Kathambari Novels
பாவை, “இப்பதான் கொஞ்சம் மனசு மாறிருக்கு! வேணிம்மா ஆசைப்படி, என் விருப்பப்படி தனியா பாடணும். அதுக்கு என்ன செய்யணுமோ அதைமட்டும் யோசிக்கிறேன். வேறெதுவும் யோசிக்க முடியல” என்று உள்ளத்தில் உள்ளதை அப்படியே உரைத்தாள்.
“தனியா பாடப் போறியா?” என்று கேட்டு பேச்சின் பாதையை மாற்றினான்.
“ம்ம், என்னோட தனித்தன்மை வெளிப்படணும்னு வேணிம்மா நினைச்சாங்க. அதனால! இத சொல்லப் போய்தான் கிரி மாமாக்கு என்மேல கோபம்”
“கோபமா, அவர் எதுக்கு கோபப்படணும்? நீ பாடறது உன் இஷ்டம்தான?”
“நீங்க சொல்றது சரிதான்! ஆனா கிரி மாமாக்கு ரொம்ப கோபம்! உன்னால தனியா பாட முடியுமா? என்ன தெரியும் உனக்கு? அப்படி இப்படின்னு நிறைய பேசி, இங்கிருந்து கிளம்புனு சொல்லிட்டாங்க”
“இது நடந்தது இன்னைக்கா?”
“ம்! காலையில” என்று அவள் சொல்லவும், முதலில் அவன் கேட்ட கேள்வியான, ‘ஏன் வெளிய வந்து நிக்கிற?’ என்பதற்கு கேள்விக்கு விடை கிடைத்தது.
சட்டென, “போதும்! நீ வீட்டுக்கு வா. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் பாவை” என்று பொறுப்பைக் கையில் எடுக்கப் பார்த்தான்!
“வேண்டாம்” என்றாள் வெறுமையாக!
“ஏன்?”
“வந்தா, திரும்பவும் நான் உங்ககிட்ட ஏதாவது எதிர்பார்ப்பேன்! அதைவச்சி நமக்குள்ள சண்டை வரும். அப்புறம் உங்களுக்கு கோபம் வரும். அப்புறம் திரும்பவும்…” என்று முடிக்காமல் நிறுத்தினாள்.
“வெளியே போனு சொல்லுவேன்னு நினைக்கிறியா?” என்றான்.
“ஆமா” என்றவள், “அப்போ சொல்றப்பவே, ஒரு மாதிரி நம்பிக்கை இல்லாம இருந்தேன்” என்றாள் சங்கடமாக!
“ப்ச் அப்படியெல்லாம் இருக்க கூடாது”
“இப்போ நான் சரியாயிட்டேன்” என்றாள் சாதாரணமாக!
“சரியாயிட்டேல!? அப்புறம் என்ன? வீட்டுக்கு வரலாமே?”
“திரும்ப நீங்க எதும் சொன்னா? வேணிம்மாவும் இல்ல! கிரி மாமா வீட்டுக்கும் போக முடியாது. நான் என்ன செய்வேன்? எங்க போவேன்?” என்றவள் குரலில் தனக்கென பார்க்க யாருமில்லை என்ற பயம் மண்டிக்கிடந்தது.
‘நான் இருக்கிறேன்’ என்கலாம். ஆனால் தான் நடந்து கொண்ட விதத்தால், தன்னை நம்பாமல் இருப்பவளிடம் என்ன சொல்லவென்று தெரியாமல் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“யாருக்கு கோபம் வந்தாலும்… நான் எதும் பேசினாலும்… உடனே இங்கிருந்து கிளம்புனு’ சொல்றீங்க!” என்று அவள் மீது அன்பில்லாதவர்கள் பட்டியலில் அவனையும் சேர்த்தாள்.
“சொன்னது தப்புதான். ஆனா எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்”
“எனக்கும்தான் உங்களை ரொம்பப் பிடிக்கும்”
“அப்புறம் என்ன?”
“நான் சொன்னதை உங்களால நம்ப முடியுதா?”
“ம்ம்”
“ஆனா நீங்க சொன்னதை என்னால நம்ப முடியல” என்றாள் விரக்தியாக!
“ஏன்?”
“என்னை வெளிய போனு சொன்ன யாருக்கும் என்னை பிடிக்காது. திருச்சில அப்பா சொந்தக்காரங்க… வேணிம்மா வீட்ல கிரி மாமா, மீனாம்மா… இப்படி” என்று இடையில் நிறுத்தி, ‘இந்த வரிசையில்தான் நீயும் வருகிறாய்!!’ என்பது போன்ற பார்வை பார்த்தாள்.
“அவங்க என்ன சிச்சுவேஷன்ல சொன்னாங்க? நான் என்ன சிச்சுவேஷன்ல சொன்னேன்? கொஞ்சம் புரிஞ்சிக்கோ பாவை” என்று மன்றாடினான்.
“எப்பவும் புரிய வைக்கிறேன். புரிஞ்சிக்கோ. இப்படியே சொல்றீங்க. ஏன் ஒரு தடவைகூட என்னை புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்க?” என்றாள் மனம் நொந்து.
மௌனம் அவனிடம்!!
“இப்ப யார் வீட்லயும் இருக்க பிடிக்கல. எனக்கே எனக்குனு ஒரு வீடு வேணும்னு தோணுது” என்றாள் ஆசையாக! அவசியமாக!!
“ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனோ”
‘அப்படி ஒன்றுமில்ல’ என்பது போல் காட்டுவதற்கு மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருந்தவளைக் கண்டவன், “ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் தெரியுது பாவை” என்றான் உடைந்து போன குரலில்.
“இது என்னோட முடிவு. சரியா வராதுனு நினைச்சீங்கனா, நீங்க யோசிச்சு முடிவெடுங்க” என்றவள், “நான் கொஞ்ச நேரம் வெளிய நிக்கிறேன்” என்று காரிலிருந்து இறங்கி நின்றுகொண்டாள்.
இமை இரண்டையும் மூடி யோசித்தான். ஏற்கனவே ‘உரிமையில்லை’ என்ற பேச்சுகளால் பாதித்த மனதை, தன் பேச்சு மேலும் பாதித்து இருக்கிறது என்று புரிந்ததும் மனம் வெதும்பினான்.
அவள் அவளைச் சரி செய்து கொள்ள, அவளைத் தான் சமாதானம் செய்ய அவகாசம் வேண்டுமென நினைத்தான். அந்த அவகாசத்தில் தன் அன்பை அவள் புரிந்து கொள்ளும் விதமாக நடக்க வேண்டுமென்று முடிவெடுத்தான்.
அதே அவகாசத்தில், அவள் அவளது கனவை நோக்கி முன்னேறிச் செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டான்.
ஆனால் அவளைத் தனியாக விட்டுவிட்டு, தான் எப்படி நிம்மதியாக இருக்க என்ற கேள்வி வந்ததும், ‘கஷ்டம்தான்’ என்பது போல் பெருமூச்சு விட்டான்.
அவளை வீட்டிற்கு வரவைக்க வேறு வழி இல்லையா என்று மனம் துடித்துக் கேட்டது. வழியிருந்தாலும், அதை அவள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்று மூளை அடித்துச் சொல்லியது.
சற்று நேரத்திற்கு எப்படி இதைச் செயல்படுத்த?! தங்கள் வாழ்வை எப்படிச் சரிசெய்ய?! குடும்பத்தினரை எப்படிச் சமாளிக்க? இப்படியான யோசனைகள் மட்டுமே அவனிடம்!!
யோசித்து முடித்ததும் காரிலிருந்து இறங்கி அவள் எதிரே வந்து நின்றதும், “முடிவு எடுத்திட்டிங்களா?” என்று கேட்டாள்.
‘ம்ம்’ என்று தலையாட்டினான்.
‘என்ன முடிவு?’ என்பது போன்ற ஒரு பார்வை பார்த்தாள்.
“நீ தனியா இருந்துக்கோ! கச்சேரி பண்ணறதுக்கு ட்ரை பண்ணு” என்றான், தங்களது கல்யாண வாழ்வில் இருக்கும் சிக்கலுக்குள், அவள் கனவு சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற அக்கறையில்!
“தேங்க்ஸ்…” என்று சொல்லும் போதே, “பொறு! இன்னும் முடிக்கல” என்றவன், “எனக்கு சில கண்டிஷன் இருக்கு!” என்றான்.
“கண்டிஷனா?” என்று விழி விரித்தாள்!!
“யெஸ்” என்று சுலபமாகச் சொன்னவன், “உன்னைத்தான் பிடிக்கும்னு சொல்ற பொண்ண அப்படியே விட்டுட்டுப் போக முடியாது!” என்றான் பலமாக!
“அதுக்கு?!”
“நான் ஃபோன் பண்ணா அட்டன் பண்ணனும். உன்னைப் பார்க்க வீட்டுக்கு வருவேன். முடியாதுனு சொல்லக்கூடாது. எதும் ஹெல்ப் வேணும்னா உடனே என்கிட்ட கேட்கனும்” என்றான் உரிமையுடன்!
ஏதோ சொல்ல வந்தவளை, “இரு! நான் இன்னும் முடிக்கலை” என்றான்.
“சரி சொல்லுங்க”
“எனக்கு உன்மேல அன்பு, அக்கறை இல்லைனுதான என்கூட சேர்ந்து வாழ முடியாதுனு சொல்ற! சப்போஸ் இனிமே நாம பேசற நாள்ல நான் உன்மேல வச்சிருக்கிற அன்பு, அக்கறையை உணர முடிஞ்சா, அடுத்த செகண்டே நீ சேர்ந்து வாழ ஒத்துக்கணும்” என்றான் அவள் மீதான அதீத அன்பில்!
“ஏன் இப்படி? அன்னைக்கே வேணிம்மாவும், உங்க அம்மாவும் சொன்னாங்கள நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லைனு” என்றாள்.
“அதுக்கென்ன இப்ப?”
“எனக்கு நம்பிக்கையே இல்ல… நாம ரெண்டு பேரும் ஒரு விஷயத்தை முழுசா பேசிப் புரிஞ்சிக்க, சிரிச்சி பேச, சந்தோஷமா சேர்ந்து வாழ முடியும்னு” என்று கடந்து போன கசப்பான நாட்களை வைத்துக் கேள்வி கேட்டாள்.
“ஆனா, எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றான், கடந்த காலத்தையே கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் எதிர்காலத்தை எப்படிக் கைதட்டி வரவேற்க முடியும் என்பது போல!!
யோசித்தபடியே நின்றாள்.
“உனக்குத்தான் என்னைப் பிடிக்கும்ல…? எனக்கும் உன்னைப் பிடிக்குதுனு தெரிஞ்சா, சந்தோஷமா சேர்ந்து வாழ வேண்டியதுதானே? எதுக்கு இவ்வளவு யோசிக்கிற?” என்று கேட்டான்.
அவன் என்ன சொன்னாலும், ‘வெளியே போ’ என்ற அவனது வார்த்தை, அவள் இதயத்தை விட்டுப் போக மறுத்தன. இருந்தும், “ம்ம்ம்” என்றாள், முற்றிலும் நம்பிக்கையில்லாமல்!
மேலும், “வீடு பார்த்திருக்கேன்” என்றாள் சிறு தயக்கத்துடன்!
“ஓ!” என்றான் பெரிதாய் வருத்தத்துடன்!
“உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற டைம்ல ஃபோன்ல பார்த்து வச்சேன்” என்றாள் சிறிய விளக்கமாய்!
“ஓகோ” என்றான் பெரிய இயலாமையுடன்!
அதன்பின் அவளிடம் பேச்சில்லை. தன் ஒற்றை வார்த்தை பதில்களில் அவள் ஒருமாதிரி வாடுவதை கண்டதும், “எந்த ஏரியா?” என்று கேட்டான்.
அதற்கு பதில் சொன்னவள், “கடைசியா பாடின கச்சேரில அபங் பாடுவியா? பியூசிஷன் ட்ரை பண்ணுவியானு கேட்டாங்க! இதெல்லாம் சொல்லித் தர அந்த ஏரியால ட்யூட்டர் இருக்காங்க. அதான் அங்க வீடு பார்த்தேன்.
அதோட, பெரிசா கச்சேரி எதும் இல்லாதப்பவே இதலாம் கத்துக்கிறது நல்லது. கச்சேரில பிஸியாயிட்டா கத்துக்க முடியாம போயிடம். வேற ஐடியாவும் இருக்கு. அத சிலர்கிட்ட கேட்டுட்டுதான் சொல்ல முடியும்” என்றாள்.
அவள் பேசியதைப் பார்க்கையில், அவளது கனவுப் பாதையில் தெளிவாக இருப்பது தெரிந்தது. யாருடைய உதவியும் இல்லாமல் தான் உறுதுணையாக இல்லாவிட்டாலும், அவள் விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளும் திடம் இருக்கிறது என்று புரிந்தது.
அந்த, ‘கச்சேரில பிஸியாயிட்டா’ என்ற வார்த்தையை நினைத்தவனுக்கு, நூறு சதவீதம் தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும் என்று எண்ணத் தோன்றியது.
“என்ன யோசிக்கிறீங்க?” என்று அவள் கேட்க, “ஒன்னுமில்ல! வா போகலாம்” என்றான். இருவரும் காரில் ஏறினர். மஹிந்திரா தார் நகர் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கியது.
அதன்பின் மூன்று மணிநேரத்திற்கு வீட்டின் வசதி, பாதுகாப்பைப் பார்த்தல்! வாடகை வீட்டிற்கான நடைமுறைகள்! வீட்டிற்கான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குதல்! இவை மட்டுமே இருவருக்கும்!!
கடைசியில் அவளை அங்கே விட்டுப் போக அறவே மனமில்லை! இருந்தும் அவள் மனம் மாறும் என்ற நம்பிக்கையில் வீடு திரும்பினான்!!
போகும் முன், ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நாம ஒரு விஷயத்தைப் பேசிப் புரிஞ்சிக்க முடியாதுனு சொன்ன! பட் பர்ஸ்ட் டைம் நாம பேசி… புரிஞ்சி, ஒரு முடிவெடுத்திருக்கோம்!
தப்பா, சரியாங்கிறது அப்புறம்! ஆனா முழுசா பேசிருக்கோம்’ என்று அவள் முடியவே முடியாது என்று சொன்ன ஒன்று முடிந்திருப்பதைக் கோடிட்டுக் காட்டிவிட்டே சென்றான் பாவையின் பாண்டியன்!!
****************
சிவபாண்டியன் வீடு! “ம்மா” என்றழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
“கிட்சன்ல இருக்கேன் கண்ணா” என்றதும் அவசர அவசரமாக வந்தான்.
“என்ன லேட்? அப்பவே வருவேன்னு சொல்லியிருந்த…” என்று கேட்கும் போதே, “அதவிடுங்க! உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்” என்றான்.
“சொல்லு” என்றார் சமையலில் கவனம் வைத்துக் கொண்டே!
அவர் கவனம் அவன் பேச்சில் இல்லை என்று தெரிந்ததும், “நீங்க பால்கனிக்கு வாங்க பேசலாம்” என்றான்.
“சமைக்கணும் சிவா! அப்பா வந்திருவாங்க” என்று சொன்னார்.
“அதெல்லாம் அப்புறம்” என்று அடுப்பை ஆஃப் செய்து, அவரை இழுத்துக் கொண்டு தன் அறையின் பால்கனிக்குச் சென்றான்.
செண்பகம், “என்ன சொல்லு?” என்றதும், மகன் எல்லாம் சொன்னான்.
அதிர்ச்சி, அதிருப்தி அவரிடம்! “என்ன சிவா இதலாம்?” என்றார் கோபத்துடன்.
சிவா அமைதியாக அவருக்கு எடுத்துச் சொன்னான். சற்றுநேரம் அவரைச் சாந்தப்படுத்தும் விதமாகப் பேசினான்!!
அதன்பிறகு பால்கனியின் போன்சாய்களுக்கு இடையே இருவரும் மெல்ல நடந்தனர். “முதலயே நம்மகிட்ட இவ சொல்லிருக்கலாம் கண்ணா” என்றார்.
“இதயே நான் அவகிட்ட கேட்டேன். கொஞ்சம் அன்டர்ஸ்டேன்டிங் வந்தப்புறம் சொல்லணும்னு நினைச்சிருக்கா”
“இல்ல சிவா! சொல்லியிருக்கலாம்!” என்று யோசித்தவர், “ஆனா கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்தான ஆகுது” என்று அவள் சொல்லாதது சரியா, தவறா? என்று பிரித்தறிய முடியா நிலையில் இருந்தார்.
சற்றுநேரம் எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டே நடந்தனர்.
எப்பொழுதும், ‘வேணிம்மா வீடு… வேணிம்மா கார்’ என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன்! ஒருமுறை கூட, ‘எங்க வீடு’ என்று உரிமையுடன் அவள் சொல்லிக் கேட்டதில்லை! இது சிவாவின் எண்ணக் குரல்!!
கல்யாணம் முடிந்தும் சிவாவின் முதல் வெளியூர் பயணத்தின் போது பாட்டி வீட்டுக்குப் போக சொன்னதற்கு, தேன்பாவை மறுத்தது இதற்காகத்தான்! இவர்களால்தான்! இது செண்பகத்தின் புரிதல்!!
அவளை அழைத்துவர வேணிம்மா வீட்டிற்குப் சென்றபோது, கிரி நேரடியாக பாவையைக் கூப்பிடாமல், கௌசியை அழைத்துக் கூப்பிடச் சொன்னது ஞாபகத்தில் வந்தது! வீட்டில் யாரும் அவளிடம் பேசுவதேயில்லை போல?! இது சிவாவின் கவலை!!
கச்சேரிக்கு புடவை வாங்க வந்த கௌசியும், அவள் கணவனும் கீழே வரை வந்துவிட்டு… வீட்டிற்கு வராதது ஞாபகத்திற்கு வந்தது! – ‘எப்போதும் இப்படி, அவளிடம் ஒதுங்கி இருந்திருப்பார்களோ?’ என்று நினைத்து கவலைப்பட்டார்!
இப்படி அவள் மற்றும் அந்த வீட்டினரின் செயல்களுக்கெல்லாம் காரணங்கள் கண்டுபிடித்தபடியே நடந்து கொண்டிருந்தனர்.
“சிவா, எனக்கு ஒன்னு மட்டும் புரியல! அந்த வீட்ல யாரும் அன்பா இருக்கல. ஆனா நாமதான் அன்பா இருந்தோமே? அதை ஏன் புரிஞ்சிக்கலை?” என்றார்.
“எனக்குத் தெரிஞ்சி ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணியிருப்பானு நினைக்கிறேன்! அதுக்குமேல அவதான் சொல்லணும்!!”
“நீ கேட்கலையா?”
“ஏன் நடந்ததைப் பேசணும்னு விட்டுட்டேன்” என்றவன், “அதோட இன்னைக்கே எல்லாத்தையும் கேட்க வேண்டாம்னு நினைச்சேன்” என்றான்.
அவன் சொன்னது ‘சரியென’ தோன்ற சற்றுநேரம் பேசாமல் இருந்துவிட்டு, “நீ அவளை இங்க கூட்டிட்டு வந்திருக்கணும்” என்று அவருக்கு உடன்பாடில்லா விடயத்திற்கு வந்தார்.
“கூப்பிட்டேன்-மா! வரணும்ல?!” என்றான் வருத்தமாக!
மகன் முகம் பார்த்தவர், “இப்படி பண்ணா எப்படி? கடைசில நளினி சொன்ன மாதிரி அட்ஜஸ்ட் பண்ணவே மாட்டேங்கிறா பேருதான் வரும்” என்றவர், “இது உனக்கு சரி வரும்னு தோணுதா?” என்று கேட்டார் நம்பிக்கையில்லாமல்!
“கொஞ்ச நாள் தனியா இருந்தா புரியும்னு நினைக்கிறேன்” என்றான் நம்பிக்கையாக!
“நான் அதைக் கேட்கலை சிவா”
“வேறென்னம்மா”
மிகவும் தயங்கி, “அவளோட சேர்ந்து வாழறது. நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாம, சந்தோஷமா வாழ முடியுமா?” என்று தாயாக, மகனின் வாழ்க்கைப் பற்றிய பயத்தில் கேட்டார்.
“அவளும் இதே கேள்விதான் கேட்டா” என்றவன், “எனக்கு நம்பிக்கை இருக்கு. நிச்சயம் சந்தோஷமா இருப்போம்னு!!” என்றான்.
“சரி கண்ணா” என்றவர், “இத வீட்ல எப்படிச் சொல்றது? சும்மாவே அப்பாவும் நளினியும் அவளைப் பத்தி அது இதுனு சொல்லிக்கிட்டு இருந்தாங்க! இப்போ என்ன சொல்வாங்களோ?” என்று புலம்பினார்
“அதான்மா! அவங்ககிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்” என்றான் எளிதாக!
“என்னடா சொல்ற?” என்று பதறினார்.
“இப்ப சொன்னா, ஏன் தனியா இருக்கனும், இங்க வர சொல்லுனு சொல்வாங்க”
“அது சரிதான?!”
“ம்மா, சேர்ந்து வாழலாம்னு பாவை சொல்லட்டும்! அதுக்கப்பறம் அப்பா, நளினி, பிரவீன் இவங்ககிட்ட சொல்லிக்கலாம்!” என்றான்.
ஓர் அமைதிக்குப் பின் செண்பகம், “வேற எதும் சொன்னாளா” என்றார்.
“ம்ம், சான்ஸ் தேடறது, வேற ஏதோ கிளாஸ்… இதைப்பத்தி பேசினா!!”
“வேற எதுவும் சொல்லலையா?” என்று மீண்டும் அதையே கேட்டார்.
“ஏன் கேட்கிறீங்க?”
“இல்ல… அன்னைக்கு… கொஞ்சம் அவளைத் திட்டினேன்!” என்றார் தயக்கமாக!
“என்ன சொன்னீங்க?”
“உனக்கு இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணு பார்த்திருக்கலாம்னு சொன்னேன்” என்றார் மெதுவாக!
நடப்பதை நிறுத்திவிட்டு அமைதியாக நின்றான்!!
“அன்னைக்கு ரொம்ப கோபம். அதனால…” என்று விளக்கம் சொல்லும் போதே, “ம்மா! அன்னைக்கு யாரும் யாரையும் புரிஞ்சிகிட்டு பேசலை. அதைப் பத்தி எதுவும் பேச வேண்டாம்” என்று விட்டுவிடச் சொன்னான்.
“சரி” என்றவர் அதற்குமேல் அதைப்பற்றி அதிகம் நினைக்கவில்லை.
சூழல் இரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இருள் பரவுவது போல் இருந்ததால், பால்கனி விளக்கை ஒளிரவிட்டான். பின், அம்மா அருகில் வந்து நின்று, “ம்மா பாவை நல்ல பொண்ணுதான்” என்றான்!
மகனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஃபர்ஸ்ட் நாள் பேசிறப்போ வாழ்க்கையைத்தான் ஷேர் பண்ண வர்றேன், வருமானத்தை இல்லனு சொன்னா!! இன்னைக்கு வரைக்கும் என் சேலரி பத்தி எந்த கேள்வியும் கேட்டதில்லை! அவ என்கிட்ட எதிர்பார்த்தது அன்புதான்!”
அவன் சொல்வது சரியென்று தோன்றியது செண்பகத்திற்கு!
காரணம்? இதுவரைக்கும் தொழிலில் வரும் வருமானங்கள் பற்றி பாவை கேள்வி கேட்டதே இல்லை என்பதால்! மேலும் அன்றும் சரி… இன்றும் சரி… மகனின் பிரியத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று புரிந்தது.
அவர் அமைதியைப் பார்த்தவன், “ம்மா! ப்ளீஸ்-ம்மா!! இப்போதைக்கு இதை விட்டா வேற வழி தெரியலை! அவ அங்கேயே இருக்கட்டும்! கொஞ்சம் டைம் கொடுங்க. கண்டிப்பா எல்லாம் சரியாகிடும்! அப்புறம் வீட்ல சொல்லலாம்! ப்ளீஸ்-ம்மா” என்று கெஞ்சினான்.
மகன் மனதிற்காகப் பார்க்கவா? அவன் மகிழ்ச்சிக்காகப் பார்க்கவா? அவன் மனதில் இருப்பவளால் மகிழ்ச்சி கிடைக்குமா?? இப்படித் தவிப்புடன் பல கேள்விகள் அவரிடம்!!
எனினும் ‘சரியென’ தலையாட்டினார் மகனிற்காக! இருந்தும் அரைமனதுடன் இருந்தார், கணவன் மற்றும் மகளிடமிருந்து மறைப்பதற்காக!!
*******************
தேன்பாவை வீடு! மேல்தளத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, கீழ்தளத்தில் வீட்டின் உரிமையாளர் இருந்தார்.
வீட்டின் மேல்தளம்! சிறிய வீடு என்றுகூட சொல்ல முடியாது, குறுகிய இரண்டு அறைகள் மட்டுமே! அதில் ஒன்று குளியலறை வசதியுள்ள படுக்கையறை! மற்றொன்று வரவேற்பறையோடு சேர்ந்திருந்த சமையலறை!!
மாடி வீடு என்பதால், வீட்டின் முன்பகுதி விசாலமாக இருந்தது. மேலும், தரை முழுவதும் செங்கல் பதிக்கப்பட்டிருந்தது!
வீட்டின் அறைகள்! சீமென்ட் மொசைக் தரைகள்! கத்திரிப்பூ நிறத்தில் இருந்த சுவரின் வண்ணம்! ஆறேழு கம்பி வைத்த மர சன்னல்கள்! திறந்த பாணியில் இருந்த சமையலறை மற்றும் படுக்கையறை அலமாரிகள்!!
இவ்வளவுதான் வீடு!
படுக்கையறை அலமாரியில் உடைகளை அடுக்கி வைத்திருந்தாள்! சமயலறையில் சிறு சிறு சமையல் பாத்திரங்கள் மற்றும் ஒரு மின்னடுப்பு!
அவ்வளவுதுதான் அவளது உடைமைகள்!!
ஒருவாரம் முடிந்திருந்தது! இந்த ஒரு வாரத்தில், ஏழு நாட்கள் பாவையைப் பார்க்க வந்திருந்தான், சிவபாண்டியன்! மாடி முற்றத்தில் நின்றுதான் பேசுவார்கள்!!
எதும் தேவை இருக்கா என்று கேட்பான். ‘இல்லை’ என்பாள். வேறேதும் தேவை இருந்தா சொல்லு என்று சொல்வான். ‘ம்ம்ம்’ என தலையாட்டுவாள்.
இருவருக்கும் இடையே உரையாடல் இதுபோல்தான் முதல் நாள் இருந்தது.
ஏழு நாட்களுக்குப் பின் எப்படி இருக்கிறது? என்று இன்று தெரிந்துவிடும். ஏனென்றால் இன்றும் வந்து நிற்கிறான்!
ஆம்! நீ விலகி இருந்தால் என் வாழ்க்கை என்னிடம் விளக்கம் கேட்கும் என்பது போல்தான் அவன் நடந்து கொள்கிறான்!!

