Kathambari Novels
அத்தியாயம் – 16
அப்படிப் பார்த்து நின்ற அரவிந்த் கவனத்தை கதவில் தட்டி திசை திருப்பி, “என்ன விஷயமா வந்தீங்க?” என்று பூஜா கேட்டாள்.
“விஷயம்னாதான் வரணுமா? காலையில கால் பண்ண நினைச்சேன்… நேரம் கிடைக்கல. இப்போ டைம் கிடைச்சது, உன்னய பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றான்.
ஒன்றும் சொல்லமால் பூஜா வாசலிலே நிற்க, “உள்ள விடமாட்டியா?” என்று அரவிந்த் கேட்டதும், அவள் விலகி நின்று கொள்ள, வீட்டிற்குள் வந்தான்.
சோஃபாவில் வந்தமர்ந்தவன், “சாப்பிட்டியா?” என்று கேட்க, “ம்ம் இன்னைக்கு சாப்பிட்டேன் ” என்று அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டே கிளம்பினாள்.
“எங்க கிளம்பிட்ட?”
“ஃபோர் தேர்ட்டிக்கு அப்பாவ கூட்டிட்டு வர ஸ்டேஷன் போறேன்”
“அதுக்குள்ளவா?”
“இதுக்குத்தான் இத்தன நாள் வெய்ட் பண்ணேன். நீங்க இப்படிச் சொல்றீங்க?”
“ச்சே ச்சே அந்த அர்த்தத்தில சொல்லலை… யார் சொன்னா உனக்கு?”
“ஸ்டேஷன்ல இருந்து ஃபோன் வந்தது”
“ஏன் என்கிட்ட சொல்லலை?”
பதில் சொல்லாமல் கிளம்பிக் கொண்டேயிருந்தாள்.
சற்றுநேரம் அவளையே பார்த்தபடி இருந்தவன்… எழுந்து அவள் முன்னே வந்து, “இதுக்கு பேன்ட்எயிட் போடலயா?” என்று நெற்றிக் காயத்தைக் காட்டினான்.
“இதோ எடுத்து வச்சிருக்கேன். போடணும்” என்று கைப்பையில் அலைபேசியை வைத்தாள்.
அவளை நேராக நிறுத்தி… அவள் முன்னெற்றியில் விழுந்திருந்த முடிகளை ஒதுக்கி, காயத்திற்கு பேன்ட்எய்ட் போட்டுவிட்டு, “கோபமா பூஜா… அதான் என்கிட்ட செல்லலையா… ஆனா எதுக்கு கோபம்? அன்னைக்கு நான் அப்படிப் பேசினதுக்காகவா?
அப்படினா ஹெல்ப் கேட்ருக்க மாட்டியே? இப்போ உன் கோபம் எதுக்குன்னே என்னால புரிஞ்சிக்க முடியல. ப்ளீஸ் நீயே சொல்லிடேன்” என்று, காயத்தில் மிருதுவாக நீவியபடியே கேட்டான்.
எந்த உணர்வுமில்லாமல் அவன் பேசியதைக் கேட்டு நின்றாள். அவன் பேசி முடித்ததும், “அவ்ளோதான? முடிஞ்சதா?” என்று கேட்டாள்.
“ம்” என்றான்.
உடனே பேன்ட்எய்டை பட்டென எடுத்துவிட்டாள். “ஏய் எதுக்கு இவ்ளோ கோபம்?” என்று கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் வேறு பேன்ட்எய்ட் போட்டுக் கொண்டு கிளம்பினாள்.
‘என்னாச்சு இவளுக்கு! பிடிச்சிருக்குனு நான் சொன்னதை கவனிக்கலையா, ஆனா ஹக் பண்ணப்ப இந்தக் கோபம் இல்லயே… இப்ப மட்டும் ஏன்?” என்று குழம்பி போய் அவன் நிற்க, “வர்றீங்களா?! நான் கிளம்பணும்” என்று வாசலில் நின்று கொண்டு கேட்டாள்.
“ஃபோர் தேர்டிக்கு சொன்ன… இப்பவே கிளம்ற” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தான்.
“போறப்ப இங்க இருக்க காளி கோயில் போயிட்டுதான் ஸ்டேஷன் போணும்” என்று வீட்டைப் பூட்டினாள்.
“இப்ப கோவில் திறந்திருக்க மாட்டாங்க” என்று தகவல் சொன்னான்.
“பரவாயில்ல, இன்னைக்கு வெளிய நின்னு பார்த்தா போதும். இன்னொரு நாள் நானும் அப்பாவும் போய்ப்போம்”
“சரி வா, நானே உன்னைக் கூட்டிட்டுப் போறேன்” என்றான்
அவன் அவ்வாறு சொன்னதும் அவனது முகம் பார்த்து நின்றாள். “சவுரவ் சார் கேட்டதுதான் நானும் கேட்கிறேன். உங்களுக்கு உங்க ஸ்டேஷன்ல வேலையே இருக்காதா? இப்படி என்னைக் கூட்டிட்டுப் போறதும், கொண்டு வந்து விடறது மட்டும்தான் உங்க வேலையா?” என்று கேட்டாள்.
“நல்ல கேள்வி! ஆனா கோர்ட், ஸ்டேஷன், சர்வீஸ் சென்டர்னு உன்னய கூட்டிட்டு அலைஞ்சேன் பார்த்தியா, அப்பவே நீ இந்த கேள்வி கேட்ருக்கணும்” என்றதும், அவள் முகம் உம்மென்று மாறிவிட்டது.
“உனக்குத்தான் பேச தெரியும்னு பேச கூடாது. போகலாம் வா” என்று கூட்டிச் சென்றான். அதன்பின் எதுவும் பேசாமல் அவனுடன் சேர்ந்தே காளி கோவில் சென்றாள்.
***************
காளிகாட் காவல் நிலையம்!
துணை ஆய்வாளர் பத்திரிகளுக்கும், ஊடகங்களுக்கும் இந்த மோசடி, நடந்த கொலைகள் குறித்த செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அதன்படி அலோக், தேவேஷ், கரண், ஜாதவ் நால்வருமே படித்த இளைஞர்கள். இவர்கள் ‘க்யூஆர்’ குறியீட்டு அட்டையை மெனு கார்டாக பயன்படுத்துகின்ற உணவகங்களில் சிப்பந்திகளாக வேலைக்குச் சேர்ந்து, இந்த மோசடியைச் செய்திருக்கின்றனர்.
அந்த உணவகத்தின் ‘க்யூஆர்’ குறியீடு அட்டையை எடுத்துவிட்டு அதேபோல் வடிவமைக்கப்பட்ட தீங்கிழைக்கும் மென்பொருள் உள்ள ‘க்யூஆர்’ குறியீட்டு அட்டையை வைத்துள்ளனர். இல்லை, உணவகத்தின் ‘க்யூஆர்’ குறியீடு மேலே இவர்களது ‘க்யூஆர்’ குறியீட்டை ஓட்டியுள்ளனர்.
வெளிப்புறமாக பார்த்தால் எந்தவொரு வேறுபாடும் தெரியாது!
உணவகத்தின் மெனு ‘க்யூ ஆர்’ குறியீடு அட்டையை ஸ்கேன் செய்தால் வரும் வலைத்தளத்தில் இருக்கும் உணவுப்பட்டியல், அதன் வண்ணமாதிரி, எழுத்து அமைப்புகள் எப்படி இருக்குமோ, அப்படியே இவர்கள் வடிவமைத்த ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்தாலும் இருக்கும். இதில் மாற்றம் இருக்காது.
அதனால் யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை!
எதில் மாற்றம் என்றால்? வலைத்தளத்தின் முகவரி, கீழிருக்கும் பின்னூட்டம் தருவதற்கான இணைப்பு மட்டுமே. சில ‘க்யூஆர்’ குறியீடு அட்டையில் சிறப்பு உணவுகள் என்ற இணைப்பும் இருந்திருக்கிறது.
முகவரியில் ஒரு எழுத்து மாறியிருப்பதை யாரும் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதே போலவே உணவகம் பற்றித் தெரிவிக்க, பாராட்ட, சிறப்பு உணவுகளைப் பார்க்கவென்று பின்னூட்ட இணைப்புகளைச் சொடுக்குவதும் இயல்பான ஒன்று!
அப்படி யாரெல்லாம் அந்த இணைப்புகளைச் கொடுக்கிறார்களோ அவர்கள் அலைபேசி ஹேக் செய்யப்படுகிறது. அதன்பின் ஏதாவது ஒரு வழியில் அவர்கள் வங்கி விவரங்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.
இப்படித்தான் இவர்கள் நால்வரும் மற்றவர்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை, தங்கள் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்திருக்கிறர்கள்.
இவர்களுக்கான வங்கிக் கணக்குகளை ‘சிந்தெட்டிக் ஐடென்டி’ பயன்படுத்தி ஆரம்பித்திருந்தால், இவர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்திருக்கிறது. மேலும் பணபரிமாற்றம் நடந்ததும் பணத்தை எடுத்துவிடுவதால், காவலர்கள் வங்கி மூலம் அவர்கள் கணக்கை முடக்கினாலும் பயனில்லாமல் போயிற்று.
இதுதான் உணவக ‘க்யூஆர்’ குறியீடு வைத்து இவர்கள் செய்த வங்கி மோசடி! இந்த மோசடிக்குப் பெயர் QUISHING!!
இவர்கள் நால்வரின் பேரிலும் கொலை, பணமோசடி என்ற பிரிவுகளில் புகார் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை போடப்பட்டிருந்தது. நால்வரில் அலோக், கரண், ஜாதவ் மூவரும் தப்பிச் செல்ல முயற்சிக்கையில் நகரின் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் ஒருவனான தேவேஷ் தேடப்பட்டு வருகிறான். மேலும் இவர்களிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் கொடுக்கப்படும்.
இவ்வாறு துணைஆய்வாளர் கூறியதை பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினர் குறித்துக் கொண்டனர்.
இது ஒருபக்கம் நடந்தது என்றால், காளி கோவிலுக்குச் சென்றுவிட்டு இங்கே வந்திருந்த பூஜா, அரவிந்த் காவல்நிலையம் எதிர்பக்கம் காத்திருந்தார்கள்.
எதுவும் பேசாமல் நின்றவள், “உள்ள போய் கேட்டுப் பார்க்கலாமா?” என்று கேட்க, “கொஞ்ச நேரத்துக்கு முன்னதான கேட்டு வந்தேன். வெய்ட் பண்ணு. அதுக்கதுக்கு ப்ரோஸுயூஜர் இருக்கு” என்றான்.
சரியென சற்றுநேரம் ஏதும் கேட்காமல் நின்றவள், “இதுக்கப்புறமும் அப்பாவ ஸ்டேஷன் வர சொல்வாங்களோ?” என்று சந்தேகமாய் கேட்டாள்.
“சொன்னேன்ல, சந்தேகம் நிரூபிக்க படலைனு போலீஸ்தான் விடறாங்க. ஸோ சொல்லலாம், சொல்லாமலும் இருக்கலாம்” என்றான்.
“ஓகே” என்று தலையாட்டியவள், “இனிமே அவனுங்களால அப்பாக்கு ஆபத்து இருக்காதுல” என்று அடுத்து கேட்டாள்.
“மூனு பேர அரெஸ்ட் பண்ணிருக்காங்க. இன்னும் ஒருத்தன அரெஸ்ட் பண்ணல. எதுக்கும் நீயும் உன் அப்பாவும் கவனமா இருங்க” என்றான் பொறுமையாக.
“ஓகே ஓகே அதலாம் இருந்துப்போம்” என்று வேகமாகச் சொன்னவள், “அப்பா வேலைக்கு இதனால எதும் ஆகுமா?” என்று கேட்டு நின்றாள்.
“தெரியல” என்று பொறுமை குறையும் தொனியில் கூறினான்.
‘தெரியலயா?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், “ஜெனரல் மேனேஜர் போஸ்ட்டெல்லாம் இனி கொடுக்க மாட்டாங்களோ?!” என்று யோசிக்க, “ப்ச், தெரியலை பூஜா… எத்தனை கேள்விதான் கேட்ப? என்றான் சலிப்புடன்.
“ஓகே ஓகே இனிமே எதும் கேட்க மாட்டேன்” என்று ஒருநொடி அமைதியாக இருந்தவள், “இப்போ உள்ள போய் கேட்டுப் பார்க்கலாமா?” என்று கேட்க, “திரும்ப முத கேள்விக்கு வந்திட்ட… சரியான அப்பா பொண்ணு” என்றான்.
“என்ன வேணாலும் சொல்லிக்கோ போ” என்றுவிட்டு காவல் நிலையத்தின் பக்கமாக வந்து நின்ற காவலர் ஜீப்பை பார்த்தபடி நின்றாள். அதிலிருந்து இறங்கியவனைப் பார்ததவள், “அவன்… அவனும்தான் என்னய துரத்திட்டு வந்தவன்” என்று கை நீட்டி காட்டினாள்.
அங்கே பார்த்த அரவிந்த, “ஓ, நாலாவது ஃபிராடையும் பிடிச்சாச்சா?” என்றான்.
ஆம், தேவேஸூம் பிடிபட்டிருந்தான்!
தேவேஷ் இறங்கிப் போவதைப் பார்த்த பூஜா, “போய், ஏன்டா இப்படி என் அப்பாவ மாட்டிவிட்டனு… அவனை நல்லா அடி, அடினு அடிக்கிற அளவுக்கு கோபம் வருதே… என்ன செய்ய” என்றாள்.
“இவ்ளோ நாள் ஸ்டேஷனுக்கு அலைஞ்சது பத்தாது… இன்னும் அலையனும்னு நினைச்சேனா போ, போய் அடிச்சிட்டு வா” என்று அவன் சொல்ல, அவனை முறைத்தாள்.
நேரத்தைப் பார்த்தவள், “இன்னும் எவ்ளோ நேரமாகும்? எப்படா அப்பாவ பார்ப்போம்னு இருக்கு” என்று அவளுக்குள் பேசிக் கொண்டாள்.
அவளையே பார்த்திருந்தவன், “இதெல்லாம் நல்லா பேசற பூஜா… ஆனா நம்மளைப் பத்தி மட்டும் பேச மாட்டிக்கிற… என்ன கோபம், சொன்னாதான தெரியும்… சொல்லேன்” என்று கேட்டுப் பார்த்தான்.
அவள் சொல்லவுமில்லை… அதன்பின் பேசவுமில்லை!
பத்து நிமிடத்திற்குப் பின் சேகரன் வருவதைப் பார்த்தவள், “என் அப்பா வந்தாச்சு” என்று சாலையைக் கடக்கப் போக, “பூஜா, அவ்வளவுதானா? வேற ஒன்னும் இல்லையா?” என்று அரவிந்த் ஓர் எதிர்பார்ப்புடன் கேட்டான்.
ஒருசில நொடிகள் அப்படியே நின்றாள். பின் திரும்பி நின்று, “ஏன் இல்ல, உங்ககிட்ட சொல்ல ஒன்னு இருக்கே…” என்றதும், எதிர்பார்ப்பு கூடி அவளைப் பார்த்தான். “தேங்க் யூ ஸோ மச்… இவ்ளோ ஹெல்ப் பண்ணதுக்கு” என்றாள்.
“அத நீயே வச்சிக்கோ” என்றான் எரிச்சலாக.
எதுவும் சொல்லாமல் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு, சாலையைக் கடந்து சேகரன் முன் சென்று நின்றவள், “ப்பா” என்று அழாமல் இருக்க முயற்சித்துக் கொண்டே, “ஹேப்பி பர்த்டே ப்பா” என்றாள்.
“அதெல்லாம் இருக்கட்டும். நான் என்ன சொன்னேன்… நீ என்ன செஞ்சிருக்க!? இன்ஸ்பெக்டர் எல்லாம் சொன்னாரு. ஏன் இப்படி?” என்று கோபப்பட்டார். “இங்க பாரு நெத்தியில காயத்தை… கையிலயும் இருக்குதோ… காட்டு” என்று லேசாக கண்கலங்க மகளின் கைகளை ஆராய்ந்தார்.
“இதெல்லாம் சரியாயிடும் பா” என்று சமாதனப்படுத்த பார்த்தாள்.
“என்ன பூஜா சரியாகும்? ஏதோ உன் நல்ல நேரம் பெருசா எதுவும் நடக்கலை. ஆனா அப்படி மட்டும் எதும் நடந்திருந்தா…” என்று பதற்றமாகவே கேட்டார்.
“அதான் எதுவும் நடக்கலையே ப்பா?”
“நடந்திருந்தா… ஒரு நேரத்தைப் போல ஒரு நேரம் இருக்காது பூஜா? சரி அப்படி என்ன அவசரம் உனக்கு… அத சொல்லு?” என்று சற்று கடுமையுடன் கேட்டார்.
“இன்னிக்கு உங்க பெர்த்டே ப்பா… எப்படியாவது உங்ககூட இருக்கணும்னு நினைச்சிதான்… இப்படிப் பண்ணேன்”
“அதுக்காக ஆபத்த விலை கொடுத்து வாங்குவியா பூஜா, நீ?” என்று இன்னுமே கடிந்து கொள்ள, அமைதியாக நின்றாள்.
“இப்ப பேசு” என்று சேகரன் சொல்ல, “இத்தனை நாள் கழிச்சி பார்க்கிறப்போ, இப்படித் திட்டறீங்களே?!” என்று செல்லத்துடன் அவள் முணுமுணுத்தாள்.
உடனே, “திட்டலமா” என்று அவர் கடுமையைக் குறைக்க, “அப்பா, நீங்க என்ன வேணாலும் திட்டுங்க. ஆனா அதெல்லாம் வீட்டுக்குப் போனதுக்கப்புறம். முதல இந்த அட்மாஸ்பியர்லருந்து நாம போகலாம்” என்றாள்.
மேலும், “நீங்க இல்லாம… இந்த ஊர்ல ரொம்ப கஷ்டமா இருந்தது ப்பா. சரியா தூங்கலை… சரியா சாப்பிடல. ரொம்ப பசிக்கு ப்பா. இப்பகூட உங்க கையால சமைச்சி தர்றதை, உட்கார்ந்து நல்லா சாப்பிடணும்னு தோணுது.
ஆனா இன்னைக்கு நானே சமைச்சிடுவேன். ஏன்னா இன்னைக்கு உங்க டே! நாளையிலருந்து நீங்கதான் குக் பண்ணனும்” என்றாள் புன்னகையுடன்.
கூடவே புன்னகை இன்னும் விரிய, “ஹேப்பி பர்த்டே ப்பா” என்றாள்.
அதற்குமேல் ஆசையாய், செல்லமாய் பேசும் மகளைக் கடிந்துகொள்ள சேகரனுக்கு முடியவில்லை. “சரிமா வா போகலாம்” என்றவர்… அரவிந்த் நிற்பதைப் பார்த்து, “அவர்தான் உன்னை கூட்டிட்டு வந்தாரா?” என்றார்.
“ம்ம் ஆமா” என்றாள்.
“தனியா எங்கயும் போறதில்ல… அரவிந்த் துணைக்கு வர்றாருன்னு சொன்ன. நேத்து ஏன் தனியா போன?”
பதில் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள்.
“சரி வா, அவர்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்”
“நான் சொல்லிட்டேன் பா. நீங்க சொல்லிட்டு வாங்க. நாம போகலாம்” என்று சொன்னதும், மகளின் அன்றைய பேச்சிற்கும், இன்றைய பேச்சிற்கும் இருந்த பேதம் அவருக்குத் தெரிந்தது.
‘ஏன்?’ என்று புரியவில்லை. அதேநேரம் ஏதும் கேட்கவுமில்லை. “சரி இரு” என்று அரவிந்தை நோக்கிச் சென்றார்.
இங்கேயே பூஜா நின்று கொண்டாள். தற்செயலாக சவுரவ் வெளியே வந்தவர், அவளைப் பார்த்து நின்றார். ஒன்றும் சொல்லாமல் போக போனவரின் முன் ஓடிச் சென்று நின்று, “சாரி சார்” என்றாள்.
“நீ சாரிலாம் கேட்பியா… எதுக்கு சாரி?” என்று ஆங்கிலத்தில் பேச்சைத் தொடர்ந்தார்.
“நான்… என் அப்பா… இப்படி இருக்க போய்தான் நிறைய பேசிட்டேன்” என்று சொன்னதும், ‘ஓ! அப்படியா?’ என்பது போல் புருவத்தை உயர்த்தினார்.
“நான் பேசினதெல்லாம் சரியா இருந்தாலும் உங்ககிட்ட சாரி கேட்டுக்கிறேன் சார்” என்றதும், ‘அதானே பார்த்தேன்’ என்பது போன்று நின்றார்.
கைப்பையிலிருந்து ஒரு சாக்லேட் பாரை எடுத்து அவரிடம் நீட்டி, “இன்னைக்கு என் அப்பா பர்த்டே” என்று சொல்ல, அவர் வாங்காமல் நின்றார்.
“இதனாலதான் நேத்து அதெல்லாம் பண்ணேன்”
“அது எவ்ளோ தப்பு தெரியுமா… முதல எவ்ளோ டேஞ்சர் தெரியுமா?”
“தெரியும் சார். நீங்க தேர்ட் டிகிரி டிரீட்மென்ட்ன்னு சொன்னதுமே எனக்கு பயம் வந்திருச்சு. அதான் அப்படி…” என்று காரணம் சொன்னவள், “அப்பாவும் திட்டினாங்க. இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்” என்றாள்.
“நீ எப்படி ரித்திகாக்கு தெரியும்னு கண்டுபிடிச்ச?”
“அவங்க கூட அப்பா ஃபோன் பேசிருந்தாங்க. அதோட என்கிட்ட பேசறப்போ ‘நாங்க’ன்னு சொன்னாங்க. ரெண்டையும் கனெக்ட் பண்ணிப் பார்த்தேன்”
“உன்னை… உன் அப்பாவ மீட் பண்ணவே விட்ருக்க கூடாது” என்றவர், “என்ன பண்ற இங்க?” என்று கேட்டார்.
லேசாக புன்னகைத்துக் கொண்டு, “ஜாப் செர்ச் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றதும், “டிடெக்ட்டிவ் ஜாப்??” என்று கேட்டார்.
நன்றாக சிரித்தவள், “இல்ல டீச்சிங் ஜாப். பிஹெச்டி முடிச்சிருக்கேன்” என்று சொன்னதும், “ஓகே… என் பிரண்ட்ஸ் ரெண்டு பேர் இந்த லைன்ல இருக்காங்க. நான் கேட்டுச் சொல்றேன்” என்றார்.
“தேங்க் யூ ஸோ மச்” என்றவள், “சாக்லேட்” என்று நீட்ட, “யூனிஃபார்ம்ல இருக்கிறப்ப இதெல்லாம் வாங்கறதில்ல” என்றதும், ஒருநொடி தீர்க்கமாக அவரைப் பார்த்தவள், “நீங்க ரொம்ப கிரேட் சார்” என்றாள் மனதிலிருந்து.
லேசாக சிரித்துவிட்டு, “உன்கிட்டருந்து இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் வருதுனா ஆச்சரியம்தான்” என்றதும், அவளும் சிரித்தாள். இருவரின் பேச்சு இப்படி சிரிப்போடு தொடர்ந்தது!
இதே நேரத்தில் சேகரன் அரவிந்திற்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
“நீங்க ஹெல்ப் பண்றதா பூஜா சொன்னா… ரொம்ப நன்றி அரவிந்த்” என்று எளிதாக சேகரன் பேச்சை ஆரம்பித்தார்.
இதுதான் முதல்முறை அவருடன் பேசுவதால், “பரவாயில்ல” என்று அவன் ஒருசிறு கூச்சத்துடன் சொன்னான்.
“அக்கா எப்படி இருக்காங்க?” என்று அவர் பேச்சைத் தொடர பார்க்க, “ம், நல்லா இருக்காங்க” என்று முடித்துக் கொண்டான்.
அதன்பின் இருவருக்கும் இடையே ஒரு அமைதி நிலவியது.
பின் அரவிந்த், “நீங்க இன்ட்டெரகேஷன் டைம்ல பேசியிருக்கலாமே. இன்னும் ஈஸியா இதலாம் முடிஞ்சிருக்கும்” என்று பேச்சை தொடங்கினான்.
“அவனுங்க என்னை மிரட்டியிருந்தாங்க. அதான் பூஜாக்கு எதும் ஆயிடுமோனு பயந்தேன். தெரிஞ்சத சொல்லவா வேண்டாமானு ஒரே குழப்பம்” என்று தன் நிலையைச் சொன்னார்.
“பாருங்க, எப்படிலாம் தப்பு பண்றாங்கனு? இப்போ வர்ற டெக்னாலஜியே இப்படிதான் இல்லயா? நம்மளை சோம்பேறி ஆக்கிட்டு, நம்ம கஷ்டப்பட்டு உழைச்சி சம்பாதிச்சதை… உழைப்பே இல்லாம ஒருத்தன் வந்து திருடிக்கிட்டு போக வைக்கிறது. அதுலயும் இந்த க்யூஆர் கோட்… ரொம்ப மோசம். யூஸ் பண்ணவே கூடாது போல” என்றார் மேலும்.
“அப்படியில்ல… யூஸ் பண்ணலாம். கொஞ்சம் கேர்ஃபுல்லா யூஸ் பண்ணனும். எப்பவும் வெப்அட்ரஸ் சரியா இருக்கானு பார்த்துக்கிட்டாவே போதும். ஆனா சாங்ஸ், ஆப்ஸ் ப்ரீயா டவுன்லோட் பண்ண இந்த க்யூஆர் கோட் ஸ்கேன் பண்ணுங்கனு சொல்லி வர்ற மெசேஜ் எல்லாம் அவாய்ட் பண்ணிடனும்.
ஏன்னா இங்க ப்ரீன்னு சொல்லி வர்ற எதுவும் ப்ரீ கிடையாது. எல்லாத்துக்கும் நம்மளோட பர்சனல் டேட்டா அப்படிங்கிற விலையை கொடுத்துக்கிட்டுதான் இருக்கோம்” என்றான்.
“அதுவும் சரிதான்” என்றவர், “அன்னைக்கு பேசறப்ப தனியா எங்கயும் போறதில்ல, நீங்க கூட வர்றதா பூஜா சொன்னா… நேத்து மட்டும் எதுக்கு தனியா போனா?” என்று கேட்டார்.
அரவிந்த் மௌனமாக இருந்தான்.
இந்தக் கேள்விக்கு பூஜாவும் பதில் சொல்லவில்லை. இவனுமே பதில் சொல்ல மறுக்கிறான். இருவருக்குள்ளும் ஏதோ என்று தெரிந்தது. ஆனால் அவர் எதுவும் கேட்கவில்லை. எதுவென்றாலும் அவர்கள் பேசினால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.
மகள், ‘என்ன செய்கிறாள்?’ என்று பார்த்தார். அவள் சவுரவிடம் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவர், “ஃபர்ஸ்ட் டைம்… ஒரு போலீஸ்கிட்ட இப்படிப் பேசறா…” என்றதும், அரவிந்தும் அவர்களைப் பார்த்தான்.
“அவரோட பூஜாக்கு நல்ல அன்டர்ஸ்டான்டிங் போல” என்றார்.
அடுத்த கணமே அதுவரை இருந்த கூச்சம் போனது அரவிந்திற்கு. “அய்யயோ நீங்க வேற… நேத்து வரைக்கும் ரெண்டு பேரும் எப்படி சண்டை போட்டாங்கனு எனக்குதான் தெரியும். ஒரே ஆர்க்கியூமென்ட்தான். ரெண்டு பேருக்கும் சண்டை போடாம பேசவே தெரியாது” என்றான்.
மேலும், “என்னமோ இன்னைக்குதான் புதுசா இப்படி பேசிக்கிறாங்க” என்று பொறாமையுடன் சொல்ல, சேகரன் சிரித்துக் கொண்டார்.
“இதுல என்ன ஸ்பெஷல்னா, இத்தனை நாளும் இவங்க பேசறதுக்கு நான் தேவைபட்டேன். ஆனா இன்னைக்கு இவங்க ரெண்டு பேரும் என்கூட சரியா பேசறதில்லை” என்று புலம்பினான்.
அதற்கும் சேகரன் சிரித்து வைத்தார்.
“அஞ்சாறு நாளா இவங்க என்னய வேலையே பார்க்க விடலை. ஒன்னு அவர் கூப்பிட்டு விடுவாரு. இல்லனா உங்க பொண்ணு, என் ஸ்டேஷன் வந்து நிப்பா.
ஆனா இன்னைக்கு ரெண்டு பேரும், ‘உனக்கு வேற வேலையே இல்லையா?’னு கேட்கிறாங்க. இது நியாயமானு நீங்க சொல்லுங்க” என்று மனக்குறைகளைக் அவரிடம் கொட்டினான்.
அவன் பேசுவதையே சேகரன் பார்த்திருந்தார்.
“உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன… நான் பொதுவா ஹார்ஷா பேச மாட்டேன். ஆனா முந்தாநாள் அப்படி என்னைப் பேச வச்சதே இவங்கதான். சொன்னேன், இப்படிப் பேசாதீங்கனு சொன்னேன். ரெண்டு பேரும் கேட்கலை.
கடைசில என்னயவே கோபமா பேச வச்சிட்டாங்க. அதான் பூஜா தனியா போய் மாட்டிக்கிட்டா. இன்னுமே அந்த கோபம் பூஜாக்கு இருக்கும் போல. அதான் சரியா பேச மாட்டிக்கிறா” என்றான்.
இதுதான் பூஜா தனியாக போய் மாட்டிக்கொள்ள காரணமென்று புரிந்தாலும் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. “என்ன நினைக்கிறீங்களோ அப்படியே அத பேசறீங்க” என்றார்.
ஒருசிறு புன்னகையுடன், “அக்காகிட்ட சீக்கிரம் வர்றேன்னு சொல்லிருக்கேன். கிளம்பறேன்” என்று பைக்கில் ஏறினான்.
அன்றைய பேச்சிலிருந்து மகளின் மனம் ஓரளவிற்குப் புரிந்ததால், “வீட்டுக்கு வந்திட்டுப் போகலாமே?” என்று அவன் மனதை அறிந்து கொள்ள கேட்டார்.
முதல் நொடி பூஜாவைப் பார்த்தான். அடுத்த நொடி சற்று யோசித்தான். பின் “கொஞ்சம் டைம் கொடுங்க… அக்காவோடவே வர்றேன்” என்று தன் மனதைக் கோடிட்டு காட்டிவிட்டு, “பூஜாகிட்ட சொல்லிடுங்க” என்று கிளம்பிவிட்டான்.
பூஜா வந்ததும், அப்பாவும் மகளும் வீட்டுக்கு சென்றார்கள்.
ஆட்டோ பிடித்து அப்பாவும், மகளும் வீடு வந்திருந்தனர். இருவருக்குமே நல்ல சோர்வு இருந்தது. ஆயினும் சில குடியிருப்புவாசிகள் வந்ததால், அவர்களுடன் சற்றுநேரம் சேகரன் பேசிவிட்டே குளிக்க சென்றார்.
அதன்பின்பு ஒரு தூக்கம் தூங்கி எழுந்து வந்தார். அதற்குள் சாம்பார், சாதம், பொரியல், பாயசம் என்று பூஜா சமையல் செய்து முடித்திருந்தாள்.
சாப்பாட்டு மேசையைச் சுத்தம் செய்து, சமைத்த உணவுகளை அதில் எடுத்து வைத்தாள். ஆர்டர் செய்த கேக் வந்ததும், அதையும் எடுத்து வைத்தாள். சிறு மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு, “ப்பா… கேக் கட் பண்ண வாங்க” என்றாள்.
அதுவரை மகள் செய்வதைப் பார்த்திருந்தவர், “ரெஸ்ட் எடுக்காம, எதுக்கு இன்னைக்கே இவ்ளோ பண்ணனும் பூஜா” என்று எழுந்து வந்தார்.
“ரெஸ்ட் அப்புறம் எடுத்துக்கலாம் ப்பா. நீங்க கேக் கட் பண்ணுங்க” என்றதும், கேக் வெட்டி மகளுக்கு ஊட்டிவிட்டார்.
“ஹேப்பி பர்த்டே ப்பா” என்று அவளும் கேக் துண்டை எடுத்து அப்பாவிற்கு ஊட்டினாள். அதன்பின்பு இருவரும் சேர்ந்து பேசியபடி சாப்பிட்டு முடித்தனர். பின் செக்ரெட்டரி மனைவிக்கு, அக்கம்பக்கத்து வீட்டினருக்கு கேக் துண்டுகள் கொடுத்து வந்தாள்.
அவள் திரும்பி வரும்போது சேகரன் தன் தங்கையிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அண்ணனிடம் அவர் ஒரே அழுகைதான். “அதான் வீட்டுக்கு வந்திட்டேனே. விடு… எதுக்கு இன்னும் அழுதுக்கிட்டு இருக்க?” என்று சேகரன் தங்கையைத் தேற்றினார்.
“எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்குண்ணா”
“நான் வர்றேன். இங்க எல்லா முடிஞ்சிக்கிடட்டும்” என்றதும், “சரி, காயத்திரி பேசணுமாம்” என்று மகளிடம் கொடுக்க, அவளுமே சற்று நேரம் மாமாவிடம் பேசி முடித்துவிட்டு, “அப்பத்லருந்தே அப்பா பேசணும்னு சொல்றாரு மாமா. கொடுக்கவா?” என்று கேட்க, “கொடும்மா” என்றார்.
காயத்திரி அப்பாவோ, “நான் வந்திருப்பேன் மச்சான். உங்க பொண்ணுதான் வேண்டாம்னு சொல்லிட்டா. நீங்க கொஞ்சம் அவகிட்ட சொல்லுங்க” என்று பூஜாவைப் பற்றி புகார் சொன்னார்.
இங்கே சேகரன் எதுவும் சொல்லமால் இருந்தார்.
அங்கே காயத்திரி, “ப்பா, எந்த நேரத்தில என்ன பேசறீங்க?” என்று அவள் அப்பாவிடமிருந்து அலைபேசியை வாங்கி, “மாமா ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு பேசலாம்” என்றாள்.
“ஹெல்த் பார்த்துக்கோ. மாமா உன்னை பார்க்கிறதுக்கு சென்னை வருவேன். அம்மாகிட்ட சொல்லிடு”
“சரி மாமா” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
பேசிமுடித்து வரும்போது பூஜா சோஃபாவில் படுத்தபடி உறங்கியிருந்தாள். டிவி ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தது. அதை ஆஃப் செய்துவிட்டு கொஞ்சம் மஞ்சளும், நல்லெண்ணெயும் கலந்து எடுத்து வந்தார்.
மகளருகே அமர்ந்தவர்… அவளது கைகளிலிருந்த சிராய்ப்புகளுக்கும், நெற்றிக் காயத்திற்கும் அதைப் போட்டுவிட்டார். பின் மகள் உறக்கம் கலையாத வண்ணம் மெதுவாக சோஃபாவின் ஒரு பக்கம் அமர்ந்து, அவள் தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டார்.
சற்று தூக்கம் கலைந்த நிலையில், “ப்பா திரும்பவும் நீங்க போலீஸ் ஸ்டேஷன் போககூடாது. அவங்க கூப்பிட்டாலும் போக்கூடாது” என்றாள்.
“அது அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப நீ தூங்கு” என்றார்.
“ப்பா இத்தனை நாள் சரியா தூங்கிருக்க மாட்டிங்கள, உள்ள பெட்ல போய் தூங்குங்க” என்றதற்கு, “அப்பா அப்பவே தூங்கி இருக்கேனே… கொஞ்ச நேரம் நீ இப்படியே தூங்குமா” என்றதும், அப்பா மடியில் அழுந்த தலை சாய்த்துக் கொண்டாள்.
சோஃபா பின்னே இருந்த சுவரில் தலையைச் சாய்த்து, சேகரன் கண்மூடிக் கொண்டார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் அப்பாவும் மகளும் தூங்கிவிட்டனர். அத்தனை நாட்களுக்குப்பின் இன்று நிம்மதியான உறக்கம்… அவர்களுக்கு!
************
மானிக்டாலா பகுதி! எதற்காக பூஜா கோபமாக இருக்கிறாள் என்று சரியாக தெரியாமல்… எப்படி அவளைச் சமாதானப்படுத்த என்றும் தெரியாமல்… இங்கே இன்று அரவிந்த் உறக்கமின்றி இருந்தான்!!
