Kathambari Novels
கனகா மேம், சயனா மற்றும் ரேவ், இவர்களுக்கான சிஐடி அலுவலக் கட்டிடம்!
நான்காவது தளத்தில் இருக்கும் அலுவலகத்தின் நடுப்பகுதியில் கனகா மேம் கேபின் கண்ணாடிக் கதவுடன் இருந்தது. மேசை மீது கோப்புகள், மடிக்கணினி, இன்டர்காம்… சுவரில் மாநில காவல்துறை முத்திரை என்றிருந்தது அறை.
சயனாவின் மேசை கேபின் வெளியே இடது பக்கத்தில் இருந்தது. ஒரு கணினி, நோட்டுப் புத்தகங்கள், புலனாய்வு குறிப்புகள்… என்று அவள் எப்போதும் பயன்படுத்தும் பொருட்கள் அங்கே இருந்தன.
அதற்குப் பக்கத்தில் மூன்று பெரிய மானிட்டர்கள், நெட்வொர்க் மேப், IP‑ட்ரேஸ் சாப்ட்வேர், டிஜிட்டல் எவிடென்ஸ் ரேக் என்ற சைபர்‑அனலிசிஸ் அறை ஒன்று. அங்கேதான் ரேவிற்கு வேலை.
இது தவிர… இரண்டாவது தளத்தில் பாதுகாப்பு பூட்டுடன் சாட்சிக் கோப்புகள் மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்கான அறை, மூன்றாவது தளத்தில் சந்தேக நபர்களை விசாரிக்கும் இன்டரோகேஷன் ரூம், அணி கூட்டங்கள் நடைபெறும் கலந்துரையாடல் அறையும் அந்தக் கட்டிடத்தில் இருந்தது.
‘ரேஸ் கார்’ வேகத்தோடு வந்து சயனாவின் ராயல் பார்க் செய்யப்பட்டது.
அந்தக் கட்டிடத்தின் நான்காவது தளத்தில்தான் சயனாவின் சாம்ராஜ்யம்.
அடித்தளப் படிக்கட்டின் முன்னே சயனா மற்றும் ரேவ் நின்றனர்.
“ரேவ், ரெடியா” – வாடிவாசல் திறந்ததும் சீறிப்பாயத் துடிக்கும் காளை போல் சயனா நின்றாள்.
“இன்ட்ரெஸ்ட்டே இல்ல சயனா” – ரேவ்.
“இந்தா, இப்பதேன் படிக்கட்ட தொடச்சேன். வழுக்கி கிழுக்கி விழுந்திராதீக, பார்த்துப் போங்க” – இவர்களை நன்கு அறிந்த துப்பரவு ஊழியர் சொன்னார்.
“சரிக்கா..சரி… நீ ரெடியா” – விடாமல் சயனா.
“விடமாட்டயே. ம்ம்ம் ரெடி”
அடுத்தகணம், இருவரும் படிக்கட்டுகளில் ஓட ஆரம்பித்தனர். இவர்களுக்குள் இது வாடிக்கையாகிப் போன விளையாட்டு.
அலுவலகத் தளம் வந்ததும், எவ்வித மூச்சிரைப்பின்றி கதவைத் திறந்து சயனா முதலில் உள்ளே நுழைந்தாள். நேராக கனகா மேம் அறைக்குள் போய்விட்டாள். அதன் பின்னர் வியர்வை வழிய, மூச்சிரைத்துக் கொண்டு ரேவ் நுழைந்தாள்.
“மேம், கால் வலிக்குது. இன்னைக்கும் இவ என்னய லிப்ட்ல வர விடல” – மூச்சுத் தவிப்புகளுக்கு இடையே ரேவின் வார்த்தைகள் தடையுடன் வந்தன.
அவள் கவனிக்கத் தவறியது அங்கே காவலும், பத்திரிக்கையும் இருந்ததை. பார்த்தவுடன் தயக்கம் கலந்து மூச்சுத் தவிப்புகள் வந்தன.
அநாவசியப் பார்வைகளுடன், “ம்ம்ம், இப்படித்தான் இருக்கனும். உங்கள நம்பி ஒரு கேஸக் கொடுத்தா ஓடிப் புடிச்சி விளையாடிக்கிட்டு” என்று ரேவின் முன்னே வந்து நின்றது போலீஸ்.
அநாவசியத்தை… அலட்சியப்படுத்தினார் கனகா மேம்!
அநாவசியத்தை… அருவருப்பாக நினைத்தாள் ரேவ்!
அநாவசியத்தை… அடக்க நினைத்தாள் சயனா.
“ரேவ், நீ ரெஸ்ட் ரூம் போய் ரெப்ரெஸ் பண்ணிட்டு வா” – சயனா.
“ஏய், நான் பேசிக்கிட்டு இருக்கேன்ல” என்றது காவல் கடுப்பாக.
“ரேவ், நீ போ” – காவலைக் கண்டு கொள்ளாமல் சயனா சொன்னாள்.
அநாவசியப் பார்வையை அவசியம் தவிர்க்க வேண்டுமென்று நினைத்த ரேவ், அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டாள்.
பிறை நிலா வடிவத்தில் போடப்பட்ட கண்ணாடி மேஜையினைச் சுற்றி வந்து கனகா மேம் அருகே நின்று, “வாங்க, வந்து உட்காருங்க” என்றாள் சயனா.
“ஏய், உன் மரியாதை இங்க யாருக்கு வேனும்”
“ரெண்டு பேரு நிக்கிறப்ப, உட்காருன்னு சொன்னா, எவென் உட்காரனும்னு தெரியாதுலு. அதான்” – தனக்கு மரியாதை தராத கோபத்தில் சயனா பேசினாள்.
வந்திருந்த இருவருக்கும் சுருக்கென தைத்தது. “நீ ரொம்ப பேசற. இது உனக்கு நல்லதில்ல. இருக்கட்டும், கேஸ பத்திச் சொல்லு” என்று கேட்டவாறு அமர்ந்தனர்.
“அது ஈமெயில் ஐடி, பேங்க் யூஸர்” என்று சயனா பேசி முடிக்கும் முன்னே, “இங்க பாரு, இதலாம் வேண்டாம். ஆள் யாருன்னு மட்டும் சொல்லு” என்று காவல் இடையே புகுந்தது.
“ரெண்டு நாளா எதுவும் யோசிக்க முடியல. வேல எதுவும் நடக்கல”
“அந்த ரெண்டு நாளு சம்பளம் வாங்காமா இருந்தியா? வேலைக்கு வந்திட்டா, இதெல்லாம் சொல்லக் கூடாது” – கடமையைப் பற்றிப் பேசியது காவல்.
“நான் ஒன்னு சொல்லட்டா”
“என்ன?”
“உன் வேலைய நீ ஒழுங்கா பார்த்திருந்தா இந்த கேஸ் எங்கிட்ட வந்திருக்காது”
“சயனா!?” – ‘எதுக்கு இப்படிப் பேசுற’ என்பது போல் பார்த்தார் கனகா மேம்.
“பின்ன என்ன மேம், சொல்றேன்ல கண்டுபிடிச்சி தருவேன்னு. அப்புறமும் வந்து இப்படி நின்னா இந்த மாதிரிதான் பேச முடியும்”
“ரொம்பத் திமிரா பேசுறல. ஐயா ஊருக்கு போயிருக்காரு… ரெண்டு நாள் கழிச்சு திரும்பி வந்து மீட்டிங் போடுறோம். அப்ப இருக்கு உனக்கு!!” – இப்படிச் சொல்லிவிட்டுக் காவல் கழண்டு கொண்டது.
ஒரு எரிச்சல் மூச்சுடன் திரும்பினாள்.
அவளையே பார்த்த வண்ணம் இருந்தது பத்திரிகை!
“நீங்க இன்னும் போகலையா?” – சயனா கேட்டாள்.
“உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்” – இது பத்திரிக்கை சொன்னது.
“சொல்லுங்க” என்றாள்.
“நான் இப்ப புதுசா நியூஸ் சேனல் தொடங்கி இருக்கேன்”
‘இது வேறயா’ என்ற முகமொழியுடன் இருந்தாள் சயனா.
“அதுக்கு உங்க ஹெல்ப் வேணும்”
“ரிப்பன் கட் பண்ணனுமா?”
“இல்ல… இல்ல. நீங்க விசாரிக்கிற, இல்லனா உங்க டிபார்ட்மென்ட்ல வேற யாரும் விசாரிக்கிற கேஸ் டிடெயில்ஸ் தர முடியுமா? தந்தீங்கனா, அத சேனல டெவலப் பண்ண யூஸ் பண்ணிக்கிடுவேன்” – பத்திரிக்கை தர்மம் பேசியது.
“நீங்க பிரேக்கிங் நியூஸ் போட, நான் கன்டென்ட் கொடுக்கனுமா?” – சயனாவால் ‘ப்ரேக்’ போடப்பட்டது சேனலின் பிரேக்கிங் நியூஸிற்கு .
“அட, அப்படி இல்லம்மா”
“சரி, நீங்க கேட்கிற மாதிரி ஒரு நியூஸ் இருக்கு. சொல்லவா?”
“சொல்லுங்க… சொல்லுங்க…”
“அமைச்சர் பணத்தை யாரோ எடுத்து வரி கட்டியிருக்காங்களாம். டெலிகாஸ்ட் பண்றீங்களா? டிஆர்பி சும்மாஆஆஆ பிச்சுக்கும்” – சயனா! இது சேனலின் ‘டிஆர்பி’ காகவா? இல்லை ‘ஆர்ஐபி’ காகவா?
“அவன் சொன்ன மாதிரி, நீ திமிர் பிடிச்சவதான். இரு! அமைச்சரோட வந்து உன்னய பார்த்துக்கிறேன்” என்று எழுந்து நடந்தது ‘பிரேக்கிங் நியூஸ்’.
“அதேதான், இனிமே இப்படித் தனியா வராத. யாரையாவது துணைக்குக் கூட்டிட்டு வா” – புயல் போல் பேசினாள் சயனா.
பத்திரிக்கை… புயல் காற்றில் பறந்தது சென்றுவிட்டது.
கனகா மேம், சயனாவைப் பார்த்தபடி இருந்தார். அவர்கள் பேசினார்கள். அதனால் இவளும் பேசினாள் என்று இருந்தாலும்… ‘ஏன் இவ்ளோ பேசணும்’ என்ற கேள்வியும் இருந்தது அவர் பார்வையில்.
“ஸாரி மேம், வரம்புமீறி பேசறான்ங்க. அதான் இப்படி”
“புரியுது. ஆனா அவங்ககிட்ட அதிகாரம் மொத்தமும் இருக்கு. நாம கேர்ஃபுல்லா இருக்கனும். ஆள் யாருன்னு காட்டிட்டு, போய்கிட்டே இருப்போம்” என்றவர், “இந்த ரெண்டு நாளா, அந்த அமைச்சர் சைடுலருந்து எத்தனை ஃபோன் கால் வருது தெரியுமா” என்றபோது அறைக்கதவு திறக்கப்பட்டது.
இருவர் குழு மூவவராக மாறியது!
அதாவது ரேவ் வந்திருந்தாள்!!
“யார் கொரியர் வாங்கினாங்க மேம்?” என்றாள் சயனா.
“செக்யூரிட்டி டெஸ்க்ல ஒருத்தர்” என்று அவர் பெயரைச் சொன்னதும், சயனா இன்டர்காமில் அவரை அழைத்தாள். அவரும் சில நொடிகளில் வந்து நின்றார்.
“அண்ணே, இத உங்ககிட்ட யாரு வந்து கொடுத்தாங்க”
“கொரியர் ஆளுதான்”
“ஆபீஸ் ஆளு மாதிரிதான் தெரிஞ்சதா”
“என்ன கேட்க வர்றீங்கன்னு புரியல மேடம்”
“இந்த கவர்ல இருக்க ஆபிஸ் பேரு, அவங்க டிரஸ்ல இருந்ததா?” என்று கொரியர் வந்தக் கவரைக் காட்டினாள்.
“ஆமா மேடம். அந்த ஆளோட டிரஸ்லயும் இருந்திச்சி. பேக்லயும் இருந்திச்சி”
“சரி, நீங்க போங்க அண்ணே” என்று அவரை அனுப்பி வைத்தாள்.
“ரேவ், இந்த கொரியர் ஆபீஸூக்கு ஃபோன் பண்ணி, கொரியர் எந்த ஏரியால இருந்து வந்திருக்குனு கேளு”
“அத கிராஸ் பண்ணிடவா?”
“ம்ம்ம்”
“சயனா, அம்மாவோட ஃபோன கொடு” – ரேவ் சம்பந்தமே இல்லாமல் கேட்டாள்
“இப்போ எதுக்கு?”
“கொடுன்னா கொடு”
“எதுக்கு?”
“அம்மா மனோகரைப் பத்தி, எத்தனை நாளைக்கு முன்னாடி இருந்து பேச ஆரம்பிச்சாங்க?” – கேள்விக்குப் பதில் கேள்வியே வந்தது ரேவிடமிருந்து.
“நான் என்ன வேலை சொன்னேன்? நீ என்ன செய்ற, ரேவ்?”
“பதில் சொல்லு சயனா”
“ஒரு எட்டு நாளைக்கு முன்னாடி இருந்து. இப்ப சொல்லு எதுக்குனு?”
“அம்மா ஃபோன்ல எட்டு நாளைக்கு முன்னாடி இருக்கிற கால் கிஸ்டரியப் பார்த்து, அந்த நம்பருக்கு ஃபோன் பண்ணி மனோகர பத்தி கேட்கப் போறேன்”
“சூப்பர்! கேஸூக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்”
“நீ முதல ஃபோன் கொடு” – சிறுமியின் பிடிவாதமாய் ரேவின் குரல் இருந்தது.
“கொடு சயனா, அவதான் கேட்கிறால” – கனகா மேம் பெரியவராகி, சிறுமிக்கு ஆதரவாகப் பேசினார்.
அதற்குமேல் எதுவும் பேசாமல் கைப்பேசியை எடுத்து ரேவிடம் கொடுத்து, “நான் சொன்ன வேலையும் நடக்கனும்” என்று கேட்டுக் கொண்டாள்.
“ம்” – சயனாவிடம் கைப்பேசியை வாங்கிக் கொண்டு ரேவ் வெளியே சென்றாள். ஏழெட்டு நாட்களுக்கு முன்னர் இருந்த அழைப்பில் இருந்த இலக்கங்களை எடுத்துக் கொண்டாள். ஒவ்வொருவருக்கும் அழைப்பை ஏற்படுத்தினாள்.
முதல் நான்கு இலக்கங்கள் இலக்கு மாறிப் போனது. அடுத்த அழைப்பு, அவளின் இலக்கைத் தொட்டது.
“ஹலோ” என்றது எதிர்முனை.
“ஹலோ, நான் சயனாவோட ஃப்ரண்டு பேசறேன்”
“யாரு”
“ரஞ்சிதம் ஆன்ட்டியோட பொண்ணு சயனா. அவளோட ஃப்ரண்டு”
“ஓ அவளா? சரி சொல்லும்மா, என்ன விஷயம்?”
“ரஞ்சிதம் ஆன்ட்டி சயனாவுக்கு ஒரு பையன் பார்த்தாங்கள. அதைப் பத்தி…”
“ரஞ்சிதம் எங்க பார்த்தா? நான்தான பார்த்துக் கொடுத்தேன். அவங்களுக்கு எதுவுமே செய்யலையே, இதையாவது செய்யலாம்னு நினைச்சி செஞ்சேன்”
“ஆங்… ஆங்… கரெக்ட். நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்”
“சரி, அதுக்கு இப்போ என்ன?”
“அந்தப் பையனோட ஃபோன் நம்பர் கிடைக்குமா?”
“எதுக்கு? அதான் ரஞ்சிதம், அவ பொண்ணு பிடி கொடுக்கலனு சொல்லுச்சே. இப்ப எதுக்கு ஃபோன் நம்பர் கேட்கற?”
“அது மொதல்ல. இப்ப அவ ஒத்துக்கிட்டா. அதான் கேட்டேன்”
“ஓ, ஆனா எனக்குத் தெரிஞ்சவங்க மூலம்தான் இது வந்துச்சி. அவங்ககிட்ட கேட்டுட்டு, ரஞ்சிததுக்குப் ஃபோன் பண்ணிச் சொல்றேன்”
“இ… இல்ல… ஆன்ட்டி… ஆன்ட்டி ரெண்டு நாளைக்கு முன்னாடி இறந்துட்டாங்க”
“ரஞ்சிதம் இறந்திடுச்சா? இதைக்கூட அவ பொண்ணு சொல்ல மாட்டாளா?”
“அந்த நேரத்தில எங்களுக்கு என்ன செய்யன்னு தெரியல. அதான் யார்கிட்டயும் சொல்லல”
“அதுக்காக எங்ககிட்டயுமா? மரியாதை தெரியாத பொண்ணு”
“ப்ளீஸ், அப்படியெல்லாம் பேசாதீங்க”
“என்னமோ போங்க. இப்ப நான் என்ன செய்யனும். எனக்கு எதுக்கு ஃபோன் பண்ண?”
“மனோகர, சயனாவோட நம்பருக்கு ஃபோன் பண்ண சொல்லனும். ப்ளீஸ் ப்ளீஸ், நீங்கதான் இந்த ஹெல்ப் பண்ணனும்”
“இவ்வளவு கேட்கிற, அதனால திரும்ப பேசிப் பார்க்கிறேன். நீ சயனா நம்பர் கொடு” என்று இலக்கங்கள் வாங்கிக் கொண்டு இணைப்பைத் துண்டித்தார்.
சயனா சொன்ன வேலையையும், சயனாவிற்கான வேலையையும் செய்து முடித்துவிட்டு சந்தோஷமாக உள்ளே வந்தாள் ரேவ்.
“இன்னும் ரெண்டு நாள்தான். கண்டிப்பா மனோகர், உனக்கு கால் பண்ணிருவான்” – ரேவ் ஏதோ பெரிய சாதனை புரிந்த சந்தோஷ அலுப்பில் சயனா முன் வந்து அமர்ந்தாள்.
எதிரே அமர்ந்திருந்த இருவரும், அந்த சந்தோஷ அலுப்பை, ‘அடிக்கும்’ பார்வைப் பார்த்தனர்.
“ஓ, ஸாரி. கொரியர் கொண்டு வந்தது, நம்ம ஏரியால இருக்கிற கொரியர் ஆபிஸ் பையன்தான். போஸ்ட் பண்ண லோகேசன் சைதாப்பேட்” – வீட்டுப் பாடம் முடித்து விட்டேன் என்று சொல்லும் பிள்ளை போல் சொன்னாள் ரேவ்.
“சயனா போதும். அவ சொல்லிட்டால. இப்பவாது அந்த கொரியர்ல வந்தத படி”
“ஓகே மேம். நீங்க படிச்சாச்சா?”
“ம்ம்ம், அதலாம் எப்பவோ ஆச்சு”
‘கொரியர் காகிதம்’ மென்மையாககக் கையாளப்பட்டது. காகித உரையைத் திறந்தாள். உள்ளே ஒரே ஒரு சிறிய வெண்ணிற அட்டை மட்டும் இருந்தது. அதில்,
வாரிச்சுருட்டிய பணக்காகிதங்கள்
வரிக்கனலால் சாம்பலாக்கப்பட்டது! – என்று எழுதியிருந்தது.
இரண்டு வரிகள் என்று சொல்வது விட, நான்கு வார்த்தைகள் என்று சொல்வதே வரிகளுக்குச் செய்யும் மரியாதை!
திரும்பத் திரும்ப அதில் எழுதப்பட்ட வார்த்தைகளை வாசித்தாள் சயனா.
“சயனா, நாலு வார்த்தைய எத்தனை தடவதான் படிப்ப? அத்தனை தடவ படிக்க, அது என்ன லவ் லெட்டரா?” – ‘சிச்சுவேஷன்’ தெரியாமல் கனகா மேமிடமிருந்து வார்த்தைகள் வந்தன.
‘லவ் லெட்டர்’ என்று வார்த்தையில் சயனாவின் மனம் லயித்து நின்றது.
“எதை எதோட கம்பேர் பண்ணனும்னு உங்களுக்குத் தெரியாதா?” – சயனாவின் லயித்து நின்ற மனதைப் பார்த்து நிம்மதியின்றி ரேவ் பேசினாள்.
“ஏன்? இதுல என்ன இருக்கு?” – கனகா மேம்.
இதற்கிடையில்… எதற்கென்றே தெரியாமல் சயனா சிரித்தாள்.
“நீ எதுக்குச் சிரிக்கிற?” – ரேவ்.
தோழியிடம் அகப்பட்டுக் கொண்ட தலைவி! – இது சயனாவின் நிலை.
“கேக்கறேன்ல, சொல்லு” – விடாமல் தோழி கேட்டாள்.
ஆயினும் தலைவி திருவாய் திறப்பதாக இல்லை.
“சொல்ல மாட்டேல! மேம் நீங்க சொல்லுங்க. ஹேக்கரும் கேமராமேனும் ஒன்னா?” – ரேவ்.
“ஏன், கேக்கிற உனக்குத் தெரியாதா?” – கனகா மேம்.
“தெரியும். ஆனா டீசன்ட்டா வேல செய்ற கேமராமேன் எங்க? இன்டீசன்டா வேலை செய்ற ஹேக்கர் எங்க?” – ஒப்பீடு செய்தாவது சயனாவின் லயிப்பை ஒதுக்கிவிட நினைத்தாள் ரேவ்.
“ஏசி ரூம்ல வேல செய்றவன்தான் டீசன்ட்டா தெரிவான். ஏப்பிரிக்கா காட்ல வேல செய்றவன் இல்ல” – மேம்.
‘ஆ’ என்பது ‘ஏ’ ஆனதால், ரேவிற்கு ஏகப்பட்ட எரிச்சல்கள். “மனோகர், அம்மா பார்த்தப் பையன். அதனால அவனதான் நீ கல்யாணம் பண்ணிக்கனும். சரியா?” என்றாள் சயனாவிடம்.
“இப்ப நீ பேசறதுக்கும் கேஸுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா ரேவ்?” – பொறுப்புடன் பேசினார் கனகா மேம்.
“அவளுக்கு நான் அந்த ஹேக்கர லவ் பண்ணிருவேனோனு பயம். அதான் இப்படிப் பேசறா” – இப்போது சயனாவின் திருவாய் திறக்கப்பட்டது.
“எனக்குக் கூடப் பயமா இருக்கு?” – கனகா மேம்.
“மேம் நீங்களுமா?” – சயனா.
“ச்சே, அவள மாதிரி இல்ல. நீ லவ்வெல்லாம் கூட பண்ணுவியானு” – மேம்.
உடனே அங்கே சிரிப்புச் சத்தங்கள் எழுந்தன. ‘எதற்காகச் சிரிப்பு’ என்பதைக் காட்டிலும், சிரிப்பது பரவாயில்லை என்று உணரப்பட்டது அவர்களால்.
“சயனா, அப்படியே பண்ணாலும் மனோகரத்தான் பண்ணனும்” – ரேவ்.
“ரேவ், மனோகர்கிட்ட இருந்து ஃபோன் வந்தா பேசறேன். அதேநேரம் மனோகர், ஹேக்கர் ரெண்டு பேர் மேலயும் பெரிய எதிர்பார்ப்பு இல்ல” – சயனா.
“ஹே சயனா, மனோகர பத்திச் சொன்னது ஓகே. பட் ஏன் ஹேக்கர்? கிராஸ்டாக் மாதிரி வருது?” – கனகா மேம்.
‘கிராஸ்டாக்’ என்ற வார்த்தையில் கிறுக்குப் பிடியாய் சிக்கினாள் சயனா.
“ஏன்னா? மைன்ட் ஹேக்கரோட கனெக்ட் ஆயிருச்சி” – அப்படிச் சிக்கியவளைச் சீண்டிப் பார்த்தாள் ரேவ்.
“உனக்குமா?” – கனகா மேம்.
“ச்சீ ச்சீ.. அவளுக்கு” – ரேவ்.
“உண்மையாவா சயனா?” – மேம்.
“அய்யோ மேம், அது உண்மை இல்ல” – ரேவ்.
“அது உனக்கு, நான் அவகிட்ட கேட்டேன்” – மேம்.
“அவளுக்காக நான் சொன்னேன்” – ரேவ்.
“அதெப்படி, அவளுக்காக நீ சொல்லலாம்?” – தோழி என்பதின் எல்லையைக் கனகா மேம் கோடிட்டுக் காட்டினார்.
“மேம், இந்த மாதிரி பேச வேண்டாம்” – எங்கள் தோழமை எல்லைக் கோடில்லாத ஒன்று என்று சயனாவால் சுட்டிக் காட்டப்பட்டது. அடுத்து, “சரி கேஸ் பத்தி பேசலாமா? உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது க்ளு தெரியுதா?” என்றாள்.
“அந்த நாலும் பேட்டி கொடுத்து ரெண்டு நாள்தான் ஆகுது. உடனே நமக்கு கொரியர் வருதுனா, இங்கதான்… ம்ம் சென்னையிலதான் இருக்கான்” – மேம்.
“நானும் ஐபி அட்ரஸ் செக் பண்ணேன். அதுவும் லோக்கல்தான் காட்டுது” – ரேவ்.
“சோ சென்னை, அத பிக்ஸ் பண்ணிக்கலாமா?” – சயனா.
‘ஒகே’ என்று இரண்டு குரல்கள் வந்தன.
“இந்தக் கொரியரில் கொடுத்திருக்கிறதா பார்த்தா, அவன் இந்த நாலு பேர மட்டும்தான் டார்கெட் பண்ணியிருக்கான். பிளஸ் இதுமாதிரி இனிமேல் நடக்கப் போறது இல்லை”
“இது உன்னோட கெஸ்ஸா?” – மேம்.
“இல்ல. ஸ்டிராங்க சொல்றேன் மேம்”
“எப்படி?” – கனகா மேம்.
“எப்படி ஸ்ட்ராங்கா சொல்ற” – ரேவ்.
“நான் சொல்லல. அவன்தான் தெளிவா சொல்லிருக்கான்ல” – சயனா.
“எங்க கொடு, நான் பார்க்கிறேன்” – காகிதம் பிடிங்கி படிக்கப்பட்டது ரேவால்.
“உனக்குப் புரியாது. அவளுக்குப் புரியும். சரிதான சயனா?” – மேம் கேலியாக சொன்னார்.
“மேம்ம்ம்ம்” என்று சயனா இழுத்தாள்.
“ஓகே ஓகே, ஜஸ்ட் ஃபார் ஃபன்” என்ற கனகா மேம், “சரி எப்படிச் சொல்ற” என்று கேட்டார்.
“இங்க, ‘வாரிச் சுருட்டிய பணமெல்லாம் வரிக்கனலால் சாம்பலாக்கப்பட்டது’ அப்படினு முடிஞ்சிருக்கு” – சயனா.
‘ஆமாம்’ என்று இரண்டு குரல்கள் வந்தன.
“சாம்பலாக்கப்படும் அப்படினா அடுத்தும் பண்ணுவான்னு அர்த்தம். அதாவது பிரஸன்ட் டென்ஸ். அது ஒரு உண்மை. தொடர்ந்து நடக்கும். ஆனா இங்க சாம்பலாக்கப்பட்டதுனு எழுதிருக்கு. இட் மீன்ஸ் பாஸ்ட் டென்ஸ். முடிஞ்சிருச்சி. இனிமே இதுமாதிரி அவன் பண்ண மாட்டான்”
அவளது விளக்கம் அவர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டது.
“அவன்னு எப்படிச் சொல்ற? அவனாவும் இருக்கலாம், அவளாவும் இருக்கலாம்ல” – ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றாள் ரேவ்.
“இல்ல, இனி இந்த சாய்ஸே கிடையாது. இது கண்டிப்பா ‘அவன்’தான்” – உறுதியானக் குரலில் சொன்னாள் சயனா.
“இவ்ளோ ஸ்ட்ராங்கா எப்படிச் சொல்ற?” – மேம்.
“நான் சொல்லல மேம், அவன்தான் சொல்லிருக்கான்” – சயனா.
“ஏன் சயனா, அந்த ரெண்டு வரியில அவ்வளோஒஒ சொல்றானாஆஆ?” – கனகா மேம் வாக்கியம் நெடில் நக்கலாய் முடிந்தது.
“இங்க பாருங்க… வரிக்கனல். அதுதான் அவனோட அடையாளம்” – சயனா.
“அடையாளமா!?” – ரேவ்.
“பேப்பர் எரிஞ்சி சாம்பலாகனும்னா என்ன தேவை ரேவ்?” – சயனா.
“நெருப்பு” – ரேவ்.
“அதுக்கு வேற பேரு”
“தீ, கனல், தணல்… இப்படி ஏதாவது” – மேம்.
“கரெக்ட் மேம்! அவன் தன்னோட அடையாளத்தை சொல்ல வேண்டாம்னு நினைச்சா, நெருப்புனு சொல்லிருப்பான்”
சயனா எதிரில்… ‘அப்படியா?’ என்று இரண்டு பார்வைகள்.
“தீ அப்படினு சொன்னா, தீபா தீயரசி… இந்த மாதிரி போகும். கனல் அப்படிங்கறதால, கனல்கண்ணன், கனலரசு, கனல்வேல்… அந்த மாதிரி வரதுக்கு சான்ஸ் இருக்கு”
சயனா எதிரில்… இரண்டு ஆச்சர்ய பார்வைகள்.
“அத வச்சுத்தான் சொல்றேன். அந்த ஹேக்கர் ஒரு ‘அவன்’. அன்ட் ஹீ இஸ் ஸோ பிரில்லியன்ட்” – சிலாகித்துப் போய் சொன்னாள் சயனா.
“இது நம்புற மாதிரியா இருக்கு மேம்” – ரேவ்.
“எது, பிரில்லியன்ட்னு சொல்றதா?” என்று சிரித்தார் கனகா மேம்.
“நீங்க இப்படியே பேசுங்க” – ரேவ்.
“ரேவ்! நீ நம்புனாலும் நம்பலனாலும், அந்த ஹேக்கர் ஒரு ஆண். அவன் என் பக்கத்துலதான் இருக்கான்” என்ற சயனா, “ஐயோ” என்று சொல்லிக் கண்ணைச் சுருக்கி, “ஸாரி, ஸாரி ஸாரி ஐ மென்ட் சென்னையில இருக்கான்” என்றாள்.
“நம்புற மாதிரி இல்ல” – ரேவ்.
“நம்புற மாதிரி நீ கண்டுபிடி” – மேம்.
“கண்டிப்பா! சைபர் கிரைம் யூனிட்லருந்து ஹேக்கர் லிஸ்ட் கேட்டிருக்கேன். அது மட்டும் வரட்டும் … பாருங்க” – ரேவ்.
“நீ பண்றதுல டைம்தான் வேஸ்ட் ஆகும். அவன் ஹேக்கர் கிடையாது. அந்த நாலு பேரையும் பழிவாங்கியிருக்கான். புரிஞ்சுக்கோ. அது எதுக்குனு கண்டுபிடி” – சயனா.
“இந்த நாலு பேரால அவனுக்கு என்னமோ நடந்திருக்கினு சொல்றீயா?” – மேம்.
“யெஸ் மேம்”
“அடுத்த மூவ் என்ன?” – மேம்.
“யோசிப்போம்” – சயனா.
“நாம ஏன் யோசிக்கனும்? – ரேவ்.
“நாம யோசிக்காம…? எதுக்கு இந்த கேள்வி? ” – மேம்.
“மேம்… அந்த நாலு பேர்கிட்டயும் போய்க் கேட்கலாமே” – ரேவ்.
“ரேவ், அவங்க உண்மை பேசுவாங்கனு நினைக்கிறயா நீ” – கனகா மேம்.
“ஸாரி மேம்” – ரேவ்.
மூவரது வார்த்தைகளும் ஓடிக் களைத்து ஓய்வு எடுத்தன. ஆனால் அவர்களது எண்ணங்கள் ஓய்வில்லா ஓட்டத்தை ஆரம்பித்தன.
கனகா மேம் எண்ணத்தில்… ஏனென்றே தெரியாமல் இந்த வழக்கு சயனா வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுமோ என்ற கேள்வி வந்தது.
ரேவின் எண்ணம்… ‘அம்மாவின் சந்தோஷம்’ என்று பார்க்கப்பட்ட ஒன்றை, மகளிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்று இருந்தது.
சயனா… அந்த ‘அவனிற்கு’ இந்த நால்வரால் என்ன ஆகியிருக்கும்? அதை நினைக்கையில், ஏனோ அவனுக்கு ஆறுதல் சொல்ல அவள் எண்ண உணர்வுகள் அலைக்கழிந்து வந்தன.
