Kathambari Novels
ராயபுரம்!
சென்னையில் மிக நெருக்கடியானப் பகுதி இது. குறுகிய தெருக்கள்! அதன் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், இன்னும் குறுகலாகச் சுருங்கிப் போயிருந்தன.
இரண்டு பக்கமும் குறைந்தது ஐந்து அடுக்குகள் கொண்ட கட்டிடங்கள் இடைவெளியே இல்லாமல் கட்டப்பட்டிருந்தன.
எந்தக் கட்டிடமும் புதிதாக இல்லை.
தரைத்தளத்தின் வெளிபுறச் சுவர்கள் எல்லாம் அழுக்கேறியோ, விளம்பரப் படங்கள் வரைந்தோ இருந்தன. மேற் தளத்தின் சுவர்கள் விரிசல்களுடன், சுண்ணாம்புப் பூச்சுகள் போயிருந்தன.
சில இடங்களில் விரிசல்கள் சிமென்ட் வைத்துப் பூசப்பட்டிருந்தன.
அவைகளில் சில சுண்ணாம்பு பூச்சு இல்லாமல் இருந்தன.
பல கட்டிடத்தின் முன் தண்ணீர் பிடித்து வைக்க நீல நிறத்தில் உருள்கலன் வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலானக் கட்டிட மாடிமுகப்புகளில், துணிகள் காயப் போட்டிருந்தனர்.
அந்த வசதி இல்லாத வீடுகளில், இரு கட்டிடத்திற்கு இடையே கொடிக்கயிறு கட்டி, அதில் துணிகளைப் போட்டிருந்தனர்.
எல்லா கட்டிடத்திலும் குறைவான சதுரஅடிகள் கொண்ட ஒரே மாதிரியான வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீடும் இரு சிறு அறைகள், ஒரு குளியலறை, பொதுஅறை மற்றும் சமையலறை என்றிருந்தது.
இடமிருந்தால் ஏதேனும் ஒரு அறையில் குறுகிய மாடிமுகப்பு இருந்தது. சின்ன கம்பி வைத்த சன்னல்கள் ஓரளவு காற்றோட்டத்திற்கு வழிவகுத்திருந்தது.
இந்த பகுதியிலிருந்த ஒரு வீட்டில், காலை விழித்துக் கொள்ளும் போதே, நாள் ஆரம்பித்துவிட்டதா என்ற பெரும் சலிப்புடன் விழித்தான் வெற்றிச்செல்வன். அதிகாலை வேளையிலே அவன் முகத்தில் அத்தனை அயர்வு தெரிந்தது.
‘தூங்கினியா, தூங்கலையா’ என்று யார் பார்த்தாலும் கேட்பார்கள். சரியான தூக்கம் இப்போதெல்லாம் இல்லை என்று கூறவே மனம் நினைக்கும். ஆனால் சொல்லிக் கொண்டிருக்க மாட்டான்.
அந்த அறை பத்திற்குப் பத்து என்ற அளவில் இருந்தது. சின்னதுதான். அதிலும் எஃகு கட்டில் போட்டிருந்ததால், இன்னும் சின்னதாகத் தெரிந்தது. வெளிச்சம், காற்றோட்டத்திற்காக ஒற்றைச் சன்னல் தெருவைப் பார்த்து இருந்தது.
அது எப்போதும் திறந்துதான் இருக்கும். இல்லையென்றால் அந்த அறையில் இருப்பது கடினம். வெக்கை, கசகசப்பு வாட்டி எடுத்துவிடும்.
எழுந்தவன், குளிப்பதற்கென்று துணிகளை எடுக்கப் போனான். அலுவலகப் பையை எடுத்து கட்டிலில் வைத்தவன், சுவரோடு பதித்திருந்த அலமாறியைத் திறந்து, ஏதோ ஒரு உடையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
வெற்றி அறையிலிருந்து வந்தபோது, அவன் அப்பா சந்திரன் மாடிமுகப்பில் நின்றிருந்தார். அந்த இடத்தை துணி காயப் போடத்தான் பயன்படுத்துவது. ஆனாலும் ஒரு ஓரத்தில் பூச்செடிகளும் இருக்கும்.
காலை வேளை சற்றுநேரம் அங்கே நிற்பது சந்திரனின் வழக்கம், வாடிக்கை. அதை மாற்றிக் கொள்ள மாட்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகள், இரண்டு மகன்கள். மகள்தான் மூத்தவள். கடைசிப் பிள்ளைதான் வெற்றி.
இந்த வீட்டில் சந்திரனின் இருப்பு… பொது அறை, மாடி முகப்பு என்பதோடு முடிந்துவிடும். பகல் நேரத்தில் ஓய்வு வேண்டுமென்றால், எஃகு இருக்கையில் உடம்பை சாய்த்துக் கொள்வார்.
இரவு தூங்கையில், இருக்கையை சுவரோரம் நகர்த்திப் போட்டுவிட்டு, பாய் விரித்துப் படுத்துக் கொள்வார்.
காகித ஆலையில் இயந்திரம் இயக்கும் வேலை பார்த்தவர். சம்பளம் குறைவு. அதனால் மேலதிக வேலையும் செய்திருக்கிறார். செய்ய வேண்டிய தேவை இருந்திருந்தது. அவர் வருமானத்தில்தான் வீட்டுச் செலவுகள், பிள்ளைகள் படிப்பு, திருமணம் என்று எல்லாம்.
இப்போது அவர் வேலைக்குச் செல்லவில்லை. பேரப்பிள்ளைகளைப் பார்க்க வேண்டிய கடமை இருக்கிறது. கூடவே உடலும் ஒத்துழைப்பதில்லை.
மனைவி இறந்த பிறகு, மனிதர் மிகவும் தளர்ந்துவிட்டார். அப்பா உடல்நிலை, மனநிலை புரிந்த மகன்கள், இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்கள்.
சந்திரன், “ஹரிணி, ஹரிணி” என்று மூத்த மருமகளைக் கூப்பிட்டார்.
இவரது மூத்த மகன் கலைச்செல்வன். ஹரிணியின் கணவன். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். வேலைக்குச் செல்லும் கணவனுக்காக, பள்ளி செல்லும் மகளுக்காக அரக்கப் பறக்கச் சமைத்துக் கொண்டிருந்த ஹரிணி வேகமாக வந்து, “என்ன மாமா, சீக்கிரம் சொல்லுங்க” என்றாள்.
“இந்தத் தொட்டியை எதுக்கு இந்தப் பக்கமா தள்ளி வச்சிருக்க? இது இப்படி இருந்தா அம்பிகாவுக்கு பிடிக்காது” என்றுவிட்டு, தொட்டியை இதற்கு முன் இருந்த இடத்தில் நகர்த்தி வைத்தார்.
அம்பிகா சந்திரன் மனைவி. அவருக்கு மனைவி மேல் மிகுந்த பாசம். அதே அளவிற்கு அன்பு அம்பிகாவிற்கும் கணவன் மீது இருந்தது. புரிதல், விட்டுக் கொடுத்துப் போகுதல் என்று இருவருமே ஆதர்ச தம்பதிகள்.
குடும்பத்திற்காக சந்திரன் கருத்தாக வேலை செய்து வருமானம் ஈட்டினார் என்றால், அந்த வருமானத்தில் ஒரு பைசாகூட அனாவசியமாகப் போகாமல் அம்பிகா பார்த்துக் கொண்டார்.
சரியான திட்டமிடலுடன் அவர் வாழ்க்கையைக் கொண்டு சென்றதால்தான், இந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம் இந்த அளவாவது உயர்ந்திருக்கிறது. மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்க முடிந்திருந்தது.
வீடு, கணவன், பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளுதல் என்பதைச் சுற்றியே அம்பிகா வாழ்க்கை இருந்தது. அவருக்கென்று எதுவும் யோசித்துச் செய்து கொண்டதில்லை.
இந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கும் அளவு கணவர் வருமானம் உயர்ந்ததும், அம்பிகா தனக்காகச் செய்து கொண்டது மாடிமுகப்பில் இருக்கும் இந்தத் தொட்டிச் செடிகள்தான்.
அவர்தான் இதைப் பார்த்துக் கொள்வது, பராமரிப்பது. இந்த இடத்தில் இந்தச் செடி இருந்தால் நன்றாக இருக்குமென வரிசைப்படுத்துவது.
இப்போது அம்பிகா உயிரோடு இல்லை!
ஆனாலும் மனைவி பார்த்துப் பார்த்து ஆசையாகச் செய்த விடயங்களை, முடிவுகளை மாற்றுவது சந்திரனுக்குக் கடுகளவும் பிடிப்பதில்லை.
அதனால்தான் தொட்டிகளின் வரிசையில் மாற்றம் இருந்ததைப் பார்த்ததுமே, மருமகளை அழைத்துச் சொல்லி இருந்தார்.
அவசர அவசரமாக வேலை செய்து கொண்டிருந்தவளை அழைத்து… இதைச் சொல்கிறாரே? ஏன் அந்தச் செடி தள்ளி இருந்தால் என்ன? கோபம் வந்தது ஹரிணிக்கு. “துணி காய போடுறதுக்கு இடைஞ்சலா இருந்தது. அதான் நகட்டி வச்சேன்” என்று சலிப்புடன் சமையலைப் பார்க்கப் போனாள்.
அப்போதும் சந்திரன், “அப்படினா காயப் போட்டப்புறம் எடுத்துச் செடியை அந்தந்த இடத்துல வச்சிருக்க வேண்டாமா” என்றுதான் சொன்னார்.
இரண்டு வரிசைச் செடிகளையும் அம்பிகா எப்படி வைத்திருப்பாரோ, அப்படி அடுக்கி வைத்துவிட்டுத்தான் மனிதர் உள்ளே வந்தார்.
இதற்கிடையே குளித்துவிட்டு வந்த வெற்றி அறைக்குச் சென்று வேலைக்குக் கிளம்பினான். அக்கணம் அவன் அறைக் கதவு லேசாகத் தட்டப்பட்டது. போய் கதவைத் திறந்தான்.
ஹரிணி நின்று கொண்டிருந்தாள்.
“என்ன அண்ணி” என்றான்.
மகன் முழித்துவிட்டதாகச் சொல்லி, “உங்க அண்ணன்தான் பார்த்துக்கிட்டு இருக்காரு. அதனால இன்னைக்கு நீ போய் பால் வாங்கிட்டு வர முடியுமா. எல்லாருக்கும் காலையில காஃபி போடணும்ல” என்றாள்.
“ம்ம் வாங்கிட்டு வர்றேன்” என்று போகப் போனான்.
“ஒரு நிமிசம் வெற்றி, காசு வாங்கிட்டுப் போ” என்றாள்.
‘ஏன் இப்படி?’ என்று பார்த்து நின்றான்.
“உனக்குத்தான் கடன் இருக்கே… யோசிக்காத வாங்கிக்கோ” என்றாள்.
அவனுக்கு கடன் அதிகம் இருப்பது உண்மைதான். ஆனால் அரை லிட்டர் பால் வாங்க முடியாதா? வெற்றி எதுவும் சொல்லவில்லை. பால் வாங்க வெளியே சென்றுவிட்டான்.
வெளியே தெருக்களில் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர், குடும்பத் தலைவிகள் பெட்டிக் கடையிலும், குடிநீர் குழாய் பக்கமும் நின்றிருந்தனர். சில இடங்களில் வேலைக்குப் போகும் தம்பதியினர் அவசர அவசரமாக வண்டியை எடுத்து, கிளம்பிய வண்ணம் இருந்தனர்.
பால் வாங்க வந்தவன், தெரு முனையில் இருந்த கடையில் தேநீர் குடித்தான். என்னமோ இன்று வீட்டில் குடிக்க ஒருமாதிரி இருந்தது. வெளியே குடித்துவிடலாம் என்றே தோன்றியது.
கடை ஓரமாக நின்று எதையெதையோ யோசித்தபடி தேநீர் குடித்தவனை, “என்ன வெற்றி, கடைல டீ குடிக்க” என்ற பெண்ணின் குரல் கலைத்தது.
திரும்பிப் பார்த்து, “சும்மாதான் க்கா” என்றான்.
கேட்டவளும், ‘சரி, சரி’ என்று தலையாட்டிவிட்டுச் சென்றாள். அவள்… அவன் அக்காவின் தோழி, சாரதா. இந்தப் பக்கம்தான் அவள் வீடு இருக்கிறது.
தேநீர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெற்றி, வாங்கிய பால் பொட்டலத்தை சமையல் மேடையில் வைத்துவிட்டு அறைக்குச் சென்றுவிட்டான். சற்றுநேரம் கழித்த பின் அலுவலகம் செல்லத் தயாராகி வெளியே வந்தான்.
வெற்றி வேதியல் இளங்கலை படித்திருக்கிறான். ஆரம்பத்தில் அங்கங்கே சிறு சிறு வேலைகள் பார்த்தான். இப்போது ஒரு நிறுவனத்தில் தரக் கட்டுப்பாடு துறையில் வேலை செய்கிறான். நிறுவனம் பழவந்தாங்கலில் உள்ளது. சீக்கிரமே கிளம்பினால்தான் சரியாக இருக்கும்.
வீட்டிலிருந்து நடந்து ராயபுரம் ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து உள்ளூர் ரயிலில் கடற்கரை ரயில் நிலையம் சென்று, பின் பழவந்தாங்கல் செல்வான்.
தூரம்தான்!
ஆனால் வேலை அங்கேதானே இருக்கிறது. போய்தான் ஆக வேண்டும். அதோடு இந்தப் பயணமும் அவனுக்குப் பழகிவிட்டது.
முன்பு பைக் இருந்தது. அதனால் பயணம் சற்று எளிதாக இருந்தது. இப்போது பைக் இல்லை. விற்றுவிட்டான். அதனால் முழுக்க முழுக்க பொது போக்குவரத்தையே பயன்படுத்துகிறான்.
தினமும் இப்படி அலைவது கஷ்டம்தான். ஆனால் மனம் அலைபடுவதை ஒப்பிடுகையில் அதுவொன்றும் பெரிய கஷ்டமில்லை அவனுக்கு.
கிளம்பி, அலுவலகப் பையை எடுத்துக் கொண்டு பொது அறைக்கு வந்தான்.
மாடிமுகப்பின் கதவு பக்கமாகப் போட்டிருந்த எஃகு நாற்காலியில் சந்திரன் இருந்தார். மகன் வந்ததும், “வெற்றி சாப்பிட வந்துட்டான் ஹரிணி” என்று மருமகளுக்கு குரல் கொடுத்தார்.
“தோசை ஊத்தறேன் மாமா, கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லுங்க” என்று அவளும் அங்கிருந்து சொன்னாள்.
அண்ணி சொன்னதைக் கேட்ட வெற்றி, மெதுவாகச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
சமையலறையில் மகளுக்குத் தலை கட்டிவிட்டபடியே ஹரிணி தோசை ஊற்றினாள். இன்னொரு பக்கம் குழம்பையும் பார்த்துக் கொண்டாள். இரு தோசை சுட்டவள், “போய் அப்பாவ வர சொல்லு பாப்பா” என்றாள் மகளிடம்.
கலைச்செல்வன் ஹரிணிக்கு இரு பிள்ளைகள். முதலாவது பெண் பிள்ளை. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். வீட்டில் முதல் பெண் குழந்தை என்பதால் ‘பாப்பா’ என்றுதான் அனைவரும் கூப்பிடுவது. இரண்டாவது பையன். பெயர் ரோகன். இன்னும் ஒரு வருடம்கூட ஆகியிருக்கவில்லை.
மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதால், தற்சமயமாக ஹரிணி வேலைக்குப் போகாமல் இருக்கிறாள்.
அம்மா சொன்னதை குடுகுடுவென்று ஓடிப்போய் அப்படியே அப்பாவிடம் பாப்பா கூற, மகனைத் தூக்கிக் கொண்டு கலைச்செல்வன் வெளியே வந்தான்.
சமையலறை வந்து நின்றவன், “என்ன” என்றான் மனைவியிடம்.
“உங்க தம்பிகிட்ட கொடுத்துடுங்க” என்று தட்டைக் கொடுத்தாள்.
“ரெண்டு தோசை எப்படி பத்தும் அவனுக்கு” என்றான் பட்டென்று கலை.
“நான் என்னங்க பண்ண… குழம்பு இன்னும் வைக்கல. உங்களுக்கு பாப்பாக்கு லன்ச் கட்டணும். மாமாக்கு காஃபி போடணும். இவன் எப்போ தூக்க சொல்லி அழுவானோ தெரியல. இதுக்குதான் எங்க…” என்று அவள் சொல்லும் போதே, “போதும்” என்றுவிட்டான் கலை.
மனைவி என்ன சொல்ல வந்தாள் என்று கலைக்குத் தெரியும்; இதைத்தான் அடிக்கடி சொல்கிறாள் என்பதால். அவளிடம் அடுத்து எதுவும் கேட்கவில்லை. தோசையை கொண்டு வந்து, “இந்தா டா” என்று தம்பியிடம் தந்தான்.
தட்டைப் பார்த்த சந்திரன், “என்ன இது, ரெண்டு தோசைல எப்படிடா வயிறு நிறையும்” என்றார் மூத்த மகனிடம்.
அதற்கு வெற்றி, “இது போதும் பா” என்றான்.
உடனே கலை, “அவனே போதும்ங்கிறானே” என்றுவிட்டு, “பார்த்துக்கோங்க ப்பா” என்று மகனை அப்பாவிடம் கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றான்.
கலை… இளங்கலை கணக்கியல் படித்துவிட்டு, வாகன நிறுவனம் ஒன்றில் கணக்குகள் பார்க்கும் வேலையில் இருக்கிறான். பக்கத்துப் பகுதியில்தான் அவன் வேலை செய்யும் நிறுவனம் இருக்கிறது.
இருபது நிமிடத்தில் பைக்கில் போய்விடலாம். அதனால் தாமதமாகத்தான் எழுந்து கொள்வான்.
அதேநேரம் மகன் சீக்கிரமாக எழுந்துவிட்டால், கலையும் எழுந்து அவனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பான். வெற்றி வேலைக்குக் கிளம்பிய பின், அவன் கிளம்ப ஆரம்பிப்பான்.
சந்திரன், பேரனை வாகாக கையில் வைத்துக் கொண்டு… சின்ன மகனிடம், “நெஜமா போதுமா டா” என்று மெதுவானக் குரலில் கேட்டார்.
வெற்றி, “ம்” என்று மட்டும் சொன்னான்.
அருகில் அப்பா இருந்தும், ஒரு வார்த்தை பேசாமல் கடனே என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்பாவிடம் பேசக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை. பேசும் மனநிலையில் அவனில்லை.
சாப்பிட்டு முடித்தவன், தட்டை எடுத்துப் போய் கழுவி வைத்தான். ஹரிணி எதுவும் சொல்வாளோ என்பதற்காக அவன் இதைச் செய்யவில்லை. அம்பிகா மகனை இப்படித்தான் வளர்த்திருந்தார்.
சம்படத்தில் மதியச் சாப்பாடு எடுத்து வைக்கப் போன வெற்றியிடம், “குழம்பு இன்னும் முடியல. தயிர் எடுத்துக்கோ” என்றாள் ஹரிணி. “ரோகன் சீக்கிரம் முழிச்சதால, சரியா எதுமே செய்ய முடியல” என்று காரணமும் சொன்னாள்.
“பரவாயில்ல அண்ணி”
“நீ ஒன்னும் சொல்ல மாட்டனு தெரியும் வெற்றி. ஆனா உங்க அக்கா அப்படி எடுத்துக்க மாட்டாங்க. அவங்ககிட்ட சொல்லிடாத”
வெற்றி அப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டான். அவளுக்கும் அது தெரியும். இருந்தும் வேண்டுமென்றே சொன்னாள்.
வெற்றிக்கு அது புரிந்தாலும், அண்ணியிடம் எதுவும் கேட்டுக் கொண்டிருக்க மாட்டான். அவளிடம் மட்டுமல்ல, எல்லாரிடமும் இப்போது இப்படித்தான் இருக்கிறான்… இருக்க முடிகிறது.
சமையலறையிலிருந்து வந்தவன், “கிளம்பறேன்” என்றான் அப்பாவிடம்.
பேரனைத் தூக்கி வைத்து, காலை வெயில் படும்படி நின்ற சந்திரன், “கொஞ்ச நேரம் இரு. அக்கா வரேன்னு சொல்லிருக்கா. உன்கிட்ட பேசணுமா” என்றார்.
“நாளைக்கு பேசறேனே அக்காகிட்ட” என்று வெற்றி கிளம்பப் போனான்.
வெற்றி, அவன் அக்காவுடன் நன்றாகப் பேசி, சிரித்து இருப்பான். இப்போது முன்போல் பேச முடியவில்லை என்றாலும் மற்றவர்களிடம் போல் இல்லாமல், அவளிடம் கொஞ்சமாவது பேசுவான்.
ஆனால் இன்று அவளிடமும் பேசும் நிலையில் அவன் இல்லை!
இந்த நாள் அவனைப் பேச விடாமல் செய்கிறது. முன்பெல்லாம் இந்த நாளை எவ்வளவு சந்தோசமாகக் கொண்டாடி இருக்கிறான். ஆனால் இன்று அப்படி இல்லை.
அது அவனை, அவன் மனதை என்னவோ செய்தது!
“அவ உன்கிட்டதான் பேச வர்றா. நீ பாட்டுக்கு போறேன் சொன்னா எப்படி? இப்ப வந்துருவா, பத்து நிமிசம் பேசிட்டு போ” என்றார் சந்திரன்.
சந்திரனுக்கு மகள்மீது பாசம் அதிகம். அதற்காக மகன்கள்மீது பாசம் இல்லை என்றில்லை. பாசம் எல்லாம் உண்டு. ஆனால் பெண் பிள்ளை மீது சற்று அதிக பாசம். மகளுக்கு, மகள் பேச்சிற்கு முன்னுரிமை கொடுப்பார்.
“இல்லப்பா இன்னைக்கு” என்று வெற்றி ஆரம்பிக்கும் போதே,
“என்னடா நீ, அவதான் உன்மேல அக்கறை எடுத்து பார்த்துக்கிறா. அதக்கூட புரிஞ்சிக்க மாட்டியா” என்றார் சந்திரன்.
அந்தநேரம் குளித்துவிட்டு வந்த கலை, “என்னப்பா நீங்க, என்னமோ நாங்க அவனை பார்த்துக்காத மாதிரியே பேசறீங்க” என்றான் கோபமாக. அப்பா பேசியதைக் கேட்டு வேகமாக வந்து நின்ற மனைவியிடம், “நான் கேட்டுட்டேன், நீ போய் சாப்பாடு எடுத்து வை” என்றான் எரிச்சலாக.
மேலும் தம்பியிடம், “டேய் பேசணும்னு சொன்னா இருக்க வேண்டியதுதானே. அதவிட்டு எல்லாரையும் பேச வச்சிட்டு இருக்க” என்று படபடவென சொல்லி, அறைக்குப் போய்விட்டான்.
சந்திரன், வெற்றிக்கு காலைச் சாப்பாடு சரியாகக் கொடுக்கவில்லை என்ற அதிருப்தியில் அப்படிப் பேசியிருந்தார். அதற்கு கலை பேசிவிட்டுப் போனது கோபத்தைக் கொடுத்திருந்தது.
அந்தக் கோபத்தில், ‘இப்ப இருக்க போறியா, இல்லையா’ என்பது போல் வெற்றியைத்தான் பார்த்தார்.
கடைசியில் வெற்றி, “ரூம்ல இருக்கேன், அக்கா வந்ததும் சொல்லுங்க” என்று போனான். அறைக்கு வந்தவன் நேரம் பார்த்தான். மேலாளருக்கு அழைத்து தாமதமாக வருவேன் என்று சொல்லிவிட்டுக் கட்டிலில் வந்து அமர்ந்தான்.
தன் நிலையை நினைத்தவனுக்கு நெஞ்சை அடைத்து, மூச்சை அழுத்தியது. அந்த அறை அமைப்பு, அவன் அழுத்தத்தை அதிகப்படுத்தியது. சட்டென்று எழுந்துவிட்டான்.
என்ன செய்யவென்றே தெரியாமல் சற்றுநேரம் அப்படியே நின்றான். பின், போய் அலமாரியைத் திறந்தான்.
துணிகளுக்கு அடியில் வைத்திருந்த திருமண புகைப்படத்தைப் பார்த்தான். கையில் எடுக்கவில்லை. பார்க்க மட்டுமே செய்தான்.
மனம் கஷ்டப்பட்டது.
என்றாவது அவன் மனம் சரியாகுமா, இளைப்பாறும் இடம் தேடி மனம் ஓடும் ஓட்டம் நிற்குமா… தெரியவில்லை அவனுக்கு.
அவன் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும். தன்னிச்சையாக, தன் மனம் நினைப்பது போல. ஆனால் அவனுக்கு இருக்கும் தயக்கங்களால், அவனைச் சுற்றி இருப்பவர்களால்… எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கிறான்.
