Kathambari Novels
அத்தியாயம் – 9
திருமணம் ஏற்பாடுகள் எல்லாம் நளினிதான் பார்த்துக் கொண்டாள். சின்ன மண்டபம்தான்! கிரிதான் பார்த்துக் கொடுத்தது. ஆனால் அலங்கரிப்புகள் மூலமாக பிரமாண்டமாய் மாற்றியிருந்தாள் அண்ணனிற்காக!!
மண்டபம் முழுதும் சீரான வரிசையில் அடுக்கப்பட்ட ஸ்டீல் நாற்காலிகள்! சிவப்பு நிற வட்டவடிமான குஷன் உட்காருவதற்கு! மேலும், சாயும் இடத்தில வெள்ளை நிற ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்து வைக்கப்பட்டிருந்தது!!
மேடையின் பின்புறம் வெள்ளை நிற ரோஜாப்பூக்கள்! சிகப்பு நிற ரோஜா பூவால் அலங்கரிக்கப்பட்ட காதலின் சின்னம்! அதன் ஓரத்தில் வெள்ளை எழுத்துக்களால் காலம் முழுவதும் கைகோர்த்து நடக்கப் போகிறவர்கள் பெயர்கள் மின்னியது!!
மேடை நடுவில் அன்றைய நாளின் நாயகன், நாயகி! அந்த நாளுக்கே உரிய அலங்காரத்துடன்! தனித்து தெரிவதற்கென்று பிரத்யேக விளக்கு ஒளியின் வெளிச்சத்தில்!!
சங்கர் திருமண நிகழ்வுகளைப் பார்த்து ஆடிப்போயிருந்தாலும், மனதளவில் அப்படியே இருந்தான்! கௌசி, கிரி… பாவை திருமணம் இப்படி நடக்குமென நினைத்துப் பார்க்கவில்லை. பொறாமை தெரிந்தது அவர்கள் பார்வையில்!
அவர்கள் இன்னும் பொறாமைப்படும் விதமாக பாண்டியன் பாவை கழுத்தில் தாலி கட்டி முடித்ததும் வேணிம்மா, “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…” என்று பாட ஆரம்பித்துவிட்டார்.
யாரும் எதிர்பார்க்கவில்லை. கௌசி, கிரி எரிச்சலின் உச்சத்தில் நின்றனர்.
‘எத்தனை நாட்கள் கழித்துப் பாடுகிறார். அதுவும் தனக்காகப் பாடுகிறார். இதைவிட வேற என்ன வேண்டும்’ என்ற மனநிலையில் பாவை இருந்தாள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவள் ஆனந்தமாக இருந்தாள்.
“சீதைக்கும் ராமனுக்கும்… ” என்று பாடி பாவையைப் பார்த்தார். அதற்கு மேல் முடியவில்லை. பாடுவதை நிறுத்திக் கொண்டார்.
அவர் பாடியது பாவையின் திருமணத்தை பிரமாண்டமாய் மாற்றியது.
திருமணம் நல்லபடியாக முடிந்தது!
சற்றுநேரத்திற்கு வழக்கங்கள்! வாழ்த்துகள்! வாழை இலை உணவுகள்! வந்திருந்தவர்கள் வீடு திரும்பல்! இவை மட்டுமே!!
எல்லாம் முடிந்ததும், “வேணிம்மா” என்று பாட்டி முன் வந்து நின்றாள் பாவை! “உனக்கே உனக்குனு உரிமையா ஒரு வீடு. உனக்குப் பிடிச்ச மாதிரி வாழு” என்றார் மனநிறைவுடன் மகிழ்ச்சியாக!
மங்களகரமாக நின்று கொண்டிருந்தவள் மனதிலிருந்து சிரித்தாள்.
சற்று தூரத்தில் நின்ற பாண்டியனை அழைத்தார். வந்ததும், “சந்தோஷமா பார்த்துக்கோ” என்று சொல்ல, ‘சரி’ என்று தலையாட்டினான்.
அதற்கு மேல் ஏதும் பேசவில்லை. கடமை முடிந்துவிட்டது என்ற ஓர் திருப்தி! இனி சந்தோசமாக இருப்பாள் என்ற நிம்மதி! நிறைவான மனநிலையுடன் பாவையைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பினார் வேணிம்மா!!
சிவா வீடு!
சற்று நேரம் பாண்டியன், நளினி, மாமனார், மாமியார் பிரவீன் மற்றும் அவன் பெற்றோர்களுடன் பாவை பேசிக் கொண்டிருந்தாள். அதன்பின்பு காலையில் திருமணத்திற்கு வர இயலாத உறவினர்கள், சிவா நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பொழுது கழிந்தது.
பின், “இரு. இவங்களை அனுப்பிட்டு வர்றேன்” என்று பாவையிடம் சொல்லி பாண்டியன் கிழே சென்றதும்… நளினி, பிரவீன் மற்றும் அவன் பெற்றோர் சாப்பிட்டுவிட்டு தங்களது வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
“எதுவும் வேணுமா பாவை?” என்று மருமகளிடம் கேட்டார், செண்பகம்!
“செண்பாம்மா இந்தப் புடவையை மாத்திக்கணும்” என்று சொன்னதும், “வா என்கூட” என்று சிவாவின் அறைக்கு அழைத்துச் சென்றார்.
“இதுதான் உங்க ரூம்!” என்று சொன்னவர், “ஒன்னே ஒன்னு பாவை. சிவா இப்ப இருக்கிற மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கணும். சரியா?” என்றார்.
‘சரி’ எனத் தலையை ஆட்டினாள்.
“சரி! நீ சாரீ சேஞ் பண்ணிக்கோ” என்று அறையை விட்டு வெளியே சென்றார். சற்றுநேரத்தில் பாவை குளித்து முடித்து வரும்போது பாண்டியன் அறைக்குள் இருந்தான்.
எப்போதும் அலட்டிக் கொள்ளாத உடையில் தன்னை அசையவிடாமல் செய்துவிடும் கண்ணாளனை கருவிழிகளால் கஞ்சத்தனம் இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தாள் மனைவி!
ஒப்பனைகள், தலை அலங்காரங்கள் எல்லாம் கலைந்து விட்டு… தங்க சரிகை வைத்த அடர் சாம்பல் நிறப் பட்டுப்புடவை நேர்த்தியின்றி கட்டியிருந்தாள்!
புதுத்தாலி… நெற்றிக் குங்குமம்… தளர்வான ஜடை பின்னல் என்று களையாக இருந்த தாரத்தை தரமாக ரசித்துக் கொண்டிருந்தான் கணவன்!
அதன்பிறகு இதுவரை இருந்த தூரத்தை விரட்டுகின்ற நெருக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர்!
“ஹனி” என்றான் ஆசையாக!
“பாண்டியன்” என்றாள் அவனை விட ஆசையாக!!
‘என்னது பாண்டியனா?’ என அதிர்ச்சியடைந்து அரையடி தூரம் பின்னால் சென்றான் பாவையின் பாண்டியன்!!

