Kathambari Novels
அத்தியாயம் – 23
இரண்டு நாட்கள் கடந்து வந்த நாள்! இரவுப் பொழுது! நேரம் பதினொன்று முப்பது!இந்த நேரத்தில் பாண்டியனும் பாவையும் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“இப்படி முழிச்சிருக்காத பாவை”
“தூங்கினா முழிக்க மாட்டேன். அப்புறம் உங்களுக்கு பர்த்டே விஷ் பண்ண முடியாது”
“சொன்னா கேட்க மாட்ட”
“கேட்கமாட்டேன்” என்றவள், “எங்க இருந்து பேசறீங்க?” என்றாள்.
“நம்ம ரூம் பால்கனி”
“ஓ! போன்சாய் கூட நின்னு”
“ஆமா! ஹனி லோகஸ்ட் பார்த்துக்கிட்டே ஹனிகிட்ட பேசறேன்” என்று அவன் சொன்னதும், சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் இடையில் சட்டென ஓர் அமைதி!
காரணம், இங்கே நிகழ்ந்த முந்தைய பேச்சுகள் ஞாபகத்திற்கு வந்ததால். சில நொடிகள் அமைதிக்குப்பின், “நாளைக்கு என்ன பிளான்னு சொல்லுங்க” என்று பேச்சின் போக்கை மாற்றினாள்.
“பிரவீனும் நளினியும் ஏதும் பிளான் பண்ணிருப்பாங்க” என்று வழக்கத்தைச் சொன்னவன், “மத்தியானதுக்கு அப்புறம் அங்கே வர்றேன், உனக்கு ஓகேவா?” என்று அவள் விருப்பம் பற்றியும் கேட்டான்.
“ம்ம்ம்” என்று ஏற்றுக் கொண்டவள், “நைட் டின்னர் இங்க! சரியா?” என்று ஒரு சிறு எதிர்பார்ப்புடன் கேட்டாள்.
சரியென்று அவன் ஒத்துக் கொண்டதும், “ஸ்பெஷலா என்ன சமைக்க?” என்று ஆசையாக கேட்டாள்!
“சொன்னா கண்டிப்பா பண்ணுவியா?” என்றான் பீடிகையுடன்!
“என்ன இப்படி கேட்கிறீங்க? கண்டிப்பா செஞ்சு தருவேன்” என்றாள் அன்பாக!
“வழக்கமா குக் பண்றதையே பண்ணு” என்று எதார்த்தமாக சொல்லி, “ஆனா, கொஞ்சமாவது டேஸ்ட்டா பண்ணு” என்றான் எடக்காக!
“உங்களுக்கு டின்னர் கிடையாது” என்றவள் குரலில் சிணுங்கல் பாதி, சீற்றம் மீதி இருந்தது!
“இது இன்னும் ஸ்பெஷல்” என்று சொல்லிச் சிரித்தான்.
அவளும் சிரித்தாள்!!
அதுவும் ஐம்பது ரூபாய் பரிசுக்குத் தகுதியான நகைச்சுவைத் துணுக்குக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு தந்தது போல் சிரித்தாள்! அது காதல்!!
சிரிப்பின் முடிவில், “பர்த்டேக்கு என்ன புது டிரஸ்” என்றாள் சிறுபிள்ளையாய்
“ஹே! அதுலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை” என்றவன், “நீ?” என்று கேட்டான்.
“ம்ம்ம்! நாளைக்குப் புது புடவை கட்டிக்கிட்டுக் கோவிலுக்குப் போகணும்”
“ஓ, என்ன கலர்?” என்று கேட்டான் பேச்சு போனபோக்கில்!
“ஏன்? நீங்களும் அதே கலர்ல டிரஸ் போடப்போறீங்களா?”
“ப்ச்! சும்மாதான் கேட்டேன்”
“சரி! உங்களுக்குப் புரியிற மாதிரி சொல்லணுமா? இல்ல, எனக்குப் புரியற மாதிரி சொல்லணுமா?” என்றாள் புதிராய்!
“இது என்ன புதுசா இருக்கு!” என்று உதடுகள் அசைத்தவன், “எனக்குப் புரியிற மாதிரினா?” என்று கேட்க, “ஷாக்கிங் கிரீன்” என்றாள்.
“உனக்குப் புரியிற மாதிரினா?”
“கிளிப்பச்சைக் கலர்” என்று சொன்னதும், “ஹே! ஃபர்ஸ்ட் நாள் பேசினது! பஞ்சுமிட்டாய் கலர்!” என்று சத்தமாக சிரித்தான்.
“அதேதான்! ஷாக்கிங் பிங்க்” என்று சிரித்தவள், “இந்த கலர்ல உங்ககிட்ட பேன்ட் ஷர்ட் இருக்காது! பிளான்ட்ஸ்தான் இருக்கும்” என்றாள்.
“அது சரி” என்று இன்னும் சத்தமாகச் சிரித்தான்.
இதற்கிடையே… சிவாவை அழைக்க வந்த செண்பகம், மகனைப் பார்த்துக் கொண்டே நின்றார். முதலில் எத்தனை நாட்களுக்குப் பின்பாக இப்படிச் சிரிக்கிறான் என்று தோன்றியது.
பின், ‘பாவையிடம் பேசப் போகிறேன்’ என்று சொன்னது ஞாபகத்தில் வந்தது. இவர்கள் இப்படிப் பேசிச் சிரிப்பார்களா என்று ஆச்சரியமாக இருந்தது. அது ஆனந்த ஆச்சரியம்! மேலும், மகனின் நம்பிக்கை வீண்போகவில்லை என்ற நிம்மதியும் வந்தது!
“சிவா” என்று கூப்பிட்டார்.
பால்கனியிலிருந்து திரும்பிப் பார்த்தான். கண்ணாடிக் கதவருகே அம்மா நிற்பதைப் பார்த்தவன், “பாவை ஒரு நிமிஷம்” என்று அழைப்பை ‘ஹோல்டு’-ல் போட்டுவிட்டு, “என்னம்மா” என்று அவரை நோக்கி வந்தான்.
மகன் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியைப் பார்த்து பூரித்துப் போனார். அது அகத்திலிருந்து வரும் மகிழ்ச்சி என்றும் புரிந்தது. “இன்னும் பேசி முடிக்கலயா” என்றார்.
“நீங்க சொல்லுங்கம்மா” என்றான்.
“மாப்பிள்ளையும் நளினியும் கொஞ்ச நேரத்தில வர்றோம்னு சொன்னாங்க. அதான் உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்”
“பைவ் மினிட்ஸ்ல வந்திடுறேன்” என்றான்.
“சரி கண்ணா” என்று அவர் போனதும், அலைபேசி பேச்சைத் தொடர்ந்தான்.
“யாரு வந்தாங்க” என்று கேட்டுப் பார்த்தாள்.
“அம்மாதான்” என்றவன், அவர் எதற்காக வந்தார் என்றும் சொன்னான்.
இதுவரை அவர்கள் இருவரைப் பற்றியே இருந்த பேச்சுகள், இப்பொழுதுதான் குடும்பத்தினர் பற்றி இருந்தது. எனவே அவளிடம் ஓர் இறுக்கம் நிலவியது.
“என்னாச்சு அமைதியாயிட்ட?” என்றான் சாதரணமாக.
“என்னய பத்தி ஏதும் கேட்டாங்களா” என்று தயக்கத்துடன் கேட்டவள், “இல்ல கேட்பாங்களா?” என்று சிறிதளவு ஆர்வத்துடன் கேட்டாள்.
“அம்மாக்கு எல்லாம் தெரியும்” என்றான் மிதமான குரலில்.
“தெரியுமா? என்ன சொன்னாங்க?” என்று திகைப்புடன் கேட்டுவிட்டு, அவன் பதிலை எதிர்பார்த்திருந்தாள்.
“முதலயே சொல்லிருக்கலாமேனு சொன்னாங்க. புரிஞ்சிக்கிட்டாங்க” என்று சொன்னதும், பாவைக்குள் ஏதோ ஒரு நிம்மதி பரவியது.
வெகுவாக குன்றிப் போன குரலில், “நல்லா இருக்காங்களா” என்று கேட்டாள்.
“ம்ம்ம்”
அதன்பிறகு சில நிமிடங்கள் பொதுவாகப் பேசினார்கள். பின், “எல்லோரும் வந்துடுவாங்க, போனும். நீ விஷ் பண்ணு ஹனி” என்றான் எதிர்பார்ப்புடன்!
அவளைப் பார்த்தபின் வரும் முதல் பிறந்தநாள் அல்லவா? எனவேதான் இந்த எதிர்பார்ப்பு!! அவள் வாழ்த்தை வாங்கிக் கொள்ள, அலைபேசி ஒலிப்பானின் அருகில் காதையும் கவனத்தையும் வைத்துக் கொண்டு நின்றான்.
“ஹேப்பி பர்த்டே” என்றாள் வெறுமென!
“ப்ச்!” என்று சலித்துக் கொண்டவன், “பேர் சொல்லி சொல்லு” என்றான்… தன் பெயரின் பின்பாதியை, தன் சரிபாதி உச்சரிக்க வேண்டுமென!
“சரி சரி சரி” என்றாள் சம்மதமாய்! பின், “ஹேப்பி பர்த்டே சிவா” என்று சதி செய்தாள்!
“அடி வாங்கப் போற ஹனி” என்றான் பொறுமை போனவனாய்! பின், “அப்படி சொல்லு” என்றான் சிறுபையனாய்!
“சரி இப்போ கரெக்டா சொல்லிடுறேன் பாருங்க” என்றவள், “ஹேப்பி பர்த்டே சிவபாண்டியன்” என்றாள் குறும்புப் பெண்ணாய்!
“சோதிக்கிற” என்கையில், அவள் சிரிக்கும் சத்தம் கேட்டது. உடனே அவனும் சிரித்துக் கொண்டே, “விடு! நாளைக்கு வீட்டுக்கு வந்து பேசிக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு வீட்டிற்குள் போனான்.
சிவா வந்த சற்று நேரத்தில் நளினி, பிரவீன், அவன் பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள் வந்தனர்.பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பித்தது!
அதன் பிறகு, சற்று நேரத்திற்கு… கேக்! குளிர்பானங்கள்! கூச்சல்கள்! இவை மட்டுமே!! அதன் பின், நண்பர்கள் கிளம்பியிருந்தனர்.
சிவாவிற்கு வாழ்த்து சொல்லி… உயர்ரக புகைப்படக் கருவியைப் பரிசாகக் கொடுத்துவிட்டு, பிரவீனின் பெற்றோர்கள் கிளம்பினார்கள்.
அனைவரும் சென்றதும், “ஹாப்பி பர்த்டே அண்ணா” என்று சிவாவிடம் சிறு பெட்டியைத் தந்தாள். ‘என்னது?’ என்று திறந்து பார்க்கையில், உள்ளே ஒரு சாவி இருந்தது!
“எங்களோட கிப்ட்!” என்று பிரவீனையும் சேர்த்துச் சொன்னவள், “பைக்! காடு மேடுனு சுத்துவேல? அதுக்கேத்த பைக்!” என்றாள்.
“தேங்க்ஸ்” என்றான் இருவரையும் பார்த்து!
“இப்பதான் உன் முகத்தில சந்தோஷம் வந்திருக்கு. இப்படியே இரு!” என்றாள், அண்ணனின் மகிழ்ச்சியை விரும்பும் தங்கை!
சிரித்துக் கொண்டான் சிவா.
“அண்ணா! நம்ம நாளைக்கு லஞ்சுக்கு வெளிய போகணும்” என்று சொல்லும் போதே, “உன்னோட ட்ரீட் டா” என்றான் பிரவீன்.
இரு கை பெருவிரல்களையும் உயர்த்தி சரியென்றதும், நளினியும் பிரவீனும் விடைபெற்றுச் சென்றனர். மருமகன் சென்றதும்… மகனின் அருகே வந்த மதி, கோப்பு ஒன்றைத் தந்தார்.
“என்னப்பா?” என்றான்.
“செங்கோட்டை பக்கத்தில ஒரு லேன்ட். உனக்காக!” என்றதும், சின்னதாய் புன்னகை மட்டும் செய்தான்.
“இதேமாதிரி எப்பவும் சந்தோஷமா இரு சிவா” என்றார், அவன் மகிழ்ச்சியை விரும்பும் தந்தை! அவர் உறங்கச் சென்றதும் அம்மாவும் மகனும் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
“என்ன சொல்றா” என்றார் எடுத்தவுடனே.
“யாரும்மா” என்றான் எதுவுமே தெரியாதவன் போல!
“உனக்கே தெரியும்!”
“அப்படியா?” என்றான் சிரித்துக் கொண்டே!
“சிரிக்காத சிவா” என்று சலிப்புடன் சொன்னவர், “அப்பா கேட்டாங்க” என்றார்.
“என்ன கேட்டாங்க?”
“லைஃப் பத்தி நீ என்ன முடிவெடுத்திருக்கனு கேட்கிறாரு” என்றவர், “உன் தங்கச்சியும் கேட்டா” என்றார்.
“அவ என்ன கேட்டா?”
“அதேதான் கண்ணா!? ரெண்டு பேரும் நீ பாவையை மறந்திட்டு இருக்கிறதா நினைக்கிறாங்க”
“அப்படியா” என்றான் ஒருமாதிரி குரலில்!
“எப்படியும் உன்கிட்ட இதைப் பத்தி பேசுவாங்க. அதான் கேட்கிறேன், பாவை என்ன சொல்றானு!?” என்று தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றார்.
“இன்னும் எதுவும் சொல்லலை ம்மா”
“நீ கேட்டியா?”
“இல்லம்மா. என்மேல ஒரு நம்பிக்கை வந்து, என்னைப் புரிஞ்சிக்கிட்டு அவளா சொன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். அதான் கேட்கல”
“ஓ!” என்றார் யோசனையுடன். அடுத்து கொஞ்சம் தயங்கினார். பின், “என்னய பத்தி ஏதாவது கேட்பாளா?” என்று கேட்டார்.
சிரித்துக் கொண்டே, “நீங்க நல்லா இருக்கீங்களானு கேட்டா!” என்றான்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவர், பின் புன்னைகைத்துக் கொண்டார்.
அவர் புன்னகையைப் பார்த்தவன், “ம்மா! கிஃப்ட்” என்று கேட்டான், பிறந்தநாள் பையனாக மாறி!
மேசையில் இருந்த கேக்கை எடுத்து மகனுக்கு ஊட்டிவிட்டு, “ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா இருக்கணும்” என்று வாழ்த்தினார், மகனின் மகிழ்ச்சி எதுவென்று அறிந்து!
சற்றுநேரம் மகனுடன் பேசிவிட்டு செண்பகம் உறங்கச் சென்றதும், சிவா பிறந்தநாள் பரிசுகளைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
சட்டென ஓர் ஆசை வந்தது! பாவை என்ன பரிசு தருவாளென்ற ஆசை அது! ஆனால் அடுத்த நொடி, ‘வீட்டுத் தேவைக்கே அதிகம் செலவாயிற்று! பணம் அதிகமில்லை’ என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
எனவே பரிசு தருவாளென்ற எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டான்.
அடுத்த நாள்! பாண்டியனின் பிறந்தநாள்! மதியம் மூன்று மணிவரை, நளினி பிரவீனுடன் நேரத்தை செலவிட்டான். பின் பாவையைப் பார்க்க சென்றான்.
தான் கோவிலுக்குச் செல்வதாகவும், அங்கே வந்து அழைத்துச் செல்லுமாறும் பாவைக் கேட்டுக் கொண்டிருந்தாள். எனவே மனைவியை அழைத்துச் செல்ல கோவில் முன் காத்திருக்கிறான்.
அவன் கோவில் முன்தான் நிற்கிறான் என்று பாவைக்குத் தெரியும். இருந்தும், அவனை உள்ளே அழைக்கவில்லை.
காரணம்?
தன் நம்பிக்கைகளை அவன் மதிப்பது போல, அவன் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொண்டாள். மேலும், அந்தக் காத்திருப்பில் இருக்கும் காதலையும் கண்டுகொண்டாள்!
கோயில் உள்ளே! மாலை நேரமென்பதால் மஞ்சள், வெள்ளை நிற விளக்குகள் போடப்பட்டிருந்தன!பூக்கள் அலங்காரத்துடன் கடவுள்! தீபங்கள் ஏற்றப்பட்ட கருவறை! திருநீர், குங்குமம் சந்தனம் கலந்த நறுமணம்! கூடவே, அகர்பத்தி வாசனையும்!
சன்னிதானத்தின் முன் நின்று இரு கரங்களையும் குவித்து, மனமுருகி நன்றி தெரிவித்தாள். பூசாரி வந்து அர்ச்சனை தட்டைத் தந்தார். அதை வாங்கியவள் தீபத்தை வணங்கி குங்குமம் திருநீறும் எடுத்துக் கொண்டாள்.
அதன்பின் சூட்டைத் தணிக்கவென தண்ணீர் ஊற்றிவிடப்பட்ட பிரகாரத்தை பதனமாக சுற்றி வந்தாள். வெளியே வந்தவள், முதலில் இருந்த பூக்காரரிடம் பூ வாங்கி வைத்துக் கொண்டே கணவனை நோக்கி வந்தாள்.
சொன்னது போலவே கிளிப்பச்சை நிற புடவை… இலைப்பச்சை நிற ரவிக்கை அணிந்து வருபவளை ரசித்துப் பார்த்தான்! அவனது அன்பு அதிகமாவதால் அவள் அழகாய் தெரிந்தாள்!!
அருகில் அவள் வரவும், “போகலாமா” என்று அந்த இல்லாள் ரசிகன் கேட்க, இசைவாய் ஒரு தலையசைப்பு மட்டும் இசைப் பிரியையிடமிருந்து!!
அங்கிருந்து கிளம்பினார்கள்! வீட்டிற்கு வந்ததும், அவன் முன்னே சென்று நின்றாள். ‘என்ன?’ என்ற கேள்வியுடன் அவனது கண்கள் அவளைப் பார்த்தன.
“ஒரு சந்தோஷமான விஷயம்” என்றாள் ஆழமான குரலில். அடுத்து, “கச்சேரி சான்ஸ் கிடைச்சிருச்சி” என்றாள் ஆனந்தமான குரலில்.
ஆனந்த அதிர்ச்சியில் அப்படியே அசையாமல் நின்றான்.
“கங்கிராட்ஸ் எதுவும் இல்லையா?” என்று கேட்டாள்… உன்னைத் தவிர வேறு யாரிருக்கிறார் என் வெற்றியைக் கொண்டாட என்பது போல்!
“ச்சே” என்றவன், அவள் உள்ளங்கைகளைப் பிடித்திழுத்து, தன் உள்ளதோடு உரச நிறுத்திக் கொண்டான், நானொருவனே போதும் என்பது போல்!
“கங்கிராட்ஸ் ஹனி!” என்றவன், “எப்படி கிடைச்சது?” என்று கேட்டான்.
“கோயில்ல பாடினதை வச்சி கேட்டாங்க”
“ஓ, என்கிட்ட சொல்லவேயில்ல”
“காலையிலதான் கன்ஃபார்ம் பண்ணி எனக்கு ஸ்லாட் அலாட் பண்ணாங்க. கோயிலுக்குப் போயிட்டு வந்து உங்ககிட்ட சொல்ல நினைச்சேன்” என்றாள் அவன் கண்களைப் பார்த்து!
“ஓகே ஓகே” என்றான் சற்று அவளை விலக்கி நிறுத்தி! “ரொம்ப பெரிய சபா கிடையாது, சின்னதுதான்” என்றாள் முழுதாய் அவனிடமிருந்து விலகி நின்று கொண்டே!
“அட! எதுலயாவது சேட்டிஸ்ஃபை ஆகணும்மா” என்றவனுக்கு, ஒரு அலைபேசி அழைப்பு வந்ததும், அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
அவன் பேச்சால் சுருக்கென்று ஏதோ தைத்தது பாவைக்குள்!
சுயஅலசலில் அடுத்த கட்டமாக, தன் எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கட்டும்! ஏன் தன் மனம் அவன் அன்பின் வெளிப்பாடுகளில் திருப்தி அடையவில்லை என்ற கேள்வி வந்தது?
திருப்தியடையவிடாமல் எது தன்னை தடுக்கிறது? என்று ஆராய்ந்தாள்.
அக்கணம், “ஹனி” என்று வந்தவனிடம், “ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லி, படுக்கையறை சென்று வண்ணத்தாள் சுற்றப்பட்ட பரிசை எடுத்து வந்து அவனிடம் தந்தாள்.
‘கிஃப்ட்டா?” என்றான் ஆசையுடனும் ஆச்சரியத்துடனும்!
“ம்ம்ம், நான் டின்னருக்கு ரெடி பண்றேன்” என்று சமயலறைச் செல்லப் போனவளிடம், “பர்த்டே ஸ்பெஷல் டின்னர்?” என்றான் கேள்வியாக!
“எதுக்கும் சாப்பிட்டுப் பார்த்திட்டு முடிவு பண்ணுங்க” என்றாள் கேலியாக!
சிரித்துக் கொண்டே பரிசைத் திறக்க ஆரம்பித்தான்! முழுவதும் திறந்ததும், படு வியப்படைந்தான்! ஒரு கருப்பு நிற சட்டமிடப்பட்ட புகைப்படம் அது! அளவில் கொஞ்சம் பெரியது!!
அதைக் கையில் வைத்துக் கொண்டே சமயலறைச் சென்றான். மனைவியின் அருகில் சென்றதும், மீண்டும் ஒருமுறை புகைப்படத்தைப் பார்த்தான்.
தனித்தனியாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து ஒரு பெரிய புகைப்படக் கலவையாக உருவாக்கப்பட்டிருந்தது அப்புகைப்படம்!
இதில் அவன் வியப்படையும் வண்ணம் என்ன இருக்கின்றதென்றால், அந்தப்
புகைப்படங்கள் அனைத்தும் அவள் எடுத்தது!
எப்படி கண்டு கொண்டான் என்றால், ஒன்று எடுத்திருந்த இடம்! முற்றத்தில் அமர்ந்திருந்த காக்கை! வீட்டு உரிமையாளரின் ரோஜா செடி! தினம் வரும் தண்ணீர் லாரி! இப்படிதான் இருந்தன புகைப்படங்கள்!
மற்றொன்று எடுத்திருந்த விதம்! சுமார் ரகம்தான் அனைத்தும்! ஆனால், அவனுக்குச் சுகம் தந்தன!!
புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், “நீங்க வாங்கி கொடுத்த கேமரா வச்சிதான் எடுத்தேன். உங்க அளவுக்கு எடுக்க முடியாது. ஏதோ எனக்கு தோணதை எடுத்து வச்சேன்” என்றாள்.
அவள் சொல்வது உண்மைதான்!
துல்லியமாகப் புகைப்படம் எடுப்பவனுடன் ஒப்பிட்டால், தோரயமாகத்தான் எடுத்திருந்தாள்! ஆனால் அந்த தோராயத்தில் அவன் துல்லியங்கள் எல்லாம் தோற்றுப் போயின!
அது காதல்!! மெல்லியதான புன்னைகை உதட்டில் ஒட்டிக் கொண்டிருந்தபடி மீண்டும் சமைக்க ஆரம்பித்தாள்.
தன்னிடம் அளவுகடந்த அன்பை எதிர்பார்க்கிறாள் என்று தெரியும். ஆனால், அதேயளவு அன்பை, தன்மீது வைத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான்.
தன் வாழ்வின் ஆணிவேரென நினைத்தவள், என்றைக்கும் வேறாகிப் போக வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்டான்! அவளுடன் வாழப் போகும் நாட்கள் யாவும் வசந்தம் தரும் நாட்கள் என்று உணர்ந்தான்.
உணர்ந்ததும் உணர்ச்சிவசப்பட்டு, “ஹனி” என்று அழைத்து… அதீத அன்பின் வெளிப்பாடாய் அவளை அணைத்துக் கொண்டான்.
இந்நேரத்தில் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை ஒருநொடி பாவையின் உடல்மொழி காட்டியது. மறுநொடியிலிருந்து இரு கரங்களால் கணவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
“கிஃப்ட் பத்தி ஒன்னும் சொல்ல மாட்டிக்கிறீங்க?” என்று அவன் உள்ளத்தோடு ஒட்டி நின்று கேட்க, “எக்ஸ்பெக்ட் பண்ணலை ஹனி!” என்றான் கணிசமான காதலைக் கண்களில் கொட்டி!
“ஹேப்பி பர்த்டே பாண்டியன்” என்றாள், அவன் கண்கள் கொட்டிய காதலை அள்ளி எடுக்கும் பார்வையுடன்!
அந்தப் பரிசு, அந்தப் பார்வை, அந்த ‘பாண்டியன்’, அந்தப் பாவை… எல்லாம் சேர்ந்து அவனை ஒரு வழியாக்கியதில், பாவையை ஆரத் தழுவினான்.
உள்ளங்கைகளால் அவளிரு கன்னங்களை ஏந்தி, உள்ளத்தின் உவகையுடன் உதட்டுப் புன்னகையுடன் அவள் உச்சி நெற்றியில் முத்தமிட்டிட, பாண்டியன் பிறந்தநாள் கொண்டாட்டம் முழுமையடைந்தது!!

