Kathambari Novels
அத்தியாயம் – 5
ஆம், ராதிகா அப்படித்தான்!
சுரேஷைத் திருமணம் செய்து வெனிஸ் வந்த ராதிகாவிற்கு இரு மகன்கள், வேலை என்றானபின் வீட்டையும் பார்த்து, வேலைக்கும் போவது கடினமாக இருந்தது. எனவே உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.
இங்கே உதவிக்கு ஆட்கள் கிடைப்பது சற்று கடினம். அப்படிக் கிடைத்தாலும் பணிக்கூலி மிக அதிகம். ‘அது எதற்கு… அதிகப்படிச் செலவு?’ என்று தோன்ற, தமிழ்நாட்டில் வசிக்கின்ற பெற்றோரிடம் யோசனை கேட்டார்.
அவர்கள் தங்கள் வீட்டில் வேலை செய்துவரும் பெண்மணியை அனுப்பவா என்று கேட்டார்கள். ராதிகா கணவரிடம் கேட்க, அவரும் ஒத்துக் கொண்டார். பின், நடைமுறைகளை… அதிலுள்ள சிக்கல்களை சுரேஷ் பார்த்துக் கொள்ள, ராதிகாவின் பெற்றோர் அந்தப் பெண்மணியை இங்கே அனுப்பினர்.
அந்தப் பெண்மணிதான் கீர்த்தியின் அம்மா தேவி! அப்படித்தான் தேவியும், கீர்த்தியும் வெனிஸ் வந்தனர்!!
தேவி வரவு ராதிகாவிற்குப் பெரிய உதவியாக இருந்தது. கணவன், மனைவி இருவருமே வேலையில் கவனம் செலுத்த முடிந்தது. அதனால் முன்னேற்றம் வந்தது. வசதி, வாய்ப்புகள் பெருகியது. வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.
பணம் அளவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் ராதிகா ஆட்களிடம் பழகுவது பணத்தின் அடிப்படையிலே இருக்கும்! தன் வசதிக்கு இணையான ஆட்களிடம் மட்டுமே பேசுவார், பழகுவார்! இதுதான் அவரது குணம்! அதிலும் மகன்கள் சம்பாத்தியம் வீட்டுப் பொருளாதாரத்தை, அவர் நினைத்ததைவிட உயர்த்தியிருக்க, அந்தஸ்து பார்ப்பதும் உச்சத்திற்குப் போயிருக்கிறது!
இதனால்தான் அவர் கீர்த்தியைப் பார்க்கும் பார்வை ஏளனமாக இருக்கிறது! கீர்த்தி… தன் வீட்டில் வேலைப் பார்த்தவளின், தன்னிடம் கைநீட்டிச் சம்பளம் வாங்கியவளின் மகள், பொருளாதார நிலையில் தங்களைவிட மிகவும் கீழே இருப்பவள் என்றே அவரது பார்வை இருக்கிறது!
இதுதவிர இன்னும் சில முக்கிய காரணங்களும் இருக்கின்றன அவருடைய ஏளனப்பார்வைக்கு!!
இந்த எண்ணமுள்ளவர், எப்படி மகன் கீர்த்தியுடன் பேசுவதை ஏற்பார்? அவர் ஏற்பதில்லை! அவருக்குத் துளியும் இது பிடிப்பதில்லை. மகனின் சிறுவயதில், அவர் இதைப் பெரிதாக எடுக்கவில்லை. வளர்ந்தபின்… ‘தங்கள் நிலை என்ன, கீர்த்தி நிலை என்ன?’ என்று புரிந்து கொள்வானென விட்டுவிட்டார். ஆனால் மகன் விடமாட்டான் என்று தெரிந்தும், அவனைக் கண்டிக்க ஆரம்பித்தார்.
இன்றுவரை கண்டித்துக் கொண்டே இருக்கின்றார். அவர் மகன்தான் அதைக் கேட்பதேயில்லை! அது மட்டுமல்லாமல் கீர்த்திக்காக பரிந்து பேசுவான்! தன் அம்மாவை எதிர்த்துப் பேசுவான்!!
தன் மகன், எவளோ ஒருத்திக்காக தன்னை எதிர்த்துப் பேசுகின்றானே என்ற கோபத்தில் அவரும் கத்துவார்! அதன் வெளிப்பாடாய் கீர்த்தியைக் கண்டபடி திட்டித் தீர்ப்பார்! அது திலீப்பை இன்னும் அவரை எதிர்த்துப் பேச வைக்கும்!!
அவர் கீர்த்தியின் நிலையைப் பார்க்கிறார்! அவன் அவளின் நிலைமையைப் பார்க்கின்றான்! இந்த முரண்பாட்டால் அடிக்கடி மகனிற்கும் அம்மாவிற்கும் இடையே வாக்குவாதம், சண்டை வரும்!!
இதோ இன்றுகூட அவர் பேசும் விதம் அலுத்துப் போயிருந்தாலும், கீர்த்திக்கு ஆதரவாக, “என் ஃபிரண்ட்காக நான் சமைக்கிறேன். அதுக்கு எதுக்கு இப்படிப் பேசறீங்க” என்று கேட்டிருந்தான்.
“அவ உனக்கு ஃப்ரண்டா, ஸ்டேட்டஸ் பார்த்து பழக வேண்டாமா? பாலு, இஷா எப்படி இருக்காங்கனு பாருடா, நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்க?” என்று கத்த ஆரம்பித்தார்.
அவன் அமைதியாகிவிடவும், “பேசுடா” என்று அதட்டினார்.
“என்ன பேசனும்?”
எக்கச்சக்க எரிச்சலுடன், “அவளோட பொறுப்பை உன் தலையில எதுக்குடா தூக்கிச் சுமக்கிற?” என்றார்.
“நான் எங்க சுமக்கிறேன்? அவ அவளையே பார்த்துக்கிறா. யாரும் அவளை பார்க்கனும்னு தேவையில்லை. அவளாம் செல்ஃப் மேட்! [self made]”
“என்னது செல்ஃப் மேடா? அப்படினா அவ எந்த உதவியும் என்கிட்ட கேட்கல. நானும் ஐயோ பாவமேனு அவளுக்கு எதுவுமே செய்யல, அப்படியாடா?” என்று ஒரு பார்வை பார்த்தார்.
பதில் சொல்லாமல் ஒரு நொடி அமைதியாக நின்றான்! அதன்பின்னும் அந்த கேள்வியைத் தவிர்த்துவிட்டு, “மா… சமைச்சிக் கொண்டு போறதுக்கு போய் இவ்வளவு பேசனுமா?” என்று வேறொரு கேள்வி கேட்டான்.
“என்னய ஏன்டா பேச வைக்கிற… என்னைப் பேச விடாத”
“அதுக்கு என்ன செய்யனும்?”
“அவ அம்மா உயிரோட இருந்தவரைக்கும் இங்க இருந்தா… சரி. ஆனா இப்ப அவ அம்மாதான் இல்லைல?! இன்னமும் எதுக்கு இங்க இருக்கனும்?”
“அவளை இப்போ எங்க போகச் சொல்றீங்க?”
“அவளோட தாய்மாமா திருச்சி பக்கத்தில இருக்காருல, அவளை அங்க போக சொல்லு. இல்லயா அவ அப்பாவ…” என்று ராதிகா பேசி முடிக்கும்முன், “ம்மா, போதும், அதலாம் கீர்த்திக்குப் பிடிக்காது. அவ எங்கயும் போக மாட்டா” என்று அப்படியொரு கோபம் வர கத்தினான்.
“அவளாம் ஒருத்தினு… அவளுக்குப் பிடிக்குது, பிடிக்காது பத்தி நான் ஏன்டா யோசிக்கனும்!” என்றார் அவனுக்கு ஈடாக!
செய்ததை சிற்றுண்டி பெட்டியில் எடுத்து வைத்துவிட்டு, “ஆனா அவளுக்கு எது பிடிக்கும், பிடிக்காதுனு நான் யோசிப்பேன்” என்றவன், “அவளைப் பத்தி பேசறத முதல நிறுத்துங்க” என்றான்.
“சரிடா பேசலை. உன்னய பத்தி பேசலாம்ல… நீ எப்போ மேரேஜ் பண்ணிக்க போற?” என்று வழக்கமான கேள்வியைக் கேட்க, “இப்போ வேண்டாம்” என்று வழக்கமான பதிலைச் சொன்னான்.
“ஏன்டா?” என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் திலீப் கிளம்பப் பார்க்க, “நீங்க ஒன்னும் கேட்க மாட்டிங்களா?” என்று சுரேஷிடம் வந்து நின்றார் ராதிகா.
அக்கணத்தில் அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அம்மாவின் கேள்விக்குப் பதில் கூறாமல் போக நினைத்தவன், அப்பாவின் பார்வையைச் சந்தித்ததும் ஏதாவது கேட்பாரா என்று போகாமல் நின்று கொண்டான்.
இது… திலீப்பிற்கும், அவன் அப்பாவிற்குமான பிணைப்பின் சிறு வெளிப்பாடு! அப்பா என்றால் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்! அப்பாதான் அவன் உயிர்! அவர்மீது அன்பும், பாசமும் அவனுக்கு எக்கச்சக்கம் உண்டு!
சுரேஷிற்கும் அப்படித்தான்!!
மகனை எதுவும் சொல்ல மாட்டார். மற்றவர்கள் அவனை ஏதும் சொன்னாலும் பிடிக்காது. ‘அப்படியென்றால் மனைவி மகனைப் பேசுவது பிடிக்காதா’ என்று கேட்டால், ‘அதில் சுரேஷிற்கு உடன்பாடில்லை’ என்பதே பதிலாக இருக்கும்!
உடனே, ‘அப்படியானால் கீர்த்திமீது திலீப் காண்பிக்கும் அக்கறையை அவர் ஆதரிக்கிறாரா?’ என்ற ஒரு கேள்வி எழலாம்! இந்தக் கேள்விக்கும், ‘சுரேஷிற்கு அதில் உடன்பாடில்லை’ என்பதுதான் பதில்!!
ஆம், சுரேஸும் பணம், வசதி பார்த்துதான் பழகுவார். ஆனால் ராதிகா போல் கீர்த்தியைப் பேசிக் கொண்டிருக்க மாட்டார். இன்னும் சொல்லப் போனால் அவளிடம் பேசக்கூட மாட்டார்!
இது திலீப்பிற்கும் தெரியும்! எனினும், அந்த உடன்பாட்டின்மையை அவன்மீது திணிக்காமல் இருக்கின்ற அப்பாமேல் அவனுக்கு மதிப்பு, மரியாதை அதிகம் உண்டு. என்றும் அப்பா பேச்சிற்கு முக்கியத்துவம் கொடுப்பான்.
கோபமாக இருந்தால், அவர் பேச்சு அவனைச் சாந்தப்படுத்தும்! குழப்பத்தில் இருந்தால் அவனைத் தெளிவடையச் செய்யும்! எவ்வித மனநிலையில் அவன் இருந்தாலும், அப்பாவின் வார்த்தைகள் அவனது மனநிலையை மாற்றும்!
அதாவது மகன் மனநிலையை உணர்ந்து சுரேஷ் பேசுவார்!!
இப்போதுகூட ராதிகா மகனைப் பற்றி கணவரிடம் முறையிட்டும், “திலீப்… நீ சமைச்சது அப்பாகெல்லாம் கிடையாதா?” என்று சுரேஷ் ஆசையாக கேட்க, அம்மா பேசியதால் உண்டான எரிச்சல் அவனுக்குச் சட்டென மறைந்தது.
உடனே கீர்த்திக்கு எடுத்துப் போகயிருந்த சிற்றுண்டியை வைத்துவிட்டு, போய் சமைத்ததை பீங்கான் தட்டில் எடுத்து வந்து, “ப்பா, எப்படி இருக்குனு சொல்லனும்” என்றதும்… ஒரு வாய் சாப்பிட்டு, “நல்லாருக்கு திலீப், எப்பவும் போல” என்றார் புன்னகையுடன்.
சிறு புன்னகையுடன், “ஓகே ப்பா, நான் கிளம்பறேன்” என்றவன்… கீர்த்தியைப் பேசியதால் ராதிகா மீதிருந்த கோபத்தைக் காட்ட நினைத்தவன், அவரிடம் சொல்லாமலே சென்றுவிட்டான்!
******************************
ரீசோல் யுவர் லைஃப், சான் மார்க்கோ!
வீட்டிலிருந்து இரண்டு மீட்டர் தூரம் நடந்து வந்து, ஏழு நிமிடம் நீர்ப்பேருந்தில் பயணம் செய்தபின் சான் மார்க்கோ வந்தடைந்தான் திலீப். அதன்பின்பு கால்வாய் ஓரப் பாதையில் நடந்து கீர்த்தியின் சிகிச்சையகம் வந்து நின்றான்.
சற்று கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டி, “கிளைன்ட் இருக்காங்களா கீர்த்தி” என்று கேட்டான். ஏதோ எழுதிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து, “இல்ல, வா” என்றதும், உள்ளே வந்து அவள் அமர்ந்திருந்த நீண்ட மெதுஇருக்கையில் அமர்ந்து, அவளிடம் சிற்றுண்டி பெட்டியை கொடுத்தான்.
கையிலிருந்த குறிப்பேட்டை வைத்துவிட்டு அதை வாங்கியவள், “என்ன திலீப் இன்னைக்கு சீக்கிரம் வந்திருக்க” என்று கேட்க… ராதிகா பேசியதையே நினைத்திருந்தவன், “சாப்பிடு கீர்த்தி” என்று மட்டும் சொல்ல… மூடியைத் திறந்தவள், “ஓ சிக்கன் நூடுல்ஸ்” என்று உண்ண ஆரம்பித்தாள்.
அவள் சாப்பிடும் வேகத்தைப் பார்த்து, “லன்ச் சாப்பிடலயா கீர்த்தி, இவ்ளோ நேரம் சாப்பிடாம என்ன பண்ண?” என்றான்.
வாயில் இருந்த உணவை விழுங்கிவிட்டு, “வீடு பார்க்கப் போனேன், அதான் லேட்டாயிடுச்சி. இப்போ ஒரு கிளைன்ட் அப்பாய்ன்ட்மென்ட் இருக்கு. அத முடிச்சிட்டு வெளிய சாப்பிடப் போக நினைச்சிருந்தேன்” என்றாள்.
“வீடு ஓகேவா”
“ம்கூம் இல்ல” என்றவள், “அப்புறம் திலீப், அன்னைக்கு ஒருத்தன் மேல மோதி, கிஃப்ட் உடைஞ்சி ரொம்ப பேசினான்னு சொன்னேனல்… அவன் இன்னைக்கு சென்ட்டர் வந்திருந்தான்” என்று அடுத்த வாய் எடுத்துவைத்தாள்.
வேகமாக, “அவன் எதுக்கு இங்க வந்தான்?” என்றான் கோபத்துடன்.
“நீ ஏன் இப்படி ரியாக்ட் பண்ற?”
“சரி… ஏன் வந்தானாம்?” என்றான் அமைதியாக.
“அவன் ஃப்ரண்ட்காக! ஹென்ரி தெரியும்ல, சைக்யாட்ரிஸ்ட்… அவர் என்னை ரெஃபர் பண்ணிருக்காரு” என்று சொல்லுகையில் அவள் முகத்தில் பெருமை தெரிந்தது… மருத்துவர்கள் மத்தியில் ஓரளவு அறியப்படுகிறோமென.
விவரம் தெரிந்த வயதிலிருந்து… பொறுப்பு மட்டுமே பார்த்த அவள் முகத்தில், இன்று பெருமையும் வெளிப்படுவதைப் பார்த்தபடி, “அவன் இன்னைக்காவது ஒழுங்கா பேசினானா?” என்றான்.
“ம்… ம்…” என்று இழுத்து சொல்லி, “ஓகேதான்” என்றாள். பின் சட்டென, “ஆனா போறப்போ… எனக்கும் உனக்கும் இருக்க பிரச்சனையில என் ஃப்ரண்ட்க்கு ஒழுங்கா தெரபி கொடுப்பியானு கேட்கிறான்” என்றாள்.
“ஒரு சைக்யாட்ரிஸ்ட் உன்னை ரெஃபர் பண்ணிருக்காரு. அதுலே உன்னைப் பத்தி தெரிய வேண்டாமா… அவன் கேட்டதுக்கு நீ ஒன்னும் சொல்லலையா?”
“இங்க வச்சி ரொம்பப் பேச முடியாதே… இந்த டவுட் தேவையில்லைனு மட்டும் சொன்னேன்”
“பேசாம தெரபி கொடுக்க முடியாதுனு சொல்லி நீ அனுப்பியிருக்கலாம்”
“என்ன சொல்ற நீ… அவனுக்காக என் வேலைய நான் செய்யாம இருக்கணுமா?”
அதற்கு எதுவும் சொல்லாமல், முக்காலியில் அவள் வைத்த குறிப்பேட்டை எடுத்து, “என்னது இது” என்றான்.
அதில் எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இது வீட்டு ரென்ட், இது சென்டர் ரென்ட், இது ராதிகா மேம்க்கு கொடுக்க வேண்டிய கடன். இது மத்த செலவு. நாலு மாசமா இதெல்லாம் போக சேர்த்து வச்சது… இந்த அமௌன்ட். இத வச்சி சென்ட்ர கொஞ்சம் ரெனோவேட் பண்ணப் போறேன்” என்று சொல்லி, சாப்பிடுவதில் கவனத்தை மாற்றினாள்.
அவனும் ஒன்றும் பேசவில்லை. குறிப்பேட்டில் ‘ராதிகா மேம்ஸ் டெப்ட்’ என்று எழுதியிருப்பதைப் பார்த்தான். சற்றுமுன் ராதிகா, ‘என்கிட்ட அவ உதவி கேட்கலயா, நான் அவளுக்காக ஒன்னுமே செய்யலயா’ என்று கேட்டது ஞாபகத்தில் வந்தது.
ஆம், கேட்டாள்… கீர்த்திதான் ராதிகாவிடம் பண உதவி வேண்டினாள்! உடனே அவனுக்கு அந்த நாள் நினைவில் வந்தது. அன்றிலிருந்து… இன்று வரை தன் அம்மா கீர்த்தியிடம் நடந்து கொள்ளும் முறையை நினைத்துப் பார்த்தான். மனம் கஷ்டப்பட்டது. அது அவன் முகத்திலும் வெளிப்பட்டது.
பழைய நினைவில் மூழ்கி இருந்தவனை, கீர்த்தி பார்த்தாள். திலீப்பின் முகம் சரியில்லை என்று தெரிந்தது. ஆனாலும் எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால் அவன் தனக்காகச் சமைத்து எடுத்து வந்ததிற்காக ராதிகா அவனை ஏதாவது சொல்லியிருப்பார் என்று அவளுக்குத் தெரியும்!
எப்படியென்றால்… பார்க்கும் போதெல்லாம் அவளை அவர் நடத்திய, நடத்தும் முறையால்! ‘திலீப்கிட்ட பேசாத’ என்று நேரடியாகவும் சொல்லியிருக்கிறார், சொல்லி வருகிறார்தான்! ஆனால் அவர் சொல்வதற்காகவெல்லாம் அவளால் நட்பை, நண்பனை விட முடியாது!!
ஆனால் அதேநேரம் திலீப்பிற்கும், அவனது அம்மாவிற்கும் அவளால் எதுவும் வாக்குவாதங்கள், சச்சரவுகள் வருவதையும் விரும்பமாட்டாள்! அதனால்தான் அவனிடம்… அவன் மனம் நோகாதபடி, ‘உன் அம்மா கோபப்படும் விதமான கவனிப்புகள் வேண்டாமே’ என்று சொல்லியிருக்கிறாள்… சொல்கிறாள்!!
ஆனால் அவன்தான் கேட்பதாகவேயில்லை! ஏனெனில் அவனுக்கு அவளைக் கவனித்தே பழகிற்று… அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை!!
இதோ இன்றுகூட கீர்த்தி, ‘வெளிய போய் சாப்பிடறது ஓகே! பட் வீட்ல செஞ்சி எடுத்திட்டு வர வேண்டாமே’ என்று வேண்டுகோள் வைக்க, ‘சீக்கிரம் சாப்பிடு கீர்த்தி. கிளைன்ட் வந்திடப் போறாங்க, அப்புறம் பசியோட இருப்ப நீ’ என்றே சொன்னான் திலீப்.
****************************************
ரீசோல் யுவர் லைஃப், சான் மார்க்கோ!
இரண்டு வாரங்கள் கடந்திருந்தன! இந்த நாட்களில் டேவிட் மூன்றுமுறை ஆலோசனை அமர்விற்கு வந்திருந்தான். அறிமுக நாளில் இருந்தது போல் இல்லாமல் முதல் அமர்வில் ஓரளவு பேசினான். கீர்த்தி அவனைப் பேச வைத்திருந்தாள்.
என்னென்ன சங்கடங்கள் உங்களுக்கு இருக்கிறது? எத்தனை நாட்களாக இப்படி இருக்கிறது? இதற்கு முன்னே இது போன்ற துயரமான மனநிலை இருந்திருக்கிறதா? இதற்கு முன் ஆலோசனை எடுத்த அனுபவம் உண்டா? எதற்காக இந்த ஆலோசனை வேண்டும்? இந்த ஆலோசனையில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
இப்படிப் பல கேள்விகள், பல்வேறு விதங்களில்… திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்து, அவனிடமிருந்து ஓரிரு வார்த்தைகளில் பதிலை வாங்கியிருந்தாள். அந்த அமர்வின் முடிவில், டேவிட்டின் தயக்கம் சிறிதளவு போயிருந்தது.
இரண்டாவது அமர்வில்… தன் அடிப்படைக் கல்வி, பல்கலைக்கழக படிப்பு, வேலையில் எத்தனை வருட அனுபவம் இருக்கிறது என்று கீர்த்தி பகிர்ந்து கொள்ள… டேவிட் அவனது படிப்பு பற்றி மட்டும் சொல்லியிருந்தான். ஆனால் அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை.
மூன்றாவது அமர்வில், அவன் குடும்பம், உறவுகள் பற்றிக் கேட்டுப் பார்த்தாள். முதலில் ஒன்றும் சொல்லாமல் இருந்தவன், அம்மா வழி உறவுகள் பற்றிச் பேச ஆரம்பித்து, அப்படியே நிறுத்திக் கொண்டான். இன்னும் பேசச் சொல்லி வற்புறுத்தாமல், அவளே பொதுவானப் பேச்சுகள் பேசினாள்.
அடுத்து, டேவிட் தயக்கம் முற்றிலும் நீங்கி, மனவேதனையைப் பகிர்ந்திட உதவும்படியாகப் பேசினாள். கடைசியாக மனமாற்றத்திற்காக செயல்திறன் ஒன்றை வீட்டில் செய்யச் சொல்லி, அந்த அமர்வை முடித்திருந்தாள்.
ரவி, மதுதான்… ‘மூன்று முறை வந்தபின்னும் அவனிடம் மாற்றம் இல்லையே?’ என்று கலவரம் ஆனார்கள். நண்பன் இப்படியே இருந்து விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு. அவன் விரைவில் சரியாக வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு. அதனால் இப்படி!
ஆனால் கீர்த்திக்கு அப்படியல்ல! என்னென்ன வழிமுறைகள் கையாண்டால் மனஅழுத்தத்தில் இருப்பவரைப் பேச வைக்க முடியுமெனத் தெரியும். எனவே அவள் ஒவ்வொரு அடியாக பொறுமையாக எடுத்துவைத்தாள்.
முதல் இரண்டு அமர்விற்கு வந்தபோது, டேவிட் மனநிலையை மாற்றிட சில செயல்திறன்கள் தந்திருந்தாள். அதில் ஒன்றைக்கூட அவன் செய்யவில்லை. கேட்டதற்கு, ‘என்னால முடியல’ என்று முடித்துக் கொண்டான்
மூன்றாவது முறை வந்தபோதும் செயல்திறன் தந்திருந்தாள். அதைத்தான், நான்காவது அமர்விற்காக இன்று வந்துள்ள டேவிட்டிடம், “லாஸ்ட் டைம் ஒரு ஆக்ட்டிவிட்டி கொடுத்தேனே, அத பண்ணீங்களா?” என்று கேட்டாள்.
“ஐ கான்ட் டூ இட் [I cannot do it]. சாரி” என்றான் மெதுவாக.
“சாரி வேண்டாம். இப்ப தூக்கம் எப்படி இருக்கு? லாஸ்ட் கான்வர்சேஷனுக்கு அப்புறம் எதும் சேஞ்சஸ் தெரியுதா”
“இட்ஸ் தே சேம் [it’s the same]”
“ஓகே…” என்று யோசித்தபடிச் சொல்லி, “டேவிட், சைக்கியாட்ரிஸ்ட் கொடுத்த மெடிசின் எடுத்துக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம்”
“குட்! ம்ம் ஓகே… இன்னைக்கு எங்கருந்து பேசினா கம்ஃபர்டபிளா இருக்கும்னு சொல்லுங்க… இங்கயா, சோஃபாலயா, இல்ல… ரூம்லயா?” என்று ஒவ்வொரு கேள்விக்கும் நல்ல இடைவெளி விட்டுக் கேட்டாள்.
“இங்கயே ஓகே” என்றதும், “ஃபைன் டேவிட்… ஆனா எதுக்கும் அந்த ரூம் போய் பார்த்திட்டு வந்து டிசைட் பண்றீங்களா?” என்று கேட்டதும், ஓரிரு நிமிடங்கள் யோசித்தான். பின், “ம்ம்” என்று எழுந்து சென்றான்.
வட்டவடிவ கண்ணாடி மேசை, அதில் ஒரு மெல்லிழைத்தாள் பெட்டி… மூன்று எஃகு நாற்காலிகள்! முக்காலி கட்டமைப்பு கொண்ட விளக்கு… திரைசீலை இழுத்துவிட்டிருந்ததால் மிதமான வெளிச்சம்… ஒரு மூலையில் சிறு அலம்பு தொட்டி… இப்படி இருந்த அறையைப் பார்த்துக் கொண்டே நின்றான்!
அவனுடன் எழுந்து வந்திருந்த கீர்த்தி, “டேவிட்” என்று மட்டும் சொல்ல, “இங்க ஓகே” என்று அவன் மெல்லக் கூற, “உட்காருங்க” என்றதும், ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்தான்.
ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் எடுத்து வந்து மேசையில் வைத்து, ஒரு கை தூர இடைவெளியில் நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு, அவளும் அமர்ந்துகொண்டு, “டிஸ்கம்ஃபர்ட் எதும் இல்லைல டேவிட்?” என்றாள்.
“ம்கூம்”
இன்று அவன் மனதின் சோகத்தை, வேதனையைப் பகிர்ந்து கொள்வான் என்று கணித்தவள்… மிகவும் மிருதுவான குரலில், “டேவிட், இப்போ என்கிட்ட உங்க கிரிஃப் என்னென்னு எக்ஸ்பிரஸ் பண்ணுங்க” என்று கேட்டு, அவன் பேசுவதற்காக காத்திருந்தாள்.

