Kathambari Novels
அத்தியாயம் – 7
இசக்கியை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, மலர் உள்ளே சென்று செல்லதுரையை அழைத்து வந்தாள். “என்னா விசயம்” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தார் செல்லதுரை.
அதற்குள்ளே திருமணக் கோலத்தில் வந்தவர்களைப் பார்த்து அந்தத் தெருவில் உள்ள ஆட்கள் மலர் வீட்டின் முன் கூடியிருந்தனர். அப்படியே விடயம் பரவி… பக்கத்துத் தெருவில் உள்ளவர்களும் வந்துவிட்டார்கள். ‘தங்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்பது போல் கூட்டத்தில் தங்கராசுவும் கிழவிகளும் சேர்ந்து கொண்டனர்.
மாலையும் கழுத்துமாக நின்ற இசக்கியையும் கண்ணனையும் பார்த்த செல்லதுரைக்கு முதலில் பேச்சே வரவில்லை. சற்று தன்னைச் சமன் படுத்திக் கொண்டு, “என்னா மலரு, இவ இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறா. எம்புட்டு தைரியம் பாரேன்” என்று கோபமும், கவலையும் கலந்த குரலில் கேட்டார்.
மலர் எதிர்பார்த்தது போல செல்லதுரை கோபப்படவும், இசக்கியைப் பார்த்து, ‘அப்பாகிட்ட மன்னிப்பு கேளு’ என்று மலர் கண்ணசைத்துக் கூப்பிட்டாள். இசக்கியும் அதைப் புரிந்து, “ப்பா மன்னிச்சிருங்க” என்று சொல்லிக் கொண்டே ஓடிவந்து அவர் முன்னே நின்றாள்.
செல்லதுரை, “மலரு, முதல இவள அங்கிட்டு போ சொல்லு. இங்கன நிக்க சொல்லாத. போ சொல்லு மலரு” என்று இசக்கியை விலக்கினார்.
“அப்பா… எனக்கு வேற வழி இல்லாமதான் இப்படி பண்ணேன்” என்று இசக்கி கண்ணீர் சொரிய ஆரம்பித்தாள்.
“என் பேச்ச கேட்காதவ எங்கிட்ட பேசவே வேண்டாம். மலரு சொல்லு புள்ள; இவளால நமக்கு எம்புட்டு தலகுனிவா போச்சு” என்று சொல்லி, கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தார்.
“மலரு நீயாவது சொல்லுட்டி” என்று மலரிடம் இறைஞ்சினாள் இசக்கி. இது இப்படித்தான் நடக்குமென மலருக்குத் தெரியும். அதனால் இசக்கி கெஞ்சினாலும் எதுவும் பேசாமல் நின்று கொண்டாள்.
செல்லதுரை கோபத்தைக் கட்டுப்படுத்தி… பெருமூச்சுவிட்டு நிமிர்ந்து பார்த்தார். அவரது கலங்கிய கண்களில் கூட்டத்தில் ஒருவனாக நின்ற தங்கராசு விழுந்தான். அவனைப் பார்த்தபடியே, “இப்படி ஒரு பையன வேண்டாம்னு சொல்லிட்டு, வேறாள கல்யாணம் செய்ய எப்படித்தான் ஒனக்கு மனசு வந்திச்சோ” என்றார் இசக்கியைப் பார்த்து.
பிரச்சனையின் போக்கு மாறுவது போல் இருந்ததால், ஏனோ மலருக்கு உள்ளுக்குள் உறியடிக்கத் தொடங்கிவிட்டது.
செல்லதுரை பேச்சு கண்ணன் பெற்றோருக்கு கோபம் வரவழைத்தது. “கண்டமேனிக்கு (without think) பேசாதீக” என்றார் கண்ணனின் தந்தை.
கடுங்கோபத்துடன் செல்லதுரை, “யாருங்க கண்டமேனி பேசறா. நான் சொல்றது நெசம்” என்றார்.
“எங்க பையனை போய் கண்டவன் கூட ஒத்துப் பார்க்காதீக” என்று கோபமானார் கண்ணனின் தாயார்.
“யார கண்டவனு சொல்றீக” என்று கூட்டத்தில் இருந்து குரல் வந்தது. “ஒங்க பிரச்சனையை மட்டும் பேசுங்க. அவுகள பத்தி பேசாதீக” என்றது அதே கூட்டத்தில் மற்றொரு குரல்.
செல்லதுரை, “பாத்தீகளா, அவுகள பத்தி தப்பா பேசினா எம்புட்டு பேரு சண்டைக்கு வராகனு. பெத்தவக ஓட்டு பிள்ளைக்கு செல்லாது. நீங்களே ஒங்க பையன பத்திச் சொல்லாதீக” என்றார்.
உடனே கண்ணனின் தாயார், “இது அவன் ஊரு. அதேன்” என்றார் செல்லதுரையிடம்.
கண்ணன், “அம்மா சும்ம இருங்க. அவுக மட்டும் இல்லாட்டி இந்தக் கல்யாணம் நடந்திருக்காது தெரியுமா” என்று விசுவாசத்துடன் பேசி, விவகாரத்தைப் பெரிதாக்கினான்.
மலர், “இசக்கி, சார சும்ம இருக்க சொல்லுட்டி” என்று முணுமுணுத்தாள்.
அதுவரை மணமாலையுடன் நிற்பவர்கள் மீதிருந்த அத்தனை பேரின் பார்வையும், கவனமும்… கண்ணன் வார்த்தையைக் கேட்டதற்குப் பின், தங்கராசு மேல் வந்து நின்றது.
செல்லதுரையும், “என்னா தங்கராசு? இவுக என்னா சொல்றாக. இந்தக் கல்யாணத்த நீங்கதான் நடத்தினீகளா” என்று கேட்டபடியே தங்கராசு அருகில் சென்றார்.
மலர் எதெல்லாம் நடக்கக் கூடாதென்று நினைத்தாளோ, அதெல்லாம் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தது.
“செல்லத்துர” என்றார் பேச்சிக்கிழவி.
செல்லதுரை, “ஆச்சி நீங்க இடையில வராதீக” என்றவர், “சொல்லுங்க தங்கராசு. நீங்கதான் இதுக்கெல்லாம் காரணமா?” என்று அவன் முகம் பார்த்து அமைதியாகக் கேட்டார்.
“….”
“பதில் சொல்லாம அமைதியா நிக்கிறீக. அப்பம் அது நெசம்தான். இல்லேயா? ஆமா நீங்க யாரு எம்புள்ளைக்கு கல்யாணம் கட்டி வைக்க. நான் அங்கன இருந்து இங்கன வந்ததே இதுகணக்கா எதுவும் நடக்கக் கூடாதுனுதான. இப்பம் அதுக்கு அர்த்தமே இல்லாம போயிருச்சே”
” – – – “
“அன்னிக்கி இசக்கி ஒன்ன வேண்டாம்னு சொன்னப்ப, ஒன் அம்மா என்கிட்ட என்னா காட்டமா எங்கள பேசுனாக. இப்பம் நீ பண்ண காரியத்துக்கு நானும் ஒன் அம்மாகிட்ட காட்டமா பேசவா” என்றதுமே, “அம்மைக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லே. அவுகள இதுல இழுக்காதீக” என்று எச்சரிப்பது போல் ஒற்றை விரல் நீட்டி கோபமாகப் பேசினான் தங்கராசு.
தங்கராசுவின் கோபம் அங்கே நின்றவர்களுக்குப் புதிது. இதுபோல் அவன் பேசியதே கிடையாது. முதலில் இப்படிப் பேசுவதற்கு தேவையே இருந்ததில்லை. ஏனென்றால் அஞ்சுதம் பற்றி யாரும் பேசமாட்டார்கள். இன்று செல்லதுரை பேசியதும், அவனும் பேசிவிட்டான்.
இத்தனை பேர் முன்னால் அவரைப் பேசிய முறையால்… அவருக்குத் தெரியாமல் இசக்கிக்குத் திருமணம் செய்து வைத்ததால் தங்கராசுமீது செல்லதுரைக்குச் சரியான கோபம். அந்தக் கோபத்தில், “என்னாலே கை நீட்டி பேசற?” என்று அவன் சட்டையைப் பிடிக்கப் போனார்.
அப்போது விடயம் அறிந்து அங்கே வந்த அஞ்சுதம் “செல்லதுரை” என்று தங்கராசு முன்னே வந்து நின்றனர். மகன்மீது கை வைக்கப் பார்த்தார் என்று செல்லதுரை மீதும், அதற்குக் காரணமான மலர் மீதும், அவருக்கு நிரம்ப கோபம் இருந்தது.
அஞ்சுதம் வந்ததும்… மலர், அவள் அப்பாவின் பக்கம் வந்து நின்றாள்.
அஞ்சுதம் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே, “தங்கராசு மேல கை வைக்கிற வேல வேண்டாம் செல்லதுரை” என்று கத்தினார்.
எல்லோரும் இசக்கி, கண்ணன் பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு, அஞ்சுதம், செல்லதுரை பேசுவதை வேடிக்கைப் பார்த்தனர்.
செல்லதுரை, “என் புள்ளைக்கு எனக்கே தெரியாம கல்யாணம் கட்டி வச்சிருக்கான். அவன நான் சும்ம விடனுமா?” என்று கத்தினார்.
அஞ்சுதம், “தங்கராசு மட்டும்தான் காரணம்னு ஒங்களுக்கு தெரியுமா” என்று கேட்டு பிரச்சனையின் போக்கை மாற்றினார்.
உடனே மலர் பயந்து முழித்தாள். இப்போது அவளுக்கு உள்ளுக்குள் உறியடிப்பது போலெல்லாம் இல்லை. இருக்கும் பதற்றத்தில், பயத்தில் உறிப்பானையே அவள்தான் என்பது போல் இருந்தது.
செல்லதுரை, “வேற யாரு காரணம்?” என்றார் அஞ்சுதத்திடம்
“ஒங்க பெண்ணுதான்” என்றார் அஞ்சுதம் தெளிவாக.
உடனே செல்லதுரை இசக்கியை பார்த்தார். அஞ்சுதம், “நான் சொல்றது இசக்கி இல்லே. இவள” என்று மலரை நோக்கி கைகாட்டினார்.
செல்லதுரை, “மலரு, இவுக என்னா சொல்றாக?” என்று அதிர்ச்சியில் கேட்க, அங்கிருந்த அனைவரின் பார்வையும் தங்கராசுவிடம் இருந்து விலகி, மலரின் மேல் விழுந்தது. மலர் அமைதியாக நின்றாள்.
அஞ்சுதம், “அன்னிக்கி என் வீட்டு வாசல்ல வந்து நின்னு சட்டமா பேசுன. இன்னிக்கி என்னாச்சு, இப்படி நிக்கிற. ஒங்க அப்பா கேட்கிறாகள, சொல்லு” என்றார்.
ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக நின்ற செல்லதுரை, “மலரு, அவுக வீட்டுக்கு நீ போனியா… அங்கன ஒனக்கு என்னா சோலி” என்றார்.
மலர், “அப்பா, நீங்க வீட்டுக்குள்ளாற வாங்க, நான் பதனமா எடுத்துச் சொல்றேன்” என்று கெஞ்சினாள்.
ஒருபக்கம் அஞ்சுதம், “எதுக்கு சும்மா மழுப்புற? வசமா மாட்டிக்கிட்டு. இங்கனயே சொல்லு” என்று மலருக்கு நெருக்கடி தந்தார்
மற்றொரு பக்கம், “மலரு, சொல்லு” என்றார் அழுத்தமாக செல்லதுரை.
மலர் பேசாமலே நிற்கவும்… அஞ்சுதம், “நான் சொல்றேன் செல்லதுரை. இவ கேட்டதுனாலதான் தங்கராசு ஒத்தாசை செஞ்சிருப்பான்” என்று ஊகத்தில் சொன்னவர், “அம்மா சொல்றது செரிதான தங்கராசு” என்று அதை உறுதிப்படுத்திக் கொள்ள தங்கராசுவிடம் கேட்டார்.
மலருக்கு, அவன் என்ன பதில் சொல்வான் என்று தெரியும். இருந்தாலும் ஒரு நப்பாசை; அவன் ஏதாவது சொல்லி சமாளிப்பான் என்று. ஆனால் அவனோ, “செரிதான் அம்ம” என்று சொல்லி, மலரைச் சங்கடப்படுத்தி விட்டான்.
அஞ்சுதம், “சினிமாக்கு போற அன்னிக்கி தங்கராசு எங்கனு கேட்டியே. அதுகூட ஒத்தாசை கேட்கத்தான” என்றார் மலரிடம்.
பேச்சிக்கிழவி, “அதேன் ரீசார்ஸ் பத்தி” என்று இடையில் வர, “நீங்க பேச வேண்டாம்” என்று அஞ்சுதம் அதட்டிவிட்டு… மலரிடம், “நேத்து ராவைல என்னாத்துக்கு தங்கராசுக்கு போன் போட்ட? முதல அதுக்கு காரணம் என்னானு சொல்லு” என்று கேட்டார்.
செல்லதுரை சின்ன மகளைப் பார்த்து, “என்னா மலரு, அந்த பயலுக்கு என்னாத்துக்கு போன் போட்ருக்க” என்றதற்கு, “செல்லதுரை பய கியனு பேசாதீக” என்றார் அஞ்சுதம்.
அதற்கு மேல் மலரால் அமைதி காக்க முடியவில்லை. “ஆமா, நான்தான் தங்கராசுகிட்ட இசக்கியோட கல்யாணத்துக்காக ஒத்தாசை வேணும்னு கேட்டேன். இப்பம் அதுக்கு என்னா?” என்றாள்.
அஞ்சுதம், “போதுமா செல்லதுரை” என்றார்.
அப்பா நம்பிக்கையைப் பொய்யாக்கி விட்டோமே என்று கலங்கி மலர் அவரைப் பார்க்க, “மலரு, அப்பம் இசக்கி கல்யாணம் கட்டப் போறது, ஒனக்கு மின்னாடியே தெரியுமா புள்ள” என்றார் கண்கலங்க.
“அய்யோ அப்பா” என்று அவளும் கலங்கினாள்.
“தெரிஞ்சும் அப்பாகிட்ட ஒன்னுமே சொல்லலேயே. இசக்கியவிட ஒன்ன நம்புனேன். இப்படி என்னய கூனிக்குறுகி நிக்க வச்சிட்டியே” என்று சொன்னவர், அதன்பின் ஒன்றும் பேசவில்லை… பேச இயலவில்லை.
மலர், “வீட்டுக்குள்ள வாங்கப்பா… ஒங்ககிட்ட பேசனும்” என்றாள்.
“இன்னும் என்னா பேசனும்” என்றவருக்கு, அதற்குமேல் அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. வீட்டிற்குள் போகும் முன் இசக்கியைப் பார்த்து, “ஒன் இஷ்டப்படியே கல்யாணம் கட்டிக்கிட்டேல, இனிமே ஒன் சங்காத்தமே வேண்டாம். என் எதுத்தால வந்திராத. ஒன்னய யாரு கவனிப்பாகனு பார்ப்போம்” என்று கோபமாகச் சொல்லவிட்டுப் போனார்.
“கல்யாணம் கட்டி வெச்சவகளுக்கு, அவிகள எப்படிப் பாத்துக்கனும்னு தெரியும்” என்று சொன்ன கண்ணனின் தாயார், “நீ வா இசக்கி, நாம கிளம்பலாம்” என்று அவளை அழைத்தார்.
இசக்கி, “ஒரு நிமிசம்ங்க அத்தே” என்றுவிட்டு, தங்கை நிற்கும் பக்கம் சென்று, “மலரு” என்று தயங்கியவாறு அழைத்தாள்.
“மன்னிப்பு கேட்கச் சொன்னா… மாட்டி விட்டுப் போற” என்றாள் மலர்.
“இல்லட்டி”
“பேசாம போயிரு. அம்புட்டு கோவமா இருக்கேன்”
கண்ணீருடன் இசக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தாள். ஒரே உடன்பிறப்பு திருமணமாகி இப்படிச் செல்வதை மலர் விரும்பவில்லை. ஆதலால், “இசக்கி” என்று ஓடிச் சென்று, “அப்பைக்கப்ப போன் போடுட்டி. அப்பா நாளாவட்டத்தில செரியாயிருவாக” என்றாள்.
இசக்கி கண்ணீரைத் துடைத்துவிட்டு, “செரி மலரு” என்றதும், அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கண்ணன் குடும்பத்தார் கிளம்பினர்.
இதற்கிடையே கூட்டத்தைப் பார்த்து அஞ்சுதம், “அவியகளுக்குத்தான் தங்கராச பத்தி தெரியாது. ஒங்களுக்கு தெரியும்ல அவன பத்தி. அவன் சட்டைய பிடிக்கிற வரைக்கும் சும்மயே இருக்கீக” என்றார்.
“இல்லே டீச்சர். நாங்க சொன்னோம்” என்றார்கள் கும்பலாக.
“போதும்… விரும்பினவுக கட்டிக்கிட்டு வந்து நிக்கிறாக. அது அவிய குடும்ப விசயம். நீங்க ஏன் கூட்டம் போடறீக? போங்க, போய் அவுகவுக சோலியப் பாருங்க” என்று அதிகாரமாகச் சொன்னதும், கூடியிருந்த கூட்டம் சலசலத்துக் கொண்டே கலைந்துவிட்டது.
சில நொடிகளிலே அங்கே இருந்தவர்கள் எல்லாரும் சென்றிருந்தார்கள். கடைசியில் கிழவிகள், தங்கராசு அங்கேயே நிற்கவும், “ம்ம் வீட்டுக்கு கிளம்புங்க” என்றார் அஞ்சுதம்.
தங்கராசுவிற்கு அவனுக்காக அம்மா பேசியது ஆச்சரியமாக இருந்தது. மலருக்காக அவன் பேசாதது கஷ்டமாக இருந்தது. அதனால் போகாமல் இன்னும் நின்றான். ஆச்சிகளும் அவனுடன் நின்றனர்.
உடனே அஞ்சுதம், “ம் நடங்க” என்று கோபமாகச் சொன்னார். ஆச்சிகள் “வீட்ல போய் பேசிக்கலாம்… வா” என்று பேரனிடம் மெல்ல சொல்லி, அவனைக் கூட்டிக் கொண்டு நடக்கையில், “டீச்சர் மே ஐ கம் இன்” என்று பவ்யமாகக் குரல் வந்ததும், நால்வரும் திரும்பினர்.
குரலுக்கு சொந்தக்காரி மலர்தான். அவளுக்கு அஞ்சுதம் மீது சரியான கோபம். ஒன்று பிரச்சனையை இவ்வளவு பெரிதாக ஆக்கிவிட்டார் என்று. மற்றொன்று அவள் அப்பாவை அதிகாரமாகப் பெயர் சொல்லி அழைத்துப் பேசினார் என்று.
அவர்கள் அருகில் வந்து நின்ற மலர், “என்னா இங்கிலீஷ் புரியலையா? இல்லே பதில் சொல்ல புடிக்கலயா” என்றாள்.
“ஏய், என்னா வேணும் உனக்கு?” என்றார் அஞ்சுதம் எரிச்சலாக.
“நீங்க மட்டும் பேசினீங்க டீச்சர். நான் பேச வேண்டாமா?”
“நீ என்னா பேசப் போற?”
“நீங்க எத பேசலயோ, அத பேசப் போறேன் டீச்சர்”
“புரியல. புரியற மாதிரி சொல்லு”
“நீங்க அயத்துப் போயிட்டீக. ம்” என்று யோசித்தவள், “இதச் சொன்னா புரியுதானு பாருங்க. அபிப்பிராயம்! இப்பம் புரியுதா?” என்றாள்.
அஞ்சுதம் பேசாமல் நின்றார்.
“அம்புட்டு சொன்னவுக, அத மட்டும் விட்டுட்டீக. ஏன் டீச்சர்?”
“பாவமே, ஒரு பொம்பளைப் புள்ள வாழ்க்கைனு நெனச்சேன். ஆனா நீ இம்புட்டு கரைச்சல் (தொந்தரவு) கொடுக்க” என்று அஞ்சுதம் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்.
“நீங்க, எனக்காக… யோசிக்கிறீக” என்று இடைவெளி விட்டுச் சொல்லிச் சிரித்தவள், “இத என்னய நம்பச் சொல்றீகளா?” என்றாள்.
“நம்பு, நம்பாம போ. ஆனா நீதான் அன்னிக்கே தங்கராசு மேல எந்த அபிப்பிராயம் இல்லேனு சொன்னீயே. இப்பம் ஏன் அத பத்தி பேசற”
“அன்னிக்கி இல்லன்னு சொன்னே. ஆனா இன்னிக்கு இருக்கே”
“ஏய், என்னா பேசற… ஒங்க அப்பாகிட்ட சொல்லவா?”
“அய்யயோ பயமா இருக்கு டீச்சர், அப்பாகிட்ட சொல்லாதீக. அப்படி பயப்பட நான் என்னா ஒங்க ஸ்கூல் ஸ்டூடன்ட்டா”
“ஏய், நீ ரெம்ப பேசற. ஒங்க அப்பாவ கூப்பிடவா”
“கூப்பிடுங்க. அப்படியே கலைஞ்ச கூட்டத்தையும் கூப்பிடுங்க”
“எதுக்கு?”
“எல்லார்கிட்டயும் இத சொல்றதுக்குத்தான்”
“எதுக்கு தேவையில்லாம பேசற… அன்னிக்கு இல்லேனு சொன்னேல, அப்படியே இரு” என்றார் அதிகாரமாக.
“இப்பம் சொல்றேன்… எனக்கு இவுக மேல அபிப்பிராயம் இருக்கு” என்று தங்கராசுவைக் காட்டியவள், “கல்யாணம் கட்டிகிட்டா இவுகளதான் கட்டிக்குவேன்” என்று சத்தியம் செய்யும் குரலில் சொன்னாள்.
“ஒன்னமாதிரி ஒரு படிச்ச புள்ளை, ச்சே… அப்படிச் சொல்ல முடியாதுல. படிச்சுக்கிட்டே இருக்கிற புள்ள, என் வீட்டுக்கு மருமகளாக வரவே முடியாது” என்று சவால்விடுவது போல் சொன்னார்.
“பார்க்கலாம். பாஸானவுடனே ஒங்க வீட்டு வாசல்ல வந்து நிக்கிறேனா இல்லையானு பாருங்க” என்று அவளும் அவரைப் போல சொன்னாள்.
“அதேதான் நானும் சொல்றேன். நீ என் வீட்டு வாசல்ல வந்துதான் நிக்க முடியும். என் வீட்டுக்குள்ள எப்பவுமே வர முடியாது”
“வெயிட் அன்ட் வாட்ச்” என்று தோளை அலட்சியமாகக் குலுக்கினாள்.
“சேம் ஹியர் அன்ட கெட் லாஸ்ட்” என்று அஞ்சுதம் சென்று விட்டார்.
தங்கராசுவை மலர் கோபமாகப் பார்க்கவும், “மலரு” என்றான்.
“அப்படிக் கூப்பிடாதீக. எங்கிட்ட பேசவும் செய்யாதீக”
“இல்லே மலரு”
“ஒங்க அம்மாகிட்ட சொன்னது எம்புட்டு நெசமோ, அதேகணக்காதான் இப்பம் ஒங்ககிட்ட சொன்னதும்” என்று கோவமாகச் சொல்லிவிட்டு, விருவிருவென வீட்டிற்குள் சென்றாள்.
உள்ளே வந்த மலரிடம், செல்லதுரை ஒரு கோரிக்கை வைத்தார். எந்த மறுப்புமின்றி அதை அப்படியே ஏற்றுக் கொண்டாள் மலர்.
******************************
ராசு வீட்டில் இதுநாள் வரை ‘மியூட் மோடில்’ வைத்துப் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சத்தம், இன்று காதைப் பிளந்தது. அந்தச் சத்தத்தின் பாதிப்பு கொஞ்சமும் இல்லாமல் கிழவிகள் அமர்ந்திருந்தனர்.
சற்றுநேரத்தில் அஞ்சுதம் வேலை முடிந்து வந்து, “என்னா புதுசா டிவிய இம்புட்டு சத்தமா வச்சிருக்கீக. வெளிய வரைக்கும் கேட்குது” என்றார் சிடுசிடுப்புடன் கிழவிகளைப் பார்த்து.
“அது வீட்டுக்கு புதுசா படிச்சவக வருகை இருக்கும் போல. அதேன் பாஷை பழகிக்கிட்டிருக்கோம்” என்றார் பேச்சிக்கிழவி.
“என்னா சொல்றீக?”
“நீங்க, மாமியாரும் மருமகளும் தஸ்புஸ்னு இங்கிலீஷு பேசுவீக. நாங்க எம்புட்டு நாளுதான் ஒங்க வாயப் பார்த்துக்கிட்டே இருக்க. நாங்களும் இங்கிலீஷு பாஷ பேசனும்ல. அதேன்”
“நான் அங்கன வச்சி அம்புட்டு கத்தினேனே… அயத்துப் போச்சா”
“வயசாகுதுல, அதேன் அயத்திருச்சு”
“இத நம்பச் சொல்றீகளா?”
“செரி… அயத்துப் போகல”
“சந்தோஷம், ஆனா அந்தால எதுக்கு மருமகனு அவள சொல்றீக”
“ஏன்ட்டி, நீ பேசினது நியாபகம் இருக்கிதுனா? அந்தப் புள்ள அங்கன பேசினதும் இருக்கும்ல”
“அவ சொன்னானு… அவ இந்த வீட்டுக்கு வருவான்னு கனவு காணாதீக”
உடனே “நாங்க எங்கன கனவு காண்றோம். ஒன் பையன்தான்” என்று பின்வாசலில் கயிற்றுக் கட்டில் போட்டு, இரவு வானத்தைப் பார்த்து படுத்திருந்த தங்கராசுவைக் காட்டினார் பேச்சிக்கிழவி.
மகனைச் சொன்னதும் அஞ்சுதம், “ஒங்கள திருத்தவே முடியாது” என்று ஏதோ சொல்லி அறைக்குள் நுழைந்து கொண்டார்.
“என்னாட்டி இப்படிச் சொல்லிட்டு போறா” என்றார் முத்தாச்சி.
“வுடு முத்து, நாம பேசுற வசனத்தை அவ பேசிட்டு போறா. இவளுக்கு அந்த மலரு புள்ள மேல கரிப்பு (பொறாமை)” என்றார் பேச்சிக்கிழவி.
“செரி வா. அந்தப் பயலப் போய் பார்ப்போம்” என்று இரு கிழவிகளும் வீட்டின் பின்புறம் வந்தனர். தங்கராசு இப்போது கயிற்றுக் கட்டிலில் குப்புறப்படுத்து குமுறிக் கொண்டிருந்தான்.
“லே, எந்திரிலே. எதுக்கு இம்புட்டு சடவா கிடக்கிற. பொறவாசல்ல படுத்துப் பொலம்பிக்கிட்டு வேற… எந்திரி” என்றார் பேச்சிக்கிழவி.
“இப்பம் என்ன நடந்துச்சுனு சொல்றியா?” என்றார் முத்துக்கிழவி.
“மலரு பேசமாட்டிக்கு முத்தாச்சி” என்றான் வருத்தமாக.
“மலருக்கு போன் போடுலே. அந்த புள்ளகிட்ட என்னானு கேட்கிறேன்”
“போன் போட்டுப் பார்த்தேன் ஆச்சி, அது எடுக்கவே மாட்டேங்குது”
“முதல எங்ககிட்ட என்னா நடந்துச்சுனு சொல்லு?”
சூரியகாந்தியிலிருந்து சாக்லேட் கொடுத்தவரை, ஆச்சிகளிடம் அவன் அபிமானங்களைப் பகிர்ந்து கொண்டான்.
“சாக்கிலேட் கொடுத்தப்ப சொல்லாதலே. சண்டை போட்டா மட்டும் சொல்லு” என்றார் பேச்சிக்கிழவி.
“என்னாட்டி இம்புட்டு நடந்திருக்கு, இந்தப் பய ஒரு வார்த்தை நம்மகிட்ட சொல்லலையே” என்றார் அதிசயத்துடன் முத்துக்கிழவி.
“என்னா இம்புட்டு நடந்திருக்கு” என்று கையை விரித்த பேச்சிக்கிழவி, “இந்தப் பய ஊரக் கூட்டிட்டுப் போய், அந்தப் புள்ளகிட்ட சாக்கிலேட் கொடுத்திருக்கான். இவன் அம்ம ஊரே கூடி நின்ன இடத்துல, அந்தப் புள்ளகிட்ட சண்டை பிடிச்சிட்டு வந்திருக்கா. அம்புட்டுத்தான்” என்றார்.
“ஆச்சி, இப்பம் என்னா செய்ய?” என்றான் தங்கராசு.
பேச்சிக்கிழவி, “தங்கராசு, ஒங்க அம்மையப் பத்தி மலர்கிட்ட எம்புட்டு பேசிருக்க. அதேகணக்கா மலரைப் பத்தி ஒங்க அம்மகிட்ட வாதுறந்து மொதல பேசுலே” என்றார் கருத்தான குரலில்.
தங்கராசு அமைதியாக இருந்தான். ‘மனம் திறந்து நான் பெற்றவளிடம் பேசிப் பழக்கமில்லையே என்ன செய்ய?’ என்று பொருளில் அவன் மௌனம் இருந்தது. அவனைப் பெற்றவளைப் பெற்றவள் என்பதால், பேச்சுக்கிழவிக்குச் சுருக்கென்று வலித்தது.
முத்தாச்சிதான், “பேச்சி, அந்தப் பயலுக்கு ஏதாவது ஒத்தாசை செய்யப் பாருட்டி” என்றார் பேரனுக்காக.
“செரி” என்று பேச்சிக்கிழவி பேரனுக்காக யோசித்தார். யோசிப்பின் முடிவில், “நாளே வெள்ளனயே கிளம்பி” என்று சொல்லி அவர் முடிக்கும் முன்னே, “மலர பார்க்க போலாமா” என்று உற்சாகத்துடன் எழுந்தான் தங்கராசு.
“இல்லே, டவுனுக்குப் போறோம்” என்றார் பேச்சிக்கிழவி.
“டவுனுக்கா, அங்கன எதுக்கு ஆச்சி”
“ரோசு, காரடு வாங்க வேண்டாமாலே”
“ஆமா ஆச்சி, அன்னிக்கே கேட்டுச்சி. வாங்கிக் கொடுக்கனும்” என்று ஆசையாகச் சொன்னவன், “ஆனா, அந்தப் புள்ள பேசவே மாட்டிக்கே ஆச்சி” என்று அலுப்புடன் முடித்தான்.
“தங்கராசு, ஒன் முடிவுல வலுவா நிக்றேல” என்று பேச்சிக்கிழவி கேட்க, “ஏன் பேச்சி, இப்பம் வந்து இப்படி கேட்க” என்றார் முத்தாச்சி.
“இவன் அம்மையும், அந்தப் புள்ளையும் கொறச்சலே இல்லாம வீடு, சந்தினு எல்லா இடத்திலயும் முறைச்சிக்கிட்டு இருக்காளுக. இவளுக இடையில… இவன் எப்படி” என்று பேரனுக்காகப் பார்த்துக் கேட்டார்.
அபிமானங்கள் அதிகமாகிப் போன அர்த்தங்களுடன் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான் தங்கராசு!
பதில் கிடைத்தது போல் பேச்சிக்கிழவி, “ம் அப்பம் செரி, நாளே ரோசும் காரடும் வாங்கறோம், அந்தால மலரப் போய் பார்க்கிறோம்” என்று முடித்தார், இல்லை முடிவெடுத்தார்!!

