Kathambari Novels
அத்தியாயம் – 13
காளிகாட் காவல் நிலையம்!
ஏதோ ஒரு இடத்தில் விசாரணை திசை திருப்பப்பட்டிருக்கிறது. அது எங்கே, எவரால்… என்று யோசித்த சவுரவ், பிரணாப் கொலை நடந்த அன்று சேகரன் அலைபேசி அழைப்பு கணக்குகளை கேட்டு வாங்கியிருந்தார். அதிலிருந்த அலைபேசி எண்கள், அது யாரிது போன்ற விவரங்களைப் பார்த்தார்.
பிரணாப் கொலை நடந்த பின் வங்கி துணை மேலாளர் ரித்திகாவை அலைபேசியில் அழைத்து சேகரன் பேசியிருக்கிறார்.
அன்று ரித்திகா விடுமுறை! விடுப்பில் இருப்பவரிடம் பேசுகிறார் என்றால் ரித்திகாவிற்கு இதுபற்றி தெரிந்திருக்கும். அதை அவர் மறைகிறார். வங்கி சம்பந்தமான பிரச்சனையாக இருக்கலாம் என்ற முடிவிற்கு வந்தவர்… அதை ஒருபக்கம் வைத்துவிட்டார்.
ஆம், அதற்குமேல் அதைப் பற்றி அவர் யோசிக்கவில்லை!
ஏனென்றால் கொலை செய்தது யாரென கண்டுபிடித்தால் மட்டுமே சேகரன் வெளியே வர முடியும். சேகரன் கொலை செய்யவில்லை என்று புரிந்தது. தவறேதும் செய்யாமல் ஒருவர் இப்படி வந்து இருப்பது சரியில்லை. எனவே கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்கு முக்கியத்துவம் தர நினைத்தார்.
அதனால் ‘நல்லவர்’ என்று எல்லாரும் சான்றிதழ் தரும் சேகரனை, கொலை செய்யப்பட்ட மூவரிடமும் வாக்குவாதம் செய்ததாக சொன்ன அபார்ட்மென்ட் செக்யூரிட்டி மேல் சந்தேகம் வந்தது.
இது, சேகரனுக்கும் கொலையானவர்களுக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் இருக்கிறது என்று காட்டுவதற்காவோ? கூடவே துப்பாக்கியை சேகரன் காரில் வைக்க இந்த செக்யூரிட்டி துணையாக இருந்திருப்பானோ? என்று சந்தேகம் வலுத்தது.
உடனே அவனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென நினைத்து முதன்மைக் காவலரை அழைத்து, செக்யூரிட்டியை கூட்டி வர உத்தரவிட்டார்.
அடுத்ததாக கொலைகள் பற்றி யோசித்தார். மூன்று கொலைகள். இதில் சந்தேகப்படும் நபராக சேகரன். நிர்மல், பிரணாப்பிற்கும் வங்கி ரீதியாக சேகரனுடன் சம்பந்தம் இருக்கிறது.
ஆனால் நிர்மல் நண்பனுக்கும் சேகரனுக்கும் சம்பந்தம் இல்லை!
நிர்மல், பிரணாப் மட்டும் கொலை செய்யப்பட்டிருந்தால், வங்கியில்தான் பிரச்சனை என்ற பாதையில் விசாரணை போயிருக்கும். நிர்மல் நண்பனும் கொலை செய்யபட்டதால், இங்கே பிரச்சனை திசை திருப்பட்டிருக்கிறது.
இது கொலை செய்தவர்களின் திட்டம் என்று புரிந்தது!
இதனை யோசித்து முடிக்கும் போது வழக்கறிஞர் ஒருவர் வந்துவிட அவருடன் வேறு புகார் பற்றி பேச சென்றுவிட்டார்.
இந்த நேரத்தில் கொலை செய்யப்பட்ட பிரணாப் அபார்ட்மென்ட் பின்பக்கம் சோதனை செய்ய போன காவலர் வந்திருந்தார்.
அபார்ட்மென்டின் பின்புறம் சிறிய சாலை சென்றது. டீ ஸ்டால், சிறு காய்கறி கடை, பேக்கரி ஷாப் இருந்தது. இதில் எதிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை.
அதனால் யாரும் வந்து போனார்களா என்று தெரிந்து கொள்வதில் ஒரு சிக்கல் இருந்தது. கடைகளில் விசாரித்தபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. விசாரிக்க சென்ற காவலர் இதைவந்து சவுரவிடம் சொல்லிச் சென்றார்.
இதற்கிடையில் லாக் அப் இரண்டில் இருக்கும் சேகரனுக்கு மனம் என்னவோ போலிருந்தது. மகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ‘ஏன் இப்படி?’ என்று தெரியாமல் ஒரு இடத்தில் அமர முடியாமல் தவித்து வந்தார்.
************
மானிக்டாலா காவல் நிலையம்!
பூஜாவைப் பின்தொடர்ந்து வந்தவர்களை எப்படி அடையாளம் காண என்று யோசித்தான். அவர்களைப் பார்த்த இடங்களை ஞாபகப்படுத்தி பார்த்தான். ஒருவனை காளிகாட் காவல் நிலையம் இருந்த சாலையில்! மற்றொருவனை அலீபோர் நீதிமன்றம் முன்!
இந்த இரண்டு இடங்கள் உள்ள சாலைகளில் நிறைய கடைகள் இருக்கின்றன. அதிலே ஏதாவது ஒன்றிலாவது சிசிடிவி கேமரா வைத்திருக்க மாட்டார்களா, அங்கே போய் விசாரித்துப் பார்த்தால் என்ன… என்று தோன்றியது.
உடனடியாக கிளம்ப நினைத்தான். ஆனால் அதற்குள் அவன் காவல் நிலைய வேலை ஒன்று வந்துவிட்டது. அதனை முடித்தவன், காவலர் ஒருவரிடம் பைக் வாங்கி கொண்டு காளிகாட் நோக்கிச் சென்றான்.
போகும்முன் பூஜா நினைவில் வர… தப்பானிடம், ‘பூஜா என்னை தேடி வந்தா வெய்ட் பண்ண சொல்லுங்க, நான் வந்திடுவேன்’ என்று சொல்லிவிட்டுத்தான் சென்றான்.
காளிகாட் காவல் நிலையம் இருக்கும் சாலைக்குச் சென்றவன். அன்று அந்த இளைஞனை பார்த்த சாலைக்கு எதிர்பக்கம் இருக்கும் கடைகளில் கேட்டுப் பார்க்க ஆரம்பித்தான். எல்லாம் சிறுசிறு கடைகள்தான். அரவிந்த் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினான்.
சில கடைகளில் சிசிடிவி இருந்தது. சில கடைகளில் இல்லை. சிசிடிவி இருந்த கடைகளில், அதில் பதிவாகியிருக்கும் காட்சிகளைப் பார்த்தான்
அந்த நாளின் தேதி, நேரம் சொல்லி காட்சிகளைப் பார்த்தான். ஆனால் அதில் அவன் பார்த்த இளைஞன் இல்லை.
மேலும் மேலும் தேடினான்!
ஒரு கடையின் சிசிடிவி காட்சியில் அந்த இளைஞன், தன் பைக்கை எடுத்துப் போவது போல் பதிவாகியிருந்தது. உடனே அதை பெரிது படுத்த சொல்லி, வண்டி எண்ணை குறித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
விரைவாக வர வேண்டும் என வேகமாக பைக்கை ஓட்டிக்கொண்டு அலீபோர் வந்தான். அங்கேயும் இதேபோல் தேடுதல்தான். பெரிய சாலை பெரிய பெரிய கடைகள். தேடுதலும் நேரமும் அதிகமானது. இருந்தும் கண்டுபிடித்தான்.
இந்த வண்டி எண் வைத்து VAHAN என்ற இணையதளம் உதவியுடன் அவர்கள் விவரங்களை அறிந்து கொண்டான். விலாசத்துடன் அலோக், தேவேஷ் என்று பெயர் வந்திருந்தது.
இவைகள் உண்மையாக இருக்குமா என்று சந்தேகம் வந்தது.
ஆனாலும், ‘போய் பார்த்தால் என்ன?’ என்றும் தோன்றியது. உடனே காயம்பா பகுதிக்கு கிளம்பிவிட்டான்.
*************
மிதமான வேகத்தில் டேக்சி சென்று கொண்டே இருந்தது. ‘எங்கே போகிறது?’ என்று தெரியாமல் வேகமாக போக சொல்ல பூஜாவிற்குப் பயமாக இருந்தது. அலைபேசியைப் பார்ப்பதும், வெளியே பார்ப்பதுமாக இருந்தாள். முடிந்தளவு பதற்றத்தை வெளிப்படுத்தாமல் உட்கார்ந்திருந்தாள்.
அக்கணம், “மேம், என் ஃபிரண்ட் ஒருத்தன் பங்கன் ரோடுல நிக்கிறான். அவன் பைக் பஞ்சர் போல. இப்ப மெசேஜ் பண்ணிருக்கான். நாம போற வழிதான் கூட்டிட்டுப் போயிடலாமா?” என்று கரண் கேட்டான்.
எனக்கு அலைபேசி சமிக்கை கிடைக்கவில்லை. இவனுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது? மாட்டிக் கொண்டோம் என்று தெளிவாக தெரிந்தது. இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டிருப்பார்கள் என்றும் புரிந்தது.
எந்த சாலை? எந்தப் பகுதியில் இருக்கிறது? மோசடி செய்வது ஒருவன் மட்டும் இல்லையா? இன்னொருவனும் உண்டா? ஒருவனிடமிருந்தே தப்புவது கடினம்! இதில் இன்னொருவனும் என்றால் எப்படித் தப்பிக்க?
நொடி நேரத்தில் இப்படியெல்லாம் அவள் மூளை யோசித்தது!
அவள் அமைதியாக இருக்கவும், “மேம், உங்களுக்கு ஓகே இல்லைனா… நான் அவனை வேற வெஃகிக்கிள் அரேஞ் பண்ண சொல்றேன்” என்று கூறிவிட்டு, ‘என்ன சொல்வாள்?’ என்று பின்னால் திரும்பி அவளையே பார்த்திருந்தான்.
செய்தித்தாளில் அடுத்த பக்கத்தை திருப்பிக் கொண்டு, “பரவால்லை… உங்க ஃபிரண்டுதான? போறப்ப கூட்டிட்டுப் போயிடலாம்” என்று வெகு இலகுவாக தன்னை காட்டிக்கொண்டு சொன்னதும், “தேங்க்ஸ் மேம்” என்றான்.
பூஜாவின் கண்கள் செய்தித்தாளைப் பார்த்தவாறு இருந்தன. ஆனால் வேறு எதையெதையோ மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.
சற்றுநேரத்திற்குப் பின் ஒரு இடத்தில் டேக்சி நிறுத்தப்பட்டது. முகப்பு விளக்கு ஒளியில் ஒரு பைக்கும், அதனருகே இரண்டு பேர் நிற்பது தெரிந்தது.
பார்த்ததும் பூஜாவிற்கு, ‘இன்னும் எத்தனை பேரு சேர்ந்து இந்த தப்பெல்லாம் பண்றாங்களோ?’ என்று தெரியாமல் எரிச்சல்பட்ட நேரத்தில், “ஒருத்தன்தான் வருவான். இன்னொருத்தன் பைக்க பார்த்துக்க இங்கதான் இருப்பான். ஸோ டோன்ட் வொரி” என்றதும், “ம்ம்ம்” என்றாள்.
அதீத பயத்தில், ‘எப்படியும் அந்த பசங்களைக் கொன்ன மாதிரி என்னையும் கொல்லத்தான் போறீங்க. அதுக்கு எதுக்கு இவ்ளோ ட்ராமா, பேசாம சீக்கிரம் கொன்னுடுங்க’ என்று கத்த வேண்டும் போலிருந்தது.
சட்டென்று, இவர்களால் வேறு ஏதாவது தனக்கு நடந்துவிடுமோ என்ற அச்சம் வந்ததும் அப்படியே அவள் உடல் அரண்டு போனது. ஆனால் இந்தப் பதற்றம், பயம், கோபம் என்று எதையும் துளிகூட வெளிக்காட்டாமல் இருந்தாள்.
டேக்சி உள்ளிருந்த கரண், “ஆசா தேவேஷ்” என்று பெங்காலியில் அழைக்க, டேக்சியை நோக்கி வந்த தேவேஷ், பூஜா அமர்ந்திருந்த பக்கமாகத் கதவைத் திறந்தான்.
பூஜாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
இருந்தும்… ஓட்டுனர் இருக்கையில் இருப்பவனைப் பார்த்து, “உங்க ஃபிரண்ட இந்தப் பக்கம் வந்து உட்கார சொல்றீங்களா?” என்று தன் வலப்பக்கத்தைக் காட்டியவள், “எனக்கு இங்கதான் கம்ஃபர்டபிளா இருக்கு” என்றாள்.
தேவேஷ், ‘என்ன செய்ய?’ என்று கரணை பார்க்க, ‘பார்த்துக்கலாம் வா’ என்று தலையசைத்ததும், அவளது பக்க கதவை மூடிவிட்டு… அவன் டேக்சியை சுற்றி வந்து… பூஜாவின் வலப்புறமாக இருக்கும் கதவைத் திறந்து… பாதத்தை உள்ளே வைத்த அடுத்த நொடி… பூஜா தன் பக்க கதவைத் திறந்து ஓடினாள்.
இந்த தருணத்திற்காக இவ்வளவு நேரம் காத்திருந்தாள்!
டேக்சி எங்காவது நிற்க வேண்டும். அப்பொழுதான் தப்பிக்க முடியும் என்றே கரண் சொன்னதிற்குச் சம்மதித்திருந்தாள். அதேபோல் அவர்கள் இருவருமே ஒருபக்கம் இருந்தால்தான் தன்னால் தப்பித்து ஓட முடியும் என்று தேவேஷை இந்தப் பக்கம் வருமாறு சொல்லியிருந்தாள்.
அவள் ஓட ஆரம்பித்ததும், “தேவேஷ் ஏறு… ” என்ற கரண், பைக் பக்கம் நின்ற ஜாதவிடம், “நீ பாலோவ் பண்ணு. அவ தப்பிக்க கூடாது” என்று கத்தினான்.
தேவேஷ் அதற்குள் பூஜாவைப் பிடிக்க ஓடிச் செல்ல… ஜாதவும் பைக் ஸ்டார்ட் செய்து கிளம்பியிருந்தான். அந்த சின்ன சாலையில் சற்று சிரமப்பட்டு கரண் டேக்சியைத் திருப்பி, அவளை பின்தொடர பார்த்தான்.
மூவரும் அவளை விரட்ட ஆரம்பித்தார்கள்.
இதற்கிடையே பூஜா முக்கிய சாலையில் ஓடவில்லை.
வரும்போதே பார்த்து வைத்திருந்தாள். அதனால் கிளைச்சாலை வழியே புகுந்து ஓடினாள். சிறுசிறு கடைகள் இருந்தன. ‘யாரும் உதவி கேட்க இருக்கிறார்களா?’ என்று பார்த்தபடி ஓடினாள்.
அப்படி ஓடி பதற்றத்தில் விழுந்தும் கொண்டாள். ஆனால் அடுத்த நொடியே திரும்ப எழுந்து ஓடினாள். ஓடிய வேகத்தில் ஓரிரு முறை கைப்பை கீழே விழுந்தது. குனிந்து எடுத்துக் கொண்டு ஓடினாள்.
அகால இரவு என்பதால் கிளைச்சாலை முழுதும் மயான அமைதி நிலவியது. இருள் பாதி… மங்கிய வெளிச்சம் மீதி என்று அச்சாலை இருந்தது. அதில் ஒருபக்கம் பூஜா ஓடும் சத்தம்! மற்றொரு பக்கம் டேக்சி, பைக் சத்தம்! இன்னொருபக்கம் தேவேஷின் பூட்ஸ் கால்களின் சத்தம்!
இவையாவும் மிகத் துள்ளியமாக கேட்டது!!
மூன்று பேர் சேர்ந்து ஒரு பெண்ணை துரத்திப் பிடிக்க நினைத்தால்… எங்கே ஓடி? எப்படித் தப்பிக்க? இதுதான் பூஜாவின் நிலைமை!
முதலில் அவளுக்கு எந்தப் பக்கம் ஓடினால் தப்பித்துச் செல்ல முடியும் என்று தெரியவில்லை. அதனால் ஒரே கிளைச்சாலைகளுக்குள் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தாள். இது மட்டுமில்லாமல் எந்தப் பக்கமாக ஓடினாலும் டேக்சி, பைக், தேவேஷ் காலணிகள் சத்தம் கேட்டது.
உடனே திரும்பவும் வந்த பாதை வழியே ஓடினாள்.
பத்து நிமிடங்களுக்கு மேலாக ஓடியவள், இரு பக்கமும் குப்பைகள் கொட்டிக் கிடந்த தெருக்களில் ஓடிக் கொண்டிருந்தாள். அதுவரை அவளைத் துரத்தி ஓடி வந்த தேவேஷ்… துப்பாக்கி கொண்டு சுட்டான். சரியாக அந்த நொடி… அடுத்த தெருவிற்கு பூஜா திரும்பியதால் உயிர் பிழைத்தாள்.
தோட்டா ஒரு கைரிக்ஸாவில் பட்டு சத்தம் எழுப்பி அடங்கியது!
துப்பாக்கிச் சத்தம் கேட்டதுமே ஓடிக் கொண்டிருந்த பூஜாவிற்கு உயிர், உடல் நடுங்கியது. இனி ஓட முடியுமா என்று தெரியவில்லை. உடனே ஒரு குப்பைத் தொட்டியின் பின்னே வந்து ஒளிந்து கொண்டாள்.
உடல் முழுவதும் வியர்வை நீரில் குளித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது பூஜாவின் உடலும், உடையும்! பயத்திலும், பதற்றத்திலும் மைக்ரேன் ஆரம்பித்திருந்தது. வாயை மூடிக்கொண்டு, ‘ப்பா, ப்பா’ என்று அழுதாள்.
இதற்கிடையே அவளைத் துரத்தி வந்த தேவேஷ் அங்கு நுழைந்தான். ஆனால் அந்தத் தெருவில் தேடலாம் செய்யவில்லை. விரைவாக ஓடி அடுத்த தெருவில் திரும்பி, அவளைத் தேட போய்விட்டான்.
அவன் ஓடி வருவதைப் பார்த்துப் பயந்திருந்தாள். அவன் சென்றதுமே, ‘ஷப்பா தப்பிச்சிட்டேன்’ என்று நிம்மதியாக ஒரு மூச்சு விடுவதற்குள், பின்னாலிருந்து ஜாதவின் பைக் ஒளி தெரிந்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடியவள், கரண் ஓட்டி வந்த டேக்சியில் மோதப் பார்த்து… தப்பி ஓடினாள்.
அதற்கடுத்த தெருவிற்கு ஓடி வந்தாள். இங்கே ஒருபக்கம் வரிசையாக மஞ்சள் நிற டேக்சிகள் நின்றன. யாராவது இருக்க மாட்டார்களா என்று கண்ணீரில் நனைந்த அவள் கண்கள் அலைபாய்ந்தன.
யாருமே இல்லை!
அங்கே ஒரு டீ ஸ்டால் இருப்பது தெரிந்தது. ஆனால் மூடியிருந்தது. எனினும் அதன்முன் இருந்த தகர அமைப்பின் பின்னே சென்று ஒளிந்து கொண்டாள்.
அடுத்த நொடி அலைபேசியை சைலன்ட் மோடில் மாற்றினாள். அதற்கடுத்த நொடி அப்பாவிற்கு அழைத்தாள். அந்தநேரம் அவளுக்கு இருந்த பதற்றத்தில் அப்பாவின் நிலை என்ன என்பதை மறந்து அழைத்திருந்தாள்.
நாலைந்து ரிங் போனதும், “ச்சே நான் என்ன பண்றேன்?” என்று அழைப்பைத் துண்டித்தாள். அதற்கடுத்த நொடி, ‘அரவிந்திற்கு அழைக்கவா… அழைத்தால் அவன் உதவுவானா… என்று யோசனையில் இருந்தாள்.
****************
காயம்பா – காளிகாட் சாலை!
வண்டி எண்ணைக் கொண்டுகண்டுபிடித்த விலாசத்தை வைத்து பூஜாவைப் பின்தொடர்ந்த ஆட்களைத் தேடி அரவிந்த் வந்திருந்தான். விலாசம் சரிதான். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவர்கள் அதிகமாக இங்கே வருவதில்லை என்று தெரிந்தது. இருந்தும் சற்று நேரம் காத்திருந்து பார்த்தான்.
வரவில்லை என்றதும், இனி இரண்டு பேரின் அடையாளத்தை வைத்து தேட வேண்டும் என்று முடிவெடுத்து கிளம்பியிருந்தான்.
இப்போது காயம்பாவிலிருந்து காளிகாட் சாலையில் கடும் போக்குவரத்துக்கு நெரிசலுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறான். அவன் பைக் முன்னேயும் பின்னேயும் பேருந்துகள், மஞ்சள் டேக்சிகள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என்று கசகசவென இருந்தது.
ஒரு ஒழுங்கேயில்லாமல் வாகனங்கள் நின்றன. சுருக்கமாக போக்குவரத்து ஸ்தம்பித்து போயிருந்தது. கூடவே காதை கிழிக்கும் வாகன ஒலிபான்களின் இரைச்சல் வேறு.
‘எவ்ளோ நேரமாகுமோ?’ என்று முதலில் நண்பன் ஒருவனுக்கு அழைத்துப் பேசினான். பின் வாணிக்கு அழைத்து, “க்கா, இங்க பயங்கற ட்ராபிக். வர்றதுக்கு லேட்டாகும். ஹிமான்ஷுக்கு ஃபோன் பண்ணிருக்கேன். அவன் வந்து உனக்குத் துணைக்கு இருப்பான்” என்றான்.
“எதுக்குடா… தனியா இருந்துப்பேன்”
“ஏற்கனவே சொல்லிட்டேன்… அவன் வந்திடுவான்” என்றவன் “க்கா சிக்னல் விழுந்திடுச்சி. நான் வைக்கிறேன். பை” என அழைப்பைத் துண்டித்தான்.
பத்து மீட்டர்தான் போயிருப்பான் மீண்டும் சமிக்கை சிவப்பாக மாறியதும் அனைத்து வாகனங்களும் நின்றுவிட்டன. அரவிந்தும் நின்றான்.
என்னமோ அந்தநேரத்தில், ‘பூஜா என்ன செய்வாள்?’ என்ற கேள்வி வந்தது. அவளை அலைபேசியில் அழைத்து இவ்வளவு விவரங்கள் தெரிந்திருக்கிறது என்று சொல்லலாமா என்று நினைக்கையில் ஓர் அழைப்பு வந்தது.
பூஜாவிடமிருந்துதான். அழைப்பை ஏற்கும் முன்னே அது துண்டிக்கப்பட்டது.
‘என்னாச்சு… ஏன் இப்படி பண்றா?’ என்று யோசிக்கையில் அவளிடமிருந்து புலனசெய்தி வந்தது. திறந்து பார்த்தான். ‘அரவிந்த எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். செய்வீங்களா?’ என்று கேட்டிருந்தாள்.
இவ்வளவு நேரத்திற்குப் பின் தன்னுடன் பேசிவிட்டாள் என்று அவன் முகத்தில் புன்னகை வந்திருந்தது. ஆனால் அது நிலைக்கவில்லை.
அதற்குள் அடுத்த செய்தி அனுப்பியிருந்தாள். அதை வாசித்துப் பார்த்ததுமே அரவிந்த் முகம் கடினமாக ஆனது. ‘ஆபத்தில் இருக்கிறேன். ஹெல்ப் பண்ண முடியுமா?’ என்று கேட்டிருந்தாள்.
உடனே அவளைக் கண்காணித்த இரண்டு பேரின் முகங்களும் ஞாபகத்தில் வர… அரவிந்திற்கு பயம், பதற்றம் வந்திருந்தது. சிக்னல் போட்டதும், இருபது மீட்டர் தூரம் ஓட்டியவன், பைக்கை சாலையின் ஓரமாக நிறுத்தினான்.
பின்னே வரும் இருசக்கர வாகனங்கள் ‘வண்டிய எடு’ என்று சொன்னார்கள். சிலர் அவன் சீருடையைப் பார்த்து பேசாமல் சென்றுவிட்டனர்.
இதில் எதையும் கவனிக்கும் நிலையில் அவனில்லை!
பைக்கை நிறுத்தி இறங்கி பாதசாரிகள் நடைபாதையில் நின்று… பூஜாவிற்கு அழைக்க நினைக்கையில் அவளிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது. திறந்து பார்த்தான்.
மூச்சு வாங்கி கொண்டு பூஜா பேசுவதில் அவன் பெயரைச் சொல்வது மட்டும் புரிந்தது. அதற்குமேல் ஏதுமே புரியவில்லை. உடனே அவளுக்கு அழைத்தான். ரிங் போய்க் கொண்டேயிருந்தது.
அவள் அலைபேசியை எடுக்கவில்லை என்றதுமே… அவளுக்கு என்னாச்சோ? ஏதாச்சோ? என்ற பயத்தில், பதற்றத்தில் நெற்றி எங்கும் வியர்க்க, ‘பூஜா எங்க இருக்க, கால் அட்டன் பண்ணு. அப்பதான் ஹெல்ப் பண்ண முடியும். பிக்அப் தி ஃபோன்’ என்று திரும்பத் திரும்ப புலம்பிக் கொண்டு நின்றான்!
‘உனக்குத்தான பிரச்சனை! எனக்கென்ன வந்தது? ஹெல்ப் கேட்டு என் முன்ன வந்திடாத’ என்று சொன்னதெல்லாம் போன இடமும் தெரியவில்லை… அதற்கான தடமும் அரவிந்திடம் இல்லை!!
