Kathambari Novels
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம்!
மதிய நேரம்! மாறன் சாப்பிட்டு முடித்து இருந்தான். அலுவலக அறையின் டிவியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.
‘செங்கல்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர், ஆய்வாளராக பணிஉயர்வு பெற்று, திருநெல்வேலி மாவட்டத்தின் காவல் நிலையத்திற்குப் பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்’ என்ற செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
ஏற்கனவே பார்த்து கோபமூட்டிய செய்திதான். இருந்தும் திரும்பப் பார்க்கும் போது மாறன் கோபம் அதிகரித்தது. இரு கைகளாலும் நெற்றியைத் தாங்கி, ‘விசாரிக்கணும்னு நினைச்ச சப்இன்ஸ்பெக்டரை டிரான்ஸ்பர் பண்ணியாச்சு. இனி யாரை விசாரிக்க?’ என்று முணுமுணுத்தான்.
அக்கணம் அறைக் கதவைத் திறந்த சசி, “பிஸியா?” என்று கேட்டுக் கொண்டு நிற்க, ‘இல்லை’ என தலையசைத்து, “வந்து உட்காரு” என்று சொன்னான்.
சசி வந்து அமர்ந்தபின், இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது. இருவரது முகமுமே சரியில்லாமல் இருந்தது.
“தப்ப மறைக்க என்னென்ன செய்ய முடியுமோ… அத்தனையும் செய்றாங்க. விசாரிக்க நினைச்ச எஸ்ஐக்கு டிரான்ஸ்பர் வித் ப்ரோமோஷன். இனி, அந்தப் பையன் என்ன சொன்னான்னு அவர் வெளியில சொல்வாரா?
அந்த இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் மேல என்கொய்ரி நடந்தாலும், உண்மை வெளிவருமான்னு தெரியலை. அவங்ககிட்ட அதிகாரம் இருக்கு மாறன். நாம ஒன்னுமே செய்ய முடியாது” என்று சசி புலம்பினான்.
“இந்த எஸ்ஐ ட்ரான்ஸ்பெர் பத்தி உனக்குத் தெரியாதா?”
“இது இன்டர் டிஸ்ட்ரிக்ட் ட்ரான்ஸ்பர் இல்ல. இன்ட்ரா டிஸ்ட்ரிக்ட் ட்ரான்ஸ்பர். டிஐஜி முடிவெடுத்திருப்பாரு” என்றவன், “அதெல்லாம் விட, இதை பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க” என்று கோபப்பட்டான்.
“விடு சசி! இதுக்கு முன்னாடி அந்தப் பையன் சப்இன்ஸ்பெக்டர்கிட்ட ஏதாவது சொல்லயிருப்பானானு சந்தேகப்பட்டோம். ஆனா இந்த டிரான்ஸ்பர் தெளிவா சொல்லிடுச்சி. அவன் ஏதோ உண்மையை உளறிருக்கான். அது வெளிய வரக் கூடாதுன்னுதான் அவனைக் கொலை பண்ணிருக்காங்க”
“அதெல்லாம் ஓகே மாறன்! ஆனா என்ன சொன்னான்? அதுதான முக்கியம். அது தெரியாம என்ன பண்ண முடியும்?”
ஓர் அமைதி. அதிகாரத்தின் பிடியில் அலைக்கழிக்கப்படும் அதிகாரிகளுக்கு வரும் சோர்வு, அவர்கள் இருவர் முகத்திலும் தெரிந்தது.
சில நொடிகளுக்குப்பின் சசி, “இதை பாரு” என்று கைப்பேசியைக் கொடுக்க, “இதென்ன சசி? யூடூயூப் வீடியோவா? இதெதுக்கு என்னைப் பார்க்க சொல்ற?” என்று அதை வாங்கிக் கொண்டே கேட்டான்.
“பாரு மாறன்! ஏன்னு உனக்கே புரியும்” என்று சசி சொன்னதும், மாறன் காணொளியை ஓட விட்டான்.
“வணக்கம். மதி நியூஸ் சேனலுக்காக நான் உங்கள் மதிவாணன். இன்னைக்கு நாம பார்க்கப்போற நியூஸ் என்டர்ன்ஸ் எக்ஸாம்ல நடந்த, நடந்துக்கிட்டு இருக்கிற தவறுகள் பற்றித்தான்.
ஈரோடு என்டர்ன்ஸ் எக்ஸாம் சென்டர்ல, எக்ஸாம் ஹால்ல ஆள்மாறாட்டம் செஞ்சதா… அதாவது ஒரு ஸ்டுடென்ட்க்கு பதிலா இன்னொரு ஸ்டுடென்ட் எக்ஸாம் எழுதினதா ஒரு பையன் கைது செய்யப்படுறான். இது பேப்பர்ல நியூஸா வந்திருக்க.
இது நம்ம டிஸ்ட்ரிக்ட்ல மட்டும்தான் நடந்திருக்கானு கேட்டா!? இல்ல இன்னும் ரெண்டு டிஸ்ட்ரிக்ட்ல நடந்திருக்கு. அது எந்த டிஸ்ட்ரிக்ட்னா அரியலூர் அன்ட் செங்கல்பட்டு. இங்க காப்பி பண்றதுக்கு ஹெல்ப் செஞ்சதா சொல்லி, ஒருசில ஸ்டுடன்ட்ஸ் கைது செய்யப்பட்டிருக்காங்க.
ஊடகங்கள்ல பெருசா பேசப்படாத இந்த நியூஸ் பத்தி நாம பேசலாம். வாங்க ஷோகுள்ள போகலாம்” என்று சொன்னதும், சில நொடிகள் ‘சவுண்ட் எபக்ட்ஸ்’ வந்து போனது. மீண்டும் மதி பேச ஆரம்பித்தான்.
“ஓகே! இந்த மாதிரியான தவறுகள் இப்ப மட்டும்தான் நடக்குதா? அதாவது இந்த வருஷம் மட்டும்தான் நடக்குதான்னா? இல்லை! இது ரொம்ப வருஷமா நடந்துக்கிட்டு இருக்கு. அதுக்குரிய ஆதாரங்களை இப்போ பார்க்கலாம்.
ஃபர்ஸ்ட்! 2015 என்ட்ரன்ஸ் டெஸ்ட்ல பார்த்து எழுதறதுக்கு ஹெல்ப் பண்ணதா சொல்லி மதுரையில ஒரு மாணவன் கைது செயப்படுறான். இது அப்போ பேப்பர்ல நியூஸா வந்திருக்கு.
அடுத்து 2016 என்ட்ரன்ஸ் டெஸ்ட்ல ஒரு இடத்தில இல்லை… மொத்தமா அஞ்சு இடத்தில ஆள்மாறாட்டம், காப்பி பண்ணறதுக்கு ஹெல்ப் செஞ்சதா சொல்லி பன்னெண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்காங்க.
இவங்க பேர்ல ஸ்டேஷன்ல கேஸ் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. பட் அதுக்கப்புறம் கேஸ் என்னாச்சுன்னு தெரியலை?! ஏன்னா விசாரணை முறையா நடக்கலை.
நெக்ஸ்ட்! 2017 வருஷத்திலயும் இது போன்ற செய்திகள் வந்திருக்கு. ஆனா, இந்த மாதிரி கேஸ்ல கைது செய்யப்பட்ட மாணவன் விசாரணையின் போது ஒரு ஏஜென்ட் பேரைச் சொல்லியிருக்கான். அந்த ஏஜென்டையும் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க.
பட் ரெண்டு பேருக்குமே பெயில் கிடைச்சிருக்கு. அன்பார்ச்சுனேட்லி அந்த ஸ்டுடென்ட் அன்ட் ஏஜென்ட் இறந்து போயிருக்காங்க. அவங்க ஏன், எப்படி இறந்தாங்க அப்படிங்கிற விவரம் சரியா சொல்லப்படலை. அப்புறம் அந்த ஏஜென்ட் யாரு? அதுவும் தெரியலை.
அதுக்கப்புறம் வரிசையா, 2018, 2019, 2020 களிலும் இது போல செய்திகள் வந்த வண்ணம்தான் இருந்திருக்கு!
ஓகே!! சில கேள்விகள் இருக்கு. அதை மக்கள் முன்னாடி வைக்கிறோம்.
ஃபர்ஸ்ட் ஸ்டுடென்ட் அட்மிட் கார்டுல என்ன டீடெயில்ஸ் இருக்கும்? அட்மிட் கார்டு நம்பர், ஸ்டுடென்ட் நேம், அப்பிளிக்கேஷன் நம்பர், டேட் ஆஃப் பெர்த்.
ரொம்ப முக்கியமா, ஸ்டுடென்ட் போட்டோ வித் டிஜிட்டல் சிக்னேச்சர்.
இப்ப ஆள்மாறாட்டம் பண்ணனும்னா, அட்மிட் கார்டுல இருக்கிற ஒரிஜினல் ஸ்டுடென்ட் போட்டோ, ஆள்மாறாட்டம் செய்யற பையனோட போட்டோவா மாத்தணும்.
இதை யாரு மாத்தியிருப்பாங்க? இது முத கேள்வி!
செகன்ட்! செங்கல்பட்டு என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல ஒரு ஸ்டுடென்ட் காப்பி
பண்ண ஹெல்ப் செஞ்சதா சொல்லி அரெஸ்ட் ஆகி, மர்டரும் நடந்திருக்கு.
இப்போ கேள்வி என்னென்னா? அந்த ஸ்டுடென்ட் ஏற்கனவே இன்ஜினியரிங் முடிச்ச பையன். அவனுக்கு எப்படி அட்மிட் கார்டு கிடைச்சிச்சு? – இது ரெண்டாவது கேள்வி.
தேர்ட்! ஏற்கனவே ஒரு ஸ்டுடென்ட் அன்ட் ஏஜென்ட் டெத் நடந்திருக்கு. இது கொலையா இல்லை இயற்கை மரணமா-ன்னு தெரியலை. பட், இந்த வருஷம் செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு ஸ்டுடென்ட் மர்டர் நடந்திருக்கு.
இந்த மரணங்கள் எதற்காக? எதை மறைக்கிறதுக்காக நடத்தப்படுத்து? இது மூணாவது கேள்வி!
முறையான விசாரணை நடந்தாதான், இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கும்
ஓகே பைனலா! ஒவ்வொரு வருஷமும் ரெஜிஸ்டர் ஆகியிருக்கிற கேஸ் எந்தெந்த நியூஸ் பேப்பர்-ல வந்தது-ங்கிற டீடெயில்ஸ் கீழே டெஸ்கிரிப்ஷன் …” என்று மதி சொல்லும் போதே, மாறன் காணொளியை நிறுத்திவிட்டான்.
கைப்பேசியை மேசையில் வைத்த மாறன், “யாரு இது?” என்று ஆச்சிரியமாக கேட்டான்.
“தெரியலை! சும்மா பார்த்துக்கிட்டு வர்றப்போ இந்த வீடியோ பார்த்தேன். ஆமா எதுக்கு கேட்கிற?”
“சேஃபா இருக்கச் சொல்லத்தான். நம்மளையே மிரட்றவங்க இந்த மாதிரி பசங்கள விடுவாங்களா?”
“யாருக்கும் இன்னும் தெரியலைனு நினைக்கிறேன். நேத்துதான் அப்லோட் ஆகியிருக்கு. வீயுவ்ஸூம் பெருசா இல்லை. சப்ஸ்கிரைபர்ஸூம் கம்மிதான்” என்று, இந்தச் செய்தி மக்களை சென்று சேரவில்லை என்ற அர்த்தத்தில் சொன்னான்.
மாறன் அமைதியாக இருந்ததும், “நீ என்ன யோசிக்கிற?” என்று சசி கேட்டான்.
“இந்த வருஷம் நமக்குத் தெரிஞ்சி மூணு கேஸ். பட் கேஸ் ரெஜிஸ்டர் ஆகாம, பேப்பர் நியூஸ் வராம, ஹால்ல மாட்டாம, இப்படி நமக்குத் தெரியாம நிறைய கேஸ் இருக்குமோ?”
“இருக்கலாம்” என்ற சசி, “பட் இந்தப் பையன் சொல்ற மாதிரி 2017ல ஏஜென்ட் அரெஸ்ட் நடந்திருக்கு. நான் செக் பண்ணிட்டேன்” என்றான்.
“அது ஓகே. பட் ஏஜென்ட்தான் இதெல்லாம் பண்ணான்னு சொல்ல முடியாது. இல்லையா?”
இரண்டு பேரும் சற்று நேரம் அமைதியாக இருந்து யோசித்தார்கள்.
“சசி… உனக்கு டிபார்ட்மென்ட்லருந்து ப்ரெஸ்ஸர் வந்தது, இந்த ஸ்டுடென்ட் டெத், அதுக்கப்புறம் நடந்த சப் இன்ஸ்பெக்டர் ட்ரான்ஸ்பெர், அன்ட் எவனோ என்னை மிரட்டினது… இதெல்லாம் பார்க்கிறப்போ, இங்க தப்பும் பெரிசு! தப்பு பண்றவங்களும் பெரிய ஆளுங்க”
“உனக்கு த்ரெட்டனிங் கால் சென்னையிலிருந்து வந்திருக்கு. நம்பர் இப்போ சுவிட்ச் ஆஃப். போலீஸ் தேடிக்கிட்டுதான் இருக்காங்க”
“அதை விடு சசி” என்றவன், “ஆனா அட்மிட் கார்டுல போட்டோ மாத்தறது, ஒரு ஸ்டுடென்ட்க்கு புதுசா அட்மிட் கார்டு கொடுக்கறது ஏஜென்ட் மட்டும் தனியா பண்ண முடியுமா?”
“அப்போ அட்மிட் கார்டு இஸ்யு பண்ற இடத்திலயும் தப்பு நடக்குதுனு சொல்ல வர்றியா?”
“இருக்கலாம்” என்றவன், “இந்த ஆள்மாறாட்டம் பண்றதால யாருக்கு லாபம்? ஸ்டுடென்ட்ஸ் அன்ட் ஏஜென்ட்டோட மரணத்துக்கு பின்னாடி என்ன இருக்கு?” என்று கேட்டவன், “எனக்கென்னமோ என்ட்ரன்ஸ் எக்ஸாம் வச்சி பெரிய தப்பு நடக்கிற மாதிரி இருக்கு” என்றான்.
மேலும், “இத்தனை வருஷம் நடக்குதுனா, இது கேஸ் இல்லை. எ பிக் ஸ்கேம்! என்ட்ரன்ஸ் எக்ஸாம் வச்சி நடக்கிற மிகப் பெரிய ஊழல்” என்றான்.
“நம்ம டிஸ்ட்ரிக்ட் மட்டும்னா நாம பார்த்துக்கலாம் மாறன். இது தமிழ்நாடு முழுசும் நடந்திருக்கு. ஸோ அடுத்து என்ன பண்ண?!”
“இது வெளியே வரக்கூடாதுன்னு நினைக்கிறவங்க, அவங்களுக்கு இருக்கிற அதிகாரத்தை வச்சி என்ன பண்ண முடியும்னு காட்டிட்டாங்க. இப்ப நமக்கு கொடுத்த அதிகாரத்தை வச்சி நாம என்ன பண்ணுவோம்னு காமிக்கலாம்”
“என்ன பண்ணலாம்?”
“இத்தனை வருஷம் நடந்த கேஸ் பத்தின எப்ஐஆர் காப்பி கலெக்ட் பண்ணு. ப்ளஸ் வேற டீடெயில்ஸ் கிடைக்கும்னா அதையும் சேர்த்து, சிம்கிட்ட சப்மிட் பண்ணுவோம். முறையான விசாரணை வேணும்னு கேட்கலாம்”
“அதுவும் சரிதான். கண்டிப்பா பண்ணலாம். நீ சிஎம்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கு. நான் ரிப்போர்ட் ரெடி பண்றேன். இனி டிலே பண்ண வேண்டாம்” என சொல்லும் பொழுதே, “சார்” என்று காசி வந்து நின்றார்.
“என்ன காசி?” என்று கேட்டதும், “சார்! இன்னைக்கு கோ-ஆப்டேஸ் ஓப்பனிங் இருக்கு. லேட்டாகுது” என்றார்.
“வெய்ட் பண்ணுங்க. வர்றேன்” என்றதும், காசி சென்றுவிட்டார்.
சசி எழுந்து கொண்டு, “ஓகே மாறன். நான் கிளம்பறேன். எதுனாலும் ஃபோன் பண்ணு” என சொல்லி, விடைபெற்றுச் சென்றான்.
மாறனும், தன்னை இலகுவாக்கி கொண்ட பின்பு வெளியே கிளம்பினான்.
கோ-ஆப்டெக்ஸ் ஷோ ரூம், செங்கல்பட்டு!
தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் நவீனமாக்கப்பட்டு, அதைத் திறந்து வைக்க கைத்தறி துணிநுால் துறை அமைச்சர் மற்றும் அந்த மாவட்டத்தின் ஆட்சியரான யாழ்மாறனும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அமைச்சர், ஆட்சியர் வருவதால் அந்த சாலையில் காவலர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்கள் இருவரும் வந்ததும், அந்த விற்பனை நிலைய நிர்வாகி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மூடப்பட்ட பெரிய கண்ணாடிக் கதவுகள் குறுக்கே கட்டப்பட்டிருந்த சிவப்பு ரிப்பனை வெட்டி அமைச்சர் வளாகத்தை திறந்து வைத்துப் பேசினார்.
அதன்பின்னர் முதல் விற்பனையை செய்யுமாறு மாறன் அழைக்கப்பட்டதும், ஒருகணம் என்ன வாங்கவென தெரியாமல் நின்றான். ஆனால் அடுத்தகணம் சுடர் நியாபகம் வந்தது.
உடனே வரிசையாக எடுத்துப் போடப்பட்டிருந்த புடவைகளிலிருந்து ஒன்றை தேர்வு செய்து பணம் செலுத்திப் பெற்றுக் கொண்டான்.
பின் அமைச்சருடன் சேர்ந்து விஸ்தரிக்கப்பட்டு விற்பனை வளாகத்தைச் சுற்றிப் பார்த்தான். அதற்கடுத்து சில வினாடிகள் மாவட்ட நிர்வாகம் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் கிளம்பும் முன், “கட்சி ஆளுங்க எதும் பெர்மிஷன் கேட்டு வந்தா, கொஞ்சம் பார்த்துச் செய்ங்க” என்று சிரித்த முகமாக அமைச்சர் சொன்னார்.
கொஞ்சம் யோசித்த மாறன், “நீங்க கவர்ன்மென்ட் செர்வன்ட். நான் சிவில் செர்வன்ட். இதுல கட்சி எங்க வந்தது?” என கேட்டதும், அவரின் சிரித்த முகம் கருகருத்துப் போனது.
மாறன் பேச்சினால் கோபமடைந்த அமைச்சர் எதுவும் பேசாமல், ‘கட்சி மேலிடத்திற்கு இவனைப் பற்றி சொல்ல வேண்டும்’ என்று எண்ணியபடி சென்றுவிட்டார்.
ஆளுங்கட்சிக்கும் தனக்கும் இடையே ஒரு மோதல் போக்கு உருவாவதை மாறன் உணர்ந்தாலும், அங்கிருந்து அலுவலகத்திற்கு வந்து அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டு அன்றைய நாளை நிறைவு செய்தான்.
செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா!
திலோவும் தியாகுவும் வாசற் படியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் காஃபி குடித்து முடித்ததின் அடையாளமாக, அருகில் காலியான காஃபி கோப்பைகள் இருந்தன.
தியாகு பேசப் பேச, அதைக் கேட்டபடி பூங்கொத்திற்கு தேவையான ‘மெஸ் நெட்’ துணியை திலோ வெட்டிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டு வளாகத்திற்குள் ஆட்சியர் வாகனம் நுழைந்தது. அதைக் கண்ட திலோ, “மாறன் வந்துட்டான்” என்று முகம் மலர்ந்தார்.
கார் நின்றதும் இறங்கி வாசலைப் பார்த்தவன், அப்படியே சென்று ‘அக்கடா’ என்று அம்மா, அப்பாவுடன் அமர்ந்து கொண்டான்.
“இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துட்டிங்களாம்மா?” என மாறன் கேட்க, “ம்ம்” என்ற திலோ, “லுக்கிங் டயர்ட்” என்றார் சோர்வாக இருந்தவன் தலைவருடி.
“ஆமாம்மா” என்று சொல்லும் பொழுதே, “சார்! இதை வண்டியிலே விட்டுட்டு வந்துட்டிங்க” என, காலையில் வாங்கிய புடவைப் பையை, காசி கொடுத்துச் சென்றார்.
அமைதியாக வாங்கிக் கொண்ட மாறனைப் பார்த்து, “சாரீ-யா?” என்று திலோ ஆச்சரியமாகக் கேட்டார்.
“ம்ம்ம்! சாரீதான். கோ-ஆப்டெக்ஸ் ஷோ ரூம் ஓப்பனிங்க்கு போயிருந்தேன். அங்க வாங்கினது”
“சாரீ நான் அவ்வளவா உடுத்தறதில்லயே! அப்புறம் எதுக்கு வாங்கின?”
‘என்ன பதில் சொல்ல?’ என்று திண்டாடினான். பின், “சும்மாதான்” என மழுப்பி எழுந்தவன் கைப்பிடித்து, “சாரீ யாருக்குனு சொல்லவேயில்ல?” என்று திலோ கேட்டார்
மீண்டும் அமர்ந்து, “ம்மா! ஃபர்ஸ்ட் பர்ச்சேஸ் பண்ணச் சொன்னாங்க. ஸோ வாங்கினேன். அவ்வளவுதான்” என்று சமாளித்தான்.
“ஓஹ்! பட், இதை என்ன பண்ணப் போற?” என்று அடுத்த கேள்வி கேட்டதும், ‘இதற்கு மேல் எப்படிச் சமாளிக்க?’ என்று தெரியாமல், மாட்டிக் கொண்டது போல் மாறன் இருந்தான்.
மகன் முகமாற்றங்களைக் கவனித்துக் கொண்டிருந்த தியாகு, “ஏன் திலோ, அவனோட பியூச்சர் வொய்ஃப்க்கு கிஃப்ட் பண்ணிக்கலாமே?” என யோசனை சொன்னதும், “தட்ஸ் குட்” என்று திலோ வரவேற்றார்.
ஒருமுறை அப்பா பார்வையைச் சந்தித்தான். பின், “சரிம்மா உள்ள போறேன்” என்றவன், மறக்காமல் கோ-ஆப்டெக்ஸ் பையை எடுத்துச் சென்றான்.
போகும் மகனைப் பார்த்துக் கொண்டிருந்த தியாகுவிடம், “அவனை ஏன் அப்படிப் பார்க்கிறீங்க?” என்று திலோ கேட்டார்.
“ஹி இஸ் இன் லவ்” என்று உறுதியாகச் சொன்னதும், “எப்படிச் சொல்றீங்க?” என்று புரியாமல் கேட்டார்.
“நாமதான் பொண்ணு பார்க்கப் போறோம்னா, பேக்-அ இங்கயே வச்சிட்டுப் போயிருப்பான். பியூச்சர் வொய்ஃப் யாருன்னு அவன் டிசைட் பண்ணிட்டான். அந்தப் பொண்ணுகிட்ட காட்டத்தான், சாரீய எடுத்திட்டுப் போறான்” என்று மகனை கணித்துச் சொன்னார்.
“கிரேட் தியாகு!” என்று கணவரின் காவல்துறை மூளையைச் சிலாகித்துப் பேசினார்.
தியாகு சத்தமாகச் சிரித்தும், “வாங்க யாருன்னு கேட்போம்” என்று திலோ ஆர்வத்துடன் சொன்னதற்கு, “நோ! நோ! அவனே சொல்லுவான். நம்ம ஓகே சொன்னா போதும்” என தியாகு மறுத்துவிட்டர்.
“அதுகூட சரிதான்” என்றவர், “ட்ரெயினிங் டைம்ல மீட் பண்ணியிருப்பான்னு நினைக்கிறேன்” என்று ஆர்வத்துடன் சொன்னார்.
“தெரியலயே திலோ! அவன் பேட்ஜ்ஜா இல்லை வேற பேட்ஜ்ஜா? ஐஏஎஸ்ஆ இருக்குமோ இல்லை, ஐபிஎஸ்ஆ?? எதுவும் தெரியலை”
“நீங்கதான கேட்க வேண்டாம்னு சொல்லிட்டீங்க. இனிமே அவன்தான் சொல்லணும். எப்போ சொல்வானோ?!”
இப்படியே கணவனும் மனைவியும் மகனின் எதிர்கால வாழ்க்கைத் துணை பற்றி, வெகு நேரம் பேசிவிட்டே வீட்டிற்குள் சென்றார்கள்.
யாழ்மாறன் அறை! உள்ளே வந்தவன் புடவையை வைத்துவிட்டு, நாற்காலியில் அமர்ந்தான்.
‘கண்டிப்பா அப்பா கெஸ் பண்ணியிருப்பாரு’ என்று வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டான்.
தன் வாழ்க்கைத்துணை பற்றிப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது தெரியுமென்பதால், ‘இவள் என் எதிர்காலம்’ என்று சுடரைக் கைகாட்டினால், என்ன சொல்வார்கள்? எப்படி அவர்களைச் சரிசெய்ய? சம்மதிக்க வைக்க? என யோசித்து மனம் பாரமானது.
வழக்கு விசாரணையுடன் இதுவும் சேர்ந்ததில், அவனுக்கு மனச் சோர்வைத் தந்தது. ‘நேத்தும் அவகிட்ட பேசல. ப்ச் இன்னைக்கும் பேசற நிலையில இல்ல’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
பின் லேசாகத் தலையை உலுக்கி எழுந்து சென்றவன், பல கோணங்களில் புடவையைப் புகைப்படம் எடுத்து, ‘நாளை பேசுகிறேன்’ என்ற தகவலோடு சுடருக்கு அனுப்பினான்.
************
ராஜா வீடு, அடுத்த நாள் மதியநேரம்
சுடர் வந்திருந்தாள். இருவரும் சேர்ந்து சமையல் செய்து சாப்பிடலாம் என்று நினைத்திருந்தார்கள். சமையல் வேலையில் ராஜா இறங்கிட, டிவி பார்த்துக் கொண்டே, வரவேற்பறையில் சுடர் வெங்காயம் உரித்தாள்.
சமையலறையிலிருந்து வெளியே வந்தவன், “ம்ம்! இப்போ டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லு??” என சமைத்ததைக் கொஞ்சம் கொடுத்து, இதோடு மூன்றாவது முறையாகக் கேட்டான்.
சுவைத்துப் பார்த்தவள், “இன்னும் அப்படியேதான் இருக்கு” என்றாள்.
“இதுக்குமேல என்ன பண்ணன்னு தெரியலை?”
“அதுக்குத்தான் அம்மாவைக் கூப்பிட்டு வந்திருக்கலாம்” என்று சம்பந்தமே இல்லாமல் பேசினாள்.
அமைதியாக நின்றான். அவளும் அதற்கடுத்து எதுவும் கேட்கவில்லை.
உடனே சமையல் அறை செல்லப்போனவன் கைப் பிடித்துக் கொண்டு, “ஏன் ராஜாண்ணா அம்மாகூட பேச மாட்டிக்கிற?” என்று நேரடியாகக் கேட்டாள்.
“இல்லையே! அன்னைக்கு ஜூஸ் வேணுமானு கேட்டதுக்கு பதில் சொன்னேன். அப்புறம் காஃபி…” என்கையிலே ‘போதும் நிறுத்து’ என்று கைகாட்டி, “அவங்க கேட்டாங்க நீ பதில் சொன்ன. நீயா இது வேணும்னு ஏன் கேட்கலை?” என்று கேட்டாள்.
மீண்டும் அமைதியாக இருந்தான்.
அவன் முகத்தைப் பார்த்தவள், “எதையாவது மறைக்கிறியா ராஜாண்ணா?” என்று கலக்கத்துடன் கேட்டாள்.
“மறைக்கிறேனா? அப்படி இல்லை சுடர்”
“நடந்ததை நினைச்சி இப்படி இருக்கியா? இல்லை வேற எதுவுமா? எதுனாலும் சொல்லு. ஏன்னா அன்னைக்கு ரூம்ல…” என பேசும் போது, சுடர் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.
“ப்ச் யாரு இந்த நேரத்தில?” என எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தவள், திரையில் ‘மாறா’ என்ற பெயரைப் பார்த்ததும், “இவன் எதுக்கு இந்த நேரத்தில கால் பண்றான்?” என தனக்குள்ளே கேட்டாள்.
அவள் கேள்விக்கு, “என்னைக் காப்பாத்த” என்று ராஜா கேலியாகச் சிரித்துச் சொன்னதும், சுடர் முறைத்துப் பார்த்தாள்.
இன்னும் கைப்பேசி அழைப்பு ஓசை வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன், “அட்டன் பண்ணி டிசிகிட்ட பேசு. என்கிட்ட அப்புறமா கேள்வி கேட்கலாம்” என எழுந்து சமயலறைக்குள் சென்றான்.
ராஜா போனதும் அழைப்பை ஏற்று, “என்னன்னு சொல்லு?” என்று சீற்றத்துடன் தொடங்கியதும், “ரெண்டு நாள் கழிச்சி ஃபோன் பண்றேன். இப்படித்தான் ஆரம்பிப்பியா?” என்று சட்டென்று கேட்டான்.
“சொல்லு மாறா” என்று குரலை இறக்கியதும், “ம்ம்ம்! பெட்டர்” என்றவன்,
“என்ன பண்ற?” என்று கேட்டான்.
“ராஜாண்ணா வீட்டுக்கு வந்திருக்கேன்! இன்னைக்கு எனக்காக ஸ்பெஷலா அவங்க குக் பண்றாங்க” என்று ‘ஸ்பெஷலில்’ ஒரு அழுத்தம் கொடுத்தாள்.
“கேட்டது புரியலயா? இல்ல உங்க ரெண்டு பேர் பாசத்தைப் பார்த்து ஜெலஸ் ஆவேன்னு நினைச்சி இதை சொல்றியா? அன்னைக்கு உங்க சைல்ட்ஹூட் போட்டோஸ் அனுப்பினதும் இதுக்குத்தானா?” என்று படபடத்தான்.
‘கண்டுபிடிச்சிட்டான்’ என்று தனக்குள் சொல்லிச் சிரிக்கும் போது, “ஒழுங்கா என்ன பண்றன்னு சொல்லு சுடர்?” என்றான்.
அதே சிரிப்புடன், “வெங்காயம் உரிக்கிறேன்” என்று உண்மையைச் சொல்ல, “என்னமோ உன் அண்ணன் உனக்காக சமைக்கிறதா சொன்ன? அவன் என்ன உன்னை வேலை வாங்கிட்டு இருக்கானா?” என ராஜாவை வம்பிழுத்தான்.
அப்படியே சிரிப்பு குறைந்து போனவள், “போதும்! எதுக்கு ஃபோன் பண்ணனு சொல்லு?” என்று குரல் இறங்கிப் போய் கேட்டாள்.
“அப்புறம் சொல்றேன்” என்றவன், “நேத்து ஒரு சாரீ போட்டோ அனுப்பினேனே பார்த்தியா? எப்படி இருக்கு?” என்று ஆசையாகக் கேட்டான்.
கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “என்ன புதுசா சாரீ?” என்று கேட்டாள்.
“கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம் ஓப்பனிங் போனேன். அங்க வாங்கினது சுடர்” என்றவன், “இப்ப சொல்லு! பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.
“சாரீ ஃபுல்லா ஸ்ட்ரைப்ஸ் டிசைன்க்கு பதிலா குட்டி குட்டி பூ இருந்தா நல்லா இருந்திருக்கும்” என்று புடவையில் ‘எது பிடிக்கவில்லை?’ என்பதைச் சொல்ல ஆரம்பித்தாள்.
“ஓ! உனக்கு ஃபுளோரல் டிசைன்தான் பிடிக்குமா?”
“யெஸ்” என்றவள், “அப்புறம் பார்டர் கலர் இது இல்லாம, ஆங்… ம்ம்ம்” என்று யோசித்தவள், “ஆலிவ் கிரீன் இருந்தா பெட்டரா இருந்திருக்கும்” என்றாள்.
“ஓகே”
“ஈவன்! சாரீ கலர் கூட இது இல்லாம மஸ்டர்டு கலர் இருந்திருக்கலாம்” என்று, அவளது பிடிக்காததன் பட்டியல் நீண்டு கொண்டே போனது.
‘இதுக்கு சாரீ பிடிக்கலைனு சொல்லிருக்கலாம்’ என்று மாறனுக்குச் சலிப்புத் தட்டும் போதே, “அப்புறம் முந்தி கூட…” என்று சுடர் தொடர, எழுந்த எரிச்சலை மறைத்து, “ஒன்னு பண்ணேன் சுடர்” என்று சாதாரணமாக சொன்னான்.
“சொல்லு! என்ன பண்ணனும்?”
“கார் எடுத்துக்கோ! டீநகர்ல இருக்கிற ஏதாவது ஒரு சாரீ ஷாப்க்கு போ. நீ இப்போ என்கிட்ட சொன்னதை, சேல்ஸ்மேன்கிட்ட சொல்லு. கரெக்ட் சாரீ எடுத்துப் போட்டதும், பில் பண்ணி வாங்கிக்கோ. என்னை விட்டுரு”
“ஏன் மாறா?!”
“பின்ன என்ன?! சும்மா குறை சொல்லிக்கிட்டே இருக்க??” என்று கொதித்துப் போய் கேட்டான்.
“சரிப்பா! சாரீ ரொம்ப நல்லா இருக்கு” என்றவள், “இப்போ உன் டர்ன்! நான் அனுப்பின போட்டோ பத்திச் சொல்லு?” என்று கேட்டாள்.
‘விடமாட்டாளே’ என்று நினைத்தவன், “சைல்ட்ஹூட் போட்டோஸ் நல்லா இருந்தது! குட்டியா… க்யூட்டா… ஐ லைக்டு இட்” என்றான்.
உள்ளே எழுந்த பூரிப்புடன், “சின்ன வயசில எங்களைப் பார்த்து எல்லாரும்
இப்படித்தான் சொல்வாங்க” என அண்ணன், தங்கை பெருமை பேசினாள்.
உடனே, “அய்யயே! தப்பா புரிஞ்சிக்கிட்ட! நான் க்யூட்னு சொன்னது உன்னை மட்டும்தான். என் மச்சானை இல்லை” என, அவளைச் சீண்டினான்.
பூரிபெல்லாம் பொய்த்துப் போன முகத்துடன், “ரெண்டு நாள் பேசாதுக்கும் சேர்த்து வச்சி பேசறியா?” என்று கேட்டாள்.
“இல்லை! இன்னும் ரெண்டு நாள் பேச மாட்டேன். அதுக்கும் சேர்த்துப் பேசறேன். அன்ட் அதைச் சொல்றதுக்குத்தான் ஃபோன் பண்ணேன்”
“ஏன்? எதுக்கு?”
“சென்னை போறேன்”
“ஹே! எங்க ஊருக்கு வர்ற!” என உற்சாகமாகச் சொன்னதும், “ம்ம் அப்படியும் சொல்லலாம்” என்று அவள் குரலின் துள்ளல் உணர்ந்தும், அதை உணர்த்தாத குரலில் சொன்னான்.
“மாறா வாட் அபௌட் மீட்டிங்?” என கொண்டாட்ட குரலில் கேட்டதும், “நல்லா திட்டிட போறேன். இது அபிஷியல் ட்ரிப். வேற வேலையும் இருக்கு” என்று மறுத்துவிட்டான்.
மேலும் அவனே, “சுடர்! உன்கிட்ட ஒரு முக்கியான விஷயம் கேட்கணும்னு நினைச்சேன்” என்று கருத்தாகக் கேட்டதும், “ம்ம்ம் கேளு” என்றாள்.
“அன்னைக்கு ஒரு யூடுயூப் சேனலுக்கு நியூஸ் எடிட் பண்றேன்னு சொன்னேல. அது மதி நியூஸ் சேனலா?” என்று தோராயமாக, அவனுக்குத் தோன்றியதால் கேட்டான்
“ஆமா! ஏன் கேட்கிற? நீயும் பார்த்தியா?”
“ம்ம் பார்த்தேன். பட் கேர்ஃபுல்லா பண்ணு. அந்தப் பையனையும் கேர்ஃபுல்லா இருக்க சொல்லு. சரியா?”
“சரி! சரி!” என்றவள், “காலேஜ் ஜூனியர் மாறா. ஹெல்ப் கேட்டான். அதான் செஞ்சி கொடுத்தேன்” என்று விளக்கமும் கொடுத்தாள்.
“வேற ஹெல்ப்பே கிடைக்கலையா? இதெல்லாம் ரெப்புயூடட் சேனலுக்கு பண்ணிருந்தா, உனக்கு நல்ல நேம் கிடைச்சிருக்குமே?”
“பரவால்ல!” என்றவள், “அவனுக்கு வேற ஒரு ஹெல்ப் தேவைப்படுது. அதை நீ செஞ்சி கொடுக்கிறியா?” என்று கேட்டாள்
“நானா? நானெப்படி?” என திகைப்புடன் கேட்டதும், “ம்ம்! நீதான கலெக்டர்?” என்று திடமாகச் சொன்னாள்.
“அந்தப் பையன் வேற டிஸ்ட்ரிக்ட். அதான் கேட்டேன்?” என தன் தயக்கத்தின் காரணம் சொன்னான்.
“எந்த டிஸ்ட்ரிக்ட்ல இருந்தாலும், இந்த ஹெல்ப் பண்ணலாம்”
“சரி! என்ன ஹெல்ப்னு சொல்லு?” என்று பொறுப்புடன் கேட்டான்.
“மதி சேனலுக்கு சப்ஸ்கிரைப்பரே இல்லை. ஸோ சப்ஸ்கிரைப் பண்ணிட்டு, அப்படியே பக்கத்தில இருக்கிற பெல் ஐகான் கிளிக் பண்ணிடேன்” என்று அவனது பொறுப்புணர்வை பொசுக்கென்று கலாய்த்துவிட்டாள்.
அமைதியாக இருந்தானா? இல்லை, பொறுமையாக இருந்தானா? என்று தெரியவில்லை. ஆனால் பதில் சொல்லாமல் இருந்தான்.
“திட்டணும்னு தோணுதா மாறா?” என சுடர் எடுத்துக் கொடுத்ததும், “இல்லை அடிக்கணும்னே தோணுது” என்று கடுகடுவென பேசினான்.
அவன் நிலையை நினைத்து, கலகலவென்று சத்தமாகச் சிரித்தாள். சற்று நொடிகள் கைப்பேசி வழியே வரும் காதலி சிரிப்பை ரசித்தான்.
என்ன நினைத்தானோ, “இப்படியே சந்தோஷமா இரு. அப்படியே கொஞ்சம் கேர்ஃபுல்லாவும் இரு” என அன்பு, அக்கறை கலந்த குரலில் சொன்னான்.
“இதென்ன வித்தியாசமா பேசற?”
“தோணுச்சு” என்று மட்டும் சொன்னான். வெட்டவெளியில் தெரியும் மொத்த வானம் போல், அந்த ஒற்றைச் சொல்லில் அவனது ஒட்டுமொத்த காதலும் தெரிந்தது.
அந்தக் காதலை அருகிலிருந்து உணர நினைத்தவள், “மாறா! அன்னைக்கே பார்க்கணும்னு சொன்னேன். நீ கண்டுக்கவே இல்லை. சரி மீட் பண்ணத்தான் மாட்ட. டெய்லி பேசவாது செய்யலாம்ல” என்று காதல் கோரிக்கை மனு ஒன்றை அளித்தாள்.
மனு பரிசீலனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது போன்றதொரு அமைதி அவனிடம்!
“ப்ரொபோஸ் பண்ணப்ப நீ சொன்னதை மறந்திட்டு கேட்கிறேனோ மாறா?”
பாண்டிச்சேரி கடற்கரை சாலையில் பேசியது நினைவில் வந்ததால், “சுடர் அதெல்லாம் ப்ரோபோஸலா?” என்று கேட்டான்.
உடனே, “இல்லை” என்றாள். அதன்பின், “இல்ல ப்ரோபோஸல்தான்” என்றாள். கடைசியில், “சரியா சொல்ல தெரியலை மாறா” என்றாள்.
அவள் பேச்சை ரசித்தவன், “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என்று அவள் மனம் செரிமானம் செய்ய முடியாதளவு காதலைக் குரலில் காட்டினான்.
அவன் காட்டிய காதலை விட ஒரு சிட்டிகை அதிகமாகக் காதலைக் காட்டும் குரலில், “மாறா” என்றாள். பின், “பை” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
கைப்பேசியை வைத்ததும் முன்னிருந்த மேசையில் தலை கவிழ்ந்தாள். இந்த நிமிடமே அவனைப் பார்க்க வேண்டும் என்று மனம் அடம்பிடித்தது. உடனே, இதேபோல் கல்லூரி காலத்தில் அவனைப் பார்க்க நினைத்துச் சுற்றியது ஞாபகத்தில் வந்தது.
காதல் ஓவியம் அத்தியாயம்- 6
மாறனை முதன் முதலாக பார்த்த நாளிலிருந்து அன்று வரை ஒரு நாளில் ஒரு முறையாவது அவனைப் பார்த்து விடுவாள். பக்கத்தில் இல்லையென்றாலும் தூரத்திலாவது பார்க்க நேரிடும்.
ஆனால் அன்று அவனைப் பார்க்க முடியவில்லை. ஆஷிக்கிடம் கேட்கலாம் என்று நினைத்தாள். அவனையும் பார்க்க முடியவில்லை. ‘ஏன்? என்னாச்சு?’ என்று புரியாமல், தெரியாமல் கல்லூரியைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.
‘பார்க்க முடியவில்லை’ என்ற எண்ணமே ‘பார்த்தே ஆகவேண்டும்’ என்ற அடத்தைக் கொடுத்திருந்தது. கடைசியில் மாறனைப் பார்க்காத அந்த நாள், கொடிய, நெடிய நாளாகவே சுடருக்கு முடிந்திருந்தது.
யாழோவியம் அத்தியாயம் – 7 தொடர்கிறது…
பாண்டிச்சேரி நினைவிலிருந்து மீண்டவள், சற்று நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தாள். பின், முன்னறையில் யாரோ வந்திருப்பது தெரிந்ததும் எழுந்து சென்று பார்த்தாள்.
அது தினா என்றதும், “வாங்க. நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“நல்லா இருக்கேன்! அண்ணே எங்க? இதைக் கொடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று கையிலிருந்த கோப்பைக் காட்டினான்.
“இது என்ன ஃபைல் தினா?” என்று சுடர் கேட்கையில், “கட்சி சம்பந்தமான ஃபைல்” என ராஜா வேகமாக வந்து சொன்னான்.
மேலும், “சுடர் கிச்சன் பார்த்துக்கோ. நான் பேசிட்டு வர்றேன்” என்று சொல்லி, அவளை அங்கிருந்து கிளப்பினான்.
அவள் சென்றதும், தினா கையிலிருந்த கோப்பை வாங்கி, “நைட்தான வரச் சொன்னேன்?” என்று பரபரப்பாக கேட்டவன், “சரி கிளம்பு தினா! அப்புறமா பார்க்கலாம்” என்றான்.
“சரி-ண்ணே!” என்று தினா கிளம்பிச் சென்றதும், அரக்க பறக்க ராஜா உள்ளே வந்தான். படபடவென அலமாரியைத் திறந்து, அதை ஒரு இழுப்பறைக்குள் வைத்து அடைத்தான்.
அதுவரைப் பிடித்து வைத்திருந்த மூச்சை அதன் பிறகுதான் நிம்மதியாக விடமுடிந்தது. சற்றுநேரம் அலமாரியைப் பிடித்துக் கொண்டு கண்மூடி நின்று கொண்டான்.
அப்படி நின்றவனை சமயலறையிலிருந்து பார்த்த சுடர், ‘கட்சி பேபேர்ஸ்னா ஏன் இப்படி மறைக்கணும். அது என்னவா இருக்கும்!?’ என்று சந்தேகத்தில், அதுவரை இருந்த சந்தோசம் வடிந்து, சங்கடம் குடிகொண்டது.
