Kathambari Novels
அத்தியாயம் – 3
தங்கராசு பேசியதைக் கேட்டதும் மலர், “இப்படி வெள்ளனையே வீட்டு வாசல்ல, வித்தாரமா வேட்டி கட்டி வந்து நின்னுக்கிட்டு விஸ்தாரமா (தேவையின்றி) பேசிறீக. செரியான வெவரம் இல்லாதவுகளா?” என்று முணுமுணுத்தாள்.
கிழவிகள் இருவரும் கைகொண்டு வாய்மூடி நின்றனர்.
“ஏங்க மலரு” என்று மறுபடியும் தங்கராசு பேச ஆரம்பித்த சமயத்தில், சமையலறையிலிருந்து வெளியே வந்தார் செல்லதுரை. வந்தவர்கள் வாசலில் நிற்பதைக் கண்டவுடன், “மலரு, அவிகள உள்ளாற வர வழிய விடு புள்ள” என்றார்.
பின்னர் அவர்களை வரவேற்று உள்ளே வரவழைத்து, முன்னறையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் அமரச் சொல்லி, “டீச்சர் வரலயா” என்று செல்லதுரை கேட்கும் போதே, கைப்பேசியில் பேசி முடித்த அஞ்சுதம் உள்ளே வந்து கொண்டிருந்தார்.
அவரின் பார்வை முழுவதும் வாசலிலே நின்று கொண்டிருந்த மலரைத் தாண்டிச் செல்லவில்லை! அவர் பார்வை மட்டுமல்ல உள்ளே சென்று அமர்ந்திருந்த தங்கராசுவின் பார்வையும்தான்!!
அஞ்சுதம் தயக்கத்துடன் மலரைக் கைகாட்டி “இந்தப் பெண்ணு” என்று வாக்கியத்தை இழுத்தார். செல்லதுரை, “இது என் ரெண்டாவது புள்ள, பேர் கொடிமலர். பிகாம் படிக்கிது” என்றார்.
“ம்ம்” என்று கொடிமலரைப் பார்த்தபடியே வந்த அஞ்சுதம்… ராசுவும், கிழவிகளும் அமர்ந்திருந்த பாயில் சேர்ந்து அமர்ந்து கொண்டார்.
அவர் பார்வையின் பொருளைத் தவறாகப் புரிந்த செல்லதுரை, “நீங்க பார்க்க வந்தது மூத்தவ டீச்சர். இவ இல்லே” என்று விளக்கினார்.
அதைக் கேட்டதும் அஞ்சுதம் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. மற்ற மூவரும் தலை குனிந்து கொண்டனர்.
“அந்த புள்ள செரியாத்தான்லே சொல்லிருக்கு” என்றார் பேச்சிக்கிழவி.
“என்னா ஆச்சி சொல்றீக” என்றான் ரகசியமாய் ராசு.
“நீ வெவரம் இல்லாதவன்தான், பெண்ணு பேர் என்னனு கூட கேட்காம வந்திருக்க பாரு”
“சும்ம இருங்க ஆச்சி” என்றான்.
உடனே முத்தாச்சி, “அதேன் செய்யனும். வேற என்னா செய்ய முடியும் ஒன் அம்மைய மீறி” என்றார்.
செல்லதுரை, “மலரு, போயி அக்காவ வர சொல்லு” என்றார் மகளிடம்.
அதற்கு அஞ்சுதம், “செத்த தேரம் பேசிக்கலாம். பொறவு புள்ளைய வர சொல்லுங்க” என்றார்.
“செரிங்க டீச்சர்” என்றவர் மகளைப் பார்த்து, “மலரு, நீ உள்ளாற போ புள்ள” என்றார்.
‘இப்பம் என்னா பேசப் போறாக’ என்று கேள்வி ஏனோ மலருக்கு ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப் பதற்றம் தேர்வு எழுதும் நாளிலும், தேர்வு முடிவு வரும் நாளிலும் அவளுக்குள் உருவாகும் பதற்றத்திற்கு ஒப்பானதாகத் தோன்றியது.
இருந்தும் தந்தை பேச்சைக் கேட்டு உள்ளே சென்றாள். ஆனால் அங்கே இசக்கியம்மாளின் நிலை கண்டு கதிகலங்கிவிட்டாள். ஓடி அக்காவின் அருகில் சென்று “இசக்கி, ஏன்ட்டி, ஏன் அழுதுகிட்டு இருக்க?” என்று உலுக்கிக் கேட்டாள்.
இசக்கி பேசாமல் இருக்கவும், “என்னா பிரச்சனை சொல்லுட்டி?” என்று மேலும் மேலும் அவளை உலுக்கினாள் மலர். அதன்பின்னும் இசக்கி வாயைத் திறக்காமல் இருக்க, “இருட்டி, அப்பாகிட்ட சொல்றேன்” என்று மிரட்டி எழப் போனாள் மலர்.
உடனே இசக்கி மலரைத் தடுத்து நிறுத்தி, “வேண்டாம் மலரு. நானே சொல்றேன்” என்றாள் அழுதபடி.
“சொல்லு”
“எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லே” என்றாள் இசக்கி.
“இஷ்டம் இல்லையா?” என்ற மலர் கேட்ட தோரணை, எஞ்சிய நான்கு தேர்ச்சி அடையாத தேர்வையும் ஒரே முயற்சியில் தேர்ச்சி அடைந்தால் வருமே ஒரு குதூகலம்… அப்படி இருந்தது.
“ஏன்ட்டி, நான் என்னா சொன்னேன். நீ இம்புட்டு சந்தோஷப்படற” என்று இசக்கி தங்கையைச் சந்தேகமாகப் பார்த்தாள்.
கொடிமலர், “அது, அது… அடுத்து பத்து பதினைஞ்சி நாள்ல பரிட்சை வருதில்ல. ஒன் நிச்சிதார்த்தம், கல்யாணம் இருந்தா, என்னால படிக்க முடியாது பாரு. அதே” என்றாள் வரவழைக்கப்பட்ட வருத்தத்துடன்.
ஆனால் இசக்கியம்மாளின் பார்வை தங்கையின் பேச்சைத் துளிகூட நம்பவில்லை என்று இருந்ததும், “இப்பம் இது பிரச்சனை இல்லே இசக்கி. கல்யாணம் பிடிக்கலனு, எப்படி அப்பாகிட்டே சொல்லப்போற?” என்று மலர் பேச்சை மாற்றினாள்.
சோர்ந்த குரலில், “அப்பாவுக்கு தெரியும் மலரு” என்றாள் இசக்கி.
“தெரியுமா!? இதுக்கு மின்னாடியே சொல்லிருக்கியா?”
“நானா சொல்லல மலரு. அப்பாவா கண்டுபிடிச்சிக் கேட்டாக, நாங்க ஒத்துக்கிட்டோம்”
“நாங்களா… நாங்கன்னா?”
“நானும், அவுகளும்”
“அவுகளா!? யாருக்கா அந்த அவுக?”
“இதுக்கு மின்ன ஒரு ஊரில இருந்தோம்ல”
“ம்ம்ம்”
“அங்கன ஒரு வாத்தியார, எனக்கு பிடிச்சிருந்தது மலரு. அவுகளதான் கட்டிப்பேன். மத்தவகள திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்” என்று தன் அபிப்பிராயத்தை சொன்னாள் இசக்கி.
“எந்த வாத்தியார சொல்ற?”
“நீ அரியர் பரிட்ச எழுத, ரெண்டு வருஷமா டியூசன் போனேல. அந்த வாத்தியார்தான்”
“நான்தான இசக்கி போனேன். நீ எப்படி?” என்றாள் மலர்.
அழுகை குறைந்து, “ஒன்ன கொண்டு வந்து விடுவேன்ல, அப்பத்லருந்து அவுகளுக்கும் எனக்கும் பழக்கம் ” என்றாள் இசக்கி சற்று வெட்கப்பட்டு.
“கண்ணன் சாரா?”
“ஆமா அவுகதான். அப்பாக்கும் தெரியும்ட்டி. ஆனா என் இஷ்டப்படி கல்யாணம் கட்டிக்கிட்டா, சொந்தக்காரக எதும் சொல்லிருவாகளோனு நம்ம அப்பா பயப்படுறாரு”
“என்னா சொல்லுவாகனு பயம்?”
“அம்மா இல்லாத புள்ளைகள… இவரு செரியா வளர்க்கலனு”
“இதெல்லாம் ஒரு பயமா?”
“மலரு, அந்தால ஒனக்கு வெவரமா சொல்றேன். முதல்ல இந்தப் பயல புடிக்கலைனு நான் சொல்லனும். அதுக்கு காரணம் கேப்பாகள, என்ன சொல்லனே தெரியல”
“இந்தப் பயலா… செத்த மருவாதையா பேசுட்டி”
“ஏன்ட்டி?”
மலர், “ஏன்னா, ஏன்னா” என்று யோசித்துவிட்டு, “ஆங் நேத்தே அப்பா சொன்னாகள, இவுக ரெம்ப நல்லவுகனு” என்றாள்.
“மலரு, வேண்டாம்னு சொல்ல காரணம் கேட்டா, வேணும்னு சொல்ல காரணம் சொல்ற”
“இருட்டி யோசிக்கறேன்” என்றுவிட்டு, “அவுக படிக்கல இசக்கி. அதச் சொல்லு” என்றாள் மலர்.
“ஒனக்கு எப்படித் தெரியும்” என்றாள் இசக்கி ஒரு அக்காவாக மாறி.
“அவுக, நேத்து ரீசார்ஜ் கடைக்கு வந்தாக. அப்பமே எங்கிட்ட இதப் பத்தி சொன்னாக”
“ரீசார்ஸ் பண்ண வந்தவரு என்னாத்துக்கு படிப்பு பத்தி பேசனும்” என்று துளைத்தாள் இசக்கி, அக்காவிலிருந்து அம்மா ஸ்தானத்திற்கு நகர்ந்து.
“ஒனக்கு நாளைக்கு தேவப்படும்னு, நேத்திக்கே தெரிஞ்சததால கேட்டு வச்சேன். செரியா இன்னிக்கி தேவப்பட்டிருக்கு பாரு” என்று பேசி மலர் இசக்கியைக் குழப்பினாள்.
“ஏதோ கள்ளம் பேசுற மலரு” என்று மலரைக் கண்டித்த தருணம், “மலரு, இசக்கிய வரச் சொல்லு” என்ற செல்லதுரையின் குரல் கேட்டது.
உடனே மலர், “இசக்கி, மத்தத அப்புறமா பார்த்துக்கலாம். இப்பம் இத தைரியமா சொல்லிரு புள்ள” என்றதும், “செரி செரி” என்று சொன்ன இசக்கியை, மலர் வெளியே அழைத்து வந்தாள்.
அஞ்சுதம், இசக்கியம்மாளைக் கண் குளிரப் பார்த்தார். மற்ற மூவரும் மலரின் கண் பார்வையைத் தவிர்க்க அப்போது குனிந்தவர்கள்தான்; இன்னும் நிமிரவே இல்லை.
அஞ்சுதம்தான், “தங்கராசு, ஒனக்குப் பிடிச்சிருக்கா? அம்மாக்கு ரெம்ப பிடிச்சிருக்கு. செரினு சொல்லட்டுமா” என்று மகனிடம் கேட்டார்.
“செரி அம்ம” என்றான் சற்றும் யோசிக்காமல்.
‘செத்த நேரத்துக்கு மின்ன எப்படி பேசினாக. இப்பம் இப்படி அறப்பே (வெட்கம்) இல்லாம பேசறாக’ என்று நினைத்த மலர், “இசக்கி, சொல்லு புள்ள பிடிக்கலைனு” என்று இசக்கியம்மாளைத் தூண்டினாள். “இருட்டி, எப்படித் தொடங்கனு தெரியல” என்றாள் இசக்கி.
இப்படியே நேரங்கள் விரயம் ஆகின.
ஒரு கட்டத்தில் அஞ்சுதம், “இப்பம் நாம வெத்தல பாக்கு மாத்திக்கலாம். அந்தால முறையா நிச்சிதார்த்தம் நடத்தலாம்ங்க” என்று கல்யாணம் பற்றியப் பேச்சிற்கு வந்தார்.
அந்த வார்த்தையில் சுதாரித்த மலர், “ஒரு நிமிசம் நிறுத்திறீகளா, எங்க அக்கா ஏதோ பேசணும்னு சொல்லுது” என்றாள்.
“இப்பம் வந்து, இதுக்கு என்னா பேசனும் மலரு” என்று செல்லதுரை மகளைக் கடிந்து கொள்ள… “இல்லப்பா, ஒரு நிமிசம்தான். சொல்லுட்டி இசக்கி” என்றாள் மலர்.
அஞ்சுதத்தின் பார்வை முழுவதும் மலர் மீதே இருந்தது.
இசக்கி, “எனக்கு இவுகள பிடிக்கல. இவுக ரெம்ப படிக்கல. அதேன் காரணம்” என்று சொல்லி, உள்ளே ஓடிச் சென்றுவிட்டாள்.
அடுத்த நொடி இருப்புக் கொள்ளாமல் அஞ்சுதம் எழுந்துவிட்டு, “ஏங்க நேத்தே எல்லாம் சொல்லத்தான செஞ்சேன். இன்னிக்கி வந்து இப்படிச் சொல்லிக் காட்டுறீக” என்று கத்தினார்.
“இல்லே டீச்சர், நான் அதுகிட்ட பேசி புரிய வைக்கிறேன். செத்த தேரம் நீங்க காத்திருக்கீகளா” என்றார் மகளைப் பெற்ற தந்தையாய்.
“என்ன பேச வேண்டியது இருக்கு. இப்பமே இப்படிப் பேசுது. கட்டிக்கிட்ட பொறவு என்னென்ன பேசுமோ?” என்று கோபமாகச் சொல்லிவிட்டு கிழவிகளைப் பார்த்து, “நான் செரியாத்தான் பெண்ணு பாத்துக்கிட்டு இருந்தேன். நீங்க சொல்ல போய்…” என்று பாதியிலே விட்டுவிட்டார்.
அடுத்து, “மிச்சத்த வீட்ல வந்து பேசுறேன்” என்று அவர்களிடம் கோபம் கொண்டவர்… மலரைப் பார்த்து, “நீதான ஆரம்பிச்ச” என்று மொத்த கோபத்தையும் அவளிடம் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, அஞ்சுதம் வெளியேறினார்.
இசக்கி இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்குக் காரணமாகிவிட்டாள் என்று செல்லதுரை கோபம் கொண்டார். அஞ்சுதம் அவரிடத்துக் கொட்டிய கோபத்தை மகளிடம் காட்டுவதற்காக உள்ளே சென்றுவிட்டார்.
இக்கணம் வரவேற்பரையில் தங்கராசு, கிழவிகள் மற்றும் கொடிமலர். தங்கராசுவும், அவனுடன் சேர்ந்து கிழவிகளும் எழுந்துகொண்டனர். அப்போது குனிந்தவர்கள், இப்போதுதான் தலையை உயர்த்தினார்கள். நன்றாக நிமிர்ந்து மூவரும் கொடிமலரைப் பார்த்தனர்.
அவர்களைப் பொறுத்த வரையில், இப்போதுதான் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்திருக்கிறது.
தங்கராசு கிழவிகளின் காதில் ஏதோ கூறினான். “தெரியும்லே. பேசாம இரு” என்ற பேச்சுக்கிழவி, அஞ்சுதம் விட்டுச் சென்ற தட்டில் கிடந்த பூவை எடுத்துக் கொண்டு கொடிமலரை நோக்கிச் சென்றார்.
‘அய்யய்யோ இந்தப் பய என்னா சொன்னானோ, இந்தக் கிழவி வேற என்னாத்துக்கு பூவ தூக்கிட்டு வருதோ’ என்ற பதற்றம் மலருக்கு. அவர் அருகில் வரவர கொஞ்சம் கொஞ்சமாகப் பதற்றம் அதிகமாகியது.
மலர், “இதப் பாருக… இதலாம்” என்று ஒற்றை விரல் நீட்டிச் சொல்லும் போதே, பேச்சிக்கிழவி மலரைக் கடந்து சென்று, வரவேற்பு அறையில் இருந்த சாமி படத்திற்குப் பூவைச் சாத்திவிட்டு வந்தார்.
அதுமட்டுமின்றி… திரும்பி வருகையில் மலரைப் பார்த்து, “புள்ள, சாமி போட்டோ இப்படி வெறுமனே இருக்கக் கூடாது. செரியா?” என்றார். ராசுவும் முத்துலட்சுமியும் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தனர்.
திரும்பிச் செல்லப் போன பேச்சிக்கிழவி, மறுபடியும் மலரின் பக்கம் திரும்பி, “ஏன் புள்ள ஒங்க வீட்ல எலுமிச்சம்பழம் இருக்கா?” என்றார்.
தங்கராசுவும் முத்தாச்சியும் எதற்காக இப்போது எலும்பிச்சைப் பழம் என்று யோசித்தார்கள்.
“இருக்கு, ஏன் கேட்கிறீக?” என்று கேட்ட மலருக்கும் அதே யோசனை.
பேச்சுக்கிழவி, “இருந்தா, போஞ்ச் (எலுமிச்சை சாறு) போட்டுக் குடி, கெறக்கமா தெரியிற” என்றார்.
இப்போது தங்கராசு, முத்தாச்சியின் தோளில் கை போட்டுக் கொண்டு நன்றாகவே சிரித்தான்.
“வரேன் புள்ள” என்று சொல்லிவிட்டு, பேச்சிக்கிழவி மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார்.
அந்தநேரம் மலர், “ஒரு நிமிசம் அங்கனயே நிக்கிறீகளா??” என்றவள், அஞ்சுதம் விட்டுச் சென்ற பழத்தில் நான்கைந்தை எடுத்துக் கொண்டு அவர்கள் அருகில் சென்று, “பிடிங்க” என்று பேச்சிக்கிழவி கைகளில் இரண்டையும், மிச்சத்தை முத்தாச்சி கைகளிலும் திணித்தாள்.
“என்னாத்துக்கு?” என்றார் முத்தாச்சி.
“போங்க போயி, ஒங்க பேரப் பையனுக்கு ஜூஸ் போட்டுக் கொடுங்க. அதான் ஒருத்தருக்கு ரெண்டு பேரா இருக்கீகள. ஒங்க பேரந்தான் நேத்தேலருந்து கெறக்கமா இருக்காக” என்றாள்.
மேலும், “அந்தால வீட்ல கழுத்து வலி களிம்பு இருக்கா? இருந்தா மூனு பேரும் தேய்ச்சுக்கோங்க. ஏன்னா ரெம்ப தேரமா குனிஞ்சிக்கிட்டே இருந்தீக. அதே” என்று மூவரையும் நன்றாக நய்யாண்டி செய்தாள்.
“ஏன்ட்டி, எம்புட்டு எகத்தாளமா பேசற. ஒன்ன…” என்று பேச்சிக்கிழவி சொல்லும் போது, அறையிலிருந்து வெளியே வந்த செல்லதுரை, “மலரு, என்ன புள்ள பேசிகிட்டு இருக்க?” என்று கேட்டுக் கொண்டே, அவர்கள் அருகில் வந்து நின்றார்.
மலர், “சும்ம, அக்கா எசகு பிசகா பேசினதுக்கு, எதம்பதமா மன்னிப்பு கேட்டேன் நான். மன்னிப்பு கேட்டது போதுமா ஆச்சி, இல்லே இன்னும் கேட்கவா?” என்று இன்னும் நக்கலாகவே பேசினாள்.
அது புரியாத செல்லதுரை, “இது படிக்கிற புள்ள ஆச்சி. மனுசங்ககிட்ட பதனமா(கவனமாக) எப்படிப் பேசணும்னு தெரியும்” என்று மகளின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டார்.
‘என்னா பம்மாத்து பண்றா இந்த புள்ள?’ என்று கிழவிகள் நினைத்தனர். ‘என்னமா பேசறாடா இவ’ என்று ராசு ரசித்துப் பார்த்தான்.
செல்லதுரை, “மன்னிச்சிக்கோங்க ஆச்சி. டீச்சர்கிட்டயும் சொல்லுங்க நீங்க” என்று அவர்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்து, “பாருபுள்ள, இசக்கி இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்கு. சோலி அங்கன இருந்தாலும், இதுக்காகதான் இந்த ஊருக்கு வந்தேன். இங்கன வந்தும், இந்தப் புள்ள இம்புட்டு இடைஞ்சல் செய்யுது” என்றார்.
“இசக்கி ஆசைப்பட்ட ஆள, அதுக்கு கட்டி வைக்கலாம்ல அப்பா”
“இல்லே மலரு. அது செரி வராது. அந்தால ஒங்க அம்ம வீட்டு ஆளுங்க ஒதுங்கிருவாக. நான் ஒத்தேல ஒங்களுக்கு என்னா செய்ய முடியும் சொல்லு”
“ஏன் பா?”
“இல்லே மலரு, பொறவு அதுவா மாப்பிள்ளை பார்த்திருச்சினு பேச்சு வந்திரும். நீ இத யோசிக்காத. பரிட்சை வருதில்ல. அதுக்கு படிக்கிற வழியப் பாரு. அதுகிட்ட செத்த தேரம் பேசிட்டுச் சோலியப் பார்க்கப் போ. செரியா” என்று பேருந்து நிலையம் நோக்கிக் கிளம்பினார்.
தந்தை சொன்னதுபோல் இசக்கியிடம் பேசச் சென்றாள் மலர்.
மலர் வீட்டிலிருந்து கிளம்பி நடக்க ஆரம்பித்திருந்த கிழவிகள், ராசு மெதுவாக நடப்பதைக் கண்டு, “வெரசா வாலே, ஒங்க அம்ம அங்கன தெய்தெய்னு (கோபப்பட்டு பேசுதல்) குதிக்க காத்துக்கிட்டு இருப்பா. இந்த புள்ளகிட்ட வாங்கியாச்சு. அங்கன போயி ஒங்க அம்மகிட்டயும் வாங்குவோம்” என்று அவனை இழுத்துச் சென்றனர்.
அங்கே வீட்டில் அஞ்சுதம் மிகுந்த கோபத்துடன் இருந்தார்!
தங்கராசுக்கு நிம்மதி பாதியென்றால், நிராசை மீதி என்றிருந்தது. இங்கே நிம்மதி அபிப்பிராயத்தை சொன்னதால் வந்ததல்ல; அதை மலர் யாரிடமும் அம்பலப்படுத்தாமல் இருந்ததால் வந்தது. அப்புறம் அந்த நிராசை… அபிப்பிராயம் அந்தரத்தில் தொங்குவதால் வந்தது.
அஞ்சுதத்தின் கோபம் கண்ட கிழவிகளின் மனநிலை, ‘இவ எப்பம் ஏசி (திட்டி) முடிச்சி. நம்ம எப்பம் பிபிசி பார்க்க?’ என்பதுதான்.
அஞ்சுதம், “எத்தறை மட்டம் (தடவ) சொன்னேன். இந்த மாதிரி படிச்ச புள்ள வேண்டாம்னு. கேட்டீகளா? நீங்க அழுத்திச் சொல்லப் போயி, நானும் புத்தி கெட்டுப் போய், படிச்ச புள்ளயா பார்த்திட்டேன். இப்பம் என்னாச்சி பார்த்தீகளா” என்று கோபத்தில் கத்தினார்.
“ஏன்ட்டி, பள்ளிக்கூடம் படிச்ச புள்ளய பார்த்தா அந்தப்பய தொழில கணக்கு வழக்குப் பார்க்கும்னு நெனைச்சோம்”
“தேவைனா அததுக்கு ஆள போட்டுக்கலாம். அதவுட்டு இப்படி பேச்சை கேட்கணுமா சொல்லுங்க” என்றவரின் கோபத்தில், படிப்பில்லை என்று மகனை ஒருத்தி வேண்டாமென்று சொல்லிவிட்டாளே என்ற வேதனை மறைந்திருந்தது.
ஆச்சிகள் எதுவும் சொல்லவில்லை. அவர்களுக்கும் பேரனை ஒருத்தி படிப்பைச் சொல்லி மறுத்துவிட்டாளே என்ற வருத்தம் இருந்தது. மேலும் பெற்றவள் பிள்ளையைக் கண்டிக்கும் போது, இடையில் சென்றிருக்க கூடாது; கண்டிப்பைக் குறைக்க சொல்லியிருக்கலாம்; கண்டிக்கவே கூடாதென சொல்லிருக்க வேண்டாம்.
அப்படியென்றால் தங்கள் பேரனும் படித்திருப்பானே என்ற எண்ணம் அவர்களுக்கு. இன்றைக்கு வந்ததல்ல… எப்போதும் உண்டு.
அதற்கடுத்தும் அஞ்சுதம் கோபமாகப் பேசினார். அமைதியாக கேட்டுக் கொண்டார்கள் ஆச்சிகள். கடைசியாக அஞ்சுதம், “இனி நீங்க என்ன சொன்னாலும் இதுகணக்கா பெண்ண பார்க்க மாட்டேன்” என்றார்.
அதற்குமேல் அமைதியாக இருக்க முடியாததால், “இனி நீ பெண்ணே பார்க்க வேண்டாம்” என்றார் அஞ்சுதத்தின் அம்மா பேச்சிக்கிழவி.
அஞ்சுதம், “ஏன்?” என்றார் சந்தேகமாக.
“நாங்க பார்த்திட்டோம்” என்றார் முத்தாச்சி.
“நாங்கனா?”
“ஒன்னய தவிர மத்தவுக” என்றார் பேச்சிக்கிழவி.
“ஆச்சி, சும்ம இருக்கிகளா” என்றான் தங்கராசு.
“ஏன்? நீ ஒருத்தன் சும்ம நிக்கிறது பத்தாதா. வாய மூடுலே” – பேச்சிக்கிழவி.
“எந்தப் பெண்ணு?” என்றார் அஞ்சுதம்.
“இப்பம் செத்த தேரத்துக்கு மின்ன ஒரு வீட்டுக்குப் போனோம். அங்கன பார்த்தோம்” என்றார் முத்தாச்சி.
“அங்கனயா… அங்கன யாரு வீட்ல”
“அதே வீட்லதான்” என்றார் பேச்சிக்கிழவி.
“அந்த ரெண்டாவது புள்ள” என்றார் முத்தாச்சி.
உடனே அஞ்சுதம், “அந்த புள்ள பிகாம் படிச்சிருக்கு. பன்னண்டு படிச்ச புள்ளயே வேண்டாம்னு சொல்லுது. இதுல பிகாம்! அதோட அந்த புள்ள பேச்சே செரி கிடையாது” என்று திரும்பவும் கத்தினார்.
பேச்சிக்கிழவி, “இந்தப் பயலுக்கு, அந்த புள்ள மேல ஒரு அபிப்பிராயம் இருக்கிட்டி” என்றார்.
முத்தாச்சி, “அந்த புள்ளைக்கும் இருக்க மாதிரிதான் தெரியுது. நீ ரெம்ப நொர்நாட்டியம் பண்ணாத” என்றார்.
“நம்பவே முடியல” என்றார் அஞ்சுதம்.
“நம்பு, நெசமா சொல்றோம்ட்டி”
“செரி நம்பறேன். தங்கராசுனு, இவன் பேர சொல்லிக்கிட்டு என்னிக்கி அந்தப் புள்ள இந்த வீட்டு மின்னாடி வந்து நிக்கிதோ அன்னிக்கி நான் நம்பறேன்” என்றார்… இதெல்லாம் நடக்குமா என்ற தொனியில்.
அஞ்சுதத்தின் பேச்சைக் கேட்டதும் மற்ற மூவரின் மனமும் சுணக்கம் கொண்டது. “ஏன்ட்டி, நீ இப்பமே…” என்று பேச்சிக்கிழவி பேசும் போதே, “தங்கராசு… தங்கராசு” என்ற அழைப்புச் சத்தம் வெளியே கேட்டது.
அனைவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர். அங்கே கொடிமலர் நின்று கொண்டிருந்தாள்!

