Kathambari Novels
இரண்டு நாள் பயணமாக பாண்டியன் கூர்க் கிளம்பிச் சென்றான். செல்லும் முன்னே, ‘எதைப் பத்தியும் நினைக்காத! கரெக்டா ப்ராக்டிஸ் பண்ணு!’ என்று பாவையிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றான்.
அவளும், ‘கரெக்டா வந்து கூட்டிட்டுப் போங்க’ என்று, தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தாள்.
அதன்பிறகு இரண்டு நாட்களுக்கு பனி சூழ்ந்த மலைமுகடுகள்! பால் போன்ற மலையருவிகள்! பனித்துளி உறங்கும் மலைபாறை புற்கள்! இவை மட்டுமே சிவபாண்டியனுக்கு!!
இரண்டு நாள் கழித்து மதி, நளினி தொழில் சார்ந்த பயணமாக பெங்களூர் சென்றிருந்தனர். மாலைதான் சென்னை திரும்புவார்கள். செண்பகம், பாவை இருவர் மட்டும்தான் வீட்டில் இருந்தனர்.
செண்பகம் சிவா வரவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
பாவையும்தான்! அன்று மாலை ஆறு மணியளவில் கச்சேரி. மதியம் மூன்று மணிக்கே கிளம்ப வேண்டும் என்பதால் தயாராகிக் கொண்டிருந்தாள்.
பாவையின் சிறு தேவைகளையெல்லாம் செய்து கொடுத்தார் செண்பகம்.
இரண்டரை மணியளவில் சிவா வீட்டிற்கு வந்துவிட்டான். வந்ததும், “ஏதாவது சாப்பிடுறியா சிவா” என்று செண்பகம் கேட்டார். “இல்லம்மா! கிளம்பிப் போக கரெக்டா இருக்கும்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போனான்.
கணவனைப் பார்த்ததும் கிளம்பிக் கொண்டிருந்த பாவை, “வந்தீட்டீங்களா இப்போதான் நிம்மதி” என்று சந்தோஷமாகச் சொல்ல, சிரித்துக் கொண்டே, “நானும் கிளம்புறேன்” என்று குளியலறைச் சென்றான்.
குளித்து முடித்து வந்த சிவா கண்ணில் கச்சேரிக்காக பிரத்யேக அலங்காரம் செய்து கொண்டிருந்த பாவை விழுந்தாள். ஈரமான தலையைத் துவட்டியவன் கண்களை இசைப் பிரியை ஈர்த்தாள்!
பல வண்ண கூழாங்கற்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி தரைமீது நின்றவளை, வேறு எண்ணங்கள் ஏதுமின்றி பார்த்தான். சிவப்பு ஜரிகை ஓரங்கள் கொண்ட மெகந்தி பச்சை நிற பட்டுப்புடவை! அதே நிறத்தில் நூல் வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்கள்!!
சுவரில் பதிக்கப்பட்டிருந்த வட்டவடிவ கண்ணாடியைப் பார்த்து, ஒப்பணை செய்து கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
மெல்லிய குரலில், “கானத்திடை மோனக்குயில்…” என்று பாடி கார்குழலில் பின்னலிட்டு முடித்து… பின் வேறேதோ வரியில் தொடங்கி, “புகழ் சொல்லிச் சொல்லி” என்ற வரிகளை முணுமுணுத்தபடி, மல்லிகைப் பூ வைத்தாள்.
பின் ஸ்வர வரிசை பாடியபடி திலகம் வைத்துக் கொண்டாள். கடைசியாக ஒருமுறை ஒப்பணைகளைச் சரி செய்த மனைவியை நோக்கி, கணவன் மனம் ஒட்டுமொத்தமாக சரிந்து விட்டிருந்தது. இல்லை! இது பொய்!!
பாவை புகைப்படம் பார்த்த கணத்தில் சரிந்த மனதை, மீண்டும் இக்கணம் பாண்டியனுக்கு ஞாபகப்படுத்தியது!! இதுதான் உண்மை!!
ஒரு முத்தம் இல்லாமல் இன்றைய தினத்தைக் கடந்து சென்றால், ‘தன் காதல் கஞ்சத்தனம் பார்க்கிறது’ என்று வரலாற்றில் எழுதப்படும் என்ற எண்ணம் வந்தது! உடனே மெல்லிய முறுவல் உதித்தது பாவையின் பாண்டியனுக்கு!!
அலங்காரம் முடித்து திரும்பியவள், “குளிச்சிட்டு வந்தாச்சா?” என்றாள்.
‘அப்பவே!’ என்று அவன் மனதின் குரல் அவனைக் கேலி செய்தது. அதைத் தவிர்த்துவிட்டு, “ம்ம்” என்றவன், “கிளம்பிட்டியா?” என்று கேட்டான்.
‘ஆமாம்’ என்று தலையாட்டி, “நீங்க கிளம்புங்க! நான் பிளாஸ்க் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று வெளியே சென்றாள்.
’எல்லாவற்றிக்கும் முதலாக இன்று இவளது பாட்டியிடம் பேசிவிட வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டே பாண்டியன் கிளம்ப ஆரம்பித்தான்.
பிளாஸ்கை வாங்கிவிட்டு அறைக்கு வந்தவள் கணவனைப் பார்த்து நின்றாள். இரண்டு நாட்கள் கழித்து வந்திருக்கிறான் அல்லவா? அறையின் போன்சாய் மரங்களிடம் பார்வையால் பேசிக் கொண்டிருந்தான்.
அடர் பச்சை நிற வி-நெக் ஸ்டைல் டீ-ஷர்ட், சிப்பி நிறத்தில் ஒரு பேன்ட்!
அவ்வளவுதான்! மிகச் சாதாரணமாகவே இருந்தது. ஆனால் காதல் கொண்ட பாவை மனம் சளைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றது!!
குறைந்தபட்சம் ஒரு ‘ஐ லவ் யூ’ சொல்லாமல் இந்த நாளை நகர்த்திவிட்டால், ‘தன் காதல் தன்னைப் பார்த்து நகைக்கும்’ என்ற எண்ணம் வந்தது! உடனே இதழ்கள் மெல்ல விரிந்தது பாண்டியனின் பாவைக்கு!!
போன்சாயிடமிருந்து பார்வையைத் திரும்பியவன், “வந்திட்டியா?” என்றான்.
‘அப்பவே!’ என்று அவள் மனதின் குரல் கேலி செய்தது. அதைத் தவிர்த்துவிட்டு, “கிளம்பலாமா? என்றாள். ‘சரி’ என்றதும் வெளியே வந்து செண்பகத்திடம் விடைபெற்று இருவரும் கிளம்பினார்கள்.
பிரவீன் வருவான் என்பதால் அவர் செல்லவில்லை!
போகும் போது பாவையின் கவனம் கச்சேரி பற்றி இருக்கும் என்பதால் சிவா எதும் பேசவில்லை!சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டியவனை, “பாண்டியன்” என்ற அழைப்பு கலைத்தது.
“சொல்லு” என்றான் சாலையில் கவனம் வைத்துக் கொண்டே!
“உங்ககூட கொஞ்சம் பேசணும்”
“இப்பவா?”
“இப்ப இல்லை! கச்சேரி முடிஞ்சப்புறம்”
‘என்ன பேச போறா?’ என்று நினைத்தாலும், “பேசலாம்” என்றவன், “வீட்டுக்குப் போய் பேசணுமா? இல்லை வேறெங்கயும் போகணுமா?” என்று கேட்டான்.
“கார்ல போய்கிட்டே பேசலாமா? மேரேஜ்க்கு முன்ன போனோமே, அதுமாதிரி டிரைவ் போகலாமா?” என்றவள், அன்று இருந்த அன்யோன்யம் இன்று இல்லை என்பதை உணர்ந்தாள்.
“ஹே! என்னாச்சு ஹனி?” என்றான் அவள் குரலின் பேதமை கண்டு!
‘ஒன்னுமில்லை’ என்பது போல் தலையசைத்து லேசாக சிரித்தாள். “பாவை இப்ப கச்சேரில மட்டும் கவனத்தை வை. வேற எதும் யோசிக்காத” என்றான்.
“அதான் அப்புறம் பேசணும்னு சொன்னேன்” என்று சன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.
அதன் பிறகு அரங்கம் சென்றடையும் வரை அமைதி மட்டுமே!
ஸ்ரீ வேணு கான சபா! மூன்றரை மணியளவில் சாபாவிற்கு வந்தடைந்தனர். இசைக் கலைஞர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே இருந்தனர்.
“யாருமே வரலை?” என்றாள்.
“அஞ்சு மணிக்கு மேலதான் வருவாங்க” என்று அரங்கத்திற்குள் நடந்தாள்.
“நம்ம எங்க இருக்கணும்?” என்றான் அவளுடன் நடந்தபடி.
“நீங்க இங்க இருக்கீங்களா!? கௌசி ஸ்டேஜ்-க்கு பின்னாடி இருப்பா. போய் பார்த்திட்டு வந்திடட்டுமா” என்று சற்று அனுமதி கேட்கும் குரலில் கேட்டாள்.
“என்னைப் பத்தி யோசிக்காத! எப்பவும் எப்படி இருப்பியோ அப்படியே இரு” என்றதும் பாவை போய்விட்டாள். அங்கிருந்து நாற்காலியில் உட்கார்ந்தவன், கிருஷ்ணாம்மாவைத் தேடினான். கண்களில் தெரிந்தது கலைதான்.
எழுந்து சென்று, “உங்க பாட்டி எப்போ வருவாங்க?” என்று கேட்டான்.
“ரொம்ப நேரம் உட்கார முடியதில்லையா? அதனால அஞ்சு அஞ்சரை ஆகும்” என்றவன், “ஃபர்ஸ்ட் ரோல சீட் அலாட் பண்ணியிருப்பாங்க. அங்க போய் உட்கார்ந்துக்கோங்க” என்றான்.
சரியென்ற சிவா, கொஞ்ச நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான்.
நேரம் ஐந்தை நெருங்குகையில் பார்வையாளர்கள் வர ஆரம்பித்தனர்.
கிருஷ்ணாம்மா வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். அவரும்இருந்தார். பாவை, கௌசிக்கு சில குறிப்புகள் கொடுத்துவிட்டு முதல் வரிசையில் வந்து அமர்ந்து கொண்டார். அருகில்தான் சிவா அமர்ந்திருந்தான்.
“எப்படி இருக்க சிவா?” என்றார்.
“நல்லாயிருக்கேன்” என்றவன், “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“இப்பவா?”
“ம்ம்”
“இப்ப முடியாது” என்றவர், “பிள்ளைங்க பாடுவாங்க. எப்படி பாடுறாங்கனு, அவங்களைக் கவனிக்கணும்!” என்று காரணம் கூறினார்.
“ஒரு பாட்டுதான?!”
“நான் பிள்ளைங்கனு சொன்னது, புதுசா பாடுற எல்லோரையும்! எப்படிப் பாடிருக்கோம்னு வந்து கேட்பாங்க”
“ஓ! இது எனக்குத் தெரியாது. பரவால்ல! இன்னொரு நாள் பேசலாம்”
“கச்சேரி முடிஞ்சப்புறம் பேசலாமா??”
‘பாவை பேச வேண்டும்’ என்று சொன்னது ஞாபகத்திற்கு வரவும், “பரவால்ல. இன்னொருநாள் பேசிக்கலாம்” என்றதும், ‘சரி’ என்று பேச்சை முடித்தாலும், ‘இவன் என்ன பேச வேண்டும்?’ என்று யோசித்தார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் கச்சேரி ஆரம்பித்தது. ஒன்று இரண்டு மூன்று என்று ஆரம்பித்து… ஆறாவதாக பாவை மற்றும் கௌசி வந்தமர்ந்தனர்.
பாவையின் கண்கள் பாண்டியனை தேடின. முன்வரிசையில் அவன் இல்லை! ‘எங்க போனான்’ என்று அவள் முகம் மாறியது. ஆனால் அடுத்த நிமிடமே ஆழ்ந்து மூச்செடுத்து முகத்தை மாற்றிக் கொண்டாள்.
இனி கச்சேரி!
இதுவரைக்கும் கௌசி, பாவை இருவரும் காணாத பிரமாண்ட அரங்கம்! கீழ் மற்றும் முதல் தளம் முழுதும் இசையை நேசிப்பவர்களால் நிரம்பியிருந்தது!
மிகப் பெரிய மேடை! மேடையின் பின்புறம் முழுவதும் கருப்பு நிறத்திலான தடிமனான திரை!
திரை நடுவே, ‘சென்னை தர்பார் பெஸ்ட்டிவல்’ என்று பொன்னிற எழுத்துகள் வைக்கப்பட்டிருந்தன! திரையின் ஓரங்களில்… வெவ்வேறு இசைக் கருவிகள் பொன்னிறத்தால் வரையப்பட்டிருந்தன!!
மேடையின் நடுவே பெண் குரலுக்காக கௌசி மற்றும் பாவை! இருவரும் ஒரே மாதிரியான பட்டுப்புடவையில் இருந்தனர்!! ஆண் குரலுக்காக, புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகர்! பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தார்!!
மற்ற இசைக் கலைஞர்கள் அவர்களுக்குப் பின்னே இருந்தனர்!
மேடை ஓரத்தில் ஐந்து விளக்குகள் மட்டும்! அதன் வெளிச்சம் திரையிலிருந்த பொன்னிற எழுத்துக்கள் மற்றும் இசைக்கருவிகள் மீது பட்டதால்… அவைகள் ஜொலி ஜொலித்தன!!
கச்சேரி ஆரம்பமானது. எப்போதும் போல் ‘நாட்டை ராகத்தில் ஆதி தாளத்தில் காளிங்க நர்த்தனம்’ என்று கௌசி சொன்னதும், “தாம் தீம் தரன தாம்” என்று பாவை பல்லவியை பாடத் துவங்கினாள்.
அதன்பின் ஆண் குரலில் பாடல் வரிகள்! அதற்கடுத்து, “தாம் தீம் தரன தாம்” என்று கௌசி பாடினாள்.
கௌசி முடித்ததும் மிருதங்கமும், வீணையும் போட்டி போட்டு இசை மழை பொழிந்தன. அதனோடே சேர்ந்து இருவரும், “தாம் தீம் தரன தாம்” என்று பாடினார்கள்.
பல்லவி பாடி முடியவும், “தாம் தீம் தரன தாம் தித் தகிட” என அனுபல்லவியை பாவை ஆரம்பித்து முடிக்க, “தாமித தஜ்ஜம் தக” என்று சரணத்தை இருவரும் இருமுறை பாடினார்கள்.
சற்று நேரத்திற்கு அங்கிருந்தோர் அனைவரையும் பாவை, கௌசி இருவரும் தங்களது குரலால் இசை மழையில் நனைத்தனர்!
அதிலும் குறிப்பாக, “வ்ரஜ துரந்தரா ஜலதசோபமானதர…” என்ற சமஸ்கிருத வரிகளைச் சங்கடம் இல்லாமல் பாடி, “தாமித தஜ்ஜம் தக தஜ்ஜம்” என பாவை சரணத்தைப் பிடித்த விதத்தை அனைவரும் மெய்மறந்து கேட்டு ரசித்தனர்!
அதுதானே தேன்பாவை!
பாடல் முடிந்ததும் மூன்று பேரும் எழுந்து கீழிறங்கி வரும்போது, அந்த பிரபல இசைப்பாடகர் இரண்டு நிமிடங்கள் பாவையிடம் பேசினார். பின் கிரி அருகே கௌசியும், வேணிம்மா பக்கமாக பாவையும் அமர்ந்தனர்.
அடுத்த பாடலுக்கு மேடை ஆயத்தப்படும் தருணம், “அவர் உன்கிட்ட என்ன பேசினாரு?” என்று குனிந்து பாவையிடம் கேட்டார், வேணிம்மா!
“அபங் பாடுவியான்னு? கேட்டாங்க”
“ஓ! வேற என்ன சொன்னாரு?”
“ட்ரடிஷன் மட்டுமில்லாம பியூசனும் சேர்ந்து ட்ரை பண்ணுனு சொன்னாங்க”
“ம்ம் பார்த்துக்கலாம்” என்று மேடையைப் பார்க்க ஆரம்பித்தார்.
“வேணிம்மா, பாண்டியன் எங்கே” என்று மெதுவாகக் கேட்டாள்.
“சொல்ல மறந்துட்டேன்! முக்கியமான வேல இருக்கு. அதனால கிளம்புறேன். ஆனா பாவையைக் கூப்பிட வந்திருவேன்னு சொல்லிட்டுத்தான் போனான்”
“ஓ” என்றதோடு முடித்துக் கொண்டாள்.
இதே நேரத்தில் வந்ததில் இருந்து பேசாமல் இருக்கும் மகளைப் பார்த்த கிரி, “என்ன கௌசி ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டார்.
“ப்பா, அபங் பாடுவியா? அப்படிப் பாடணும், இப்படிப் பாடணும்னு அவகிட்ட மட்டும்தான் சொன்னாங்க. என்கிட்ட எதுவும் சொல்லலை” என்றவள் முகம் கடுப்பைக் காட்டியது!
“முகத்தை இப்படி வச்சிக்காத. பாட்டி பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று சொல்ல, கஷ்டப்பட்டு முகத்தை மாற்றவும், “எல்லாம் அப்பா பார்த்துப்பேன். சரியா?” என்று அவள் தோளில் தட்டிக் கொடுத்தார்.
‘இசை உலகில் தன் மகளை விட, ஒரு அடிகூட பாவை முன்னே சென்றுவிடக் கூடாது’ என்ற மோசமான எண்ணம் கிரிக்கு எப்போது உண்டு! இப்போதும் இன்னும் அதிகமாகியது!!
இங்கே இன்னொன்று! கச்சேரிக்கு வந்திருந்த சங்கரின் பார்வை அடிக்கடி பாவையைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தது!
அதன் பின் சற்று நேரத்திற்கு இசை! இசைக் கருவிகள்! இசைக் கலைஞர்கள்! இவை மட்டுமே!!
கச்சேரி முடிந்தபின்… சபாவிலிருந்து வெளிவரும் பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கும் கார்கள், ஆட்டோக்கள் வரிசையாக நின்றன!போக்குவரத்தில் நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகன விளக்கொளிகள் கண்களைத் தாக்கின!
ஒலிபான்களின் ஒலிகள் கச்சேரி கேட்டு முடித்து வருபவர்களின் காதுகளை நிறைத்தது! பெரிய சாலைதான்! இருந்தும் நெருக்கடி நிறைந்து தெரிந்தது!!
அந்தச் சாலையின் ஓரத்தில்… சாபாவின் வெளியே வேணிம்மாவுடன் பாவை நின்று கொண்டிருந்தாள். கொஞ்சம் தள்ளி கலையும் கௌசியும் நின்றனர். மற்றவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். வேணிம்மாவைக் கூட்டிச் செல்ல வேண்டி இவர்கள் இருவரும் காத்திருக்கிறார்கள்.
கிரிக்குத் தெரிந்தவர்கள் கௌசியைப் பாராட்டிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வேணிம்மா பாவையைப் பார்த்தார். அவள் முகம் வாடித் தெரிந்தது.
பாவையின் கையைப் பிடித்து, ஒரு அழுத்தம் கொடுத்து, “தேன்குரலாள் இந்த தேன்பாவை!” என்றார். என்றுமே அவள் வாட்டத்தைப் போக்கிடும் இந்த வார்த்தைகள் இன்று போக்கவில்லை!!
‘என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசித்தவருக்கு, அன்றைய அலைபேசி பேச்சு ஞாபகத்திற்கு வந்தது. அக்கணத்தில் சாலை மறுபுறத்தில் இருந்து வாகனப் போக்குவரத்து நெரிசலின் ஊடே ஓடி வந்து, சிவா மூச்சி வாங்கி நின்றான்.
மேலும், “சாரி பாட்டி! கொஞ்சம் லேட்டாகிடுச்சி” என்றான்.
அவனிடம், “பரவால்ல” என்றவர், “வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு பூஜை பண்ணிருக்கணும்” என்றார் பாவையைப் பார்த்து!
“ம்ம்” மட்டுமே பாவையிடம்!!
“சரி பாட்டி! கிளம்புறோம்” என்ற சிவா, “நீங்க எப்படி போவீங்க?” என்றான்.
“கலை இருக்கான்” என்றதும், அவரிடம் விடைபெற்றுக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். அவர்களைப் பார்க்கையில் ஏதோ நெருடலாக இருந்தது, வேணிம்மாவிற்கு! “பாட்டி வாங்க” என்று கௌசி கூப்பிட, அவர் கிளம்பினார்.
சாலையைக் கடந்து மஹிந்திரா தார் அருகே வந்ததும், “ஹனி, லாங் டிரைவ் போணும்னு சொன்னியே! போகலாமா?” என்று கேட்டான்!
“வீட்டுக்கே போகலாம்” என்றாள் மனம்மாறி!
‘இப்ப இவளுக்கு என்னாச்சு?’ என்று தெரியாமல் காரில் ஏறினான். அவளும் ஏறிக்கொண்டாள். கார் கிளம்பியது! நெரிசலைத் தாண்டி வந்ததும், சாலை இடது ஓரத்தில் மெதுவாக காரை செலுத்தியபடி பாவையைப் பார்த்தான்!
இத்தனை நேரம் கடந்ததால் ஒப்பணைகள் குறைந்த முகம்! மொட்டுக்களாக இருந்த மல்லிகை இப்போது மலர்ந்திருந்தது! எதிர் வரும் வாகனங்களின் விளக்கொளியால் பட்டுப்புடவை பளபளப்பு!
அவளைப் பார்ப்பதற்கே ரசனையாக இருந்தது அந்த இயற்கை ரசிகனுக்கு! இல்லை… இக்கணம் இல்லாள் ரசிகன்!! சட்டென்று பாவை கரம் பிடித்தான். பாண்டியனைத் திரும்பிப் பார்த்தாள்.
“பைவ் த்ரீ செவன் ஒன் டூ த்ரீ நைன் டூ” என்று பிடித்திருந்த அவள் கரத்தை அவன் முகம் நோக்கி கொண்டு போகையில், “ப்ச்” என்று எரிச்சலுடன் கையை உருவிக்கொண்டாள்.
உடனே, “சாரி சாரி பாவை” என்றவன், “ஏதோ பேசணும்னு சொன்னியே? என்ன ஹனி?” என்று கேட்டான்.
“மறந்திருச்சு” என்றாள் கோபமாக!
“இப்போ என்ன கோபம்?”
“அப்படி எதுவும் இல்லை!”
“நீ பாடறப்ப நான் இல்லைனு கோபமா? எங்க போயிருந்தேனா…” என்றவன் காரணம் சொல்லும் போதே, “நான் கேட்டேனா??!” என்றதும், உடனே காரை சாலையின் ஓரத்தில் நிறுத்த, ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.
“கச்சேரி நடக்கிறப்போ, என்னால அங்க இருக்க முடியலை. ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு. சாரி” என்றான்.
அமைதியாக இருந்தாள்.
“நீ கோபமா இருக்க மாதிரி தெரியுது! வீட்டுக்குப் போய் எதும் பேசினாலும், கொஞ்சம் அமைதியா பேசணும்! எதுனாலும் நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும் இருக்கணும். சரியா?” என்றான்.
“ஒருநேரம் பேசுனு சொல்வீங்க! ஒருநேரம் போதும்னு சொல்வீங்க! இப்போ அமைதியா பேசணும்னு சொல்றீங்க! வேறேதும் இருக்கா?” என்று கேட்டாள்.
அப்படி ஒரு கோபம் வந்தது. “உன்கிட்ட போய்…” என்று ஆரம்பித்தவன், “ச்சே” என்றளவு மட்டும் கோபப்பட்டு, காரை கிளப்பினான்.
சிவா வீட்டின் கதவு திறந்துதான் இருந்தது. அன்று போல்தான்! படாரென்று உள்ளே வந்தவள், கோபமாகத் தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.
மதி, நளினி, செண்பகம் வரவேற்பறையில் இருந்தனர். தந்தையும் மகளும் பெங்களூரில் இருந்து திரும்பியிருந்தனர். மெதுவாக சிவா உள்ளே வந்தான்.
“சிவா அவளுக்கு என்னாச்சு?” என்று செண்பகம் பதற்றமாகக் கேட்டார்.
“தெரியலை” என்று சோஃபாவில் சென்று அமர்ந்தான்.
“உள்ளே போய் பாரு” என்று படபடத்தார்.
“போய் பார்த்து…” என்றான் விரக்தியாக!
“என்ன கண்ணா இப்படிப் பேசுற?”
“என்னால முடியலைம்மா” என்று சொல்லி, செண்பகத்தின் நம்பிக்கையைப் பொய்யாக்கினான் பாவையின் பாண்டியன்!
கதவைத் திறந்து கொண்டு, “எனக்கும்தான் முடியலை” என்று சொல்லிக் கொண்டு வந்து நின்றாள் பாண்டியனின் பாவை!!
****************
வேணிம்மாவிற்கு பாவை பற்றிய எண்ணங்கள்தான். அங்கேஅவள் சந்தோஷமாக இல்லையோ!? ஏன் ‘கஷ்டமாருக்கு’ என்று சொன்னாள்?! அவர்கள் நன்றாக பார்த்துக் கொள்ளவில்லையோ? அவருக்கு இப்படி நிறைய கேள்விகள் எழுந்தன!
அவளின் வாடிய முகமே கண்முன் வந்துவந்து போனது. உடனே, “கலை, பாவை வீட்டுக்குக் காரை திருப்பு” என்றார்.
“இவ்வளவு நேரம் அங்க உட்கார்ந்திருக்கீங்க! இன்னும் அலைய வேண்டாம் பாட்டி” என்றாள் கௌசி!
“கலை! பாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியுமா? முடியாதா?” என்று, பதற்றம் மற்றும் கோபம் கலந்த குரலில் கேட்டார்.
“போறேன்… கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லி, காரை பாவை வீட்டை நோக்கி ஓட்டினான் கலை.
**************
இதே நேரத்தில் சிவா வீட்டில், “என்ன வேணும் உனக்கு” என்று எழுந்து கேட்டுக் கொண்டே பாவை முன் வந்து நின்றான் பாண்டியன்!
சிவபாண்டியனின் அந்தக் கேள்வியில், ‘என்னதான் வேணும் தேன்பாவை?’ என்ற எரிச்சலே மண்டிக்கிடந்தது!!

