Kathambari Novels
அத்தியாயம் – 17 (Final)
கதீட்ரல் சாலையில் காதலியின் ஒரு கோபம்…
ஒரு வாரம் கடந்திருந்தது!
நேர்காணலுக்காக, இன்று மொய்தன் பகுதிக்கு பூஜா வந்திருந்தாள். சேகரன் டேக்ஸி ஏற்பாடு செய்து தந்திருந்தார். ஓட்டுநர் அவருக்குப் பரிட்சியமானவர் என்பதனால், மகளைத் தனியாக அனுப்பியிருந்தார்.
மதியத்திற்குப் பிறகு நடந்த நேர்காணலை முடித்து வெளியே வந்தவளுக்கு, இப்போதே வீட்டிற்குப் போகவா என்று தோன்றவும், இணையத்தில் பார்த்து அருகில் செயின்ட் பால் தேவாலயம் இருப்பதைத் தெரிந்து கொண்டாள்.
கதீட்ரல் சாலையிலுள்ள இந்த தேவாலயத்திற்கு போக தோன்றியவுடனே, அலைபேசியில் அப்பாவிடம் சொல்லிவிட்டு, ‘செயின்ட் பால் சர்ச்’ என்று ஓட்டுனரிடம் சொன்னாள். கோதிக் கட்டடக்கலை முறையில் கட்டப்பட்டிருந்த தேவாலயத்திற்கு அவரும் அவளை அழைத்து வந்து விட்டார்.
சூரியன் மறையும் நீலவானம்… வெள்ளை நிற தேவாலய கட்டிடம்… சுற்றிலும் அழகான தோட்டம் மற்றும் புல்வெளி… என்றிருந்த ரம்மியமான சூழலைப் பார்த்தபடி தேவாலயத்தினுள் சென்றாள். சற்றுநேரம் வேலைப்பாடுகளுடன் இருந்த மர பெஞ்சில் அமர்ந்துவிட்டு… வெளியே வந்தாள்.
முழுவதும் சுற்றிப் பார்க்க நேரமெடுக்கும் என்பதால் சில பகுதிகளை மட்டும் பார்த்து முடித்தாள்.
தேவாலயம் உள்ளே இருக்கும் பாரிஸ் ஹாலில் இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று இருந்தது.
வண்ண சீரியல் விளக்குகள், விதவிதமான மலர் அலங்காரங்கள், வெவ்வேறு நிற கவுன்களில் கலக்கும் பெண்கள், கோர்ட் சூட் என்றிருக்கும் ஆண்கள், சிறு வயதினர், பெரியவர்கள்… என்று அந்தப் பக்கம் கொண்டாட்டமாக இருந்தது.
இதை வேடிக்கை பார்த்தபடியே, பராமரிக்கப்பட்ட தோட்டத்திற்கு இடையே போட்டிருந்த பாதையில் வந்து கொண்டிருந்தாள். அப்படியே வழியிலும் கவனம் வைத்திருந்தாள். அதனால்தான் எதிரே வந்த அரவிந்த்மீது மோதிக் கொள்ளாமல் இருக்க முடிந்தது.
அவனைப் பார்த்து ஒரு வாரமாயிற்று! அன்று பேசிவிட்டுப் போனதுதான். அதன்பின்னர் அவனுடன் பேசவில்லை… அவனது அலைபேசி அழைப்புகளை ஏற்கவுமில்லை. இதோ… இன்றுதான் பார்க்கிறாள்!
காவலர் சீருடை, ஜீன்ஸ் டீ-ஷர்ட் என்று பார்த்தவனை, இன்று ஃபார்மல்ஸில் பார்க்கவும்… சூழலில் பார்ப்பதற்கு எதுவும் இல்லை என்பது போல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்!!
சொடுக்கிட்டு அவளது கவனம் கலைத்தவன், “ஹாய்… ரொம்ப நாளாச்சுல பார்த்து. இங்க, ப்ரண்டோட ரிசப்ஷன் அட்டன் பண்ண வந்தேன். நீயும் வந்து ஜாயின் பண்ணிக்கிறியா?” என்று இயல்பாக பேசினான்.
இறுக்கமான முகத்துடன் அவனைக் கடந்து போனாள்.
“என்னாச்சு உனக்கு… ஃபோன் பண்ணாலும் எடுக்கிறதில்ல. எதுக்கு கோபம், சொல்லேன்” என்று அவளைத் தடுத்து நிறுத்த, ஏதும் சொல்லாமல் அவனை விலக்கி நடந்தவளிடம், “பூஜா ஒழுங்கா இன்னைக்கு சொல்லிட்டுப் போ! இல்லனா?” என்று குரல் உயர்த்தினான்.
வேகமாக திரும்பி வந்தவள், “இல்லனா… அங் இல்லனா என்ன பண்ணுவ அரவிந்த?” என்றாள்.
“தெரிஞ்சிக்க தோணுது பூஜா, அப்பதான…” என்று சொல்லும் போதே, “சரி தெரிஞ்சிக்கோ” என்றுவிட்டு, “என்னய ஃபாலோவ் பண்றாங்கனு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?”
“தெரியுமா… தெரியாதா அத மட்டும் சொல்லு” என்றாள் அழுத்தமாக.
“தெரியும்” என்றான் குறைந்து போன குரலில்.
“அப்புறம் ஏன் என்கிட்ட சொல்லலை?!” என்று கேட்கையில் குரலில் நடுக்கம் வந்துவிட, “திடிர்னு என்னாச்சு?” என்று அவன் பதறிட, நெற்றிப் பொட்டை அழுத்தி, “நீங்க பங்ஷன் அட்டன் பண்ணுங்க” என்று நடக்க ஆரம்பித்தாள்.
“பூஜா நில்லு” என்று அவள் முன் வந்து, “நீ பயப்பிடுவ-னு நினைச்சிதான் சொல்லலை. வேறு ஒரு காரணமும் இல்ல” என்றான்.
“பயப்படுவேன் சரிதான். ஆனா கவனமா இருந்திருப்பேனே?! செவன் அவர்ஸ் புக் பண்ண டிரைவர் திடிர்னு டயர் பஞ்சர்னு சொல்றதை… அதே நேரம் சரியா ஒருத்தன் டேக்ஸியோட வந்து நிக்கிறதை… நிச்சயமா டவுட் பண்ணிருப்பேன். அப்படி போய் மாட்டிருக்கவே மாட்டேன்” என்று கண்கலங்கினாள்.
கண்ணில் நீர் அதிகமாக, “இல்ல… உன்னய மட்டும் தப்பு சொல்ல கூடாது. நானும் இன்னுமே கவனமா இருந்திருக்கணும். ஆனா அரவிந்த், நீ என்கிட்ட சொல்லிருக்கலாம்” என்றும் சொன்னாள்.
“பூஜா” என்று மட்டும்தான் அவனால் சொல்ல முடிந்தது.
“எந்த இடம்னு தெரியாம… அந்த இருட்டு நேரத்தில காருக்குள்ள அவனோட இருக்கிறப்ப எவ்ளோ பயந்தேன்னு தெரியுமா… அரவிந்த்?!” என்று சொல்லும் போதே கண்ணீர் வழிந்துவிட, “பூஜா” என்று துடைக்க வர, ‘வேண்டாம்’ என்று கூறுவது போல் பின்னோக்கி சென்று கொண்டாள்.
கண்ணீரை துடைத்துக்கொண்டு, “அட்லீஸ்ட் சண்டை போட்டு போறப்பவாது சொல்லிட்டு போயிருக்கலாமே அரவிந்த, ஏன் சொல்லலை” என்று கஷ்டமான குரலில் கேட்டாள்.
அவன் ஏதோ பேச வர… அதைக் கவனியாமல், “நான் எப்படிப் போனா என்ன, எனக்கு என்ன ஆனா என்ன… அப்படிங்கிற எண்ணம்தான உனக்கு?” என்று மேலும் அழுதாள்.
அரவிந்த் எதுவும் பேச முடியாமல்… பேச வராமல் நின்றான்!
கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, “நான்தான் ஏதேதோ நினைச்சி, எனக்குதான் உன்னய பிடிச்சி…” என்று ஆரம்பித்தவள், “எதுக்கு இப்ப போய் அதலாம் பேசிக்கிட்டு…” என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, விழா நடக்கும் இடத்தைப் பார்த்தாள்.
பின். “போ… போய் பெங்காலி பேச தெரிஞ்ச தமிழ் பொண்ண தேடிப் பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கோ! இல்லயா… பெங்காலி பொண்ணயே கல்யாணம் பண்ணிக்கோ! நாம அப்ப வேண்டாம்னு சொல்லிக்கிட்டது… சொன்னதாவே இருக்கட்டும் அரவிந்த்” என்று படபடவென சொல்லிப் போய்விட்டாள்.
அவன், அவள் போவதைப் பார்த்தபடியே நின்றான்!
ட்ராமில் காதலனின் ஒரு விளக்கம்…
பாரம்பரியம் மாறா ட்ராம் ஒன்றில் பூஜா பயணித்துக் கொண்டிருந்தாள். சாலை நடுவில் அமிழ்ந்திருந்த தண்டவாளத்தில் கடகடவென்ற சத்தத்துடன் மற்ற வாகனங்களுக்கு இடையே, மிதமான வேகத்தில் ட்ராம் சென்றது.
சீலிங்கில் ஃப்ரெஷ் ஏர் ஃபேன், அதற்கிடையே விளக்குகள், இருபுறமும் கண்ணாடி சன்னல், அதன் ஓரத்தில் நேர் வரிசை அமைப்பில் இருக்கைகள் என்றிருந்தது ட்ராம். ஒரு இருக்கையில் திரும்பி அமர்ந்து, சன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்… பூஜா!
மஞ்சள் வண்ண டேக்சிகள், கை ரிக்ஷாக்கள், குதிரை வண்டிகள், சாலையோர கடைகள் என்று அனைத்தையும் பார்த்தபடி பயணிப்பது… புது அனுபவமாக இருந்தது. அதை ரசிக்கவும் செய்தாள்.
வெலிங்டன் நிறுத்துமிடத்தில் ட்ராம் நின்றது. ஒரு சிலர் இறங்கினர், ஓரிருவர் ஏறினர். ட்ராம் கிளம்பியதும்… பூஜா அருகில் வந்து அரவிந்த் அமர்ந்தான்.
அவன்தான் என்று மனம் உணர்ந்தாலும், அவள் திரும்ப கூட இல்லை. சன்னல் வெளியவே அவளது பார்வை இருந்தது. அர்விந்த், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பூஜா” என்று ஆரம்பித்தான்.
அதன்பின்னும் அவள் திரும்பாமல் இருந்தாள்.
இருந்தும் அவன் பேசினான். “உன்னை ஃபாலோவ் பண்ணி வர்றாங்கனு தெரிஞ்சதுக்கப்புறம், எங்கயும் நான் உன்னய தனியா விட்ருக்க மாட்டேன்”
வேடிக்கைப் பார்ப்பது போய், கண்களைச் சுருக்கி யோசித்தாள்.
“கோர்ட்க்கு உன்கூட வந்தது, ஸ்டேஷன் வெளிய உன்ன நிக்க வேண்டாம்னு சொன்னது… உன்னை வீட்ல ட்ராப் பண்ணது… இதெல்லாம் அதுக்காகத்தான் பண்ணேன். ஏன் பண்ணன்னு அப்ப கேட்டிருந்தா சரியா சொல்லிருப்பேனானு சத்தியமா தெரியல” என்று அன்றைய தன் காவல் மனதைச் சொன்னான்.
‘இதெல்லாம் இதற்காகவா?’ என்பது போல் லேசாக புருவம் உயர்த்தினாள்.
“ஆனா… இப்போ கேட்டா சொல்லிடுவேன். பூஜாக்கு எதுவும் ஆயிடுமோங்கிற பயத்திலதான் அப்படியெல்லாம் பண்ணேன்னு” என்று இன்றைய தன் காதல் மனதைச் சொன்னான்.
மனம் ஒருமாதிரி இதம் உணர, வெளியே பார்க்காமல் குனிந்து கொண்டாள்.
“அன்னைக்கு கோபமா பேசிட்டு போறப்போ, இத பத்தி நான் யோசிக்கவே இல்லைனு சொல்லமாட்டேன். ஆனா அடுத்த நாளே நீ இப்படிப் பண்ணுவனு நினைக்கலை பூஜா”
அன்றைய நிகழ்வு ஞாபகத்தில் வர… முகத்தைச் சுளித்துக் கொண்டாள்.
“அன்னைக்கு உன்மேல ரொம்ப கோபம். சவுரவ் சார் வேற ஸ்டேஷன்தான். பட் மீட்டிங், அது… இதுனு அவரைப் பார்க்கிற சிச்சுவேஷன் வரும். அவர் முன்ன நீ அப்படிப் பேசினா… அவர் என்னைப் பத்தி என்ன நினைப்பாரு சொல்லு?”
“சாரி, அப்படிப் பேசினதுக்கு” என்றாள் அவனைப் பார்க்காமல்.
“நீ மன்னிப்பு கேட்கணும்னு சொல்லல பூஜா. என்னோட கோபம் எதனாலனு சொல்றேன். ஆனா அடுத்த நாள் அப்படியே மாறியிருந்தேன்”
‘என்ன மாற்றம்?’ என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.
“அன்னைக்கு உன்னை மனசு ரொம்ப தேடுச்சி. எப்ப நீ கால் பண்ணுவன்னு காத்திருந்தேன். நீ ஃபோன் பண்ணிருப்பியானு எத்தனை தடவை மொபைல பார்த்தேன்னு… எனக்கே தெரியாது.
ஸ்டேஷன் வந்து இறங்கினதுமே… நீ வந்திருக்கியானுதான் தேடினேன். நான் சொல்றதலாம் உன்னால நம்ப முடியலைனா தப்பான்கிட்ட கேட்டுப் பாரு. நீ வந்தியான்னு அவர்கிட்ட கூட கேட்டிருந்தேன்”
அவள் அவனை நினைத்தது போல அவனும் அவளை நினைத்திருக்கிறான் என்று தெரிந்ததும் திரும்பி அவனைப் பார்க்க வேண்டுமென அவள் மனம் உந்தித் தள்ளியது.
“உனக்கு என்ன நடந்தாலும், எனக்கென்னனு இருப்பேனா பூஜா? ஏன் அப்படி சொன்ன, அதெப்படி இருக்க முடியும்… இருப்பேன்? ‘என்னால முடியலை’னு நீ அழுதப்ப…” என்றவன், “என்னை பாரு” என்று அவள் நாடியைப் பிடித்து தன் பக்கம் திருப்பினான்.
திரும்பினவுடனே அவன் கண்களை அவள் பார்க்க, “எனக்கு இங்க வரைக்கும் கண்ணீர் வந்திடுச்சு தெரியுமா?” என்று விழியோரங்களைக் காட்டி, “நான் ரொம்ப நாளைக்கப்புறம் கண்கலங்கினேன். அது உனக்காக” என்று அவள் விழிகளைப் பார்த்துச் சொன்னான்.
அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பெங்காலி பேச தெரிஞ்ச பொண்ணுதான் வேணும்னு கேட்டேன். ஆனா இப்ப இந்தப் பொண்ணதான பிடிக்குது. ஏற்கனவே நான் சொல்லிட்டேன். அத நீ கவனிச்சியானு தெரியல. இப்ப திரும்ப சொல்றேன். உன்னய பிடிச்சிருக்கு பூஜா… ஏன்டா வேண்டாம்னு சொன்னேன்னு இருக்கு”
அவன் சொன்னதைக் கவனித்ததால்தான், அவன் அணைப்பை ஏற்றிருந்தாள். ஆனால் காவல்நிலையத்தில் அவளைப் பின்தொடர்ந்து வந்தவன்கள் பற்றி அவன் சொன்னதிலிருந்து… அவன்மேல் அப்படியொரு கோபம். அவள் சரியாக பேசாதது… இதன் வெளிப்பாடே!
“இவ்ளோ என்னை எக்ஸ்பிளேன் பண்ண வேண்டியது வரும்னு நினைக்கல. சொல்ல நினைச்சதெல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். வேற எதுவும் சொல்லாம விட்ருந்தா நீ புரிஞ்சிக்கோ” என்று எழுந்தவன், “நான் வேண்டாமா பூஜா?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.
இமைகளைத் தாழ்த்திக் கொண்டு, “நான் யோசிக்கணும்” என்றாள்.
அதன்பின் அரவிந்த் ஏதும் சொல்லவில்லை. அடுத்த நிறுத்துமிடம் வந்ததும் இறங்கிக் கொள்ள, திரும்பவும் பூஜா சாலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
வெளியே கேட்கின்ற வாகன சத்தங்கள் எதுவும் அவள் காதில் விழவில்லை! அவன் பேசிப்போன வார்த்தைகள்தான் செவிப்பறை எங்கும் முட்டி மோதிக் கொண்டிருந்தன!!
மானிக்டாலா பகுதி காவல்நிலையம்!
நான்கு நாட்கள் கடந்திருந்தது.
தப்பானை சந்திக்க பூஜா வந்திருந்தாள். பார்த்ததுமே ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இனிப்புகள் நிறைந்த பெட்டியை நீட்டி, “எனக்கு வேலை கிடைச்சிருச்சி” என்று இலகுவான ஆங்கில வார்த்தைகளில் சொல்ல, கைகுலுக்கி வாழ்த்து சொன்னார்.
பின், “அரவிந்த் சார கூப்பிடவா?” என்று கேட்டதற்கு, “உங்களைப் பார்த்து இத சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்” என்று சொல்ல, சிரித்துக் கொண்டார்.
“கம்ப்ளைன்ட் என்னாச்சு?”
“ஓரளவு எல்லாம் முடிஞ்சிருச்சு”
“அப்போ இனி இங்க வரமாட்டியா?” என்று ஒருமாதிரி குரலில் கேட்டார்.
அவரை ஒருமுறை பார்த்துவிட்டு, “உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க அங்கிள்” என்றதும், வீட்டு விலாசம் சொல்லிவிட்டு, “பசங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு. நானும் என் வொய்ப் மட்டும்தான் இருக்கோம்” என்றார்.
“அப்பாவோட ஒருநாள் வீட்டுக்கு வர்றேன்” என்றாள். சற்றுநேரம் அவருடன் பேசிவிட்டு, காளிகாட் காவல் நிலையம் சென்றாள். சவுரவை பார்த்து வேலை கிடைத்த விடயத்தைச் சொல்லிவிட்டு வீடு போய் சேர்ந்தாள்.
கல்லூரி வீதியில் காதலர்களின் ஓர் ஆசை…
எங்கு பார்த்தாலும் பழைய, புதிய புத்தகங்களின் வாசனை நிறைந்த புத்தக கடைகள் உள்ள கல்லூரி வீதி! இங்கே பாதசாரிகளின் நடைபாதையிலும் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு விற்கப்படும்!
இது இந்தியாவின் மிகப்பெரிய புத்தக சந்தை. மற்றும் உலகின் மிகப்பெரிய இரண்டாவது புத்தக சந்தை ஆகும்!
இங்கேதான் பூஜா வந்திருந்தாள்!
எட்டடி உயரத்திற்குப் புத்தகங்கள் அடிக்கி வைத்திருந்த ஒரு கடையில் நின்று தனக்கு வேண்டிய புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தாள். சில புத்தகங்களை ஏற்கனவே தேர்ந்தெடுத்து கையில் வைத்திருந்தாள்.
அக்கணம் அவள் பின்னிருந்து, “ஹாய்” என்று அரவிந்த் வந்து நிற்க, யாரென தெரியாதது போல் கடந்து போக, “என்னைத் தெரியலையா?” என்று அவள் குறுக்கே வந்து நின்று கேட்டான்.
புத்தகத்தைத் தேடியபடி, “ஏன் தெரியாம… நல்லாவே தெரியும். பேரு அரவிந்த். மானிக்டாலா இன்ஸ்பெக்டர். அன்ட் முக்கியமா… நான் மேரேஜ் வேண்டாம்னு சொன்ன பையன்” என்றாள்.
இதற்கு முன் போன்றில்லாமல்… இன்று இயல்பாக பேசினாள். இப்படிப் பேச காரணம், அவன் செயலுக்கு விளக்கம் கிடைத்ததால் மட்டும் அல்ல!
ஏனெனில் விளக்கங்களைத் தாண்டியதுதானே விருப்பங்கள்!!
அவனைவிட்டு விலகிட அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் விருப்பத்தைச் சொல்லுமுன் விரும்புவனை சற்று அலைக்கழித்துப் பார்க்க ஓர் ஆசை! இது ஒருவித காதல் ஆசை!!
அவள் பேசியதே போதுமென நினைத்தவன், “மறு ஒளிபரப்பு… நான் உன்னய சொன்ன மாதிரி, நீயும் என்னய சொல்ற” என்று சிரித்து, “சரி, ஏன் ஸ்டேஷன் வந்திட்டு என்னய பார்க்காம போன பூஜா?” என்று அவள் கையிலிருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டான்.
“தப்பான் அங்கிள் சொல்லிட்டாங்களா?” என்றவள், “நீங்கதான ஸ்டேஷனுக்கு பார்க்க வர கூடாதுனு சொன்னீங்க” என்றாள்.
“ஏன் இப்படியே பேசற… முன்ன மாதிரி பேச மாட்டியா?”
“முன்ன பேசவா செஞ்சேன்… உங்களைத் தொந்தரவுதான பண்ணேன்” என்று தேடின புத்தகம் கிடைத்ததும் அவனிடம் தந்தாள். அதை வாங்கினாலும், முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
“சீரியஸா எடுத்துக்காதீங்க. கூலா இருங்க” என்று அவன் தோளில் தட்டிக் கொடுக்க, “உன் பிளான் புரிஞ்சிடுச்சி… நான் சொன்னதெல்லாம் சொல்லிக் காட்ட போற! ஆனா பூஜா, என்னால சமாளிக்க முடியும்” என்று தெம்பாக சொன்னவன், “ஜாப் கிடைச்சதை ஏன் என்கிட்ட சொல்லலை?” என்றான்.
“ப்ரண்ட்ஸ்கிட்ட மட்டும் சொன்னேன். உங்களை மறந்துட்டேன்”
“ஒன்னு தப்பான்… இன்னொரு ப்ரண்ட் யாரு?”
அடுத்த புத்தகத்தை தேடியபடி, “சவுரவ் சார்” என்றாள்.
“அவரு… உன் ப்ரண்டா?” என்று ஆச்சரியப்பட்டவன், “எனக்கெல்லாம் ட்ரீட் இல்லையா பூஜா?” என்று இயல்பாக கேட்டான்.
“ஏன் இல்ல… கொடுத்திட்டா போச்சு”
“நிஜமா சொல்றியா!?”
“ம்ம், உங்களுக்கு பிடிச்ச ரெஸ்டாரன்ட் சொல்லுங்க, ட்ரீட் கொடுத்திடலாம்”
“பார்க் ஸ்ட்ரீட்ல ஒரு ரெஸ்டாரன்ட்! அங்க செய்ற மட்டன் கொபிரஜி எனக்கு ரொம்ப பிடிக்கும். மின்ஸிடு மட்டன், கார்லிக், ஜிஞ்சர் போட்டு…” என்று ஆர்வமாக ஆரம்பிக்கவும், “போதும்… போதும். நாம என்ன டிஷ் சமைக்கவா போறோம்… சாப்பிடத்தான போறோம்? நாளைக்குப் பார்க்கலாம்” என்று அடுத்த புத்தகத்தைத் தேடிப் போனாள்.
அதன்பின்னும் அவன் அவளைப் பார்த்துக் கொண்டே நடந்து, “ட்ரீடெல்லாம் தர்ற, அப்படினா நான் வேணும்னுதான பூஜா?” என்று கேட்க, “யோசிச்சி சொல்றேன்” என்றாள் உள்ளுக்குள் சிரித்தபடி!
தன்னை அலைக்கழிக்க போகிறாள் என்று தெரிந்தும், அதை அனுபவிக்க ஓர் ஆசை அரவிந்திற்கு! இதுவும் ஒரு வகையான காதல் ஆசை!!
கோஷே கோஷேயில் காதலியின் ஒரு குறும்பு…
பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள ‘கோஷே கோஷே’ உணவகம்!
வரிசையாக கேட் வசதியுள்ள வீடுகள் இருந்த தெருவில் இந்த உணவகம் அமைந்துள்ளது. வெள்ளை நிற ‘கோஷே கோஷே, பெங்காலி குசைன் அட் இட்ஸ் பெஸ்ட்’ என்ற எழுத்துகள் தாங்கிய மஞ்சள் நிற பெயர் பலகை சாப்பிட வருவோரை வரவேற்றது.
இங்கேதான் அரவிந்த் வந்திருந்தான்!!
அந்த தெருவிலிருந்த ஒரு மரத்தடியில் பைக்கை நிறுத்திவிட்டு, அதன்மேல் அமர்ந்திருந்தான். வெகுநேரம் காத்திருக்கிறான். பூஜா இன்னும் வரவில்லை. அலைபேசி பார்ப்பதும், அவள் வருகிறாளென பார்ப்பதுமாக இருந்தான்.
சற்றுநேரத்தில் டேக்ஸியில் வந்து பூஜா இறங்குவதைப் பார்த்துவிட்டு, அலைபேசியை பாக்கெட்டில் வைத்தான். அவள் அருகில் வந்ததும், “எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது?” என்றான்.
“தேவைனா, நீங்க வெய்ட் பண்ணத்தான் செய்யணும்” என்று வந்ததும் அவள் வேலையை ஆரம்பிக்க, “இது… நான் சொல்லிருக்கேனா?” என்று கேட்டான். “ம்ம்” என்றாள்.
“பயங்கிற பசி பூஜா, வா சாப்பிட போகலாம்” என்று பைக்கிலிருந்து இறங்க போக, “வேண்டாம் வேண்டாம்” என்று கைப்பையிலிருந்து எதையோ எடுக்க, “என்னது?” என்று கேட்டான்.
ஒரு டிஃபன் பாக்ஸை நீட்டி, “என்னோட ட்ரீட்” என்றதும்… அவ்வளவு காதலுடன் அவளைப் பார்த்து, “ஹே பூஜா! எனக்காக நீயே ப்ரிபேர் பண்ணி கொண்டு வந்தியா?” என்று கேட்க, ‘ஆமாம்’ என்பது போல் ஒருமுறை இமைகள் மூடித் திறந்தாள்.
“நான் உனக்கு அவ்ளோ ஸ்பெஷலா?”
“ஏன் பேசிக்கிட்டே இருக்கீங்க… ஓபன் பண்ணிப் பாருங்க”
“நீ பதில் சொல்லு… நான் உனக்கு ஸ்பெஷலா?”
“முதல ஓபன் பண்ணி பாரு… அப்புறம் கேள்வி கேளு, பதில் சொல்றேன்”
அவ்வளவுதான்… அடுத்தநொடியே அவசர அவசரமாக பாக்ஸை திறந்தான். ஆனால் உள்ளேயிருந்த குழம்பிலிருந்து நல்லெண்ணெய்யின் வாசம் வர, அஷ்டகோணங்களில் முகத்தைச் சுளித்தான்.
“அரவிந்த்… இப்பவும் அந்தக் கேள்வி கேட்பியா?”
“எனக்கு இந்த ஆயில் பிடிக்காதுனு தெரிஞ்சும்… இவ்ளோ ஊத்தி சமைச்சிக் கொண்டு வந்து கொடுக்கிற. நீ பண்றது டூ மச் பூஜா”
அப்படியொரு சிரிப்பு வந்தது. ஆனாலுமே அழுத்தமாக நின்று சமாளித்தாள்.
“ஹே… இது இருக்கட்டும். வா நாம ரெஸ்டாரன்ட் போய் சாப்பிடலாமே” என்று கெஞ்சிக் கேட்டுப் பார்த்தான்.
“முடியாது” என்றுவிட்டாள்.
“இத என்னால சாப்பிட முடியாது. இந்தா வீட்டுக்கே எடுத்திட்டுப் போ” என்று பாக்ஸை நீட்ட, “எனக்கு இது ரொம்ப பிடிக்கும். ஆனா பாருங்க உங்களுக்குப் பிடிக்கவேயில்ல. நாம வேண்டாம்னு சொல்லிக்கிட்டது எவ்வளவோ நல்லது. இல்லையா அரவிந்த்?” என்று கேட்டாள்.
பாக்ஸை பைக் பெட்ரோல் டேங் மேல் வைத்துவிட்டு, “இதுகூட நான்தான் சொல்லிருக்கேனா?” என்று பரிதமாக கேட்க, “ம்ம்ம்” என்றாள்.
“ச்சே, நிறைய சொல்லி வச்சிருக்கேன் போல” என்று சாப்பிட ஆரம்பித்தான். இரண்டே வாய் வைத்துவிட்டு, “நான்லாம் எப்படி உனக்குப் பிடிச்சதை குக் பண்ணிக் கொண்டு வந்தேன். நீயும் இருக்கியே” என்று பொருமினான்.
மூன்றாவது வாய் வைத்ததும் அவனது முகம் போன போக்கை பார்த்துவிட்டு, மனம் ஒருமாதிரி உணரவும், “இவ்ளோ பிடிக்காம நீங்க சாப்பிட வேண்டாம் அரவிந்த்” என்று டிஃபன் பாக்ஸை எடுக்கப் பார்த்தாள்.
அவளை எடுக்க விடாமல் தடுத்து, “யாரு பிடிக்காம சாப்பிடறா? அதலாம் பிடிச்சிதான் சாப்பிடறேன்” என்று அடுத்த வாய் வைக்க, “பார்த்தா அப்படி தெரியலயே?” என்று அவள் புருவம் உயர்த்த, “உன்னைப் பிடிச்சதாலதான், இந்த சாப்பாட சாப்பிடறேன்” என்றான்.
அவனுடைய இஷ்டமான பேச்சால், அவளுடைய இதயம் உணர்ந்த உணர்வை மறைக்க… மெனக்கெடல் எடுத்து மௌனமாக இருந்தாள்!
கடகடவென உண்டு முடித்து அவள் கையில் பாக்ஸை திணித்து, “ஒரேயொரு ஃபேவர்… பண்ண முடியுமா?” என்று கேட்டான்.
“என்ன… நாளைக்கும் சமைச்சி கொண்டு வரணுமா?” என்று கேட்க, அவன் முறைத்ததைப் பார்த்து, “சரி சரி என்ன ஃபேவர் சொல்லுங்க” என்றாள்.
“தயவுசெஞ்சி சாப்பாடு எப்படி இருந்ததுனு கேட்டிடாத” என்று பைக்கை ஸ்டார்ட் செய்தவன், “இப்ப சொல்லு… நாம வேண்டாம்னு சொல்லிக்கிட்டது தப்புதான?!” என்று கேட்டான்.
காதல் இருந்தும், “ம் ம் ம் யோசிச்சி சொல்றேனே” என்றாள் சற்றும் கருணை இல்லாமல்.
“இதுக்கு என்ன அர்த்தம்… இன்னும் பிளான் இருக்குனுதான?”
“இல்ல… நீ இன்னும் பேசி வச்சிருக்கேன்னு அர்த்தம்”
“என்னமோ பண்ணிக்கோ. ஆளைவிடு இன்னைக்கு” என்று விருட்டென்று சென்றான். அவன் போகும் வேகத்தை பார்த்து சிரித்தவள், “அச்சோ… பாவம் இவன்” என்று வேறு சொல்லிக் கொண்டாள்.
அதன்பின் உணவகத்திற்குள் சென்று, அரவிந்த் விரும்பி உண்ணும் உணவை தருவித்து ஒரு வாய் வைத்துப் பார்த்தாள். அவனது முகம் அஷ்டகோணலாக போனதைவிட ஒருபடி அதிகமாக அவள் முகம் போனது.
இருந்தாலும்… முதல்முறை பெங்காலி வகை உணவை ஒருவித இஷ்டத்தோடு சாப்பிட்டு முடித்தே அங்கிருந்து பூஜா கிளம்பினாள்.
மொலிக் காட் மலர் சந்தையில் காதலனின் ஒரு மனக்குமுறல்…
நேரம் காலை ஐந்தரை… மொலிக் காட் மலர் சந்தை!
சூரிய உதயத்திற்கு முன்னே விதவிதமான வண்ணங்களில் வகைவகையான பூக்களின் அணிவகுப்பு இங்கே ஆரம்பித்துவிடுகிறது! இது இந்தியாவின் பழமையான, மிகப்பெரிய மலர் சந்தை ஆகும்! மற்றும் ஆசியாவின் பெரிய பூ சந்தைகளில் ஒன்று!!
ஒழுங்கற்ற வரிசையில் இருந்த பூ கடைகள்… பெரிய பெரிய கூடை நிறைய பூக்கள், பூமாலைகள்… பூக்களை எடை போடவென்று சிறு கூடைகள்… தரையெங்கும் சகதி, பூக்களின் தண்டுகள், இலைகள்… ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலான சாமந்தி மாலைகளைத் தோள்களில் சுமந்து விற்கும் விற்பனையாளர்கள்… என்றிருந்தது மலர்சந்தை!
கூடவே பூ வியாபாரத்தின் குரல்கள் வேறு!!
காளி பூஜாவிற்காக வீட்டை அலங்கரிக்க பூக்கள், பூஜைக்கான மாலைகள் வாங்கவென்று அப்பாவும் மகளும் மலர் சந்தைக்கு வந்திருக்கிறார்கள். விழாக்கால கூட்டத்திற்கு இடையே இரண்டு கையிலும் வாங்கிய பூக்களைச் சுமந்தபடி சேகரனுடன் பூஜா சென்று கொண்டிருந்தாள்.
இன்னும் வாங்க வேண்டும் என்பதால், அப்பாவிடம் சொல்லிவிட்டு வாங்கிய பூமாலைகளை காரில் வைக்க வெளியே வந்தாள்.
பூக்கூடைகளை இறக்கிக் கொண்டிருந்த இடத்தைத் தாண்டி நிறுத்தியிருந்த கார் அருகே வந்து நிற்கவும், “குட் மார்னிங்” என்று அரவிந்த் பைக்கில் வந்து நின்றான்.
“என்ன போற இடத்துக்கெல்லாம் வர்றீங்க?”
“புக் கம்மியான விலையில வாங்கணும்னா எல்லாரும் காலேஜ் ஸ்ட்ரீட்தான் போவாங்க. அதேமாதிரி… என்ன பெஸ்டிவெல்னாலுமே எல்லாரும் இங்கதான் பூ வாங்க வருவாங்க”
“ஓ நீங்களும் செலிப்ரேட் பண்ணுவீங்களா?”
“இப்பதான் கொல்கத்தா வந்த நீயே செலிப்ரேட் பண்றப்ப… இங்கயே பிறந்து வளர்ந்த நாங்க செலிப்ரேட் பண்ண மாட்டோமா?!” என்றவன், “அதெல்லாம் இருக்கட்டும்… ஈவினிங் மீட் பண்ணலாமா?” என்றான்.
எப்படி இவனை வெறுப்பேத்தலாம் என்று யோசித்துவிட்டு, “இன்னைக்கு முடியாது… வேலை இருக்கு” என்றதும், “என்ன வேலை?” என்றான்.
“அது என்னெனா… என் மாமா… எனக்காக… ஒரு அலைன்ஸ் பாத்திருக்காங்க. ஸோ…” என்று அவள் இழுத்து முடிக்கும் முன்னே, வேகமாக பைக்கிலிருந்து இறங்கி வந்து, “என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ?” என்று கேட்டு அவளை நெருங்கி நின்றான்.
ஆட்கள் அவரவர் வேலையைப் பார்க்கின்ற சூழலை சட்டென்று ஒருமுறை பார்த்துவிட்டு, “அரவிந்த்!” என்று அழுத்தமாக சொன்னாள்.
இன்னும் நெருங்கி நின்று, “என்ன அரவிந்த்?! உன் மாமாவே உனக்குப் பிடிக்காது. இதுல அவர் வந்து உனக்கு அலைன்ஸ் பார்ப்பாராம். அத… நீ ஏத்துப்பியாம்? நம்பற மாதிரி பொய் சொல்லு” என்றான்.
‘அச்சோ, என்ன இவ்ளோ கோபம் இவனுக்கு?’ என்று குனிந்து கொண்டாள்.
“அன்னைக்கு நான் பொண்ணு பார்க்க போறேன்னு சொன்னதுக்காகத்தான இத சொல்ற… புரியுது” என்றவன், “பூஜா… முதல என்னய பாரு” என்றான்.
அவள் குனிந்தே இருக்கவும், “பூஜா…” என்று அழுத்தமாக அழைக்க, “என்ன அரவிந்த் வேணும் உனக்கு?” என்று நிமிர்ந்து பார்த்தாள்.
நேராக அவள் விழிகளைப் பார்த்து, “மனசுல நான்தான் இருக்கேன்னு இந்த கண்ணுல அப்பட்டமா தெரியுது… ஆனா இந்த வாய் எதுக்கு இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கு?” என்றான்.
“உங்களுக்கு என்னமோ ஆச்சு… நான் போறேன்” என்று போக போனவளைப் பிடித்து அவனருகில் நிறுத்தியதும், “நார்மலா இருங்க… இது பப்ளிக் பிளேஸ் அரவிந்த்” என்றாள்.
“இதுவும் நான் சொன்னது. வரிக்கு வரி சொல்லிக் காட்டிடனும் அப்படித்தான பூஜா! பிஹெச்டி பண்ணது என்னமோ மெலோட்ராமா அன்ட் ஷேக்ஸ்பியர். ஆனா பிடிக்குதுனு சொல்றவனை போட்டு… இந்தப் பாடு படுத்தறது!” என்று படபடவென பேசினான்.
“அதுக்கும்… இதுக்கும்… என்ன அரவிந்த் சம்பந்தம்?” என்று கேட்க, “எனக்கு தெரியாது” என்று சொல்லி, மலர் சந்தைக்குள் போய்விட்டான்.
“உஃப்” என்று இலகுவாக மாறியவள், “ரொம்ப பேசிட்டோம் போல!” என்று முணுமுணுத்தபடி பூக்களை காருக்குள் வைத்தாள். எல்லாம் முடிக்கையில், அரவிந்த் திரும்பி வந்து நின்றான்.
‘இன்னும் என்ன?’ என்பது போல் அவள் பார்க்க, “இவ்ளோ சொல்லிட்டு இத சொல்லாம போனா நல்லா இருக்காது… ஸோ ஐ லவ் யூ” என்றான்.
அத்தோடு விடாமல், “அப்புறம் பூஜா… இதுக்கு நீ என்ன சொல்ல போற?” என்று கேட்க, “என்ன சொல்லணுமோ… அத நாளைக்கு சொல்றேன். இப்போ நீங்க போங்க… போதும் பேசினது” என்றாள் கறாராக.
“நாளைக்கு என்ன செய்ய போறியோ?” என்று புலம்பிக் கொண்டே அரவிந்த் போனதும், “இப்படிதான் லவ்வ சொல்வியா” என்று குறைபட்டுக் கொண்டாள்.
குறை கூறினாலும், அன்று முழுதும் அவன் கூறியதை நினைத்து… நினைத்து இதழ்களில் குறையாத புன்னகையுடனே அவள் வலம் வந்தாள்!!
ஹௌரா பிரிட்ஜில் ஒரு காதல்…
ஹௌரா பிரிட்ஜ்! இரவு நேரம் என்பதால் பாலத்தின் இரும்பு கட்டமைப்பில் பலவித வண்ணங்களில் விளக்குகள் ஒளிர்ந்து மிளிர்ந்தன! பூஜா, இதன் அடிவாரத்தில் நின்று கொண்டிருந்தாள். லேசாக தூறல் விழுந்தது. குடை இருந்தும்… பிடிக்காமலே வைத்திருந்தாள்.
கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்ததும், சற்று நடக்கலாம் என்று தோன்றியது தண்டவாளம், மொலிக் பூ சந்தை, ஹூக்ளி ஆறு என்றிருந்த பாலத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்தபடி… அதன் நடைபாதையில் நடந்தாள்.
மேலேறி வந்ததும் இருவழிச் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் பாலத்தில் ஏற்பட்ட சிறு அதிர்வை உணரந்தபடியே நடந்தாள்.
சற்றே தூறல் வலுக்க ஆரம்பித்த நேரம்… ஓடி வந்து அவளருகில் அரவிந்த் நின்றான். பூஜா, “ப்ச், உனக்காக எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது?” என்று கோபித்துக் கொள்ள, “சாரி… சாரி!” என்று அவளிடமிருந்து குடையை வாங்கி இருவருக்கும் சேர்த்து பிடித்தான்.
இன்னும் பூஜா உர்ரென இருக்க, “அதான் சாரி சொல்லிட்டேன்ல” என்று அவள் தோளில் கை போட்டபடி நடந்துகொண்டு, “சரி சொல்லு… என்ன சொல்ல போற?” என்று ஆர்வமாக கேட்டான்.
பையிலிருந்து ஒரு மடிக்கப்பட்ட காகிதத்தை எடுத்து தந்து, “நான் சொல்ல வேண்டியதை இதுல எழுதிருக்கேன். நீங்க படிச்சி தெரிஞ்சிக்கோங்க” என்று சாந்தமாக சொன்னாள்.
“இப்பத்தான் பூஜா குட் கேர்ள்!” என்று காகிதத்தைத் திறந்து பார்த்தவன் அதிர்ச்சியாகி, “ஏ… இதென்ன தமிழ்ல இருக்கு. பழிவாங்கற நேரமா இது?! இதெப்படி என்னால வாசிக்க முடியும்?” என்று படபடத்தான்.
“அது உங்க பிரச்சனை. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்” என்று எளிதாக சொல்ல, இரக்கமே இல்லையா என்பது போல் பார்த்தான்.
சூழலைப் பார்த்தவள், “இந்த சில் கிளைமேட்ல… இப்படி நின்னு வேடிக்கை பார்க்க நல்லா இருக்குது” என்று ரசனையுடன் சொல்ல, அவன் கொதித்துப் போய் நின்றான்!
“அரவிந்த் தூறல் மேல படுது பாருங்க… குடையை நல்லா பிடிங்க” என்று வேறு சொல்ல, குடையை அவளது கையில் திணித்து, “உனக்கு வேணும்னா, நீயே பிடிச்சிக்கோ” என்றான்.
“இப்படி பண்ணா நான் கிளம்பிடுவேன். அப்புறம் நீங்க நனைஞ்சிடுவீங்க”
“ரொம்பதான் அக்கறை… நான் நனைஞ்சாலும் பரவால்ல. நீ கிளம்பு”
“நிஜமா போயிடுவேன்”
“கிளம்புன்னு சொல்லிட்டேன்ல”
“அரவிந்த் போயிடுவேன்”
“அட போம்மா. சும்மா சொல்லிக்கிட்டே நிக்கிற… ஆனா நீ போன வேகத்தில திரும்பி வருவ?” என்று அலைபேசியை எடுத்தான்.
“ஓ! அப்படி ஒரு நினைப்பா… பார்க்கலாம்” என்று போனாள்.
“ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம்” என்று அவன் சொல்ல, ‘இவன் என்ன பண்ண போறான்?’ என்ற யோசனையுடன் நடந்தவளுக்கு, “க்கா… தமிழ் டெக்ஸ்ட் இருக்க இமேஜ் ஒன்னு அனுப்புறேன். உனக்குதான் தமிழ் படிக்க தெரியுமே, அத வாசிச்சி சொல்லு” என்று அவன் பேசுவது கேட்டது.
அவ்வளவுதான்… ஓடி வந்து, “அரவிந்த்! என்ன பண்ற… அது லவ் லெட்டர்” என்று வேகமாக அலைபேசியை வாங்கி… அழைப்பை துண்டிக்க பார்க்க… அதில் அழைப்பே இல்லாமல் இருந்தது.
கோபத்துடன் அவனைப் பார்க்கவும், “ஹே, இத வாசிக்ககூட தேவையில்ல. நான்தான் நேத்தே சொல்லிட்டேனே, உன் கண்ணுல லவ் தெரியுதுனு.
அதோட வேண்டாம்னு சொல்றதுக்குப் போய்… யாராவது ஒன் அவரா வெய்ட் பண்ணுவாங்களா… போடானு சொல்லிட்டு போகாம இவ்ளோ பெரிய லெட்டர் எழுதுவாங்களா? கொஞ்சம் நீ யோசிச்சிருக்கணும்” என்று சிரித்தான்.
என்ன செய்யவென தெரியாமல், “உன்னை” என்று கோபத்துடன் அவனருகில் வர… அடிக்க வருகிறாளோ என்று கைகளால் மறைத்துக் கொள்ள… அந்தக் கைகளைப் பிரித்து… அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
சற்றும் அவன் இதை எதிர்பார்க்கவில்லை!
சிலநொடிகள் பேசாமல் இருந்தவன், “நாம வேண்டாம்னு சொல்லிக்கிட்டது கேன்சல் ஆயிடுச்சில பூஜா” என்று கேட்டான்.
“ஆமா”
“நான் உனக்கு ஸ்பெஷல்தான”
“ஆமா”
“நான் வேணும்தானா”
“ஆமா”
“என்னய பிடிச்சிருக்குல”
“ரொம்ப பிடிச்சிருக்கு… ஆனா எத்தனை கேள்வி கேட்ப” என்றாள் சலிப்புடன்.
இருந்தும் அவன், “இதுக்கப்புறம் இத சொல்ல தேவை இல்லதான். ஆனா நீயும் சொல்லணும்னு தோணுதே…” என்றான்.
நிமிர்ந்து அவள் அவனைப் பார்க்க, “கேட்கிறது புரியுதா…?” என்று அவன் அவளைப் பார்க்கவும், “புரியுது புரியுது… ஐ லவ் யூ!” என்று சிரித்து, மீண்டும் முகம் சாய்த்துக் கொண்டாள்!
இவள் இதை இன்னும் சரியாக சொல்லியிருக்கலாம் என்று எண்ணினாலும், அவள் பக்கமாக சரிந்திருந்த மனது, விரிந்த புன்னகையை அவன் முகத்தில் கொண்டு வந்தது!!
***************
EPILOGUE
மானிக்டாலா பகுதி
அடுத்த நாள்!
அக்காவிடம் தங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்பதற்காக… அரவிந்த் பூஜாவை அவன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். இருவரும் வாணி முன் நின்றார்கள்.
பூஜாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு… தம்பியைப் பார்க்க, “அக்கா அது வந்து” என்று அவன் சொல்லும் போதே, “ஏன்டா, போட்டோ பார்த்த அப்பவே கேட்டேன்ல, இப்ப வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறமா பிடிக்குதுனு வந்து நிக்க மாட்டியேனு… நான் கேட்டேன்ல?!” என்றாள்.
“ம்ம் கேட்ட”
“கடைசில நான் சொன்ன மாதிரிதான நடந்திருக்கு”
“ஆமா”
“என்னடா ஆமா… இப்ப மட்டும் இவளுக்கு பெங்காலி தெரிஞ்சிடுச்சா…” என்று கேட்க… பூஜா சிரித்துவிட, “ப்ச் சிரிக்காத பூஜா” என்று அரவிந்த் சொல்ல, “நீ எதுக்குமா சிரிக்கிற… இப்பவும் என் தம்பி போலீஸ்தான்” என்று வாணி கூற, ‘அச்சோ’ என்று பூஜாவின் சிரிப்பும் மறைந்தது.
இப்போது அரவிந்த் சிரிக்க… வாணி, “சிரிக்காதடா, அதுக்கப்புறமும் எத்தனை தடவை இவளைப் பிடிச்சிருக்கானு கேட்டிருப்பேன்… அப்பெல்லாம் இல்ல இல்லனு சொன்ன… இப்போ இப்படி வந்து நிக்கிற?” என்றாள்.
“க்கா, அப்போ சரியா புரியாம… தெரியாம இருந்தது! இப்போ புரிஞ்சிடுச்சி, அவ்ளோதான்” என்றதும்… அதற்குமேல் தம்பியை எதுவும் கேட்காமல், “சரிடா, யாரு ஃபர்ஸ்ட் லவ் சொன்னது?” என்றாள்.
“பூஜாதான்” என்றான்.
‘அப்படியா?’ என்பது போல் வாணி பூஜாவைப் பார்க்க… இல்லை என்று அவள் தலையாட்ட… வாணி தம்பியை முறைத்தாள். “அய்யோ அக்கா…” என்று அரவிந்த் ஏதோ பேச வர, “சும்மா இருடா” என்ற வாணி, “நீ சொல்லு பூஜா, இவன்தான சொன்னான்” என்று கேட்டாள்.
அதற்கும் இல்லையென பூஜா தலையாட்ட, “எல்லாத்துக்கும் இல்ல இல்லனு சொன்னா என்ன அர்த்தம்… வாயைத் திறந்து பேசு” என்றாள் வாணி.
அதுவரை அமைதியாக இருந்தவள், “அது வந்து… எங்க கல்யாணம்… நீங்களும், என் அப்பாவும் பார்த்து பண்ணிவைக்கிற ஒரு அரேஞ்டு மேரேஜ்” என்று பாந்தமாக சொல்லி முடித்தாள்.
வாணி, “ஹே, இத என்னய நம்ப சொல்றியா” என்றுவிட்டு, “என்னடா… நீ இவளோட பேசி சமாளிச்சிருவியா?” என்று சிரிக்க, “என்னய விடு, பூஜாக்கும் எனக்கும் டேர்ம்ஸ் நல்லா இருக்கும்னு சொன்னியே, நீ எப்படிச் சமாளிக்க போற?” என்று அவனும் சிரித்தான்.
வாணி இன்னும் சிரித்தபடி, “எப்படி சமாளிக்கிறேன் மட்டும் பாரு” என தெம்பாக சொன்னதும், “இப்படித்தான் நானும் சொன்னேன்” என்று அரவிந்த் நொந்து கொள்ள, “என்ன சொல்ற? புரியலை” என்றாள்.
“ஒன்னுமில்லை. ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க. நான் ஸ்வீட் எடுத்திட்டு வர்றேன்” என்று போக, “எனக்கு ரொம்ப நாளா உன்கூட பேசணும்னு ஆசை. வா வந்து உட்காரு” என்று வாணி பூஜாவுடன் பேச ஆரம்பித்தாள்.
அரவிந்த் வந்ததும் அவனும் அவர்களது பேச்சில் கலந்து கொண்டான். சற்று நேரத்திற்குப் பின் மூவரும் சேர்ந்து சேகரனைப் பார்க்க சென்றார்கள்.
காளிகாட் பகுதி!
பால்கனியின் சிறு செடிகளைப் பராமரித்துக் கொண்டிருந்தார் சேகரன். அழைப்புமணி சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தார். பூஜாதான்… கூடவே அரவிந்த், வாணியும் வந்திருந்தார்கள்.
அவர் ஏதும் கேட்கும் முன்னே பூஜா, “ப்பா” என்று அரவிந்தையும் தன்னையும் காட்டிட, அவர்களது மனம் புரிந்து ஒரு முறுவல் செய்தார்.
பின், “இந்த நாளுக்காக ரொம்ப எதிர்பார்த்து இருந்தேன்” என்று சந்தோஷம் கொண்டார். புன்னகையுடன், “வாம்மா வாணி… வாங்க அரவிந்த்” என்று வரவேற்றதும், பூஜாவுடன் சேர்ந்து இருவரும் வீட்டிற்குள் வந்தனர்.
அரவிந்தைப் பார்த்தார், பேன்ட் ஷர்ட்டில் இருந்தான். மகளைப் பார்த்தார், புடவையில் இருந்தாள். இருவரையும் அந்த உடையில்… அருகருகே நிற்பதைப் பார்த்ததுமே, “ஒரு நிமிஷம் ரெண்டு பேரும் வாங்க” என்று பூஜை அலமாரி இருக்கும் பக்கம் கூட்டிச் சென்றார்.
விழாக்கான அலங்காரத்துடனே சாமி படங்கள் இருந்தன.
விளக்கு ஏற்றி அவர்கள் வாழ்விற்காக வேண்டிக் கொண்டவர், இருவருக்கும் சந்தனம் வைத்துவிட்டார். வாணி, “நான் இத செய்ய மறந்திட்டேன்” என்று சொல்ல, “பரவாயில்ல, நீயும் வா” என்று அவளுக்காகவும் வேண்டி சந்தனம் வைத்துவிட்டார்.
பின், “உட்காருங்க டீ போட்டு எடுத்திட்டு வர்றேன்” என்று சொல்ல, “நீங்க இருங்கப்பா… நான் பார்த்துக்கிறேன்” என்று பூஜா சமையலறை சென்றதும், மூவரும் சோஃபாவில் அமர்ந்தனர்.
சேகரன் குடும்ப உறவுகள் பற்றி வாணி கேட்க, அவர் சென்னையில் வசிக்கும் தங்கை குடும்பம் பற்றிச் சொன்னார். அவள் மாமியார் குடும்பத்தைப் பற்றி சொன்னாள். இரு குடும்பங்களும் சென்னையில் இருப்பதால் அதைப் பற்றிச் சில வினாடிகள் பேசினார்கள்.
சற்றுநேரம் இதில் கழிந்த பின், “கல்யாணத்த எப்போ வச்சிக்கலாம்?” என்று சேகரன் கேட்க, “அவர்கிட்ட கேட்டுச் சொல்றேன் மாமா” என்றாள்.
“தங்கச்சி பொண்ணுக்கு இப்பதான் குழந்தை பிறந்திருக்கு. நாங்க போய் பார்க்கணும். பூஜா மேரேஜ்காக, அவங்க நிறைய யோசிச்சி வச்சிருக்காங்க. அதான் ரெண்டு மாசம் கழிச்சி இருந்தா வசதியா இருக்கும்”
“சரி மாமா, அதுக்கு மேல டிலே பண்ணா எனக்கு கஷ்டம்” என்றதும், “ரெண்டு பக்கமும் வசதியா இருக்கிற மாதிரி பார்த்துக்கலாம்” என்றவர், “முதலயே இவங்க சரினு சொல்லியிருந்தா இந்நேரம் நம்ம கல்யாண தேதி முடிவு பண்ணிருக்கலாம்” என்றார்.
அதுவரை அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அரவிந்த், “ம் நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் பூஜாக்கு ஹெல்ப் பண்ண போறேன்” என்று எழுந்து சமையலறை சென்றான்.
வாணி சிரித்தபடி, “ஒன்னுமில்லை, நாம எதுவும் இத பத்தி சொல்லுவோம்னு பயந்துக்கிட்டுத்தான் போறான்” என்றதும், சேகரன் சிரித்துக் கொண்டார். பின் கல்யாணம் விடயமாக மற்றது பற்றிப் பேசினார்கள்.
இதற்கிடையே சமையலறை வந்த அரவிந்த், “என்ன பண்ற?” என்று பூஜா அருகில் வந்து நிற்க, “என்ன இங்க வந்திட்டீங்க?” என்று அவள் கேட்க, “உனக்கு ஹெல்ப் பண்ணதான்” என்றதும், “நம்பிட்டேன்” என்று நான்கு கோப்பைகளை எடுத்து வைத்தபடி சிரித்தாள்.
அவனும் சிரித்தபடி, “பூஜா, நம்ம வேண்டாம்னு சொன்னதைப் பத்தி பேச்சு எடுத்தாங்க. அதான் வந்துட்டேன்” என்றதும், “வந்தது வந்தீங்க… மேலருந்து அந்த ட்ரே மட்டும் எடுத்துக் கொடுங்க” என்றாள்.
எடுத்துக் கொடுத்துவிட்டு, “பூஜா… நேத்து லவ் சொல்லிருக்க அன்ட் மேரேஜ் டேட் பிக்ஸாக போகுது. ஸோ… என்ன கிஃப்ட் வேணும்னாலும் கேளு. வாங்கித் தர்றேன்” என்று அவள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்க வேண்டுமென ஆசையில் கேட்டான்.
“நான் என்ன கேட்கப் போறேன் அரவிந்த், ஒரு பைக் ரைடு… க்ளே பாட்ல ஒரு மசாலா டீ… அப்புறமா வந்து வீட்ல டிராப் பண்ணிடுங்க. ரொம்ப நாளாச்சுல? இப்போதைக்கு இதான் வேணும்னு தோணுது” என்று சொல்லிவிட்டு, தேநீரை கோப்பைகளில் ஊற்றினாள்.
இப்படித்தானே அவர்களுக்குள் பழக்கம் ஆரம்பித்தது என்று அவளையே பார்த்திருந்தான். பூஜா ட்ரேயில் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, “நாலு டீ, ஸ்வீட், காரம்… ஓகே கரெக்ட்டா இருக்கு. வாங்க போகலாம்” என்று வெளியே வர, அவனும் அவளுடன் வந்தான்.
தேநீரை முழுதும் குடித்து, பலகாரங்கள் சிலதை கொறித்துவிட்டு அக்காவும் தம்பியும் கிளம்ப தயாரானாதும், “வாணி, வீட்டுக்காரர்கிட்ட கேட்டுட்டு சொல்லும்மா” என்று சேகரன் சொல்ல, “சரி மாமா” என்றாள்.
அக்கணம் பூஜா, “ப்பா… நான் அரவிந்த்கூட போய் தப்பான் அங்கிள்கிட்ட, சவுரவ் சார்கிட்ட இத சொல்லிட்டு வரவா?” என்று கேட்க, சற்று யோசித்த சேகரன், “சரிம்மா” என்றதும், ‘இவங்க என்ன சொல்வாங்க?’ என்பது போல் வாணியைப் பார்த்தாள்.
“என்னய ஏன் பார்க்கிற… தாராளமா போய்ட்டு வாங்க” என்று வாணி சொல்ல, “அக்காவ வீட்ல விட்டுட்டுப் போகலாம்” என்ற அரவிந்த், “மாமா… அப்படியே பூஜாவை வெளிய கூட்டிட்டுப் போய்ட்டு வரட்டுமா… திரும்ப நானே வந்து வீட்ல டிராப் பண்ணிடறேன்” என்றான்.
“சரி அரவிந்த். பார்த்துப் போய்ட்டு வாங்க” என்றார். மூவரும் கிளம்பியதும், பூஜா கல்யாண விடயத்தைச் சொல்ல சேகரன் தங்கைக்கு அழைத்தார்.
வாணியை காரில் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு பைக்கில் பூஜாவைக் கூட்டிக் கொண்டு மானிக்டாலா காவல் நிலையம் வந்தான்.
தப்பானிடம் பூஜா விடயத்தைச் சொன்னதும், ஓர் ஆச்சரியத்தோடு வாழ்த்துச் சொன்னார். ஆனால் ஓரளவிற்கு கணித்திருந்தார் போல தெரிந்தது. அரவிந்த் உடனிருந்ததால் வழக்கமாக பூஜாவிடம் பேசுவது போல் பேசவில்லை. அவர் பேச்சில் ஒரு தயக்கம் இருந்தது.
ஒருநாள் வீட்டில் சென்று பார்க்க வேண்டும் நினைத்துக் கொண்டாள்.
அவரிடம் விடைபெற்றுக் கொண்டு காளிகாட் காவல் நிலையம் வந்தார்கள். சவுரவ் வேலையாக இருந்ததால் இரண்டே நிமிடம் மட்டும் இவர்களுக்கு நேரம் ஒதுக்கியிருந்தார். பூஜா விடயத்தைச் சொல்ல, இருவரையும் பார்த்து, “இது… இப்படி முடியும்னு நான் நினைக்கல” என்று சிரித்தார்.
“எனிவே ஹாப்பி மேரீட் லைஃப்” என்று வாழ்த்து சொல்ல, “தேங்க்ஸ் சார். இன்விடேஷன் கொடுப்போம். நிச்சயம் நீங்க மேரேஜ்கு வரணும்” என்று பூஜா சொன்னதும், “கண்டிப்பா” என்றார்.
அவரிடம் விடைபெற்று வெளியே வந்தார்கள். அதுவரை ஒன்றுமே பேசாமல் இருந்த அரவிந்த், “உன் ப்ரெண்ட்ஸ பார்த்தாச்சா, அவ்ளவுதான… வேற எதும் இருக்கா?” என்று கேட்டான்.
“அவ்வளவுதான், வேற ஒன்னும் இல்ல” என்றதும், “சரி வா பைக் ரைடு போகலாம்” என்று சொல்ல, “இப்பவா?” என்று கேட்க, “ம்ம்ம் ஏறிக்கோ” என்று பைக்கில் அவன் ஏறியதும், அவளும் ஏறிக் கொண்டாள்.
முதலில் வளைந்து நுழைந்து நெருக்கடியான சாலைகளைக் கடந்து முக்கிய சாலைக்கு வந்தான். அருகில் வரும் மற்ற பைக்குகள் இடித்து விடுமோ என்ற பயத்தில், ‘பார்த்து போ அரவிந்த்’ என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
அதன்பின் பல வினாடிகள் சாலைப் போக்குவரத்துக்கு நெரிசலுக்கு இடையே ஓட்டி வந்துவிட்டு, புறவழிச் சாலையை அடைந்தான். பூஜா… சாலையோர கடைகளை வேடிக்கை பார்ப்பதும், போக்குவரத்து சமிக்கைகாக ஒவ்வொரு முறை காத்திருக்கும் போது அவனிடம் பேசுவதுமாக வந்தாள்.
ட்ரெக், அதிவிரைவாக போகும் கார்கள் செல்லும் நான்கு வழிச்சாலை, பெரிய பெரிய பாலங்கள் என அனைத்தையும் கடந்து ஒருவழிச் சாலைக்கு பைக்கை ஓட்டி வந்தான். புறநகர் பகுதியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளை பார்த்தபடி அவள் வந்தாள்.
அதன்பின் வந்த சாலை நகரத்திற்கான சாயலே இல்லாமல் இருந்தது. ஒருசில இடங்களில் வாழை மரங்கள், தென்னை மரங்கள், அசோக மரங்கள், இன்னும் பல்வேறு வகை மரங்கள், வெற்று இடங்கள், வயல்வெளிகள் என்று இருந்தது.
மழைக்கான கார்மேகங்கள் சூழ்ந்த வான் நிலை! மழைப் பொழிவை முன்பே தெரியப்படுத்தும் படியாக வீசும் காற்றின் நிலை! இதுபோன்று இருக்கும் ஒரு காலநிலையில்… இதுபோன்ற காதல்நிலையில்… பைக்கில் பயணம் செய்வது பூஜாவிற்கு அவ்வளவு பிடித்திருந்தது.
அந்த ரம்மியமான சூழலை ரசித்தவள், “அரவிந்த், சூப்பரா இருக்கு” என்றாள். சரியாக கேட்காததால், “என்ன சொன்ன?” என்று லேசாக திரும்பிக் கேட்க, “ப்ச் ஒன்னுமில்லை போ” என்றாள்.
பயணம் தொடர்கையில் தூறல் வந்தது. மனதில் ஒருவித துள்ளலோடு அதை வாங்கியபடியே பயணித்தார்கள். பின் அதுவே சாரலாய் மாறியது. அதையும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டே சென்றார்கள்.
சற்று நேரத்தில் சடசடவென மழைபொழிய ஆரம்பித்தது. பின்னர் சட்டென நின்றது. பின்பு பொழிந்தது. சற்றும் சளைக்காமல் நனைந்து கொண்டே போனார்கள்.
சற்றுநேரத்திற்குப் பின் ஓய்விற்காக ஓரிடத்தில் நிறுத்தியிருந்தான். மழை நின்றிருந்தது. அருகிலிருந்த தபாவிலிருந்து மசாலா டீயும், கச்சோரியும் வாங்கி வந்தான்.
நெடுஞ்சாலை என்பதாலும்… மழை வந்ததாலும் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மட்டும்தான். இரண்டு கார்கள் தாபா முன்னே நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வந்தவர்கள் தாபா உள்ளே சிற்றுண்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.
சாய்த்து நிறுத்தப்பட்ட பைக்கில்… சாய்ந்து நின்று கொண்டு, மழை வந்து போன மாலை நேரத்து ரம்மியமான சூழலைப் பார்த்தபடி, மண் குவளையில் இருந்த தேநீரை ரசித்துக் குடித்தார்கள்.
அக்கணத்தில் தாபாவிலிருந்து, ‘ஆகாஷே திர்ஷ்டி தோர், பிர்ஸ்டி தோர்’ என்று வந்த அர்ஜித் சிங் பாடிய பெங்காலிய பாடல் வரியைக் கேட்டதும், “இதென்ன பாட்டு? ஒன்னுமே புரியல. இந்த மாதிரி சிச்சுவேஷன்ல தமிழ் பாட்டு கேட்டா நல்லா இருக்கும்” என்றாள்.
“அதுக்கு… நீயும் நானும்தான் பாடணும்” என்றதும் அவள் முறைக்க, “கிஃப்ட் எப்படி… சூப்பரா?” என்று கேட்டான். “ரொம்ப சூப்பர்” என்று புன்னகைத்தாள்.
ஆவிபறக்க இருந்த டீயை குடித்தபடி ஆதவன் மறையும் வானத்தை பார்த்துக் கொண்டே, “எனக்கு என்ன கிஃப்ட் வேணும்னு கேட்டு கொடுத்திட்டிங்க. இப்ப என் டேர்ன்! உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க” என்றாள்.
அடுத்த நொடியே, “எப்ப கேட்பேன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்” என்று, தன் கன்னத்தைச் சுட்டிக் காட்டினான்.
“ஓ! கிஃப்ட் வேணுமான்னு கேட்டது… இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்ததெல்லாம் இதுக்குத்தானா?” என்று கேட்க, “ஆமானு சொன்னா என்ன பண்ணுவ?” என்று பதில் கேள்வி கேட்டதுமே… ஒன்றும் சொல்லாமல் ஒருமுறை சூழலைச் சுற்றிப் பார்த்துவிட்டு… அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள்.
“நானும்… நீங்க கேட்ட கிஃப்ட் கொடுத்திட்டேன்” என்று தேனீர் குடிக்க, அவன் சிரித்துக் கொண்டே, “உனக்கும் இந்த கிஃப்ட் வேணுமா?” என்று கேட்க, சில நிமிடங்கள் மௌனத்திலும்… மென்னகையோடும் இருந்தாள்.
பின் சூழலை மீண்டும் பார்த்துவிட்டு… கன்னத்தை சாய்த்துக் காட்ட… லேசாக அவளது முகத்தை திருப்பி… குனிந்து வந்து அவள் இதழில் முத்தமிட்டான்.
‘ப்ச், என்ன இது?’ என்பது போல் அவள் பார்த்ததும், “இனி அப்படித்தான் பூஜா. கண்டுக்காத” என்று தேநீர் குடிப்பதைத் தொடர்ந்தான்.
அவனையே பார்த்திருந்தவள், “உங்களுக்கும் இந்த கிஃப்ட் வேணுமா?” என்று கேட்டதும், “அச்சோ” என்று அதிர்ந்து அவளைப் பார்த்த நொடியில், நெருங்கி வந்து அவன் இதழில் முத்தமிட்டாள்.
உடனே அரக்க பரக்க அவன் சுற்றிலும் பார்க்க, “பயப்பிடாதீங்க அரவிந்த். யாருமில்லை” என்று சொல்லி தேநீர் அருந்தினாள்.
“ஹலோ… என்னது இவ்ளோ கேஷுவலா கொடுக்கிற?” என்று கேட்டதும், “இனி அப்படிதான்… நீயும் கண்டுக்காத” என்று அவள் சிரிக்க, அவனும் சிரித்துக் கொண்டான்.
சில நொடிகளிலே சிரிப்பு மறைந்து, ஒருவரை ஒருவர் பார்த்தனர். பார்த்துக் கொண்டே இருந்தனர். இம்முறை ஒருவரது கவனத்தை மற்றொருவர் திசை திருப்பவில்லை. சில வினாடிகளுக்குப் பின் வேறுபக்கம் திரும்பி இருவரும் சிரித்துவிட்டு, மீண்டும் தேநீர் குடிக்க ஆரம்பித்தனர்.
திட்டிக் கொண்டு எட்டிப் போன நாட்களைத் தாண்டி…
குட்டி குட்டி அக்கறையில்…
கிட்டத்தட்ட இருந்த காதலை…
தட்டி தட்டி எழுப்பி…
விட்டு விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்ட காதலர்கள்…
விட்டுவிட்டு பெய்த மழையில்…
சொட்ட சொட்ட நனைந்து நிலையில்…
சொட்டு சொட்டாக தேநீரை ரசித்துக் அருந்தும் தருணம் இது!
************
Thank you for reading this story!
