Kathambari Novels
அத்தியாயம் – 22
காரை நிறுத்திவிட்டு மாடிப்படிகள் ஏறி வந்த பாண்டியன் வீட்டின் கதவு திறந்திருந்ததால், “பாவை” என்றழைத்துக் கொண்டே உள்ளே வந்தான்.
நுழைந்ததுமே, சமயலறையில் இருக்கிறாள் என்று தெரிந்தது! நேரே அவள் நிற்கும் இடத்தில் வந்து நின்றான்!!
காஃபி போடுவதற்கு தயாராக எல்லாம் எடுத்து வைத்து எதுவுமே செய்யாமல் நின்றவள் அவனைப் பார்த்ததும், “வாங்க” என்றாள் சோர்வான குரலில்!
குரலின் பேதமை கண்டு, “என்னாச்சு ஹனி?” என்றான்.
“கொஞ்சம் தலைவலி”
“ஏன் திடீர்னு?”
“ஏதோ டென்ஷன்…” என்றாள் கவனமேயில்லாமல்.
“இப்போ எதுக்கு டென்ஷன்?”
பதில் சொல்லாமல் ஏதோ யோசனையுடன் நின்றாள்.
“ப்ச்! சொல்லு பாவை” என்றான் அழுத்தமாய்.
“ஒன்னுமில்ல” என்றாள் நெற்றி முடிச்சுக்களுடன்.
“வேணும்னா ரிலாக்ஸ் ஆகிறதுக்கு எங்கயாவது போலாமா”
“ம்கூம். ரெஸ்ட் எடுக்கணும்” என்று தெளிவில்லாத முகத்துடன் மறுத்தாள்!
“இப்படி இருக்காத! வா கொஞ்சம் நேரம் வெளிய போயிட்டு வரலாம்” என்று அவள் கைப் பிடித்து அழைத்தான்.
மெதுவாக அவன் பிடியிலிருந்து கையை உருவிக்கொண்டு, “உங்களுக்குப் புரியலயா” என்றாள்.
‘எதற்கிந்த கேள்வி?’ என்பது போல் அவனிடம் ஒரு மௌனம்!
அந்த மௌனத்தை மொழிபெயர்த்தவள், “தலைவலினு சொல்றேன், வெளிய வானு கூப்பிடறீங்க? என் ஹெல்த் பத்தி உங்களுக்கு அக்கறை இல்லயா” என்று குறை சொல்லும் தொனியில் கேட்டாள்.
மேலும் சமயலறைத் திண்டில் சாய்ந்து நின்று, “கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாவே போதும். சரியாயிடும். அதான் வெளிய போக வேண்டாம்னு நினைக்கிறேன். புரிஞ்சிக்கோங்க” என்று விளக்கமாகச் சொன்னாள்.
“புரியுது பாவை”
ஓய்வெடுக்க வேண்டும் என்றதும் ஒத்துக் கொண்டதால் “தேங்க்ஸ்” என்றாள்!
“சாரி” என்றான்.
“சாரி எதுக்கு?”
“ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னப்புறமும் வெளிய வா-னு கூப்பிட்டதுக்கு, உன் ஹெல்த் பத்தி கேர் பண்ணாததுக்கு சாரி” என்றான் மீண்டும்.
அவன் மன்னிப்பு கேட்பது போல் தெரியவில்லை. எதையோ உன்னிப்பாய் கவனிக்கச் சொல்கிறான் எனப் புரிந்தது!
“ஆனா அன்னைக்கு எனக்கு டயர்டா இருக்கு… ரெஸ்ட் எடுத்திட்டு வர்றேன்னு சொன்னதுக்கு… ம்ம்ம்” என்று நடந்தது மறந்து போனது போல் யோசித்தான்.
அவன் ஒய்வைப் பற்றி யோசிக்காமல், உடனே வந்து கூட்டிப் போக வேண்டும் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது பாவைக்கு!
“அப்ப என் ஹெல்த் பத்தி?” என்ற கேள்வியின் முற்பாதியைக் கேட்டான்.
‘இவன் உடல்நலத்தில் எனக்கு அக்கறை இல்லை என்கிறானா?’ என்று கேள்வியின் பிற்பாதியைத் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
“அன்னைக்கு நீ சொன்னதும் உன்னய கூப்பிட வரலைனு, உன்மேல எனக்கு அக்கறையே இல்லனு சொன்ன. இன்னைக்கு வெளிய போகலாம்னு நான் கூப்பிடறப்ப… நீ வரலை! ஸோ உன் லாஜிக்படி பார்த்தா என்மேல உனக்கு அக்கறை இல்ல கரெக்ட்டா?”
காத்திருந்த தருணங்களில் அப்படித்தான் நினைக்கத் தோன்றியது! ஆனால் இப்போது தன் வார்த்தைகளில் இருக்கும் முரண்பாடு புரிந்தது பாவைக்கு! யோசிக்கக் கூட இல்லை! திண்டில் சாய்ந்திருந்தவள் திடுமென நேராக நின்று, தன் நெற்றியை அவன் நெஞ்சோடு மோதிக் கொண்டு நின்றாள்.
“ஹனி” என்றான் நிதானமாக.
“எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். உங்கமேல அக்கறை, அன்பலாம் நிறைய இருக்கு. அதனால இப்படிச் சொல்லாதீங்க” என்றாள் நிம்மதியற்ற குரலில்!
“சரி சரி சொல்லல” என்றான் அவசரமாக! பின், “எனக்கே அது தெரியும் பாவை” என்றான் ஆறுதலாக!
நிம்மதியுடன் இன்னும் நெருங்கி நின்றுகொண்டாள் பாண்டியனின் பாவை!
“அதேமாதிரி எனக்கும் உன்மேல அக்கறை இருக்குனு புரியுதா?”
“ம், புரியுது” என்று சொன்னவளுக்கு, இன்று எளிதாகப் புரிவது அன்று ஏன் புரியாமல் போனது என்ற குழப்பம் வந்தது. சுய அலசலின் அடுத்த கட்டமாக, ‘தன் எதிர்பார்ப்பில் பிழை இருக்கிறதோ?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அதன்பிறகு சற்று நேரத்திற்கு பருமனான அமைதி! பாசமான அணைப்புகள்! இவை மட்டுமே இருவருக்கும்!!
“ஆக்சுவலா அன்னைக்கு நான் சொல்ல வந்தது என்ன தெரியுமா” என்று அவன் கேட்க, ‘என்ன?’ என்ற கேள்வியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.
“ரிலேஷன்ஷிப்ல செல்ஃப் கேர் முக்கியம்! இப்போ தெரியாது பாவை! ஆனா ஃபியூச்சர்ல குழந்தைங்க, வேலை, பேரன்ட்ஸ் பார்த்துகிறது… இப்படி நிறைய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் வர்றப்ப… செல்ஃப் கேர் ரொம்ப அவசியம்!
சிம்பிளா சொல்லனும்னா உன்னை வருத்திக்கிட்டுதான் உன்னோட அன்பை காட்டணும்னு அவசியம் கிடையாது ஹனி” என்று தன் அன்பின் அறிவியலை விளக்கினான்.
‘புரிந்துவிட்டது’ என்ற பொருளில் ஒரு மெல்லிய புன்னகை பாவையிடம்!
“இப்போ சொல்லு எதுக்கு டென்ஷன்?”
“ஸ்டேஜ்ல தனியா பாடின மாதிரி கௌசி போட்டோ அனுப்பியிருந்தா”
“ஓ! அவங்களுக்கு சான்ஸ் கிடைச்சிருச்சா?”
“ம்ம்” என்றவள், “அதை பார்த்ததிலிருந்து கொஞ்சம் டென்ஷன். நாம எப்போ அப்படிப் பாடுவோம்னு ஒரு ஆசை வந்திருச்சு. அதான் நைட் சரியா தூங்க முடியலை” என்றாள் சோகத்தின் காரணத்தை.
“கங்கிராட்ஸ்னு போட்டு முடிக்காம இப்படிக் கவலைப்பட்டுக்கிட்டு நிக்கிற”
“கஷ்டமா இருக்கு. ஸ்டேஜ்ல பாட ஆசைப்பட்டு டிவி ப்ரோக்ராம்ல பாடுறதை நினைச்சி” என்று அவனிடமிருந்து விலகி நின்று காஃபி போட ஆரம்பித்தாள்.
“ஸீ! பாடுறது உனக்குப் பிடிக்கும். அதை மட்டும் பாரு! இடத்தைப் பார்க்காத. எங்கே பாடினாலும் உன்னோட பெஸ்ட்டை கொடு”
“நீங்க சொல்றது சரிதான்” என பால் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து,
“உங்களுக்கு காஃபி” என்று கேட்டாள்.
“வேண்டாம்” என்றவன், “டேப்லெட் எதுவும் போட்டியா?” என்று கேட்டான்.
“தேவையில்லை. கொஞ்சம் நேரம் தூங்கினா சரியாயிடும்” என்று சொல்லிக் கொண்டே, ஒரு தம்பளரில் காஃபி தூள் மற்றும் சக்கரையைப் போட்டாள்.
“நிஜமா?”
“ம்ம்” என்றவள் காஃபி போட்டு முடித்திருந்தாள்.
“அப்புறம் ஹனி! நான் ஒரு ட்ரிப் போறேன்”
“எப்போ?” என்றாள் காஃபி பருகிக் கொண்டே!
“இன்னைக்கு ஈவினிங். திரும்பி வர ரெண்டு மூணு நாளாகும். எதும் தேவைனா உடனே ஃபோன் பண்ணனும்” என்றான் அன்புக் கட்டளையாக!
“ம்ம்ம் சரி”
“சரி வா! இப்ப கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு” என்று அவன் சொன்னதும், இருவரும் சமையலறையிலிருந்து வெளியே வந்தார்கள். வரவேற்பறையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்து சுவரில் சாய்ந்திருந்தான்.
எதையோ யோசித்துக் கொண்டு அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.
“பாவை, எதையும் யோசிக்காம கொஞ்ச நேரம் தூங்கு” என்றாலும், இன்னும் யோசனையாகவே இருந்தாள்.
“உங்க ரெண்டு பேர் ஆசையும்… தனியா பாடுறதுதான? அதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குதுனா, அதை கரெக்டா யூஸ் பண்ணு” என்றவன், “இப்ப தூங்கு” என்று தலையணையைக் கொஞ்சம் சரி செய்தபடி சொன்னான்.
“வேணிம்மா ஞாபகமா இருக்கு! கச்சேரிக்கு முன்ன அவங்ககிட்டதான் பாடிக் காட்டுவேன். இப்போ…” என்றவள் தலையணையில் தலை சாய்க்காமல், தன்னவன் மடிமீது தலை சாய்த்தாள்.
தலைகோதி அவளைத் தேற்றியபடி, “நான் வேணா ட்ரிப் கேன்சல் பண்ணவா” என்றான்.
“ச்சே ச்சே வேண்டாம்” என்று மறுத்துவிட்டாள்.
“இல்லை பாவை” என்று பேசப் போனவனை, “சரியா தூங்கலைனா வாய்ஸ்ல அது தெரியும். தூங்கவிடுங்க” என்று சொல்லி கண்மூடினாள்.
‘எங்கே ஆரம்பித்து, எங்கே வந்து முடிக்கிறாள்?’ என்று எண்ணியவனுக்கு, தன் அகத்தின் ரதியைப் புரிய தனி அகராதியே வேண்டுமென தோன்றியது! கண் சொருகிக் கொண்டிருந்தவளைப் பெருங்காதலுடன் பார்த்தான் பாண்டியன்!!
மூன்று நாள்கள் கடந்திருந்தன. இந்த நாள்களில் பாண்டியன், பாவை இருவரது அளவாடல்களும், அக்கறை பேச்சுகளும் அலைபேசி வழியே நடந்திருந்தன.
இன்று தொலைக்காட்சி நிகழ்சிக்கானப் படப்பிடிப்பு நாள் என்பதால், பாவை கிளம்பிக் கொண்டிருந்தாள். வெகு தினங்களுக்குப் பின் மிதமான ஒப்பனை செய்து கொண்டாள்.
“வெளியில் சொல்ல மனம் துள்ளுதே…” என்ற வரிகள் பாடியபடி கண்களில் மையிட்டுக் கொண்டு, “இனியொரு உலகம் உனைத்தவிர…” என்று பாடிக் முடிக்கையில் அலைபேசி அழைத்தது.எடுத்துப் பார்த்தாள்.
பாண்டியன்தான்!
‘வந்துவிட்டானா?’ என்ற கேள்வியுடனே அழைப்பை ஏற்றாள்.
“குட் மார்னிங் ஹனி” என்றவன் குரல் தூக்க கலக்கத்தில் ஒலித்தது.
“வந்தாச்சா?”
“டூ அவர்ஸ் முன்னாடிதான். தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு முழிக்கிறப்ப, உன் ஞாபகம். அதான் ஃபோன் பண்ணேன்” என்றவன், “என்ன பண்ற?” என்றான்.
“கிளம்பிக்கிட்டு இருக்கேன்”
“ஓ! சில்க் சாரீ கட்டி ஏதாவது பாடிக்கிட்டே மேக்கப் போடுவ! கரெக்ட்டா?”
“ஆமா! உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“அன்னைக்கு நம்ம ரூம்ல அப்படித்தான ரெடியாகிட்டு இருந்த. ரொம்ப நேரம் பார்த்துக்கிட்டே இருந்தேன்”
“ஓ!” என்றாள், ‘தன்னைப் போலவே… அன்று அவனும் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறான்’ என்ற ஆச்சரியத்தில்!
“நான் வந்து கூட்டிட்டுப் போகவா” என்று கேட்டான்.
“வேண்டாம்! நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றுவிட்டு, ஐந்து நிமிடங்கள் அவனிடம் பேசிவிட்டு அலைபேசியை வைத்தாள்.
தொலைக்காட்சி நிலையம்! நிரம்ப தயக்கத்துடன்தான் உள்ளே நுழைந்தாள். அங்குள்ளோர் அனைவரும் ஒரு கனிவான வரவேற்பைத் தந்தனர். அவர்ளின் பார்வையிலும் செயலிலும் மரியாதை இருந்தது.
சற்று நேரம், அவள் மேடைக் கச்சேரி பற்றிப் பேசினார்கள். பின் ஒத்திகைகள் அவளுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் இடையே நடந்தன! இப்படியே நேரம் கடந்தபின், பண்டிகை தின சிறப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றனர்.
சின்ன இடம்தான்! பின்னணியாக கோவில் போன்ற அமைப்பு! அதன் நடுவில் சகல அலங்காரத்துடன் விநாயகர் சிலை! சிலையருகே தீபம் ஏற்றப்பட்ட சிறு குத்துவிளக்கு! கூடுதல் அலங்காரமாக தோரணங்களும், விளக்குகளும்!
மூன்று சதுர வடிவ மேடை இருந்தது! அனைத்திற்கும் முன்பு மைக் இருந்தது! நடுவில் இருந்த மேடையில் சென்று பாவை அமர்ந்து கொண்டாள்! இருபக்கம் இருந்த மேடைகளிள் இசைக்கலைஞர்கள் அமர்ந்தனர்!
சுற்றிலும் மூன்று கேமராக்கள்! நிறைய ஆட்கள் அங்கங்கே நின்றனர்! அவள் அமர்ந்ததும்… ஒருவர் வந்து, “எல்லாம் கரெக்ட்டா இருக்கா மேம்?” என்றார்.
“ம்ம்” என்று தலையாட்டினாள்.
பாடல் ஆரம்பித்தது! வயலின் கலைஞர் வாசித்ததைத் தொடர்ந்து, “ஒற்றை கொம்பனை பற்றி…” என்ற பாடல் வரியை பாவை முதல் முறை பாடி முடித்து, அதையே அடுத்தமுறை பாடும்போது கடமும் சேர்ந்து கொண்டது.
“தித்தித்தால் அது சித்திக்கும்…” என்ற வரியை பாடுகையில் குரல் திகட்டாத தித்திப்பாய் இருந்தது. “சங்கர சங்கரி பங்கயர்…” என்ற வரியை ஒரே மூச்சில் பாடி, “ஒற்றைக் கொம்பனை” என்று பல்லவியை வந்து பிடித்தாள்.
ஒரு வினாடிக்குப்பின், ‘பக்தியுடன் பூவை…’ என முதல் சரணத்தை ஆரம்பித்து, முப்பது நொடிகளுக்குப் பின்பு, “பெற்றவரை உலகமென்று…” என்ற வரியை பாடுகையில் ‘ல’ கரமும், ‘ற’ கரமும் உச்சரிப்பின் சிகரத்தைத் தொட்டன!
அடுத்த எழுபது நொடிகளுக்குப்பின், “வஞ்சகத்தை வெல்லும் தெய்வம் ” என இரண்டாவது சரண வரியை பாடுகையில் விநாயகனைத் துதித்தால் வினை தீர்க்கும் என்ற நம்பிக்கை தரும்படி பாடினாள்.
கடைசியில், “தும்பிக்கை ஒரு நம்பிக்கை…” என்று ஒரே மூச்சில் பாடி மீண்டும் பல்லவியைப் பாடி பாடலை முடித்தாள்.
நிகழ்ச்சி ஒளிப்பதிவாளர், இயக்குனர் வந்து பாவையைப் பாராட்டினார்கள். பின் வேறு இசைக் கலைஞர்களுடன் சற்றுநேரம் பேசினாள். கூடவே இசையில் ஈடுபாடு கொண்ட நபர்களின் அறிமுகமும் பெற்றுக் கொண்டாள். அதன்பின் அனைவரிடமும் விடைபெற்று வெளியே வந்தாள்.
பாடி முடித்தபின் கிடைத்த பாராட்டு! இத்தனை பேரின் அறிமுகம்! தனியாக பாடியது… எல்லாம் சேர்ந்து, ‘இது மேடைக் கச்சேரியில்லேயே’ என்ற ஒரு சிறு வருத்தத்தையும் போக்கியிருந்தது பாவைக்கு!
வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது!!
நிகழ்கணத்தின் நொடிகளை நெகிழ்ந்து ரசித்தபடி சாலையை வந்தடைந்து, ஆட்டோ எதும் வருமா என்று பார்த்த போது அலைபேசி கூப்பிட்டது. எடுத்துப் பார்த்தாள். அவள் கணவன்தான்!
அழைப்பை ஏற்று, “ஹலோ… இப்போதான் முடிஞ்சது. நான் வீட்டுக்கு…” என்று சொல்லும் போதே, “ஆப்போசிட்ல பாரு” என்றான்.
பாவை எதிர்ப்பக்கச் சாலையைப் பார்த்தாள்.
‘ஹாய்’ என்பது போல் கையசைத்துக் கொண்டு பாண்டியன் நின்றான்! இதை எதிர்பார்க்கவேயில்லை பாண்டியனின் பாவை!
‘வரவா?’ என்று சைகையால் அவன் கேட்க, ‘வேண்டாம் நானே வர்றேன்’ என்று சைகையில் சொல்லி, இருபுறம் வரும் வாகனங்களைப் பார்த்தவாறு நடந்து, அவன் அருகில் வந்து, “நீங்க எப்படி?” என்றாள்.
“கார்ல ஏறு. போய்க்கிட்டே பேசலாம்” என்றான். அவள் ஏறியதும் அந்தப் பக்க கதவை அடைத்துவிட்டு, அவனும் ஏறிக் கொண்டு காரை கிளப்பினான்.
போக்குவரத்து நெரிசலிலிருந்து வெளியே வரும்வரை, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி வந்ததும் மூன்று நாள் பிரிவை கணவன் தோளில் பிரியத்துடன் சாய்ந்து வெளிப்படுத்தினாள்.
ஐந்து நிமிடத்திற்கு அவள் அன்பை அமைதியாக வாங்கிக் கொண்டான். பின், “எப்படி பாடின?” என்று கேட்டதுதான் தாமதம், தோளிலிருந்து விலகி நேராக அமர்ந்தாள்.
“ஷூட் பண்றவங்க, அங்க வேல பாக்கிறவங்க, என்னை மாதிரியே பாட வந்த இன்னும் ரெண்டு பேர்… எல்லோரும் சொன்னாங்க சூப்பரா பாடினனு!
இதுவரைக்கும் இப்படி யாரு என்கிட்ட சொன்னதில்லை. கௌசிகிட்டத்தான் சொல்வாங்க. முத தடவை என்னைய பாராட்டுறாங்க. ரொம்ப பிடிச்சது.
முதலகூட ஸ்டேஜ்ல பாடமா இப்படிப் போய் பாடுறோம்னு தயக்கம் இருந்தது. ஆனா இப்போ அது கொஞ்சம்கூட இல்ல. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.
“உன் முகம் பார்த்தாலே தெரியுது” என்றான் நலிவு, மெலிவு இதையெல்லாம் தாண்டி அவள் முகத்தில் ஒரு பொலிவு வந்திருந்ததைப் பார்த்தவன்.
“ஒரே ஒரு வருத்தம், வேணிம்மா இருந்து இத பார்த்திருக்கலாம்” என்று ஏக்கத்துடன் சொல்லி சன்னலின் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.
பாவையின் வாட்டத்தைப் போக்கும் ‘தேன்குரலால் இந்த தேன்பாவை’ என்ற வார்த்தைகள் செவிப்பறைக்குள் வந்து ஒலித்தன.
பத்து நிமிடங்கள் மௌனமாக இருந்தவன், “சாப்பிட்டியா ஹனி?” என்றான்.
“ம்ம்ம்” என்றவள், “நீங்க அட்ரஸ் கேட்கிறப்பகூட வருவீங்கனு நினைக்கலை. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?” என்று கேட்டாள்.
“ச்சே ச்சே இல்ல”
“எங்கே போய்க்கிட்டிருக்கோம்?” என்றாள் கொஞ்சம் ஆர்வமாக.
“சர்ப்ரைஸ்” என்றுவிட்டான்.
புகைப்படக் கண்காட்சி! பாண்டியன், பாவையை இங்கேதான் அழைத்து வந்திருந்தான். சாலையின் ஒருபுறம் இருந்த வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு, எதிர்பக்கம் இருந்த கண்காட்சி கட்டிடத்திற்குள் கூட்டிச் சென்றான்.
உள்ளே போனதும் அவள் அவனைப் பார்க்க, “போட்டோ எக்சிபிஷன் ஹனி” என்றான் அந்தப் பார்வை புரிந்து!
“எல்லா போட்டோவும் நீங்க எடுத்ததா”
“சிலதுதான், மத்தவங்களோடதும் இருக்கு” என்றதும், புருவங்களை உயர்த்திக் கொண்டே அந்த பிரமாண்ட கூடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.
வர்ணிக்க வண்ணங்களின் வார்த்தைகளே தேவையில்லை என்பது போன்று சுவரின் பூச்சுகள், பளபளக்கும் தரை என எங்கும் வெள்ளை நிறம்! வர்ணிக்க வார்த்தைகள் தேடி எடுக்க வேண்டும் என்பது போல எல்லா நிறங்களையும் உள்ளடக்கிய புகைப்படங்கள்!
ஒவ்வொரு புகைப்படமும் தனித்து தெரியும்படி விளக்குகள் வடிவமைக்கப் பட்டிருந்தன! மேலும் அறை நன்கு குளிரூட்டப்பட்டிருந்தது!!
பத்து பதினைந்து பேர் இருந்தனர்! பெரிய கூடம் என்பதால் தூரத்தில் நிற்பது போல உணர்வு தந்தது! ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்தபடி நடந்தார்கள்!
பார்த்து கொண்டே வருகையில், “பாவை” என்றழைத்து, ஒரு புகைப்படத்தின் முன் நின்றதும், அவளும் நின்று அவனைப் பார்த்து, “நீங்க எடுத்ததா?” என்று கேட்டதும், ‘ஆமாம்’ என்றான் இமைகளால் அந்த இயற்கை ரசிகன்!!
புகைப்படத்தைப் பார்த்தாள்.
சிறு கற்களும் வெள்ளை மணலுமான சமவெளிபரப்பில் வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது! அதில் விதவிதமான வண்ணங்களில் நிறைய கணிதக் குறிகள்! பின்னணியாக பனி படர்ந்த இமயமலை! மேலே தெளிவான வானம்!
அவள் பார்த்து முடித்ததும், “ஜக்ஸ்டபொசிஷன் (Juxtaposition)” என்றான்.
“அப்படினா”
“ரெண்டு மாறுபட்ட விஷயத்தை முன்னிறுத்தி புதுசா ஒன்ன சொல்லற மாதிரி போட்டோ எடுக்கிறது” என்றவன், “நல்லா இருக்கா?” என்று கேட்டான்.
‘ஆமாம்’ என்றாள் கண்களாலே அந்தக் கானங்களின் காரிகை!
கூடத்தின் நடுவிலிருந்த தடுப்புகளில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து, ‘நீங்க எடுத்ததா?’ என்று கேட்டபடியே பாண்டியனுடன் நடந்தாள். ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும் நின்று அவனைப் பார்த்தாள்.
“ம்ம்ம்! கிரிஸ்டல் பால் போட்டோகிராபி! நான் எடுத்ததுதான்” என்றான்.
“வித்தியாசமா இருக்கு” என்றாள்.
விடிவெள்ளிகளும், வெண்ணிலாவும் விழித்துக் கொண்டிருந்த இரவு வானம் மற்றும் கடல்… இவை தெளிவில்லாத பின்னணியாக!
புகைப்படத்தின் குவியம் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிரிஸ்டல் பந்தின் மேல் இருந்தது! தெளிவில்லாத பின்னணியான கடலும் வானமும், அந்த பந்தில் தெள்ள தெளிவாக தெரிந்தது! ஆனால் தலைகீழாக! அதாவது ஆகாயம் கீழே, ஆழ்கடல் மேலே என்பது போல்!!
பந்திலிருந்த தலைகீழ் காட்சியை ரசித்தவளைப் பார்த்தவனுக்கு, வாழ்க்கை நேராகிக் கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
“ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் புகைபடத்திலிருந்து கண்கள் எடுக்காமல்!
“எடுத்துக்கோ” என்றான் அவளிடமிருந்து பார்வை விலகாமல்!
‘ம்’ என்று விருப்பமாகத் தலையாட்டியதும், அங்கிருந்த பணியாளர் ஒருவரை அழைத்து ஏதோ விவரம் சொன்னான். பின் அடுத்தடுத்த புகைப்படங்களைப் பார்த்தார்கள். சிலர் வந்து அவனிடம் பேசிவிட்டுச் சென்றார்கள்.
சற்றுநேரத்தில், “வீட்டுக்குப் போகலாமா, பசிக்குது” என்று பாவை கேட்டதும், இருவரும் வெளியே வந்தார்கள்.
கார் நிறுத்துமிடம் நோக்கி நடக்கையில், “பாவை, இனி வீட்ல போய் சமைச்சி சாப்பிட லேட்டாகும். ஸோ… ரெஸ்டாரென்ட் போகலாமா” என்று, ‘அவள் என்ன சொல்வாளோ?’ என்ற தயக்கத்துடன் கேட்டான்.
அவள் யோசித்தாள்.
“நம்ம இதுவரைக்கும் இந்த மாதிரி…” என்று அவன் வார்த்தைகளை முடிக்கும் முன், “போகலாம்” என்று அவனுடனான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள்.
அதன்பின் சற்று நேரத்திற்கு, விஸ்தாரமான உணவகம்! வண்ண விளக்குகள்! விதவிதமான உணவுவைகள்! விரும்பி உண்ணுதல்! விவாதமில்லா பேச்சுகள்! இவை மட்டுமே இருவருக்கு!!
அதுமுடிந்ததும் இருவரும் கிளம்பினார்கள். மஹிந்திரா கார் பாவை வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பயணம் முழுவதும், காலையில் அலைபேசியில் பேசியது… தன்னைக் கூட்டிப் போக அவன் காத்திருந்தது, உணவகத்தில் அவனின் கரிசனமான செயல்கள், என்று அனைத்தையும் பாவை மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.
“பாவை” என்ற அவன் கூப்பிட்டதும், நிகழ்கணத்திற்கு வந்து, ‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்த்தவளிடம், “வீடு வந்திருச்சி” என்றான்.
எதுவும் சொல்லாமல் கதவைத் திறந்து இறங்கப் போனவளுக்கு, அவனைப் பிரிவதில் ஒரு விருப்பமின்மை உணர்வு வந்தது. இதுநாள் வரைக்கும் வராத உணர்வு அது! இறங்காமல் யோசிப்பவளைப் பார்த்து, “என்னாச்சு?” என்றான்.
“நீங்க…” என்று ஆரம்பித்தவள், “டைம் என்ன?” என்று கேட்டு முடித்தாள்.
“பத்தரை… ஏன் கேட்கிற?”
“கொஞ்ச நேரம் பேசலாமா, வீட்டுக்கு வந்திட்டுப் போறீங்களா?” என்றான்.
கார் கதவைத் திறந்து இருந்தவளிடம், “டோர் க்ளோஸ் பண்ணு” என்றவன், “இதுக்கு எதுக்கு இவ்வளவு தயங்கற?” என்று வாசல் முன் நிறுத்திய காரை ஓரமாக நிறுத்தினான்.
இறங்கி இருவரும் மாடிக்குச் சென்றார்கள். வீட்டைத் திறந்தவளிடம், “இங்க இருக்கலாமா?” என்று விசாலமான மாடி முற்றத்தைக் காண்பித்தான்.
அவள் சரியென்றதும் சற்று நேரம் மாடி முற்றத்தில் நடந்தபடி பேசினார்கள்! போதவில்லை! அதன்பின் மாடிப்படிக்கட்டுகளில் அமர்ந்தபடி பேசினார்கள்! அதுவும் போதவில்லை!!
அவர்கள் மௌனத்தின் பிரியங்களைப் போல் இன்று பேச்சின் பிரியங்களும் அதிகமாயிருந்தது! பின், மாடி சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்கள்.
பெரிதாக நிலவொளி இல்லாத இரவு! இருள் போர்வைப் போர்த்திக் கொண்டு உறங்கும் அக்கம்பக்கத்து வீடுகள்! வீட்டின் வரவேற்பறை விளக்கிலிருந்து விழுந்து சிதறிய ஒளி மட்டுமே முற்றத்தின் வெளிச்சம் என்று!!
பேசும் போதே, “இந்த ரெண்டு நாளா என்னை மிஸ் பண்ணீங்களா” என்றாள்.
“அதென்ன ரெண்டு நாள்? எப்ப உன்கூட இல்லனாலும் மிஸ் பண்ணுவேன்”
“ப்ச்! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க”
“ம்ம்! மிஸ் பண்ணேன்”
“அப்படி என்னை மிஸ் பண்றப்ப என்ன தோணும்?” என்றாள், அவனிடம் கோடி காதலை எதிர்பார்த்து!
“உன்னை கிஸ் பண்ணனும்னு தோணும்” என்றான் அவன் காதல் கேடியாய்!
அந்தப் பதிலில் சற்று தடுமாறினாலும், “அப்போ லவ் பண்ணா அழுவீங்களா?” என்றாள் கேலியாக!
“ஹே ஹனி! மிஸ் பண்றப்பவே கிஸ் பண்ண தோணுறப்ப, லவ் பண்றப்போ தோணாதா?!” என்றான் ஜாலியாக!
ஒரு தினுசான அவன் பேச்சில், அவளது ஒட்டுமொத்த திசுக்களும் தித்தித்தது! திண்டாடித் திண்டாடித் அதைத் தன் தேகத்தினுள் தலைமறைவாக்க அவள் முயற்சித்தாள்!
ஆனால் முயற்சியில் தோற்றுப்போனாள்!!
அவளின் திண்டாட்டத்தைக் கண்டவன், “மிஸஸ் பாண்டியன்! நான் சொன்ன மாதிரி நீங்களும் சொல்லுங்க” என்றான் கொண்டாட்டமாய்!
“என்ன சொல்லணும்?’ என்பது போல் பார்த்தாள்.
“மிஸ் பண்றப்போ, லவ் பண்றப்போ… உனக்கு, என்ன தோணும்னு சொல்லு!”
“அது, அது” என்று திண்டாட்டத்துடன் திணறியவளிடம், “ஹலோ இன்னைக்கும் அப்பளம் பொறிக்க வேண்டாம். பதில் வேணும்” என்றான் சிரித்தபடி!
“பதில்தான” என்று கேட்டவள், இதழில் புன்னகையுடன் அவன் விரல்களுடன் தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டு, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
இதமாக சாய்ந்து கொண்டு… இணைந்திருந்த கரங்களை, அவன் இதழ்களின் அருகே கொண்டு சென்றாள் பாண்டியனின் பாவை!
சொல்லாமலே அவள் செயலின் அர்த்தம் புரிந்தது அவனுக்கு. இடக்கரத்தால் அவள் தோளை அணைத்து, அவள் உள்ளங்கையில் முத்தம் வைத்தான் பாவையின் பாண்டியன்!!
காலதாமதமான முதல் முத்தம்! காலஅளவுகள் இல்லாமல் கொடுக்கப்பட்ட முதல் முத்தம்!! முத்தத்தின் முடிவில், அவள் உள்ளங்கை முழுவதும் அவன் உதட்டு ரேகைகளின் கறைகள்!
கறை நல்லது! ஆம், முத்தத்தின் கறை நல்லது!!

