Kathambari Novels
அத்தியாயம் – 2
கிருஷ்ணாம்மா வீடு! ஏறக்குறைய இரண்டு கார்களும் ஒரே நேரத்தில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளே நுழைந்தன. அனைவரையும் இறக்கிவிட்டு, சங்கர் காரை நிறுத்துமிடத்தில் விடப் போனான்.
வேணிம்மா பாவையின் உதவியுடன் இறங்கிக் கொண்டார். அனைவரும் மின்தூக்கி உதவியுடன் வீடு இருக்கும் தளத்திற்குச் சென்றனர்.
அந்தத் தளத்தில் மொத்தம் நான்கு வீடுகள். அதில், ஒரே வரிசையில் உள்ள இரண்டு வீடுகளை வாங்கி இடைப்பட்ட சுவர்களை எடுத்துவிட்டு ஒரு பெரிய வீடாக மாற்றியிருந்தனர்.
கதவு திறக்கப்பட்டதும், “கௌசி வெயிட் பண்ணு. திருஷ்டி எடுக்கணும்” என அவள் அம்மா உள்ளே சென்றதும், அவர் பின்னேயே கிரி, மீனாட்சி மற்றும் கலை சென்றுவிட்டனர்.
சற்று நேரத்தில் கையில் உப்பு எடுத்துக் கொண்டு வந்து கௌசிக்கு திருஷ்டி கழித்து, “இப்ப போ” என்றதும் அவள் உள்ளே செல்ல, அவ்வளவுதான்! அவரும் சென்றுவிட்டார்!
கௌசிக்கு பின் நின்ற பாவையைக் கவனிக்கவே இல்லை. அப்படி சொல்லக் கூடாது. கவனிக்க விரும்பவில்லை. அதுதான் சரியான வார்த்தை பிரயோகம்.
“இரும்மா. பாட்டி போய் எடுத்திட்டு வர்றேன்” என்று கிருஷ்ணவேணி சொல்ல, “இருங்க. நான் போய் எடுத்திட்டு வர்றேன்” என்று காரை நிறுத்திவிட்டு வந்த சங்கர் உள்ளே சென்றான்.
‘இவன் வேறு’ என்று கிருஷ்ணாம்மா நினைக்கும் போதே, சங்கர் வந்து நின்று, “இந்தாங்க” என்று உப்பைக் கொடுக்க, அவர் வாங்கிக் கொண்டதும், “தேனு ஹேண்ட்பேக்-க கொடுத்திடு” என்று பாவையை நோக்கி கைநீட்டினான்.
ஓ! ‘தேனு’! எல்லோருக்கும் பாவை என்றால், இவனுக்கு மட்டும் தேனு!!
அந்த அழைப்பில் விருப்பமில்லை என்பது போல் பாவை முகம் சுழித்ததைக் கண்ட கிருஷ்ணாம்மா, “மரியாதையா உள்ள போ” என்று சங்கரிடம் சொல்ல, அவன் உள்ளே சென்றுவிட்டான்.
பாவைக்குத் திருஷ்டி எடுத்து, “போ… போய் குளிச்சிட்டு பூஜைக்கு ரெடியாகு” என்றதும் தலையாட்டிவிட்டு அவளது அறைக்குச் சென்றாள்.
கிருஷ்ணவேணி வரவேற்பறையைக் கடந்து செல்லும் போது, கிரி சங்கரை திட்டிக் கொண்டு இருந்தார். ‘ஏன்? எதற்கு?’ என்று தெரியும். ஆதலால் எதுவும் கேட்காமல் அறையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், “பாட்டி” என்று வந்து கௌசி, அவரிடம் ஒட்டிக் கொண்டாள்.
“என்னம்மா?” என்றார் பாசமாக!
“எல்லோரும் சொன்னாங்க. நீங்க மாட்டும் சொல்லல”
“என்ன சொல்லல?”
“எப்படிப் பாடினேன்னு?”
“உனக்கென்ன? நல்லா பாடின கௌசி” என்றதும் அவரைக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“சரி! போ, போய் குளிச்சிட்டு வா! பூஜை பண்ணனும்” என்றார்.
“இதோ ஐஞ்சு நிமிசத்தில வந்திடுவேன்” என்று அறையை நோக்கி ஓடினாள்.
மற்றவர்களுக்கு எப்படியோ?! ஆனால் அவரைப் பொறுத்த வரையில் பாவை மற்றும் கௌசி இருவரும் ஒன்றே! பாட்டையும் பாசத்தையும் ஒரே அளவில் இருவருக்கும் தருவார்!!
கௌசி போனதும் கிருஷ்ணவேணி அவரது அறைக்குள் நுழைந்தார். அது பாவைக்கும் அவருக்குமான அறை. அரங்கத்தில் அமர்ந்திருந்தது, காரில் பயணம் செய்தது அலுப்பாக இருந்தது. அப்படியே அங்கிருந்த திவானில் சாய்ந்து அமர்ந்தார்.
அவரின் நினைவலைகளில் பாவையைப் பற்றிய எண்ணங்கள்.
சுருக்கமாக பாவை வேணிம்மா பேத்தி! விரிவாக சொல்ல வேண்டுமானால், கிருஷ்ணவேணியின் தங்கை லட்சுமியின் மகள் வழிப் பேத்திதான் இந்த தேன்பாவை!
ஆறு மாத குழந்தையாக இருக்கும் போது பாவையின் வாழ்வில் ஓர் இழப்பு! சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அப்பா அம்மா இருவரையும் ஒரே நாளில் இழந்தாள்!!
அன்று பாவை லட்சுமி பாட்டி வீட்டில் இருந்ததால் பிழைத்திருந்தாள். அன்று மட்டுமல்ல, அதன் பிறகும் அவர் வீட்டில், அவர் கவனிப்பில்தான் வளர்ந்தாள்.
‘தான் தனியாக இருக்கிறோம்’ என்ற உணர்வு லட்சுமிக்கு வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்ற உணர்வு லட்சுமிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கிருஷ்ணவேணி அடிக்கடி தங்கையைப் பார்க்க திருச்சி வந்துவிடுவார்.
இத்தனைக்கும் அவர் கச்சேரிகளில் பரபரப்பாக இருந்த காலகட்டம் அது!
அப்படி வரும் போதெல்லாம் பாவைக்கு ஒன்றிரண்டு வரிகள் பாடுவதற்குச் சொல்லிக் கொடுப்பார். அந்த வயதில் அவள் இசை கிரகிக்கும் ஆற்றல், குரல் வளம் அவரை ஈர்த்தது. இது நடக்கும் போது பாவையின் வயது நான்கு!
அடுத்த ஒருவருடத்தில் கிருஷ்னவேணிக்கு பாவை மீதான ஈர்ப்பு பிடித்தமாக மாறியது. இருவருக்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு உருவானது!!
ஐந்து வயது குழந்தையாக இருக்கும் பொழுது பாவையின் வாழ்வில் மீண்டும் ஓர் இழப்பு. தன்னை கவனித்து வந்த லட்சுமி பாட்டியையும் இழந்தாள்.
ஒரே மகளை இளம் வயதிலே இழந்த துக்கம்! ஒரே நாளில் மகள், மருமகனை இழந்திருந்த வேதனை! கணவர் இல்லாமல் வீட்டைக் கவனித்து, பாவையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு! ‘எப்படி இந்தப் பெண்ணை வளர்த்து, கரை சேர்ப்பேன்?’ என்ற எதிர்காலம் பற்றிய மலைப்பு!
அந்த வயதில் அவ்வளவு பாரம் தாங்கிக் கொள்ள முடியவில்லை போல! பாவையைத் தனியாக விட்டுச் சென்றுவிட்டார்.
விடயம் அறிந்து திருச்சி வந்த கிருஷ்ணவேணிக்கு வருத்தம்தான். இருந்தும் தங்கை இறுதிச் சடங்குகளை முன்னின்று முடித்து, பாவையின் பொறுப்பை அவள் தந்தை வழி சொந்தங்களிடம் ஒப்படைத்துவிட்டு, கிருஷ்ணவேணி சென்னைக்கு வந்துவிட்டார்.
அதன்பிறகும் அடிக்கடி கிருஷ்ணவேணி திருச்சி வந்துவிடுவார். பாவையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்… ஆசை! இரண்டு பாவையைப் பார்க்காமல் இருந்தால் வந்துவிடும் ஏக்கம்!!
அப்படி வரும் பொழுதெல்லாம், அவள் தந்தை வழிச் சொந்தங்கள் அவளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று தெரிந்தது. இரண்டு மூன்று முறை ‘ஏன்?’ என்று கேள்வி கேட்டுப் பார்த்தார்.
எந்தக் கேள்விக்கும், அவர்களிடம் சரியான பதில் இல்லை என்று தெரிந்தது. அதைவிட அவளைச் சரியாக கவனிக்க மனம் இல்லை என்று புரிந்தது.
கிருஷ்ணவேணி ஒரு முடிவெடுத்தார். ‘பாவையை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளலாமா?’ என்று அவளது தந்தை வழிச் சொந்தங்களிடம் கேட்டார். ‘உரிமை பட்டவர்களிடம் இப்படிக் கேட்கிறோமே!? அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?’ என்ற ஒரு பயம் இருந்தது.
ஆனால் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏன்? அதுதான் தங்கள் எதிர்பார்ப்பு என்பது போல் இருந்தனர். ‘இங்கே அவளுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று கிருஷ்ணவேணிக்குப் புரிய வைத்தனர்.
அதன்பின் கிருஷ்ணவேணி தாமதிக்கவில்லை! சற்றும் யோசிக்கவில்லை! தன் வீட்டில் யாரிடமும் கேட்கவில்லை!!
ஆறு வயது குழந்தையாக இருக்கும் பொழுது… கிருஷ்ணவேணி பாவையை சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்!
‘அவளது அப்பா வழிச் சொந்தங்கள் இருக்கும் பொழுது, எதற்கு இங்கே கூட்டி வர வேண்டும்?’ என்று கிருஷ்ணவேணி கணவர், கிரி மற்றும் அவர் மனைவி, மீனாட்சி கேட்டனர்.
‘என் தங்கையின் பேத்தி. எனக்கும் பேத்திதான். நான்தான் வளர்ப்பேன்’ என தெளிவாகச் சொல்லி கிருஷ்ணவேணி முடித்துவிட்டார். அதற்குமேல் யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
திருச்சி செல்லும் போது மட்டும் பாவைக்குப் பாடச் சொல்லிக் கொடுத்தவர், சென்னை கூட்டி வந்ததும் கௌசிக்கு கற்றுக் கொடுப்பது போன்று கர்நாடக இசையை முறைப்படி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அது கிருஷ்ணாம்மா வீட்டில் உள்ளோருக்கு உறுத்தலாக இருந்தது.
நிகழ்கணத்தில் பாவை குளியலறைக் கதவைத் திறந்த சத்தத்தில், தன்னை நினைவலைகளிருந்து மீட்டுக் கொண்டார் கிருஷ்ணாம்மா!!
சற்று நேரத்தில் அனைவரும் பூஜை அறையில் கூடி இருந்தனர்.
பூஜை அறை! பெரிதாக இருந்தது. மூன்று பக்க சுவர் முழுவதும் வெளிறிய பழுப்பு நிறத்தில் டைல்ஸ். அதில் ஆங்காங்கே மாடங்கள் போன்ற அமைப்பு. அதில் சிறு சிறு அகல்விளக்குகள்.
ஒரு பக்க சுவரை ஒட்டி மூன்று படிக்கட்டுகள். அடர்பழுப்பு நிறத்தில் டைல்ஸ். அதில் முதல் அடுக்கில், அலங்காரம் மற்றும் மாலையுடன் கடவுள் சிலைகள். அடுத்த அடுக்கில் பூஜைக்குத் தேவையான பொருட்கள்.
மேலிருந்து இந்த மூன்று பக்கத்திற்கும் வெளிச்சம் தெரியும் வண்ணம், அலங்கார விளக்குகள்.
பெரிய குத்துவிளக்கு ஒன்று எண்ணெய் ஊற்றித் தயார் நிலையில் இருந்தது. அகர்பத்தியிலிருந்து வரும் புகை அங்கிருந்த கடவுள் சிலைகளையெல்லாம் தழுவி வந்ததில் அந்த அறை முழுவதும் ஒரு அற்புத மணம் பரவியது.
மீனாட்சி விளக்கேற்றி தீபாராதனைக் காட்டினார். கிரி, கிரியின் மனைவி இருவரும் சாமி கும்பிட்டுச் சென்றனர். தீபாராதனைத் தட்டிலிருந்த திருநீர் எடுத்து கௌசி, கலை மற்றும் சங்கரின் நெற்றியில் மீனாட்சி சின்ன கீற்று வைத்துவிட்டார். பின் அவர்களும் வெளியே சென்றனர்.
அங்கே நின்ற பாவையை அவர் மறந்துவிட்டார் போல! அப்படிச் சொல்லக் கூடாது! அவளைப் பற்றி அவர் நினைக்கவே மாட்டார் என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகம்!!
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பாவையைப் பார்த்து, “போம்மா, போய் வேண்டிக்கோ” என்று அவளது வேணிம்மா சொன்னதும், ‘ம்ம்’ என்று தலையாட்டிவிட்டுச் சென்றவள்… கடவுளின் முன் மண்டியிட்டு வேண்டினாள்.
பின் தீபாராதனை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டதும், வேணிம்மா வந்து திருநீர் வைத்துவிட்டார். சிரித்துக் கொண்டே எழுந்தாள். இருவரும் சேர்ந்து சாப்பிட வந்தனர்.
அனைவரும் சாப்பாட்டு மேசையில் கூடியிருந்தனர். முதலில் மீனாட்சி தன் அம்மாவிற்குத் தேவையானதைக் கவனித்தார்.
“நான் பார்த்துகிறேன் மீனா. நீ பிள்ளைங்களை கவனி” என்றதும், மீனாட்சி மற்றவர்களுக்குப் பரிமாறினார். இங்கேயும் மற்றவர்கள் என்பது, கிரி… கிரி மனைவி… கலை… கௌசி… சங்கர் மட்டுமே!
மறந்தும் பாவைக்குப் பரிமாற மாட்டார்!! மீனாட்சி அவர்களுக்குப் பரிமாறி முடித்ததும் பாவை தனக்குத் தேவையானதை எடுக்க ஆரம்பித்தாள்.
கிருஷ்ணாம்மா சாப்பிட்டுக் கொண்டே, “பாவைக்கு ஒரு வரன் வந்திருக்குடா கிரி” என்றதும், “ம்ம்” என்றார் கிரி.
“எதுக்கு பாட்டி? நான் இருக்கேன்ல! ஏன் வெளிய பார்க்கிறீங்க? ஆறு மாசமா கேட்டுக்கிட்டு இருக்கேன். யாரும் அதைப் பத்தி யோசிக்கிறதே இல்ல” என்று சங்கர் ஆதங்கப்பட்டான்.
சட்டென கோபம் வந்து அருகிலிருந்தவன் தோளில் கிருஷ்ணாம்மா அடிக்க, “ம்மா, இப்படிக் கோபப்பட்டு அடிக்காதீங்க. வளர்ந்த பையன்” என்று மீனாட்சி கண்டனம் தெரிவித்தார்.
“அதான் அவ பிடிக்கலைனு சொல்லிட்டாள. அப்புறம் எதுக்கு இவன் இப்படிப் பேசிக்கிட்டு இருக்கான்” என்றார் எரிச்சலுடன்!
பாவைக்கு ஒருமாதிரி அசௌகரியமாக இருந்தது. தலையை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
“ம்மா நீங்க சொல்லுங்க” என்றார் கிரி.
“அதான்டா! ஒரு வரன் வந்திருக்கு. பையன் பேரு சிவபாண்டியன். குடும்பம் சென்னையிலதான் இருக்கு. கூடப் பிறந்தது ஒரே ஒரு தங்கச்சி. கல்யாணம் ஆயிடுச்சாம். ஜாதகப் பொருத்தம் பார்க்கக் கொடுத்திருக்கேன்” என்றார்.
“ம்ம்” என்றார். அவ்வளவுதான் கிரியின் எதிர்வினை! யாரவன்? என்ன வேலை பார்க்கிறான்? எங்கிருக்கிறான்? என்று எந்த கேள்வியும் இல்லை. இருந்தும் கிருஷ்ணவேணி விவரங்கள் சொல்ல ஆரம்பித்தார்.
“பார்ட்டி லான் வச்சி பையனோட அப்பா பிசினஸ் பண்றாரு! பையன் போட்டோகிராபர்”
“போட்டோகிராபரா??” என்ற ஒரு கேள்வி மீனாட்சியிடம் இருந்து!
“சாதாரண போட்டோகிராபர் இல்ல மீனா! நேச்சர் போட்டோகிராபர்” என்று ஆரம்பித்த கிருஷ்ணாம்மா, சிவபாண்டியன் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். பாவையும் கேட்டாள்!
அவர் சொல்லி முடித்ததும் கௌசியும் கலையும் பேசியபடியே சாப்பிட்டனர். கிரி மற்றும் அவரது மனைவி ஒருபுறம் பேசிக் கொண்டிருந்தனர். மீனாட்சி சமயலறைக்குச் சென்றுவிட்டார்.
இப்பொழுதும் பாவையின் பார்வை மொத்தமும் கௌசி மீதுதான் இருந்தது. பாவையைப் பார்த்தபடி சங்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ஆறு வயதாக இருக்கையில் இந்த வீட்டிற்கு வந்தாள். அன்றிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். மற்றவர்களைப் போல் அல்லாமல் பாவையுடன் நன்றாகப் பேசுவான். கவனித்தும் கொள்வான்.
பருவ வயதிற்குப் பிறகு சங்கரது கவனிப்பு காதலாக மாறியது!
ஆறு மாதத்திற்கு முன்னால் கௌசிக்கும் கலைக்கும் திருமணம் நடந்ததும், கிருஷ்ணவேணி பாவைக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார். அது தெரிந்ததும், பாவையைத் தனியே அழைத்து சங்கர் தன் காதலைச் சொன்னான்.
அவனிடம் எதுவும் சொல்லாமல், வேணிம்மாவிடம் சென்று ‘அவனது காதல்’ பற்றிச் சொல்லிவிட்டாள். மேலும் அதில் தனக்குத் துளியும் விருப்பமில்லை என்றும் சொன்னாள்.
அன்று வீட்டில் பெரிய வாக்குவாதம் நடந்தது. கடைசியில், ‘யாருக்கும் ‘உன் விருப்பத்தில் இஷ்டமில்லை. ஆதலால், இதை மறந்துவிடு’ என்று சங்கரிடம் சொல்லி, அந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
ஆனால் சங்கர் தன் காதலை மறக்கவில்லை! காதலிப்பதை நிறுத்தவில்லை! ஒரு தலைக் காதல் தொடர்ந்தது!!
கண்ணியமான முறையில் ‘அவளைத் திருமணம் செய்து வையுங்கள்’ என்று வீட்டில் உள்ளோரிடம் இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கிறான்.
சில நேரம் அமைதியாக கடந்து விடுவார்கள். பல நேரம் கோபம் கொண்டு, ‘இப்படி நடந்து கொள்ளாதே’ என்று கண்டிப்புடன் சொல்லுவார்கள்.
பாவை விருப்பமில்லை என்று சொன்ன பின்பும், ‘அவளைத்தான் திருமணம் செய்ய வேண்டும்’ என்று சொல்பவனைப் பார்த்து வேணிம்மாவிற்கு கோபம் வரும். அப்படி வந்தால் சட்டென அடித்துவிடுவார்.
இன்றும் அதேதான் நடந்தது!
பாட்டியிடம் எத்தனை அடி வாங்கினாலும், பாவை மீதான காதல் ஆழமானது என்ற ரீதியில் சங்கர் காதலித்துக் கொண்டிருக்கிறான்.
சில நிமிடங்கள் கழித்து கலையும், கௌசியும் கிளம்பினார்கள். அடுத்ததாக சங்கர் எழுந்து சென்றான். பின் பாவையும் வேணிம்மாவும் சாப்பிட்டு முடித்து அறைக்குச் சென்றனர்.
பாவை போவதையே கிரி, கிரி மனைவி, மீனாட்சி பார்த்தனர். அவர்களுக்கு ஏன் பாவையைப் பிடிக்கவில்லை?
முதலில் பாவை இந்த வீட்டுப் பெண் அல்ல! தன் அம்மாவின் தங்கை பேத்தி என்ற எண்ணம் அவர்களது மனதில் அழுத்தமாகப் பதிந்து இருந்தது. அதை அவர்களது பிள்ளைகளின் மனதிலும் பதித்து இருந்தார்கள்.
சங்கர் தவிர!!
கிருஷ்ணாம்மா மற்றும் அவர் கணவர் சம்பாத்தியம்தான் இந்த வீடு! அவரது இசை பின்புலம் ஏதுமில்லாமல் இசையை முறைப்படி கற்றுக்கொண்டு இந்த நிலைக்கு வந்திருப்பவர். இந்தப் புகழ் அடைந்திருப்பவர்.
சுருக்கமாக முதல் தலைமுறை இசைக் கலைஞர்!!
அடுத்த தலைமுறையான மீனாட்சி இசையை முறையாக படித்திருந்தாலும், இசைத் துறையில் அம்மாவைப் போல் காலூன்ற முடியவில்லை.
கிருஷ்ணவேணியின் கணவர் மிருதங்க வித்வான். புகழ் பெற்ற கலைஞர் இல்லையென்றாலும் ஓரளவு பெயர் பெற்றிருந்தார். தன் வாசிப்பை மகன் கிரிக்கு முறைப்படி சொல்லிக் கொடுத்தார். எனினும், கிரியால் இசையில் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.
ஆக, இரண்டாம் தலைமுறை இசைக் கலைஞர்கள் கிருஷ்ணாம்மா அடைந்த புகழை அடையவில்லை. அவர் இசை வாரிசாக யாரும் அறியப்படவில்லை! அதில் அவர்களுக்குப் பெரிய வருத்தம் உண்டு!!
இந்த இசைக் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையாக வந்தவர்கள்… சங்கர், கௌசி, கலை, ரதி!
இதில் சங்கர் மற்றும் கலை… மிருதங்கம் வாசிக்க கற்றுக் கொண்டார்கள். ஆனாலும் அதில் தனித்துவமாக ஜொலிக்க முடியவில்லை.
இப்பொழுது இருவரும் சேர்ந்து இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். அவர்களின் கவனம் முழுவதுமே, அதை மென்மேலும் வளர்ப்பதுவே!
ரதி, மீனாட்சியின் மகள்! அவளுக்கு இசை மீது ஈடுபாடு இல்லை என்பதால், விடுதியில் தங்கி வேறு துறை சார்ந்த படிப்பில் கவனம் செலுத்துகிறாள்.
கடைசியில் கௌசல்யா கிரிதரன். இப்போது கௌசல்யா கலையரசன்! இசை மீது அவளுக்கு இருக்கின்ற நாட்டம் அளப்பரியது. அதற்கு ஈடு கொடுத்திடும் வண்ணம், அவளது குரல்! அது அவள் இசை உலக பயணத்திற்கான வரம்!!
அவளின் இசை அறிவு, இனிக்கும் குரல், இசையின் மீதான ஈடுபாடு… அவளை கிருஷ்ணாம்மாவின் இசை வாரிசாக உருவெடுக்க வைக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில்தான் கிருஷ்ணாம்மா பாவையை சென்னைக்கு அழைத்து வந்தார். அதுமட்டுமின்றி கௌசல்யாவிற்குக் கற்றுக் கொடுப்பது போல் பாவைக்கும் கர்நாடக இசையைக் கற்றுக் கொடுத்தார்.
கௌசல்யா போல அதே இசை அறிவு, அதே இனிக்கும் குரல், அதே ஈடுபாடு பாவைக்கும் உண்டு! அன்று அவர்கள் உறுத்தலுக்கான காரணம் இதுதான்! இதுமட்டும்தான்!!
இப்படிச் சென்றால் கிருஷ்ணாம்மாவின் வாரிசு யார் என்ற கேள்வி வருமோ? இருவருமே அவர் இசை வாரிசாக அறியப்படுவார்களா? பாவை, கௌசியை முன்னேறி சென்று விடுவாளோ? என்று அவர்களுக்குள் நிறைய கேள்விகள்!
சுருக்கமாகச் சொன்னால் சுயநலம்! பேரும், புகழும் தங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற சுயநலம்!!
‘பாவைக்கு யாருமில்லை’ என்று வளர்த்தது சரி! ஆனால், அவளுக்கும் ‘ஏன், இசையைக் கற்றுத் தர வேண்டும்?’ என்ற கோபம் கூட உண்டு இவர்களுக்கு!
சாப்பிட்டு முடித்து வந்த பாட்டியும் பேத்தியும் சற்றுநேரம் பேசினார்கள். பின், “பாவை ஒரு பாட்டு பாடு” என்று சொல்லி, வேணிம்மா படுத்துவிட்டார். அவர் கேட்டதும் ஜமுக்காலத்தை விரித்து, வீணையை எடுத்துக்கொண்டு அமர்ந்து மீட்ட ஆரம்பித்தாள்.
பின், “மாடு மேய்க்கும் கண்ணே” என்று பாட ஆரம்பித்தாள்.
“காய்ச்சின பாலு தரேன்” என்று பாடிய போது பாடல் வரிகளிலிருந்த மெய், உயிர்மெய் எழுத்துக்களில் அவள் அழுத்தம் தந்த விதத்தில் கேட்போரின் உயிர், மெய் இரண்டும் சிலிர்க்கும்!
நிச்சயம் சிலிர்க்கும்!!
“காய்ச்சின பாலும்” என குழந்தையாக மாறி பாடியதில் குரலில் அத்தனைச் சுட்டித்தனம்! அத்தனைக் குறும்பு! இருந்தும் சுருதி சுத்தம்!
அதுதானே பாவை! அந்தத் திறமைதானே ‘அவர்களுக்கு’ உறுத்துகிறது!
அந்தக் குரல் வளத்தை கண் மூடி ரசித்துக் கேட்க ஆரம்பித்தார் வேணிம்மா.
பாவைக்கும் இசையைப் பயிற்று வைப்பது, தன் குடுத்பத்தினருக்கு உறுத்த ஆரம்பித்ததை கிருஷ்ணாம்மா கண்டு கொண்டார்.
வெளிப்படையாகவே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பாவையின் மீது கடும் வார்த்தைகளைப் பிரயோகிக்க ஆரம்பித்தனர். ஆனால் கிருஷ்ணாம்மா அதை வளரவிடவில்லை. ‘இப்படிப் பேசாதீர்கள்’ என்று கண்டித்தார்.
அதன்பின் யாரும் கடும் சொற்கள் பிரயோகிக்கவில்லை. ஏனெனில் பாவை என்ற பெண்ணின் மனது அவர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது! ஆனால் கிருஷ்ணாம்மா அவர்களின் பொக்கிஷம்! மதிப்பிற்கும், மரியாதைக்கும், அன்பிற்கும் உரியவர்!!
எனவே அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டனர். அதே சமயத்தில் பாவையிடம் பேசவும் இல்லை.
சுருக்கமாக ஒதுக்கிவிட்டார்கள்! ஒதுங்கிக் கொண்டார்கள்!!
‘இப்படிப் பேசாதீர்கள்’ என்று சொன்னவரால், ‘இப்படிப் பேசுங்கள்’ என்று சொல்ல மனம் வரவில்லை.
காரணம்? அது பாவை மனதில் இந்த குடும்பத்தினர்மேல் ஒரு நம்பிக்கையை கொடுக்கும். தான் இல்லாமல் போனால் அவர்கள் பேசும் விதம் மாறும். அந்த ஏமாற்றத்தை அவளால் தாங்க முடியுமா? அப்படியொரு நிலை பாவைக்கு வேண்டாம் என நினைத்தார்.
ஆகவே அவர்களின் நிலைப்பாட்டை அப்படியே விட்டுவிட்டார். எனினும் அவர் கௌசல்யா மீது நம்பிக்கை வைத்திருந்தார்.
அதனால்தான் கௌசல்யா, தேன்பாவை இருவரும் சேர்ந்தே அரங்கேற்றம் செய்யும்படி ஏற்பாடு செய்தார். தனக்குப் பிறகு இந்தக் குடும்பத்திற்கும் பாவைக்கும் இடையே பாலமாக கௌசல்யா இருப்பாள் என்று நினைத்தார்.
ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. ஆகவே கௌசல்யா, கலை மற்றும் ரதி நிலைப்பாடுகளையும் அப்படியே விட்டுவிட்டார்.
ஆனால் இன்றைய நாளில் இவர் கவலை இதுவல்ல! உடல்நிலை காரணமாக இப்போதெல்லாம் கௌசல்யா, தேன்பாவை கச்சேரி பற்றிய விடயங்களைப் பார்ப்பது கிரிதான்.
கிரிதரனுக்கு நிறைய சபா உறுப்பினர்கள், நிகழ்ச்சி நடத்துபவர்கள், இசைக் கலைஞர்களுடன் பழக்கம் உண்டு. அதை வைத்துக்கொண்டு எங்கும் எதிலும் கௌசியை முன்னிறுத்துவது போல் இருக்கிறது.
கிரியம் கௌசியும் சேர்ந்து கொண்டு, பாவைக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்வதாக தெரிகின்றது. ‘என்ன பாடல் தேர்வு செய்ய வேண்டும்?’ என்பதில் ஆரம்பித்து கச்சேரி மேடை வரை கௌசி ஆதிக்கம் செலுத்துவது புரிந்தது.
மேலும் கச்சேரி வருமானத்தில் பாவையின் பங்கை சரியாகத் தருவதில்லை. இப்பொழுதெல்லாம் பாவையைக் கௌசல்யாவுடன் சேர்ந்து பாட வைத்தது தவறோ? என்ற எண்ணம் வேணிம்மாவிற்கு வருகிறது.
அது பாவை பாட்டுச் சுதந்திரத்தைக் குறைக்கிறது, அவளின் தனித்துவத்தை மறைக்கிறது என்ற உண்மை புரிய ஆரம்பித்ததுதான், அவர் கவலைக்கான காரணம்!
இதற்கு தீர்வு? தெரியவில்லை.
முதலில், ‘இந்த வீட்டில் உரிமை இல்லை’ என்று உதாசீனப் படுத்துபவர்களை விட்டு அவள் செல்ல வேண்டும். அதற்கு விரைவில் பாவை திருமணம் நடக்க வேண்டும்.
‘எப்படியாவது இந்த வரன் அமைந்திட வேண்டும்’ என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டார். திருமணம் முடிந்து, அவளுக்கென உரிமையுள்ள ஒரு இடத்தில், இனிமேலாவது அவள் வாழ வேண்டும் என்று ஆசை கொண்டார்.
இதை நினைக்கும் போதே, அவர் முகத்தில் அப்படியொரு திருப்தி! மகிழ்ச்சி! நிறைவு! நிம்மதி!
அந்த நான்கும்… கூடவே பேத்தியின் குரலும் சேர்ந்து கொண்டதில் கண்கள் மூடினார். ‘தேன்குரலாள் இந்த தேன்பாவை’ என்று முனுமுனுத்துக் கொண்டே உறங்க ஆரம்பித்தார்.
வேணிம்மா உறங்கி விட்டது தெரிந்ததும், வீணையை அதற்குரிய இடத்தில் வைத்து ஜமுக்காலத்தை எடுத்து மடித்து வைத்தாள். உறங்க மனமில்லை! சற்றுநேரம் பால்கனியில் உலாத்திக் கொண்டிருக்க நினைத்து அறையை விட்டு வெளியே வந்தாள்.
பாவை அறையின் பால்கனி! கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, நடக்க ஆரம்பித்தாள்.
மெல்லிய ஜரிகை வைத்தப் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். எப்பொழுதும் இப்படித்தான் உடை! அடர்ந்த கூந்தலை ஏனோதானோ என்று நான்கைந்து சுற்றுச் சுற்றி, தளர்ந்த கொண்டை போட்டிருந்தாள். முகத்தில் ஒன்றிரண்டு முடிக்கற்றைகள் விழுந்திருந்தன. அது முகப்பருக்களை மறைத்தன!
முழுக்க முழுக்க பாட்டி கவனிப்பில் வளர்ந்தவள் பாவை! அம்மா, அப்பாவின் அன்பை உணர்ந்திராதவள். இன்றுவரைக்கும் இவள் உணர்ந்த ஒரே அன்பு வேணிம்மாவினது மட்டுமே!
உரிமை இல்லாத இடம் என்று இவள் உணர்ந்த பின்பும், அதை உணர்த்திக் கொண்டிருக்கும் உறவுகள்! வெறுத்து போயிருந்திருக்கும் இவளது உள்ளம், வேணிம்மா மட்டும் இல்லையென்றால்!!
இவளது குரலைப் போல குறையில்லாதது அல்ல இவளது உள்ளம்! அது பல உதாசீனங்களைத் தாங்கிக் கொண்டதில் உடைந்து போயிருந்தது. மேலும், கவலைகளை வெளிக்காட்டாமல் இருப்பதால் நிறைய கடினப்பட்டிருந்தது.
ஆனால் இந்த உதாசீனங்கள், கவலைகள் என்று எதை நினைத்தும் கண்ணீர் வடிக்க மாட்டாள்.
காரணம்? ஒன்று பார்ப்போர் பரிகாசப் பார்வைக்கு ஆளாகிவிடுவோம் என்ற இறுக்கம். மற்றொன்று வேணிம்மா பரிதவித்துவிடுவார் என்ற வருத்தம்!
தான் இப்படி இருந்தும், இப்பொழுதெல்லாம் தன்னை நினைத்து வேணிம்மா கவலைப்படுகிறார் என தெரிந்தது. தனக்கு திருமணம் நடந்தாலாவது, அவர் கவலை கொஞ்சம் குறையும் என்று புரியவும் செய்தது.
உடனே, ‘ஆண்டவா, ஜாதகப் பொருத்தம் இருக்கனும். இந்த வரன் கண்டிப்பா அமையனும்’ என்று முணுமுணுத்துக் கொண்டு, அனைத்துக் கடவுள்களையும் மனதிற்குள் மானசீகமாக வேண்டிக் கொண்டாள்.
மேலும், இந்த வரன் அமைந்தால் நிறைவேற்றுவதற்கென்று சில நேர்த்திக் கடன்களையும் நினைத்து வைத்துக் கொண்டாள்.
நடப்பதை நிறுத்திவிட்டு மெல்லிய இசையைக் கைப்பேசியில் ஓட விட்டாள். மூங்கில் ஊஞ்சலின் மேல் அமர்ந்து, மெல்ல விழிகளை மூடிக்கொண்டாள்!
கிட்டத்தட்ட இசையின் மடியில் இயல்பாய் ஒரு இளைப்பாறல்!!
பால்கனியில் பால்நிலா பொழியும் பனியில் அமர்ந்திருக்கும் பாவை பற்றி…
இசையைப் போல் பிரமாண்டமாகத் தன்னை வெளிப்படுத்த நினைப்பவள்!
சந்தோசம் என்னும் சாலையில் இவள் கால்கள் நடந்து பழகியதில்லை!
தனக்கென்று ஒரு வீடு வேண்டும். அது குருவிக் கூடு போன்று இருந்தாலும் பரவாயில்லை என எண்ணுபவள்! எல்லாரும் வாழும் வாழ்வை போல், தானும் வாழ வேண்டும் என்று நினைப்பவள்!
அடைக்கும் தாழ் இல்லாமல் ஓர் அன்பு வேண்டும் என ஏங்குபவள்! கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் குவியல் என்று சொல்லுபவள்! மேலும்… ஜாதகம், ராசி பலன்கள் மீது முழு நம்பிக்கை கொண்டவள்!
குறிப்பாக கடவுளின் மேல் அளவுகடந்த நம்பிக்கை உண்டு! முக்கியமாக, இசையோடு இசைந்தே தன் வாழ்க்கைப் பயணம் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறாள்!
கானங்களின் மீது தீரா காதல் கொண்ட இந்த இசைக் காதலி இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஓர் உற்ற துணை வேண்டும் என ஆசைப்படுகிறாள்! சில நிமிடங்களுக்குப் பின் அறைக்குள் சென்று உறங்கிவிட்டாள்.

