Kathambari Novels
அத்தியாயம் – 10
கிழவிகளும் தங்கராசுவும், ‘ம் ஆரம்பி ஆரம்பி’ என்று மலருக்கு சைகை காட்டவும், “டீச்சர், டீச்சர்” என்று அழைத்தாள். குரல் கேட்டு அஞ்சுதம் வெளியே வந்தார்.
மலர், “அன்னிக்கி சொன்ன மாதிரி பாஸாயிட்டேன். தங்கராச எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு. எங்களுக்கு கல்யாணம் கட்டி வைங்க” என்று நயமான குரலில் அவள் காதலை வெளிப்படுத்தினாள்.
கிழவிகளைப் பார்த்தார் அஞ்சுதம். பின் மலரைப் பார்த்து, “சந்தோசம். அன்னிக்கு நானும் சொன்ன மாதிரி, வீட்டுக்குள்ளாற வர முடியாது. வாசல்லயே நில்லு. முடியலனா அப்படியே வெளிய போயிரு” என்றார் சற்றும் நாகரீகம் இல்லாமல்.
அவர் பேச்சை மலரால் பொறுக்க முடியவில்லை. தங்கராசுவையும், கிழவிகளையும் பார்த்தாள். அவர்கள் மூவரும் பேசாமல் நின்றார்கள். அவர்கள் அஞ்சுதத்திற்கு எதிராகப் பேசமாட்டார்கள் என்று தோன்ற, வேகமாகத் திரும்பி நடந்தாள் மலர்.
சற்றும் தாமதிக்காமல் தங்கராசு ஓடிச் சென்று மலரின் கைப் பிடித்து நிறுத்தி, “மலரு போகாதீக” என்றான்.
“வாசல்லயே நிக்க சொல்றீகளா என்னய?” என்றாள் கோபமாக.
“இல்லே மலரு, செத்த தேரம் பொறுங்கனு சொல்றேன்”
“ஒங்கள பிடிக்கும், அதுக்காக ஒங்க அம்மா பேசறதெலாம் கேட்டுக்க முடியாது” என்று அவன் பிடியிலிருந்து அவள் கையை உருவப் பார்க்க, கிழவிகள் படியிலிருந்து இறங்கி வந்து, அஞ்சுதத்தின் முன் நின்றனர்.
முத்தாச்சி, “ஏன்ட்டி மலரு, செத்த தேரம் பொறுட்டி” என்று சொல்லி, அவளை நிறுத்தி வைத்தார். பேச்சிக்கிழவி அஞ்சுதத்தைப் பார்த்து, “ஏன்ட்டி, அந்தப் புள்ள படிச்சிருக்கிங்கிற ஒரே காரணத்துக்காக, அத வேண்டாம்னு சொல்லாதட்டி” என்று பேச ஆரம்பித்தார்.
“அவ படிச்சவளா? பிகாம் பாஸாக இத்தனை வருஷம் எடுத்திருக்கா! இவளெல்லாம் படிச்சவனு சொல்லாதீக” என்றார் அஞ்சுதம்.
“டிஸ்டிங்ஷன்ல படிச்சி, டிப்டாப்பா டிரஸ் பண்ணி, டக்கரா சம்பளம் வாங்கனாதான் படிச்சவங்கனு அர்த்தமா? அப்படி இல்லட்டி; டிலேயா படிச்சாலும், டீசன்ட்டா பேசிகிட்டு, டிசிப்பிளின்னா வாழ்றவுகளும் படிச்சவுகதான்” என்றார் பேச்சிக்கிழவி புதுமொழியாய்.
ஒருகணம் அனைவரும் பாகுபலி வில்லனின் வசனங்களை பழவிளை கிராமத்தில் பேசுவது போல் உணர்ந்தனர். முத்தாச்சி, “பேச்சி, நம்ம இன்ங்கிலீஷ் இவுகளுக்கு புரியாதுட்டி. நீ புரியற மாதிரி பேசு” என்றார்.
“செரிட்டி” என்ற பேச்சிக்கிழவி… அஞ்சுதத்திடம், “ஏன்ட்டி படிச்சேன் படிச்சேனு சொல்றீயே? எதுக்குப் படிச்ச?” என்று கேட்டார்.
“ஏன்? நான் வேல பார்க்கிறது ஒங்களுக்குத் தெரியாதா?” – அஞ்சுதம்.
“அடிபோடி! படிக்கிறது எதுக்கிட்டி, ஒரு விசயத்தை புரிஞ்சிக்கிறதுக்கு! எது புடிக்கும், எது புடிக்காததுனு தெளிவா சொல்றதுக்கு! தைரியமா யார்முன்னயும் நின்னு பேசுறதுக்கு!
நீ, ஒனக்கு பிடிக்காதத பத்தி, பெத்த தாய்கிட்டயே சொல்லல. ஆனா அந்த புள்ள, எனக்கு இந்த பையனைத்தான் புடிச்சிருக்குன்னு தெளிவா சொல்லுது” என்றார் பேச்சிக்கிழவி.
உடனே முத்தாச்சி, “செரியா சொன்ன பேச்சி. இவ பிடிக்கலனு வாய துறந்து சொல்லிருந்தா, நாம என்ன வலுக்கட்டடயாம கல்யாணம் கட்டி வெச்சிருக்கவா போறோம்” என்றார்.
அடுத்து பேச்சிக்கிழவி, “கண்டிப்பா நீ திட்டுவேனு தெரியும். இருந்தும் தைரியமாக இங்கன வந்து நிக்குதுல… அது தைரியமான புள்ள. அவள சமாளிக்க முடியாதுனு தெரிஞ்சு, வீட்டுக்குள்ளாற சேர்க்க மாட்டிக்கப் பார்த்தியா, நீ தைரியம் இல்லாதவ!!” என்றார்.
அதற்கடுத்து முத்தாச்சி, “அப்படிச் சொல்லுட்டி பேச்சி. இவ தைரியம் இல்லாதவனு இசக்கி பிரச்சனை அன்னிக்கே தெரிஞ்சதுல” என்றார்.
“ஒன் பையன் மனசுல என்னா இருக்குதுனே நீ புரிஞ்சிக்கலட்டி! ஆனா அந்தப் புள்ள என் பேரன் மனசப் புரிஞ்சு வெச்சிருக்கு; அவனுக்கு அவள ரெம்ப பிடிக்கும்னு புரிஞ்சதாலதான்… இங்கன வந்து நின்னு, நீ இப்படி பேசறதெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கு” என்றார் பேச்சிக்கிழவி.
“இவ யாரத்தான் புரிஞ்சிக்கிட்டா?” என்று நொடித்தார் முத்தாச்சி.
பேச்சிக்கிழவி, “படிப்பு முக்கியம்தான்ட்டி. இல்லனு சொல்லல. ஆனா படிக்கலங்கிற ஒரு காரணத்த சொல்லி, ஒருத்தர பிடிக்கலனு சொல்றது தப்பு! அந்தத் தப்பை நீ செஞ்சது மட்டுமில்லாம இன்னொருத்தரும் செய்வாகனு நினைக்கிற பார்த்தியா, அது பெரிய தப்புட்டி” என்றார்.
கிழவிகள் இருவரும் பேசப் பேச, அஞ்சுதம் முகம் முழுவதும் கேள்விக் குறிகள்… கோபத்தின் ரேகைகள்.
பேச்சிக்கிழவி, “கடைசியா ஒன்னு சொல்றேன்ட்டி நல்லா கேட்டுக்கோ! ஏன்ட்டி மலரு நீயும்தான். படிக்கலைனு அந்தப் பயல ரெம்ப மட்டமா நெனக்காதீக. நம்ம எல்லாரவிட ஒசந்தவன் தங்கராசுதான்!” என்றார்.
“ஏன்னு சொல்லுட்டி, அப்பம்தான் புரியும்” என்றார் முத்தாச்சி.
“சொல்றேன்ட்டி” என்ற பேச்சிக்கிழவி, “அன்பா பேசாம, அதட்டிப் பேசற அம்மா! நிதானமா பேசாம, நிறுத்தாம பேசற பொண்டாட்டி! ஒழுங்கா பேசாம, ஓயாம பேசற ஆச்சிங்க! ரெம்ப பிடிச்சதால இவிய அம்புட்டு பேரையும் புரிஞ்சி நடக்கிறான்ல… அதனால!” என்றவர், தன் கடமை முடிந்தது போல மேல் மூச்சு வாங்க திரும்பி நடக்க ஆரம்பித்தார்.
“எப்படி முத்து, இந்தப் பேச்சியோட பேச்சு” என்று கேட்டார். அவருடன் நடந்த முத்தாச்சி, “சூப்பர்ட்டி, சோடா மட்டும்தான் இல்லே” என்றுவிட்டு,
“பேச்சி… ஒத்துப்பாளா அஞ்சுதம்?” என்றார்.
“இதுக்கு அன்னிக்கி ஏதோ சொன்னாளுகளே” என்று யோசித்தார்.
“என்னாட்டி?”
“ஆங், வெயிட் ஆண்டு வாட்ச்” என்ற பேச்சிக்கிழவி, சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த வயர் கட்டிலில் சென்று அமர்ந்தார். கூடவே முத்தாச்சியும் அமர்ந்து கொண்டார்.
கிழவிகள் அமரும் வரை அவர்களையே பார்த்திருந்த அஞ்சுதம், “லே, தங்கராசு ஒங்க ஆச்சிகளுக்கு கழஞ்சி வாங்கிக் கொடு. இன்னிக்கு ரெம்ப பேசிருக்காக” என்றுவிட்டு எதுவும் கூறாமல், ‘இங்கயே நில்லு!’ என்பது போல் மலரைப் பார்த்துவிட்டு உள்ளே போகப் போனார்
மலருக்கு கோபம் வந்துவிட… திரும்பி வீட்டிற்கு நடந்தாள். அவள் கைப் பிடித்து ராசு தடுத்து நிறுத்தப் பார்த்தான். அவன் கையை உதறி, “ப்ச் வுடுங்க தங்கராசு” என்றாள்.
மலர் அவனை அழைக்கும் விதத்திலே அவள் கோபத்தின் அளவைப் புரிந்தவன்… அவள் கையைப் பிடித்து விறுவிறுவென்று அஞ்சுதத்தை நோக்கிச் சென்று, “அம்மா” என்று அழைத்தான்.
மகனின் அம்மா என்ற அழைப்பைக் கேட்டதுமே உணர்ச்சிவசப்பட்டு நின்றார் அஞ்சுதம்.
“அம்மா எனக்கு மலரத்தான் ரெம்ப பிடிச்சிருக்கு” என்றான்.
உடனே, “செரி தங்கராசு” என்றார் அஞ்சுதம்.
“மலரத்தான் கல்யாணம் கட்டனும்னு ஆசைப்படறேன்”
“செரி தங்கராசு” என்று அவன் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்.
“வேற யாரையும் நீங்க கல்யாணம் கட்டி வச்சா, நான் சந்தோஷமா இருக்க மாட்டேன். புரிஞ்சிக்கோங்க”
“செரி தங்கராசு” என்றார் மகனைப் புரிந்த தாயாய்.
“நாளே அவுக அப்பாகிட்ட போயி பெண்ணு கேட்கலாம்”
“செரி தங்கராசு” என்று ஒத்துக்கொண்டார்.
“எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் செய்ங்க” என்று மலரும் ராசுவும் அவர் காலில் விழுந்தவுடன், “ரெண்டு பேரும் நல்லா இருங்க” என்று அஞ்சுதம் ஆசீர்வாதம் செய்தார்.
மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “இன்னிக்குத்தான் அம்ம கூட பேசனும்னு தோனிச்சா. எம்புட்டு நாளு அம்ம ஒன் பேச்சக் கேட்க, காத்திருந்தேன் தெரியுமா” என்றார் தழதழுக்கும் குரலில். “இம்புட்டு நாளும் ஒத்தேல இருக்க மாதிரி தோனும்… கஷ்டமா இருக்கும். இப்பம் அம்மா ரெம்ப சந்தோசமா இருக்கேன்” என்று கண்ணீர் விட்டார்.
“நான் இருக்கேல ஏன் ஒத்தேல இருக்க மாதிரி தோனுது… அதுகணக்கா இனிமேட்டு தோனக்கூடாது” என்று அவர் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “என்னா அம்மா, சின்னப்புள்ள கணக்கா அழுதுகிட்டு இருக்கீக. ஆச்சி நீங்களாவது சொல்லுங்க” என்றான்.
அஞ்சுதம், “போதும், அவிய யாரு நம்ம ரெண்டு பேருக்கும் இடையில. எதுனாலும் நேரடியா நீயே என்கிட்ட பேசுப்பா ” என்றார்.
“செரி, அழாதீக” என்று அம்மாவை அரவணைத்துக் கொண்டான்.
அக்கணம், “டீச்சர், மே ஐ கம் இன் ” என்றாள் மகனுக்கும் அம்மாவிற்கும் இடையே வரப்போகும் மருமகளான மலர்.
“யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம், மை மருமகளே” என்று சிரித்து, அவளை அருகே அழைத்து அரவணைத்துக் கொண்டார்.
ஒருபக்கம் மகன், இன்னொரு பக்கம் மருமகள் என்று மகிழ்வாக நின்ற அஞ்சுதத்தைப் பார்த்த முத்தாச்சி, “என்னாட்டி நடக்குது அங்கன” என்று பேச்சிக்கிழவியிடம் கேட்டார்.
“ஒன்னுமில்ல முத்து, மூக்க நேராவும் தொடலாம். சுத்தியும் தொடலாம். நாம சுத்தி தொடப் பாத்தோம்! அம்புட்டுத்தான்” என்று பேச்சிக்கிழவி சொல்ல, இருவரும் எழுந்து அஞ்சுதத்தின் அருகில் வந்து நின்றனர்.
பேச்சிக்கிழவி மகளிடம், “ஏன்ட்டி ஒன் மகன் ஒன்மேல அம்புட்டு பாசம் வெச்சிருக்கான், ஒரு வார்த்த யாரையும் ஒன்ன சொல்ல விடமாட்டான். அது தெரியாம கஷ்டமா இருக்குனு கரையற” என்றார்.
மருமகளிடம் முத்தாச்சி, “மகன் கல்யாணம் நடக்கப் போகுது இப்பம் அழுதுகிட்டு நிக்கிற… அழாதட்டி” என்றார்.
பின் இருவரும் பேரனையும் மலரையும் ஆசீர்வாதம் செய்தனர்.
சற்றுநேரம் ஐவரும் சந்தோசமாகப் பேசினார்கள். மலர் அஞ்சுதத்திடம் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு… தங்கராசுவைப் பார்த்து, “ராசு மாமா, ஒரு நிமிசம் எங்கூட வர்றீகளா” என்று கேட்டாள்.
அவனும் சரியென்று அவளுடன் நடக்க… கிழவிகள் இருவரும் அந்தச் சோடிக் கிளிகளைப் பின் தொடர்ந்தனர்.
மலர், “இப்பம் என்னாத்துக்கு எங்க பொறவாலயே வந்து, கரைச்சல் (disturb) தர்றீக?” என்று கேட்க, “ஏன்ட்டி, ஒனக்குத் தேவைப்படுறப்ப கரைச்சலா தெரியல. இப்பம் தெரியுதோ?” என்றார் பேச்சிக்கிழவி.
உடனே அஞ்சுதத்திடம், “பாருங்க டீச்சர், இந்த ரெண்டு ஸ்டுடென்ட்ஸ் ரெம்ப சேட்டை பண்றாங்க” என்று மலர் முறையிட, “அத்த! அம்மா!! அவுக பேசட்டும்; உள்ளாற வாங்க” என்று கிழவிகளை அதட்டிவிட்டு உள்ளே சென்றார் அஞ்சுதம்.
நடந்தபடி பேச்சிக்கிழவி, “ஏன்ட்டி முத்து இவளுக அடிச்சிக்காட்டாலும் புடிச்சிக்கிட்டாலும் நம்மளத்தான் இழுப்பாக” என்று சொல்ல, “ஆமாட்டி பேச்சி செரியா சொன்ன” என்றபடி முத்தாச்சியும் சென்றார்.
அவர்கள் உள்ளே சென்றதும் வீட்டின் பின்னே இருக்கும் தோட்டத்திற்கு ராசுவும் ராசாத்தியும் வந்து நின்றார்கள். தங்கராசு, “சொல்லுங்க மலரு, இப்பம் சந்தோசமா” என்று கேட்க, அமைதியாக நின்றாள்.
“என்னா மலரு, பேச மாட்டிக்கீக”
“அதேன் ஒங்க ஆச்சி சொன்னாகள. நான் ரெம்ப பேசறேனு. இனிமேட்டு பாருங்க நான் பேசவே மாட்டேன். நீங்களா வந்து பேசினாலும் பேச மாட்டேன்” என்று, பேசமாட்டேன் என்றே நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தாள்… தங்கராசு சிரிக்கும் வரை.
“என்னா சிரிக்கிறீக?”
“பேச மாட்டேன்னு சொல்றதுக்கே எம்புட்டு பேசறீக”
அசட்டுத் தனத்தின் அடையாளமாக, தன் தலையில் தட்டியவள், “ராசு மாமா எனக்குப் பரிசு தாரீகளா?” என்றாள்.
“இப்பம் எதுக்கு மலரு?”
“அதான் ஒங்க அம்மா ஒத்துக்கிட்டாகளே… அதுக்கு”
“ம்ம்ம், நான் டவுனுக்குப் போறப்ப வாங்கித் தாரேன்”
“அப்போதானா… டக்குனு வேணும் ராசு மாமா” என்றாள் அடமாக.
சட்டென அவளைப் புரிந்து கொண்டு, “மலரு, நீங்க ஏதோ பரிசு வாங்கி வச்சிருக்கீக. அதேன் இப்படி பேசுறீங்க. செரியா?” என்றான்.
“செரிதான் ராசு மாமா, கண்ண மூடுறீகளா, தரேன்” என்றதும், அவன் கண்களை இறுக்க மூடிக் கொள்ள, ‘ப்ச்சக் ப்ச்சக்’ என்று பஞ்சுமிட்டாய் முத்தங்களை அவன் கன்னங்களில் பதித்துவிட்டாள். அதுமட்டுமின்றி, “நீங்களும் இதுகணக்கா தாரீகளா?” என்று கேட்டு நின்றாள்.
எதிர்பாராத அவள் முத்தத்தில் வெட்கப்பட்டு நின்றவன், “கட்டிக்கிட்டு பொறவு தாரேன்” என்றான் இன்னும் வெட்கப்பட்டு.
‘தங்கராசு’, ராசு’, ‘ராசு மாமா’ என்று விதவிதமாக அவனைக் கெஞ்சியும் கொஞ்சியும் கேட்டுப் பார்த்தாள். அப்போதும் அவன் திருமணத்திற்குப் பிறகே என்று நின்றான். ஆனாலும் எப்படியோ அவனை அதட்டி, உருட்டி கன்னத்து முத்தமொன்றை பெற்றுக் கொண்டாள், காதல் கனிந்த இந்த நாளை கொண்டாட வேண்டி!
சொன்னது போல் அஞ்சுதம், அடுத்தநாள் செல்லதுரை வீட்டிற்குச் சென்று, முறைப்படி மகனிற்காக மலரைப் பெண் கேட்டார். ஏற்கனவே மலர் மனம் தெரியும் என்பதால் செல்லதுரையும் ஒத்துக் கொண்டார்.
அன்றே நிச்சயதார்த்த தேதியை முடிவு செய்தனர். அந்தத் தேதியில் இனிதே நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதியும் குறிக்கப்பட்டது. குறிக்கப்பட்ட தேதியில் திருமணமும் நடந்தது. அஞ்சுதம் அழைத்ததின் பேரில் ஊர் மக்கள் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
தன் மகனை, மலரை திருமண கோலத்தில் பார்த்துப் பார்த்து அஞ்சுதம் ஆனந்தம் அடைந்தார்.
மலர், தங்கராசு திருமணத்திற்கு இசக்கி, கண்ணன் தம்பதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அக்காவையும் அழைக்க வேண்டும் என்று மலர்தான் தன் அப்பாவிடம் சொல்லியிருந்தாள். அவரை இசக்கியிடம் கண்ணனிடம் பேசவும் வைத்திருந்தாள்.
தன் மகள்களை, மருமகன்களைப் பார்க்கப் பார்க்க செல்லதுரைக்குச் சந்தோஷமாக இருந்தது. எனினும் சிறு பயம் உள்ளுக்குள் இருந்தது.
இரு மகள்களும் அவர்களாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அல்லவா! அது நன்றாக இருக்க வேண்டுமே என்ற பயம் அவருக்கு. வரும் நாள்களில் அவர்கள் வாழப்போகும் வாழ்க்கையால் மட்டும்தான் அவருக்குள்ளே இருக்கும் பயத்தைப் போக்க முடியும்.
காலப்போக்கில் அவரது பயம் நிச்சயம் நீங்கும்! ஏனெனில் அவருக்கு அமைந்திருக்கும் மருமகப் பிள்ளைகள் அப்படி!!
பேரன் திருமணம் முடிந்த சந்தோசத்தில், கிழவிகள் இருவரும் விருந்துச் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தனர். “எல்லாருக்கும் கார்டு போட்டு முடிச்சாச்சா பேச்சி” என்றார் முத்தாச்சி.
“இல்லே முத்து, ஒன்னொரு காரடு மிச்சம் இருக்கு”
“என்னாட்டி அது?”
“எண்டு காரடுதான்… போட்டுருவோமா?” என்று பேச்சிக்கிழவி கேட்க, சாப்பிட்டபடியே ‘சரி’ என்று முத்தாச்சியும் சைகை செய்ய, ‘end card’ போடப்பட்டது.
Thanks you so much for choosing to read this story! Kindly share your feedback, it means a lot to me!!

