Kathambari Novels
ஒரு பெருமூச்சுடன், “சொல்லு” என்றான் வெற்றி.
“அது… அது” என்று தயங்கி, “இங்க பாருங்க… இவ்ளோ நடந்தப்புறம் உங்க வீட்ல வந்து என்னால வாழ முடியாது. உங்க அக்கா அப்பா எப்படிலாம் பேசுறாங்க. எனக்கு அது கொஞ்சமும் பிடிக்கல. அதான் சொல்றேன் விவாகரத்து கொடுத்திடுங்க.
எனக்கு நீங்க சொல்ற மாதிரி குழந்தைய தத்தெடுக்கலாம் முடியாது, உங்க வீட்ல சொல்ற மாதிரி டிரீட்மென்ட் எடுத்துக்கவும் முடியாது. அவங்களுக்கு என் ஹெல்த் மேல அக்கறை இல்லை. நீங்களும் அப்படி…” என்று படபடவென பேசி வந்த ஸ்வேதா அப்படியே பேச்சை நிறுத்திவிட்டாள்.
இந்த சிகிச்சைகள் வேண்டாமென அவன்தான் முதலிலே சொல்லியிருந்தான். அதுவும் அவளுக்காகவே யோசித்து. அது ஞாபகம் வந்துவிட்டது. அதனால் பேசுவதை பாதியிலே பட்டென்று நிறுத்தியிருந்தாள்.
வெற்றி ஒரு வார்த்தைப் பேசவில்லை.
ஆரம்பத்தில், ‘இதுக்காக விவாகரத்து தேவையா, வேண்டாமே’ என்று நிறைய முறை அவளிடம் பேசிப் பார்த்திருக்கிறான். ‘மத்தவங்கள விடு, நீ சொல்லு நாம ஒரு குழந்தைய தத்தெடுத்துகலாமா’ என்றும் கேட்டிருக்கிறான்.
‘ச்சே ச்சே அந்த மாதிரி ஐடியாவே எனக்கில்ல, இனிமே என்கிட்ட இத பத்தி பேசாதீங்க’ என்றுவிட்டாள்.
அதன்பின்னும் அவளைச் சமாதானப்படுத்தி… அவர்களது திருமண உறவை உடைந்து போகாமல் இருக்க பேசியிருந்தான். ஆனால் ஒரு கட்டத்தில் அவன் என்ன பேசினாலும் அவள் முடிவை மாற்ற முடியாது என்று தெரிந்தது. அவள் அம்மா ஈஸ்வரி அவளை மாற விடமாட்டார் என்றும் புரிந்தது.
இவ்வளவு தெரிந்தும், விவாகரத்து என்ற பெரிய முடிவை எடுக்க அவனுக்குள் ஒரு பயம், பதட்டம் இருக்கிறது!
‘இவள்தான்’ என்று இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கைப் பாதையிலிருந்து மாறி, வேறு பாதையில் நடக்க அவன் கால்கள் தடுமாறுகின்றன. அதற்காகவே கால அவகாசம் கேட்கிறான்.
ஸ்வேதாவிற்கு அதுபோல் எதுவும் இல்லை.
இதுவரை அவள் வாழ்வில் எந்த முடிவும் அவள் எடுத்ததில்லை. அவள் அம்மா ஈஸ்வரிதான் எடுப்பார். தன் அம்மா ஒரு முடிவெடுத்தால், அது நூறு சதவீதம் சரியாக இருக்குமென்று நம்புகிறாள்.
வெற்றியுடனான திருமணமும் அவள் அம்மா எடுத்த முடிவுதான் என்றாலும், அவளுக்கும் வெற்றியைப் பிடித்திருந்தது. அவனுடனான திருமணம் வாழ்வு நன்றாகவே சென்றிருந்தது. அவன் அன்பாகப் பார்த்துக் கொண்ட விதத்தில் அவள் மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
எல்லாம் குழந்தையில்லை என்று தெரிய வரும் வரைக்கும் மட்டுமே.
அதன்பின்பும்கூட சிகிச்சை எடுத்துக் கொண்டால், இது சரியாகிவிடும் என்று நம்பினாள். அந்த நம்பிக்கைப் பொய்த்த பின், அவளுக்கு வெற்றியுடனான திருமண வாழ்க்கை மீது சலிப்பு வந்துவிட்டது.
ஈஸ்வரியும் மகளிடம் அடிக்கடி… உன் வாழ்வு முழுமையானது அல்ல. அதில் குழந்தையில்லை என்ற குறை இருக்கிறது… அதற்கு வெற்றிதான் காரணம் என்று சொல்லிக் கொண்டே இருந்ததில், அந்த எண்ணம் ஸ்வேதாவிற்கும் வந்துவிட்டது.
நாளடைவில் அந்த எண்ணம் அவளிடம் வலுத்தது.
‘உன்னிடம் குறை இல்லாத போது, நீ குறைபட்டுக் கொண்டே வாழணுமா? அப்படி வாழ என்ன அவசியம் வந்துவிட்டது உனக்கு’ என்று ஈஸ்வரி மகளிடம் கேட்டுக் கொண்டே இருந்ததில்… ஸ்வேதாவிற்கும் எதற்கு கஷ்டப்பட்டு வாழ வேண்டும், இப்படி ஒரு வாழ்க்கை தனக்குத் தேவையா என்று தோன்றியது.
ஈஸ்வரி, ‘முதல விவாகரத்து வாங்கப் பாரு, அடுத்து என்னென்னு அப்புறம் பார்க்கலாம்’ என்றபோது, ஸ்வேதா சரியென்றுவிட்டாள். அம்மா சொன்னால் எல்லாம் சரியாக இருக்கும் என்றாலும், அவளுமே வெற்றியுடனான திருமண வாழ்விலிருந்து விடுதலை அடையவே நினைக்கிறாள்.
அதிலும் வெற்றிக்கு குழந்தை தத்தெடுக்கும் எண்ணம் இருப்பது தெரிந்ததும், அவனுக்கும் தனக்கும் ஒத்துவராது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறாள். கால தாமதம் ஆகாமல் அவனிடமிருந்து விவாகரத்து பெற நினைக்கிறாள்.
“சீக்கிரம் டைவோர்ஸ் கொடுத்திடுங்க” என்றாள்.
“ம்ம் யோசிக்கிறேன்”
“எவ்ளோதான் யோசிப்பீங்களோ” என்று முனுமுனுத்து, “என் அம்மா பாவம் இல்லயா. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுக்கணும்னு அவங்க நினைக்கிறாங்க. அப்பதான் நிம்மதியா இருப்பாங்க. கொஞ்சம் சீக்கிரமா நீங்க யோசிச்சி முடிங்க” என்றாள்.
‘இவளுக்கு என்னுடனான வாழ்க்கை நல்ல வாழ்க்கை இல்லையா’ என்ற கேள்வி கேட்டு அவன் மனம் அலைக்கழிந்து வந்தது. அதை அமைதிப்படுத்தி சரியென தலையசைத்தவன், “வேறு எதுவும் பேசணுமா” என்றான்.
“இன்னொன்னு, டிரீட்மென்ட்க்கு நாகு அண்ணா பணம் கொடுத்தாங்கல, அது அவங்களுக்கு எப்ப கொடுப்பீங்க”
“கொஞ்ச கொஞ்சமா கொடுத்திட்டுதான இருக்கேன்” – நாகுவிடம் வாங்கிய பணத்தை, வெற்றி சிறு சிறு தொகையாகத் திருப்பிக் கொடுக்கிறான். அவன் வீட்டில் கொடுக்கத் தேவையில்லை என்று சொல்லியும் கொடுக்கிறான். இவன் கொடுப்பது அவர்களுக்குத் தெரியாது.
“மொத்தமா கொடுக்க முடியாதா, அண்ணனுக்கு பணம் தேவையாம்”
“சத்தியமா என்னால முடியாது”
“அப்படினா இப்படி பண்ணிக்கிடட்டுமா, நீங்க எனக்கு ஒரு மோதிரம் கிஃப்ட் பண்ணீங்கள… பர்ஸ்ட் கல்யாண நாளுக்கு… அத வித்து நாகு அண்ணா பணம் எடுத்துக்கலாமா”
திருமண நாளிற்காகத் தந்த பரிசை விற்கும் முடிவிற்கு அவள் வந்துவிட்டாள். நீங்கள் என்னவென்றால் இன்னும் இந்தத் திருமணத்தைப் பிடித்து வைக்கப் பார்க்கிறீர்கள் என்று வீட்டில் கேட்கத் தோன்றியது வெற்றிக்கு.
அடுத்த நொடியே, முதலில் விவாகரத்து விசயத்தில் அவள் எந்த எல்லைக்குப் போயிருக்கிறாள், நீ எப்படி நிற்கிறாய் என்று தனக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
திருமண வாழ்வு பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து கோருவது அவள் விருப்பம்… உரிமை. அதில் அவனுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் அதற்கு அவள் சொல்லும் காரணம்தான் உறுத்தலாக இருக்கிறது.
அந்த உறுத்தலினால் விவாகரத்துத் தந்திட அவன் தயங்கவில்லை. உளமார வாழ்ந்துவிட்டு, உடனே உதறித் தள்ள முடியாமல்தான் யோசிக்கிறான்.
அதற்காக, ‘நான் கொடுத்த கிஃப்ட் எப்படி விப்ப’ என்று கேட்டுக் கொண்டு நிற்கவில்லை. “சரி” என்றுவிட்டான்.
இதைத்தான் பேச வந்தேன், பேசிவிட்டேன் என்று திரும்பி நடக்கப் போனவள் நின்று, “தேங்க்ஸ் பிறந்தநாளுக்கு விஷ் பண்ணதுக்கு” என்றாள்.
இதை எப்படி எடுத்துக் கொள்ளவென வெற்றிக்குத் தெரியவில்லை. இன்று எழுந்ததிலிருந்து இதற்கு முன் இந்த நாளை கொண்டாடிய நினைவுகள் வந்து கொண்டே இருந்தது. அதனால்தான் விவாகரத்து கேட்டிருக்கிறாள் என்பதை மறந்து ஸ்வேதாவைப் பார்த்ததும் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிவிட்டான்.
இப்போது அவள் இவ்வளவு பேசிவிட்டு, அவன் வாழ்த்திற்கு நன்றி சொல்வது ஒட்டாமல் ஒலித்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டு கிளம்ப நினைத்தான். முடியவில்லை. ஒரு சிறுதலையசைப்போடு அங்கிருந்து கிளம்பினான்.
அலுவலகம் வந்தாலும் வீட்டில் நடந்தது கண் முன்னர் வந்து நின்று வேலை செய்ய விடாமல் இடையூறு செய்தது. கீழே இறங்கிச் சென்று, ஒரு காஃபி குடித்துவிட்டு வந்து வேளையில் கவனம் செலுத்தினான். மதிய வேளையில் சாப்பிடும் போதும் தனியாக அமர்ந்து சாப்பிட்டு வந்துவிட்டான்.
வேலை முடிந்து கிளம்பியவன், வீட்டிற்குப் போகாமல் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தான். கலைக்கு அழைத்து, ‘இன்னைக்கு வர லேட்டாகும் ண்ணா. நீங்க தூங்குங்க, நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டான்.
வீட்டிற்குப் போகவே மனமில்லை. அந்த வீட்டில் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. அங்கேதான் அவன் வளர்ந்திருக்கிறான். ஆனால் இப்போது சகஜமாக இருக்க வரவில்லை. என்னமோ ஒரு தயக்கத்துடனே இருக்கிறான்.
வெற்றி தனிக்குடித்தனம் போனபின், இந்த வீட்டின் பொறுப்புகளை எல்லாம் கலைதான் பார்த்து வருகிறான். அதனால் இது ‘அவர்கள் வீடு’ என்றதிலிருந்து எப்போதோ ‘அண்ணன் வீடு’ என்றாகிவிட்டது. அந்த ஒன்றுதான் கலையை, ‘என் வீடு’ என்று காலையில் பேச வைத்திருந்தது.
ஸ்வேதா விவாகரத்து கேட்டபின் வெற்றி தனியாக இருக்க வேண்டாம் என்று சந்திரனும், சாந்தியும் நினைத்தனர். ஏற்கனவே அவனுக்கு கஷ்டம். தனியாக இருந்தால் சரியாகச் சாப்பிடுவானோ, அவனைக் கவனித்துக் கொள்வானோ என்ற பயத்தில் இங்கே வந்து இருக்கச் சொன்னார்கள்.
‘நான் தனியாக இருந்துப்பேன்’ என்று வெற்றி வர மறுத்தான். அவனுக்கு ஒரு கஷ்டம். அவன்தான் அதைப் பார்க்க வேண்டும். இன்னொருவரைச் சுமக்க சொல்லக் கூடாது. அது நியாயமேயில்லை. அதனால் மறுத்தான்.
ஆனால் சாந்தி, சந்திரன் அதற்கு விடவில்லை. அவனை இங்கே வந்து இருக்க வைத்துவிட்டனர். அதோடு விடாமல், ‘நீ வீட்டுச் செலவுக்கு பணம் எதும் தர வேண்டாம், கடனை அடைகிறத பாரு’ என்றுவிட்டனர்.
மீண்டும் இங்கே வரும் முன் வெற்றி அண்ணனிடம் பேசினான். முன்போல் வீட்டுச் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றான்.
தம்பிக்கு கடன் அதிகம் என்று கலைக்குத் தெரியும். இப்படியொரு நிலையில் அண்ணனாக அவனுக்கு ஆதரவாக இருக்க நினைத்து, ‘அதலாம் வேண்டாம். உன் ஒருத்தனுக்கு ஆகுற செலவை பார்த்துக்க மாட்டேனா. நீ பேசாம வாடா, எதையும் யோசிக்காத’ என்றுவிட்டான்.
வெற்றி வாங்கும் சம்பளத்திற்கு அவனுக்கு இருக்கும் கடன் அதிகம்தான். அம்மாவின் மருத்துவத்திற்கு வாங்கியது, குழந்தையின்மை சிகிச்சைக்காக வாங்கியது என்று சம்பளத்தில் எண்பது சதவீதம் கடனுக்கே போய்விடும். மாதச் செலவுகளைச் சமாளிப்பதே சிரமம்தான்.
பெட்ரோல், பராமரிப்புச் செலவுகள் அதிகம் வருகிறது என்றுதான் பைக்கை விற்றிருந்தான். அந்தப் பணம் ஒரு சில கடனை அடைக்கவும் உதவியது.
ஆனால் அண்ணனுடன் வீட்டுச் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளாமல் எப்படி என்ற நெருடலோடு… அண்ணன் சொன்னதை மீறி ‘எனக்கான செலவிற்கு’ என்று பணம் கொடுத்தால், பிரித்துப் பார்ப்பது போல் ஆகிவிடுமோ என்ற கேள்வியோடு… இந்த வீட்டிற்குத் திரும்ப வந்தான்.
வெற்றி வந்தது, முதலிருந்தே ஹரிணிக்குப் பிடிக்காது. எல்லாரும் சொல்லும் போது அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் நாளாக நாளாக அவள் செயல்கள் வழியாக, பேச்சின் மூலமாக அதை வெளிப்படுத்தினாள்.
தான் இங்கே இருப்பதில் அண்ணிக்கு உடன்பாடில்லை என்று வெற்றிக்குத் தெரிய வந்தது. காரணமும் தெரிந்தது. இப்போது தன் அண்ணனுக்குமே அந்த உடன்பாட்டின்மை இருக்கிறது என்று அவனுக்குப் புரிகிறது.
இது சாந்திக்கும், சந்திரனுக்கும் புரிந்தாலும், வெற்றியைத் தனியே விடும் எண்ணம் அவர்களுக்கு இல்லை.
ஆனால் இது தெரிந்தபின், வெற்றியால் அந்த வீட்டில் இயல்பாக இருக்க முடியவில்லை. அதேநேரம் அப்பா, அக்காவை மீறி ‘போறேன்’ என்றுவிட்டுப் போகவும் இயலவில்லை.
அண்ணன் அண்ணியிடம் அவனுக்காக அப்பா, அக்கா சண்டை போடுவது பிடிக்கவில்லை. தன்னால் அண்ணிக்கும் அண்ணனுக்கும் சிரமமோ என்றும் கவலைப்படுகிறான்.
அக்கா, அப்பா சொல்வது போல் ஸ்வேதாவிற்கு விவாகரத்து கொடுக்காமல் இருக்க அவன் நினைக்கவில்லை. அதேநேரம் அண்ணன் சொல்வது போல் சட்டென்று கொடுக்கவும் வரவில்லை.
மொத்தத்தில் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறான். என்ன செய்யவென தெரியாமல் வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.
பசித்தது. ரயில் நிலையத்தில் இருந்த கடையில் உணவு வாங்க நினைத்தான். ஆனால், ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்’ என்ற ஒரு கேள்வியால் சாப்பிடவே மனமில்லாமல் போனது.
முடிவு எடுக்க வேண்டும்; இப்படிக் காலம் கடத்தக் கூடாது என்று மனதில் ஒப்புவிப்பது போல் ஒருநூறு முறை சொன்னவன்… சட்டென சலிப்புடன், ‘ப்ச் அதான முடியலை, அம்மா சொன்ன மாதிரி முடிவு எடுத்துப் பழகிருக்கணும் நான்’ என்று தலையைக் கையால் தாங்கிக் கொண்டான்.
சற்றுநேரத்தில் அவன் பகுதிக்கு செல்லும் ரயில் வந்தது. ஏறிக் கொண்டான். எப்போதும் போல் அம்மா ஞாபகம் வந்திருந்தது. இரவுநேர இருண்ட வானைப் பார்த்தபடி, அம்மா நினைவுகளை நெஞ்செங்கும் சுமந்து பயணித்தான்.
