Kathambari Novels
அத்தியாயம் – 17
அடுத்த நாளுக்கான விடியல் வந்தது. கண் திறந்து உலகின் வெளிச்சத்தைப் பார்ப்பது மட்டும் விடியல் அல்ல… அல்லவா!!
அவள் விட்டுச்சென்ற அத்தனை சந்தோஷப் பைகளையும் தூக்கிக் கொண்டு, அவன் அவளைப் பார்க்க கிளம்பினான். அந்தக் கட்டிடத்தை வெளியே நின்று பார்த்தவனுக்கு… இன்று அது, அதன் அடையாளத்தை தொலைத்தது போன்று இருந்தது!
கட்டிடத்தின் அருகிலுள்ள கடைக்காரர்கள், அவனைக் சற்று வித்தியாசமாகப் பார்த்தனர். ஏனெனில் ‘நேற்று இரவும் அவன் அங்கு நின்றிருந்தான். இன்றும் வருகிறான்’ என்று!
ஆனால் அவனோ எதையும் கண்டுகொள்ளவில்லை. அவன்தான் உலகத்தின் பார்வைக்கு என்றுமே முக்கியத்துவம் கொடுப்பதில்லை அல்லவா? இன்றும் அதேதான்! இனிமேலும் அதேதான்!!
அவன் வரவை எதிர்ப்பார்த்திருந்த மாவ்ஷி, உள்ளே வந்தவனை சிரித்துக் கொண்டே, “வாப்பா” என்றார்.
அவளும் அங்கேதான் நின்று கொண்டிருந்தாள். என்னவொன்று அவன் வரவை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.
“கூட்டிட்டுப் போப்பா” என்றார் மாவ்ஷி.
‘சரி’ என்று தலையைசைத்து, அவளை நோக்கிச் சென்றவனுக்குத் தெரியும், சந்தோஷப் பைகளை வாங்க வைக்க சில சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று! இருந்தாலும் “போகலாமா?” என்றான்.
அவனுக்குள் ஏக்கங்கள்! மறுத்தாலும் பரவாயில்லை! ஆனால் அதையும் தன் விழி பார்த்துச் சொல்ல வேண்டுமென்று!!
அவன் எண்ணத்தின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி, எவ்வித எதிர்ப்பும் இன்றி, விழி உயர்த்தா தலையசைப்புகளில் சம்மதித்தாள்!!
மறுப்பில்லா அவளது சம்மதம்கூட வலித்தது அவனுக்கு!!
எனினும், “ம்ம் கார் கீ. வெளிய வெயிட் பண்ணு. பேசிட்டு வர்றேன்” என்றான். அதற்கும் அவளிடம் தலையசைப்பே பதிலாக வந்தது. அவனிடம் சாவியை வாங்கிக்கொண்டு, மாவ்ஷியிடம், மற்ற பெண்களிடமும் சிறிய புன்னகை தந்து, விடைபெற்று வெளியேறினாள்.
அவள் போவதையே பார்த்தவனிடம், “நல்ல முடிவு எடுத்திருக்கா இல்லையா? நீயும் கிளம்புப்பா. காத்திருக்கா பாரு” என்றார்.
ஆனால் அவனோ வெளியே செல்லாமல், அவரதருகில் வந்தமர்ந்தான். ‘ஏன் எதற்கு?’ என்பது போல் பார்த்தார்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“என்கிட்டயா?” என்று அதிர்ச்சியாக பார்த்தார். அவளைப் பற்றி ஏதும் கேட்க போகிறானோ? என்று பயம்! சுற்றி நின்ற பெண்களுக்கும் அதே பயம்தான்!!
அங்கிருந்த பெண்களைப் பார்த்து, “நீங்களும் உட்காருங்க” என்றான்.
இப்போது அவர்களுக்குள்ளே தயக்கங்களும், கேள்விகளும்!
“ப்ளீஸ் உட்காருங்க” என அவர்களைப் பார்த்துச் சொன்னவன், மாவ்ஷியிடம் திரும்பி, “நீங்களாவது அவங்ககிட்ட சொல்லுங்க” என்று கேட்க, அவர்களிடம் மாவ்ஷி சொன்னார்
அவர்கள் அமர்ந்தவுடன், “நீ சொல்லுப்பா” என்றார்.
“எப்படிச் சொல்ல? நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். நான் ஒரு ரெசார்ட் வாங்கி இருக்கேன். ம், நெக்ஸ்ட் வீக் ஓபன் பண்ண டிசைட் பண்ணிருக்கோம். அங்க சின்னச் சின்ன வேலை செய்றதுக்காக ஆளுங்க தேவைப்படுது. உங்க எல்லாருக்கும் ஓகேனா, அங்க வந்து வேலை பார்க்குறீங்களா?” என்று, தன் வேண்டுகோளைக் கூறினான்.
ஒரு நிமிடம் அமைதி நிலவியது!
மாவ்ஷிதான் சுதாரித்துக் கொண்டு, “ஐயோ இல்ல தம்பி. அது எதுக்கு? நீங்க அவளை மட்டும் கூட்டிட்டுப் போங்க” என்று மறுப்பைத் தெரிவித்தார்.
“நான் இந்த முடிவ, அவளை எனக்குத் தெரியும்னோ… இல்லை பிடிக்கும்னோ எடுக்கலை. நேத்து நீங்க சொல்றப்போ… இவங்களைப் பார்த்தேன். அப்பவே தோணிடுச்சு” என்று அமர்ந்திருந்த பெண்களைக் கைகாட்டினான்.
மேலும் அவர் யோசிக்கும் முன், “அவங்களுக்கு எதும் நல்லது செய்யணும்னு நினைக்கிறீங்கள?” என்று ஒரு சந்தேகக் கேள்வியால், அவரை முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளினான்.
“என்னப்பா இப்படி கேட்கற? கண்டிப்பா செஞ்சே ஆகணும்”
“அப்ப ஒத்துக்கோங்க”
பின்னே அமர்ந்திருந்த பெண்களை ஒருமுறை மாவ்ஷி பார்த்தார். அவர்களது முகத்தில் சந்தோஷம் என்பதைவிட நிம்மதிதான் அதிகமாக தெரிந்தது.
“வேண்டாமே தம்பி. நீயே புதுசா இப்பதான் ஆரம்பிக்ற. அவதான் சொன்னா. ரிசார்ட்டுக்கு வர்றவங்க என்ன நினைப்பாங்களோ? உன்னோட புது பிசினஸ் வீணாகிடக் கூடாது பாரு”
“நீங்களும் எனக்காக யோசிக்கிறீங்களா? வேண்டாங்க” என கையைடுத்துக் கும்பிட்டான்.
“இல்லப்பா… நீ உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கறயோன்னு தோணுது”
“சில முடிவை உணர்ச்சிவசப்பட்டு எடுத்திடணுங்க… உட்கார்ந்து யோசிச்சா இப்படித்தான் இருக்கும்” என பழுப்புவிழிகள் போன திசையை காட்டினான்!
இருந்தாலும் மாவ்ஷி யோசித்துக் கொண்டே இருந்தார். அப்போது பின்னால் இருந்து ஒரு பெண்குரல், “மாவ்ஷி… நாம போலாம்” என்று கேட்டது.
அதன்பின் இன்னொரு குரல் வந்தது. ‘எல்லாரும் போகலாம். இதுக்கப்புறமா இந்த மாதிரி வாழ வேண்டாம்’ என்று இந்தியில்! அதைத் தொடர்ந்து நிறைய சம்மதக் குரல்கள் கேட்டன!!
அவன் புன்னகையுடன், “பாருங்க, அவங்கெல்லாம் சம்மதிச்சாச்சு. நீங்கதான் சம்மதிக்கணும். ஆறு மாசம் முன்னாடி… உங்க எல்லாருக்குமே இதுல இருந்து வெளிய போக தோணிச்சினு சொல்லிருக்கா. அப்ப சான்ஸ் கிடைக்கலைனு நினைக்கிறேன். இப்ப கிடைக்குதுல… யூஸ் பண்ணிக்கோங்க” என்றான்.
மிகுந்த யோசனைக்குப் பின், “சரி தம்பி” என்றார் சந்தோஷமாக.
“இங்கயே இருந்தா ப்ராப்ளம் வரும்னா, எனக்கு இன்னொரு ரெசார்ட் இருக்கு. எல்லாரும் அங்க முதல ஷிஃப்ட் ஆகிக்கோங்க. அப்புறம் அடுத்து என்னென்னு பார்க்கலாம்” என்றான்.
“இல்லபா, அவ்வளவு கஷ்டம் உனக்கு எதுக்கு? நாங்க இங்கயே இருக்கிறோம்” என்றதும், ‘நாம் அங்கயே போயிடலாம்’ என்று மறுபடியும் பின்னால் இருந்து குரல்கள் எழுந்தன!
“சரி, அப்ப நான் அதுக்கு அரேஞ் பண்றேன். இப்ப அவளை மட்டும் கூட்டிட்டுப் போறேன்” என்றான்.
பின்பும் அவரிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டு கொடுத்து,” இதுல என் பேரு, ஃபோன் நம்பர் இருக்கு. உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் ஃபோன் பண்ணுங்க” என்றான்.
மற்றும் ஒரு அட்டையைக் கொடுத்து, “இது நீங்க தங்க பண்ண போற ரிசார்ட் அட்ரஸ்! என்னோட வொர்க்கர்ஸ்கிட்ட சொல்லி, உங்களுக்கு தங்கிறதுக்காக அரேஞ்ச் பண்றேன். ஸோ நீங்களும் கிளம்புங்க” என்று நேற்று அவன் எடுத்த முக்கிய முடிவை நிறைவேற்றினான்.
அதன்பின் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினான்.
இன்றைய விடியல், இவர்களுக்கு எதிர்காலத்திற்கான விடியலாக இருந்தது! என்றோ ஒரு காமுகனால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்டிடம்… இன்று ஒரு ஆண்மகனால் உடைக்கப்பட்டது!!
வெளியே வந்தவனுக்காக, அவள் காரில் ஏறித் தயாராக இருந்தாள்.
வாழ்க்கைப் பயணத்தை மெளனப் பயணச்சீட்டுகள் வாங்கி ஆரம்பித்தனர். அவனின் ஒட்டுமொத்த பார்வையும், அவளுடைய ஒரு பார்வைக்காக தவம் கிடந்தது.
முந்தைய பயணங்களிலும் இதேபோன்று அவனுக்கு மெளன வெட்கங்களை, மெளன சிரிப்புகளை, ஏன்… மெளன மறுப்புகள்கூட காட்டியிருக்கிறாள்!
ஆனால் அவனது நீலவிழி நோக்கா, அவளுடைய இந்த மெளன சம்மதங்கள், அவனைத் தரமாகத் தாக்கியது!!
ஜோடிப் பறவைகள் கூட்டை வந்தடைந்தன. கதவுகள் திறந்தும், காதலர்கள் உள்ளே நுழைந்தனர். காதல் கனவுகள் நிறைவேற, மறுமுறை காலடி எடுத்து வைத்தனர்.
உள்ளே வந்தவளிடம், “உன்…” என்று பேச தொடங்கியவனைக் கவனிக்காமல் சென்றாள். மெதுவாக சென்றவள்… வீட்டின் முன்னறையிலிருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள். ‘கவனம் எல்லாம் அவளே’ என இருந்தவனும், அவளது அருகில் சென்று அமர்ந்தான்.
அவர்களின் வீடு முழுவதும் காதலர்களின் மௌனங்களால் நிரம்பி, அழகாய் காதல் பேசியது!
காதலர்களும் பேசுவார்கள்!!
