Kathambari Novels
அத்தியாயம் – 5
கிரி, கிருஷ்ணாம்மா, மீனாட்சி மூவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் காலை சாப்பாட்டை முடித்திருந்தனர்.
அவர்கள் இருந்த அறையிலே சற்றுத்தள்ளி தரையில் அமர்ந்து பாவையும் கௌசியும் சசில இசைப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். அக்கணத்தில் கலை, சங்கர் கடைக்குக் கிளம்பி வந்து நின்றனர்.
“ம்மா நான் கிளம்புறேன்” என்று கலை சொல்ல, “ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் உட்காருங்க. பேசணும்” என்றார் கிருஷ்ணாம்மா.
“என்ன பாட்டி?” என்று கலை கேட்க, இருவரும் அமரும் போதே, “என்ன ம்மா” என்று கிரி கேட்க… பாவை, கௌசி இருவரும் இவர்களது பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தனர்.
“நாளைக்கு பாவையைப் பொண்ணு பார்க்க வர்றாங்க. அப்படியே கல்யாண தேதியும் குறிக்கனும்” என கிருஷ்ணாம்மா ஆரம்பிக்க, “மீனா சொன்னா மா” என்றார் கிரி. அதற்குமேல் எதுவும் பேசவில்லை. விருப்பமும் காட்டவில்லை.
“கிரி எனக்கு ஒரு உதவி வேணும்”
“என்ன இப்படிக் கேட்கிறீங்க? என்ன செய்யணும்னு சொல்லுங்க செய்றேன்”
“பொண்ணு பார்க்க வர்றாங்கள, அதுக்கு எதும் கேட்பாங்க” – மீனாட்சி.
“அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்” என்றார் கிருஷ்ணாம்மா வெடுக்கென்று!
“பேசாம இரு” என்று பட்டென அக்காவிடம் கூறிய கிரி, “நீங்க சொல்லுங்கமா” என்றார் பாந்தமாக அம்மாவிடம்!
“இவன்” என்று சங்கரைக் காண்பித்து, “மாப்பிள்ளை வீட்லருந்து வர்றப்ப இங்க இருக்க கூடாது” என்றார் கிருஷ்ணாம்மா. சங்கர் இருந்தால் ஏதும் பிரச்சனை செய்வானோ என்ற பயம். ஆதலால் இப்படி ஒரு கோரிக்கை!
“அவன் வீட்ல அவன் இருக்க கூடாதா? நல்லாருக்கு” என மீனாட்சி கோபமாக சொல்லிவிட்டு, சாப்பாட்டு மேசையைச் சுத்தம் செய்ய சென்றார். அங்கிருந்து கால்கள் சென்றாலும், காதுகள் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தன.
“நான் எங்கயும் போக மாட்டேன்… இங்கதான் இருப்பேன்” என்ற சங்கர், “ப்பா, கடைக்குக் கிளம்புறேன்” என்று கிளம்பினான். தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தம் இல்லாதது போல் கலையும் கௌசியும் இருந்தனர்.
கிருஷ்ணாமாவிற்கு, ‘ஏன் இப்படி இருக்கிறார்கள்?’ என்ற ஆற்றாமை வந்தது. நல்ல நிகழ்வைப் பற்றிப் பேசும்போது இப்படியா என்ற ஆதங்கமும் வந்தது. ஒரு பெருமூச்சுடன் அவர் கிரியைப் பார்க்க, “ம்மா நீங்க என்ன வேணும்னு சொல்லுங்க” என்றார் கிரி சாந்தமாக!
ஆம், சாந்தமாகத்தான்! பாவையை கிரி எப்படி நடத்துகிறார் என்பது வேறு விடயம்! ஆனால் அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொள்வார்!!
“கிரி! எவ்வளவு சீக்கிரமா கல்யாணம் நடத்த முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நடத்தணும். அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா,” என்று நிறுத்தி, “அமைச்சி கொடுத்திட்டா போதும். எனக்கு நிம்மதி” என்று உணர்ச்சிவசப்பட்டார்.
கிரி, தன் அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
“சங்கர் இருந்த, எதும் பிரச்சனை பண்ணுவானோனு பயமா இருக்கு. அதான்” என்று உண்மையைச் சொல்லி, “அவன் எவ்ளோ விருப்பப்பட்டுக் கேட்டாலுமே பாவையை அவனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னார்.
கிருஷ்ணாம்மா இப்படிச் சொல்வதற்குக் காரணம், பாவையை சங்கருக்குத் திருமணம் செய்து கொடுத்தால், அவளது இசை வாழ்வில் கிரி, கௌசியின் தலையீடு இன்னும் அதிகமாகும்.
மேலும், சங்கர் பாவையை நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் மற்றவர்கள் எப்படி நடத்துவார்கள்? அது கேள்விக்குறிதானே!
எனவே, சங்கர் விருப்பத்திற்கு வேணிம்மா மதிப்பு கொடுக்கவில்லை! இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பாவைக்கு சங்கர் மேல் எந்தவொரு பிடித்தமும் இல்லை என்பதுதான்!!
“எங்களுக்கும் இவளை இந்த வீட்டு மருமகளாக்க கொஞ்சமும் விருப்பமில்ல” என்று தன் மகனைச் சொன்னதற்காக நறுக்கென பேசிய கிரி, “மாப்பிள்ளை வீட்லருந்து வர்றப்ப… சங்கர் இங்க இருக்க மாட்டான்” என்று நம்பிக்கையாக சொன்னார்.
கிரி இப்படிச் சொல்லக் காரணம், சங்கரைப் பாவைக்குத் திருமணம் செய்து கொடுத்தால், அவள் இந்த வீட்டுப் பெண் ஆகிவிடுவாள். பின்னர் இந்த வீட்டில் அவளுக்கென்று ஒரு உரிமை கிடைக்கும்.
அது கௌசியின் இசை வாழ்வில் தலையீடு செய்யும் அளவிற்கு பாவைக்குத் தைரியத்தைக் கொடுத்துவிட்டால்?! ஆதலால், சங்கரின் விருப்பத்திற்கு கிரி மதிப்பு கொடுக்கவில்லை!!
எல்லாவற்றையும் பாவை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.
அம்மாவின் முகத்தைப் பார்த்த கிரி, “எப்போ வர்றாங்க ம்மா” என்று கேட்க, “நாளைக்கு பதினொன்றைக்கு மேல. அப்புறம் நாளைக்கே கல்யாணத் தேதி குறிச்சிடுவோம்” என்றார்.
“ம்ம்” என்றவர், “கல்யாணம் நடத்திறதைப் பத்தி…” என கேட்டதும், சாப்பாட்டு மேசை அருகில் நின்ற மீனாட்சி, கலை, கௌசி, பாவை என்று எல்லாரும் கிருஷ்ணம்மாவைப் பார்த்தனர்.
“என் சேவிங்ஸ் வச்சி நடத்திருவேன். அப்புறம் எங்கிட்ட இருக்க நகைய…” என சொல்லி முடிக்கும் முன், “ம்மா! அப்ப கௌசிக்கு? ரதிக்கு?” என்று சுள்ளென்று கேள்வி கேட்டார் மீனாட்சி!!
“மீனா! பணமோ, நகையோ மூணு பேருக்கும் சமமா பிரிச்சிக் கொடுப்பேன்” என்றார் வேணிம்மா சட்டென!
ஓர் அமைதி நிலவியது.
“ம்மா” என்றார் கிரி. ‘என்ன?’ என்பது போல் கிருஷ்ணாம்மா பார்த்தார்.
“கல்யாணம் சிம்பிளா பண்ணலாம்”
“நாம எப்படி அதை முடிவு பண்ண? பையன் வீட்ல என்ன சொல்வாங்களோ?”
“நீங்க பேசிப்பாருங்க மா. கல்யாண வேலை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க எதுக்காகவும் அலைய கூடாது. ஆனா இந்த கல்யாணம் சிம்பிளாதான் நடத்தணும்” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.
மேலும், “நகை உங்க இஷ்டப்படி பிரிச்சுக் கொடுத்துகோங்க” என்று சொல்லி செல்லப் போகும் போகுது… கௌசி, தந்தையைப் பார்த்தாள். ‘என்ன?’ என்பது போல் கிரி கண்களால் கேட்டார்.
‘அப்புறமாகச் சொல்கிறேன்’ என்று கௌசியும் கண்களால் பேச, ‘சரி’ என்பது போல் செல்ல, மீனாட்சி மதிய சமையலுக்கான வேலை பார்க்கச் சென்றார்.
மகன் பேச்சிலிருந்து ஒன்று மட்டும் கிருஷ்ணாம்மாவிற்குப் புரிந்தது. அது, கௌசிக்கு நடந்தது போல் பாவைக்கும் திருமணம் நடத்திட மனமில்லை என்பதுதான்!
இருந்தாலும், தான் அலைந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று திருமணப் பொறுப்பையெல்லாம் ஏற்றுக் கொண்ட மகனை நினைத்து சற்று சந்தோசமே அவருக்கு!
கூடவே கல்யாணம் நடத்துவது பற்றி மாப்பிள்ளை வீட்டாரிடம் எப்படிப் பேச? அவர்கள் எளிமையான திருமணத்தை ஏற்று கொள்வார்களா? என்ற கவலை வந்ததும் மனம் ஒருமாதிரி இருந்ததால், “பாவை… கோயிலுக்குப் போலாமா?” என்று கேட்க, “ம்ம்” என்று தலையசைத்து எழுந்தாள்.
“கௌசி நீ வர்றியா?” என்று கேட்டதும், “இல்லை பாட்டி! நான் இவங்களோட சாயங்காலம் போயிக்கிறேன்” என்று கலையைக் காட்டிட, “சரிம்மா” என்று சொல்லி, பாவையை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றார்.
கௌசி சொன்னதைக் கேட்டுக் கொண்டே… அவளைப் பார்த்துக் கொண்டே வேணிம்மாவுடன் பாவை சென்றாள்!
அறைக்குள் வரவும், “எல்லா நல்லபடியா நடக்கும். இனி சந்தோசமா இருப்ப” என்று பாவையின் கன்னத்தைப் பிடித்து கிருஷ்ணாம்மா சொல்லவும், அவள் தலையாட்டிச் சிரித்தாள்!
“சரி கிளம்பு” என்று அவர் சென்றார்.
பாவை இதயத்தில் பாண்டியனை நினைத்து சாரல் அடித்தது. குனிந்து இதயத்தைப் பார்த்தாள்! கைப்பிடியளவு இதயத்திற்குள் காதல் கால் முளைத்து ஓடிக் கொண்டிருந்தது. இனிமேல் அதைக் கட்டி வைக்க முடியாது என்பதால், கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
சுருக்கமாக பாண்டியன் பாவையின் ஜீவஸ்வரமாகிப் போனான்!!
******************
இதே நாளின் மாலை நேரத்தில் சிவா வீட்டில்… மதியழகன், நளினி இருவரும் வீட்டில் இருந்தனர். பிரவீனும் இருந்தான். அனைவரும் காஃபி குடித்தபடி பேசி கொண்டிருந்தனர். எல்லாம் சிவாவின் திருமணம் பற்றிய பேச்சுதான்!
“அப்பா, அம்மாவையும் நாளைக்கு வரச் சொல்லலாமா மாமா” என்று பிரவீன் கேட்டதும், “ம்ம்ம்” என்று மதி சொல்லும் போதே, சிற்றுண்டியுடன் செண்பகம் வந்தார்.
“அப்ப நான் வீட்ல சொல்லிடுறேன்” என்று பிரவீன் சொல்ல, “சிவாப்பா நாம போய் சம்பந்திகிட்ட சொல்லிக் கூப்பிடலாம். அதான் மரியாதை” என்றார் செண்பகம்.
“சரி” என்றவர், “அம்மா அப்பா வீட்ல இருக்காங்களா மாப்பிள்ள” என்று கேட்க, “இருக்காங்க மாமா” என்று பிரவீன் சொன்னதும், “எப்ப போய் சொல்லலாம் செண்பகம்?” என்று மதி கேட்டார்.
“சிவா வெளிய போயிருக்கான். அவன் வந்ததும் போயிட்டு வந்திடலாம்” என காஃபியைக் குடித்தார் செண்பகம்.
“அண்ணா எங்கம்மா?” என்று நளினி கேட்டாள்.
“எங்க போறேன்னும் சொல்லலை. ஆனா மத்தியானமே போனான். இன்னும் காணோம்” என்று வாசலைப் பார்த்தவர், “சிவா… மேரேஜ் சிம்பிளா இருந்தா போதும்னு சொன்னான்” என்றார் செண்பகம்!
‘அது தெரிஞ்சதுதான!’ என்பது போல்தான் மூவரும் இருந்தனர்.
“ஆனா அவங்க பெரிய குடும்பம். இதுக்கு ஒத்துப்பாங்களானு தெரியல” என கொஞ்சம் சஞ்சலம் கொள்ள, “நாளைக்குப் பேசிக்கலாம்” என்றார் மதி.
அவருக்குப் பையனின் விருப்பம்தான் முக்கியம். அவருக்கு மட்டுமல்ல, மற்ற மூவருக்குமே சிவாவின் விருப்பம்தான் முக்கியம்!
சிற்றுண்டி சாப்பிடும்போது சிவா வந்தான். உள்ளே நுழைந்ததும், “அண்ணா எங்க போயிருந்த?” என்று நளினி கேட்க, மற்றவர்கள் அவன் கையில் இருந்த போன்சாய் மரத்தைப் பார்த்தனர்.
“இது வாங்கப் போயிருந்தேன்” என்று கையிலிருந்த போன்சாய் மரத்தைக் காட்டிவிட்டு வேகமாக அவனது அறைக்குள் சென்றுவிட்டான்.
‘இன்றைக்கு, ஏன் இவன் இப்படி?’ என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் ஒரு முடிவுக்கு வந்தது போல் நால்வரும் எழுந்து அவனது அறைக்குள் சென்றனர்.
சிவா அறை பால்கனியில், கண்ணாடிக் கதவினருகே மதி நின்று கொண்டார். மாலை நேரத்தின் காற்று அங்கிருந்த அனைத்து வகை போன்சாய் மரங்கள் மீது பட்டு அனைவரையும் தழுவிச் சென்றது.
கையில் தொட்டியுடன் சிவா நின்றான். அவனைச் சுற்றி நளினி, பிரவீன் மற்றும் செண்பகம் நின்றனர்!
“இது என்ன கண்ணா?” என்று செண்பகம் கேட்டார்.
“இது போன்சாய்” என்றான்.
“அது தெரியாதா? என்ன வெரைட்டின்னு சொல்லுடா” என்றான் பிரவீன்.
“அது… ” என்று தயங்கியவன், “இருங்க வச்சிட்டு சொல்றேன்” என்று சொல்லி, அவர்களிடமிருந்து விலகி… அதை வைப்பதற்குத் தகுந்த இடம் தேடினான்.
அண்ணன் அருகில் சென்ற நளினி, அவன் கையிலிருந்த தொட்டியை வாங்கி அதில் இருந்த மரத்தின் பேரை வாசித்து, “ம்மா… இது பேரு ஹனி லோகஸ்ட்” என்றாள் செண்பகத்தை நோக்கி!
“நேத்து ஐபேட்ல பார்த்தோமே! அதானா?” என்று செண்பகம் கேட்டார்.
“ஆமாம்மா! அதேதான்” என்றான்!
“இப்ப எதுக்கு இத வாங்கிட்டு வந்த?” என்று நளினி கொக்கி போன்ற கேள்வி கேட்க, “வளக்கிறதுக்குத்தான்” என்று அதில் மாட்டாமல் பதில் சொன்னான்.
அவள் நம்பவில்லை! ஏன்… அங்கிருந்த யாரும் நம்பவில்லை!!
“ம்மா! வேற எதுக்கோ வாங்கிட்டு வந்திருக்கான்” என்று நளினி சொன்னதும், பிரவீனுக்கும், செண்பகத்திற்கும், மதிக்கும் புரிந்தது.
மனைவியாக வரப் போகிறவள் பெயரையும், மரத்தின் பெயரையும் சம்பந்தப் படுத்துகிறான் எனப் புரிந்ததால் மூவரும் லேசாகத் சிரித்தனர்.
“அண்ணா சொல்லு… சொல்லு… எதுக்கு இப்ப இத வாங்கிட்டு வந்த?” என்றாள் நளினி விடாமல்! “ஆமாடா! சொல்லியே ஆகணும்” என்று பிரவீனும் பிடித்துக் கொண்டான்.
மகள் மற்றும் மருமகனைப் பார்த்து, “போதும் போங்க” என விளையாட்டாய் விரட்டினார் செண்பகம். இருந்தும் இருவரும் அங்கிருந்து நகரவில்லை. அவர் சிவாவின் அருகில் வந்து, “கண்ணா” என்றார் கரிசனமாக!
“ம்ம்” என்றான் கவனமாக!
“ஒன்னு கேட்கணும்” என்றார் கருத்தாக!
“சொல்லுங்கம்மா” என்றான் கனிவாக!
அவன் கையில் வைத்திருந்த தொட்டியைக் காட்டி, “இதுக்கு… எதும் ஸ்பெஷல் கேர் எடுக்கணுமா? இல்ல எல்லா மரம் மாதிரிதானா?” என காலை வாரினார்!
பிரவீனும் நளினியும் சிரித்தனர். இதைக்கேட்டு, கண்ணாடிக் கதவின் அருகே நின்ற மதியும் சிரிக்க, “ம்மா! நீங்களுமா?” என்று சிவாவும் சிரித்துவிட்டான்.
அவன் சிரிப்பதைப் பார்த்தவர், “இப்படியே சந்தோஷமா இரு கண்ணா” என வாழ்த்திவிட்டு சென்றார். அவருக்கு மட்டுமல்ல! சிவாவின் சந்தோஷம் அந்த வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் மிகவும் முக்கியம்!!
அவர்கள் சென்றதும் கையிலிருந்த ‘ஹனி லோகஸ்ட்’ போன்சாயை பலகை மேல் வைத்துவிட்டு, அதன் முன் அமர்ந்தான்.
பாவை முகம் கண்முன் வந்து நிற்க, ‘நீ எப்படினு கூட தெரியாது. ஆனா, நான் இப்படி இருக்க காரணம் நீதான் ஹனி’ என்று சொல்லிக் கொண்டான்.
உடனே பாண்டியன் இதயம் பாவையை நினைத்து தாளம் போட்டது! குனிந்து இதயத்தைப் பார்த்தான்!!
கைப்பிடியளவு இருக்கும் இதயத்திற்குள் காதல் அடைந்து கிடக்க முடியாமல், தலைதூக்கி வெளியே வர பார்த்தது. இனிமே அதைத் தட்டி வைக்க முடியாது என்பதால், மெல்ல தன் கரங்களால் தட்டிக் கொடுத்துக் கொண்டான்.
சுருக்கமாக பாவை பாண்டியனின் ஆணிவேராகிப் போனாள்!!

