Kathambari Novels
கதவு தட்டும் சத்தம் கேட்டதும், பாவை வந்து திறந்தாள். கொஞ்சம் வியர்வை, நிறைய களைப்பு என்று வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான் சிவா.
“என்ன இந்த நேரத்தில வந்திருக்கீங்க” என்றாள்.
“காலையில மூணு மணிக்கு வீட்லருந்து கிளம்பிப் போனேன். இப்பதான் வர்றேன். உன்னய பார்க்கணும்னு தோனிச்சி. வீட்டுக்குக்கூட போகாம அப்படியே வந்திட்டேன்”
“ஓ!” என்றவள், அவனை ஆராய்ந்தாள். கண்களில் களைப்பு தெரிந்தது. அறை கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் பன்னிரண்டு என்று காட்டியது.
என்ன நினைத்தாளோ பாவை, “சாப்பிட்டீங்களா” என்று இதுவரை அவனிடம் கேட்காத ஒரு கேள்வியைக் கேட்டாள்.
“இன்னும் இல்ல” என்றான் ஒற்றை விரலால் வியர்வையைத் துடைத்தபடி!
“பசிக்கலயா” என்றாள் பரிவாக!
“ரொம்ப பசிக்குது”
களைப்பின் காரணமாகவா? கணவன் என்பதாலா? தெரியவில்லை. “சாப்பிடுறீங்களா” என்று கேட்டாள்.
கேள்விக்கு பதில்தானே உண்டு. பசியாற்றும் குணமுமா உண்டு? ஆனால் அவள் கேள்வியில் அவன் பசியாறினான். இருந்தும், “ம்ம்” என்றான் எதையும் காட்டிக் கொள்ளாமல்!
“வாங்க” என்றதும், காலணிகளைக் கழட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
“வெய்ட் பண்ணுங்க. சமைச்சி முடிச்சிடுறேன்” என்று அவள் சமையலறைப் போக, “என்ன! இனிதான் சமைக்க போறியா” என்று குறுக்கே வந்து நின்றான்.
“ம்ம்ம், கடகடனு செஞ்சிடுவேன்” என்றாள்.
“செம பசி. சமைச்சிட்டு கூப்பிடறியோனு நினைச்சேன்” என்றான் சலிப்பாக.
“அரைமணிநேரம்தான்” என்றாள் சமாதானமாக!
“ப்ச் என்ன பாவை” என்று அலுத்துக் கொண்டான்.
“ஒரு அரைமணிநேரம் என்கூட இருக்க முடியாதா?” என்று கேட்டு அவன் பேச இடம் கொடுத்தாள்.
“அப்படிச் சொன்னேனா” என்றவன், “ஆயுசுக்கும் உன்கூட இருக்க ரெடி” என்று, கிடைக்கும் இடத்தில் அவன் காதலை அவளிடம் கடத்தப் பார்த்தான்.
“ஏன் சாப்பிட சொன்னோம்னு நினைக்கிற மாதிரி பேசாதீங்க” என்று திரும்பி நடக்க போனவள் கைப்பிடித்து நிறுத்தி, “ஏன்டா சாப்பிட ஒத்துக்கிட்டோம்னு நினைக்கிற மாதிரி சமைச்சிடாத” என்று சிரித்தான்.
அவன் கையை உதறிவிட்டு முறைத்தாள்.
“சரி நான் எதும் சொல்லல. கொஞ்சம் ரெப்பிரஷ் பண்ணிக்கிறேன்” என்று சமாதானமாகச் சொன்னதும், சமயலறைக்குச் சென்றாள்.
அதன்பின் கணவன் வரும் வரை காய்கறி நறுக்குதல்! தேங்காய் அரைத்தல்! வெங்காயம் வெட்டுதல்! இதுபோன்ற வேலைகள் மட்டுமே பாவைக்கு!!
“எதும் ஹெல்ப்” என்று அவளருகில் வந்து நின்றான் பாண்டியன்.
‘வேண்டாம்’ என்று அவள் மறுத்ததும், பாத்திரங்கள் அதிகம் இல்லாததால் சமையலறைத் திண்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.
இடைஞ்சல் இல்லாமல் இரண்டு பேர் நிற்க முடியும் என்ற அளவுகளுடைய சமையலறை! அடுப்பின் பக்கமிருந்த சின்ன சன்னல் வழியாகத் தெருவில் சிறுவர்கள் விளையாடும் சத்தம் வந்து கொண்டிருந்தது!!
எக்கிக் கொண்டு சன்னலின் வழியே தெருவைப் பார்த்தவன், எதார்த்தமாக திரும்பும் போது மடமடவென வேலை செய்யும் மனைவியைப் பார்த்தான்.
மெல்லிய கருப்பு ஜரிகை வைத்த சந்தன நிற பட்டுப்புடவை! ஏனோதானோ என்று ஒரு கொண்டை! மரிக்கொழுந்து மல்லிகையும் சேர்ந்து கட்டியிருந்த சிறிய பூச்சரம்!
திருத்தப்படாத புருவங்கள்! தடித்திருந்த ஒன்றிரண்டு பருக்கள்! சாயங்கள் இல்லா உதடுகள்! கூடுதலாக நெற்றியில் ஒரு சிறு சந்தனக்கீற்று! அழகாய் தெரிந்தாள்! ரசித்துப் பார்த்தான்!!
அதே ரசனையுடன், “கச்சேரி சான்ஸ் தேடினியா” என்று கேட்டான்.
“ம், கோயில்ல கொஞ்சம் பெரிய பூஜை, சின்ன சின்ன பங்க்ஷன் நடக்கிறப்ப கச்சேரி நடத்துவாங்க. அங்க பாடுறதுக்கு கேட்டிருக்கேன்”
“நீ சபாலதான பாடணும்னு சொன்ன, அப்புறம் இது எதுக்கு?”
“சபால பாடறதுக்கும் சான்ஸ் கேட்டிருக்கேன்”
“அப்புறமென்ன?”
“வேணிம்மா வீட்ல இருக்கிறப்போ சான்ஸ் வர்றது ஈசி”
“சரி இப்போ”
“நான் இங்க இருக்கிறது யாருக்குத் தெரியும் சொல்லுங்க!? எப்படி சான்ஸ் வரும்?”
“என்னமோ கச்சேரியே பண்ணாத மாதிரி சொல்ற, இதுக்கு முன்னாடி கச்சேரி பண்ணிருக்கியே”
“நீங்க சொல்றது சரிதான்! என்னைத் தேடி வர்றவங்களும் இருப்பாங்க. ஆனா எங்க போவாங்க? யார்கிட்ட கேட்பாங்க!?” என்றவள், “கிரி மாமாகிட்டதான, அவரு என்கிட்ட சொல்வாரா?” என்று கேட்டாள்.
“ஓ! இது வேற இருக்கா”
“இப்பவே சில இடத்தில கேட்டப்ப, கிரிகிட்ட பேசிக்கிறோம்னு சொன்னாங்க. இல்ல என்கிட்டயே பேசுங்கனு நம்பர் கொடுத்திருக்கேன். பார்க்கலாம்…”
“ஃபைன், கோயில்ல பாடறது எதுக்கு?”
“சபால இருக்கிறவங்க, அவங்களோட கான்டக்ட்ல உள்ளவங்க, ஸ்பான்ஸர் கொடுக்கிறவங்க, கச்சேரி ஏற்பாடு பண்றவங்க இப்படி யார்னாலும் அங்க வருவாங்க. அவங்க மூலமா சான்ஸ் கிடைக்கலாம் இல்லயா”
“ஓ!”
“சான்ஸ் தேடியும் போகணும்! அதே சமயம் சான்ஸ் தேடி வர்ற மாதிரியும் பார்த்துக்கணும்! இப்படித்தான் யோசிக்கிறேன். இன்னொரு ஐடியா இருக்கு. சரியா யோசிச்சிட்டு சொல்றேன்” என்று சமையலைக் கவனித்தாள்.
காய்கறிகளை வெட்டிக் கொண்டே ஓரவிழிகளால் அவனைப் பார்த்து, “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்! கேட்கலாமா?” என்று தயக்கமாகக் கேட்டாள்.
“கேட்கணும்னா கேளு! இது எதுக்கு பர்மிஷன்?” என்றான் தாராளமாக!
“அன்னைக்கு வேணிம்மா உங்ககிட்ட நடந்துக்கிட்டதுக்கு கோபம் இல்லயா? என்கூட ரொம்ப நார்மலா பேசறீங்க” என்று கேட்டுவிட்டு, மீண்டும் காய்கறி நறுக்க ஆரம்பித்தாள்.
“அன்னைக்கும், அடுத்து ரெண்டு நாளும் ஒருமாதிரி இருந்தது. அவ்ளோதான். அப்புறம்… அன்னைக்கே சொன்னேனே! உன்னைப் பத்திதான் யோசிச்சேன்” என்றவன், “உனக்கு என்மேல கோபம் இருக்கா?” என்று கேட்டான்.
“ம்ம்” என்று குரல் நெடிலாய் ஒலித்து அவள் கோபத்தின் நெடியைக் காட்டியது.
மிகச் சாதாரணமாக, “சரியாயிடும்” என்றவன், “அன்னைக்கு யாரும் எதையும் புரிஞ்சிக்கிட்டு பேசலை. ஸோ, அதைப் பத்தி பேச வேண்டாம். அது முடிஞ்சி போனது. திருப்பி அதை எடுக்காத!” என்றான்.
காய்கறி வெட்டுவதை நிறுத்திவிட்டு கணவனைப் பார்த்தாள்.
“அப்புறம், உன் பாட்டி… என் அம்மா… அன்னைக்கு அப்படி நடந்துகிட்டதுக்கு காரணம் நீயும் நானும்தான்! நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி ஒழுங்கா இருந்திருந்தா, அவங்க ஏன் அப்படிப் பேசப்போறாங்க!? இதுல அவங்களை இழுக்காத” என்று சொல்லிவிட்டு அலைபேசியைப் பார்த்தான்.
சரிதான் என்று தோன்றியதால் சத்தமின்றி நின்றாள். மேலும் சற்றும் விழி அசைக்காமல் அவனைக் கூர்ந்து நோக்கினாள். பாவைக்குப் பாண்டியன் புதிதாய் தெரிந்தான்.
ஏதோ நெருட அவன் நிமிர்ந்ததும்… முடிந்த அளவு விரைவாக அவனிடமிருந்து விழிகளை மீட்டுக் கொண்டு சகஜமாகக் காய்கறிகளை வெட்டினாள்.
பாத்திரத்தில் அரிசி அளந்தவளிடம், “கச்சேரி அன்னைக்கு ஏதோ பேசணும்னு சொன்னீயே அது என்ன?” என்றான்.
“அன்னைக்கு கார்ல சொன்னேனே, அதுதான்”
“ஓ!” என்றான் ‘அவ்வளவுதானா?’ என்ற குரலில்!
“ஒரு லாங் டிரைவ் போய்க்கிட்டே இதெல்லாம் சொல்லணும்னு நினைச்சேன். அதுக்கப்புறம்…” என்றவளுக்கு அன்று அறையில் அவனைப் பார்த்து நின்றது, தான் சொல்ல நினைத்தது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது!
“அதுக்கப்புறம்… ” என்றான் ‘முழுதாய் சொல்’ என்பது போல்!!
“அப்படியே ஐ லவ் யூ சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்” என்று அலட்டிக் கொள்ளமால் சொல்லி, அரிசியை ‘ரைஸ் குக்கரில்’ போட ஆரம்பித்தாள்.
“ஐ லவ் யூ-வா?” என்று ஆச்சரியமாகக் கேட்டு, திண்டிலிருந்து குதித்து அவள் முன்னே வந்து நின்றான்.
“வழிவிடுங்க” என்று அவனைப் பிடித்து தள்ளி நிறுத்தி, அப்பளம் பொறிக்க எண்ணைச் சட்டியை மின்னடுப்பில் வைத்தாள்.
அவள் தள்ளிய வேகத்திலே அவளருகில் வந்து நின்று, “ஹனி நிஜமா ஐ லவ் யூ சொல்லணும்னு நினைச்சியா?” என்று குனிந்து, அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
“அன்னைக்கு ரூம்ல ரொம்ப நேரம் உங்களையே பார்த்துக்கிட்டு நின்னேன்! அப்போ தோணுச்சு, சொல்லணும்னு!” என்றாள்.
‘தன்னைப் போலவே, அவளும் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறாள்’ என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை வெளிப்படுத்தவும் செய்தான்!
“எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்? எனக்குத்தான் உங்களைப் பிடிக்குமே, ஐ லவ் யூ சொல்றதுல என்ன இருக்கு” என்றாள் இயல்பாக!
அது சரிதான் என்று சிரித்துக் கொண்டான்.
“அதோட நீங்க சொல்லவே இல்லை” என்றாள் குறையாக! பின், “சொல்லவும் மாட்டீங்க!” என்றாள் குற்றமாக! பின், “அதான் நானாவது சொல்லாலாம்னு நினைச்சேன்!” என்றாள் நிறைவாக!
“என்னது? நான் சொல்லவே இல்லயா?” என்றான் சண்டை போடும் குரலில்!
“ஆமா!” என்றாள் சத்தியம் செய்யும் குரலில்!
“ஹலோ! நான் நிறைய தடவை சொல்லயிருக்கேன்”
“நிறைய?” என்று யோசித்தவள், “இல்ல பொய் சொல்றீங்க! நீங்க சொல்லவே இல்ல!!” என்றாள்.
“ப்ச்! சொல்லியிருக்கேன்” என்றதும், ‘எப்போ?’ என்று யோசித்தாள்.
“என்ன ஞாபகம் இல்லயா?” என்றதும், ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
“பைவ் த்ரீ செவன் ஒன் டூ த்ரீ நைன் டூ” என்றான் சிறு புன்னகையுடன்.
“இதுவா” என்றாள் புரியாமல்!
“ம்ம்ம்” என்று இன்னும் புன்னகையை அதிகப்படுத்தினான்.
“இதெப்படி” என்றாள் இன்னும் புரியாமல்!
“முத நாள் பேசறப்பவே… நம்ம ரெண்டு பேருக்கும் ஒப்பீனியன், டேஸ்ட் வேற வேறனு தெரிஞ்சது! நமக்குள்ள கெமிஸ்ட்ரி நல்லா இருக்கணும்னு நினைச்சி பீரியாடிக் டேபிள் வச்சி சொன்னது இது!” என்று விளக்கினான்.
‘இதெல்லாம் தேவையா?’ என்ற எண்ணத்தோடுதான் கணவனைப் பார்த்தாள்.
“நான் எப்ப சொன்னாலும், புரியலை… சொல்றதே வேஸ்ட்னு சொல்லிட்டு இருந்தவ, இப்போ வந்து சொல்லவே மாட்டிங்கனு சொல்ற” என்று அவளைக் குறை சொன்னான்.
‘ஏன்டா இந்தப் பேச்சை எடுத்தோம்?’ என்ற நிலைதான் பாவைக்கு!
“இதுல நான் சொல்லவே இல்லையாம்! இவங்க ஃபர்ஸ்ட் சொல்லலாம்னு நினைச்சாங்கலாம்!” என்றான் நக்கலாக!
“அன்னைக்கே கேட்டேன்ல, ஆல்ஃபபெட் போட்டுப் பார்க்கணுமானு” என்றாள்.
“ஹே! ஆல்ஃபபெட் எங்கருக்கு?! பீரியாடிக் டேபிள் எங்கருக்கு?!”
“எதையும் புரியற மாதிரி சொல்றதில்ல. இதுல புரிஞ்சிக்கோ, புரிஞ்சிக்கோனு சொல்றது” என்று வேண்டுமென்றே அவனுக்கு கேட்கும்படி முணுமுணுத்தாள்.
“நான் புரியிற மாதிரி சொல்லலைனு சொல்றியா”
“ஆமா!”
“புரியற மாதிரி சொல்லிருந்தா?” என்று தூண்டிலாய் ஒருகேள்வி கேட்டான்.
“ஈஸியா புரிஞ்சிருப்பேன்” என்று மாட்டிக்கொண்ட மீனாக பதில் சொன்னாள்.
“இவ்ளோதான ஹனி, சொல்லிட்டா போச்சு!” என்றுவிட்டு, “ஐ லவ் யூ! ஐ லவ் யூ! ஐ லவ் யூ!” என்று மூன்று முறை காதலைக் கத்தி சொன்னதில், சமையலறைச் சுவற்றில் பட்டு எதிரொலித்து… பாவை காதிற்குள் முன்னூறு முறை ஒலித்தது.
முன்னறிவிப்பு இன்றி வந்த ‘ஐ லவ் யூ’-களால் இலகுவாக மூச்சுவிட கொஞ்சம் அவஸ்தைப்பட்டாள்!
மேலும்… மெத்தனமாக அவளை நெருங்கி, “புரிஞ்சிடுச்சா??” என்று கேட்டான், மொத்தமாய் அவளை விழுங்கும் பார்வையுடன்!
“ம்ன்” என்றாள் கேள்வியாக சுத்தமாய் சத்தமில்லாமல்!
“நான் சொன்னது புரிஞ்சதா?” என்று அவள் விழிக்குள் சென்று வினவினான்.
“அது… அது…” என்றவளுக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை!
தொண்டைக் குழியிலிருந்து எழுந்த வார்த்தை அதே தொண்டைக் குழியில் விழுந்து, எழுந்து வர முடியாமல் தவித்தன பாண்டியனின் பாவைக்கு!
‘என்ன சொல்ல போகிறாள்?’ என்ற ஆவலுடன் அவள் அதரத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான் பாவையின் பாண்டியன்!!
“அது…” என்றாள் மீண்டும்!
‘சொல்லு’ என்பது போல் கண் மூடித் திறந்தான்.
“அது… அப்பளம் பொறிக்கணும்” என்றாள் காற்றாகிப் போனக் குரலில்!
‘அடச்சே’ என்றானது காத்திருந்தவனுக்கு!
‘போகவா’ என்று கண்களால் கேட்டாள். ‘போ’ என்று தலையசைத்தான். அவனின் சின்ன தலையசைப்பு கூட அவளைச் சன்னமாகப் பாதித்தது!
அங்கிருந்து நகர்ந்து சூடான எண்ணெயின் முன்னே சென்று நின்று கொண்டு, தன்னை மறந்து இதழ் விரித்தாள். புதிதாய் தெரிந்தவன் வெகு நாட்களுக்குப் பிறகு பாவை முகத்தில் கொஞ்சம் புன்னகையைக் கொண்டு வந்துவிட்டான்!
‘உன்னை விடுவதாக இல்லை’ என்று மீண்டும் அவளருகில் வந்து நின்றான். புன்னைகையை மறைத்தபடியே, “இப்போ என்ன?” என்றாள் அலட்சியமாக, அப்பளம் பொறித்துக் கொண்டே!
வலக்கரத்தை நீட்டி, ‘இதோ பாரு!’ என்று அவள் அணிவித்த மோதிரத்தைக் காட்டினான்.
“இதுக்கென்ன?”
“இது போட்டு விடுறப்போ நீ சொன்னது ஞாபகம் இருக்கா”
“நல்லா ஞாபகம் இருக்கு. என் மேல அன்பு இருந்தா இதை கழட்டக் கூடாதுனு சொன்னேன்!”
“அவ்வளவுதான்! உன் மேல அன்பு இருக்கு, அதான் கழட்டாம வச்சிருக்கேன்! வா வா வீட்டுக்குப் போகலாம்” என்று அவள் கைப்பிடித்து இழுத்தான்.
‘இதுக்குத்தானா இதலாம்’ என்று புரியவும் அவன் கையை உதறிவிட்டு, “நீங்க அன்னைக்கு சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.
பதில் சொல்லாமல் நின்றான்.
“ஞாபகம் இல்லை போல” என்று கேலி செய்து, “ஒரு பொருளோட என் அன்பை கம்பேர் பண்ணாதன்னு சொன்னீங்க” என்றதும், தள்ளி நின்று கொண்டான்.
அவனைப் பார்த்துக் கொண்டே, “சமையல் முடிக்கிற வரைக்கும் அங்கேயே நில்லுங்க!” என்று உத்தரவு போல் சொன்னாள் மனைவி!
அடுத்த நொடி அவள் உத்தரவை உதாசீனப்படுத்தும் வண்ணம் அவளருகில் வந்து நின்று கொண்டான் கணவன்!
மீண்டும் புன்னைகைத்தாள்! இம்முறை சற்று வெட்கமும் இருந்தது! மோதிரம் அணிவித்த நாளில் இருந்த மகிழ்ச்சையைவிட இந்த நாளில் அனுபவித்த மகிழ்ச்சி அதிகம்தான்! அதை இருவரும் உணர்ந்திருந்தனர்!!
சிறு சிறு சலசலப்புகள், சலனங்களுக்கு இடையே சமையல் முடிந்திருந்தது. ஒரு தட்டில் சாப்பாடு வைத்து அவனிடம் நீட்டினாள். வாங்கிக் கொண்டவன், மீண்டும் சமயலறைத் திண்டில் அமர்ந்து கொண்டான்.
பாண்டியன் ஒரு வாய் சாப்பிட்டதும், “ஃபர்ஸ்ட் டைம் உங்களுக்காக சாப்பாடு செஞ்சிருக்கேன். உப்பு, புளி, காரம் எப்படி இருக்குனு சொல்லுங்க” என்றதும், மென்றுகொண்டே தலையாட்டினான்!
இரண்டு வாய் உண்ட பின்பு, “தனித்தனியா சொல்ல தெரியலை. மொத்தமா சொல்லவா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்”
“மொத்தத்தில ம்ம்…” என்று இழுத்தவன், “சாப்பாடு-ல டேஸ்ட் ரொம்ப கம்மியா இருக்கு” என்றான் இதயமேயில்லாமல்.
அவள் முறைத்ததும், “முறைக்காத! நீ வேணும்னாலும் சாப்பிட்டு பாரு” என்று ஒரு வாய் எடுத்து அவளுக்கு ஊட்டிவிட கை உயர்தினான்.
‘வேண்டாம்’ என்பது போல் பின்னே சென்றாள்.
“ரெண்டு தடவை ஊட்டிவிட வந்திருக்கேன். இப்படித்தான் பண்ற நீ! இதுல உனக்கு அன்பு நிறைய இருக்கு! எனக்கு உன் மேல அன்பு இல்லையா?! எந்த ஊரு நியாயம்…” என்று சொல்லும் போதே, ‘ஆ’ என்று வாய் திறந்தாள்.
சிரித்துக் கொண்டே ஊட்டிவிட்டான்!
அவள் மென்று விழுங்கியதும், “இப்போ ஒத்துக்கிறியா?” என்றான், ‘எனக்கும் உன்னைப் பிடிக்கும் என்பதை!’ என்ற அர்த்தங்களோடு!
“ம்ம்ம்” என்றாள் அழகாக!
“அப்படி வா வழிக்கு! என்ன ஒத்துகிற ஹனி?” என்றான் ஆவலோடு!
“நீங்க சொன்னது கரெக்ட்!” என்றாள் அவனுக்கு ஆதரவாக! பின், “சாப்பாடுல டேஸ்ட் கம்மியா இருக்கு!” என்றாள் அவளுக்கு ஆதரவாக!
‘உன்னை” என்று அடிக்குரலில் அழைத்து, என்ன செய்யவென்று தெரியாமல் மீண்டும் ஒரு வாய் ஊட்ட வந்தான்! மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்! அந்தக் கணம் தித்திப்பானதுதான் இருவருக்குமே!!
அதன்பின் சற்று நேரத்திற்கு அவன் உண்பது! அவளுக்கு ஊட்டுவது! அதையும் இதையும் பேசுவது! அதற்காக அவதிப்படுவது! இவை மட்டுமே!!
சாப்பிட்டு முடித்ததும், ‘ஏன் இதுபோன்ற தருணங்கள் முன் அமையவில்லை?’ என்ற ஏக்கம் வந்திருந்தது மனைவிக்கு!
கணவனுக்கு? அவன் ஊட்டிய சாப்பாடு காலியானதில், ஊட்ட நினைக்கும் அன்பு, காதல், அக்கறை எல்லாமே ‘அப்பாடா’ என்று மூச்சு விட்டுக்கொண்டன!

