Kathambari Novels
மானிக்டாலா நிலையம்!
இன்று குணால் மித்ராவை பார்க்க போவதால் சீருடையில் இல்லாமல், ஜீன்ஸ் டீ-ஷர்ட்டில் அரவிந்த் வந்திருந்தான். இன்னும் பூஜா வரவில்லை. அவள் வந்த பின்னே செல்லவேண்டும். அதற்குள் ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டது. முழுக்கவனத்துடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அரை மணிநேரம் கழித்தபின் பூஜாவிடமிருந்து அழைப்பு வந்தது. வேலையில் கவனமாக இருந்ததால், அழைப்பை எடுக்காமல் விட்டுவிட்டான்.
பத்து நிமிடத்திற்குப்பின் மீண்டும் பூஜா அழைத்தாள். இன்னும் அந்த வேலை முடியவில்லை. இருந்தும் அழைப்பை ஏற்றான்.
“நான் வந்துட்டேன். வெளியே நிக்கிறேன்” என்றாள்.
“இரு வர்றேன்” என்றாலும், ஒரு ஐந்து நிமிடத்திற்குப் பிறகே வெளியே வந்தான்.
தப்பான் நிற்கும் இடத்தைக் காட்டி, “எங்க அவர்?” என்று கேட்டாள்.
“உன் ஃபிரண்ட் இன்னைக்கு லீவ். உன்கிட்ட பேசி பேசியே அவருக்கு காய்ச்சல் வந்திடுச்சு” என்றான்.
சிறு புன்னகை உதட்டோரம் எட்டிப் பார்க்க பார்த்தது. ஆனால் அதை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டாள்.
“இன்னைக்கு என்ன லேட்?” என்றான்.
“கொஞ்சம் மைக்ரேன். அதான் எழுந்துக்க முடியலை” என்றுவிட்டு, அதற்கு அவன் ஏதாவது சொல்வானா என்று எதிர்பார்த்து நின்றாள்.
“போலாமா?” என்றான்.
“ம்ம்ம்” என்றாள் சிறு ஏமாற்றத்தோடு.
“பூஜா, இன்னைக்கு பைக்ல போயிடலாமா?” – ‘என்ன சொல்வாளோ?’ என்ற ஒரு தயக்கத்தில் கேட்டான்.
“ம், சரி” என்றாள்.
வரிசையாக நின்ற பைக்கிலிருந்து அவன் பைக்கை எடுத்தபடியே, “உனக்கு ஒன்னும் ப்ராபளம் இல்லையே?” என்று கேட்டான்.
“இல்ல”
பைக்கில் ஏறி அமர்ந்து, “கேட்க மறந்துட்டேன். நேத்து ஏன் ஃபோன் பண்ண?” என்றான்.
“ஃபர்ஸ்ட்… ம்ம், அந்த மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் மர்டர் நடந்த இடத்தில அப்பா கார் இருந்ததுனு சொன்னீங்கள… இருந்திருக்க சான்ஸ் இருக்குது. பட் அதுல அப்பா இருந்திருக்க மாட்டாரு”
“எப்படி இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்ற?”
“ஏன்னா கார்ல ஏதோ ப்ராப்ளம்னு ரிப்பேர் பண்ண ஷாப்ல விட்டுருந்தாங்க”
“ஹே… நிச்சயமா சொல்றியா?”
“ஆமா. ம் தேர்ட்… அந்த பிரணாப் மர்டர் நடந்ததுல, அதுக்கு முந்தின நாள்கூட நானும் அப்பாவும் விக்ட்டோரியா மெமோரியலுக்கு போயிருந்தோம். நாங்க ரிட்டர்ன் வர்றப்பகூட டேக்ஸிலதான் வந்தோம். நல்லா ஞாபகம் இருக்கு”
“சரியான எவிடென்ஸ்! எந்த மெக்கானிக் ஷாப்னு சொல்லு… என்னென்னு போய் பார்க்கலாம்?”
“அது… அது, ரிப்பேர் கொடுத்திருக்கேன்னு மட்டும்தான் அப்பா சொன்னாங்க. இது… தெரியலை”
“கடை பேர் தெரியணும். அன்ட் ரெசிப்ட் வேணும். வாய்ல சொல்றதெல்லாம் ஏத்துக்க மாட்டாங்க. வீடு ஃபுல்லா தேடி கண்டுபிடி”
“ம்ம்ம்”
“பட் இதுகூட தெரியாம எப்படி?”
“ஒன் வீக் முன்னாடிதான இங்க வந்தேன்”
“ஒன்னு மட்டும் புரியலை. இப்போ அப்பா அப்பான்னு சொல்ற. இவ்ளோ நாள் அவரைத் தனியாதான் விட்ருந்திருக்க?!”
“ஃபர்ஸ்ட் பேமிலி ஃபினான்சியல் சிச்சுவேஷன் அப்படி. அம்மா இறந்ததுக்கு அப்புறம் வந்திருக்கணும். பட் நான் பிஹெச்டி ஒர்க்ல இருந்தேன். அதான் வர முடியலை”
“நீ பிஹெச்டி பண்ணிருக்கியா என்ன? டாபிக் என்ன எப்படி பட்டுபட்டுனு பேசறதுனா?” என்றான் மென்னகையுடன்.
“மெலோட்ராமா அன்ட் ஷேக்ஸ்பியர்” என்றவள், “அப்பா பர்த்டே வருது. நான் இதுவரைக்குமே ஃபோன்லதான் விஷ் பண்ணிருக்கேன். இந்த இயர் அவர்கூட இருக்கணும்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சி. சீக்கிரம் அப்பா வந்திடனும். வந்திடுவாங்கள?” என்று உணர்ச்சி வசப்பட்டாள்.
அவள் தோள்பட்டையில் தட்டி, “பார்க்கலாம். ஏறு” என்று அவன் சொன்னதும், பைக்கில் ஏறினாள். இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அலீபோர் நீதிமன்ற வளாகம்!
பைக்கை நிறுத்துமிடத்தில் விட்ட அரவிந்த், அன்று போல் இன்றும் பூஜாவைக் காத்திருக்க சொல்லி, குணாலைப் பார்க்கச் சென்றான். இரண்டு நொடிகளில் திரும்பி வந்தவன் முகத்தில் ஒரு மென்னகை இருந்தது.
“என்ன… என்னாச்சு?” என்று பூஜா கேட்க, “லஞ்ச் டைம்” என்றதும், அவளுக்கும் ஒரு மென்னகை வந்தது.
“நீ சீக்கிரம் வந்திடுவ… இங்க வந்திட்டு லஞ்ச் டைம்க்கு முன்னாடி ஸ்டேஷன் போயிடலாம்னு நினைச்சேன். ஆனா பாரு… லேட்டாயிடுச்சி”
“பசிக்குதா?” – அவன் சுற்றி வளைத்து சொல்ல வருவதைச் சுருக்கமாக கேட்டாள்.
“நல்லாவே” என்றான்.
“அப்போ டீ குடிக்கலாமா?” – அவள் எழுந்து கொண்டாள்.
“இன்னைக்குச் சாப்பிட போலாமா?” என்று கேட்டான்.
அவள் சற்று யோசித்துவிட்டு சரியென்றதும், “தேங்க்ஸ். பக்கத்தில சின்ன ரெஸ்டாரென்ட் இருக்கும். நடந்தே போயிடலாம்” என்றான்.
அருகிலிருந்த ஒரு சிறிய உணவகத்திற்குச் சென்றனர். கடப்ப கல்லில் மேசை, பிளாஸ்டிக் நாற்காலிகள், விண்டோ ஏசி, நான்கைந்து ஃபேன்கள், சுவர்களில் கொல்கத்தாவின் பாரம்பரிய உணவுகளின் படங்கள் என்று இருந்தது… அந்த உணவகம்.
ஆட்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் ஒரு ஓரமாக வந்து அமர்ந்தார்கள்.
மெனு கார்டை பார்த்தவன், “எனக்கு ஆர்டர் பண்ண போறேன். உனக்கு எதும் வேணுமா?” என்று கேட்டான்.
“இல்ல, வேண்டாம்” என்று மறுத்துவிட்டாள்.
அவனுக்கு மட்டும் மச்சேர் ஜோல், சாதம் ஆர்டர் செய்து கொண்டான். ஆர்டர் செய்தது வரும்வரை அரவிந்த் அலைபேசி பார்க்க ஆரம்பித்தான்.
உணவு வந்ததும் சாப்பிட ஆரம்பித்தவன், சட்டென ஏதோ தோன்ற ஒரு தட்டில் சாதம் போட்டு மச்சேர் ஜோலை ஊற்றி, “நீயும் சாப்பிடு” என்று அவள் பக்கம் நகர்த்தினான்.
“வேண்டாம்னு சொன்னேன்ல?” என்று மீண்டும் மறுத்துப் பார்த்தாள்.
“மீன்கூட உருளைக்கிழங்கு, தக்காளி போட்டு இங்க சமைக்கிற டிஷ். சூப்பரா இருக்கும் பூஜா. ம்ம் சாப்பிடு” என்று வற்புறுத்தினாலும், “வேண்டாம்…” என்றே சொல்லிப் பார்த்தாள்.
“இன்னும் எவ்ளோ அலையணுமோ? சாப்பிட்டாதான முடியும்” என்று சொல்ல, வாதம் செய்யாமல் சாதத்தைப் பிசைந்து வாயில் வைத்தாள்.
இந்த உணவும் பிடிக்கவில்லை. அவள் முகம் அதை வெளிப்படுத்தியது.
அவள் முகம் போன போக்கைப் பார்த்து, “என்னாச்சு?” என்றான்.
“ஆயில் ஸ்மெல், டேஸ்ட் பிடிக்கல” என்று தட்டைத் தள்ளி வைத்துவிட்டாள்.
“இது மஸ்டர்டு ஆயில். இங்க இதுதான். அங்க நல்லெண்ணதான? எங்க மாமா வந்திட்டா அக்கா அந்த ஆயில்தான் குக்கிங்ல யூஸ் பண்ணுவா. அந்த ஸ்மெல் சுத்தமா பிடிக்காது. ஸோ எனக்கு மட்டும் தனியா சமைக்க சொல்லிடுவேன்.
நமக்குள்ள எதும் மேட்ச் இல்லைல பூஜா? நான் பார்க்கிற ஜாப், எனக்கு பிடிச்ச ஃபுட்… உனக்கு பிடிக்கல. நான் சரளமா பேசற ஒரு லாங்குவேஜ்ல உனக்கு ஒரு வார்த்தை கூட தெரியாது. தேங்க் குட்னெஸ் வேண்டாம்னு சொன்னோம்” என சாப்பிட்டபடி சாதரணமாக பேசினான்.
இப்படியே பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வாணியின் தோழி ஒருத்தி வந்து அரவிந்திடம் பேசிவிட்டும் சென்றிருந்தாள். பேசியபடி இருப்பது போல் தெரிந்தாலும் இன்று யாரும் இவளைக் கண்காணிக்கிறார்களா என்று அரவிந்த் பார்த்தும் கொண்டான்.
பூஜாவோ அவனையே பார்த்தபடி எதுவும் சொல்லாமல் இருந்தாள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு குணாலை சந்தித்து நடந்தவற்றைச் சொன்னார்கள். சில விடயங்கள் கேட்டறிந்தார்கள். சவுரவிடம் பேசி பூஜா சேகரனைப் பார்க்க அனுமதி வாங்கித் தரும்படி அரவிந்த் கேட்டுக் கொண்டான்.
பின் அங்கிருந்து கிளம்பினார்கள்.
காளிகாட் குடியிருப்பு பகுதி!
வீடு வந்ததும் செக்ரட்டரி மனைவியிடம் சென்று, ‘அப்பா கார் சர்வீஸ், ரிப்பேர் பண்ற ஷாப் தெரியுமா?’ என பூஜா ஆங்கிலத்தில் கேட்க, ‘எனக்குத் தெரியாது ஹஸ்பன்ட் ஃபோன் பண்றப்போ கேட்டுச் சொல்றேன்” என்றிருந்தார்.
வீட்டுக்குள்ளே வந்ததுமே தேட ஆரம்பித்தாள். சேகரன் முக்கியமான பில்கள் வைக்கின்ற கோப்புகளை எல்லாம் எடுத்துப் போட்டுத் தேடினாள். நிறைய காகிதங்களில் பெங்காலியில் எழுதியிருந்தது.
‘அச்சோ என்ன பண்ண?’ என்று நொந்துவிட்டாள்.
மைக்ரேன் அதிகமாவது போல் இருந்தது. சற்று நேரம் தூங்கி எழுந்தாள். ஒரு டீ போட்டுக் குடித்துவிட்டு மீண்டும் தேட ஆரம்பித்தாள்.
சிறு காகிதங்கள் வைக்கும் கோப்பை எடுத்து தேடும் போது, அழைப்பு மணி ஓசை கேட்டது. எழுந்து சென்று பார்த்தாள். காவலர் ஒருவர் நின்றார். ‘என்ன?’ என்பது போல் பூஜா பார்க்க, ‘இன்ஸ்பெக்டர் ஆப்நா சாத்தே தேக்கா…’ என்று ஆரம்பித்து பெங்காலியில் ஏதோ சொன்னார்.
பூஜா, ‘சுத்தமா புரியலை’ என்றதும், ‘இன்ஸ்பெக்டர் வான்டஸ் டு மீட் யூ பூஜா’ என்றார் ஆங்கிலத்தில்.
‘எதுக்கு?’ என்று சைகையில் கேட்கவும், ‘தெரியலை’ என அவர் தலையசைக்க, ‘அப்பாக்கு எதுவுமா?’ என்ற பயத்தால் அவசரவசரமாக வீட்டைப் பூட்டிவிட்டு ஓடினாள். அந்தக் காவலர் வந்த ஆட்டோவிலே பூஜாவும் கிளம்பினாள்.
காளிகாட் காவல் நிலையம்!
உள்ளே நுழைந்ததும், பூஜாவை ஒரு இடத்தில் இருக்க சொல்லிவிட்டு, காவலர் சவுரவ் அறைக்குள் சென்றார். பூஜா சுற்றிப் பார்த்தாள். ஏற்கனவே இருமுறை வந்திருக்கிறாள். ஆனால் அது பகல் பொழுதில்!
இரவாகியிருந்தது. நேரம் ஆறரையைத் தாண்டியதால் சாலையில் வெளிச்சம் இல்லை. காவல்நிலையமும் விளக்கொளியில் இருப்பது வேறு வித்தியாசமாக இருந்தது. கொசுக்கடி அதிகமாக இருந்தது.
இதற்காகவெல்லாம் பயமில்லை!
ஆனால் அப்பா இங்கே எப்படி இருக்கிறார் என்று மனம் ஒருமாதிரி ஆனது. எங்கே அடைத்து வைத்திருப்பார்கள்? போய் பார்த்துவிடலாமா என கால்கள் பரபரத்தன.
அக்கணம், ‘உள்ளே போகலாம்’ என்று காவலர் சைகை செய்துவிட்டுப் போக, எழுந்தவள், ‘கோபப்படக் கூடாது. பொறுமையா இருக்கணும்’ என்று தனக்குச் சொல்லிக் கொண்டு சவுரவ் அறைக்குள் சென்றாள்.
“ஏன் வரச் சொன்னீங்க சார்? என் அப்பா… அவருக்கு ஒன்னுமில்லைல?” என்று ஆங்கிலத்தில் சாந்தமான குரலில் ஆரம்பித்தாள்.
“எதுவுமில்லை. முதல உட்காரு கொஞ்சம் விசாரிக்கணும்” என்று அவரும் ஆங்கிலத்தில் பேசினார்.
அமர்ந்து கொண்டே, “என்கிட்டயா… எதுக்கு?” என்றாள் புரியாமல்.
“இந்த கேஸ் ரிலேட்டடா உனக்கு என்ன தெரியுமோ அதைச் சொல்லு”
“எனக்கு எப்படித் தெரியும்… எனக்கு எதுவும் தெரியாது”
“உன் அப்பா உன்கிட்ட எதும் சொல்லியிருக்காரா? யோசிச்சி சொல்லு”
நேற்று ஞாபகத்தில் வந்ததை நினைத்துப் பார்த்தவள், “என்னை இங்க இருக்க வேண்டாம். தமிழ்நாட்டுக்குப் போக சொன்னாரு” என்றாள்.
“ஏன்?” என்று சவுரவ் கேட்டபோது அவர் தொனியில் சந்தேகம் இருந்தது.
“எனக்குத் தெரியாது”
“இத என்னை நம்ப சொல்றியா? பொய் சொல்லாத. உண்மையைச் சொல்லு. அதுதான் உனக்கும் உன் அப்பாவுக்கும் நல்லது” என்று மௌனம் சாதிக்கும் சேகரன் மீது இருக்கும் கோபத்தை அவளிடம் காட்டினார்.
“நான் பொய் சொல்லலை. அதுக்கு அவசியமும் இல்ல. உங்களுக்குதான் என்ன அவசியம்னு தெரியலை. என் அப்பா மேல பொய்யா கேஸ் போட்ருக்கீங்க. தேவையில்லாம டவுட் பண்றீங்க” என்று குரல் உயர்த்தினாள்.
“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா… இன்ஸ்பெக்டர்கிட்ட இப்படிப் பேசுவ? இருக்கிற எவிடன்ஸ் வச்சி உன்னோட அப்பா மேல கம்ப்ளைன்ட் ரெஜிஸ்டர் பண்ணிடுவேன்” என்று அவரும் குரல் உயர்த்தினார்
“அதுக்கு முன்னாடியே நான் உங்கமேல கம்ப்ளைன்ட் கொடுப்பேன். என்னை இன்ட்டெரகேஷனுக்கு வர சொன்னதுக்கு… அன்ட் ஆறு மணிக்கு மேல வுமன போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வஞ்சிருக்கீங்க… அதுவும் வுமன் கான்ஸ்டபிள் இல்லாம… இதுவும் தப்புதான?” என்று அவள் சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில், “வெளிய வெய்ட் பண்ணு. இன்னைக்கு உன்ன எவ்ளோ நேரம் வெய்ட் பண்ண வைக்கிறேன் பாரு” என்றார் சவுரவ் கோபமாக.
“ஓகே. எனக்குப் பயமில்லை. உங்களுக்குத்தான் சார் ப்ராபளம் வரப்போகுது. பாருங்க” என்று கோபமாக வெளியேறினாள்.
சவுரவ் யோசித்தார். பூஜா கோபமாகப் பேசிவிட்டுப் போனதைப் பற்றி அல்ல. தன் அப்பா சொன்னதாக அவள் சொன்ன, ‘இங்கிருக்க வேண்டாம். தமிழ்நாடு சென்றுவிடு’ என்றதை. சேகரன் கூறிய, ‘என் பொண்ணு வந்து ஒருவாரம்தான் ஆகிறது’ என்பதுடன் இதை இணைத்துப் பார்த்தார்.
சேகரனுக்கு எதுவும் பிரச்சனை என்றால் மகளை கொல்கத்தா வரவிட்டிருக்க மாட்டார். மாறாக தமிழ்நாடு சென்றிருப்பார். பூஜாவிற்கும் ஏதும் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. அவள் இங்கே வந்து ஒருவரம்தான் ஆகிறது.
அப்படியென்றால் பிரச்சனை இங்கு வேறு. அதற்குள் சேகரன் வந்திருக்கிறார். இதனால் மகளும் பாதிக்கப்படுவாளோ என்று மனிதர் பயப்படுகிறார். இது இந்தப் பெண்ணிற்குத் தெரியவில்லை.
இந்தப் புரிதல் வரவும் காவலரை அழைத்து, பூஜாவைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சென்று விட்டுவிடும்படி உத்தரவிட்டார். அந்தக் காவலர் வெளியே வந்து சொன்னதும், ‘உங்க இஷ்டத்துக்கு ரூல்ஸ் மாத்திக்கிறீங்க. நான் போக மாட்டேன்’ என்று மறுத்துவிட்டாள்.
காவலர் வந்து இதைச் சொல்லவும், கோபத்துடன் சவுரவ் தன் அலைபேசியை எடுத்தார்.
மானிக்டாலா காவல் நிலையம்!
அரவிந்த் மிக கவனமாக ஒரு புகாரின் விவரங்கள் பற்றிப் பார்த்திருந்தான். அக்கணம் சவுரவிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. தொடுதிரையைப் பார்த்தவன் அழைப்பைத் துண்டித்து, மீண்டும் கோப்புகளைப் பார்த்தான்.
திரும்பவும் அழைப்பு வந்தது. ‘என்ன ஏதும் பிரச்சனையா?’ என்று அழைப்பை ஏற்றான். சவுரவ் சொல்ல சொல்ல கேட்டிருந்தவன், ‘வர்றேன் சார்’ என்று எரிச்சலுடன் பெங்காலியில் சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
காளிகாட் காவல் நிலையம்!
அரவிந்த் பைக்கில் வந்து இறங்கி வேகமாக உள்ளே வந்தான்.
அவனைப் பார்த்ததும், ‘அச்சோ… இவர் இவனுக்கு சொல்லிட்டாரா’ என்று பூஜா முழிக்க, அவளைக் கோபமாக பார்த்துவிட்டு சவுரவ் அறைக்குள் சென்றான்.
அவனைப் பார்த்ததுமே, ‘ஒன் மினிட்’ என்று காவலரை அழைத்து பூஜாவை உள்ளே வருமாறு சொல்ல சொன்னார்.
அவளும் வந்து நின்றதும்… இரண்டு பேரின் முகங்களைப் பார்த்த அரவிந்த், “என்னாச்சு?” என்று ஆங்கிலத்தில் ஆரம்பிக்க, “என்கிட்ட விசாரிக்கணும்னு வரச் சொல்லிட்டு… என் அப்பா மேல கேஸ் ரெஜிஸ்டர் பண்ணுவேன்னு இவர் சொல்லறாரு” என்று தொடர்ந்தாள்.
“இந்தப் பொண்ணு எங்கிட்ட மரியாதை இல்லாம பேசினா… அதனாலதான் நான் அப்படிப் பேசினேன்” என்று அவர் சொன்னார்.
அவள், “இவர் எப்பவுமே என்னை இல்ட்ரீட் பண்ணறாரு. ஹுயூமிலேட் பண்ணறாரு” என்று சொன்னாள்.
சட்டென அரவிந்த், “அவ ஏதாவது பேசியிருந்தா சாரி சார்” என்றான்.
“நீங்க ஏன் சாரி கேட்கிறீங்க?” என்று பூஜா சொல்லியிருந்தாள்.
அதே நேரத்தில், “நீ ஏன் சாரி கேட்கணும்?! அந்தப் பொண்ண கூட்டிட்டுப் போ” என்று சவுரவ் அவர் வேலையைப் பார்க்கலானார்.
மெதுவாக, “குணால் சார் உங்ககிட்ட பேசினாரா?” என்று அரவிந்த் கேட்டதற்கு, “நாங்க பேசிக்கிறோம். நீங்க போகலாம்” என்றுவிட்டார்.
அதற்குமேல் பேசாமல், “வா” என்று பூஜா கைப்பிடித்து வெளியே அழைத்தபடி வந்து, ஒரு கடையிலிருந்து வாட்டர் பாட்டில் வாங்கி அவளிடம் நீட்டினான்.
“ஐ அம் ஆல்ரைட். எனக்கு வேண்டாம்” என்று மறுக்க, “இது இவ்ளோ நேரம் நீ பேசினதுக்கு இல்லை. இனி நான் பேசப் போறதைக் கேட்கிறதுக்கு” என்றான் கோபமாக.
வாட்டர் பாட்டிலை அவள் கைகளில் திணித்து, “நீங்க ரெண்டு பேரும் என்னை வேலை பார்க்கவே விட மாட்டிங்களா?” என்று ஆரம்பித்தான்.
“இதை அவர்கிட்ட கேட்க மாட்டிக்கிறீங்க? என்கிட்ட மட்டும் கேட்கிறீங்க?”
“அவர்கிட்ட நான் என்ன கேட்கணும்?” என்றபோது அலைபேசி அழைப்பு வர எடுத்துப் பார்த்தான்.
வாணி!
உடனே அழைப்பை ஏற்று, “அக்கா என்னாச்சு?” என்று பதற்றமாக கேட்டான்.
“என்னடா நீ இப்படி? அதெல்லாம் ஒன்னுமில்லை” என்று சாதாரணமாக பேச ஆரம்பிக்க, “அப்புறம் எதுக்கு ஃபோன் பண்ண?” என்று கேட்டான்.
“இன்னைக்கு ஹோட்டல் போயிருக்கீங்க போல” என்றாள் கேலியான குரலில்.
‘இன்று ஏன் எல்லாரும் இப்படி?’ என்று நொந்து கொண்டிருந்தான்.
“எங்கிட்ட என்ன சொன்னடா? ஸ்டேஷன்… இல்லைனா கோர்ட்லதான் மீட் பண்ணுவோம்னு சொன்னேல. இன்னைக்கு என்னாச்சு?”
“உன் ஃபிரண்ட் சொன்னாங்களா?” என்று கேட்க, “ஆமாம்” என்றாள்.
“சரியான டென்ஷன்ல இருக்கேன். பேசாம ஃபோன் வச்சிடுக்கா” என்று கோபப்படவும், சிரித்துக் கொண்டே வாணி அழைப்பைத் துண்டித்தாள்.
‘எங்கே விட்டேன்?’ என்று யோசித்தவன், “அவர்கிட்ட என்ன கேட்கணும்? ஏதும் உன்னைக் கேள்வி கேட்டா தெரியும்… தெரியாதுனு சொல்லிட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான? அதவிட்டு அவர்கிட்ட ரூல்ஸ் பேசற!” என்றான்.
“ஏன்… ஏன் பேச கூடாது? நான் என் அப்பாவ பார்க்கணும்னா மட்டும் ரூல்ஸ் பேசறீங்க? என்னை விசாரிக்கிறதுக்கு ரூல்ஸ் கிடையாதா?”
“உள்ள என்னடானா உன் அப்பா பேச மாட்டிக்கிறாரு. நீ இப்படிப் பேசிக்கிட்டு இருக்க?” என்று எரிச்சல்பட்டு பைக்கை எடுத்தான்.
“அப்போ அவர் என்ன பேசினாலும்… நான் கேட்டுக்கிட்டே இருக்கணும்னு சொல்றீங்களா?”
கோபத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்து, “இருக்க வேண்டாம். நீ பேசு. அப்புறம் அவர் பேசட்டும். ரெண்டு பேரும் நல்லா சண்டை போட்டுக்கோங்க. நடுவுல என்னை இழுக்காதீங்க” என்று சொல்லிச் சென்றுவிட்டான்.
ஒருநொடி கண் கலங்கி நின்றாள். காவல்நிலையத்தைப் பார்த்தாள். இங்கயே இருந்திடலாமா என்று தோன்றியது. ‘எமோஷன் ஆகாத. என்ன பண்ணலாம்னு பாரு’ என்று ஆட்டோ தேடி நடந்து வந்தாள்.
ஒரு பைக் வந்து சரேலென்று அவள் குறுக்கே நின்றது.
அரவிந்த்-தான்!
அவள் முகத்தின் வாட்டத்தைப் பார்த்தவன், “சாரி” என்றான்.
“அப்பா மேல கேஸ் ரெஜிஸ்டர் பண்ண மாட்டாங்கள?” என்றுதான் கேட்டாள்.
“ஹே பூஜா… அதெல்லாம் போட மாட்டாங்க” என்றவன், “வா… நானே வீட்ல ட்ராப் பண்ணிடறேன்” என்றான்.
“இல்லை நானே போயிடுவேன்”
“லேட்டாயிடுச்சி. தனியா போக வேண்டாம். வா” என்றதற்கு… அவள் பேசாமல் இருக்க, “சாப்பிட்டியா?” என்று கேட்டான்.
“ம்கூம்” என்றாள்.
“எதுவும் வாங்கித் தரவா?”
“ம்கூம்… இங்க சாப்பாடு பிடிக்கலை”
“நீ வீட்ல சமைக்கலாமே… குக் பண்ண தெரியும்ல?!”
“தெரியும். ஆனா சமைச்சி சாப்பிட மனசு வரவே மாட்டிக்குது”
பேச்சை மாற்றலாம் என்று நினைத்து, “சரி, மைக்ரேன் எப்படி இருக்கு? காலையில சொன்னதுக்கு இப்ப பெட்டரா?” என்று கேட்டான்
ஞாபகம் வைத்துக் கேட்கிறானே என ஆறுதல் அடைந்தவள், “ஈவினிங் தூங்கி எந்திரிச்சேன். இப்போ பரவால்ல” என்று… இருவரின் பேச்சு தொடர்ந்தது.
சற்று தூரத்தில் நின்ற ஒரு இளைஞன் இவர்கள் இரண்டு பேரையும் பார்த்துக் கொண்டிருந்தான். இதற்குமுன் பூஜாவை பின் தொடர்ந்த இளைஞர்கள் அல்ல இவன்!
இவன் பெயர் கரண்! ஆனால் இவன் ‘அவர்கள்’ கூட்டாளிதான்!
இவனருகில் இதற்குமுன் அவளைக் கண்காணித்த அலோக் மற்றும் தேவேஷ் பைக்கில் வந்து நின்று, ‘என்ன?’ என்று கண்களால் கேட்டார்கள்.
‘பார்க்கிறப்ப நமக்கு அகைன்ஸ்ட்டா எதுவும் இல்லாத மாதிரிதான் தெரியுது. ஆனா அவகூட பேசிக்கிட்டு இருக்கானே… அவன் யாரு?’ என்று பெங்காலியில் அவர்கள் பேச்சு ஆரம்பித்தது.
‘அலீபோர் கோர்ட் பக்கம்… இவகூட இவனைப் பார்த்தேன்’ என்று அலோக் சொல்ல, ‘காளிகாட் ஸ்டேஷன் முன்னாடி நானும் இவனைப் பார்த்தேன்’ என்றான் தேவேஷ்.
‘அவன் உங்களைப் பார்த்தானா?’
‘பார்த்திருக்கலாம்’ என்று அலோக் சொல்ல, ‘பார்த்த மாதிரிதான் இருந்தது’ என்று தேவேஷ் சொன்னான்.
‘இவனால ப்ராப்ளம் வருமா…?’ என்றான் கரண்.
தேவேஷ் சற்றுயோசித்துவிட்டு, ‘தெரியல… ஆனா அவன் போலீஸ்’ என்றவன், ‘ஏறு… இப்ப அவன் பார்க்கிறதுக்குள்ள கிளம்பலாம்’ என்று அவசரப்படுத்த, கரண் பைக்கில் ஏறிக் கொண்டான்.
மூவரும் பைக்கில் அரவிந்த்ம் பூஜாவைக் கடந்து சென்றார்கள்! பூஜாவுடன் கருத்தாக பேசிக் கொண்டிருந்ததில், இந்த முறை அரவிந்த் இவர்களைக் கவனிக்க தவறிவிட்டான்!!
கற்புநிலை யாதெனில் – கதையை இங்கே படிக்கலாம்