Kathambari Novels
‘என்ன வேணும்?’ என்று கேட்டவனிடம், “இதுதான் வேணும்னு சொன்னவுடனே, அதைச் செய்ய போறீங்களா? இல்லைல? அப்புறம் ஏன் கேட்கிறீங்க?” என்று கேட்டு, அவன் எரிச்சலை அதிகப்படுத்தினாள்.
“அப்படி என்ன செய்யலை?” என்றான்.
“எதுவுமே!” என்றாள் உடனடியாக! “எனக்காக அட்ஜஸ்ட் பண்ணல. கொஞ்சம் கூட உங்களை மாத்திக்கல” என்று அடுக்கினாள்.
“மாறணுமா? எதுக்கு…” என்று சிவா விளக்கம் கொடுக்க தொடங்கும் போதே, “அண்ணா என்ன அட்ஜஸ்ட் பண்ணலை?” என்று, நளினி அண்ணனிற்காகப் பரிந்து பேச வந்து பாவையைக் கேள்வி கேட்டாள்.
“நளினி! நீ ஏன் பேசுற?” என்று கண்டித்த செண்பகம், “அவங்க ரெண்டு பேரும் பேசிக்கட்டுமே” என்றார்.
“மேரேஜ்கு சாரீ எடுக்கிறதுலருந்து… ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போறது, சாப்பிடறதுனு அவளுக்காக பார்த்துப் பார்த்து அண்ணா செய்றான். இதகூட இவளால புரிஞ்சிக்க முடியாதா? இதுக்குக்கூட டைம் வேணுமா?” – நளினி.
“ஏன் செண்பா… நளினி கேட்கிறது சரிதான?” என்று மதி மகளுக்குப் பரிந்து பேசினார்.
“சரி, தப்புனு… நான் எதும் சொல்லலை! இப்ப இதைப் பத்தி இவ பேசணுமானு கேட்கிறேன்? அவ்வளவுதான்!” என்றார்.
“அண்ணா, அவளுக்காக அட்ஜஸ்ட் பண்ணவே இல்லைனு, சொல்றா! அவளை எதும் கேட்க மாட்டிக்கிறீங்க? என்னை மட்டும் கேட்கிறீங்க?” என்றாள் நளினி!
அப்பா, பெண் இருவருக்கும் தான் சொல்ல வருவது புரியவில்லை என்பதால், ‘பேசாமல் இருப்பதே நல்லது’ என்று செண்பகம் அமைதியயாகிவிட்டார்!
அம்மாவின் வாதங்கள் சிவாவிற்குப் புரிந்ததால்… இங்கே வைத்துப் பேசுவது சரியல்ல என்று தோன்றியது. “வா, உள்ளே போகலாம்” என்றான் பாவையிடம்.
நளினியின் பேச்சுகள் பாவையைக் கோப மூட்டி இருந்தன! அன்று, ‘மகனைப் புரிந்து நடந்து கொள்’ என மாமனார் சொன்னார். இன்று இவள் சொல்கிறாள். தனக்கென்று பேச யாருமில்லை என்ற எண்ணம் வந்தது! ஆதலால் கோபம்!!
அந்தக் கோபத்துடனே, “நான் வரலை” என்றாள் வெடுக்கென்று!
‘ஏன் இவ இப்படிச் செய்றா’ என்று செண்பகம் முகத்தைச் சுழித்தார்.
“கோபப்படுத்தாத! எதுனாலும் உள்ளே போய் பேசலாம்!!” என்று சிவாவின் குரல் உயர ஆரம்பித்தது.
“முடியாது” என்று ஸ்திரமாக நின்று அவளும் குரலை உயர்த்தி சொன்னாள்!
“ஏன் சொல்றேனு புரியாம பேசிக்கிட்டே இருக்காத?” என்றவன், “வா” என்று அவள் கைப் பிடித்து இழுக்க, “முடியாது” என்று அவன் கையை உதறினாள்.
சிவாவிற்கு மட்டுமல்ல, அங்கிருந்த மற்ற மூவருக்குமே அவளின் செயலில் எரிச்சல் வந்தது.
“முதல்ல பேசாதன்னு சொன்னீங்க! அப்புறம் அமைதியா பேசு! இப்ப இங்க நின்னு பேசாதனு சொல்றீங்க! ஏன்? எனக்கு இங்க பேசறதுக்கு கூட உரிமை இல்லையா?” என்றாள்.
இப்படி ஒரு கேள்வி… வளர்ந்த வீட்டில் மறுக்கப்பட்டவைகளை நினைத்துக் கேட்டாள்! ஆனால் இந்த வீட்டிற்கு… இந்த இடத்திற்கு… இவனுக்கு… இந்தக் கேள்வி பொருந்துமா என்று சற்றும் யோசிக்காமல் கேட்டுவிட்டாள்!!
‘எதற்காக சொல்கிறோம்?’ என்று புரிந்து கொள்ளாமல் வீம்பாக பேசுகிறாளே என்று சிவாவிற்கு கோபம். “ஆமா! உனக்கு இந்த வீட்ல எந்த உரிமையும் இல்ல! அதுமாதிரி எனக்கும் உன்மேல அன்பு இல்ல! அக்கறை இல்ல! போதுமா” என்று பொறுமை இழந்தான்! தன் பொறுப்பையும் மறந்தான்!
இருவரிடம் ஓர் அமைதி! எப்போதும் அவர்களது மௌனங்களில் பிரியங்கள் அதிகமாக இருக்கும். இன்று அதில் பிரிவின் சாயல்கள் தெரிய ஆரம்பித்தன!
இந்த நேரத்தில் தற்செயலாக செண்பகத்தின் பார்வை வாசலை நோக்கிச் சென்றது. அங்கே அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தார் வேணிம்மா! அவர் பக்கத்தில் கலை மற்றும் கௌசி!!
மூவருமே சிவா பேசியதைக் கேட்டிருந்தனர்.
‘அம்மா ஏன் இப்படி நிற்கிறார்’ என்று சிவா வாசலைப் பார்க்க, ‘இந்த நேரத்தில் இவர்கள் ஏன் இங்கே?’ என்ற கேள்வியுடன் கூடிய அதிர்ச்சி அவனுக்கு!
அக்கணத்தின் அதிர்ச்சியைக் கூட்டிடும் வண்ணம் பிரவீன் மற்றும் அவனது பெற்றோர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்து, “வாங்க மாப்பிள்ளை. வாங்க சம்பந்தி” என்று செண்பகம், மதி வரவேற்றனர்.
பிரவீன் அம்மா, அப்பா சோஃபாவில் அமர்ந்தனர். மதி அவர்களுடன் அமர்ந்து கொண்டார். எல்லோரும் நிற்கும் நிலையைப் பார்த்த பிரவீன், “என்னாச்சு?” என்று நளினியின் அருகில் வந்து நின்றான்.
“கொஞ்ச நேரம் பேசாம இரு! உனக்கே புரியும்” என்று கணவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் நளினி சொன்னாள்.
இதேநேரம் நிலைமையை இப்படியே சகஜமாக்கிவிடுவோம் என்று நினைத்த செண்பகம், “வாங்கம்மா… வா கலை… கௌசி வா. உள்ளே வந்து உட்காருங்க” என்று சாதரணமாக அவர்களையும் வரவேற்றார்.
ஆனால் சிவா பேச்சை வேணிம்மா கேட்டதால் செண்பகத்தின் வரவேற்பைக் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை. கணவனது பேச்சினால் காயமடைந்த மனதுடன் பாவையும் வாசலை நோக்கினாள்.
வேணிம்மா, பாவை… இருவரின் கண்களும் சங்கடப்பட்டுப் போய் இருந்தன சந்தித்துக் கொண்ட தருணத்தில்! “வேணிம்மா” என வலியின் முனங்கலுடன் அவள் உதடுகள் முணுமுணுத்தன! சங்கடத்துடனே, “பாவை” என்றார்.
“வேணிம்மா, எனக்கு இங்க இருக்க பிடிக்கல” என்று அவரின் நம்பிக்கையைப் பொய்யாக்கினாள் பாவை!
பாவை சொன்னதைக் கேட்டவர்கள் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்தினர். அவள் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்க செண்பகம் கஷ்டப்பட்டார். மதியும் நளினியும் கோபத்துடன் இருந்தனர். பிரவீனும், அவனது பெற்றோரும், ‘ஏன் இப்படி?’ என்று அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிவபாண்டியன் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அப்படியே திரும்பி வாழ்க்கைத் துணையைப் பார்த்தான். இத்தனை பேர் முன் இப்படிப் பேசும் அளவிற்கு என்ன செய்துவிட்டேன் என்று கோபம் கொண்டது சிவாவின் அறிவு!
மேலும், ‘உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று சொன்னவளிடமிருந்து, இன்று இதுபோன்ற வார்த்தைகளா என்று வருத்தம் கொண்டது பாண்டியனின் மனம்!!
இந்தக் கணத்தில் வேணிம்மாவிற்கு, யாருமே இவளை நன்றாகப் பார்த்துக் கொள்ள மாட்டார்களா என்ற ஆதங்கம் வந்தது. அது சிவா மீது ஆத்திரமாக மாறியது.
‘அக்கறை இல்லை’, ‘பாவையின் அலைபேசி பேச்சு’, இன்று ‘உரிமையில்லை’ என்ற சிவாவின் பேச்சு, எல்லாம் சேர்ந்து அவன் மீது இருந்த ஆத்திரத்தை கோபமாக மாற்றியது.
அந்தக் கோபத்தில், “என்னடா நீயும் இப்படிச் சொல்ற?” என்று வேகமாக வந்து, சிவா சட்டையைப் பிடித்து, ‘ஏன் இப்படிப் பேசின’ என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு அவனை உலுக்கினார்.
சுற்றி இருந்த அனைவரும், ‘ஏன் இப்படிச் செய்கிறார்?’ என்று அரைநொடிக்கு அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.
அந்த அரைநொடியில்… ‘உன்னால்தான் இப்படி’, ‘இந்த நிலைமைக்கு நீதான் காரணம்’ என்ற அர்த்தங்களுடன் பாவையைப் பார்த்துக் கொண்டிருந்தான், பாண்டியன்.
“கோயிலுக்குப் போகலை… மனசு கஷ்டமா இருக்குதுனு சொல்றப்பவே நான் புரிஞ்சிருக்கணும். அவ இங்க சந்தோஷமா இல்லைனு. அவளை சந்தோஷமா நீ பார்த்துக்கலைனு” என்று வேணிம்மா புலம்பினார்.
‘இப்படிலாம் சொல்லிருக்கியா’ என்று பாண்டியன் பார்வையின் அர்த்தங்கள் மாறின. ‘என்ன சொல்ல?’ என்று தெரியாமல் அவனையே பார்த்தாள் பாவை.
அரைநொடியின் முடிவில், “கையெடுங்க முதல” என்ற ஓர் அழுத்தமான குரல் செண்பகத்திடமிருந்து!
வேணிம்மா செண்பகத்தைப் பார்க்கவும், “என் பையனும்தான் சந்தோஷமா இல்லை!” என்று அழுத்தமாகச் சொல்லி, “கையை எடுங்கன்னு சொல்றேன்ல!” என்று கோபமாகச் சொன்னார்.
பிடித்திருந்த சிவா சட்டையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன் கைகளை எடுத்தார் வேணிம்மா!
“வீட்டு மாப்பிள்ளைனு கொஞ்சமாவது மரியாத கொடுங்க” என்ற செண்பகம், “என்னைக்கு மரியாதை தந்திருக்கீங்க. இன்னைக்கு தர்றதுக்கு?” என்றார்.
தன்னை எதிர்த்து யார் பேசியும் கேட்டிறாதவருக்கு செண்பகத்தின் எதிர்ப்பு குரல் ஒருவித தடுமாற்றத்தைக் கொண்டு வந்தது.
அவ்வளவுதான்! செண்பகம் அமைதியாகிவிட்டார்!! சுற்றி நிற்கும் சுற்றத்தின் முன் சுயமரியாதைச் சுட்டதைப் போல் உணர்ந்தான் சிவபாண்டியன்!
அருகில் நின்ற மனைவியைப் பார்த்தான். “சாரி பாண்டியன்” என்று அவள் உதடுகள் அசைந்து மன்னிப்பை வேண்டின! “அப்படி இனி கூப்பிடாத” என்று சிவா உதடுகளும் அசைந்து மனக்கசப்பை உமிழ்ந்தன!
வேணிம்மாவைப் பார்த்தவன், “நீங்க போங்க” என்று வாசலைக் காட்டினான். அவன் குடும்பத்தினர் யாருக்கும் நடந்த சம்பவத்தில் உடன்பாடு இல்லை என்பதால், அவன் பேச்சிற்கு ஏதும் சொல்லாமல் நின்றார்கள்.
வேணிம்மா நிறைய உடைந்து போயிருந்தார். அவனது அந்த வார்த்தையில் மேலும் உடைந்து நிற்க முடியாமல் தடுமாறினார். கௌசியும் கலையும் வந்து பிடித்துக் கொண்டனர்.
“இது உங்களுக்குத் தேவையா?” என்று கௌசி கோபத்துடன் கேட்டாள். கலை, “உன்னால பாட்டிக்கு நல்ல மரியாதை!” என்றான் பாவையைப் பார்த்து.
சிவா பாவையைப் பார்த்தான். தன் வேணிம்மாவை வெளியே போக சொன்ன கோபத்தில், “ஏன்…” என்று பாவை கேட்கும் போதே, “எப்படி இங்க இருக்க பிடிக்கலைனு சொல்ல முடிஞ்சது?” என்றான் அழும் குரலில்.
“பிடிக்காம இங்க இருக்க வேண்டாம்! கிளம்பு” என்றான் அழுத்தமான குரலில்.
“என்ன சொல்றீங்க நீங்க?” என்றாள் பதறி.
“புரியலயா? எப்பவும் நான் சொல்றது உனக்குப் புரியாதுல?” என்றவன், “சரி!! புரியிற மாதிரியே சொல்றேன். வெளியே போ” என்றான்.
அதைக் கேட்டதும், “என்னடா இப்படிச் சொல்ற” என்று கோபத்தில் அவனை நோக்கி வந்த வேணிம்மாவை பிரவீன் தடுத்து நிறுத்தி, “என்ன நீங்க? அவனை என்னென்னு நினைச்சீங்க? பிரச்சனையைக் கூட்டிக்கிட்டே போறீங்க?” என்று, அவரின் செயல்களுக்கான அதிருப்தியைத் தெரிவித்தான்.
வேணிம்மா பின்வாங்கிக் கொண்டார்!
வீட்டுச் சாவியைப் பெற்றோரிடம் தந்து, “வீட்ல போய் இருங்க. வர்றேன்” என்று பிரவீன் சொல்ல, அவர்கள் கிளம்பினார்கள். மகன் சங்கடப்படுவதைக் காண முடியாமல் மதி அறைக்குள் சென்றார். அவருக்குத் துணையாக நளினியும் சென்றுவிட்டாள்.
“சிவா?” என்று செண்பகம் ஆரம்பிக்கும் போதே, “எனக்கு ஒரு மாதிரி இருக்கு. எதுவுமே பிடிக்கலை!!” என்று வெறுப்பின் குரலில் சொல்லி, தன் அறைக்குள் போகப் பார்த்தான்.
வாசலில்தான் பாவை நின்று கொண்டிருந்தாள். “ப்ச்” என்று சலிப்புடன், தன் அப்பா அறைக்குச் சென்றுவிட்டான்.
அவ்வளவுதான்!
வேணிம்மா, செண்பகம்… ஒருவரை ஒருவர் பார்த்தனர். இருவர் முகத்திலும் அதீத பாசம் வைத்தவர்களின் வாழ்க்கை ‘இப்படி ஆயிற்றே?’ என்ற வருத்தம் இருந்தது.
பின் வேணிம்மா பாவையைப் பார்த்தார். இனிமேல் இவள் வாழ்க்கை?என்ற கேள்வி வந்தது. ஆனால் இப்போது இருக்கும் மனநிலையில் யாரிடமும் போய் எதுவும் பேச முடியாது என்றும் தோன்ற, ‘கீழே வா’ என்று பாவையிடம் சைகை காட்டியவர், கௌசி, கலையுடன் கிளம்பிவிட்டார்.
அதன்பின் அங்கிருந்தது பாவை, பிரவீன் செண்பகம்… இந்த மூவர் மட்டுமே! என்ன பேசவென்று தெரியாமல் ஒரு முழு நிமிடம் அமைதியாக இருந்தனர்!
அந்த நிமிடம் முடிந்ததும், “செண்பாம்மா” என்று பாவை அழைக்க, “அப்படிக் கூப்பிடாத!” என்றவர் குரல்கூட, அவள் அழைக்கும் விதத்தை விரும்பவில்லை என்பதைக் காட்டியது.
‘நீங்களுமா?’ என்ற ஒரு கேள்வி பாவையின் நெஞ்சுக்குள் வந்து போனது!
“உன்னை நல்லாத்தான பார்த்துக்கிட்டேன். ஏன் இப்படிப் பண்ண?” என்றவர் குரல் கரகரக்கத் தொடங்கியது.
அமைதியாக நின்றாள்.
“நீ சிவாவைப் புரிஞ்சிக்க கொஞ்சம் நாளாகும்னு என் பொண்ணுகிட்ட, அவ அப்பாகிட்ட… உனக்காக எவ்ளோ சப்போர்ட் பண்ணேன். இன்னைக்கு சிவா இப்படிப் பேசிட்டுப் போறான்னா, அதுக்கு காரணம் நீதான்!”
“செண்பாம்மா நான் என்ன… ” என்ற கேள்வியை முடிக்கும் முன்பே, “அப்படிக் கூப்பிடாத-ன்னு சொல்லிட்டேன்! ” என்று கோபப்பட்டார்.
மேலும், “அம்மா, அப்பா இல்லாத பொண்ணு நல்லா பார்த்துக்க நினைச்சேன். ஆனா நீ…?” என்று இடைவெளிவிட்டவர், “எதயும் புரிஞ்சிக்கல” என்றார் வெறுப்புடன்!
மீண்டும் அமைதி பாவையிடம்!
“நீ வர்றதுக்கு முன்னாடி, சிவா எவ்வளவு சந்தோஷமா இருந்தான் தெரியுமா? நீ வந்தப்புறம், அவன் சந்தோஷமா இல்லை. சிவா நல்ல பையன். அவனுக்கு இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணா பார்த்திருந்துக்கலாம்”
செண்பகத்தின் இந்த வார்த்தைகளில் பிரவீனுக்கு உடன்பாடு இல்லாததால், “அத்தை போதும்” என்றான்.
“இல்லை மாப்பிள்ளை…”
“கோபமா இருக்கீங்க! இப்ப எதும் பேச வேண்டாம். புரிஞ்சிக்கோங்க” என்று பிரவீன் சொல்லிக் கொண்டிருந்த போது… மதியின் அறையிலிருந்து வெளியே வந்த நளினி, “ம்மா! அண்ணா கூப்பிடுறான். வாங்க” என்றாள்.
உடனே செண்பகம் சென்றுவிட்டார்.
பிரவீன் பாவையின் அருகில் வந்து நின்றதும்,”அண்ணா” என்றாள் குரலில் சோர்வுடன்.”அவங்ககிட்ட பேசி பாருங்களேன்” என்றாள் வேதனையாக.
“கண்டிப்பா பேசறேன்! ஆனா இப்ப வேண்டாம். எல்லாரும் ரொம்ப கோபமா இருக்காங்க. என்ன பேசினாலும் கேட்கிற மனநிலையில இருக்க மாட்டாங்க”
“எப்போ பேசுவீங்க” என்றாள் ஏக்கமாக!
“ரெண்டு நாள் பாட்டி வீட்டுல இருந்திட்டு வா! அவங்க கோபம் குறைஞ்சிடும். அதுக்கப்புறம் அவங்ககிட்ட பேசுறேன்” என்றான்.
அமைதியாக இருந்தாள்.
“பாவை! வீட்ல அம்மா அப்பா இருக்காங்க. நான் கிளம்பட்டுமா” என்றான். ‘ம்’ என்று தலையாட்டினாள். அவனும் கிளம்பிவிட்டான்.
தனியாக நின்றாள்! சரியாக சொல்ல வேண்டுமென்றால், ‘இங்கே இருக்கவா? அங்கே செல்லவா?’ என்ற தவிப்பில் நின்று கொண்டிருந்தாள்!!
மதியின் அறையைப் பார்த்தாள். கதவு திறந்துதான் கிடந்தது. ‘போய் பேசிப் பார்க்கலாமே?’ என்ற எண்ணம் வர, மெல்ல நடந்து சென்று எட்டிப் பார்த்தாள்.
மூவரும் சிவாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். தான்… இந்தக் குடும்ப உறுப்பினர் இல்லை என்பதை தெளிவாக உணர்த்திய காட்சி அது! அப்படியே திரும்பிவிட்டாள். வரவேற்பறை வந்தாள். கௌசி நின்றாள்.
“இங்கயே இருக்க போறியா? வெளிய போனு சொல்லிட்டாங்கள?! பாட்டி வெயிட் பண்ணறாங்க. கீழே வா” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
கௌசி போவதையே பார்த்தாள். அந்தப் பார்வையின் அர்த்தம், ‘இவளுக்கு கிடைக்கும் எதுவும் ஏன் தனக்கு கிடைக்கவில்லை?’ என்பதுதான்!
ஆக! அவள் எதிர்பார்புகள் எல்லாம் கௌசி என்ற ஒற்றைப் புள்ளியிலிருந்தே ஆரம்பிக்கின்றன! ஆறு வயதிலிருந்து பார்த்து வருகிறாள் அல்லவா?
ஒரு கட்டத்தில் வீட்டில் அனைவரும் அவளை ஒதுக்கத் தொடங்கிய நாட்கள். அதே நேரத்தில் இசைக்காக என்று கௌசியுடன் மட்டும் பேசத் தொடங்கிய நாட்கள். அன்றிலிருந்து இன்று வரை பாவைக்குள் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறாள் கௌசி!
சுருக்கமாக… அடைக்கும் தாழில்லாமல் அன்பு வேண்டும் என்று கேட்பவள், அந்த அன்பிற்கு ஒரு வடிவம் வைத்திருக்கிறாள்!!
விரிவாக… இன்னும் தெளிவாக அவள்தான் சொல்ல வேண்டும். நிச்சயம் சொல்வாள்! தன் பாதிப்பின் பாதகத்தை உணர்ந்த பின்!!
அறைக்குள் சென்று, பெட்டியை எடுத்து புடவைகளை அடுக்க ஆரம்பித்தாள். கண்கள் கரித்தது. திடீரென கணவனுக்கு அழைத்துப் பார்க்கலாமே என்று தோன்றியது. அதையும் செய்தாள்!
ம்கூம்! சிவா அழைப்பை ஏற்கவேயில்லை! ஏமாற்றமாக இருந்தது!! மீண்டும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
ஆனால் அறை வாசலைப் பார்த்தபடி மெதுவாக எடுத்து வைத்தாள். சிவா ஒருவேளை வந்தால், ஒருமுறை பேசிப் பார்க்கலாமே என்ற எண்ணம்!
அந்தோ பரிதாபம்! இதுவும் ஏமாற்றத்தில்தான் முடிந்தது!!
தன்மீது அக்கறை இருந்திருந்தால், ‘வெளிய போ’ என்று சொல்லிவிட்டு இப்படி இருக்க முடியுமா? முதலில் உண்மையான அன்பு இருந்தால் எப்படி இப்படிப் பேச முடியும்? என்ற கேள்விகள் வந்தன!
‘இங்கே இருக்க பிடிக்கவில்லை’ என்ற தன் வார்த்தையை மறந்துவிட்ட வந்த கேள்விகள்!! பாதிக்கப்பட்ட மனதின் எதிர்பார்ப்புகள் புரிதலின்மையின் கீழ் வர வாய்பில்லையோ?!
இதுவரை, ‘உனக்கு உரிமையில்லை’ என்று சொன்னவர்களுக்குத் தன்னைப் பிடித்ததில்லை! இவனுக்கும் அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டாள்!!
அவன், ‘எதுவுமே பிடிக்கல’ என்று சொன்னானே? அதில் தானும் அடக்கம் என்று தன் நினைப்பை நியாயப்படுத்திக் கொண்டாள்.
அவ்வளவுதான்! அதற்குமேல் தாமதிக்கவில்லை! கடகடவென்று எடுத்து வைத்தாள். மீண்டும் உரிமையில்லாத இடத்திற்கே கிளம்பிவிட்டாள்!!
********************
வேணிம்மா வீடு. பாவை அவள் அறையில் இருந்தாள்.
வரும் வழியிலே கிரியை அலைபேசியில் அழைத்து, கௌசி அனைத்தையும் சொல்லியிருந்தாள். தாங்கள் மதிக்கும் ஒருவரை வெளியே அனுப்பினான் என்று சிவா மீது அப்படியொரு கோபம் அனைவர்க்கும்! அதே அளவு கோபம் அவன் மனைவி மீதும் வந்தது!!
குடும்பத்தின் அத்தனை பேரும் வரவேற்பறையில் இருந்தனர். வேணிம்மா சோஃபாவில் அமர்ந்திருந்தார். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, கிரியும் மீனாட்சியும் உட்கார்ந்திருந்தனர்.
நடந்ததை, திரும்பத் திரும்ப கௌசி சொல்லிக் கொண்டிருந்தாள். ‘அங்கே ஏன் போகணும்?’ என்று கிரி கலையைத் திட்டிக் கொண்டிருந்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு பாவை பக்கமாக சென்றது. ‘அவளால்தான் இதெல்லாம்’ என்ற ரீதியில் பேசினார்கள். சற்று நேரத்தில் அவளைத் திட்டத் தொடங்கினார்கள்.
வேணிம்மா, “அவளைப் பத்தி யாரும் ஒரு வார்த்தை பேச கூடாது” என்றார்.
அவ்வளவுதான்! யாரும் வாய் திறக்கவில்லை!! எழுந்து அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றனர்.
அறையில் வேணிம்மா, பாவை இருவரும் ஒருவருக்கொருவர் முதுகுகாட்டி படுத்திருந்தனர்.
சிவா ‘பேசணும்’ என்றானே, ‘அது என்னவாக இருக்கும்?’ என்று யோசித்து வேணிம்மா மனம் குழம்பியது. ‘இவளுக்கு ஏன் இப்படி?’ என்ற கேள்வி கேட்டு மனம் பாரமானது. ‘அவசரப்பட்டுவிட்டோமோ?’ என்று நினைத்து மனம் வருந்தியது.
வருத்தம் மிகுதியானதில் கண்களை மூடியதும் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
‘நீயா இப்படி?’ என்பதை விடவும், ‘நீயுமா இப்படி?’ என்ற வார்த்தைகள் மிகுந்த வலியைத் தரும் அல்லவா?! தேன்பாவைக்கும் வலித்தது! நிரம்ப வலித்தது! கண்கள் மீண்டும் மீண்டும் கரித்தது!!
தவிப்புகளை இறக்கி வைக்க தாய் மடியில்லை! ஆதலால், தலையணையில் இறக்கினாள்! இது இன்று நேற்றல்ல… இங்கு வந்ததிலிருந்தே இப்படித்தான்!!
அவள் மனக் கடலில் ஆர்ப்பரிக்கும் கவலைகள் அனைத்தும் விழிக் கரையில் கண்ணீர் அலைகளாக மாறின!!
பாவையின் அகராதியில் உணர்ச்சிக் குவியல்!! பாண்டியனின் அகராதியில் உப்புக் கரைசல்!!!
*************
இதே நேரத்தில் சிவா வீட்டில் நளினி அவள் வீட்டுக்குச் சென்றிருந்தாள்.மதி உறங்கியிருந்தார். செண்பகம் உறங்கவில்லை.
‘அவர் வயதிற்கு மரியாதை தராமல் விட்டுவிட்டோமோ?’ என்ற கேள்வி கேட்டு மனம் பாரமானது. ‘செண்பாம்மா’ என்று அழைத்தவளிடம், அவசரப்பட்டு அதிகப்படியாக பேசிவிட்டோமோ என்று மனம் வருந்தியது.
வருத்தம் மிகுதியானதில் கண்களை மூடியதும் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
சிவபாண்டியன்?? அவன் தவிப்புகளை இறக்கி வைப்பதற்கு தாயின் மடி இருந்தது!! வேறென்ன சொல்ல??

