Kathambari Novels
பொழுது புலர்ந்தது!
அன்றைய விடியலின் போதே ஏதோ இனம் கண்டறிய முடியாத இன்னலை உணர்ந்தாள் சயனா. இருந்தும் அன்றாடப் பணிகளைச் செய்யத் தவறவில்லை.
எல்லாம் முடிந்ததும் அம்மாவின் தேவைகளைக் கவனிப்பதற்காகப் போனாள். சமையலறைச் சென்று வழக்கம் போல கஞ்சி தயாரிக்க ஆரம்பித்தாள்.
அரைமணி நேரத்திற்குப் பின்னர்!
வீட்டு அழைப்பு மணி ஓசை கேட்டது. ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் சயனா. அங்கே நின்ற ரேவை ஓய்ந்து போனப் பார்வையுடன் பார்த்தாள்.
“என்ன சயனா? காலையிலே ஃபோன் பண்ணி வரச் சொல்லிருக்க. என்ன விஷயம்?” – சயனா பார்வை தந்த பதிலை வாசித்திருந்தாலும், பதற்றத்துடன் வார்த்தையாகக் கேள்வி வந்தது ரேவிடமிருந்து.
பதில் சொல்ல முடியாமல் சயனா நின்றாள்.
“சொல்லு சயனா”
“ரேவ், அங்க … அங்க …” என்று தாயாரின் அறையைக் காட்டினாள்.
நிற்காமல் பல படிக்கட்டுகள் ஏறிய போது வாங்காது மூச்சு, இப்போது பலமுறை வாங்கியது சயனாவிற்கு!
“ரேவ், அம்மா எந்திரிக்க மாட்டேங்கிறாங்க. நான் நிறைய தடவை எழுப்பிப் பாத்துட்டேன். அப்புறமும் எந்திரிக்கவே இல்ல”
இப்படி நடக்கும் என்று தெரியும்தான்! ஆனால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள என்றுதான் தெரியவில்லை இருவருக்கும்!!
“நீ இங்க இரு, நான் உள்ளே போய் பார்த்துட்டு வரேன்” என்று அவசர அவசரமாக சயனாவின் அம்மா அறைக்கு விரைந்தாள் ரேவ்.
ரேவ், அங்கிருந்து போனதும் தனித்து விடப்பட்டது போல் உணர்வு சயனாவிற்கு. ரேவைப் பின்தொடர்ந்தாள்.
இதயத்துடிப்பைக் காட்டும் கருவி வேலை செய்யவில்லையா? இல்லை, இதயமே வேலை செய்யவில்லையா? சற்றுநேரம் ரேவ் அரக்கப்பரக்க பார்த்தாள். ஆனால் அவள் முகத்தோற்றமே சொன்னது அந்தச் சோகச் செய்தியை.
“என்ன ரேவ்… இனிமே எந்திரிக்க மாட்டாங்களா?”
“சயனா… ” – அதற்கு மேல் பேச முடியாமல் நின்றாள் ரேவ்.
“ம், எந்திரிக்க மாட்டாங்க” – உணர்வுக் குமியலான விரக்திப் புன்னகையுடன் சொன்னாள். “தெரிஞ்சிருச்சி” – ஆள்காட்டி விரலால் நெற்றியில் தட்டியபடி பேச்சைத் தொடர்ந்தாள். “ஆனா இப்பதான் நிம்மதியா இருக்கு ரேவ்” என்றாள் உள்ளங்கையால் இதயம் இருக்கும் இடத்தை தேய்த்துக் கொண்டே.
ரேவ் முகம், ‘ஏன் இப்படிப் பேசற?’ என்ற கேள்வியுடன் கண்ணீர் சிந்தியது.
“இனிமே அம்மாவும் கஷ்டப்பட வேண்டாம். நானும் அவங்க கஷ்டப்படுறதப் பார்க்க வேண்டாம். அதான் நிம்மதினு சொன்னேன்”
ரேவின் விழிநீர் வழிந்து வருத்தத்தைக் காட்டின.
“ஆனா ரேவ், இது தெரியாம நான் அவங்களுக்கு சமைச்சி வேற வச்சிருக்கேன் “
“சயனா”
“அவ்வளவும் வேஸ்ட் ஆயிரும், இல்ல ரேவ்”
“…. “
“சரி ரேவ், நான் ஆபீஸ் போறேன்” என்று திரும்பி வெளியே செல்லப் போனாள்.
“சயனா, இப்படிப் பண்ணாத ” – முற்றிலும் உடைந்து போயிருந்தது ரேவ் குரல்.
திண்டாடித் திரும்பினாள் சயனா.
“வாழவேண்டிய வயசுல அம்மா சரியா வாழல ரேவ்” – வார்த்தைகள் வருத்தமாக வந்தன சயனாவிடமிருந்து.
“எனக்காக, என்னய படிக்க வைக்கறதுக்காக, எனக்கு சாப்பாடு போடறதுக்காக வேல செஞ்சி செஞ்சி, அவங்க உடம்பைக் கெடுத்துக்கிட்டாங்க” – வருத்தங்கள் கோபமாக மாறின.
“நான் கேட்டனா ரேவ்? வீட்டு வேலை செஞ்சி, என்னையப் படிக்க வையின்னு. ஆங், சொல்லு ரேவ் நான் கேட்டனா?” – சயனா கோபம் அதிகமாயின.
“ஒரு ரெண்டு வீட்டில பாத்திரம் தேய்க்கிறத நிறுத்தியிருந்தா கூட இன்னும் கொஞ்ச நாள் என்கூட வாழ்ந்து இருப்பாங்கல ரேவ்” – கோபங்கள் சட்டென்று ஏக்கமாய் மாறின சயனாவிற்கு.
“பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாமே கஷ்டத்தில, ரேவ். அதனால்தான் இந்த வீட்ட வாங்கி, அவங்கள சந்தோஷமா வச்சிருக்க நினைச்சேன். ஆனா இங்கயும் வந்து கஷ்டப்பட்டுக்கிட்டு… ச்சே”
ஆறுதல் வார்த்தைகள் இன்றி நின்ற ரேவின் பார்வை, ‘போதும் சயனா’ என்று யாசித்தன.
“ரேவ், இனிமே டெய்லி நைட் யாரு கூட பேசுவேன். யார் இருக்கா சொல்லு?”
இதைக் கேட்ட பின் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் ரேவ். “இவ்வளவு நேரம் புத்தியோட புலம்புறனு நினைச்சேன். அதான் எதுவும் பேசாம இருந்தேன். ஆனா இப்ப புத்தியில்லாம புலம்பற”
சயனாவின் புத்தி ரேவிடம் கேள்வி கேட்டு நின்றது.
“என் முன்னாடி நின்னுகிட்டு, எனக்கு யாரு இருக்கான்னு நீ கேட்பியா? சொல்லு சயனா கேட்பியா?”
“இல்ல ரேவ், அப்படியில்ல”
“உனக்கு அழனும்னு தோணுச்சினா புலம்பி அழுதிடு. ஆனா இப்படிப் பேசாத”
“நான் அழறதால திரும்பி வந்திடவா போறாங்க” – உடல், உயிர், உள்ளம், உதடு மற்றும் உதிர்த்த வார்த்தைகள் என அத்தனையும் துடித்தன சயனாவிற்கு.
“அழறதால இறந்தவங்க திரும்ப வர போறதில்லை, இழப்புகளைச் சரிகட்ட முடியாதுதான். ஆனா இதயத்தைச் சரியாக்கலாம்”
“எனக்கு அழ வரல ரேவ்”
“சரி அழ வேண்டாம். நீ போய் உட்காரு. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்”
போகாமல் நின்று சயனா அம்மாவைப் பார்த்தாள்.
“அதலாம் நான் பாத்துக்குறேன். என்ன பண்ணனுமோ, அதை நான் செய்யறேன்”
“இல்ல ரேவ்”
“பேசாம வெளிய போய் உட்காரு” என்ற ரேவ், சயனாவை அந்த அறையிலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தாள். வரவேற்பு அறையில் இருந்த சோபாவில் உட்காரவைத்தாள்.
பின் கைப்பேசியை எடுத்து யாரையோ அழைக்க எத்தனித்தாள்.
“யாருக்கு ஃபோன் பண்ணப் போற?” – சயனா.
“அப்பா அம்மாக்கு கால் பண்ணி வரச் சொல்லப் போறேன்”
“வேண்டாம்”
“ஏன்?”
“வேண்டாம்னா விடேன்”
“அவங்க வந்து கேட்டா?”
“நான் சொல்லிக்கிறேன்”
“சரி” என்று மீண்டும் யாரையோ அழைக்கப் போனாள்.
“இப்ப யாருக்கு?”
“கனகா மேம்கிட்ட சொல்லனும்ல. அவங்ககிட்ட கூட சொல்லக்கூடாதா?”
“சரி சொல்லு”
கனகா மேமிடம் விடயம் தெரிவிக்கப்பட்டது.
“சயனா, உன்னோட சொந்தக்காரங்க யாருக்காவது சொல்லனுமா?”
“சொந்தக்காரங்களா? அப்படி யாரும் இருக்கிறாங்களா?”
“இல்ல சயனா, இதெல்லாம்…”
“விடு ரேவ். நாங்க கஷ்டப்படுறப்ப கவலைப்படாதவங்க… இப்போ நான் கவலைப்படறத பார்த்து கஷ்டப்படவா போறாங்க?”
விட்டுவிட்டாள் ரேவ்!
சிறிது நேரத்தில் கனகா மேம் வந்துவிட்டார். சயனா அருகில் வந்து அமர்ந்தவர், அவளை விட்டு அகலவேயில்லை. அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து, சயனாவின் தாயார் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
கனகா மேமும், ரேவும் முன்னின்று முறைப்படி எல்லா காரியங்களையும் செய்தனர். எதிலும் கலந்து கொள்ளாமல் கலங்கிப் போய் நின்றாள் சயனா.
எல்லாம் முடிந்தபின் இருவரும் சயனாவிடம் வந்தனர்.
“எனக்கு டூ டேய்ஸ் டைம் கொடுங்க மேம். அப்புறமா கேஸ் பத்தி யோசிக்கிறேன்” – சயனா.
“டேக் யூவர் ஓன் டைம் சயனா”
“பட், என்னால முடியலனா வேற யார்கிட்டயாவது கேஸ கொடுத்திடுங்க”
“அதலாம் அப்புறம் பார்த்துக்கலாம். பட் கண்டிப்பா உன்னால முடியும்”
“என்னால முடியும்னு எனக்குத் தெரியும். ஆனா இப்போ முடியுமான்னு தெரியல. அதனாலதான் சொன்னேன் மேம்”
கண்களில் கண்ணீர் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தாள் ரேவ்.
“மேம், இவளை மட்டும் அழாம இருக்க சொல்லுங்க” – சயனா.
“ஏன் ரேவ். அவளே தைரியமா இருக்கா. நீ ஏன் இப்படிப் பண்ற? ” – மேம்.
“மேம், அவ ஒன்னும் தைரியமா இல்ல. சும்மா நடிக்கிறா” என்றாள் ரேவ்.
ரேவ் சொல்வது உண்மை. அந்த உண்மை சுட்டது சயனாவிற்கு.
“சரி ரெண்டு பேரும் வீட்டுக்குப் போய் தனியா இருக்க வேண்டாம். இன்னைக்கு என்னோட வீட்டுக்கு வந்து தங்கிக்கோங்க”
“அதெல்லாம் தேவையில்லை மேம்” – சயனா.
“இங்க பாரு சயனா, மத்த நேரத்துல நீ சொன்னதைக் கேட்பேன். ஆனா இந்த நேரத்துல முடியாது”
‘நான் உங்களது தலைமை’ , ‘நீங்கள் எனக்கு கீழே வேலை செய்பவர்கள்’, ‘நான் உங்களைவிட வயதில் மூத்தவர்’ என்று பல விடயங்கள் அடங்கி வந்த அவரது குரல், அவர்களை ‘சரி’ என்று சொல்லவைத்தது.
தன்னுடன், தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார், கனகா மேம். அன்று அவர்கள் இருவரையும் தனது ப்ரத்யேக கவனிப்பில் வைத்துக்கொண்டார்.
இரவு உணவிற்குப் பின் சயனா தூங்கச் சென்றுவிட்டாள்.
சாப்பாடு மேசையில் கனகா மேமும், ரேவும்…
“கேஸ் டிடெயில்ஸ் சொல்லு ரேவ்”
“அக்கவுண்ட் ஹேக் பண்ண நைட்ல நாலு பேருக்கும் பேங்க்ல இருந்து அனுப்புற மாதிரி ஒரு மெசேஜ் லிங்கோட வந்திருக்கு. ‘யாரோ உங்க அக்கவுன்ட்ல லாகின் பண்ணிருக்காங்க, கம்பளைண்ட் பண்ண இங்க கிளிக் பண்ணுங்க’-னு”
“மெசேஜ் ஃபோன்ல வந்ததா? இல்ல மெயில்லயா?”
“மெயில்ல மேம்” என்றவள், “லிங்கை கிளிக் பண்ண உடனே, அது வேறொரு பேஜுக்கு போயிருக்கு. அந்தப் பேஜை, கொஞ்சம்கூட சந்தேகம் வராத மாதிரி பேங்கோட ஹோம் பேஜ் மாதிரி டிசைன் பண்ணிருக்காங்க. அங்க பேங்க் லாகின் பண்றதுக்காக யூசர் நேம், பாஸ்வேர்ட் கேட்டிருக்கு.
பேக் பேஜ் (fake page)-னு தெரியாமா டிடெயில்ஸ் கொடுத்திருக்காங்க. யூஸர் நேம், பாஸ்வேர்டு கிடைச்சா ஈசியா பேங்க்லருந்து காசு எடுத்திடலாம்ல”
“பட் ரேவ், இங்க மணி டிரான்ஸ்பர் நடந்திருக்கு… டேக்ஸ் பேய்மென்ட் பண்ணிருக்காங்க. அப்போ ஒன் டைம் பாஸ்வேர்ட் (One Time Password) தேவைப்படும் இல்லையா?”
“வந்திருக்கு மேம். போனுக்கும்… ஈமெயில் ஐடிக்கும்”
“அமைச்சருக்கும் தொழிலதிபருக்கு ஈமெயில் ஐடி… போலீஸூக்கும் ரிப்போட்டருக்கும் ஃபோன்ல”
“OTP வர்றப்போ அலர்ட் ஆகலையா…?”
“அவங்க அலர்ட் ஆகிற நேரத்துக்குள்ள… டேக்ஸ் பேமென்ட் நடந்திருக்கு மேம். ஃபோன், இமெயில் ஐடி ஹேக் பண்ணிருக்காங்க. இனி அத யூஸ் பண்ணாதீங்கனு இன்ஃபார்ம் பண்ணிட்டேன்”
“ம்ம்ம்… நாலு பேருக்கும் ஒரே பேங்கலயா அக்கவுண்ட் இருக்கு?”
“நோ மேம். வேற வேற பேங். ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி phishing mail வந்திருக்கு. இந்த நாலு பேர்லயும் போலீஸூம் ரிப்போர்ட்டரும் மட்டும்தான் அவங்களா லாகின் பண்ணிருக்காங்க. அமைச்சருக்கும், பிசினஸ்மேனுக்கும் அவங்க அவங்க பீஏ பண்ணியிருக்காங்க”
“ம்ம்ம்”
“மெசேஜ் எந்த நம்பர்லருந்து வந்ததுனு பார்க்கிறேன்… IP ட்ரேஸ் பண்ணி சோர்ஸ் ஐடென்டிபை பண்ண டிரை பண்றேன்”
“அதான கஷ்டம். ஹேக்கர் டிராக் பண்ணுறது ஈஸி இல்லயே… சரி ரேவ். போ போய் தூங்கு. ரெண்டு நாளைக்கு அப்புறம் கேஸ கன்டினியூ பண்ணலாம்”
“ஓகே மேம்”
“சயனாகிட்ட டிடெயில்ஸ் சொல்லு. பட் அவ இந்த ஆங்கிள்ள கொண்டு போக மாட்டான்னு நினைக்கிறேன். பார்க்கலாம்… குட் நைட்”
“குட் நைட் மேம்”
சயனா தூங்காமல் இருந்தாள். பகல் பொழுதுகளில் வெறும் பாறாங்கல்லாய் கனத்த இன்னல்கள் அனைத்தும் இரவில் இமாலய கனம் கனத்தது.
வெளிச்சத்தில் கண்ணாமூச்சி ஆடிய கவலைகள், இரவில் கண்முன்னே வந்து நின்று உறக்கத்தைப் பார்க்க விடாமல் தடுத்தது.
அவளது கண்கள் அழவில்லை. ஆனால் இதயம் அழுதது.
இரண்டு நாட்களுக்குப் பின், ஒரு ரெஸ்டாரன்ட்டில்…
அம்மாவாசை இருளில் ஒற்றைத் தீபத்தின் ஒளி எந்தளவு வெளிச்சம் தர முடியுமோ, அந்த ஒளி வறட்சியின் தன்மையில் அமைக்கப்பட்டிருந்தது.
பஞ்சுப் பொதியாய் போடப்பட்டிருந்தன இருக்கைகள். அதில் ஒன்றில் ரேவ் மற்றும் சயனா.
சயனா முகத்தில் எப்போது இருக்கும் தெளிவு தெரியாததால், ரேவ், தன்னைத் தெம்பாக உணர முடியாமல் இருந்தாள். “சயனா” என்றாள் மெதுவாக.
“ம்” என்று சுருக்கென்று சூழல் உணர்ந்தாள் சயனா.
“என்ன யோசிக்கிற?”
“நத்திங்”
“இல்ல, ஏதோ இருக்கு”
“அதலாம் ஒன்னும் இல்ல ரேவ்”
“ஒழுங்கா சொல்லு” – சயனாவிற்கு அம்மா நினைவோ என்ற அச்சத்தில் ரேவ் குரலில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அம்மாவை நினைத்து உள்ளுக்குள் வாடுகிறாள்தான். ஆனால் இப்போது அவள் யோசனை வேறு. “அந்த ஆப்பிரிக்கா பையன பத்திதான் யோசிக்கிறேன்”
“அவனுக்குப் பேர் இருக்கு. மனோகர்னு சொல்லு” – ரேவ் அவளைத் திருத்தினாள்.
“சரி… மனோகர் பத்திதான் யோசிக்கிறேன்”
“ஏன்? என்ன திடீர்னு?”
“இப்படி நடக்கிறதுக்கு முந்தின நாள் நைட்டு அம்மா சொன்னாங்க, மனோகர நான் கல்யாணம் பண்ணா அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமாம்”
சயனா எண்ணத்தில் ‘எவனோ ஒருவன்’ என்றதும் ரேவ் கொஞ்சம் மகிழ்ந்தாள். ‘இவள், அம்மாவுக்காக அவனைப் பத்தி பேசறா’ என்றதும் தளர்ந்தாள்.
“இதுவரைக்கும் அம்மா சந்தோஷமா இருந்து நான் பார்த்ததே இல்லை. திடீர்னு அந்த மாதிரி சொன்னதும் ஒரு மாதிரி ஆயிடுச்சு”
“நீ மட்டும் அந்தப் பையன கல்யாணம் பண்ணா, அம்மா ரொம்ப சந்தோஷப் படுவாங்க” – ரேவின் அந்தப் பேச்சு, ‘எனக்கும் அதுதான் சந்தோஷம்’ என்று சொன்னது. “சரி சொல்லு, எப்ப மனோகரோட பேசப் போற?”
“பேரு மனோகர்னு தெரியும். ஆப்பிரிக்கால இருக்கான். கேமராமேன், போட்டோகிராபர். ஆனா இதைத் தவிர எனக்கு வேறு எதுவுமே தெரியாது”
“நீ இன்ட்ரெஸ்ட் எடுக்கலைனு தெரிஞ்சதும் நானும் எதும் கண்டுக்கல. நிஜமாவே சொல்றயா சயனா, வேற எதுவுமே தெரியாதா?”
“ம்கும், தெரியாது”
“அவனோட ஃபோன் நம்பர்”
“ம்கூம், தெரியாது”
“அவன் வேல பார்க்கிற இடம். ஐ மென்ட் சேனல் நேம்”
“ம்கூம்”
“அவனோட ரெசிடெண்ட் அட்ரெஸ்”
“ப்ச் தெரியாது ரேவ்”
“பெர்பெக்ட் சயனா”
“வ்வாட்?!?”
“இத்தனை ‘தெரியாது’ சொல்ற பார்த்தியா? அதான் லவ் பண்றதுக்கு பேசிக் குவாலிபிகேஷன்” – காதல் ‘டிகிரி ‘ வாங்கியவள் போல் இருந்தது ரேவின் பேச்சு.
“அப்படிப் பார்த்தா அந்த ஹேக்கர் யாருன்னு தெரியாது. பெயர் தெரியாது. ஊர் தெரியாது. எங்க இருக்கான்னு தெரியாது. அதுவும் குவாலிபிக்கேஷனா, நீ சொல்ற மாதிரி லவ் பண்றதுக்கு” என்று கேட்டாள் சயனா.
காதலின் தகுதிகள் பற்றிப் பேசும் போது, சம்பந்தப்பட்ட நபருக்கு யார் ஞாபகத்திற்கு வருகிறார்களோ, அந்த ‘யார்’ தானே, அந்த நபருக்கு ‘யாதும்’?!
“நீ ஏன் இப்படிப் பேசற? அது ஹேக்கர் அவ்வளவுதான். ஆணா? பெண்ணா? அப்படினு நமக்குத் தெரியாது. நீயா ஏதாவது கற்பனை பண்ணாத”
“ஸாரி, டக்குன்னு மைன்ட் அந்த ஹேக்கரோட கனெக்ட் ஆயிருச்சி”
சிந்தனை, அந்த ‘ஹேக்கருடன்’ சிக்கிக் கொண்டது என்பதுதானே இதன் பொருள்? இல்லை வேறு எதுவுமா?
ரேவின் முகத் தெளிவின்மையைப் பார்த்த சயனா, “ஹே, மைன்டுதானு சொன்னேன். மனசுனா சொன்னேன்” என்று மேலும் அவளைக் குழப்பினாள்.
“உன் மனசு மனோகருக்கு மட்டும்தான், சரியா?” – சிறுபிள்ளை அடம்பிடிப்பது போல் சொன்னாள் ரேவ்.
உற்ற தோழியே என்றாலும், ‘இவன்தான் உன் உரியவன்’ என்று சொல்லும் உரிமை கிடையாதல்லவா? – பொதுவான கருத்து. இரு தோழிகளுக்கும், இது என்றுமே கருத்தில் வராது.
“இங்க பாரு ரேவ், இவனா… அவனா? அப்படிங்கிற டிபேட்டுக்குப் போகாத”
“திரும்பவும் நீதான் சொல்ற. அந்த ஹேக்கர், அவனாவும் இருக்கலாம் அவளாவும் இருக்கலாம்”
“வேற பேசிறியா” என்றாள் சலிப்புடன் சயனா.
“அம்மாக்கு இந்த அலையன்ஸ் எப்படித் தெரியும்?”
‘விடமாட்டியா’ என்பது போல் சயனாவின் பார்வை இருந்தது.
“சொல்லு… “
“சொந்தக்காரங்க சொன்னாங்கன்னு சொன்னாங்க”
“அது யாருனாவது தெரியுமா? இல்ல அதுவும் தெரியாதா?”
“நீ ஏன் இவ்வளவு அவசரப்படுற. இதைப் பத்தி நான் எந்த முடிவும் எடுக்கல”
“ஏன்?”
“நானா எதுவும் இன்ஷியேட் பண்ண பிடிக்கல”
“அவ்வளவுதான, இன்னும் ரெண்டு நாள்ல மனோகர உன்கிட்ட பேச வைக்கிறேன்”
“போதும். ஹேக்கிங் பத்தி டீடெயில்ஸ் கண்டுபிடிச்சியா? அதைச் சொல்லு”
“எந்த உலகத்தில இருக்க? பப்ளிக் ப்ளேஸ்ல வச்சிப் பேசற விஷயமா இது?”
“அஹெயின் ஸாரி”
சயனாவின் அத்தனை ‘ஸாரி’களும் ரேவிற்கு உணர்த்தியது ஒன்றுதான். அது, அம்மாவின் இழப்பால் சயனாவிற்குள் உண்டாகியிருக்கும் சங்கடங்கள்.
இந்தக் கணம் கஃபே சிப்பந்தி ஒரு டிரேயைக் கொண்டுவந்து வைத்து விட்டுச் சென்றார். ட்ரேயில் ஒரு காஃபி கோப்பை, ஒரு கிண்ணத்தில் சக்கரை வில்லைகள். ஒரு சிறிய தேக்கரண்டி இருந்தது.
கோப்பையை எடுத்து ஒரு மிடரு வைத்தவள் சிப்பந்தியைத் திரும்பவும் அழைத்தாள்.
“இப்ப எதுக்கு அவரைக் கூப்பிடுற” – ரேவ் கேட்டாள்.
“ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்ச விஷயம், கேட்டுக்கிறேன்”
“என்ன கேட்கப் போற?”
அதற்குள் சிப்பந்தி அவர்கள் மேசை அருகில் வந்து நின்றார்.
“காஃபில சுகர் இல்லை” என்றாள் கடுப்பான குரலில் சயனா.
‘இதுதான் இன்னைக்கா?’ என்பது போல் ரேவ் இருந்தாள்.
“மேம், சுகர் க்யூப்ஸ் ஆர் அவைலபிள் ஹியர். யூ கேன் யூஸ் தெம்” – வெண்ணையைப் போல் மென்மையுடன் சிப்பந்தியின் குரல் வந்தது.
“புரியல”
“சுகர் டேபிள்ல இருக்கு. எவ்வளவு வேணுமோ அவ்வளவு போட்டு கலக்கிக்கோங்க”
“அத செய்ய முடிஞ்சா, வீட்லே நான் செஞ்சிருக்க மாட்டேனா? இங்கே ஏன் வரப் போறேன்?” – கடுப்பு கொஞ்சம் கத்தலாக மாறியிருந்தது.
“இல்ல மேம், இங்க இப்படித்தான்” – சிப்பந்தியின் குரலில் சிறு சீற்றம் இருந்தது.
அந்தக் கத்தலைக் காணத் தயாராகினர் வாடிக்கையாக வேடிக்கைப் பார்க்கும் மனிதர்கள்.
“சயனா, எல்லாரும் பார்க்கிறாங்க. ப்ளீஸ் உட்காரு” – தோழியை வேடிக்கைப் பொருளாகப் பார்க்க விரும்பாத ரேவ், அவளை அடக்கப் பார்த்தாள்.
“இல்லே ரேவ், பத்து ரூபாய் கொடுத்தாலே, நுரை பொங்க காஃபி போட்டு, கைல கொடுக்கறானுங்க. இவனுங்க நூறு ரூபா வாங்கினது மட்டுமில்லாமல், நூதனமாய் நம்மளயே காஃபி போடச் சொல்றானுங்க”
நியாயம்தான். ஆனால் நயமாக உணரப்படவில்லை, சூழ இருந்த சுற்றத்தாரின் முகச்சுளிப்பில்.
அதற்குள் மேனேஜர் வந்திருந்தார்.
“வாட் ஹேப்பண்ட்? வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்?” என்றார், ‘அதே கோட்’ இல்லை ‘அந்த கோட்’ போட்ட மனிதர்.
‘மறுபடியுமா’ என்று நினைத்தவாறு, “ஐ பிரிஃபர் காஃபி வித் சுகர். வில் யூ கெட் மீ சம்” என்றாள்.
“ஸுர் மேம்” என்றார்.
பின் அவர் சிப்பந்தியிடம் திரும்பி, அதற்கானக் கட்டளைகளைப் பிரப்பித்தார். அதன் பிறகே சயனா சாந்தமானாள்.
“ஏன் சயனா, இப்படிக் கோவப்படுற. நீ கண்டிப்பா யோகா பண்ணனும்”
“ரெண்டு நாளா சொல்லாம இருந்த, இன்னைக்கு திரும்ப ஸ்டார்ட் பண்ணிருக்க”
“எப்படிக் கத்தற… அதான் சொன்னேன்”
“அதான் உனக்கு எதுவும் கேட்கலையா?”
“ம்?” – கேள்வியாய் ரேவ்.
“உன் ஃபோன் அடிக்குதும்மா. எடுத்துப் பேசு”
ரேவ் கைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்றாள். எதிர் முனையில் பேசப்பேச முகம் ஒருவித விருப்பமின்மை உணர்வை பிரதிபலித்தது. பேசிக்கொண்டே சயனாவிடம், ‘உன் ஃபோன் எடுத்துப் பாரு’ என்று சைகையால் கூறினாள் ரேவ்.
சயனாவும் எடுத்துப் பார்த்தாள். கனகா மேமிடம் இருந்து வந்த பதினைந்து அழைப்புகளைத் தவறவிட்டிருந்தாள்.
‘என்ன’ என்பது போல் ரேவிடம் சைகையால் கேட்டாள்.
‘இரு’ என்பது போல் சைகை வந்தது. பின் கைப்பேசி அழைப்பைத் துண்டித்து விட்டு, சயனாவின் முகத்தைப் பார்த்தாள் ரேவ்.
“நீ ஏன் ஃபோன அட்டென்ட் பண்ணல?”
“சைலன்ட் மோட். என்ன ரேவ்? என்னாச்சி?”
“வா, உடனே ஆபீசுக்குப் போகனும்”
“ஏன்? எதுக்கு?”
“அந்த ஹேக்கர்கிட்ட இருந்து கொரியர் வந்திருக்காம். அதான் மேம் நம்மள வரச் சொல்றாங்க” – சட்டென்று ‘இந்த ஹேக்கர் ஏன் இவ்வளவு சீக்கிரமா என்ட்ரி ஆகுது’ என்ற எண்ணம், எரிச்சல் ரேவிற்கு வந்துவிட்டது.
ஆனால், சயனா முகத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு புன்னகை! அதுவும் வெற்றிப் புன்னகை!!
