Kathambari Novels
அத்தியாயம் – 14
சென்னை-செங்கல்பட்டு சாலையில்…
சுடர், திலோ இருவரும் சாலையிலிருந்து இறங்கி, பத்தடி தூரம் நடந்து வந்து நின்று கொண்டனர். நேரில் பார்ப்பது இதுவே முதல்முறை என்பதால், எப்படி பேச்சை ஆரம்பிப்பது? என்ற தயக்கம் இருந்தது. அது தொடர்ந்து கொண்டே போனதில் ஒரு நீண்ட மௌனம் உருவாகியது.
கடைசியில் வயதின் அனுபவத்தில், “இப்ப உங்க கை எப்படி இருக்கு?” என்று அமைதியான குரலில் திலோ ஆரம்பித்தார்.
கட்டு அவிழ்க்கப்பட்டு கையில் போடப்பட்டிருந்த களிம்பைப் பார்த்து, “ம்ம்ம்! பரவால்ல” என்று உள்ளிறங்கிய குரலில் சொன்னாள்.
மீண்டும் மௌனத்திரை விழும்முன் பேச வேண்டுமென, “மாறன் உங்களைப் பத்தி” என்று வேகமாக ஆரம்பித்து, “சொல்லியிருக்கான்” என்று மெதுவாகச் சொன்னார்.
தெரிந்த விடயம் என்றாலும் புதிதாய் கேட்பது போல், “ஓ!” என சாதரணமாகச் சொன்னாலும், மனம் தடதடவென அடித்துக் கொண்டே இருந்தது.
அழுத்தமான குரலில், “மாறன் அப்பா-க்கு இதுல இஷ்டமில்லை” என்று திலோ சொன்னதும், சுடரின் மனம் பிசைய ஆரம்பித்தது.
‘என்ன பேச?’ என தெரியாமல் வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு, “ம்ம்ம்” என்று மகரத்திற்குள் ஒளிந்துகொண்டாள்.
“இதைப்பத்தி உங்ககிட்ட மாறன் சொல்லியிருப்பானா-னு தெரியாது. பட் தியாகு வேண்டாம்னு சொல்றதுக்குக் காரணம் இருந்தது. மாறன் உங்களை மேரேஜ் பண்ணா, அவன் மேல ஒரு கட்சியோட சாயம் விழும்னு நினைச்சாரு.
அவன் கெரியர் ஸ்பாயில் ஆகிடும்னு பயந்தாரு. இன்கேஸ் உங்க அப்பாவை பாலோவ் பண்ணி, நீங்க பாலிடிக்ஸ்…” என்றபோது தொண்டை அடைத்ததில், “சாரி! சாரி” என பேச்சை நிறுத்திவிட்டார்.
நெற்றிப் பொட்டை அழுத்தியபடி நின்றவரைப் பார்த்தவள், “எதுக்கு ‘சாரி’?!” என்று கேட்டாள்.
“தியாகு ஞாபகம் வந்துருச்சி, பேச முடியல” – மன்னிப்பு கேட்டதின் காரணம் சொன்னார்.
அவர் இயல்பு, இழப்பு சுடர் மனதை என்னவோ செய்ததும், “கார்ல தண்ணி இருக்கு. எடுத்திட்டு வரவா?” என்று குறைவான குரலில் கேட்டுப் பார்த்தாள்.
‘ம்கூம்’ என்று மறுத்துவிட்டார்.
அவர் மீண்டு வர சில நொடிகள் அவகாசம் கொடுக்க நினைத்தவள், “நான் ஜர்னலிசம் படிச்ச பொண்ணு. பாலிடிக்ஸ்க்கு வர மாட்டேன்” என்றாள்.
தொண்டையைச் சரி செய்தவாறே, “இப்போ வர மாட்டேன்னு சொல்றீங்க. பியூச்சர்ல எப்படி எப்படி இருக்குமோ?” என்று நிச்சயமற்ற எதிர்காலத்தை நினைத்து வாதம் செய்தார்.
“என்னோட பியூச்சர்… ஐ மென்ட் கெரியர்… நியூஸ் எடிட்டிங், நியூஸ் சேனல் இப்படித்தான் இருக்கும்” என எதிர்காலம் நிரப்பப்படும் விதத்தைப் பற்றிச் சொல்லி, எதிர்வாதம் செய்தாள்.
வாக்குவாதம் செய்ய விரும்பாததால், திலோ எதுவும் பேசவில்லை. கொஞ்சம் தன்மையாகப் பேசியிருக்கலாமோ என்று நினைத்ததால் சுடர் அமைதியாக நின்றாள். ஒரு மௌனத்திரை இருவருக்கும் இடையே விழுந்தது.
நெடுஞ்சாலை, நிறுத்தப்பட்டிருந்த கார், திறந்தவெளி, அதிவிரைவில் போகும் வாகனங்கள் என்று, இருவரும் அதைப் பார்ப்பதிலே நேரத்தைக் கடத்தினர். பேச்சுகள் இல்லாமல் நிமிடங்கள் கரைந்தன.
மௌனத்திரையை விலக்கி, “இதல்லாம் தியாகு சொன்னது. வேற சில ரீசன்ஸ் எனக்கு இருக்கு. சொல்லட்டுமா?” என்று திலோ கேட்டார்.
“ம்ம்ம்” என்றாள்.
“இதான நாம ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்றது? எனக்கு நீங்க எப்படி தெரியணும்?”
ஒருநிமிடம் யோசித்தாள். பின், “நீங்க கேட்கிறது புரியலை” என புருவத்தைச் சுருக்கிக் கேட்டாள்.
“அதாவது, மாறனோட லவ்வர்… ஃபியூச்சர் லைஃப் பார்ட்னர்… இப்படித்தான நீங்க எனக்குத் தெரியணும்?”
மாறன் ‘லவ்வர்’, ‘லைஃப் பார்ட்னர்’ என்ற வார்த்தைகள் தந்த மகிழ்ச்சியில் ‘ஆம்’ என்று சொல்லக்கூட மறந்து, சூழலை விட்டு வெளியே சென்று சுடர் நின்றாள்.
சூழலுக்குள்ளே நின்ற திலோ, “ஆனா எனக்கு அப்படித் தெரியலை” என்றார்.
“ஏன்?” என்று பயத்துடன் கேட்டாள்.
“தியாகு ஆக்சிடென்ட்கு காரணம்… இந்த ஸ்கேம்ல சம்பந்தப்பட்டவங்கனு நியூஸ் பார்த்தேன்” என்றவர் அதற்குமேல் சொல்லாமல், “நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா?” என்று கேட்டார்.
நன்றாக புரிந்தது. புரிந்தது மட்டுமில்லாமல் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. அதை இதை செய்து கண்கள் குளமாவதை சுடர் கட்டுப்படுத்தினாள்.
திலோ, “இப்போ தியாகு ஆக்சிடென்ட் கேஸ் முடியற ஸ்டேஜ்-லதான் இருக்கு. ஸோ, தியாகு இல்லாததுக்கு காரணமானவரோட பொண்ணா மட்டும்தான்…. எனக்கு நீங்க தெரியறீங்க.
அதோட அரசியல்வாதி பொண்ணே வேண்டாம்னு சொன்னவரு… ஸ்கேம்ல அரெஸ்ட் ஆகப்போற ஒருத்தரோட பொண்ண நிச்சயம் வேண்டாம்னுதான் சொல்லியிருப்பாரு” என்று உள்ளத்தில் இருப்பதை அப்படியே பேசினார்.
ஏற்கனவே ஒருமாதிரி மனநிலையில் இருந்தவள், அவர் பேச்சு கூனிக் குறுகித் தலை குனிந்து கொண்டாள்.
“யோசிச்சுப் பாருங்க” என எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவரை, ‘என்ன யோசிக்கணும்?’ என்பது போல் சுடர் நிமிர்ந்து பார்த்தாள்.
“உங்க மேரேஜ் நடந்ததுக்கப்புறம், எனக்கு உங்களைப் பார்க்கிறப்பெல்லாம் இதே எண்ணம் வந்துக்கிட்டே இருந்தா நீங்க, நான், மாறன் வாழற வாழ்க்கை நரகமாயிடாதா?” என்று சுடரைப் பார்த்து கேட்டார்.
காயம்பட்டிருந்த சுடர் மனதை மேலும் மேலும் காயப்படுத்துவதாக இருந்தது, அந்த கேள்வி. ஆனால் எதையும் உடல்மொழி வாயிலாக வெளிப்படுத்தாமல், பார்த்துக் கொண்டாள்.
“சரி! என்னை விடுங்க. சப்போஸ் மாறன் அப்படிப் பார்த்தா? அவன் அப்பா-வ கொன்னவரோட பொண்ணா உங்களைப் பார்த்தா?”
அவசர அவசரமாக, “இல்ல… இல்ல… மாறா… அப்படிப் பார்க்க மாட்டான்” என காதலன் மீதிருந்த நம்பிக்கையில் சொன்னாள்.
“அப்புறம் ஏன் அவன்கூட பேச மாட்டிக்கிறீங்க?” என்றொரு கேள்வி கேட்டார்.
நேராக அவரைப் பார்க்காமல், “அது… அது… என… எனக்கு ஒருமா… ஒருமாதிரி ஹெஸி… தய… தயக்கம்” என்று தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தாள்.
“ஏன்?”
பதிலிருந்தது. ஆனால் சொல்லத்தான் முடியவில்லை. எங்கெங்கோ பார்த்துக் கொண்டு, அமைதியின் கைப்பிடித்துக் கொண்டு நின்றாள்.
“நான் சொன்ன காரணம்தான். சரியா?” என்றார். “வெளி உலகத்தில உங்கள எப்படிப் பார்க்கிறாங்களோ, அப்படித்தான் நீங்களும் உங்கள பார்க்கிறீங்க. அதான் இந்தத் தயக்கம்… தடுமாற்றம்” என்றார் மேலும்.
மீண்டும் திலோவே, “நான் ஒன்னு சொன்னா நம்புவீங்களா?” என கேட்டதும், ‘இன்னும் என்ன சொல்லப் போகிறார்?’ என்று சுடர் உள்ளம் பாடுபட்டது.
“உங்க லவ்வ தியாகு வேண்டாம்னு சொன்னதும், என் பையனுக்காக அவரை கன்வின்ஸ் பண்ணனும் நினைச்சேன். ஆனா அதுக்கு என் தியாகு உயிரோட இருந்திருக்கணுமே…?? அவரைத்தான் உங்க அப்பா…” என்று வேதனையில், பாதியிலே பேச்சை நிறுத்தினார்.
மனதிற்குள், ‘ஏன்-ப்பா இப்படிலாம் செஞ்சீங்க?’ என்று சுடர் கலங்கி நின்றாள்.
கண் இமைகள் படபடத்து கண்ணீரைக் கட்டுப்படுத்திய திலோ, “உங்களுக்கு என் நிலைமை புரியாது. தியாகுவ… எனக்கு அவ்ளோ பிடிக்கும். சடனா அவர் இல்லாதது ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்று உணர்ச்சிவசப்பட்டார்.
மேலும், “இப்போ தியாகு இல்லை. அவர் இல்லாத சூழ்நிலையில அவருக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை பண்றதுல எனக்கு உடன்பாடில்லை” என்று கரை சேர்ந்த காதலுக்காகப் பேசினார்.
கரை சேரத் துடிக்கும் காதலை கையில் வைத்திருப்பவள், ‘அப்போ என் மாறா இல்லைனா எனக்குக் கஷ்டமாயிருக்காதா?’ என்று கேட்கத் துடித்தாலும், கேட்காமல் நின்றாள்.
“ஒரே ஒரு கேள்வி. பதில் சொல்ல முடியுதான்னு பாருங்க. இப்போ மாறனுக்கு இருக்கிற பேரு… அவன் பதவிக்கு இருக்கிற மரியாதை… உங்களை மேரேஜ் பண்ணதுக்கு அப்புறம் இருக்குமா?”
பதில் சொல்ல முடியாமல் மட்டியைக் கடித்துக் கொண்டு நின்றாள். “என்ன சொல்ல வர்றீங்க?” என நேரடியாகக் கேட்டாள்.
“தியாகுவோட பார்வையில மாறனுக்கு நீங்க பெர்ஃபெக்ட் பேர் இல்லை. இப்ப எனக்கும் அதுதான் தோணுது” என இடைவெளி விட்டவர், “தோணுதுனு என்ன? அதுதான் உண்மை” என்றார்.
சுயம் நயமாகத் தொட்டுப் பார்ப்பது போல் தோன்றியதும், “இதுதான் நீங்க பேசணும்னு நினைச்சதா?” என்று திலோ முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
“ம்ம்ம்! புரிஞ்சிடுச்சா?” என்று கேட்டதற்கு, எதுவும் சொல்லாமல் நின்றாள்.
தொடரும் அவள் அமைதியைப் பார்த்தவர், “உங்களுக்குப் புரிஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்” என சொல்லிவிட்டு, திலோ அங்கிருந்து கிளம்பினார்.
அவர் சென்றதும், சுடர் தன் காருக்குள் வந்து அமர்ந்து கொண்டாள். ‘ஏன்டா வந்தோம்?’ என்ற எரிச்சல் வந்ததும், ஸ்டியரிங்ல் தலை சாய்த்தாள்.
தலைசாய்த்த நிலையிலே கைப்பேசியில் மாறன் அனுப்பிய செய்திகளைப் பார்த்தாள். அப்படியே சாலையை வெறித்துப் பார்த்தாள். பின், ‘ஏன் இன்னும் என்னை நினைச்சிகிட்டு இருக்க?’ என முனங்கியவள், கண்களை மூடினாள்.
யாழ்மாறன் உருவம் தெரிந்தது. உடனே இன்றைய நிலைக்கு நேர்மாறாக, ‘ஏன் என்னை நினைக்கலை?’ என்று புலம்பிய நாளை நோக்கி சுடர் மனம் சென்றது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 13
சுடர் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தாள்.
தோழிகள், படிப்பு என்று இருந்தாலும்… நிறுவனர் சிலை, நூலகம், அடையாள அட்டை என மாறனை நியாபகப்படுத்தும் விடயங்கள் அவளை ஏதேதோ செய்து கொண்டே இருந்தது.
அந்த நேரத்திலெல்லாம், ‘அப்படி உனக்காக என்ன செஞ்சிட்டான்?! இவ்வளவு பிடிக்கிறதுக்கு?’ என மனசாட்சி கேள்வி கேட்கும். உடனே, ‘என்ன செய்யணும், அவனைப் பிடிக்கிறதுக்கு?’ என மனதை ஆட்சி செய்பவனுக்காக மறுகேள்வி
கேட்டு நிற்பாள்.
சில நேரத்தில், ‘நான் உன்னை நினைக்கிற மாதிரி, நீயும் என்னை நினைச்சிப் பார்ப்பியா மாறா?’ என்ற கேள்வி வரும்.
அதைத் தொடர்ந்து, ‘சரி வராது-ன்னு சொன்னவன் எப்படி நினைச்சிக்கிட்டு இருப்பான்?’ என்ற பதில் கேள்வியில், சிலபல கண்ணீர் துளிகள் வந்துவிடும். ஏதேதோ சொல்லி தன்னைத் தேற்றிவிட்டு, அதுபோன்று தருணங்களைக் கடந்து வருவாள்.
யாழோவியம் அத்தியாயம்- 14 தொடர்கிறது
ஒரு பலத்த ஹார்ன் ஒலியில் கல்லூரி நினைவிலிருந்து மீண்டு வந்திருந்தாள். திலோ பேசிச் சென்றதை நினைத்ததும், ‘இனி இந்தக் காதல் என்னவாகும்?’ என்ற கேள்வி வந்தது.
அது, கவலையைக் கொடுத்தது. தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முடியா கவலையைக் கொடுத்தது. இந்தக் கவலையை, இந்தக் காதல் தரும் வலியை மாறன் தோள் சாய்ந்து தேற்றிக் கொள்ள, சுடர் மனம் வேண்டியது.
மனதின் வேண்டுதல் எப்பொழுது நிறைவேறுமோ என்ற ஏக்கத்தில், சுடரின் கண்களிருந்து கண்ணீர் வடிந்து, காருக்குள் விழுந்து கொண்டே இருந்தன.
காதல் ஒரு விசித்திர கண்ணீர்.
தான் நினைக்கப்படுகிறோம் என்ற நிம்மதியிலும், தான் நினைவில் இல்லையோ? என்ற நிராசையிலும் வெளிவரும் விசித்திர கண்ணீர் இந்தக் காதல்.
இக்கணத்தில் மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. ‘மாறா-வா?’ என்று கண்களைக் கைபேசியின் திரைக்குத் திருப்பினால், அதில் ‘அம்மா காலிங்’ என்று வந்தது.
உடனே தலை நிமிர்த்தி கண்கள் இரண்டையும் துடைத்துவிட்டு, அழைப்பை ஏற்று, “ம்மா! என்ன?” என்றாள்.
“சுடர், நீ எங்கே இருக்க?”
‘சொல்லாமல் வந்ததிற்கு ஏதும் சொல்வாங்களோ?’ என்ற பயத்தில், “எதுக்கு ம்மா கேட்கிறீங்க?” என்று கேட்டாள்.
“உங்க ப்பா கோபத்தில என்னென்னமோ கத்திக்கிட்டு இருக்காரு. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல” என்று பதற்றத்துடன் பேசினார்.
“எதுக்கு கத்தனும்?”
“ராஜாக்கு ஏன் இப்படிப் பண்ணீங்கனு கேட்டேன்? அதுலருந்து இப்படித்தான். கொஞ்சம் சீக்கிரம் வர்றீயா?” என்று அழ ஆரம்பித்துவிட்டார்.
தன் கவலையெல்லாம் புறந்தள்ளி, “அழாதீங்க-ம்மா! நான் பக்கத்திலதான் இருக்கேன். இப்ப வந்திடுறேன்” என்று வேக வேகமாகப் பேசி, கைப்பேசியை வைத்துவிட்டு காரை கிளம்பினாள்.
சென்னையை நோக்கி சுடரின் கார் வேகமெடுத்தது.
இதே நேரத்தில் ஊடங்களில்…
லிங்கம் மற்றும் ராகினியின் ஆதரவாளர்கள் நடத்துகின்ற போராட்டங்களில் வன்முறை நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலரை, காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
உயர் கல்வித்துறை அமைச்சரான ராகினி முதலமைச்சரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். முதல்வரும் அதை ஏற்றுக்கொண்டார்.
நுழைவுத்தேர்வின் முறைகேடு வழக்கில் விசாரணை ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் பேரில், ராகினி மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் லிங்கம், அவர் கட்சித்தலைவரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.
இவைதான் இன்று இந்த நேரத்திற்கான முக்கிய செய்திகளாக ஊடகங்களில் ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்தன. மேலும் ராகினி சரணடையும் காட்சிகள் மீண்டும் மீண்டும் காமிக்கப்பட்டு வந்தன.
லிங்கம் வீடு!
அவர் வீட்டின் முன் தொண்டர்கள் கூடியிருந்தார்கள். காவலர்கள் வீடு இருந்த சாலையில் நின்றனர். அவர்கள் இருப்பதால் மற்ற இடங்களைப் போல பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லையென்றாலும், கோஷங்கள் இருந்தன.
அந்தக் கூட்டத்தைக் கடந்து சென்று, சுடர் காரிலிருந்து இறங்கியதும், அவள் வீட்டிற்குள் செல்ல ஏதுவாக ஆட்களை ஒதுங்கச் சொல்லி வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
வீட்டினுள் நுழைந்த பின்பு, ‘என்ன நடக்கிறது?’ என்று புரிந்தும் புரியாமலும் நிற்கும் வேலையாட்களைக் கவனிக்காமல், கடகடவென மாடிப்படிகளில் ஏறிப்போய், சுடர் தன் அறைக் கதவைத் திறந்தாள்.
லதா அழுது கொண்டிருந்தார். அவரது கைப்பேசி கீழே நொறுங்கிக் கிடந்தது. “என்னம்மா?” என்று ஆதரவாக அவர் அருகில் வந்து நின்றாள்.
“ராஜாக்கு ஃபோன் பண்ண நினைச்சேன். ஃபோன பிடிங்கி உடைச்சிட்டாரு. ரொம்ப அடிக்கிறாரு” என்று மகளிடம் முறையிட்டார்
கண்கள் சிவக்க லிங்கத்தைப் பார்த்த சுடர், “அம்மாவ எதுக்காக அடிக்கீங்க? வெளியில இருக்கிற கோபத்தெல்லாம்… வீட்ல வந்து காட்டாதீங்க!?” என்று ஆத்திரத்துடன் சொன்னாள்.
இத்தனை நாள் கழித்து மகள் பேசுகிறாள் என்ற நிம்மதி வந்திருந்தாலும், “அவ ஏன் ராஜாக்கு ஃபோன் பண்றா?” என்று கோபத்துடன் கேட்டார்.
“ராஜாண்ணாக்கு அவங்க ஃபோன் பண்ணா, உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று எகிறிக் கொண்டு அவர் எதிரே வந்து கேட்டாள்.
“அவன்தான் பிரச்சனை! ராஜாதான் பிரச்சனை!!” என கோபத்தின் உச்சியில் கத்தினார்.
சுடர், லதா இருவருமே அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.
“இவனைக் கட்சிக்குள்ள கொண்டு வந்து, ஒரு போஸ்ட்டும் கொடுத்தா, இவன் என் போஸ்ட்ட காலி பண்ற வேலை செஞ்சான்” என்று முணுமுணுத்தார்.
“ராஜா அப்படிச் செஞ்சிருக்க மாட்டான்” என்று லதா பேசும் பொழுதே, “ம்மா! பேசாம இருங்க” என்ற சுடர், உண்மை தெரிய வேண்டுமென்று, “ராஜாண்ணா என்ன பண்ணாங்க?” என்று பொறுமையாகக் கேட்டாள்.
“அவன் ஐடி விங் செக்ரட்டரிதான?! அவன் வேலை என்ன? அதைப் பார்க்காம தேவையில்லாத வேலை பார்த்தான்” என்று ராஜாவின் மீது குற்றம் சுமத்தும் தொனியில் பேசினார்.
“என்ன செஞ்சாங்கனு சொல்லுங்க?”
“டூவல்த் முடிச்சிட்டு படிக்காம இருந்த பசங்கள வச்சி… பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸெல் சீட்-ன்னு ஐடி விங்-காக ஏதோ செஞ்சிக்கிட்டு இருந்தான். அவனைப் பத்திதான் உனக்குத் தெரியுமே? நல்லா பேசுவான்ல? அப்படித்தான் அந்தப் பசங்ககிட்டயும் பேசியிருக்கான்”
“இதுல என்ன இருக்கு?” என்று இடையில் புகுந்து கேட்டாள்.
“சொல்றதைக் கேளு சுடர். அந்த பசங்களும் இவன்கிட்ட பேசுவாங்க. பேச்சு வாக்கில சும்மா இருக்காம, ‘இதைவிட அதிகமா பணம் கிடைக்கிற வேலை இருக்கு. அதுவும் கம்மியான நேரத்தில’னு அந்தப் பசங்க உளறிட்டாங்க”
அவரின் பேச்சிலிருந்து, ‘ஓகோ! இந்த ஸ்கேம் பத்தி ஃபர்ஸ்ட்டே தெரிஞ்சவங்க ராஜாண்ணாவா?’ என்று தனக்குள் கேள்வி கேட்டு, ‘அப்படித்தான் இருக்கும்’ என்று பதிலும் சொல்லிக் கொண்டாள்.
“அந்த பசங்ககிட்ட ராஜா, ‘என்னடா? என்ன விஷயம் ஒழுங்கா சொல்லு?’-னு மிரட்டி கேட்டிருக்கான். அவங்களும் தெரிஞ்ச வரைக்கும் சொல்லிருக்காங்க. அவ்ளோதான்!? அப்ப நம்ம கட்சி வேற ஆட்சியில இருந்ததா?” என்று லிங்கம் சொல்ல, “என்னை ஏன் சேர்க்கிறீங்க? உங்க கட்சி!” என்று திருந்தினாள்.
“சரி” என எரிந்து விழுந்தவர், “அத வச்சிக்கிட்டு, மத்த பசங்க, எஜூகேஷனல் செக்ரட்டரி, எஜுகேஷ்னல் டேரைக்டர், போர்டு ஆளுங்க, அங்கே இங்கேனு விசாரிச்சு… கைல ஆதாரத்தை எடுத்துக்கிட்டு என் முன்னாடி வந்து நின்னு, என்னையே கேள்வி கேட்கிறான்?” என்று மூச்சு விடாமல் பேசினார்.
சுடருக்கு, அன்று ராஜாவின் வீட்டிலிருந்து எடுத்து வந்த இந்த வருடத்திற்கான ஆதாரம்தான் ஞாபகத்திற்கு வந்தன. இதற்கு முந்தைய வருட ஆதரங்களும் ராஜாண்ணாவிடம் இருந்திருக்கும் போல என நினைத்துக் கொண்டாள்.
லிங்கம், “எனக்கு எப்படி இருந்திருக்கும்? நினைச்சிப்பாரு!!” என்று அறையே அசையும் வண்ணம் கோபத்தில் கத்திக் கேட்டார்.
“நீங்க தப்பு பண்ணீங்க. அவங்க தட்டிக் கேட்டாங்க. அவ்வளவுதான! இதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்… சத்தம்?” – சுடர் படபடவென பேசித் தள்ளினாள்.
அவள் பேச்சில் எழுந்த கோபத்தில், “பெத்த பொண்ணாச்சேனு பார்க்கிறேன்” என்று எச்சரித்துவிட்டு, தன் கோபத்தை அடக்கிக் கொண்டார்.
அதிகமாகக் கோபப்பட்டதாலும், கத்தியதாலும், அழுததாலும் மூன்று பேருமே தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வது போல் அமைதியாக நின்றனர்.
முகத்தின் வியர்வைத் துளிகளைத் துடைத்த லிங்கம், “இதே மாதிரிதான் சுடர் அன்னைக்கு! வளர்த்த பையனாச்சே-னு ‘வேண்டாம் ராஜா! இத இப்படியே விட்ரு’-னு சொல்லிப் பார்த்தேன். ம்கூம் அவன் கேட்கவே இல்லை.
கடைசியில ‘உன் அப்பாவும் இதுல சம்பந்தப்பட்டிருக்காரு பேசாம விடு’-னு சொன்னேன். அப்பவும் அடங்கலை” என்று மகளைப் பார்த்துச் சொன்னார்.
“எதுக்குக் கேட்கணும்? இல்லை… எதுக்காக கேட்கணும்?” என்று கத்தியவளை, லிங்கத்தின் கோப முகத்தைக் கண்டு, “சும்மா இரு சுடர். நீ எதும் பேசாத” என லதா அமைதி படுத்தினார்.
லிங்கம், “என் பொண்ணு என்கிட்ட கேள்வி கேட்கிறா, நான் பதில் சொல்றேன். நீ ஏன் நடுவில வர்ற? தள்ளி இரு!” என்று மனைவியை எச்சரித்தார்.
“ம்மா! இருங்க. அவருக்கு ராஜாண்ணா மேலதான் கோபம். என் மேல இல்லை. அவர் முழுசா சொல்லி முடிக்கட்டும்” என்று அம்மாவிடம் சொன்னவள், “மேல சொல்லுங்க” என்று அப்பாவைப் பார்த்தாள்.
“எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கோர்ட்கு போவேன். சும்மா விடமாட்டேன்னு ஒரே பிரச்சனை பண்ணி, என் நிம்மதியவே கெடுத்துக்கிட்டு இருந்தான்.
இதுல ஜெகா வேற!? ‘ராஜாக்கு தெரிஞ்சிடுச்சே. என்ன பண்ண? ஏது பண்ண? அவன் முகத்தைப் பார்த்து பேச முடியல’னு ஒரே புலம்பல்” என்று அலுத்துக் கொண்டார்.
“அதான் ராஜாண்ணா பண்ண தப்பு. நானா இருந்தா நேர கோர்ட்க்குத்தான் போயிருப்பேன். இல்லை, மீடியால நியூஸா போட்ருப்பேன்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேசினாள்.
மீண்டும் அவர் கோபப்படுவாரோ என்று லதா நினைத்தார். ஆனால் அவர் கோபப்படவில்லை. எதையோ யோசித்தபடி சாந்தமாக இருந்தார்.
அவர் அமைதியைக் கண்ட லதா, “அதுக்கப்புறம்… அந்த… ஆக்சிடென்ட்…” என முழுதாக கேட்க பயந்து வார்த்தைகளை மென்று முழுங்கினார்.
லிங்கம் முகத்தில் ஒரு சீற்றம் வந்தது, “ஆமா! கோபத்தில ராஜா வெளிய சொல்லுவான். ஜெகா பயத்தில உளறுவான். ரெண்டு பேருமே எனக்குப் பிரச்சனைனு தெரிஞ்சி… அந்த ஆக்சிடென்ட் நான்தான் பிளான் பண்ணேன்” என்று சினத்துடன் சொன்னார்.
அவர் பேச்சுக்களைக் கேட்கக் கேட்க லதாவிற்கு, ‘இப்படி ஒரு மனிதருடனா வாழ்ந்திருக்கிறோம்’ என்று ஒரே வெறுப்பாய் இருந்தது. நெடுநாள் நண்பன், வளர்த்த மகன் எப்படி இவர்கள் உயிரை எடுக்க மனம் வந்தது?
அப்படி ஒருவருக்கு தன் நலன் முக்கியமா? லதாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. லிங்கத்தின் அருகே நிற்கக் கூட பிடிக்கவில்லை. நகர்ந்து நின்று கொண்டார்.
மனைவி, மகள் இருவர் உணர்வுகளின் வெளிப்பாடுகளைச் சிறிதும் சட்டை செய்யாமல், “ஆனாலும் எனக்கு சந்தோசம்தான்” என சட்டென்று சிரித்தபடி பேசியதும், இருவரும் ‘இதில் என்ன சந்தோசம்?’ என்றபடி குழம்பி நின்றனர்.
“ஏன்னு தெரியனுமா? அங்க சொல்லவா, இங்க சொல்லவான்னு துள்ளிக்கிட்டு வந்தவனை அடக்கி ஒடுக்கி கட்சி வேலை கூட செய்ய விடாம வீட்ல உட்கார வைச்சிட்டேன்ல? அதுக்காக!!” என்று பெருமையாகச் சொன்னார்.
ராஜாவிற்கு அவர் செய்த அநியாயங்களை நினைத்து, “என்ன மாதிரியான எண்ணம் இதெல்லாம்? ச்சே” என்று லதா பொருமினார்.
மனைவி வெறுப்பை லிங்கம் கண்டுகொள்ளவில்லை. அந்த வார்த்தைகளில் எதுவும் அவரைப் பாதித்தது போல் தெரியவில்லை.
அப்படி நின்றவரிடம், “அண்ணி, அணும்மா பத்தி யோசிக்கவே இல்லையா? அவங்க என்ன பாவம் பண்ணாங்க?” என்று சுடர் அமைதியாகக் கேட்டாள்.
“யோசிக்கலை சுடர்! ஏன்னா… இதைப்பத்தி அணுகிட்ட ஜெகா சொன்னானா, இல்லையானு எனக்கு தெரியாது. அதுமாதிரி கவிகிட்ட ராஜா என்ன சொல்லி வெச்சிருக்கானோ? என்னை வேற என்ன செய்யச் சொல்ற?” என்று துளியும் குற்றவுணர்வு இல்லாமல் பதில் சொன்னார்.
இப்பொழுதும் சுடரும், ‘ச்சே’ என முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். “நல்லது செஞ்சிருக்கலாமே? இந்தமாதிரி தப்பு செய்யப் போய்தான, இவ்ளோ கேவலமான காரியமெல்லாம் செஞ்சிருக்கீங்க” என்று முகத்தை அசூயையாக வைத்துக் கொண்டு கேட்டாள்.
“கட்சியில என்னோட செல்வாக்கு உயரணும். அதுக்கு ஆள்பலமும் முக்கியம்! பணபலம் இருந்தா, ஆள்பலம் தன்னால வந்திடும்!” என்று அவரது அரசியல் சூத்திரத்தைச் சொன்னார்.
“நல்லது செஞ்சா, நீங்க சொல்ற செல்வாக்கு வராதா?”
“உனக்கு அரசியல் புரியலை. சரி உனக்குப் புரியற மாதிரி சொல்றேன். அனு நல்லதுதான செஞ்சா? அவளுக்கு மினிஸ்டர் போஸ்ட் கிடைச்சதா சொல்லு? இல்லையே? எனக்கும் ஜெகாக்கும்தான கிடைச்சது” என்று மகளுக்குப் புரிய வைக்கப் பார்த்தார்.
சுடருக்கு என்ன கேட்கவென்று தெரியவில்லை. ஏற்கனவே இருந்த தலைவலி கூடுவது போல் தெரிந்தது. அமைதியாக நின்றாள்.
லிங்கம், “அதுக்கப்புறம் நிம்மதியா இருக்கலாம்னு நினைக்கிறப்போ, அடுத்து பிரச்சனை கொடுக்க ஒருத்தன் வந்தான்” என்று ஆத்திரத்துடன் சொன்னதும், ‘யாரைச் சொல்கிறார்?’ என்ற கேள்வியுடன் சுடர் நிமிர்ந்து பார்த்தாள்.
“யாருனு பார்க்கிறியா? அந்த கலெக்டர் யாழ்மாறன். வேண்டாம் விட்டுடுனு சொல்லியும் கேட்காம, தோண்டித் துருவி இன்னைக்கு இப்படி ஒரு நிலையில நிக்க வச்சிட்டான்” என்று தலையைப் பிடித்துக் கொண்டு புலம்பினார்.
அவரின் நிலைமை கண்டு சுடர் மெல்ல சிரித்ததும், “எதுக்கு சிரிக்கிற? அவன் ஜெயிச்சிட்டான்னு நினைச்சா… ம்?” என்று கேட்டதும், “அதான் அரெஸ்ட் ஆகப் போறீங்கள?” என அப்பா என்ற எண்ணம் இல்லாமல் பேசினாள்.
“ஓகோ?!” என்று புருவத்தை உயர்த்திக் கொண்டவர், மகளின் அருகில் சென்று, “அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல நான் சொன்னது ஞாபகமிருக்கா சுடர்? என்று அன்பாய் கேட்டார்.
‘என்ன சொன்னார்?’ என யோசிப்பதை விட, ‘இந்தத் தொனி எதற்காக?’ என்ற கேள்வியில் அவளுக்குள் ஒரு பயம் வந்தது
“உங்களைப் பத்தி முடிவெடுக்கிற மனநிலையில இல்லைனு சொன்னேன்ல. இன்னைக்கு முடிவெடுத்திட்டேன். என்ன முடிவுனு சொல்லவா?”
அதுவரை இருந்த பேச்செல்லாம் மறைந்து, ‘என்ன முடிவெடுத்திருப்பார்?’ என அப்பா முகத்தையே பார்க்க, “நீ உடனே அவனை கல்யாணம் பண்ணிக்கோ” என்று சிரித்த முகமாகச் சொன்னார்.
‘ஏன் இப்படிச் சொல்கிறார்?’ என்று புரியாமல் விழிவிரித்துப் பார்த்தவளிடம், “இதை எதிர்பார்க்கலையா?” என மீண்டும் ஒரு கேள்வி கேட்டுச் சிரித்தார்.
‘இதில் ஏதோ இருக்கு?’ என்று அவள் மனம் கிடந்து அடித்துக் கொண்டது, ‘எதிர்பார்க்கல’ என்பது போல் தலையசைத்தாள்.
சிரிப்பைக் குறைத்துக் கொண்டே, “அவனுக்கு எவ்ளோ திமிர் இருந்தா, மீடியா முன்னாடி என் பேர சொல்லி, இவன்தான் குற்றவாளின்னு சொல்வான். அவன் மேல பயங்கற கோபத்தில இருக்கேன்.
ரூலிங் பார்ட்டிலயும் நிறைய பேர் அவன் மேல கோபமா இருக்காங்க. எப்போ சான்ஸ் கிடைக்கும்… அவனை மாட்டிவிடலாம்னு காத்துக்கிட்டு இருக்காங்க. அதுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிற மாதிரிதான் உங்க மேரேஜ் இருக்கும்.
‘ஊழல் மாமனார்! கலெக்டர் மருமகன்!’ ஹெட்லைன்ஸ் நல்லா இருக்குல்ல?” என்று நக்கலாகக் கேள்வி கேட்டார்.
அவர் பேச்சை முழுதும் கிரகித்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தவளுக்கு தலை கிறுகிறுத்தது. ஏற்கனவே திலோவின் பேச்சால் தடுமாறிப் போயிருந்தவளை, இது மேலும் தளர்ந்து போகச் செய்தது.
இருந்தும், “மாறாதான இந்த ஸ்கேம் வெளியே கொண்டு வந்தது. அப்புறம் எப்படி?” என்று காற்றாகிப் போன குரலில் கேட்டாள்.
“அவனை முழுசா தப்பு சொல்றாங்களோ இல்லையோ?! அவன் பேருக்கு ஒரு களங்கம் வருமில்லையா? இந்த மக்களுக்கு அவன்மேல இருக்க நம்பிக்கை போகுமில்லையா? அதுதான் வேணும். அதுக்கப்புறம் என்ன செய்யணும்னு எங்களுக்குத் தெரியும்” என்றார்.
திலோ நயமாக சொன்ன விடயத்தை, இவர் பயங்கொள்ளும் படி சொன்னார். அவ்வளவுதான் வித்தியாசம். இருவரின் முடிவையும் கேட்டவள், ஒரேநாளில் ஒட்டுமொத்தமாக உடைந்து போகுமளவிற்கு வந்திருந்தாள்.
முதலிலே ‘நமக்குள்ள இது சரிவராது’ என மாறன் சொன்னது வாஸ்தவமான வார்த்தை என்று புரிந்தது. அப்படியே அமைதியாக நடந்து வந்து அறையின் ஓரத்தில் உட்கார்ந்துவிட்டாள்.
நொந்து போயிருக்கும் மகளின் நிலையைக் கண்ட லதா, “இப்படி பையன், பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்திட்டு, எப்படி உங்களால நிம்மதியா இருக்க முடியும்?” என்று லதா கேட்டார்.
“நான் எப்படி ஏன் பொண்ணு வாழ்க்கையைக் கெடுப்பேன்? இப்பவும் அவ நினைக்கிற மாதிரி சேனல் ஆரம்பிச்சி கொடுப்பேன். அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்று மகளின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் குரலில் சொன்னார்.
“ஆனா அவன் வேண்டாம். வேண்டவே வேண்டாம். அவன் மட்டும் என் பொண்ண கல்யாணம் பண்ணட்டும்… அப்புறமா அவன் அப்பா தியாகுக்கு நடந்ததுதான் அவனுக்கும் நடக்கும்” என யாழ்மாறன் மீதிருந்த கோபத்தை வெளிப்படுத்தும் குரலில் கத்தினார்.
“அப்போ உங்க பொண்ணு உயிர் மட்டும்தான் உங்களுக்கு முக்கியம். மத்தவங்க உயிர் ஒரு பொருட்டே இல்லை. அப்படித்தானா?”
“ஆமா எனக்கு என் பொண்ணுதான் முக்கியம். வேற யாரை பத்தியும் கவலை இல்லை” என்று குரலை உயர்த்தியவர், “உன்னைப் பத்தியும்தான். அதனால இனிமே ராஜா-க்காக என்கிட்ட கேள்வி கேட்காத” என எச்சரித்தார்.
“கேட்டா?! என்னையும் உயிரோட விட மாட்டிங்க. அதானா?” என, ‘இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை… அவ்வளவுதானா?’ என்ற குரலில் கேட்டார்.
“புரிஞ்சா சரி” என்று விட்டேற்றியாகச் சொன்னார்.
“கேட்பேன். நான் வளர்த்த பையனுக்காக நான் கேட்காம யார் கேட்பா?” என அழுத்தமாகச் சொல்லி, லிங்கம் முன் சென்று நின்றார்.
“உனக்குதான் அவன்மேல பாசம். அவனுக்கு உன்மேல துளிகூட பாசம் இல்ல”
அந்த ‘பாசம் இல்ல’ என்ற வார்த்தையைக் கேட்டதும், “அதெல்லாம் இருக்கும்” என்று லதா சிறுபிள்ளை போல் சொன்னார்.
“ரெண்டு வயசிலருந்து அவன நீதான வளர்த்த? கட்சி வேலையில இருக்கவன், சாப்பிடறானா இல்லயானு பார்க்கிறது… அவனுக்குப் பிடிச்சது என்னென்னு பார்த்து சமைக்கிறது, அவனுக்கு ஒன்னுன்னா பக்கத்திலருந்து கவனிக்கிறது, கடைசியில அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி… அந்தப் பொண்ணையும் கையில வச்சுத் தாங்கினது… இப்படி ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து நீதான செஞ்ச? அப்புறம் ஏன் உன்கிட்ட பேசாம இருக்கான்??” என்று கேட்டார்.
விழி அகலாமல் கணவரையே லதா பார்த்துக் கொண்டு நின்றார்.
“ஏன்னு நான் சொல்லவா? அந்த ஆக்சிடென்ட்டுக்கு காரணம் நானுன்னு, அன்னைக்கே அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். அதான் உன்கூட ராஜா பேசாம இருக்கான். அம்மா-ன்னு கூட கூப்பிட மாட்டிக்கிறான் அவ்வளவுதான் அவன் பாசம். புரிஞ்சிக்கோ” என்று சொல்லி, ஒதுங்கிக் கொண்டார்.
கண்களில் கண்ணீர் வழிய… மனதில், ‘ஏன் ராஜா, நீ பேசாம இருக்கிறதுக்கு இவர் சொல்றதுதான் காரணமா?’ என்ற கேள்வியுடன் நின்றார். அவரின் பேரன்பின் ஏக்ககங்கள் எல்லாம் அறையின் பேரமைதியாக மாறியிருந்தது.
அக்கணம்… அந்த அமைதியைக் குலைக்கும் வண்ணம்… படாரென்று அறைக் கதவு திறக்கப்பட்டு ராஜா உள்ளே நுழைந்தான். அந்த நேரத்தில் அவனை அங்கே எதிர்பார்க்காததால் மூன்று பேரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
அதிர்ச்சி, அழுகை, அலைப்புற்ற தோற்றத்துடன் ஆதரவு தேடி ராஜா அருகில் வந்த லதா… லிங்கம் அவனுக்குச் செய்த அநியாயங்களை நினைத்து, பேச முடியாமல்… வார்த்தை வராமல் திரும்பினார்.
அத்தனை நாட்கள் கழித்து ராஜா, “ம்மா… ஏன்மா போறீங்க? இங்க வாங்க” என்று கண்கள் லேசாகக் கலங்க, கமறிய குரலில் அவரிடம் பேசினான்.
