவிர யோசனை!
‘நாம சேர்ந்து வாழாலாம்’ என்று சொன்னாலென்ன என்று ஒரு மனம் கேட்க, ‘ரொம்ப சாதாரணமா இருக்கு’ என்று ஒரு மனம் வேண்டாமென்றது!
‘பேசாமல் ஐ லவ் யூ சொல்லு’ என இதயத்தின் ஒரு அறை எடுத்துக் கொடுக்க, ‘அட! உனக்கு அவனைப் பிடிக்கும் என ஓராயிரம் முறை சொல்லியாயிற்றே’ என்று இதயத்தின் மற்ற மூன்று அறைகளும் எள்ளி நகையாடின!!
‘ச்சே’ என கையால் பின்னந்தலையில் லேசாகத் தட்டிக் கொண்டாள். ஆயிரம் ஆசையுடன் முடிவெடுத்தவள், அதைப் பிரகடனப்படுத்த வழிதெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு திண்டாடினாள்.
பெருவிரலால் நெற்றிப் பொட்டைக் குத்தியபடி, ‘வேறெப்படி உணர்த்த?’ என எண்ணிக் கொண்டிருக்கையில், “பாவை” என்றான்.
கண் திறந்து பார்த்தாள். பாண்டியன் எழுந்து அமர்ந்திருந்தான்.
இவன் எப்பொழுது எழுந்தான் என்ற கேள்வியோடு பார்த்தாள். பின், தலை கோதுவதை நிறுத்தியதும், எழுந்திருப்பான் என்ற பதிலோடு பார்த்தாள்.
அவள் செயல்களையெல்லாம் பார்த்ததால், “ஏதாவது சொல்லணுமா ஹனி?” என்று ஆழமான பார்வைகளுடன் கேட்டான்!
“அது… அது…” என்று கம்பிக் கருவி வாசிப்பவளின் வார்த்தைகள் தந்தியடிக்க
ஆரம்பித்தன!!

