Kathambari Novels
அத்தியாயம் – 15(Final)
பொக்கிஷப் பேழை புத்தகம் காட்டிய வழியில் நடந்து, மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். வழிகாட்டிய பின், புத்தகம் மாயமாக மறைந்து போய்விட்டது!
எத்தனை நாட்களுக்குப் பின்னர் என்று தெரியவில்லை… அவர்கள் கண்களில் வாழ்ந்து பழகிய உலகம் தெரிந்தபோது, அப்படியொரு நிம்மதி, மகிழ்ச்சி! ஏதோ புதிதாய் பார்ப்பது போல் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்!!
எப்படி தங்கள் ஊரிலிருந்து கிளம்பி வந்தார்களோ, அதேபோல் ஊரைச் சென்று அடைந்தார்கள். ஸ்வீட் ஹார்ட், ரோமியோ… அவர்களது வீட்டிற்குச் சென்றனர். அதுபோல் தனமும் மைக்கேலும்!
போகும் முன்பு இரண்டு விடயங்கள் பற்றித் தெளிவாகப் பேசினார்கள். ஒன்று, புதையல் ரகசியம் யாருக்கும் தெரியக் கூடாது… மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! மற்றொன்று எப்படி முத்துக்களை விற்றுப் பணமாக்குவது!
*********************
வீட்டிற்கு வரும் வழியிலும் சரி… வீட்டிற்கு வந்த பின்னும் சரி… மைக்கேலிடம் தனம் எதுவும் பேசவில்லை. முகத்தை உம்மென வைத்துக்கொண்டே இருந்தாள். அவனும் அவளை அவள் போக்கிலே விட்டுவிட்டான்.
சற்று நேரத்திற்குப் பின் அவர்கள் ஆயா வந்தார். உள்ளே இருவரும் இருப்பதைப் பார்த்து, “எப்படா வந்தீங்க?” என்று கேட்டார்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான்” – மைக்கேல்.
சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த தனத்தைப் பார்த்தவர், “இவ ஏன்டா இப்படி உட்கார்ந்திருக்கா?” என்றார்.
மைக்கேல் பதில் பேசாமல் நின்றான்.
“என்னடா கல்யாணதுக்கு சம்மதிக்கிறாளா? கட்சி வேளைக்கு போயிட்டு வந்து கல்யாணத்துக்கு சம்மதிப்பானு சொன்ன?” – ஆயா.
சட்டென்று எழுந்தவள், “இனிமே இந்த வீட்ல யாராவது கல்யாணத்தைப் பத்திப் பேசினீங்க… அவ்ளோதான்” என்று எச்சரித்து விட்டு வெளியே சென்றுவிட்டாள்.
அவள் போன திசையைக் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பேரனிடம் வந்து, “என்னடா, இன்னும் இவ இப்படித்தான் பேசிக்கிட்டு இருக்கா” என்றார்.
“கொஞ்சம் நாள்ல சரியாகிடுவா” என்றான் நெடுமூச்சுடன் மைக்கேல்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே காத்திருப்ப… பேசாம உனக்கு வேற பொண்ணு பார்க்கட்டுமா?”
“அதலாம் வேண்டாம், எத்தனை நாளானாலும், அவளுக்காகக் காத்திருப்பேன் நான்” என்று சொல்லிவிட்டு, மைக்கேலும் வெளியே சென்று விட்டான்.
இருவரும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமல், ஆயா வருந்தினார்.
******************
சரியாக ஆறு மாதங்களுக்குப் பின்… அந்தப் பகுதியின் அடையாளம் கொஞ்சம் மாறியிருந்தது. முதல் வேலையாக சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட்டு, சரியாக அதன் வழியில் சென்றன. மங்கிய விளக்கொளி மாறி, சரியான இடைவெளியில் விளக்குக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தெருக்களின் ஓரங்களில் சல்லிகள், மணல்கள் குமிக்கப்பட்டிருந்தன. சாலைகள் அமைக்கும் பணி நடைபெறப் போகிறது. அதற்காகவே இவைகள்!
இந்த ஆறு மாதத்தில் என்னென்ன பண்ண முடியுமோ, அதைத் திறம்படச் தனம் செய்திருந்தாள். கட்சிப் பணியில் இருப்பதால், இதையெல்லாம் செய்ய கட்சி பணம் தருகிறது என்று சொல்லி, புதையல் ரகசியத்தை மறைக்க முடிந்தது.
தனத்தின் இந்தச் செயல்களால், அப்பகுதி மக்களிடம் கட்சிக்குப் நல்ல பெயர் பெருகுவதால், கட்சி நிர்வாகம் அவள் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடாமல் இருந்தது. கட்சி நிர்வாகிகளும், இவளுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்று தோண்டித் துருவிக் கேட்காமல், மக்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்கிறோம் என்றளவில் திருப்தி கொண்டார்கள்!
இவ்வளவும் தனம் செய்திட உறுதுணையாக இருந்தது மைக்கேல்தான். அப்படி இருந்தும் அவனுடன் முகம் கொடுத்துப் பேச மாட்டிக்கிறாள். ஆனால் அவள், ‘ம்’ என்றால், அவன் ‘ம்கூம்’ என்று சொல்லாமல் வேலை செய்தான். தனத்தின் மனம் மாறும் வரை, மைக்கேல் காத்திருக்கத் தயாராக இருந்தான்.
மற்றொருபுறம், ரோமியோ காதலி ஸ்வீட் ஹார்ட்டிற்காக அரண்மனை போன்ற வீடு கட்ட போராடிக் கொண்டிருந்தான். இவனது குறிக்கோள், தனத்தைப் போல் நடைமுறைக்கு எளிதாக இருக்கவில்லை.
எங்கு போனாலும் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி முதலில் வந்து நின்றது. ஆனாலும், அரண்மனை கட்டியே தீருவேன் என்று பிடிவாதமாக நிற்கிறான். அப்படி இல்லையென்றால், அவன் எப்படிக் காதல் நாயகன்?!
இன்னொன்றும் ரோமியோ செய்தான்! அது தனத்திற்கு உதவுவது. ஸ்வீட் ஹார்ட் செய்யச் சொன்னதால் இதைச் செய்கிறான். பணமாக தந்தோ, களத்தில் நின்று வேலைகள் செய்தோ… அவனும் அந்தப் பகுதியின் மாற்றத்திற்கு உதவுகிறான்.
ஆனால் மைக்கேலுடன் பேச மட்டும் மறுத்துவிட்டான். அவனது ஸ்வீட் ஹார்ட் சொல்லியும் ‘முடியாது’ என்றுவிட்டான். மேலும் ரோமியோ தன்னுடன் இருந்த இரண்டு இளைஞர்களுக்கும் சிறிய தொழில் ஆரம்பிக்க உதவி செய்திருந்தான்.
அதுபோல் மாறனுக்கு உதவுவதை மைக்கேல் பார்த்துக் கொண்டான். ஏனெனில் புதையல் பற்றிய ரகசியம் வெளியே கசியக் கூடாது அல்லவா! அப்படி மட்டும் வெளியே தெரிந்தால், அவர்கள் நிலையே மாறிப் போய்விடும் அல்லவா?!
இரண்டு வருடங்களுக்குப் பிறகு…
ரோமியோ, தன் வீட்டின் முன்பக்கம் நின்று கொண்டிருந்தான். அவனருகில் ஒரு ஆட்டோ நின்றது. “ஸ்வீட் ஹார்ட், எவ்ளோ நேரம்? சீக்கிரம் வா!” என்று சத்தமாக அவளை அழைத்துக் கொண்டிருந்தான்.
“இதோ ரோமியோ” என்று சொன்னபடி அவளுக்காக அவன் கட்டிய வீட்டிலிருந்து வெளியே வந்தவள், சிரித்துக் கொண்டே அவன் முன்னால் சென்று நின்று, “நான் எப்படி இருக்கேன்?” என்றாள்.
“ஆட்டோல ஏறு ஸ்வீட் ஹார்ட்” என்றான், அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்.
அவளும் எதுவும் கேட்கவில்லை. ஆட்டோவில் ஏறிக் கொண்டாள். சற்றுத் தள்ளி டீக்கடையில் நின்ற ஓட்டுநரை ரோமியோ அழைத்தான். அவன் கூப்பிட்டதும் வந்தவர் “ஏன் ரோமியோ கார்-லாம் வச்சிருக்க… அதுல போகாம இப்பவும் ஆட்டோதானா” என்றார் சந்தேகத்துடன்.
“அது என்னமோ தெரியல, இதுல போனாதான் போன மாதிரி இருக்கு” என்று ஆட்டோக்குள் ஏறினான்.
“சரி எங்க போகணும்?” என்று அவரும் ஏறி அமர்ந்தார்.
“கவுன்சிலர் கல்யாணத்துக்கு”
“அப்படியா” என்று தாடையை லேசாகத் தடவியவர், “ரோமியோ அங்க போய் இறங்கிட்டு, எனக்கு கவுன்சிலரைத் தெரியும். அதனால பணம் தரமாட்டேன்னு சொல்லக் கூடாது” என்றார் கறாராக!
உடனே தன் சட்டைப் பையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக் காட்டி, “போதுமா??” என்றான் ரோமியோ.
“சரி சரி” என்று ஆட்டோவை இயக்க முயற்சித்தார்.
ஆட்டோ கிளம்பும் முன் ரோமியோ, “ண்ணா… ஏதாவது பாட்டு போடுங்க” என்று நேயர் விருப்பம் கேட்டான்.
“கல்யாணம் முடிஞ்சி இத்தனை வருஷமாச்சு! இன்னும் நீ மாறலயா” – ஓட்டுநர்.
“வருசம் எத்தனை ஆனா என்ன? இந்த வாழ்கை காதலுக்குத்தான்” என்று காதல் அலப்பறைகள் செய்தான்.
“அது சரி” என்று பாட்டுப் போடப் போனவரை, “ண்ணா” என்று அழைத்தான்.
“என்ன ரோமியோ, லவ் சாங்கா?”
“ஆமா ண்ணா”
“ஒரு பிள்ளை வந்ததுக்கு அப்புறமும் இப்படியா?” என்றார் சலிப்புடன்.
“அது அப்படித்தான், நீங்க பாட்ட போடுங்க” என்றான் சந்தோஷமாக.
அவன் காதல் வெளிப்பாடுகள் காலத்தினால் மாறப்போவது இல்லை! என்றுமே, காதலும் காதல் சார்ந்த இடமும் ரோமியோ!!
ஆமாம் பிள்ளையா?? ஆம்!! ஒன்பது மாதங்களுக்கு முன்னர் ரோமியோ, ஸ்வீட் ஹார்ட் காதல் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரோஸ் என்று செல்லப் பெயர் வைத்திருக்கிறான். அதாவது அவன் பெயரின் முதல் எழுத்தும், ஸ்வீட் ஹார்ட் பெயரின் முதல் எழுத்தும் சேர்த்து!!
காதல் பாடல்கள் ஆட்டோவிலிருந்து ஒலிக்க ஆரம்பித்தன. காதலர்கள் இருவரும் ஸ்வீட்சர்லாந்து சென்று பனியில் பாடலுக்கேற்ப ஆடி, பாடிவிட்டு வந்தனர்.
கனவு உலகப் பாடல் முடிவதற்கும், ஆட்டோ கவுன்சிலர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. ரோமியோ, ஸ்வீட் ஹார்ட் ஆட்டோவிலிருந்து இறங்கினார்கள்.
கவுன்சிலர் அளவிற்கு ரோமியோவிற்குப் பழக்கமா? இல்லை! அவனுக்கு நன்கு தெரிந்த நபர்தான் கவுன்சிலர்! யார் அது? வேறு யாருமில்லை தனம்தான்!
இந்த இரண்டு வருடங்களில், தனம் செய்த நல்ல விடயங்களுக்காக, அப்பகுதி மக்கள் அவளைக் கவுன்சிலராக்கி அழகு பார்த்தனர்.
அவளுக்குத்தான் இன்று திருமணம்! ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்தவன், மீதிச் சில்லறைக்காகக் காத்திருந்தான்.
“மாமா பொண்ண கல்யாணம் பண்ண இவ்வளவு கஷ்டப்பட்டது இவனாதான் இருக்கும்” என்றார் ஆட்டோகாரர் சில்லறையைக் கொடுத்துக் கொண்டே!
ஆம்! மைக்கேல்தான் மணமகன்!!
இரண்டு வருடங்களாக சம்மதிக்காமல் இருந்தவளுக்கு, அதற்குமேல் மைக்கேல் அன்பை ஒதுக்கி வைக்க முடியவில்லை. ஆதலாலே இந்தத் திருமண ஏற்பாடு!!
ரோமியோவும் ஸ்வீட் கார்டும் திருமணம் நடக்கும் இடத்தின் நுழைவாயிலுக்குச் சென்றனர். “ஸ்வீட் ஹார்ட், நீ மட்டும் உள்ளே போயேன். நான் வரல, இங்கயே நிக்கிறேன்” என்று தயங்கினான்.
ரோமியோ இன்னும் மைக்கேலை மன்னிக்கவில்லை. இன்னும் காலம் வேண்டும் போல!! கல்யாணத்திற்கு வர மறுத்தவனை, ஸ்வீட் ஹார்ட்தான் வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறாள்.
“பேசாம என்கூட வா” என்று இழுத்துக் கொண்டு சென்றவள், முன் வரிசையில் ஒரு நாற்காலியில் அவனை அமர வைத்து, மகளை அவனிடம் கொடுத்துவிட்டு, “ரோஸ் முழிச்சிக்கிட்டா பார்த்துக்க ரோமியோ. கல்யாணம் முடியர வரைக்கும் எங்கேயும் போகக் கூடாது” என்றாள் கட்டளை இடும் கனிந்த குரலில்.
அவனது முகபாவம் சொன்ன பதிலில் திருப்தி இல்லாததால், “ரோமியோ” என்று அவள் அழுத்தமாகச் சொல்ல, “சரிம்மா, எங்கயும் போகல. போதுமா?” என்று அவன் கட்டுப்பட்டான்.
அந்தப் பதிலிலும், அவன் சொன்ன விதத்திலும் அவன்மீது நம்பிக்கை கொண்டு, ஸ்வீட் ஹார்ட் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் சென்ற சில நொடிகளில் விழித்துவிட்டாள் அவர்கள் மகள். சற்றுநேரம் மகளை மடியில் வைத்து தாலாட்டிப் பார்த்தான். இனி தூங்க மாட்டாள் என்று தெரியவும், அவளை இரு கைகளாலும் தூக்கி உயரே பிடித்துக் கொண்டு, “என்ன ரோஸ்? இந்த அப்பா… அம்மா சொல்றத இப்படிக் கேட்கிறேன்” என்று மகளுடன் பேச ஆரம்பித்தான்.
ரோஸ், அப்பா பேச்சைக் கேட்டுப் பால்சிரிப்புச் சிரித்தாள்.
ரோமியோவின் அந்தப் பேச்சில், ஒரு அப்பாவிற்குரிய பொறுப்பு… மனைவியை காதலிக்கும் கணவனின் சிறப்பு… என்று இரு வேறு பரிமாணங்கள் தெரிந்தது! அக்கணத்தில், ரோமியோ அவ்வளவு அழகாகத் தெரிந்தான்!!
கவுன்சிலர் கல்யாணத்திற்கு, அப்பகுதி மக்கள் அனைவரும் வந்திருந்தார்கள். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேரனுக்கும் பேத்திக்கும் திருமணம் என்ற மகிழ்ச்சியில், ஆயா தலைகால் புரியாமல் ஓடிக் கொண்டிருந்தார்.
மேடையில் தனமும் மைக்கேலும் அமர்ந்திருந்தனர். ஸ்வீட் ஹார்ட் மைக்கேல் பக்கம் வந்து நின்று கொண்டாள். மைக்கேல் மேடையிலிருந்து, ரோமியோவைப் பார்த்ததும்… ஸ்வீட் ஹார்டிடம், “தேங்க்ஸ் சிஸ்டர்” என்று மகிழ்ந்தான்.
“இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க ப்ரோ. பேச வச்சிடலாம்” என்று சொல்லி, அவனின் மகிழ்ச்சியை மேலும் அதிகமாக்கினாள்.
இன்னும் பல சந்தோஷமான திருமண நிகழ்வுகள் நிகழ்ந்தன. சற்று நேரத்திற்கு பின்… மைக்கேல், தனலெட்சுமி திருமணம் நடந்து முடிந்தது.
உறவுகள், ஊர் மக்கள் வந்து மணமக்களுக்கு பரிசுகள் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். கடைசியில் ஸ்வீட் ஹார்ட் ரோமியோவை மேடைக்கு அழைத்தாள். அவனும் வந்தான். மைக்கேல், தனம், ஸ்வீட் ஹார்ட், ரோமியோ, ரோஸ்… மேடையில் ஒன்றாக நின்ற நிகழ்வை, நிழல் படமாக்கிக் கொண்டனர்.
அன்றைய இரவில் மைக்கேல் வீடு! சிறு வயதிலிருந்தே அவனுடன் ஒரே வீட்டில் வளர்ந்தவள்தான் என்றாலும், புதிய உறவு வந்ததிற்குப் பின்னான முதல் நாளின் இரவு என்ற ஒரு கூச்சம்… மைக்கேல் தன் கணவன், தான் அவன் மனைவி என்ற ஒரு பதட்டம்… வெட்கம் – இதுமாதிரி உணர்வுகள் எதுவும் இல்லாமல், எப்போதும் போல மைக்கேல் தோளில் சாய்ந்து, தனம் அமர்ந்திருந்தாள்.
“தனம்”
“சொல்லு”
“ஸாரி தனம்”
“இதயே இன்னும் எத்தனை தடவை சொல்லுவ?” என்று கேட்டு, அவனது தோளில் அடித்துவிட்டு மீண்டும் அவன் தோளில் சந்தோஷமாகச் சாய்ந்து கொண்டாள்.
எத்தனை வருடக் காத்திருப்புக்குப் பின், அவனுக்கு காதல் கைகூடியிருக்கிறது! சந்தோஷத்தில் காதல் காற்றில் மைக்கேல் மிதந்து கொண்டிருந்தான்! மேலும், அவன் அவளை நன்றாகப் புரிந்து வைத்திருப்பதால்… இப்படி அவள் அவனை அடிப்பதுகூட அவனுக்கு காதலாகத்தான் தெரிந்தது!
“தனம், எனக்கு ரொம்ப நாளா ஒண்ணு கேட்கணும்?”
“கேளு”
“அன்னைக்கு ரோமியோ என்னைய அடிச்சான்ல?”
“ஆமா, அதுக்கென்ன இப்ப”
“இல்லை தனம்… அன்னைக்கு தன்யா சிஸ்டர் கூட வந்து தடுத்தாங்க. ஆனா நீ தடுக்கவேயில்லையே, ஏன்?”
“இதுக்கு பதில் சொன்னா, நீ வருத்தப்படுவ”
“இதுக்கு முன்ன நீ சொன்ன பதில்-ல எல்லாம் நான் சந்தோசமா இருந்தேன்னு நினைக்கிறியா?” என்று மனதில் இருப்பதை, உண்மையைச் சொன்னான்.
திருப்பவும் அத்தை மகன் தோளில் அடிக்க ஆரம்பித்தாள்.
“போதும்” என்று அவளது கைகள் பிடித்து நிறுத்தி, “பதில் சொல்லு” என்றான்.
“நானும் சேர்ந்து அடிக்காம இருந்தேன்னு, சந்தோசப்பட்டுக்கோ” என்றாள் பட்டென்று!
“அதுவும் சரிதான்” என்று தலையைத் தலையை ஆட்டிக் கொண்டான்.
மீண்டும் அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டு, “மைக்கேலு” என்று தனம் அழைத்தாள். தன்னால் முடிந்தளவு, அதில் காதலைக் காண்பிக்கப் பார்த்தாள்.
“சொல்லு” என்றான், அதைக் கண்டு கொள்ளாமல்!
“கூப்பிடேன்” என்றாள் வெறுமென.
‘இது என்ன புதுசா கேட்கிறா?’ என்று நினைத்தவன், “புரியலை” என்றான்.
“என்னய கூப்பிடேன்”
“தனம்” என்று கூப்பிட்டான்.
“இப்படி இல்லை… அப்படி” என்றவள் கண்களும், தலையும் ஒருபுறம் இழுத்துக் கொண்டு சென்றது.
“ம்ம்ம்?” என்று யோசித்துவிட்டு, “ஓ! செல்லம். கரெக்டா??” என்றான்.
“ப்ச்… இதுவும் இல்ல”
“வேறெப்படி தனம்? எனக்குத் தெரியலயே” என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அதற்குமேல் அவளின் பொறுமை காற்றில் பறக்க, பொறாமை காதல் பிறக்க, “அந்தப் பொண்ண மட்டும் நீ அப்படிக் கூப்பிட்ட… என்னய கூப்பிட மாட்டியா அப்படி?” என்று கடிந்து கொண்டாள்.
‘ஓ! காதலியே என்ற அழைப்பைக் கேட்கிறாள்’ என புரிந்தவன், “அந்த பொண்ணு உண்மையோ, பொய்யோ… அதனால அதலாம் மறந்திடு” என்று அலட்சியமாக மைக்கேல் சொன்னான்.
“உண்மையோ, பொய்யோ கூப்பிட்டேல… என்னயும் கூப்பிடு” என்றாள் அடமாக.
‘இவ்வளவு ஆசையை இவ மனசுக்குள்ளயே வச்சிருந்தாளா?’ என்ற எண்ணம் வர மைக்கேல், “காதலியே” என்று அழகாக அழைத்தான்.
அன்றைய அழைப்பில் இல்லாதது, இன்றைய அழைப்பில் இருந்தது! அது எதிரில் இருப்பவளை உன்மத்தமாக காதலித்தால் மட்டுமே, குரலில் அப்படி ஒரு காதல் குலைவை கொண்டு வர முடியும்.
“இன்னொரு தடவை” என்று விரும்பி, அவன் விளிப்பைக் கேட்டாள்.
“காதலியே” என்றான் மீண்டும்.
“இன்னொரு…. ” என்று தனம் கேட்கும் முன்பே… “நீயும் சொல்லிக்கோ” என்றான்.
“அதலாம் முடியாது” என்று மில்லிமீட்டர் அளவிற்குச் சின்னதாக வெட்கப்பட்டு, அவனது தோளில் தன் தலையை புதைத்துக் கொண்டாள்.
தனம் குணத்திற்கு, மில்லிமீட்டர் அளவு வெட்கம் மிகையே!!
சற்று நொடிகளில் சென்டிமீட்டர் அளவிற்கு வெட்கம் அதிகமாகி, மெல்ல தலை நிமிர்ந்து, “காதலனே” என்று அத்தை மகன் காதில் சென்று காதல் சொன்னாள்.
அவன் சொன்னதைக் கேட்டதும், “தனம்” என்று ஆசையாகப் பார்த்தான். கண் சிமிட்டிச் சிரித்தாள். பின் காதல் காட்டிப் பார்த்தாள். இருவரின் கண்களிலும் கல்யாண இரவிற்கான ஆவல் வந்தது! அந்தப் பகுதியின் சேவல் கூவும் வரை, தம்பதியினரின் ஆவல் தொடர்ந்தது!!
*********************
ஸ்வீட் ஹார்ட் மாளிகை! ரோமியோ, தன் வீட்டின் பால்கனியிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். “ரோமியோ” என்று அழைத்துக் கொண்டே, ஸ்வீட் ஹார்ட் வந்து நின்றாள்.
“சொல்லு ஸ்வீட் ஹார்ட்”
ஊஞ்சலின் மறுபுறம் அமர்ந்தவள், “ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள்.
“அது உன் முகத்திலயே தெரியுது ஸ்வீட் ஹார்ட்” என்றான் அவள் முகத்தைப் பார்த்து! மீண்டும் கண்கள் புத்தகத்தின் மீது சென்றுவிட்டன!!
“தனம் சிஸ்டர், மைக்கேல் ப்ரோவ கல்யாணம் பண்ண மாட்டாங்களோன்னு பயந்தேன். சரியான முடிவு எடுத்திருக்காங்க”
ரோமியோவிடமிருந்து ஒரு தலையாட்டல், ஒரு ‘ம்ம்’ கொட்டல் மட்டுமே. அவன் கவனமெல்லாம் புத்தகம் மீதே!
“ரோமியோ” என ஒரு தினுசாக அழைத்து, “இப்பலாம் நீ ரொம்ப மாறிட்ட” என்று நகர்ந்து, அவனை ஒட்டி ஊஞ்சலில் அமர்ந்தாள்
“ஏன் இப்படிச் சொல்ற ஸ்வீட் ஹார்ட்?” என்று புத்தகத்தை மூடி வைத்தான்.
“இவ்வளவு நேரம் புக்லதான உன் கவனம் இருந்திச்சு. நான் பேசறதில இல்ல”
“நீ இப்பதான் நம்மள பத்திப் பேசற”
“தெரியல… ஆனாலும் நீ மாறிட்ட” என்று குறும்பாகக் குற்றம் சாட்டினாள்.
‘என்னது… பேச்சு திடீர்னு வேற மாதிரி இருக்கே’ என்றபடி பார்த்தான்.
“காலைல ‘எப்படி இருக்கேன்’னு கேட்டதுக்கு, நீ ஒன்னுமே சொல்லல” என்றாள், குலைந்த குரலில் குறையாக.
‘இதுமாதிரி கேள்விக்கு இதற்குமுன்னும் பதில் சொன்னதில்லையே! அவளுக்கும் தெரியுமே. இப்போது ஏன் எதிர்பார்க்கிறாள்’ என்று யோசித்தான்.
“ஏன் ரோமியோ, உன் லவ் பழசாயிருச்சோ. இப்பவே பழசுனா, அறுபது வயசுல என்னாகும்? செலிப்ரேஷனே இருக்காதோ?”
‘என் லவ்வுக்கு எக்ஸ்பியரி டேட்டே கிடையாதே!’ என்று மனதிற்குள் சிரித்தான். இவள் வேறு எதற்கோ அடிபோடுகிறாள் என்று அவனுக்குப் புரிந்து போயிற்று! அந்த வேறு ஒன்று என்னவென்றும் புரிந்தது!
அவள் எதிர்பார்ப்பு தெரிந்ததும், “உனக்கு கிஸ் வேணும்னா டேரைக்டா கேளு ஸ்வீட் ஹார்ட். அதை விட்டுட்டு என்னோட லவ்வ குறை சொல்லாத” என்றான், சகியே நீயின்றி சந்தோஷம் எனக்கேது என்பது போல!!
“ச்சே ச்சே அப்படிலாம் ஒன்னுமில்ல” என்று ஊஞ்சலில் இருந்து எழுந்து போகப் போனவள் கைப்பிடித்து இழுத்து மடியில் உட்கார வைத்தவன், “ஸ்வீட் ஹார்ட்! உண்மையா சொல்லு, வேண்டாமா?” என்றான், அவள் விரல்களுக்குச் சொடுக்கு எடுத்துக் கொண்டே!
“ம்கூம், வேண்டாம் ரோமியோ” என்று தன் கிறக்கும் பேச்சால், இரக்கமேயின்றி அவனை கிறங்கடித்தாள்.
“ஆனா எனக்கு வேணுமே”
“சரி, இப்போ என்ன செய்ய ரோமியோ?” என்று விழி மொழியில் காதல் மயக்கம் காட்டி, பேசு மொழியில் காதலனை மயக்கினாள்.
“என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு ஸ்வீட் ஹார்ட்”
“சொல்லு சொல்லு” என்றாள், காதலன் மடியில் துள்ளி விளையாடும் மீனாக!
“நான் வேணா இப்ப கொடுக்கிறேன். நீ வேணா அப்புறமா கொடுத்துக்கிறீயா?”
“சூப்பர் ஐடியா” என்றாள், விரும்பியே காதல் வலைக்குள் சிக்கும் காதல் மீனாக!
பிள்ளை பெற்றெடுத்த பின்னும், காதலின் சிறுபிள்ளைத்தனங்கள்! காதல் நிலை முற்றிப் போய், காதலர்கள் காதலாய் சிரித்தார்கள்!!
ரோமியோ தரையில் காலூன்றி அழுத்தி ஊஞ்சலை ஆடச் செய்தான். ஊஞ்சல் காதலர்களைச் சுமந்தபடி ஆடியது. இங்கே, அந்த ஊஞ்சலின் வடிவமைப்பைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்!
இரண்டு இருதய வடிவ காதல் சின்னங்கள்… ஒன்றின் மேல் ஒன்று ஒட்டியது போல்… அதன் ஓரங்களில் இருந்து, அதே இதய வடிவத்தில் சங்கிலிகள் கொண்டு தாங்கிப் பிடிக்கப்பட்டிருந்தது.
முழுதும் காதலின் வண்ணமான சிவப்பு நிறத்தில் இருந்தது. மேலும் சிறிய இரு வெள்ளை நிற தலையணைகள்! அதில் பளபளக்கும் சிவப்பு நிற ஜிகினாவால் ‘ரோமியோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’ என்று பெயர் எழுதப்பட்டிருந்தது!!
அங்கங்கே பந்துகள் பாணியில் தொங்க விடப்பட்ட விளக்கிலிருந்து, மெல்லிய வெள்ளை நிற ஒளி பாய்ந்து கொண்டிருந்தது! இரு புறச் சுவர்களில், அவர்களது காதல் வாழ்க்கையைப் பறைசாற்றும் புகைப்படங்கள்!
தூரத்தில் வெண்ணிலா! அருகாமையில் வெள்ளை உள்ளம் கொண்ட காதலி! வேறென்ன வேண்டும் காதலன் ரோமியோவிற்கு!!
ரோமியோ, “ஸ்வீட் ஹார்ட்” என்று அழைத்தான்.
அவனது அந்த அழைப்பு எப்படி இருந்தது என்றால், வெம்மையான வாணலியில் விழுந்த வெண்ணையின் உருக்கம், மலரை வருடும் மாருதத்தின் மென்மை, சீனிப்பாகில் விழுந்த சில்லுக் கருப்பட்டியின் தித்திப்பு – இவையனைத்தையும் அவள் உணரும்படி இருந்தது.
“கம் ஆன்! லெட்ஸ் செலிப்ரேட் அவர் ஃப்ரெஷ் லவ்” என்றான், ஆடும் ஊஞ்சலில் இருந்தபடி இரு கைகளையும் காற்றில் விரித்து வைத்து!
வானில் உலா வரும் வெண்ணிலாவிற்கு வண்ணம் பூசிடும் அளவிற்கு ஸ்வீட் ஹார்ட் வெட்கப்பட்டாள்!
காதலியின் இதழ் ரேகைகைளை ஆராய்ந்து, எதிர்கால காதல் முத்தங்கள் எப்படி இருக்கும் என்று காதலன் கணிக்க ஆரம்பித்தான்.
இந்த ரோமியோ ஒரு ‘இதழ் ஜோசியக்காரன்’! ஆக மொத்தத்தில், இந்தக் காதல் நாயகன் ரோமியோ ஒரு இதழ் ரசனைக்காரன்!!
*************** (முற்றும்) *****************

