Kathambari Novels
அன்று வாரத்தின் மத்தியில் ஒரு நாள். வார இறுதியோ, விடுமுறை தினமோ இல்லை என்பதால் பெரிதாக மக்கள் கூட்டம் இல்லை. வெள்ளை வேட்டி, கருப்புச் சட்டை சகிதமாக நான் உள்ளே வரும்போது மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் இப்படித்தான் இருந்தது.
இங்கே ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வந்திருக்கின்றேன். இரண்டாம் வகுப்பிற்கானப் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருக்கிறேன்! இப்படி நான் முன்பதிவு செய்யாமல் வந்திருந்தால், இதோ மற்றவர்களைப் போல் வரிசையில் நின்றிருக்க வேண்டும்.
வரிசையில் காத்திருப்பதைக் குறையாகச் சொல்லவில்லை. சொல்லப் போனால் நம்மையறியாமல் பூமியின் ஏதோ ஒரு வரிசையில் நின்றுதான் நாம் அனைவரும் வாழ்வை வாழ்கிறோம். இது புரிந்தாலும், எனக்குதான் கூட்டத்தின் நடுவில் நிற்பதற்குப் பிடிக்கவில்லை.
புவி விளிம்பில் நின்று மேலோட்டமாக வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம் என்ற சலிப்பு எனக்குள் மேலோங்கி இருப்பதால், யாருமில்லாத ஓரத்திற்கு போய்ச் சென்று நின்று கொண்டேன்.
வந்து வந்து மோதும் அடர் குளிக்காற்று, என்னை வெடவெடக்கச் செய்தது. குளிருக்கு இதமாக இருக்குமென, ரயில் நிலையத்திற்கு உள்ளேயே இருந்த கடையில் தேநீர் கேட்டேன். காகிதக் கோப்பையில் தேநீர் கொடுக்கையில், என் முகம் பார்த்து அந்தக் கடைக்காரர் ஸ்நேகிதமாக முறுவலித்தார்.
நான் முறுவலிக்கவில்லை!
பேசாமல் தேநீரை வாங்கிவிட்டு, திரும்பவும் யாரும் இல்லாத இடத்திற்கு வந்து நின்று, பர்வதமும் பனிமூட்டமும் வைத்துக் கொள்ளும் பிரமாண்ட முத்தத்தைச் சிறிதும் சுவாரஸ்யம் இல்லாமல் பார்த்தபடி தேநீர் பருக ஆரம்பித்தேன்.
சற்றுநேரத்தில் குடும்பம் குடும்பகமாக மனிதர்கள் உள்ளே வந்தார்கள். அதுவரை அங்கே நிலவியிருந்த பெரிய அமைதி கொஞ்சம் கொஞ்சமாக வெளியற்றப்பட்டது. வந்தவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் வரிசையில் நிற்கவில்லை.
ரயில் முன்னே குடும்பமாக நின்று, சுயபடம் எடுத்துவிட்டு, தனித்தனியே சென்று அலைபேசியில் ஆழ்ந்துவிட்டார்கள். எடுத்தப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள் போல. அவர்களைப் பார்க்கையில் இப்படித்தான் இருக்குமென எனக்குப் புரிந்தது.
புரிந்ததும் எனக்குள் ஒரு கேள்வி! சமூகத்திற்காக வாழ்ந்தவர்களைத் தெரியும், சமூகத்தில் வாழ்ந்தவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இது என்ன சமூகவலைத்தளத்திற்காக ஒரு வாழ்க்கை?
ஏன் இப்படியென்று புரியவில்லை.
பகிர்ந்து வாழ்தல் நல்லதுதான். ஆனாலும் பத்திரப்படுத்துதல் என்ற ஒன்று வேண்டாமா? அதிலும் நேயங்களின் பிரத்யேக நேரங்கள் காதலுக்கானது அல்லவா? அதைக் காட்சிகளாக மிகைப்படுத்தி காட்சிப்படுத்தினால் அது கதையாக மாறிவிடாதா?
ஒருவேளை நாயக, நாயகியாக எல்லோரும் உணர விரும்புவதால் இப்படியா? தெரியவில்லை. ஆனால் இது தனியுரிமை பேசும் அவர்கள் தார்மீக உரிமை. இதில் போய் நான் தலையிடுவது சற்றும் சரி கிடையாது என்று விட்டுவிட்டு, நான் என்னைப் பற்றி யோசித்தேன்.
நான் தனியாகத்தான் வந்திருக்கின்றேன். தனியாகத்தான் வசிக்கின்றேன், சரியாகச் சொன்னால் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்கிறேன்.
இங்கே கோவையில்தான் இரண்டு வருடமாக வேலை செய்து வருகிறேன். ஆனால் இதுதான் முதல்முறை ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்யப் போவது. நன்றாக இருக்குமென என்னுடன் வேலை செய்பவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லிக் கேள்விபட்டிருக்கின்றேன்.
அதற்காக… அவர்கள் சொன்னதற்காக நான் இங்கே வரவில்லை.
ஏனோ தெரியவில்லை எனக்கே இன்று இப்படியொரு பயணம் செய்ய வேண்டுமென்று தோன்றியது. ஆசையொன்றும் இல்லை. இதற்கெல்லாம் ஆசைப்படும் வயதுமில்லை எனக்கு. முப்பத்தேழு வயதாகிறது. அதனால் இந்த அனுபவத்திற்கு ஆசைப்பட்டு நான் இங்கே வரவில்லை.
இன்று வரவேண்டுமென எனக்குத் தோன்றியது. அப்படிச் சொல்வதைவிட, பிரபஞ்சம் எனக்குத் தோன்ற வைத்திருக்கிறது. நான் பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவன். அதனால்தான் இப்படிச் சொல்கிறேன்.
சரியாக காலை 7:10 மணிக்கு, ஆட்கள் அனைவரும் ஏறிய பின்னர், ரயில் கிளம்பியது. சில வினாடிகளுக்குப் பின், ‘டி.டி.ஆர்’ வந்து இருக்கையை பதிவு செய்தவர்களின் பெயர்களை வாசித்தார். ‘கதிர்வேல்’ என்று என் பெயரை வாசித்ததும், ‘நான்தான்’ என கையுயர்த்தி உறுதிப்படுத்தினேன். ஒரு சிறு முறுவலுடன் தலையசைத்தார்.
நான் அவருக்கும் முறுவல் தராமல், முகத்தை திருப்பிக் கொண்டேன்!
அடுத்தடுத்து பெயர் பட்டியலில் இருக்கும் பெயர்களை வாசித்து, அவரது வேலையைத் தொடர்ந்தார்.
சற்றுநேரத்தில் என் கவனம் மொத்தமும் சன்னல் வழியே சரிந்த மலையில் விரிந்து நிற்கும் இயற்கையின் பக்கம் இருந்தது. நானொன்றும் பெரிய இயற்கை ரசிகன் அல்ல. நான் இயற்கையை ரசித்துப் பழகாதவன்.
என்னுடன் இதில் பயணம் செய்யும் முக்கால்வாசி பேர் இயற்கை எழிலை ரசிப்பவர்களாவே இருப்பார்கள். அதனாலயே இந்த ரயில் பயணத்தைத் தேர்தெடுத்திருப்பார்கள். ஆனாலும் நான் என் கண்களால் இயற்கையைப் பார்க்கிறேன்; அவர்கள் ‘கேமரா’ கண்ணாடி அணிந்து பார்த்தனர்.
எப்போதும் இவ்விதம் நிழற்படக் கருவி கொண்டு உலகத்தின் நிஜங்களை, நிகழ்வுகளைப் பார்ப்பது சங்கடமாக இருக்காதா? உயிரோட்டமானக் காட்சியையே பார்த்து ரசிக்க தெரியாதவர்களால், அதைச் சிறைப்படுத்தி ரசிக்க முடியுமா… இல்லை பார்த்து ரசிப்பார்களா?
இத்தகைய காட்சிப் பதிவுகள் பின்னாளில் எடுத்துப் பார்க்கவா, இல்லை இன்னாளில் இதையெல்லாம் பார்த்ததாகக் காட்சிப்படுத்திப் பதிவிடவா?
அவர்களுக்கே வெளிச்சம்!
நான் இருக்கின்ற இருக்கை பின்னோக்கி பயனப்படுவது போன்றதொரு இருக்கை. இயற்கை என்னைத் தழுவிச் செல்லாமல், என்னை விட்டுவிட்டு நழுவிச் செல்வது போன்ற தோற்றம் தந்தது. இருந்தாலும் அது சன்னலோர இருக்கை. அதுவே போதுமானதாக, வசதியாக இருந்தது எனக்கு.
எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே சன்னலோர இருக்கை சிறப்புதான்.
அதிலும் வலியோடு வாழ்பவர்களுக்கு, சற்றுநேரம் மனம் இளைப்பாற கிடைக்கும் ஒரு தோள்… இந்தச் சன்னலோர இருக்கை. இதுதான் என்று எதையும் சொல்லக்கூட வேண்டாம். இசையின் ஞானம் அதிகம் இருக்கும் ஒரு பாடல் கேட்டபடி, சன்னல் கம்பிகளில் தலை சாய்த்துப் பயணிப்பதே பாரத்தை இறக்கி வைத்துவிட்ட உணர்வைத் தந்துவிடும்.
எனவே நானும் அப்படியொரு உணர்வை உணர, சற்றுநேரம் சன்னல் கண்ணாடியில் தலை சாய்த்திருந்தேன்.
நான் இயற்கையை ரசிப்பவன் இல்லையென்பதால், வெகுநேரம் வெளியே பார்த்து வருவது பிடிக்கவில்லை. அதனால் கொண்டு வந்த புத்தகத்தைப் பையிலிருந்து எடுத்தேன். அர்த்தமான தமிழ் தலைப்புடன், அழகான அட்டைப்படம் ஏந்திய புத்தகம்.
அதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். இந்தப் புத்தகம் எனக்கு நிரம்பப் பிடிக்கும். நிறைய முறை வாசித்தும் இருக்கின்றேன். எந்தப் பக்கத்தில் என்ன வாக்கியங்கள், வார்த்தைகள் இருக்கும் என்று வரைக்கும் தெரியும். அதற்காக நான் வரிக்கு வரி மனப்பாடம் செய்யவில்லை.
என் மனதிற்கு இந்தப் புத்தகம் நெருக்கமான ஒன்று. அதனால் தெரியும்!
ஒரு புத்தகம் பிடிக்கிறது என்றால் என்ன அர்த்தம்? அந்தப் புத்தகம் பேசும் கருத்துகளை நம் மனதால் ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பதுதான். மனம் அதைப் பின்பற்ற நினைக்கிறது என்பதும்தான்.
இப்புத்தகம் மறுமணம் பற்றி பேசுகிறது. அதிலும் குறிப்பாக கணவனை இழந்த ஒரு பெண்ணின் மறுமணம் பற்றி பேசுகிறது.
எதிர்பாராமல் நிகழும் வாழ்க்கைத் துணையின் மரணம், அதை அந்தப் பெண் எதிர்கொள்ள முடியாமல் எதிர்கொண்ட விதம், அதன் பிறகான அவள் வேதனை வாழ்க்கை, அவள் தனிமை, அவள் அழுகை என்று நீளும் அத்தியாயங்களைக் கண்ணீர் சிந்தியபடி வாசிப்பேன்.
கடைசியில் பல மனப் போராட்டங்களைக் கடந்து, அவளுக்கென்று ஒரு வழித்துணையை அவள் தேர்ந்தெடுத்தாள் என்று நிறைவடையும் இறுதி அத்தியாயத்தில்… புன்னகை பிறக்க, புத்தகத்தை மூடி வைப்பேன்.
பலமுறை படித்திருந்தாலும், இப்பொழுது இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாலும் இதே உணர்வுகளோடுதான் படிப்பேன். இது அழுத்தமான கதையாக இருந்தாலும், அடிக்கடி வாசித்திருக்கிறேன்… வாசிப்பேன்!
சரி, நான் ஏன் மறுமணம் பற்றி பேசும் புத்தகத்தை மனனம் செய்யும்படி அடிக்கடி வாசித்திருக்கிறேன்? அப்படியென்றால் எனக்குத் திருமணம்?
ஆம், நான் திருமணம் ஆனவன்தான். அப்படிச் சொல்வதைவிட திருமண வாழ்வில் மிக மோசமாகத் தோற்றுப் போனவன் நான். இப்போது போய் யார் பக்கம் தவறு, யார் சரி, யார் பொறுப்பு என்ற வாதத்தை முன்வைப்பது, அதுவும் பிரதிவாதம் செய்ய சம்பந்தப்பட்ட ஆள் இல்லாத போது வைப்பது என் பார்வையில் நாகரிகமற்ற செயல்.
அதனால் அதைப் பற்றி நான் பேசுவதேயில்லை.
அந்தப் பெண் என் இறந்தகாலம்!
பிடித்த ஒரு எதிர்காலத்தை அமைத்து நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவளுக்கு, நான் அவளின் கடந்த போன காலம். நானுமே அவளை எப்போதோ கடந்து வந்துவிட்டேன். பிரபஞ்சம்தான் என்னை எப்படியோ ஐந்து வருடங்கள் கடத்தி இங்கே கூட்டி வந்து விட்டிருக்கிறது.
விவாகரத்துக் கிடைத்து ஒரு வருடம் முடிந்த பின், எனக்கொரு துணை வேண்டுமென அம்மா எவ்வளவோ எடுத்துச் சொன்னாள்; ஆசைப்பட்டாள்; அடம்பிடித்தாள்; ஏன் அழுதும் பார்த்தாள். அப்போது ஒரு விரக்தி எனக்குள். எதையும் விரும்பி ஏற்கும் மனநிலையில் நான் இல்லை.
வேண்டாம் என்று அழுத்தமாக இருந்துவிட்டேன்!
ஆசைப்பட்டது நடக்காமலே அம்மா போய்ச் சேர்ந்துவிட்டாள்!!
அதனால் என் அப்பாவிற்கு என்மீது சரியான கோபம். துணையை இழந்த அவரும், திருமணத்தின் தோல்வியில் நானும் அப்போதெல்லாம் அடிக்கடி தொண்டை கிழிய கத்தி வாக்குவாதம் செய்வோம். ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் போராட்டமாய் தொடங்கி, போராட்டமாகவே முடியும்.
ஒரு கட்டத்தில் நாங்கள் கத்துவது குறைந்து கொண்டே வந்தது.
என் தம்பி, தங்கை, அவர்கள் குடும்பம், பேரப்பிள்ளைகள் என்று அப்பாவின் தனிமை போக்கப்பட்டது. அது அவர் மனதை மடைமாற்றம் செய்ததால், அவர் கத்துவது இன்னும் குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கினார்.
மற்ற குடும்ப உறுப்பினர்கள்? ம்ம்ம், அவர்கள் மற்றவர்கள்தான்!
அப்பாவை, அவர்களைப் புரிந்ததும்… நானும் என் மனதை மடைமாற்றிக் கொண்டேன். அப்படிச் சொல்வதைவிட, நான் அவர்களிடமிருந்து ஒதுங்கி வந்துவிட்டேன் என்று சொல்லலாம்.
அதற்காக ஒட்டு மொத்தமாக ஒதுங்கவில்லை. வருடத்திற்கு ஒருமுறை சென்று பார்த்து வருவேன் என் உடன்பிறப்புகளை, உயிர்கொடுத்தவரை. அவ்வளவுதான். அது மட்டும்தான்.
இப்போதெல்லாம் அப்பா என்னிடம் கத்துவதே இல்லை! ஆனாலும் என் மனதில் ஏதோ இரைச்சல் கேட்டுக் கொண்டே இருக்கிறது!!
ஏனோ அம்மா சொன்னதைக் கேட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. எதிர்காலம் என்ன வைத்துக் காத்திருக்கிறதோ என்ற நகரும் நிகழ்காலம் நிலநடுக்கம் தருகிறது மனதிற்கு! எனக்கொரு வழித்துணை வேண்டுமென தேடுகிறது என்னுடைய மனம்.
தேட வைக்கிறது தனிமையும், வாழும் சூழலும்.
என் மனம் மட்டுமல்ல, நானுமே தேடுகிறேன் எனக்கான வழித்துணையை. இப்பிரபஞ்சம் நாம் தேடும் பொருளை தேடிக் கண்டுபிடித்துப் பத்திரமாக வைத்திருக்குமாம்; நாம் அதை பத்திரமாக பார்த்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை வரும்போது நம் கையில் தந்துவிட்டு போகுமாம்.
எனக்கு இந்தக் கருத்தில் பெரிய நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கைக்கு உரம் போடுவது போன்றுதான் இந்தப் புத்தகம். ஏனோ நேரடியாக கடைசி அத்தியாயத்தை எடுத்து வாசித்தேன். ஒரு சிறு புன்னகை தோன்றி மறைய புத்தகத்தை மூடி வைத்தேன்.
வேடிக்கைப் பார்க்க நினைத்தேன். வெளியே இல்லை. அந்தப் பெட்டியில் என்னுடன் பயணிக்கும் மனிதர்களை வேடிக்கைப் பார்க்க நினைத்தேன். அவர்கள் கைப்பேசி முகம் பார்த்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கண்வலிக்க அதனுள் நடந்துகொண்டிருந்தார்கள்.
வாழ்க்கைப் பயணத்தில் இப்படிக் குனிந்தே வரலாமா? தலை நிமிர்த்தி சக பயணிகளைப் பார்க்க வேண்டாமா? அது நம் பயணத்தின் திசையை மாற்றலாம், பயணத்தை எளிதாக்ககூட உதவலாம் அல்லவா? சரி, அது அவர்கள் விருப்பம் என்று நான் வேடிக்கைப் பார்த்தேன்.
எனக்கு எதிரேயிருந்த இருக்கை வரிசைகளை பின்னிலிருந்து தொடங்கி, கடைசியாக முதல் வரிசையிலிருந்த பெண்ணொருத்திமீது பார்வையை நிறுத்தினேன். இல்லை… அந்தப் பெண்ணின் கையிலிருந்த புத்தகத்தின் மீதுதான் என் பார்வை பதிந்தது!
அப்புத்தகமும்… நான் கையில் வைத்திருந்த புத்தகமும் ஒன்று!
இப்போது என் கண்கள் அந்தப் பெண்ணை பார்க்க முயன்றன. சன்னல் ஓரத்தில் நான் இருந்ததால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அப்போது எனக்கு வசதியாக இருந்த இடம், இப்போது அப்படி இல்லை.
இருக்கும் இடத்தின் வசதி என்பது நிரந்தரம் அல்ல போல… வாழ்வின் தேடலை, தேவையைப் பொறுத்து அது மாறும் போல!
என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து எட்டி எட்டி இயற்கையை இரும வடிவத்தில் சேமித்துக் கொள்ள முயற்சித்தவரை, என் இடத்தில் உட்காரச் சொல்லிவிட்டு, நான் அந்த இருக்கையில் அமர்ந்து அவளைப் பார்த்தேன்.
குடை ஜிமிக்கி, வெறும் கழுத்து, ஆரஞ்சும் அடர்நீலமும் கொண்ட காட்டன் புடவை, காற்றுக்கு பறக்கும் முடிக்கற்றைகள், நீளமான சடைப்பின்னல், அதில் கனகாமரம் என்றிருந்தாள் அவள். இதையெல்லாம் என் கண்கள் பார்த்தன. என் மனம் புத்தகம் படிக்கும் அவள் கண்களைப் பார்த்தது.
முதல்முறை படிப்பாள் போல; அவள் கண்களில் தெரிகின்ற ஆர்வத்தை வைத்து இதைச் சொல்கிறேன்.
சற்றுநேரம் அவளையே பார்த்திருந்தேன். அவள் புத்தகப் பக்கங்களைப் புரட்டும் விதம், நிறுத்திப் படிக்கும் இடங்கள், அந்த இடங்களில் மட்டும் நிதானம் இழந்து அவள் இமைகள் படபடப்பது என்று எல்லாம் கண்ட எனக்கு ஒன்றுதான் தோன்றியது.
அது அவள் துணையை இழந்திருக்கிறாள் என்றது மனம்!
இது என் கணிப்புதான்… என் கணிப்பு தவறாகக்கூட இருக்கலாம். அவள் அந்தப் புத்தகம் பேசிடும் கருத்திற்கு ஒப்புவளாகக்கூட இருக்கலாம். எந்த ஒரு முன்முடிவும் ஆபத்துதான். அதனால் இந்தக் கருத்துக் கணிப்பெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்றது என் அறிவு.
சில வினாடிகளில் கல்லார் நிலையத்தில் நீர் நிரப்பவென ரயில் நின்றது. அனைவரும் இறங்கினார்கள். நானும் இறங்கிக் கொண்டேன். அவள் குடும்பத்துடன் வந்திருப்பாள் போல. இறங்கும் போது, ‘நீயும் வருகிறாயா’ என்று சிலர் கேட்க, மறுத்து அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவர்கள் ஏன் என்ற கேள்வியைக் கேட்கவில்லை. வா என்றும் மறுமுறை சொல்லவில்லை. சட்டென்று என் மனம் விவாகரத்து முடிந்த பின்னரான நாட்களை நினைத்துப் பார்த்தது. குடும்பமே ஆதரவாக நின்றது எனக்கு. அது, ‘வாழ்ந்திடலாம்’ என்ற பெரிய பலத்தை தந்தது.
ஆனால் ஆதரவிற்கு ஆயுள் மிகக் குறைவு!
யாரையும் நான் குற்றம் சொல்லவில்லை. அவரவர் வாழ்வைப் பார்ப்பதே சுளுவாக இல்லாத போது, அடுத்தவரையும் கூடவே அழைத்துச் செல்வது சுமைதான். இது நிதர்சனம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் புரிந்து கொண்டேன். துணையைத் தவிர யாதொருவரும் நம் கைப்பிடித்து வர மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
என்னைப் போலவே அவளும் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டிருப்பாள் போல. அவர்கள் அவளைத் தனியே விட்டுப் போன பின்னும் சாதரணமாக இருந்தாள். என்ன நான்… முன்முடிவு கூடாதென சொல்லிவிட்டு, இவ்வளவு ஆழமாக யோசிக்கிறேன்.
தலையை உலுக்கி சூழலைப் பார்த்தேன். இறங்கியவர்கள் சிலர் வெண் பனிமூட்டம், கார்முகில், பச்சை மலைகள் சூழ புகைப்படம் எடுத்தார்கள். ஒரு சிலர் தேநீர் அருந்தினார்கள். அங்கும் இங்கும் நடந்த சக பயணிகள், என்னைக் கடந்து செல்லும்போது சம்பிரதாயமாக முறுவலித்தார்கள்.
பதிலுக்கு நான் முறுவலிக்கவில்லை. முகம் திருப்பிக் கொண்டேன்.
சம்பிரதாய முறுவல் என்பதால் நான் முறுவலிக்கத் தவறவில்லை. சக மனிதர்களிடம் இதுபோன்ற சம்பிரதாயம் கடைபிடிப்பது சத்தியமான அவசியம்; சாத்தியமான அனுசரணையும் கூட.
இதில் என் செயல்தான் பிழை!
என்னால் முறுவலிக்க முடியவில்லை. முறுவலிக்க கஷ்டமாக இருக்கிறது. முகம் திருப்பிக் கொள்வது எளிதாக இருக்கிறது. இத்தனை வருட பற்றுதல் இல்லாத வாழ்க்கை, சாதரண முறுவலைக் கூட சங்கடமாக உணரும்படி செய்திருக்கிறது எனக்கு.
என்ன காரணம் சொன்னாலும் என் செயல் சரி கிடையாது.
ரயில் வெளியே நின்று ரயிலைப் பார்த்தேன். இல்லை ரயிலின் உள்ளே இருந்த அவளைப் பார்த்தேன். பசுமை நிறைந்த பர்வதத்தை மறைத்திருந்த பனிமூட்டப் பின்னணியில், யாருமில்லாத ரயிலில், சன்னோரத்தில் அவள் மட்டும் அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்தேன்.
மீண்டும் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியிருந்தாள். ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தாள். ஓரிரு நொடிகளில் கண்ணோரம் கண்ணீர் துளிர்க்க வாசித்திருந்தாள்.
அவள் எந்தப் பக்கத்தில் இருக்கிறாள், எந்த வரிகளை வாசிக்கிறாள் என்று என்னைக் கணிக்க வைத்தது அவளது கண்ணீர். இப்போது உறுதியாகச் சொல்கிறேன், அவளும் என்னைப் போலவே என்று. அவளது துணையின் பிரிவல்ல… இழப்பு என்றும் புரிந்தது.
அவளும் நானும் ஒரே பாதையின் பயணத்தில் இருக்கின்றோம். நான் ரயில் பயணத்தைக் சொல்லவில்லை என்று இந்தப் பிரபஞ்சத்திற்கு தெரியும்!
சட்டென்று அவள் புத்தகத்தை மூடிவிட்டாள். சன்னல் வழியே வெளியே பார்த்தாள். கழுத்து நரம்புகள் திரள, பெருமூச்சு எடுத்தபடி, இமைகளை அடித்து அடித்து கண்ணீர் கசிந்து விடாமல் பார்த்துக் கொண்டாள். இதில் இயல்பாக இருப்பது போல காட்டிட, முடிக்கற்றைகளை வேறு அடிக்கடி ஒதுக்கிவிட்டுக் கொண்டாள்.
அந்த நுண்ணிய உணர்வுகளைப் பார்க்கப் பார்க்க என் மனம் நொடிந்து போவது போலிருந்தது.
பயணிகள் ரயிலில் ஏறினார்கள். அவள் உறவுகளில் சிலர் அவளுக்கு ஒரு புன்னகையை வீசியபடி உள்ளே வந்தார்கள். அவளும் பதில் புன்னகை தந்தாள். அவளுக்கு உணர்வுகளை மீட்டெடுப்பது கைவந்த கலை போல! நானும் அப்படித்தான் முந்தைய நொடி வரை இருந்திருந்தேன்.
ஆனால் இந்த நொடி அப்படியல்ல. கனத்த மனதுடன் ரயிலில் ஏறினேன். மீண்டும் பயணம் தொடங்கியது.
அவள் புத்தகத்தில் முக்கால்வாசி தூரம் பயணித்திருந்த போது, அடுத்து நிறுத்தமான அடர்லியில் ரயில் நின்றது. இங்கிருந்து மலைப் பள்ளத்தாக்கு, அதனூடே வளைந்து போகும் சாலை, அதில் கட்டவிழ்ந்த குதிரைப் போல் ஓடும் வாகனங்கள் பார்க்க அழகாக இருக்குமென்று சொல்வார்கள்.
அதைக் காட்சிப்படுத்திக் கட்டிப்போட அனைவரும் இறங்கினர்.
அவள் இறங்கவில்லை. நான் இறங்காமல் ரயில் உள்ளே இருந்தேன். ஏன் என்ற கேள்வி இப்போதைக்கு வேண்டாம். புத்தகத்தில் மூழ்கி வாசித்துக் கொண்டிருந்தாள். அப்போது, ‘அண்ணி’ என்று ஒருவன் அழைத்து வந்து அவளை இறங்கச் சொன்னான்.
பொதுவாக… நம் கற்பனை, நம்மைக் கைப்பிடித்துப் புத்தகப் பாதையில் பாதி தூரம் அழைத்துச் சென்றிருந்த நேரம், ஏதேனும் இடையூறால்… வந்த பாதையில் திரும்பி நாம் ஓடி வர நேர்ந்தால் சிறு எரிச்சல் வரும்.
ஆனால் அவளுக்கு அப்படி ஒன்றும் இருக்காது போல. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ரயிலிலிருந்து இறங்கி, தனியாக நின்று கொண்டிருந்தாள். என்னமோ நானும் தன்னிச்சையாக இறங்கிக் கொண்டேன்.
அவளைக் கீழே இறங்கச் சொன்னவன் எங்கே என்று பார்த்தேன். அவன், அவனுடைய குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். வேறு யாரெல்லாம் அவள் குடும்பம் என்று தேடினேன். என்னால் எப்படிக் கண்டறிய முடியும், அதனால் அவளைப் பார்த்தேன்.
அவள் கருவிழி போகும் திசையெல்லாம் பயணித்த என் விழிகள், அவள் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்று அறிந்து கொண்டன. இப்படியும் சொல்லலாம், இல்லை அவள் விழிகள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன என்றும் சொல்லலாம்.
மூன்று நான்கு குடும்பமாக சேர்ந்து வந்திருப்பார்கள் போல. இணையுடன், பிள்ளைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அறிமுகம் ஆகிக் கொள்ளாமலே அறிமுகப்படலம் நடந்தேறியதும், என் பார்வை வந்த பாதையில் திரும்ப பயணித்து அவள் கண்ணில் வந்து நின்றது.
தனிமையின் சோகம் அவள் கண்களில் தெரிந்தது.
இதற்கு அவளை வீட்டிலேயே விட்டு வந்திருக்கலாம்… குறைந்தபட்சம் ரயிலிலிருந்து இறங்கச் சொல்லாமல் இருந்திருக்கலாம்… என்று கோபம் வந்தது எனக்கு. வந்த வேகத்திலே இந்தக் கோபம் அதிகப்படியானது என்று என் மூளைக்குப் புரிந்துவிட்டது. ஆனால் மனதிற்குப் புரியவில்லை.
எப்போதும், எதையும் புத்திக்கு புரிய வைப்பது எளிது. மனதிற்குப் புரிய வைக்கத்தான் நிரம்ப மெனக்கெடல் எடுக்க வேண்டும். இப்போது நான் எந்த மெனக்கெடலும் எடுக்கும் எண்ணத்தில் இல்லை.
அதே கோபத்துடன் சக பயணிகளுடன் சேர்ந்து ரயிலில் ஏறினேன். நான் அமர்ந்ததும், அவள் இருக்கையைப் பார்த்தேன். அவளும் ரயிலில் ஏறி அமர்ந்து, மீண்டும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியிருந்தாள். எங்களை சுமந்து கொண்டு ரயில் பயணிக்க ஆரம்பித்தது.
அடுத்தடுத்து ஹில்குருவ், ரன்னிமேடு ரயில் நிலையங்கள் வந்தன. அவள் புத்தகத்தில் மூழ்கிப் போயிருந்தாள். புத்தகத்தின் கடைசிப் பக்கங்களுக்கு வந்திருந்தாள். கதையின் முடிவிற்கு அவள் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வியில் எனக்கு மூச்சை அடைப்பது போல் வந்தது.
கூடவே என் மனதிற்குள் பேரார்வம் பேரலையாக திரண்டெழுந்தது.
ஏன் இத்தனை ஆர்வம் என்று அவசரமாக என் மூளை ஒரு கேள்வி கேட்டது. அதற்குச் சாவகாசமாகப் பதில் சொல்லலாமென பொறுமையாக இருந்து கொண்டோம் நானும், என் மனமும்.
அடுத்து லவ்டேல் நிலையம் வந்து ரயில் நின்றது.
பலர் இறங்கி நின்றார்கள். சிலர் இறங்காமல் இருந்தார்கள். அப்படி இறங்காமல் இருந்து கொண்டவர்களில் நானும் அவளும் இருந்தோம்.
அவள் புத்தகத்தின் கடைசி பக்கத்தை வாசித்தாள். முதல் வரிகளில் சிறு துளி கண்ணீர் அவள் விழியோர வரிகளில் இருந்தது. கதையின் முடிவை வாசித்து முடிக்கையில் சிறு புன்னகையும் சேர்ந்து கொண்டது.
அந்தப் புன்னகையின் அர்த்தம் எனக்குத் தெரியும்!
புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, நெடு மூச்சொன்றை எடுத்தபடி வெளியே பார்த்தாள். ஏனோ விழியோர நீர் விழியெங்கும் நிரம்பிவிட, அது விழியை விட்டு இறங்காமல் இருக்க… விழி விளிம்பை ஒற்றை விரலால் அழுத்திப் பிடித்து, அதையுமே புன்னகை கொண்டு மறைத்தபடி ரயிலின் உள்ளே பார்த்தவள், தற்செயலாக என்னைப் பார்த்துவிட்டாள்.
இல்லை, நான் அவளைப் பார்ப்பதை… அவள் பார்த்துவிட்டாள்.
என் பார்வைத் தற்செயலானது அல்ல என்பதை சட்டென்று அவள் புரிந்து கொண்டாள். அதை அவள் கண்கள் சடுதியில் எனக்கு உணர்த்தின. நான் தற்சமயமாக மட்டும் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்று என் கண்கள் அவளுக்கு உணர்த்திவிட்டன.
நானும் அவளை போலத்தான்… என்பதை அவள் புரிந்து கொண்டிருப்பாள். காரணம் நான் கையில் வைத்திருக்கும் புத்தகம், அடுத்து அதை நான் பிடித்திருக்கும் விதம்… அவளுக்கு என் நிலையைச் சுட்டிக் காட்டிவிடும்.
அப்படி சுட்டிக் காட்டுதலில் அவளால் புரிய முடியவில்லை என்றால், அவள் கையில் வைத்திருக்கும் புத்தகத்தை நான் பார்க்கின்ற விதம்… நானும் அவளும் ஒரே விதமான பயணத்தில் இருக்கிறோம் என்பதை அவளுக்குப் புரிய வைத்துவிடும்.
இன்னும் பார்வையை இருவரும் விலக்கிக் கொள்ளவில்லை. அவளும் புன்னகைப்பதை விடவில்லை. அவளது அந்தப் புன்னகை புத்தகத்தின் முடிவிற்காக, அவள் கண்ணீரை, கலங்குவதை மூடி மறைப்பதற்காக… அது எனக்கானது அல்ல என்று என் புத்திக்குப் புரிகிறது.
ஆனால் நான் எதிர்வினை ஆற்றலாம் என்று மனம் சொல்கிறது. அதாவது நான் முகத்தைத் திருப்பலாம், இல்லை முறுவல் செய்யலாம். ஆனால் நான் அப்படி முறுவலித்தால் இது புதிய ஆரம்பமாக இருக்கும்.
புதிய அத்தியாயத்திற்கான முன்னுரையாக, முதல் வரியாக இருக்கும் என் இதழ் வரிகளில் உதிக்கும் முறுவல். அது சர்வ நிச்சயம் என்று என் மனம் அடித்துச் சொன்னது!
அவள் யாரென்று தெரியாது, ஊர் தெரியாது, பெயர் தெரியாது, அவள் குடும்பம் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்றுகூட தெரியாது. பிறகெப்படி இத்தனை உறுதி என்றால், அதெல்லாம் எனக்குத் தெரியாது.
அதை இந்தப் பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளும்!
இன்று என்னை இங்கே இழுத்து வந்த பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளும்! அவளை இந்தநேரத்தில் என்னைப் பார்க்க வைத்த… பார்த்துக் கொண்டே இருக்க வைத்த… இந்தப் பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளட்டும்!
என்னை இத்தனை நேரமாக அவளையே பார்க்க வைத்திருந்த இந்தப் பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளட்டுமே! என் வேலை முடிவெடுப்பதுதான்! முறுவலிக்கவா, முகம் திருப்பவா என்று முடிவெடுப்பது மட்டும்தான்!
எனக்கென்னமோ இந்த நொடியில் முகம் திருப்புவது கடினமாக இருந்தது! ஏனோ முறுவலிப்பது சுலபமாகத் தெரிந்தது!!

