Kathambari Novels
சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.
இரவு எட்டரை. ஓடுதளம் தொண்ணூறு சதவீதம் இருளாகவும், அங்கங்கே சிகப்பு, நீளம், மஞ்சள், வெள்ளை, பச்சை வண்ண சிறிய விளக்குகள் என்றும் இருந்தது. விமானத்திற்குள் ‘எல்இடி’ விளக்குகள் பளிச்சென்ற ஒளி பாய்ச்சின.
பயணத் தூரம் குறைவு என்பதால் இருபுறமும் இரண்டு இருக்கைகள் மட்டும் கொண்ட சிறிய விமானம். பயணிகள் வரிசையாக ஏறிக் கொண்டிருந்தனர். அவர்களில் நிறைய தமிழ் முகங்கள் தெரிந்தன.
பயணிகள் வர வர, அவர்களை சிறு புன்னகையோடு வரவேற்று, அவர்களின் இருக்கை எண் கேட்டு, அந்த இருக்கையைச் சுட்டிக்காட்டி, அங்கே அமரச் சொன்னபடியும், சிலருக்குப் பயணப் பைகளை ‘ஓவர்ஹெட் பின்’-ல் வைக்க உதவியபடியும் இருந்தார்கள்… விமானப் பணிப்பெண்கள் இருவர்.
இருவரும் நேர்த்தியான ஒப்பனை, சிகை அலங்காரம், அயர்வைக் காட்டாத முகம், பளிச்சென்ற புன்னகை, என்று இருந்தனர். நாள் முடியும் நேரத்திலும் சோர்வில்லாத குரலில் பேசி, சுறுசுறுப்பாகப் பயணிகளுக்கு உதவினார்கள்.
அந்த இருவரில் ஒருத்தியான இவானா பயணிகளில் ஒருவனாக வந்தவனைப் பார்த்து, ‘இவனா’ என்று நினைத்தாள். செய்யும் வேலையை மறந்து ஒரு நொடி முகம் எரிச்சலாக சுருக்கி… பின் சட்டென, ‘ப்ச் என்ன பண்றேன் நான்’ என்று இயல்பு நிலைக்குத் திரும்பி வேலையைக் கவனித்தாள்.
அவனைக் கண்டுகொள்ளக் கூடாது என்று இவானா இருக்க, அவனோ அவள் முன் வந்து புன்னகைத்து, “ஹாய், குட் ஈவினிங். சீட் நம்பர் டுவன்டி சி” என்றான்.
அதுதான் அந்த விமானத்தின் கடைசி இருக்கை. அவள் அதைக் காட்டி, ‘போ, போய் அங்க உட்காரு’ என்ற பொருளில் அவனைப் பார்த்தாள். முகமன் எதுவும் சொல்லவில்லை. மற்றவரிடம் காட்டிய கனிவோ, புன்னகையோ அவனிடம் காட்டவில்லை. பேசவும் இல்லை. முகமொழியாலே பதில் சொல்லியிருந்தாள்.
கூடவே அவன் போவதற்காக ஒதுங்கி வழி விட்டும் நின்றாள்.
‘அட’ என்று புருவம் உயரத்தியவன், புன்னகை குறையாமல் அவளைக் கடந்து சென்று, “ஹேண்ட் லக்கேஜ்” என்றான்… ‘இதை எங்க வைக்க’ என்று கேட்கும் தொனியில்… ‘நீ என்னிடம் பேசியே ஆக வேண்டும்!’ என்ற முடிவில்.
அவன் இருக்கைக்கு மேலிருந்த ‘ஓவர்ஹெட் பின்’-ஐ காட்டினாள். ஒரு வார்த்தைப் பேசவில்லை.
“ப்ளீஸ்” – ‘நீயே வெச்சிடு’ என்ற மாதிரி பையை நீட்டினான். அவளைப் பேச வைக்காமல் விடப் போவதில்லை என்பது போல்.
‘நீ என்ன பண்ணாலும் பேச முடியாது!’ என்ற கடுமையான முகமொழியுடன் அவன் ‘பேக்-பேக்கை’ வாங்கினாள். அவன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, ‘ஓவர்ஹெட் பின்’-ல் பேக்கை அவள் வைக்க, “தேங்க்ஸ்” என்று அவன் சிரிக்க, ‘என் வேலை முடிந்துவிட்டது’ என்றபடி சென்றுவிட்டாள்.
‘இப்படி இருந்தா எப்படி பேச வைக்க’ என்ற யோசனைக்குப் போய்விட்டான் அவன்.
இன்னும் சில வினாடிகளில் விமானம் கிளம்பிவிடும் என்பதால் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களா, டிரே டேபிள் மூடி இருக்கிறதா, விண்டோ ஷேட் திறந்திருக்கிறாதா… இப்படி எல்லாம் பார்த்துவிட்டு இவானா ‘க்கேலி’ (galley – flight attendant work space) வந்தாள்.
தரைத்தளத்தில் இருந்த பணியாளர்களுடன் சில விவரங்களை பெற்றுவிட்டு, இன்னொரு பணிப்பெண்ணும் அங்கே வந்தாள். இவானா நிற்கும் விதத்தைப் பார்த்து, “என்ன” என்றாள்.
இவள் பெயர் உஷா. தமிழ் பேச வரும். இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. இவர்கள் இப்படி ஒரே நேரம் பயணப்படும்படி எப்போதாவது அமையும். சிறிய விமானம் என்பதால் இவர்கள் இருவர் மட்டுமே!
உஷா கேட்டதும், “அவன் வந்திருக்கான்” என்றாள் எரிச்சலாக இவானா.
“அவன்-னா யாரு?”
“அவன்-னா கார்த்திக்… ரோ ட்வென்ட்டி பாரு”
அந்த இருக்கையை உஷா பார்க்க. அங்கே இருந்த கார்த்திக்கும் இங்கேதான் பார்த்திருந்தால், சிநேகமாக புன்னகை செய்தாள். இவானாவுடன் உஷாவிற்கு நன்கு பழக்கம் இருப்பது தெரியுமென்பதால், அவனும் புன்னகை செய்தான்.
இவானாவோ, “இப்போ இவன் எதுக்கு வந்திருக்கானாம்” என்று புலம்பினாள். சிரித்தபடி உஷா, அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
‘இந்த ரூட் எனக்கு அசைன் ஆகிருக்குனு இவனுக்கு எப்படித் தெரியும்’ என்ற கேள்வியோடு இவானா சென்று, இன்டர் ஃபோன் சிஸ்டம் மூலம் பைலட்டிடம், ‘விமானம் புறப்படத் தயார்’ என்ற தகவலைச் சொல்லி, விமானத்தின் கதவை அடைத்துவிட்டு, மீண்டும் ‘க்கேலி’ வருகையில் கார்த்திக்கைப் பார்த்தாள்.
அருகிலோ, முன்னிருக்கையிலோ பயணிகள் இல்லாததால், கால் மேல் கால் போட்டு ‘ஹாயாக’ உட்கார்ந்திருந்தான். ஷார்ட்ஸ், ஷர்ட் என்று சாதாரண உடையில் இருந்தவன் முகம் அவளுக்காக பல உணர்வுகளைக் காண்பித்தன. அவள் முகமோ, ‘நீ யாரோ’ என்ற பாவத்தையே காட்டியது.
உஷா, இவானா இருவரும் சிற்றுண்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ‘கால் பட்டன்’ ஒலி கேட்டது. ‘யாரென்று’ என்று இவானா எட்டிப் பார்க்க, கார்த்திக்தான் அழுத்தி இருந்தான்.
அவள் பார்த்ததும், அந்தச் சிறு வட்ட வடிவ விளக்கைச் சுட்டிக்காட்டி, ‘அது நான்தான், வா’ என்று கண்களில் சிரிப்போடு அவளைப் பார்த்திருந்தான்.
சட்டென உள்ளே திரும்பிய இவானா, “என்கிட்ட பேசத்தான் இப்படி பண்றான், நான் போ மாட்டேன் நீ போ உஷா” என்றாள். உஷா போகாமல் இருக்கவும் அவளை கூர்ந்து பார்த்த இவானா, “சோ, நீதான் அவன்கிட்ட என் ரூட் பத்தி சொல்லிருக்க” என்றாள்.
“நானா சொல்லல… கார்த்திக் கேட்டப்போ சொன்னேன்”
“எல்லாம் ஒன்னுதான்… நான் பேசணும்னுதான நினைக்கிறான், இப்போ பாரு என்ன பண்றேனு” என்றுவிட்டு வேகமாக அவன் முன் சென்று, “ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ சார்” என்றாள் ‘கால் பட்டனை’ அழுத்தி அனைத்துவிட்டு.
அதுவரை புன்னகைத்திருந்தவன்… சட்டென புன்னகை மறைய, ‘சாரா… நான் உனக்கு சாரா’ என்ற பார்வை அவன் பார்க்க, ‘ஆமா சார்தான்’ என்றபடி அவள் அழுத்தமாக நின்றாள்.
‘இதுக்கு நீ பேசாமலே இருந்திருக்கலாம்’ என்பது போல் முகத்தைச் வைத்துக் கொண்டு, “வாட்டர்” என்றான்.
“வெயிட்” என்ற அவள் நகரப்போக, “கோல்ட் வாட்டர் வேணுமா ஹாட் வாட்டர் வேணுமானு கேட்கலை” என்று பேச்சைத் தொடரப் பார்த்தான்.
அவள் வேகமாகத் திரும்பியதும், ‘பேசு, பேசு, கோபமானாலும் பேசு’ என்று அவனது ஒரு விழி அவள் பேச்சிற்காக யாசித்தது. மறுவிழியோ, ‘நீ பேசலனா என்ன, நான் பேசுவேனே’ என்று அவளிடத்தில் பேசியது.
அவன் கண்கள் கேட்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது. இருந்தாலும் அவள் பதில், ‘சொல்லுங்க’ என்பது போல் சிறு தலையசைப்பு மட்டுமே.
அவன் ‘அவ்ளோதானா’ என்ற ஏமாற்றத்துடன், “கோல்டு வாட்டர்” என்றதும், அவள் எடுத்து வந்தாள். அவன் வாங்குவதற்காக கை உயர்த்த, அவளோ ட்ரே டேபிளை திறந்து… அதில் வைத்து, ‘வேணும்னா எடுத்து நீயே குடிச்சிக்கோ’ என்று பார்வையால் சொல்லிச் சென்றுவிட்டாள்.
பார்க்கும் வேலைக்கான அணுகுமுறையோடு… அவன் மீதான கோபத்தையும் காட்டிவிட்டு இவானா சென்றிருந்தாள். ‘அப்பாடா கோபப்பட ஆரம்பிச்சிட்டா’ என்று குதூகலத்தில் இருந்தான் கார்த்திக்.
விமானம் ஓடுதளத்திற்கு இழுத்து வரப்பட்டுக் கொண்டிருந்தது. இவானாவும், உஷாவும் பயணிகளுக்குப் பாதுகாப்பு நடைமுறைகள் எல்லாம் விளக்கி முடித்தார்கள்.
இன்னும் சில நொடிகளில் விமானம் புறப்படும் என்பதால், ‘க்கேலி’ போகப் போன இவானா, அவன் அலைபேசியைக் காதில் வைத்திருப்பதைப் பார்த்து, ‘இவனோட!’ என்று அவன் முன் வந்து, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று அலைபேசியை ‘ஃபிளைட் மோடில்’ போடும்படிச் சொன்னாள்.
“ஃபிளைட் மோடுலதான் இருக்கு” என்று அவன் அலைபேசியைக் காட்டினான்.
அவளோ அலைபேசி திரையிலிருந்த புகைப்படத்தைப் பார்த்தபடி நின்றுவிட, “ஹல்லோ, இது என் பர்சனல் ஃபோட்டோ” என்று அலைபேசியை மறைத்து அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.
என்ன சொல்ல, என்ன திட்ட, எப்படி முகத்தை வைத்துக் கொள்ள என்று தெரியாமல்… தடுமாறியவள், ‘ஓஹ் ஹாட், ரொம்ப பண்றானே!’ என்று போய் ‘ஜம் சீட்டில்’ அமர்ந்து கொண்டாள்.
தரையிலிருந்து விமானம் பறக்கத் தொடங்கியது.
கார்த்திக் பக்கவாட்டில் அமர்ந்திருந்த இருந்த பெண் அவனைப் பார்த்து, “ஐ திங்க்… நீங்க அவங்கள டிஸ்டர்ப் பண்றீங்கன்னு நினைக்கிறேன்” என்றாள். அவளருகில் அமர்ந்திருந்த இன்னொரு பெண்ணும், “எஸ், நானும் அப்பருந்து பார்க்கிறேன், அப்படித்தான் இருக்கு” என்றாள்.
“ஐயோ நீங்க நினைக்கற மாதிரி இல்ல. இவானா… ஷீ இஸ் மை வொய்ப். ஒரு சின்ன சண்டை. சமாதான ஆக மாட்டிக்கிறா. அதான் இப்படி ஒரு சமாதான முயற்சி, அவ்ளோதான்” என்றான் சிறு முறுவலுடன்.
அவர்கள் நம்பாத பார்வை பார்த்தார்கள். அலைபேசியில் அவன் திருமணப் புகைப்படம் காட்டவும், “ஓகே ஓகே” என்று இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அதில் ஒருத்தி, “ம்ம் காஸ்ட்லியான சமாதானம்” என்றாள்.
சிரிக்க மட்டும் செய்தான்.
அவர்கள் பெயர் சொல்லிவிட்டு, “உங்க பேரென்ன?” என்று கேட்டார்கள்.
“கார்த்திக்” என்றான்.
“இந்த பேருக்கே சமாதானமாகி இருக்க வேண்டாமா?” என்றாள் ஒருத்தி. “நீ வேற… இந்த பேர் வச்சிருக்கவங்ககிட்ட எப்படித்தான் சண்டை போட முடியுதோ” என்றாள் இன்னொருத்தி.
“கிண்டலா சொல்ற மாதிரி இருக்குதே…” என்று கார்த்திக் இழுத்தான்.
“இல்ல இல்ல… நிஜமா” என்றார்கள் இருவரும்.
“அவளைக் கூப்பிடறேன்… அவகிட்ட இத சொல்றீங்களா”
“ஐய்யோ… நாங்க மாட்டோம்பா. அவங்கள பார்த்தாலே ஸ்ட்ரிக்ட்-ஆ தெரியுது” என்றுவிட்டு, இருவரும் ‘ஹெட் ஃபோன்’ மாட்டி பாடல் கேட்க ஆரம்பித்தனர்.
கார்த்திக் ‘அடுத்து என்ன செய்ய?’ என்று யோசித்துவிட்டு, ‘கால் பட்டன்’-ஐ மீண்டும் அழுத்தினான். பயணிகளுக்குச் சிற்றுண்டி கொடுப்பதற்காக உஷா தயார் செய்வதால், இவானா எட்டிப் பார்த்தாள்.
கார்த்திக்தான் என்றதும் எரிச்சலுடன் வேக வேகமாக வந்து நின்று, ‘என்னடா வேணும் இப்ப’ என்று நறுக்கென கேட்கப் போனவள், ஒரு பயணி ஓய்வறை பயன்படுத்திவிட்டு வரவும், “எஸ் ப்ளீஸ்” என்றாள் நயமான குரலில்.
அவள் வந்த வேகத்திற்கு அடித்துவிடுவாளோ என்று பயந்திருந்தவன், அவள் அமைதியாகப் பேசியத்தைப் பார்த்ததும், சிரித்தபடி, “கேபின் ரொம்ப கூலா இருக்கு” என்று உடல், கைகள் நடுங்க சொன்னவன், “ஸோ ப்ளாங்கெட் ப்ளீஸ்” என்றான்.
மெதுவான குரலில், “நடிக்க வேண்டாம்” என்றாள்.
“ஹேய்… நடிக்கல நிஜமா குளிருது” என்றான்.
“வாயால சொன்னா போதும்… ஆக்ஷன் வேண்டாம்னு சொன்னேன்” என்றாள்.
அவளே பேச்சைத் தொடர்கிறாள் என்ற சிரிப்புடன் “ஓஹ் அப்படியா. அதான், கேபின் ரொம்ப கூலா இருக்கு. ப்ளாங்கெட் வேணும்” என்றான்.
மெல்லிய குரலில், “ஷார்ட் பிளைட்ஸ்-ல ப்ளாங்கெட் கொடுக்க மாட்டங்கனு தெரியாதா உனக்கு. ஏன் இப்படி…” என்று கோபத்தோடு சொன்னவள், ‘என்னய வேலை பார்க்க விடேன்’ என்று கெஞ்சுதலாகப் பார்த்துவிட்டுச் சென்றாள்.
‘ம்ம் முதல கோபப்பட்டா, இப்போ கெஞ்சறா. நல்ல இம்ப்ரூவ்மென்ட்’ என்று கார்த்திக் முகமெங்கும் முறுவல்கள் முளைத்திட இருந்தான்.
சில நொடிகளில் சிற்றுண்டி கொடுக்க வந்து கொண்டிருந்தார்கள். கார்த்திக் பக்கம் வந்ததும், இவானா, ‘என்ன வேணும்’ என்ற பொருளில் பார்த்தாள்.
“என்னலாம் இருக்கு” என்றான்.
‘இதென்ன ஹோட்டலா’ என்று பார்வையுடன் இவானா இருக்க, “ஜுசஸ், நட்ஸ், குக்கீஸ்” என்றாள் உஷா.
“ஜூஸ்” என்றான்.
“விச் பிளேவர் வுட் யூ லைக்? ஆரஞ்ச், ஆப்பிள் ஆர் மேங்கோ” – உஷா.
“பைன்-ஆப்பிள் ஜூஸ் இல்லயா, அதான் என் ஃபேவரிட்… ஒரு பெரிய கிளாஸ் நிறைய பைன்-ஆப்பிள் ஜூஸ் கைல, என் வீட்டு பால்கனி ஸ்விங் சேர்ல உட்கார்ந்து, என் வொஃய்ப் கூட பேசிக்கிட்டே… திருச்சி சிட்டிய வேடிக்கைப் பார்த்துக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா ஜூஸ் குடிக்கிறது எப்படி இருக்கும் தெரியுமா” என்று ரசனையாக இவானாவைப் பார்த்துச் சொன்னான்.
கார்த்திக் பேசியது காட்சியாக கண்களுக்குள் விரிய, “நோ ப்ராப்ளம், ஜஸ்ட் டுவன்ட்டி மினிட்ஸ்! ஃபிளைட் திருச்சில லேன்ட் ஆயிடும், நீங்க வீட்ல போயே குடிச்சிக்கோங்க” என்று விளையாட்டானக் குரலில் சொல்லிவிட்டு இவானா சர்வீஸ் ட்ராலியை இழுத்துச் சென்றுவிட்டாள்.
சிரித்துக் கொண்டான் கார்த்திக். அவள் வெளிப்படுத்திய விளையாட்டு பேச்சு, சமாதானத்திற்கான வெள்ளைக் கொடியென நினைத்தவன், ‘அடுத்து என்ன செய்ய’ என்று யோசித்தான்.
இருக்கையின் முன்னிருந்த பத்திரிகைப் பையிலிருந்து (literature pocket) ‘இன் ஃபிளைட் மேகஸின்’ ஒன்றை எடுத்துப் புரட்டினான். அதில் பரிசுப் பட்டியல் பார்த்ததும், ‘எதாவது கிஃப்ட் பண்ணி இந்த சண்டைக்கு ஒரு எண்டு கார்டு போட்டுடலாம்’ என்று எண்ணம் வந்தது.
பெரும்பாலும் சிறு தூர விமானப் பிரயாணங்களில் இருக்காது. இன்று ஏதோ சிறப்பு நாள் என்பதற்காக கொடுத்திருந்தார்கள்.
கைக்கடிகாரத்தைத் தேர்ந்தெடுத்தவன், ‘எங்க அந்த பெல்’ என்று நிமிர்ந்து பார்த்து, ‘கால் பட்டன்’-ஐ அழுத்தினான். இவானா வந்து நின்றாள்.
“இந்த வாட்ச் வாங்கணும்… ஆக்சுவலா வாங்கிக் கொடுக்கணும்… கிஃப்ட், என் வொய்ப்-க்கு” என்று காதலாக சொல்லி முடித்தான்.
கணவன் தேர்ந்தெடுத்த அந்தக் காதல் பரிசு அவளுக்குப் பிடித்தது. இருந்தும், “காரணம்லாம் வேண்டாம், காசு கொடுத்தா போதும்” என்று சொல்லிவிட்டு, ‘கார்ட் ரீடரை’ எடுத்து வந்து நிற்கவும், “இந்த வாட்ச் வேண்டாம். இந்த செயின் வாங்கிக்கிறேன்” என்று தேர்வை மாற்றினான்.
‘ஐயோ ஏன் மாத்தறான்’ என்று மனம் பரபரக்க, “எதுக்கு இந்த சேஞ்ஜ்” என்று சட்டென்று கேட்டு விட்டாள்.
சிறு கேலி புன்னகையோடு, “இப்பதான் காசு கொடுத்தா போதும்… காரணம் வேண்டாம்னு சொன்ன மாதிரி இருந்தது” என்றான். ‘வாட்ச்தான் பிடிச்சிருக்கு கார்த்திக்… அதயே வாங்குனு சொல்லு’ என்ற பார்வை பார்த்திருந்தான்.
‘அதலாம் சொல்ல மாட்டேன்’ என்பது போல் அவனிடமிருந்து கார்டு வாங்கி, ‘ஸ்வைப்’ செய்துவிட்டுப் போய்விட்டாள். இவானா செய்கையில் அவனுக்கு, ‘அட போம்மா எவ்ளோதான் ட்ரை பண்ண’ என்றாகிவிட்டது.
இன்னும் சற்று நேரத்தில் விமானம் தரை இறங்கிவிடும். கார்த்திக்கிடமிருந்து இவானாவிற்கு எந்த அழைப்பும் வரவில்லை. அவன் அழைப்பை, அழைத்துப் பேசுவதை அவள் எதிர்பார்த்தாள். ‘என்னாச்சு’ என்று தோன்றவும் மெதுவாக எட்டிப் பார்த்தவள் புருவம் ‘அடப்பாவி’ என்று மேலேறியது.
ஏனென்றால் கார்த்திக் தூங்கிக் கொண்டிருந்தான்.
“இப்படித் தூங்கறான்… இவன” என்று கார்த்திக் அருகில் வந்த இவா, அவனை எப்படி எழுப்ப என்று யோசித்து, ‘கேஸ்பர் பேன்’ முனையைத் திருப்பி, அதிலிருந்து வரும் குளிர்ந்த காற்றை அவன் முகத்தில் படும்படிச் செய்தாள்.
உடனே கண் திறந்தவன்… தூக்கம் கலைந்து கோபத்தில் சத்தம் போடப் போக, சட்டென்று அவன் வாயை மூடி, “கத்திடாத கார்த்திக்… எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க, இது நம்ம வீடு இல்ல” என்றாள் வேகமாக… ரகசிய குரலில்.
கண்களைக் கசக்கிக் கொண்டு அவள் கையை எடுத்துவிட்டவன், அவளைப் பார்த்து, “கூப்பிடுவேன்னு எக்ஸ்ஃபெக்ட் பண்ணியா, கூப்பிடலனதும் நீயே வந்து பேசறியா” என்றான்.
அமைதியாக நின்றாள்.
“அதுவும் நார்மலா பேசற, ம் சமாதானம் ஆயிட்ட போல” என்றான் கேள்வியாக.
அவள் இன்னும் பேசாமல் நிற்க, “சொல்லு… அப்படித்தான?” என்றான்.
யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு, அவன் தலையில் லேசாகக் கொட்டி, “ஆமா! லேன்ட் ஆனதும் ஏர்போர்ட் வெளிய வெய்ட் பண்ணு, சேர்ந்தே வீட்டுக்குப் போலாம்” என்றாள் சிறு புன்னகையுடன்.
வேறு வார்த்தைகள் எதுவும் சொல்லவில்லை. “இவா” என்று ஒற்றை வார்த்தை மட்டும் சொன்னான். விரிந்த புன்னகையுடன் அவனைப் பார்த்தபடி ‘க்கேலி’ சென்றவள், அங்கே போன பின்னும் சிரித்த முகமாகவே நின்றாள்.
அப்போது, ‘கால் பட்டன்’ அழுத்தும் ஒலி கேட்க, ‘அதான் பேசிட்டேன்ல, அப்புறம் என்ன’ என்று இவானா கார்த்திக்கைப் பார்க்க… அவனோ, ‘நான் இல்ல, அங்க’ என்று வேறொரு இருக்கையைக் காட்டினான்.
அவன் செய்கையில் சத்தம் வரும்படி சிரிக்கப் போன இவானா, வாய் மூடிக் கொண்டாள். சமாதான முயற்சி ‘சக்ஸஸ்’ ஆனதில் கார்த்திக் சந்தோஷமாகச் சிரித்தான்.

