Kathambari Novels
முழுதாய் இரண்டு நாட்களுக்குப் பின்! உடலெங்கும் வியர்வை வழிய வழிய ‘சிட் அப்’ எடுத்துக் கொண்டிருந்தாள் சயனா.
ஒவ்வொரு முறையும் பின் நோக்கி விழும் போதும், முன்னோக்கி எழும் போதும், அத்தனை இலகு தன்மை அந்த உடலில். மற்றும் உடல் முழுவதும் ஒரு இறுகு தன்மையும் தெரிந்தது.
சட்டென்று அவள் அருகில் வந்து உட்கார்ந்தாள் ரேவ்.
விடாமல் ‘சிட்அப்’ எடுத்துக் கொண்டிருந்தாள் சயனா.
அவளைப் பிடித்து நிறுத்தினாள் ரேவ்.
“என்ன வேணும்?” – சயனா.
“நீ ஏன் இப்படி இருக்க… சொல்லு”
“கேஸ பத்தி நினைக்கிறேன். அத நினைச்சா இப்படித்தான் இருக்க முடியும்”
“அதான் சொன்னேல, யோசிச்சு கண்டுபிடிக்கலாம்னு. அப்புறம் என்ன சயனா”
“ம்ம், யோசிச்சேன். நான் கொரியர் ஆபீஸ் போயிருந்தேன்”
“சைதாபேட்? வேண்டாம்னு கிராஸ் பண்ண பிறகு ஏன் போன?”
“எனக்குத் தோணுச்சு, போனேன். கொரியர் ஆபீஸ்ல போயி அட்ரஸ் ஏதாவது கிடைக்குதான்னு பார்த்தேன்”
ரேவ் முகத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன கோபத்தின் ரேகைகள்.
“ப்ளீஸ், நான் சொல்றத புரிஞ்சுக்கோ. எனக்கு என்னமோ சைதாபேட்டைக்கும் கேஸுக்கும் ஏதோ கனைக்ஸன் இருக்குனு தோணுது”
“கொரியர் ஆபீஸ்ல போயி என்ன செக் பண்ண?”
“அதான் சொன்னேனே… அட்ரஸ்”
“ஒரிஜினல் அட்ரஸ் கொடுக்கிற அளவுக்கு அவன் முட்டாளா? இல்ல அவன் அட்ரஸ் கிடைக்கும்னு போன நீ முட்டாளா?” – அறிவான கேள்வி ரேவிடமிருந்து.
“…. “
“அட்ரஸ் கிடைச்சதா?”
“பேக் (fake) அட்ரஸ்”
“நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக, நான் சைபர் யூனிட்லஹேக்கர் லிஸ்ட் கூட வாங்கல தெரியுமா?”
“அதனால ஒரு யூஸூம் கிடையாது. அவன் ஒன்னும் பணத்தைத் திருடல. அவங்களைப் பழி வாங்கியிருக்கான்”
“எது, வரி கட்டறது உனக்குப் பழி வாங்கிறதா? இமெயில் ஐடி ஹேக் பண்றது ஓகே. பேங்க் அக்கவுண்ட்ல யூசர் நேம், பாஸ்வேர்ட் கூட ஓகே. டேக்ஸ் பே பண்றது அவ்வளவு ஈஸியில்ல சயனா”
சயனா நாடி நரம்பெல்லாம் ‘சிஐடி’ இரத்தம் பாய்ந்து யோசிக்க ஆரம்பித்தது.
“நல்லா யோசிச்சு பாரு, வரி கட்ட எவ்வளவு டாக்குமெண்ட்ஸ் தேவை. ஐடி, அட்ரஸ், பிஸ்னஸ் ப்ரூஃப் அப்படி இப்படினு எத்தனை தேவைப்படும். அதலாம் எப்படி சயனா கிடைச்சது” – ரேவ்.
சயனாவின் யோசனை தொடர்ந்தது.
“அதுவும் இல்லீகலா” – ரேவ்.
சயனா தீவிரமாக யோசித்துவிட்டு, “ஏன் இதலாம் இல்லீகலா கிடைக்கனும்னு நினைக்கிற ரேவ்? லீகலா கிடைச்சிருந்தா?” என்றாள்.
“என்ன சொல்ற சயனா? இதெல்லாம் லீகலா எப்படிக் கிடைக்கும்?”
“கிடைக்கும்னு நினைக்காத. யார்கிட்ட கொடுப்போம்னு யோசி”
“யார்கிட்ட… ம்ம்? நிறைய இடத்தில கொடுப்போம். ஈவன் செராக்ஸ் எடுக்கிற இடத்தில கூட கொடுப்போம்… அங்கயிருந்து திருடியிருப்பாங்களோ”
“நான் சொன்னது லீகலா”
“ஓகே… ஓகே… பாஸ்போர்ட் ஆபிஸ், கவர்மென்ட் டிபார்ட்மென்ட்ல, லைசென்ஸ் வாங்கிறப்ப… இப்படி நிறைய இடத்தில…”
“இப்போ கவர்மென்ட் டிபார்ட்மென்டையும் வரியையும் கனெக்ட் பண்ணு”
“இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்டா??”
“எ பிக் யெஸ்!!”
“எப்படிச் சொல்ற?”
“டேக்ஸ் பே பண்ணியிருக்கான்ல. அத வச்சுதான்”
“இதுல பழி வாங்கிறத எப்படி லிங்க் பண்ணுவ?”
“ஃபர்ஸ்ட் இந்த நாலு பேரும் எப்படி கனெக்ட் ஆனாங்க. அத யோசிக்கணும். இவங்க எல்லாருக்கும் டேக்ஸ் ஆபிசிலருந்து டேக்ஸ் டுயூ இருக்கு, கட்டுங்கனு இன்ஃபார்ம் பண்ணிருக்கணும். இவங்க அத கண்டுக்காம இருந்திருப்பாங்க.
சோ அடுத்து ஸ்டெப்-அ டேக்ஸ் ஆபிசிலருந்து இன்வாய்ஸ் அனுப்பிருப்பாங்க. அதயும் இவனுங்க கண்டுக்காம இருந்திருக்கணும். திரும்பத் திரும்ப ஃபாலோவ் அப் ரீமைண்டர் அனுப்பிருக்கணும்.
இது தனித்தனியா நடந்திருக்கலாம்!
பிஸ்னஸ்மேன் அமைச்சர்கிட்ட இத பத்தி பேசிருக்கலாம். இல்ல அமைச்சர் பேசிருக்கலாம். அமைச்சர் அவரோட அதிகாரத்தை யூஸ் பண்ணி டேக்ஸ் பே பண்ணாம எஸ்கேப் ஆக ட்ரை பண்ணிருக்கணும். அது முடியாம போனதால, அவர் போலீஸ, நியூஸ் பேப்பர இதுக்குள்ள கொண்டு வந்திருக்கனும்”
“போலீஸ்… நியூஸ் பேப்பர் எதுக்கு? எப்படி?”
“ஹேக்கிங் நடந்தத வச்சி சொல்றேன். ஏதோ ஒரு பர்டிகுலர் எம்பிளாய்தான் இந்த அமைச்சர், அவர் அதிகாரத்துக்கு அடி பணியாம இருந்திருக்கணும். அந்த எம்பிளாய் மேல, பொய்யா கம்ப்ளைன்ட் எடுக்க வைக்க. நியூஸ் பேப்பர், அத பப்ளிக்கிட்ட கொண்டு போக… ம்ம் இப்படி இருக்கலாம்ல?”
“இருக்கலாம்! அந்த நாலு பேர்கிட்டயும் போய்க் கேட்டா, அந்த இன்கம்டாக்ஸ் ஆபிஸர் பேரைச் சொல்லுவாங்கல”
“ஏற்கனவே என்னென்ன பண்ணாங்களோ? இப்ப நம்ம போய் கேட்டு, அவனுக்கு எதுவும் பிரச்சனை வந்தா” – ஹேக்கர் நலனுக்காக யோசிக்கத் தொடங்கியது சயனாவின் நாடி நரம்புகள்.
“இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்ல கேட்கலாமா?”
“சிரிப்பாங்க. நாமதான, அந்த நாலு பேரையும் பிரஸ்மீட் வச்சி டேக்ஸ் நாங்களே பே பண்ணோம்னு சொல்ல வச்சாச்சு. இப்ப போய் இதைப் பத்தி கேட்டா என்ன நினைப்பாங்க?”
“ச்சே” – இரண்டு நிமிடங்களின் கிண்டி இறக்கப்படும் ‘நூடுல்ஸாய்’ ரேவ்.
“இனி அவங்களைப்பத்தி நாம கம்ப்ளைன்ட் பண்ண முடியாது. அது நம்மளோட பெரிய வீக் பாய்ண்ட்”
“அப்போ இதுக்கு வேற வழியே இல்லையா?”
“இருக்கு! நியூஸ் பேப்பர்!!”
“என்ன சொல்ற?”
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏதாவது இன்கம்டாக்ஸ் ஆபிஸர் சஸ்பெண்டு இல்லனா டிஸ்மிஸ்னு பேப்பர்ல நியூஸ் வந்திருக்கானு பாரு”
“ம்ம்ம் சரி, அடுத்து?”
“கேஸ் போலீஸ்கிட்ட போகாது. பட் இது ரிலேட்டா வேற எதும் கேஸ்… அமைச்சர் கூட இருக்க போலீஸ் வேலை பார்க்கிற ஸ்டேஷன்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கானு பாரு. நியூஸ் முதல வந்த பேப்பர், இல்ல இந்த நியூஸ்ஸ ரொம்ப ஹைலைட் பண்ண பேப்பர்… இந்தப் பத்திரிக்கைகாரனோடதானு பாரு”
“அடுத்து?”
“என்ன அடுத்து? அவ்வளவுதான். அவங்கதான் ஹேக்கர். சீக்கிரம் கண்டுபிடிச்சி, பேர் என்னென்னு என்கிட்ட வந்து சொல்லு”
பெயர் தெரியாதவனை எப்படிக் காதலிப்பது… அதற்காகவா சயனா? இல்லை எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்காகவா?
“எதுக்கு?” – சந்தேகமாகக் கேட்டாள் ரேவ்.
“எத்தனை நாள்தான் பேர் தெரியாம ஹேக்கருனு சொல்றது. பேர் சொல்லிக் கூப்பிட வேண்டாமா” – கண்ணடித்துச் சொல்லி, ரேவைக் கலங்க வைத்தாள், சயனா.
இப்படி ரேவைச் சிந்திக்க வைத்துவிட்டு, சயனா ‘சிட்அப்’ செய்ய ஆரம்பித்து விட்டாள். அந்த நேரம் காதல் சொல்வதற்கென காதலாய் சயனா கைப்பேசி கூவியது. கையில் வழியும் வியர்வையைத் துடைத்தபடி எடுத்துப் பார்த்தாள்.
ஆறுதல் அதிர்ச்சியாய், அதில் தெரிந்தன ஆப்பிரிக்கா இலக்கங்கள். அதை ஆச்சரியத்துடன் ரேவிடம் காட்டினாள்.
உடனே “எடுத்துப் பேசு, எடுத்துப் பேசு” என்று நர்த்தனம் புரிந்தாள் ரேவ்.
“வெயிட்… வெயிட்” – காதலைக் காக்க வைத்தாள் சயனா.
“சீக்கிரம் சயனா”
காதலைக் காக்க வைத்தால், காதல் கிரகத்திற்குச் சென்ற பின்னர் கனகாம்பர பூஞ்சாட்டைக் கொண்டு சாட்டையடி தண்டனையாகத் தரப்படும் சயனா. – காத்திருக்கும் காதல் இப்படிச் சொல்கிறது.
“என்ன பேச?” – சயனா.
“கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லு” – காதல் கேட்கும் கேள்விக்கு காதலே பதிலாய் சொல் என்பது போல் சொன்னாள் ரேவ்.
ஒரு காதல் பெருமூச்சு எடுத்துக் கொண்டு, மெதுவாகத் தொடுதிரையின் பச்சைப் பொத்தான் அழுத்தப்பட்டது சயனாவால்.
இது அழைப்பிற்கான் ‘கீரின் சிக்னல்’ மட்டுமா? இல்லை, அழைப்பை ஏற்படுத்தியவனுக்குமா? சும்மா ஒரு கேள்வி!
“ஹலோ” – அழைத்தவன் சொன்னான்.
“ஹாய்… ஓகே ஓகே ஹலோ” – காதல் தடுமாற்றமா சயனாவிடம்?
“ஹாய், மைசெல்ஃப் மனோகர், ஒயில்டு லைஃப் போட்டோகிராபர் அன்ட கேமராமேன். காலிங் பிரம் ஆப்பிரிக்கா”
“ஓ, ஓக்கேஏ” – சயனா தொண்டையிலிருந்து வந்தன வார்த்தைகள்.
“உங்களைப் பத்தி சொல்லுங்க”
“நான் சயனா, சிஐடி ஆபிஸர்” – இதுவரை நாணேற்றிய வில்லாக சொல்லப்பட்ட வார்த்தைகள், இன்று நாணம் கொண்ட சொல்லாக வந்தது.
“உங்க ரிலேட்டிவ் சொன்னாங்க. நீங்க ஃபோன் பண்ணச் சொன்னீங்கனு” – வார்த்தைகள் விட்டுவிட்டு வந்து விழுந்து, அவளைத் தொட்டுத் தொட்டுச் சென்றன.
“ய்யேஸ், நான்தான் சொன்னேன்”
“என்ன திடீர் மாற்றம்?”
“அது அப்போ இருந்த சிச்சுவேஷன். எப்படி கரெக்ட்டா… எக்ஸாக்டா… காரணம் சொல்லனு தெரியல”
“ஓகே.. ஓகே.. ஓகே.. லீவ் இட்”
‘மாமா சொல்லித்தான் அழைத்திருப்பான். தனக்காகவும் இந்தச் சொந்தங்கள் உதவுமா?’ என்று சயனாவிடம் பெரிய அதிர்ச்சிதான்.
“என்ன பேச மாட்டேங்கறீங்க”
“இல்ல. ரிலேட்டிவ்ஸ், அந்த அளவுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணதில்ல. ஸோ, இப்ப பண்ணவுடனே…” – வார்த்தைகளை முடிக்காமல் சயனா விழுங்கினாள்.
“ஓகோ. அவங்க சொன்னாங்க அபௌட் யுவர் மதர். ரியலி ஸாரி பார் தேட்”
“பரவாயில்ல” – வாய்தான் இப்படிச் சொன்னது; சயனா மனம் பரிதவித்தது.
“பீல் பண்றீங்களா??”
“ம்ன்??”
“இல்ல, அம்மாவோட ஸடன் டெத் கஷ்டமா இருக்கானு கேட்டேன்”
“இப்ப வேற ஒரு கேஸ்ல லாக் ஆகியிருக்கேன். அது… அதனால.. அதனால… “
“ஓகே, எப்பவாது பீல் பண்ணா ஃபோன் பண்ணுங்க” – நானிருக்கிறேன், நீ தோள் சாய்ந்து அழுதிட என்று சொல்லாமல் சொல்லப்பட்டது.
“ம்ம்” – இதுவரை அழவேண்டும் என்று தோன்றியதில்லை. என்னமோ இப்போது அந்தத் தோளில் சாய்ந்து அழுதிடலாமோ என்று தோன்றியது சயனாவிற்கு.
காதல் சற்றுநேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, “கொஞ்சம் ரிலாக்ஸா பேசலாமா?” என்று கேட்டது.
“அப்படினா?!” – புரியாமல் கேட்டாள் சயனா.
“அப்படினா.. அப்படினா.. எப்படி சொல்றது. ஆங் எனக்கு ஒரு சிஐடி ஆபிஸர்கிட்ட என்கொயரி வந்த பீல்”
“சரி பேசுங்க” – கொஞ்சம் சிரிப்புடன் கலந்து வந்தது சயனாவின் பதில்.
“இதான், இந்த மரியாததான் சுத்தமா பிடிக்கல”
“சரி சொல்லு” – பொசுக்கென்று காதலுக்குத் தரப்படும் மரியாதை தரப்பட்டது.
“சூப்பர் ட்டேபீ”
“இது என்ன ட்டேபீ?”
“உன்ன செல்ல்லமா கூப்பிடறதுக்கு, இது ஓகேதான ட்டேபீ” – அந்த ‘ல’கரத்தில், அவன் கொடுத்த அழுத்தத்தில், இவள் வழுக்கி விழுந்தாள்.
“ட்டேபீனா என்னன்னு சொல்லு?” – இது சிஐடி ஆபிஸரின் ‘ஆர் & டி’ வேலை.
“டார்லிங்ல இருக்குற டிஏ-வ(da) எடுத்துக்கோ, பேபில இருக்கிற பிஐஈ-வ (bie) எடுத்துக்கோ”
“ம்ம்ம்”
“இப்ப ரெண்டையும் சேர்த்துக்கோ”
“ஓ ட்டேபீ… ட்டேபீ(dabie) “
“பிடிச்சிருக்கா?”
“ம்ம்ம், நல்லாருக்கு”
“உனக்கு ஏதாவுது எஸ்பெக்டேஷன், கன்டிஷன் இருக்கா ட்டேபீ? “
“ம்ம்ம், நிறைய இருக்கு மனோகர்”
“ஹலோ, இதென்ன அநியாயம். உனக்கு மட்டும் செல்லப் பேரு வேணும். எனக்கு வேண்டாமா? கம் ஆன் சொல்லு” – அநியாயத்தைக் கண்டால் பொங்கி எழுந்துவிடும் கூட்டம் போல பேசியது காதல்.
“திடீர்னு கேட்டா நான் எங்க போவேன்” என்றாள்.
இது காதல் கிரகங்கள் தாண்டிய நடிப்பு சயனா!! – இது காதல் சொன்னது.
“இது கடைல கிடைக்கிறதில்ல ட்டேபீ. காதல், கொஞ்சம் யோசி”
“யோசிச்சி நெக்ஸ்ட் டைம் சொல்லவா”
“ஓகே. இப்போ கன்டிஷன் சொல்லு”
“கன்டிஷன் நம்பர் ஒன், எனக்கு மார்னிங் வொர்க்அவுட் ரொம்ப முக்கியம். சோ அத டிஸ்டர்ப் பண்ணக்கூடாது”
“ஓகே.. குட் பார் ஹெல்த்.. பிட்நெஸ் மஸ்ட்… நெக்ஸ்ட் சொல்லு”
“செகன்ட், எனக்குக் கஞ்சிதான் போடத் தெரியும். அதைத் தவிர வேற எதுவும் சமைக்கத் தெரியாது”
“ஓகே, குட் பார் கிட்ச்சென். பிசுபிசுப்பு நோ… நெக்ஸ்ட்”
“தேர்ட் அன்ட் லாஸ்ட், டெய்லி நைட் கண்டிப்பா என்கூட பேசனும். அந்த டேல என்னென்ன ஆக்டிவிட்டீஸ் பண்ணேனோ, அதலாம் உன்கிட்ட சொல்லுவேன். அதைக் கேட்கனும்”
“வாவ்! குட் பார் அஸ் ட்டேபீ. நெக்ஸ்ட்”
“அவ்ளோதான்… லாஸ்ட்னு சொன்னேன்ல”
“இவ்வளவுதானா? சோ சிம்பிள்”
“உனக்கு இந்த மாதிரி கன்டிஷன் இருந்தா சொல்லு”
“எனக்கு எந்த ஒரு கன்டிஷனும் கிடையாது ட்டேபீ”
“ஆங், இது பொய்” – ‘வாலன்டியராக’ சென்று வம்பை வாங்கினாள் சயனா.
“நிஜமா ட்டேபீ, எனக்கு கன்டிஷன் எதுவும் கிடையாது. வேணா கபுள் கோல்ஸ் பத்திப் பேசலாமா?”
“கபுள் கோல்ஸா? அப்படினா?”
இலவசமாக காதல் உரையாடல்கள் கேட்ட ரேவிற்கு ஆச்சரியங்கள் – பேசிய கால் மணி நேரத்திலேயே கபுள் கோல்ஸ் பற்றிய பேச்சு!!? ராயல் என்பீல்டை விட வேகமாகப் போகிறதே பேச்சு!!
“நான் வேணா சொல்லவா?” – காதல் கிரகத்திலிருந்து குரல் வந்தது.
“அப்கோர்ஸ், தெரியாததைத் தெரிஞ்சுக்கலாம்ல”
“குட், காலையில எந்திரிச்ச உடனே உன்னோட ஃபர்ஸ்ட் வேலை என்ன?”
“இப்பதான சொன்னேன். ஜிம்ல வொர்க் அவுட் பண்ணுவேன்னு” – ‘மறவாதே என்னை’ என்ற அர்த்தத்தில் கூறப்படுகிறதோ?
“ஓகே என்ன வொர்க் அவுட் ரொம்ப பிடிக்கும்”
“சிட்அப்ஸ். இப்பதான் பண்ணிக்கிட்டு இருந்தேன்”
“ம்ம்ம்… எனக்கு புஸ் அப்”
“வாவ், சேர்ந்து வொர்க்அவுட் பண்ணனுமா?”
“என்னையச் சொல்ல விடு ட்டேபீ”
“ஓகே… ஓகே”
“புஸ்அப் பொஸிஸன்ல நான். எனக்கு எதிர்ல, ஸிட்அப் பொஸிஸன்ல நீ”
“ஓகே”
“ஒர்க் அவுட் பண்றப்ப, எப்ப நம்ம ரெண்டு பேரோட பேஸும் மீட் பண்ணுதோ, அப்ப ஒரு தரமான வாய் பூட்டிடும் முத்தம்!”
“அடச்சீ! வாயமூடு”
“எக்ஸாக்டிலி. அதேதான்… ட்டேபீ, யூ காட் இட்”
“ஏய்! சீ! நான் அதைச் சொல்லல. இனிமே நான் வொர்க் அவுட் பண்றப்ப, இந்த கண்றாவிதான ஞாபகத்துக்கு வரும்”
சொன்னது தப்பா? இல்லை, ஞாபகம் வருவது தப்பா சயனா? – காதல் கிரகத்தில் ‘தீபாவளி பட்டிமன்ற’ தலைப்பிற்கு உதவலாம் என்று காதல் தோள் குலுக்கியது.
“இது கண்றாவி இல்ல ட்டேபீ , காதல்”
“அய்யோ, வேற பேசிறியா? வெட்கமே இல்லையா உனக்கு?” – வெட்கத்தைப் பற்றி பேசி, சிஐடி ஆபிஸர் கோபப்பட்டது.
“நீ ரொம்ப வெட்கப்பட்டுற ட்டேபீ. மார்னிங் எந்தரிச்சதுலருந்து, நைட் தூங்கிற வரைக்கும் எத்தனை கபுள் கோல்ஸ் இருக்குத் தெரியுமா??”
ஓ! அது சிஐடி ஆபீஸரின் கோபம் இல்லை! சிஐடி ஆபிஸரின் வெட்கம்தான்!!
“ச்சேய், போதும்” – சயனா.
“இல்ல ட்டேபீ, இன்னும் இருக்கு. கிஸ் வித் மார்னிங் காஃபி… கிஸ் வித் ப்ரேக்பாஸ்ட் அன்ட்…”
“இப்ப நீ நிறுத்தலனா, நான் கால் கட் பண்ணிருவேன்”
இதைச் சொல்வதற்குப் பதில் அழைப்பைத் துண்டித்திருக்கலாமே சயனா?
“ட்டேபீ”
“ஃபஸ்ட் டைம் பேசற பொண்ணுகிட்ட, இப்படித்தான் பேசுவீயா? கொஞ்சம்கூட உனக்கு அறிவில்லையா?”
“ஹேய், கல்யாணம் பண்ண போற பொண்ணுகிட்ட வேற எப்படிப் பேசுவாங்க”
“யாரு கல்யாணம் பண்ணப்போறா?”
“நாமதான்”
“நான் சொன்னனா?”
“அப்புறம்”
“கல்யாணம் பண்றப்ப உன்னையக் கன்சிடர் பண்ணுவேன்”
“ஓ, கன்சிடர் பண்ணறவன்கிட்ட இத்தனை கன்டிஷன் போடுவியா நீ?”
“ஆமா”
“அப்ப நானும் கல்யாணம் பண்ணப் போற பொண்ணுகிட்ட, இப்படித்தான் பேசுவேன்” என்று அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
அழகான காதல் காட்சியில் ‘அன்வான்டடாய்’ வந்து போன ‘என்னவோ ஒன்று’.
அவனிடம் என்ன பேசவென்று தெரியாமல் பேச ஆரம்பித்து, என்னவெல்லாமோ பேசிவிட்டு இப்பொழுது எண்ணமெல்லாம் அவனாய்! – இது சயனா நிலை.
நிமிர்ந்து பார்த்தப் பின்னர்தான் தெரிந்தது, அந்த அறையில் இன்னொரு ஜீவனும் இருக்கிறது என்று!
“ரேவ், பாரு இப்படிப் பேசறான்னு”
“அவன் பேசறது இருக்கட்டும். நீ ஏன் இப்படிப் பேசின?”
“நான் என்ன பேசினேன்?”
“நீ, எதை மனசில வெச்சுக்கிட்டு இப்படிப் பேசினேன்னு தெரியும்”
“புரியல ரேவ்”
“ஏன் கன்சிடர் பண்றேன்னு சொன்ன? அம்மா ஆசையே உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கிறதுதான”
“பேசிப் பார்க்க வேண்டாமா, ரேவ். அதுக்கு முன்னாடி எப்படிக் கல்யாணம் பண்ண முடியும்”
“நீ கன்சிடர்ங்கிற வார்த்தைய, வேற எதயோ மனசில வச்சிக்கிட்டுச் சொல்றீயா சயனா?” – எத்தனை வாய்தா வந்தாலும் என் வாதம் இதுதான் என்றபடி ரேவ்.
“ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்ல”
அந்தக்கணம் ஆழ்மனதைச் ஆண்டு கொண்டிருந்த ஹேக்கரின் அலப்பறைகள், ‘ஆற்றிலே அலையாய்’ அவளுள் ஆர்ப்பரித்தது!
மறுபடியும் அழைப்பு வந்தது. அதே, அதே ஆப்பிரிக்கா இலக்கங்கள். அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ” – சயனா.
“ஹலோ”
“ம்ம்ம் ” – இதன் பொருள் ‘சொல்லித் தொலை’ என்று அறிக.
“சாரி ட்டேபீ, நான் கொஞ்சும் ஓவரா போய்ட்டேன்”
“ம்ம்ம்”
“ரீயல்லி சாரி ட்டேபீ”
“சரி”
“உனக்கு என்னோட போட்டோ பார்க்கனும்னு தோணலையா?”
“தோணல” – அவன் கேள்விக்குள் என்ன விஷமம் ஒளிந்து கொண்டிருக்கிறதோ என்ற பயத்தில், இந்தப் பதில் சயனாவிடமிருந்து.
“ட்டேபீ, தோணிச்சுனா என்னோட பிளாக்ஸ்பாட்ல இருக்கு. பாரு. பார்த்துட்டுச் சொல்லு”
“சரி”
“சரி, உன்னோட போட்டோ அனுப்பு”
‘ம்கும் இதுக்குத்தான இவ்வளவும்’ – மனதில் நினைத்தபடி, “ஒரு நிமிஷம்” என்று கைப்பேசி ஹோல்டு-ல் போட்டுவிட்டு ரேவிடம் தந்து, “என்னைய ஒரு போட்டோ எடு” என்றாள் சயனா.
“ஒர்க் அவுட் முடிச்சிட்டு இருக்க சயனா… அதோடவா”
“ஆமா இப்படித்தான், போட்டோ எடு”
போட்டோ எடுக்கப்பட்டது. உடனே அனுப்பவும்பட்டது.
மறுபடியும் அலைபேசியில்… “போட்டோ வந்திச்சா?” – சயனா கேட்டாள்.
“ம்ம்ம்.. அன்ட் நீ எப்படி இருக்கன்னா?”
“வேண்டாம்!” – இவ்வளவு நேரம் அவனிடம் பேசிய அனுபவத்தில் சொன்னாள்.
“சரி, ட்டேபீ உன் இஷ்டம்”
“தேங்க்ஸ்”
“லவ்ல தேங்க்ஸ், ஸாரி சொல்லக்கூடாது”
“லவ்லதான, இது லவ் இல்ல”
“சயனா”
முதன் முறையாக பெயரைச் சொல்லி அழைத்தான். அது அவள் மனதை என்னவோ செய்தது. மூளைக்கு வேலை கொடுப்பவனை விட, மனதிற்கு வேலை கொடுப்பவனே மணவாளன். சரிதானே?!
“ஸாரி சயனா”
“நீ மட்டும் ஸாரி சொல்ற” – சக்கைப்போடு போட்ட சயனாவின் சாம்ராஜ்யம் காதலால் கைப்பற்றப்பட்டது.
“இதலாம் சொல்லு, ஆனா கன்சிடர்தான் பண்ணுவ. ட்டேபீ, நீ வேணா என்னய கன்சிடர் பண்ணிக்கோ. பட், நான் உன்னய கல்யாணம் பண்ணிக்கிறேன்”
“ஏய், திருந்தவே மாட்டியா!?”
காதலைத் திருந்தச் சொல்வது நியாயமே இல்லை சயனா!!
“பை ட்டேபீ, லவ் யூ ஸோ மச்” என்று சொல்லிதான் அலைபேசியை வைத்தான்.
காதல் திருந்தவில்லை போல!
அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சயனா ‘அர்ச்சனையை’ ஆரம்பித்தாள்.
ரேவ் மனக்குரல் – ஹேக்கருக்கு ‘டஃப்’ கொடுக்க ஒருத்தன் வந்துட்டான் என்றே!!
ஓசையாய் வந்த அவனது ஆசைக்கு, சயனா ‘பூசை’ செய்து கொண்டிருந்தாள்.
இதழ்கள் திட்டித் தீர்த்தன – ஆனால்
இதயம் என்னவோ தித்தித்தது!!
