Kathambari Novels
அத்தியாயம் – 6
‘உனக்காக காத்திருப்பேன்’ என்று அவன் சொன்ன வார்த்தை மட்டும்தான், அன்று முழுவதும் ‘லூப் மோடில்’ அவளது காதில் ரீங்காரமாய் ஒலித்தது!
அவன் கண்கள் மட்டுமே கருத்தில் இருந்தன. கருத்தை நிரப்பிய கண்களின் சொந்தக்காரனை சுற்றியே கற்பனைகள் இருந்தன். கற்பனையின் பலனாக, இதய அறை சுவர்களிலெல்லாம் அவனுடைய புகைப்படத்தை ஆணி அடித்து மாட்டிக் கொண்டாள்!
ஒவ்வொரு முறை இதயத் துடிப்பின் போதும் புகைப்படத்தின் ஞாபகம்!
இப்போதே தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்ல மாட்டானா என்று மனம் கேட்டது. ஐந்து நாட்கள் மட்டும்தான் இந்த வாழ்க்கையா? என்று ஏங்கிடவும் செய்தது.
அதன்பின் எப்படி அவனைப் பிரிவது? பிரிவது சாத்தியமா?
‘என்ன நினைக்கிறோம்?’ என்பதை உணர்ந்தவளுக்கு… சுற்றிக் காட்டுவதாக அவன் சொல்லிச் சென்றதற்கு, எனக்கு ஏன் இவ்வளவு கற்பனை? இது வெறும் கற்பனையா? அதையும் தாண்டிய நிலையா? என்ற கேள்விகள் வந்தன.
‘போதும் இந்த நிலை’ என்று எண்ணி, முதல மாவ்ஷிகிட்ட சொல்லனும்’ என்று எழுந்தாள். நினைவுகள் முழுவதும் நீல விழிகள் ஆக்கிரமிக்க, நிஜங்கள் முழுவதும் ஆசைகள் நிறைக்க, நீராட சென்றன பழுப்பு விழிகள். பின் மாவ்ஷியின் முன்னால் சென்று அமர்ந்தாள்.
மாவ்ஷியைப் பற்றி!
சற்று பூசிய உடல்வாகை கொண்டவர். கோவாவின் பாரம்பரிய உடையான நீண்ட பாவாடை… மேலாடை, அதற்குமேல் துண்டு அல்லது முழு நீள கவுன் அணிந்து இருப்பார்.
கொங்கனி நன்கு தெரிந்தாலும்… தமிழும், இந்தியும் கலந்ததே அவர் மொழி. எனினும் புரிந்து கொள்வது எளிதாகத்தான் இருக்கும். அளவாகப் பேசுபவர். கணவன் இருக்கும் போது அவனின் கட்டாயத்தில், கணவனை இழந்தபோது காலத்தின் கட்டாயமாக இங்கு இருப்பவர்!
கூடுதல் தகவல் ஒன்று! இப்போதெல்லாம் அடிக்கடி இங்குள்ள பெண்களின் எதிர்காலம் பற்றிய கவலை அவரை வாட்டுகிறது. நம்புவது கடினம். ஆனால் அதுதான் உண்மை!!
தன் முன் அமர்ந்திருந்தவளிடம் “க்யா(என்ன)?“ என்றார் மாவ்ஷி.
“அது அது…” என்றவளின் குரலிலிருந்து சத்தமே எழவேயில்லை.
“அரே… சொல்லு”
“ஒரு அ… அஞ்சு நாள் வெளியில போகனும்” என்று தட்டுத் தடுமாறியே அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன. அவளால் முடியவில்லை. ‘வேண்டாம்’ என்று விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் வேறு!
அவளை வித்தியாசமாகப் பார்த்தார் மாவ்ஷி. பழுப்பு வழிகளோ நிமிர்ந்து பார்க்கவே பயந்தன. மாவ்ஷிக்குப் புரிந்தது.
“பைசே… துட்டு” என்றார் புரிந்தவர்.
இதை அவள் யோசிக்கவே இல்லை. என்ன பதில் சொல்ல என்று தெரியாமல், “சாயங்காலம் வந்து கேட்டுச் சொல்றேன்” என்று மட்டும் சொன்னாள்.
“கோன்(யார்)” என்று அடுத்த கேள்வி கேட்டார்.
அவளுக்கு அவனை அப்படி நினைப்பதே பிடிக்கவில்லை. பிடிவாதமாக அமைதி காத்தாள்.
“டீகே போ” என்று அத்தோடு விட்டுவிட்டார் மாவ்ஷி.
அறைக்கு வந்தவளின் விழிகள் சற்று கலங்கி இருந்தன. ஏன் இந்தப் பதட்டம், படபடப்பு, தயக்கம், தத்தளிப்பு என்று கண்ணாடி முன்னே நின்று தன்னைக் கேட்டுக் கொண்டாள். அவனை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது.
மாலை வரைகூட காத்திருக்க முடியாது போல் அவளின் மனநிலை!
காதல் காத்திருப்புக் கடலில் கரையும் மணித்துளிகள் அனைத்தும் முத்தாக மாறுமாமே! இவளின் காதலும் அந்தப் பட்டியலில் போய்ச் சேர்ந்தது!!
எதிர்பார்த்துக் காத்திருந்த மாலைப் பொழுதும் வந்தது. அந்தக் கட்டிடத்தின் மாடி அறை பால்கனி வழியே பார்க்கும் பொழுது, அவன் எதிர்ப்புறம் நிற்பது தெரிந்தது. இதயம் தடதடவென அடித்துக் கொண்டது. அதைவிட வேகமாகப் படிக்கட்டுகளைப் படபடவென கடந்து, கீழே இறங்கி வந்தாள்.
நேராக சென்று மாவ்ஷி முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு “போட்டுமா…” என்று கேட்டாள். இல்லை கெஞ்சினாள்! அவளின் வேகம், படபடப்பு, எல்லாம் அங்கு இருப்பவர்களால் வித்யாசமாகப் பார்க்கப்பட்டது.
“பைசே” என்று கறாராக வந்தது மாவ்ஷியின் பதில்!
“இதோ, வாங்கிட்டு வரேன்” என தட்டுத் தடுமாறி எழுந்து வெளியே ஓடினாள். கட்டிடத்தின் எதிர்ப்புறம் அவன் நின்றான். புடவையை சற்று தூக்கியபடியே, சாலையின் இருபுறமும் பார்த்தவாறே, துள்ளல் நடையுடன் சென்றாள். அவள் நடந்த வேகத்திற்கு ஏற்றாற்போல், கூந்தல் குதித்துக் கொண்டது. அவனிடம் வந்தவளுக்கு லேசாக மூச்சிரைத்தது.
அருகில் வந்தவளைப் பார்த்தான்!
சுகந்திரமாக விடப்பட்டக் கார்குழல். மை மறுத்த கண்கள், ஆனாலும் அதில் ஈர்ப்பும்… எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் இருந்தன். மிதமான உதட்டுச்சாயம். எழிலும் ஏக்கமும் கலந்த வதனம்.
கீழ் வான சூரியன், நீலவானத்துடன் கலக்கும் போது ஒரு நிறம் வருமே, அந்த வண்ணத்தில் புடவை அணிந்திருந்தாள். மொத்தத்தில் அவள் ‘நேற்றைய’ அடையாளங்கள் அனைத்தையும் தொலைத்திருந்தாள்.
அவள் தோற்றம் அவனுக்குப் பிடித்திருந்தது!
ஆனால் அவளுக்குத்தான் அவனைப் பிடிக்கவில்லை. காரணம்? அந்த நீலநிற கண்களைக் கருப்புக் கண்ணாடிக்குள் மறைத்து வைத்திருந்தான்!
“போலாமா?” என்று கேட்டான்.
“ம், ஆனா…”
“என்ன ஆனா?”
“அது… மாவ்ஷி சொல்றாங்க… அது…” என அவள் வார்த்தைகளைத் தேடினாள். திடுமென சுதாரித்து, அவன்தான் தன்னைப் புரிந்து கொள்வானே?! எதற்காக பேசிக் கொண்டு? இன்று மட்டும் இல்லை, இது என்றுமே அவளால் அவனிடம் சொல்ல இயலாத காரியம்.
நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள்!
“முடியாது” என்றான், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்.
“மாவ்ஷிதான் கேட்டாங்க”
இதற்குமேல் இதை இலை மறை காயாகப் பேச விரும்பாமல், “நான் கோவா சுத்திக் காட்டுறேன்தான் சொன்னேன். பணம் தர முடியாது. தருவேனும்னு சொல்லலை” என்றான்.
உள்ளுக்குள் மிகவும் பயமாக இருந்தது அவளுக்கு! ‘முடியாது’ என்று அவன் போய்விடுவானோ என்று இருந்தது.
“ப்ளீஸ்…” என்றவளைப் பார்க்கையில்… பஞ்சுமிட்டாய் கேட்டு அழும் பச்சைக் குழந்தைப் போல் அவனுக்கு இருந்தது!
“கண்டிப்பாக முடியாது. ஏன் உன்கிட்ட பணம் இல்லையா?”
“இருக்கு. ஆனா தம்பிக்கு கொஞ்ச கொடுக்கலாம்னு வச்சிருக்கேன்”
“ஓகே! டூ ஒன்திங். அத இங்க கொடுத்திட்டு வா. தம்பிக்கு நான் தரேன்”
அவள், “ரெண்டும்…” என்று ஆரம்பிக்கும் போதே, “போ… போய் கொடுத்திட்டு வா சீக்கிரமா” என்றான். திரும்பவும் சாலையைக் கடக்க திரும்பினாள்.
“ஒரு நிமிஷம்” என்றான்.
அவள் திரும்பியவுடன், “இது என்ன?” என்றான் கடந்து வந்த சாலையைக் காட்டி. “இது ரோடு” என்றாள் சாலையை திரும்பிப் பார்த்து!
“ப்ச்… கார் ஓட்டிட்டு வந்த எனக்கு தெரியாதா இது ரோடுனு”
“அப்புறம் என்ன?”
“இது ஒன்வே! போறப்ப ரெண்டு பக்கமும் பார்த்திட்டுப் போகாத. ரைட் சைட் மட்டும் பார்த்தா போதும். சரியா?”
‘சரி’ என தலையசைத்து சாலையை கடந்து சென்றாள். எப்படி வந்தாளோ, அப்படியேதான் அவள் சாலையைக் கடந்திருந்தாள். ‘சொன்னதைக் கேட்க மாட்டாளா?’ என்றிருந்தது அவனுக்கு!
உள்ளே சென்றவள் உடைமைகளை எடுத்துக கொண்டு, வெளியே வந்தாள். சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பது போலிருந்தது. அந்தப் பறவை கூண்டை விட்டு வெளியேறியது.
பாருங்களேன்!!
இந்தப் பறவைக்குச் சிறகை விரித்துப் பறக்க தெரியும். பறக்கும் வானமும் அதை வெறுப்பதில்லை. ஏன்… அதைக் கூண்டில் அடைக்கவும் ஆளில்லை!! மேலும் கூண்டும் திறந்துதான் கிடக்கிறது.
ஆனாலும் இப்பறவை, பறந்துவிட்டு திரும்பவும் கூண்டிற்குள் வந்தடைகிறது. காரணம்… அந்த வானத்தில் அதனோடு சேர்ந்து பறக்கின்ற பறவைகளின் பார்வைகள்!!
“ம்ம் ஏறிக்கோ” என்றான் அருகில் வந்தவளைப் பார்த்து! அவள் ஏறியவுடன் பயணம் தொடங்கியது.
“ஏன் கண்ணாடி போட்டிருக்க?” என்று காரினுள் சூழ்ந்திருந்தத அமைதியைக் கலைத்தாள்.
“வெயில். ஸோ சன்கிளாஸ்! ஏன் கேட்கிற?”
“சும்மாதான்”
“நீ உண்மையைச் சொன்னா… கிளாஸ ரிமூவ் பண்றேன்”
“இல்ல… சும்மாதான் கேட்டேன்”
“ஓ, ரியலி! ஆனா நீ பொய் சொல்ற”
“நான் பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்”
“சரி, அப்படினா உண்மையை மறைக்கிற”
கார் கண்ணாடி சன்னல் வழியாக வேறு புறம் பார்த்தவளின் மெளனங்கள் சிரித்தன.
“ஹலோ ஏதாவது ஸாங் போடவா?” என்றான் சாய்ந்து அவளைப் பார்த்து.
“வேண்டாம். எனக்கு வேடிக்கை பார்க்கனும்” என்றாள்.
இதற்கு என்ன சொல்ல முடியும் அவனால்? அவளின் அழகான, அருமந்த ஆசைக்கு ஆதரவாக இருக்க, அமைதி என்னும் ஆடை அணிந்தான்!
உலகத்தைக் காண கிளம்பி, பழுப்பு விழிகள் கனவுச் சிறகுகளைப் விரித்துப் பறந்து வந்து, நீலவிழிகளின் கூட்டிற்கு வந்து சேர்ந்தது. சற்றும் பயமின்றி கூட்டினுள் நுழைந்தவள், சுற்றிப்பார்த்தாள்!
முன்னறையில் வட்டவடிவ காலணி அலமாறி! அதன்மீது அதே வடிவ குஷன் இருந்தது! வரவேற்பு அறையிலிருந்து மூன்று படிக்கட்டுகள் ஏறிய பின் வரும் நவீனமயமாக்கப்பட்ட சமையலறை!
தரையிலிருந்து இரண்டடி மட்டுமே இருந்த வட்டவடிவ சாப்பாடு மேசை! அது கண்ணாடியால் ஆனது! அதை சுற்றிலும் ஒரு அடி உயரம் கொண்ட மூங்கில் நாற்காலிகள்! அதில் சிறு பச்சை வர்ண தலையணைகள்!
வரவேற்பு அறையில்… தரையோடு தரையாக இருந்த நீள் வடிவிலான குஷன்! சமீபத்திய மாதிரி தொலைக்காட்சிப் பெட்டி! மரத்தரை மாதிரியான ஓடுகள் பதிக்கப்பட்டிருந்த தளத்திற்கு ஏற்றாற் போல் இரண்டு மூன்று பச்சை வர்ண ‘பீன் பேக்’ அங்கங்கே கிடந்தன!
வீடு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது!
“எப்படி இருக்கு?” என்றான்.
பார்வையைச் சுழல விட்டுக் கொண்டே இருந்தவள் “என்ன ஒரே கோயில் போட்டோவா இருக்கு” என்றாள்.
“அது கோயில் போட்டோ இல்லை. ஹிஸ்டராரிக் பிளேஸ் போட்டோஸ்” என்று ஒவ்வொரு புகைப்பட சட்டத்தின் பின்னே வாழும் புகைப்படங்களைப் பற்றிப் பேசினான்.
“இது பதாமில எடுத்தது. இது ஐகோல். ம்ம் திஸ் ஒன் இஸ் பிரம் சாஞ்சி” என்று பேசிக்கொண்டே போனவன் அவளைப் பார்த்ததும், “என்ன இதுல இன்ட்ரஸ்ட் இல்லையா?” என்றான்.
“ம்” என்றவள், அவன் சுவரில் சாய்ந்திருப்பதைக் கண்டு சுவரைப் பார்த்தாள்.
சுவரின் வெளிர் பச்சை வண்ணத்திற்கு எடுப்பாய் இருப்பது போல் கருமை நிறத்தில் சின்னச் சின்ன வட்டவடிவ மரத்தினால் செய்யப்பட்ட ‘ஷோகேஷ்’! அதில் என்னவென்றே தெரியாத அழகு பொருட்கள் நிறைந்திருந்தது. அதை எடுத்துப் பார்த்தவள், உடனே அவனையும் பார்த்தாள்.
பார்த்த பார்வையின் அர்த்தம் அறிந்தவன், “அதெல்லாம் ஆன்ட்டிக் பீஸஸ். சரி, உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு” என்றான்.
“எதைப் பத்திக் கேட்கிற?”
“இப்ப நான் சொன்னேன்ல அந்த மாதிரி”
“பூ வைக்கிறதுக்கு, பீங்கான்ல செஞ்சு வச்சிருப்பாங்கள, அதுல கலர் கலரா பூவா போட்டு வைக்கணும்” என்றாள். அவள் சொன்ன விதமே சொல்லியது, அவளுக்கு அது எவ்வளவு பிடிக்கும் என்று!
“வேற?”
“பேமிலி போட்டோதான், சுவர்ல பெரிசா மாட்டனும். இந்த மாதிரி போட்டோ பிடிக்கல”
சிரித்துவிட்டு “சரி, வேற என்ன பிடிக்கும்?” என்றான்.
“அவ்வளவுதான்”
“நல்லா யோசிச்சு சொல்லு” என்றவன், அப்போதுதான் தன் கண்ணாடியைக் கழட்டி நேராக அவளைப் பார்த்தான்.
விருப்ப மனுக்கள் அனுப்பி வைத்த நீலவிழிகளைக் கண்டு, துள்ளிய பழுப்பு விழிகள் மெல்லிய நாணம் பூண்டு, கோரிக்கையை ஏற்றனவா… இல்லையா என்று அறிய முடியாத வண்ணம்… இமை தாழ்த்திக் கொண்டன!
“தூக்கம் வருது” என்றாள்.
“ஓகே. அந்த ரூமை யூஸ் பண்ணிக்கோ. கொஞ்சம் சின்னதுதான். காலையில சீக்கிரமா எந்திரிச்சிரு. பீச் போலாம். சரியா?”
அவன் காட்டிய அறைக்குள் நுழையப் போனவள்… நின்று, “ஒரு நிமிஷம், ஏன் பணம் தர மாட்டேன்னு சொன்ன?” என்றாள். இப்பொழுது கேட்பதில் சிறிதும் தயக்கமில்லை அவளுக்கு!
கடந்த காலத்தை மறக்க வைக்கின்ற அல்லது மறைக்க அவசியமில்லாது போன்ற, எதிர்காலத்தைப் பகிரப்போறவன் கிடைப்பது வரம்!!
“கண்டிப்பா தெரியனுமா?”
‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தாள்.
“நான் பணம் கொடுத்தா… அதுக்கு அர்த்தமே வேற இல்லையா? அதான் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்”
“ஆனா இப்பவும் எல்லாரும் அப்படித்தான் நினைப்பாங்க”
“நினைக்கலாம். ஆனா எனக்குத் தெரியும். உனக்குத் தெரியும் இல்லையா? அது போதும். இப்ப சொல்லு நான் பணம் கொடுக்காதது கரெக்ட்தான?”
‘ஆம்’ என்பது போல் திரும்பவும் தலையை அசைத்தாள் அந்த நீலவிழிக்குக் கட்டுப்பட்டு!
“சுத்தி இருக்கிறவங்களைப் பத்தி கவலைப்படாத சரியா?! நாம நமக்காக வாழப்போறோம்” என்றான் தன் விழியால், அவள் விழிகள் வழிச் சென்று இருதயத்தை வருடிக் கொடுத்தபடியே!
“நான் சொன்னது புரியுதா?” என்றும் கேட்டான்.
“ம்ம்ம்… புரியுது”
“என்ன சொன்னேன்னு சொல்லு பார்ப்போம்”
“நாம நமக்காக வாழப்போறோம்” என்றாள் கிளிப்பிள்ளையாக!
பழுப்பு விழிகள் உணராமல், உத்தரவின் பேரில் சொன்ன வாக்கியம்தான். ஆனாலும் சொல்ல வைத்தாயிற்று! இனி அதை உணர்ந்து, உரிமையோடு சொல்ல வைக்க வேண்டியது நீலவிழிகளின் காதல் கடமை!!
