Kathambari Novels
அத்தியாயம் – 6
அடுத்த நாள் காலை ஒரு பத்து மணி அளவில்… கலை, சங்கரை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டான். ‘வரமாட்டேன்’ என்று சொன்னவனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய்விட்டான்.
அவன் மறுப்பைப் பார்த்த வேணிம்மா, ‘இவன் இப்படி இருக்கிறானே?’ என்று கோபம் வந்தது. மேலும், ‘நல்லபடியாகப் பாவை திருமணம் முடிய வேண்டும்’ என்று இறைவனை மனதார வேண்டிக் கொண்டே இருந்தார்.
பேசும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலெல்லாம் மந்திரங்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். பெண் பார்க்கும் படலத்திற்காக வீடு தயாரானது.
கிருஷ்ணாம்மாவைப் பார்க்க இசைக் கலைஞர்கள் வந்து போகும் வண்ணம் இருப்பதால், என்றுமே பிரமாண்டமாக காட்சி அளிக்கும் வரவேற்பறைதான். இன்று கூடுதல் விளக்குகள் போட்டிருந்ததால் ஜொலி ஜொலித்தது!
நல்ல வேலைப்பாடுகளுடன், வளைவு நெளிவுகளுடனும் கூடிய பளபளக்கும் பெரிய பெரிய திவான்கள். இவை அடர் பச்சை நிறத்தில் இருந்தன. உருளை வடிவ தலையணைகள் போடப்பட்டிருந்தன. இவை அடர் செம்மண் நிறத்தில் இருந்தன.
அதே நிறத்திலான வெல்வெட்டாலான தரை விரிப்புகள்!
சுவர்கள் முழுவுதும் கிருஷ்ணாம்மாவின் இளமை கால கச்சேரிகளின் போது எடுக்கப்பட்ட படங்கள், தங்க நிற சட்டமிடப்பட்டு மெல்லிய விளக்கொளியின் கீழே மாட்டப்பட்டிருந்தன! அறை மூலைகளில் எல்லாம் சாமந்தி மாலைகள் போடப்பட்ட இடுப்பளவு உயர கடவுளின் சிலைகள்!
கிருஷ்ணாம்மா, கிரி, அவர் மனைவி தயாராகி வரவேற்பரையில் இருந்தனர். மீனாட்சி, கௌசி அவரவர் அறையில் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
பாவை அறையில் இருந்தாள். அவளுக்குத்தான் உள்ளுக்குள் ஒரு படபடப்பு! பாண்டியனை நேரில் காணப் போவதால் வந்த படபடப்பு!!
சற்று நேரத்திலே சிவா வீட்டிலிருந்து வந்ததும்… கிரியும், அவரது மனைவியும் சேர்ந்து அவர்களை முறையாக வரவேற்றனர். அனைவரும் உள்ளே வந்ததும் கிருஷ்ணாம்மாவும் மீனாட்சியும் வரவேற்று அமரச் சொன்னார்கள்.
ஒரு ஐந்து நிமிடத்தில் மதியழகன், கிரி ஒரு பக்கம், செண்பகம், சிவா, நளினி, பிரவீன், அவன் பெற்றோர்களும் மற்றொரு பக்கம், கிருஷ்ணாம்மா, மீனாட்சி ஒரு புறம்… என்று அமர்ந்து கொண்டார்கள். மதி, தன் குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார்.
கௌசி, அவள் அம்மா வந்தவர்களை உபசரிக்க வேண்டுமென சமயலறை புகுந்தனர்.
தன் வீட்டின் உறுப்பினர்களை அறிமுகப்படுத்திய கிருஷ்ணாம்மா, “மீனாட்சி பொண்ணு ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறா. அவ வீட்டுக்காரர் பக்கத்து ஊர்ல வேலை பார்க்கிறாரு. சனி ஞாயிறுனா வருவாரு” என்றார்.
செண்பகம், “ஓ! பசங்க எங்க? காணும்” என்று கலை, சங்கர் பற்றிக் கேட்க, “கடையில கொஞ்சம் வேலை. அதான் அனுப்பிருக்கேன்” என கிரி சமாளிக்க, ‘சரி’ என்பது போல் தலையாட்டிக் கொண்டார் செண்பகம்.
சற்றுநேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பின் கிருஷ்ணாம்மா தன் பின்னால் நின்ற கௌசியின் கைப்பிடித்து, “போ, போய் பாவைய கூட்டிட்டு வா” என்றார்.
‘ம்ம்ம்’ என்று தலையசைத்து பாவை அறைக்குச் சென்று, “பாட்டி உன்னைக் கூப்பிடறாங்க. வா” என்று அழைத்ததும், கௌசியுடன் சேர்ந்து தேன்பாவை வரவேற்பறை வந்தாள்.
அடர் இளஞ்சிவப்பு வர்ண பட்டுப்புடவை. இருபுறமும் அரையடி அகலத்தில் அடர் மஞ்சள் நிறத்திலான கரை இருந்தது. அந்தக் கரை முழுவதும், தங்க நிற இழைகளால் அன்னப் பட்சியின் உருவம் நெய்யப்பட்டிருந்தது!
நேர்த்தியான மடிப்புகளுடன் புடவை உடுத்தியிருந்தாள்! ஆடைக்கு ஏற்றார் போல் ஆபரணங்கள்! தோடு, அட்டிகை, நெத்திச்சூடி, ஒட்டியாணம், வளையல் என்று கிட்டத்தட்ட மணப்பெண் போல் இருந்தாள்.
‘வாம்மா’ என்று வேணிம்மா அழைத்ததும், அவரருகில் சென்று பாவை அமரப் போனாள். அதற்குள், “இங்க வா பாவை” என்று செண்பகம் அழைக்க, அவள் கிருஷ்ணாம்மாவைப் பார்த்தாள்.
“போ… கூப்பிடறாங்கள. போய் உட்காரு” என்று அவர் சொல்ல, பாவை சென்று செண்பகம் அருகில் அமர்ந்தாள். உட்காரும் முன், ஒருமுறை பாண்டியனைப் பார்த்தாள். அதே கணத்தில் அவனும் பாவையைப் பார்த்தான்.
அவரவர் விழியில் இருந்த காதலை அடுத்தவர் உணர்ந்து கொண்டனர். அந்த நொடி படபடத்த இதயத்தில் இருவருக்கும் பட்டாம்பூச்சிகள் பறந்தன!!
ஒருபுறம் மகன்… மறுபுறம் மருமகள்… செண்பகம் சந்தோஷமாக இருந்தார்!
‘இது போதும்’ என்றிருந்தது வேணிம்மாவிற்கு!!
செண்பகம் கேட்கும் கேள்விகளுக்கு, ‘ம்ம்’, ‘ம்கும்’ என்று மட்டும் பாவை பதில் சொல்லிக் கொண்டிருக்க, அதைக் கேட்க கேட்க பாண்டியன், ‘அமைதியான பொண்ணு போல’ என்று நினைத்துக் கொண்டான்.
கிரி, “நீங்க ஏன் உங்க அப்பா பிசினஸ் பார்க்கல” என்று சிவாவிடம் கேட்டார்.
அந்த நேரத்தில் அந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், “இன்டெர்ஸ்ட் இல்லை” என்று மட்டும் சொன்னான்.
சற்றுநேரத்தில் வீட்டின் பெரியவர்கள் மட்டும் பேசிக் கொண்டிருக்க, பாவை பாண்டியன் இருவரும் பேசிக் கொள்ளட்டும் என்று அவர்கள் இருவருக்கும் தனிமை தந்தனர்.
இருவரும் வேணிம்மா அறைக்கு வந்திருந்தார்கள்!! பாதியிலே நின்றவளைப் பார்த்து, “அங்கே போய் பேசலாமா” என்று பால்கனியைக் காட்டினான்.
‘ம்’ என்று பாவை தலையாட்டியதும் பாண்டியன் நடக்க ஆரம்பித்தான். அவன் பின்னேயே நடந்தாள். இருவரும் பால்கனி வந்து நின்று கொண்டனர்.
முதல்முறையாக இப்படி ஒரு தருணம்! இருவரும் ஓரிரு நொடிகள் இதயத்தில் பறக்கின்ற பட்டாம்பூச்சியின் குறுகுறுப்பை ரசித்துக் கொண்டிருந்தனர்!!
முழுவதுமாய் ஒரு நிமிடம் அவளைப் பார்த்தான்! அதன்பின், “என்னை பாரு” என்றதும், இமை விரித்து இதயத்தில் இருபவனைப் பார்த்தாள் பாவை!!
“ஷாக்கிங் பிங்க்” என்றதும், ‘ம்ன்?’ என்று பாவையின் குரல்வளையிலிருந்து ஒரு கேள்வியின் குரல் வந்தது.
“ஷாக்கிங் பிங்க்” என்று சொல்லி, அவளது புடவையைக் காட்டியதும், குனிந்து புடவையைப் பார்த்தவளுக்கு, ‘என்ன சொல்கிறான்?’ என்று புரியவில்லை.
அவள் மீண்டும் கேள்வியாக, ‘ம்ன்?’ என்றதும், “ம், பஞ்சு மிட்டாய் கலர்ல சேரி கட்டியிருக்கிற” என்றதும், முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். அதில் ஒருவித சங்கடம் தெரிந்தது.
“சாரி! சாரி! அது…” என்று தடுமாறியவன், “என்னைப் பாரு” என்றான் அவளது பாராமுகம் பார்த்து! மீண்டும் திரும்பிப் பார்த்ததும், “ஆக்ச்சுவலா ரொம்பவே நல்லா இருக்கு” என்றான் சமாதானமாக!
ஆனால் பாவை சமாதானம் ஆனது போல் இல்லையென்றதும், “சரி அத விடு” என்றவன் ஏதேதோ பேசினான்.
சில நொடிகளுக்குப் பின், “தனியா பேசணும்னு நினைச்சேன். ஆனா நான் மட்டும் தனியா பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு” என்றான் பாவையின் குரலைக் கேட்கும் ஆவலில்!
அவள் சிரித்தாள்.
“ப்ச் சிரிக்காத! ஏதாவது பேசு!!” என்றவன் ஆவல், ஆர்வமாக மாறியது!
‘சரி பேசறேன்’ என்பது போல் உடல்மொழியை மாற்றிக் கொண்டாள். ‘முதன் முதலாகப் பேசப் போகிறாள்! என்ன பேச போகிறாள்?’ என்ற எதிர்பார்ப்பில், அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான்…” என்று ஆரம்பித்தவள், கொஞ்சம் தயங்கினாள். பின், “நான் அழுதா, கண்ணீரை துடைச்சி விடுவீங்களா?” என்று கேட்டாள்.
முதலில், ‘என்ன கேள்வி இது?’ என்றுதான் அவனுக்குத் தோன்றியது. பின், ‘ஏன் இப்படிக் கேட்கிறாள்?’ என்றும் தோன்றியது. கொஞ்சம் யோசித்து, ‘தன்னை சோதிக்கிறாளோ?’ என்று தோன்ற, “அழலாம் விடமாட்டேன்” என்றான்.
“கேள்வி அது கிடையாதுங்க!” என்று தெளிவாகச் சொன்னவள், “நான் அழுதா, கண்ணீரை துடைச்சு விடுவீங்களா” என்று மீண்டும் கேட்டுவிட்டு, பதிலுக்காக அவனது முகத்தைப் பார்த்தாள்.
‘ஏன் இந்தக் கேள்வி’ என்று நினைத்தவன், ‘ஒருவேளை தன் வீட்டினர் அவளைப் பார்த்துக் கொள்ளும் முறையைப் பற்றிய கேள்வியோ?’ என்று எண்ணி, “எங்க வீட்லயும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க” என்றான்.
‘இது பதிலல்ல’ என்பது போல் மறுத்துத் தலையசைத்தாள்.
பொறுமை போனதால், “நாம கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா?” என்று கேட்க, “அப்ப பஞ்சு மிட்டாய் கலர், எந்த லிஸ்ட்ல வரும்” என்று கேட்டாள்.
சிரித்துக் கொண்டே, “நீ, அமைதியான பொண்ணுனு நினைச்சேன்” என்று வேடிக்கையாக சொன்னதும், “பதில் சொல்லுங்க” என்றாள் விடாமல்!
“ஓகே! எதுக்காக அழணும்? அதை ஃபர்ஸ்ட் சொல்லு” என்றான்.
“எனக்கு ஒரு கஷ்டம் வந்தா…” என்று ஆரம்பிக்கும் போதே, “என்னால உனக்கு எந்த கஷ்டமும் வராது. வேற எதும் கஷ்டம்னா, என்மேல நம்பிக்கை இல்லனா மட்டும்தான் அழுவ! நம்பிக்கை இருந்தா… ‘இவன் பார்த்துப்பான்னு’ எண்ணம் வரும். அப்ப அழ மாட்ட” என்று, அவன் அன்பின் அறிவியலை விளக்கினான்.
அவள் யோசித்தாள்.
“ஆன்சர் கிடைச்சிருச்சா?”
‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள்.
“ஏன்?”
“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருந்தா மட்டும்தான், நான் அழுவேன்”
“புரியலை”
“எனக்கொரு கஷ்டம் வந்து அழுதா, நீங்க அதைக் கிண்டல் பண்ண கூடாது. அதே மாதிரி… அந்தக் கஷ்டத்தை நினைச்சி நீங்க கவலைப்படக் கூடாது. ஆறுதல் சொல்லணும்!” என்றாள்.
அவன் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்க மேல இந்த நம்பிக்கை வந்தா மட்டும்தான்…” என்று இடைவெளிவிட்டு, “நான் அழுவேன்” என்றாள் இதழ்கள் விரித்து!
“புரியுது” என்றான் இலகுவாக!
“என்ன புரியுது?”
“நீ மனசால யோசிக்கிற!” என்றான்.
“மனசால எப்படி யோசிக்க முடியும்” என்று புரியாமல் கேட்டாள்.
“மனசால யோசிச்சாதான் இப்படிப் பேச முடியும்! ஸோ, எப்பவும் மூளையால யோசிச்சு பேசு” என்று, அன்பின் அறிவியலைப் புரிய வைக்கப் பார்த்தான்.
“புரியலை”
“சரி விடு! இன்னைக்கே எல்லாம் புரிஞ்சிக்கணும்னு அவசியமில்லை. போகப் போக பார்த்துக்கலாம்” என்றவன், “ம்?” என்று அவளிடம் கேள்வியாகக் கேட்க, “ம்ம்” என்றாள் அதையே பதிலாய்!
ஓரிரு நொடிகள் இங்கே அங்கே பார்த்தவன், “நேத்து நான் உன்னைப் பத்தி யோசிச்சேன் தெரியுமா?” என்று, தன் ஆசை பற்றிப் பேச ஆரம்பித்தான்.
அழகாக சிரித்தாள்!
“ஹனி லோகஸ்ட் வாங்கி அதுகூட பேசிக்கிட்டு இருந்தேன்” என்று நேற்றைய தினத்தின் நேயங்களின் நேரங்களைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னான்.
“ஹனி லோக்ஸ்ட்!?” என்று வினவியவள், “அப்படின்னா ஏதாவது சாப்பிடற பொருளா?” என்றாள் விருட்டென!
சிலாகித்துக் கொண்டிருந்தவன் சில்லு சில்லாக உடைந்து போய், “சாப்பிடற பொருளா?” என்று நெடில் விகுதியில் கேட்டவன், “எப்படி சாப்பாட்டை இதோட கம்பேர் பண்ற?” என்று நொந்து போய் கேட்டான்.
“அதான் பேர்லயே ஹனி இருக்கே?!!”
“அது மரத்தோட பேரு”
“மரமா?” என்று காற்றாகிப் போனக் குரலில் கேட்டு, “ஆனா, என்னை நினைச்சி ஏன் அதுகூட பேசினீங்க?” என்று கேட்டாள்.
“ஹனி-னா தேன்”
“ஓ! ஹனி… தேன்… தேன்பாவை! கரெக்ட்டா?” என்றாள் உற்சாகமாக!
“ம்ம்ம்” என்றவன், “சரி! நீ சொல்லு, நேத்து என்னை நினைச்சியா?” என்றதும், “ம், ஆமாம்” என்றவளுக்கு நேற்றைய நாளின் நீள அகலங்கள் முழுவதையும் நிரப்பியவனால், இன்றைய நொடிகளிலும் நாணம் வந்தது!!
“எப்போ? எப்படி?” என்றான் ஆர்வமாக!
“நேத்து நானும் வேணிம்மாவும்…” என்று ஆரம்பிக்கும் போதே, “வேணிம்மா?” என்றான் வேள்வியாக!
“என் பாட்டி”
“ஓ! சொல்லு சொல்லு” என்றான் மீண்டும் ஆர்வமாக!
“நேத்து நானும் வேணிம்மாவும் கோவிலுக்குப் போனோமா!! அங்க சிவ-சிவ அப்படினு எழுந்திருந்தது! உடனே உங்க ஞாபகம் வந்தது”
“ஓ!” என்றவனின் ஆர்வம் கொஞ்சம் குறைந்தது!
“அப்புறம் ஒரு இடத்தில சிவாலயம்னு பார்த்ததும் உங்க ஞாபகம் வந்தது”
“ஓ!” என்றவனின் ஆர்வம் பாதி குறைந்தது!
“அப்புறம் வேணிம்மா கார் டிரைவர் ரிங்க்டோன் ‘ஹர ஹர சிவனே’ பாட்டு! அப்பவும் உங்க ஞாபகம் வந்தது”
“ஓ!” என்றவனின் ஆர்வம் மொத்தமாக வடிந்து போனது!!
“அப்புறம்” என்றவளிடம், “போதும் போதும்” என்றான் பொறுக்க முடியாமல்!
“ஏன், உங்களவிட அதிகமா நினைச்சிருக்கேனா? இன்னும் ஃபுல்லா சொன்னா நீங்க ஷாக் ஆகிடுவீங்க”
“இப்பவும் அப்படித்தான் இருக்கேன்”
“என்ன சொல்றீங்க?”
‘கருத்து வேறுபாடு இருக்கிறது’ என்று புரிந்தவன், “ஒண்ணுமில்லை” என்றான். ஓரிரு நொடிகள் மௌனத்தில் கரைந்த பின், “ஒரு முக்கியமான விஷயம். நான் என்ன வேலை பார்க்கிறேன்னு தெரியுமா?” என்றான்.
“ம்ம்ம், போட்டோகிராபர்”
“லாண்ட்ஸ்கேப் ஆர் நேச்சர் போட்டோக்ராபர்னு சொல்லணும்”
“சரி! இன்னொரு தடவை கேளுங்க, நீங்க சொன்ன மாதிரி சொல்றேன்” என்று சிரிக்க, அவனும் சிரித்துக் கொண்டான்.
பின், “நான் சொல்ல நினைச்சது அப்பா பிசினஸ நான் பார்க்கல. நளினிதான் பார்க்கிறா! அதுல என்ன ப்ராபிட் வருது, என்ன பண்றாங்க, இப்படி எதுவுமே எனக்குத் தெரியாது. என்னோட இன்கம்…” என்று பேசிக் கொண்டிருக்க, கிரி மாமா கேட்டதற்காகப் பேசுகிறான் என்று புரிந்தது.
உடனே, “பணம் பத்திப் பேசுறீங்களா?” என்றாள் நேரிடையாக!
“அப்படியில்லை”
“அப்படித்தான்”
“கிட்டத்தட்ட!”
ஒரு நிமிடம் தீர்க்கமாக யோசித்தவள், “உங்ககூட வாழ்க்கையத்தான் ஷேர் பண்ணிக்க வர்றேன். வருமானத்தை இல்லை” என்றாள் உணர்வுப்பூர்வமாக!
அவளின் வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தவன், அப்படியே உறைந்து போய் நின்றான். அதற்குள்ளே, “டைம் ஆகிடுச்சு போகலாம்” என்று சொல்லி, இரண்டு எட்டு நடந்தாள்.
உறைந்து போனவன் உணர்வு வந்து, அவள் முன் சென்று நின்றதும், ‘என்ன?’ என்பது போல் பாவை பார்க்க, “கோபமா?” என்றான்.
“இல்லை”
“இல்லை! கோபம்தான்”
“ஆமா கோபம்தான்” என்றதும், சிரித்துக் கொண்டே, “உன்னய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் உள்ளத்திலிருந்து!
“தேங்க்ஸ்” என்றாள் உடனடியாக!
‘தேங்க்ஸா? அவ்வளவுதானா??’ என்று உற்சாகம் வடிந்து நின்றுவிட்டான்.
குறுக்கே நின்றவனைச் சுற்றி நடந்து போனாள். ‘இவ ஏன் இப்படி?’ என்று எண்ணியவன், மீண்டும் அவள் முன்னே வந்து நின்றான்.
“இப்போ என்ன?” என்றாள் அசட்டையாக!
‘ஓ! அவ்வளவு தூரம் ஆகிப்போச்சா?’ என்று நினைத்தவன், “பைவ் த்ரீ செவன் ஒன் டூ த்ரீ நைன் டூ ” என்று சொல்லி நடக்க ஆரம்பிக்க, என்ன சொல்கிறான் என்று புரியாமல் அவன் முன்சென்று, “இது என்ன நம்பர்” என்றாள்.
“நீதான் கண்டுபிடிக்கணும்” என்று அசட்டையாகச் சொல்லிவிட்டு நடந்தான்.
‘கண்டுபிடிக்கணுமா’ என்று தனக்குள் சொன்னவள், மீண்டும் அவன் முன்னே சென்று, “உங்க ஃபோன் நம்பரா?” என்று கேட்டாள்.
“எந்த ஊர்ல ஃபோன் நம்பர் எயிட் டிஜிட்ல இருக்குது” என்று கேட்டதும், “ஓ, ஆமால! ப்ளீஸ் சொல்லுங்க” என்று கெஞ்சினாள்.
“நல்லா கேட்டுக்கோ! பைவ் த்ரீ செவன் ஒன் டூ த்ரீ நைன் டூ” என்று திரும்பவும் எண்களையே சொன்னான்.
மீண்டும் யோசித்தவள், “இந்த எபிசிடி போட்டுக் கண்டுபிடிக்கணுமா” என்று கேட்க, “இன்னும் நீ எபிசிடி லெவல்தான் இருக்கியா” என்றான் கேலியாக!
“விடுங்க. நானே கண்டுபிடிக்கிறேன்”
“ம்ம் சரி! உன் ஃபோன் நம்பர் சொல்லு” என்று, குறித்து வைத்துக் கொள்ள செல்பேசியைத் பேன்ட், சட்டை பாக்கெட்களில் தேடியவன், “ஐயோ! ஃபோன் கார்ல இருக்கு போல” என்றான்.
‘இப்போ என்ன செய்ய?’ என்பது போல் அவள் பார்க்க, “சரி, நான் சொல்றேன். நீ உன் ஃபோன்ல சேவ் பண்ணிக்கோ” என்றான்.
“என் ஃபோன் வெளியில இருக்கு” என்றாள்.
“பென் இருக்கா” என்று அவன் கேட்க, அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அவனும் பார்த்தான். இல்லை என்று தெரிந்ததும், ட்ரெஸிங் டேபிள் முன்னே சென்றான். அங்கிருந்த லிப்ஸ்டிக் எடுத்து கப்போர்டை திறந்து, “இதுல எழுதி வைக்கிறேன். அப்புறம் சேவ் பண்ணிக்கோ” என்று செல்பேசி இலக்கத்தை எழுதிவிட்டு, லிப்ஸ்டிக்கை அவளிடம் கொடுத்தான்.
வாங்கியவள், “ஒரு லிப்ஸ்டிக் வேஸ்ட்” என்று சலித்துக் கொள்ள, “சரி வாங்கித் தந்திடுறேன்” என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லி, அர்த்தமாக ஓர் புன்னகை செய்தான். அவளும் புன்னகை செய்தாள்.
அவர்கள் பேச்சிலிருந்த பிரியங்களைவிட, புன்னகையில் இருந்த பிரியங்கள் அதிகம்!!
பாண்டியனும் பாவையும் பேசி முடித்து வந்த பின்னும், திருமணம் குறித்த சில விடயங்கள் பேசினார்கள். பின் சிவா வீட்டினர் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கிரி, மீனாட்சி குடியிருப்பின் கீழே சென்று, அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.
வேணிம்மா கேட்டுக் கொண்டிருந்தார். ஆதலால் இப்படி!
வீட்டில், “பாவை வாம்மா” என்று வேணிம்மா அழைத்ததும், வரவேற்பறையில் இருந்த தன் செல்பேசியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள்.
“கொஞ்ச நேரம் நான் படுத்திருக்கேன்” என்று அவர் படுத்துக் கொள்ளவும், “சரி வேணிம்மா” என்றவள், கப்போர்ட்ல் இருந்த இலக்கத்தை தன் செல்பேசியில் ஒவ்வொன்றாக அழுத்தி பாண்டியனை அழைத்தாள்.
மகிந்திரா தாரில் சென்று கொண்டிருந்தவனை, செல்பேசி சத்தம் கலைத்தது. அழைப்பை ஏற்றவன், “ஹலோ யாரு?” என்றான்.
“யாருன்னு கேட்கிறீங்க? இது என் நம்பர்! சேவ் பண்ணிக்கோங்க” என்றாள்.
“சரிங்க” என்று அவன் சொன்ன விதத்தில், சிரித்துக் கொண்டே அழைப்பைத் துண்டித்தாள். அவன் ‘ஹனி’ என்று சேமித்தான். இவள், ‘பாண்டியன்’ என்று!
இருவரின் நாட்களும் திருமண நாளை நோக்கி நகர்ந்தன!

