Kathambari Novels
மானிக்டாலா பகுதி வந்ததும் ஆட்டோக்காரர் சொன்ன தொகையைப் புரிந்து கொள்ள பூஜா அவ்வளவு சிரமப்பட்டாள். அலைபேசி ‘கீபேட்’ மூலம் இவ்வளவு என்று அவர் சொல்ல, அதைக் கொடுத்துவிட்டு காவல்நிலையம் வந்தாள்.
வெளியே தப்பான் இல்லை. நேரடியாக உள்ளே சென்று பார்க்கலாமா என்று அவள் தயங்கி நிற்கையில், சாலையின் மற்றொரு பக்கத்திலிருந்து தப்பான் வந்தார்.
இவளைப் பார்த்ததும், ‘என்ன இங்க?’ என்று சைகையில் கேட்டார்.
‘அரவிந்தைப் பார்க்க வேண்டும்’ என்று சாதாரண ஆங்கில வார்த்தைகளில் சொன்னாள்.
வழக்கு விசாரணைக்காக போயிருக்கிறார் என்றதுமே, அவனைத் தொந்தரவு செய்கிறோமோ என தோன்றியது. அவள் முகமாற்றம் கண்டு ‘ஏன் ஒருமாதிரி இருக்கிற?’ என்று தப்பான் கேட்க, காளிகாட் காவல் நிலையத்தில் நடந்ததைச் சொன்னாள்.
இதில் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அவளுக்கும் தெரியும். இருந்தாலும் அவரிடம் சொல்வதில் அவளுக்கு ஒரு சிறு ஆறுதல்.
பூஜா முகத்தைப் பார்த்தார். மிகவும் சோர்வாக இருந்தது. உடனே சென்று ஒரு டீ வாங்கி வந்து கொடுத்தார்.
‘தேங்க்ஸ்’ என்று குடிக்கும் போது ஜீப் வந்து நிற்க அதிலிருந்து அரவிந்த் இறங்கினான். அவன் முகத்தைப் பார்த்தபடி நிற்கவும், “நீ ஏன் இங்க வந்து இருக்க?” என்று கேட்டுக் கொண்டு அவள் முன் வந்து நின்றான்.
“என் அப்பா கேஸ் விஷயமா?” என்று மெதுவாகச் சொன்னாள்.
“எனக்கு எப்படித் தெரியும்? அதுக்கு அந்த போலீஸ் ஸ்டேஷன் போய் கேளு”
அவள் பேசாமல் இருந்தாள்.
“இப்படி இருந்தா என்ன அர்த்தம்? இன்னைக்கும் கத்திட்டு வந்திருக்கியா?”
“என் அப்பா எதும் பேசினாரானு கேட்டேன். அதுக்கு அவர் பதில் சொல்லலை”
“விசாரிக்கிறதை எப்படி சொல்வாருன்னு நீ நினைக்கிற? முதல அத எதுக்கு உங்கிட்ட சொல்லணும்?”
“சரி. அத விடுங்க. என் அப்பா எப்படி இருக்காருன்னு கேட்டேன். அதையும் சொல்லலை. அதோட வேணும்னே என்னை வெய்ட் பண்ண வச்சாரு. எனக்கு பெங்காலி சுத்தமா புரியாதுனு தெரிஞ்சும், பெங்காலிலயே பேசினாரு” என்று சவுரவ் மேல் குற்றங்களை அடுக்கினாள்.
அவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று தோன்றியது. இருந்தும், “அவர் பேசினது இருக்கட்டும். அதுக்கு நீ என்ன சொன்ன?” என்றான் எரிச்சலாக.
“வேணும்னே என் அப்பா மேல பழி போடறதா சொன்னேன்”
“என்ன இவ… இப்படிப் பேசிட்டு வந்து நிக்கிறா?” என்று தப்பானைப் பார்த்துக் கேட்டான். அவர் புரியாமல் நிற்க, “உன் அப்பா… சவுரவ் சார் கஸ்டடில இருக்கிறது உனக்குத் தெரியுமா… இல்ல மறந்திட்டியா?” என்று அவளிடம் கோபப்பட்டான்.
“ஏன் கேட்கிறீங்கனு புரியுது. இன்ட்டெரகேஷனுக்கு ரூல்ஸ் இருக்குனு சொல்லிட்டு, இப்ப நீங்களே இப்படிச் சொல்றீங்க? அப்ப உங்களுக்கு ஏத்த மாதிரி ரூல்ஸ் மாத்திப்பீங்களா?”
அரவிந்த் பதில் இல்லாமல் நின்றான்.
“நான் ஏன் அப்படிக் கேட்டேன்னா, ஃபர்ஸ்ட் ரெண்டு கொலை நடந்த இடத்தில என் அப்பா இல்ல. எப்படி…” என்று அவள் ஆரம்பிக்கவும், “அதை அவரு இன்வெஸ்டிகேட் பண்ணுவாருனு உன்கிட்ட நேத்தே சொன்னேன்ல” என்றான்.
பேச்சை தொடராமல் நின்று கொண்டாள்.
“மூணு மணிக்குள்ள நான் இங்க வரணும். வா சீக்கிரம் போகலாம்” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “இத உள்ள வச்சிடுங்க தப்பான்” என்று பெங்காலியில் சொல்லி கோப்பு ஒன்றை அவரிடம் கொடுத்துவிட்டு, ஆட்டோ கிடைக்குமா என்று பார்க்க போனான்.
பார்வையிலே தப்பானிடம் விடைபெற்றுக் கொண்டு பூஜாவும் போனாள்.
ஆட்டோ கிடைத்ததும் இருவரும் ஏறிக்கொண்டார்கள்.
ஆட்டோ கிளம்பியதும், தனக்காக வருகிறான் என்பதால், “தேங்க்ஸ்” என்றாள்.
அவன் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை.
“அங்க போக எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டாள்.
“ஹாஃப் அன் அவர் ஆகும்”
“அப்போ… போய்ட்டு மூணு மணிக்குள்ள வந்திடலாம்ல?”
“ம்ம்ம்” என்றான் சாலையைப் பார்த்தபடியே.
அவளோ அவனையே பார்த்தபடி இருந்தாள். “சாரி. உங்கள திரும்ப திரும்ப டிஸ்டர்ப் பண்றதுக்கு…”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
ஐந்து நிமிட பயணத்திற்குப் பிறகு ஆட்டோவின் வேகம் குறைந்தது. அதுவரை குனிந்தே இருந்தவன், என்னவென்று சாலையைப் பார்த்தால் போக்குவரத்து நெரிசலாக இருந்தது.
“இது வேறயா” என எரிச்சலடைந்து முணுமுணுத்தான்.
தன்னால் அவன் வேலை பாதிக்குமோ என்று தோன்ற, “லேட்டாகுமா?” என்று அவள் கேட்க, “தெரியல” என்றான். அதற்குமேல் அவள் பேசவில்லை.
அதன்பின் காளிகாட் சென்றடையும் வரைக்கும் போக்குவரத்து நெரிசல்தான். ஆட்டோ அதில் மிதந்து மிதந்து காளிகாட் காவல்நிலையம் வர ஒன்னேகால் மணிநேரம் ஆனது.
வந்ததும் “இங்கயே இரு. நான் போய் கேட்டு வர்றேன்” என்று அவளை வெளியே காத்திருக்க சொல்லி, அரவிந்த மட்டும் உள்ளே சென்றான். உடனே அவன் வரவும், “என்னாச்சு இன்ஸ்பெக்டர் இல்லையா?” என்று கேட்டாள்.
“சாப்பிட்டுக்கிட்டு இருக்காராம்” என்று சொல்லி அங்கே நின்ற பைக்கில் ஏறி அமர்ந்தான்.
“இது அவங்க லஞ்ச் டைமா?” என்றாள்.
சட்டென்று சிரித்துவிட்டு, “அப்படி எதும் கிடையாது. கிடைக்கிற நேரத்தில சாப்பிடணும். சிலநேரம் சாப்பிடக்கூட டைம் இருக்காது” என்றான்.
மேலும், “இப்போ கூட எனக்குப் பசிக்குது. என்ன பண்ண சொல்லு? ஸ்டேஷன் போனாலும் அடுத்தடுத்து வேலை இருக்கு. ஸோ அப்படியே போயிடும்” என்று சாதரணமாக சொல்லிவிட்டு, அலைபேசியைப் பார்க்க ஆரம்பித்தான்.
தனக்காக உதவி செய்ய வந்துதானே இப்படிக் காத்திருக்கிறான் என்று தோன்ற, “டீ குடிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
‘எதற்காக இப்போது இந்தக் கேள்வி?’ என்பது போல் அவன் நிமிர்ந்து பார்க்க, “பசிக்குதுனு சொன்னீங்கள, அதான் கேட்டேன்” என்றாள்.
“ஓ!” என்றவன், “எந்திரிச்சி போய் குடிக்க சோம்பேறித்தனமா இருக்குது. விடு, அப்புறமா பார்த்துக்கிறேன்” என்று மீண்டும் அலைபேசியைப் பார்த்தான்.
பூஜா சுற்றிப் பார்த்தாள். “நான் வேணா… போய் வாங்கிட்டு வரவா?”
“ச்சே ச்சே அதெல்லாம் வேண்டாம். நான் உனக்கு ஹெல்ப் பண்றதால, நீயும் எனக்கு ஹெல்ப் பண்ண நினைக்கிறியா?” என்று கேட்டான்.
அமைதியாக நின்றாள்.
“சரி வா. ரெண்டு பேருமே போகலாம்” என்று பைக்கிருந்து இறங்கி, வாகனங்கள் வருவதைப் பார்த்து சாலையைக் கடந்து எதிர்பக்க வரிசையில் இருந்த டீ கடை முன் சென்று நின்றார்கள்.
டீ ஆர்டர் செய்து குடித்துக் கொண்டே அரவிந்த் தற்செயலாக திரும்பையில் எதிர்பக்க கடையிலிருந்த இளைஞன் ஒருவன் பார்ப்பது கண்ணில் பட்டது.
அரவிந்தால், அந்தப் பார்வையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் பார்வை, ‘பார்ப்பது’ போன்று இல்லை. அவன் கண்கள் காண்காணிப்பது போல் இருந்தன!
ஆனால் இவன் நேற்று பார்த்தவன் இல்லை… இன்று வேறொருவன்!
நேற்று ஒருவன் இவளைப் பார்த்தானே… அதுவும் கண்காணிப்புதானோ?!
யாரிவர்கள்? இவளை ஏன் கண்காணிக்க வேண்டும்? என்ற கேள்விகள் வந்தன.
அவனை விசாரிக்கலாமென அவசரமாக சாலையைக் கடக்கப் போகையில் வேன் ஒன்று வர ஒருநொடி நின்று… அது போனதும் எதிர்பக்க சாலையைப் பார்த்தான்.
அந்த இளைஞன் அங்கே நிற்கவில்லை!
‘எங்கே?’ என்று இருபக்கமும் அரவிந்த் பார்க்கையில், அவன் பைக்கில் போவது தெரிந்தது. வண்டியின் எண் பார்க்க முறைப்பட்டான். ஆனால் ஆட்டோக்கள் குறுக்கே மறுக்கே சென்று கொண்டிருக்க, அவனால் முடியவில்லை.
ஆம், இன்று வேறொருவன்தான்! இவன் பெயர் தேவேஷ்! இவன் அலோக்கின் கூட்டாளிதான்!!
அரவிந்த் செயல்களைப் பார்த்த பூஜா, “என்னாச்சு?” என்றாள்.
“ஒன்னுமில்லை போகலாம் வா” என்று அவளை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் வரை வந்தவன், “இங்கயே இருக்கிறியா? நான் போய் கேட்டுட்டு வர்றேன்” என்றதும் சரியென நின்று கொண்டாள்.
உள்ளே போன அரவிந்திற்கு அந்த இளைஞன் நின்றது நினைவில் வர, “பூஜா, உள்ள வந்து உட்காரு” என்று திரும்பி வந்து சொன்னான்.
“என்னய பார்த்தா அவர் எதும் சொல்வாரு” என்று மறுத்தாள்.
“நான்கூட இருக்கேன்ல. எதும் சொல்லமாட்டாரு” என்றதும், முன்னறையில் வந்தமர்ந்தாள்.
அதன்பின் உள்ளே சென்று சவுரவை பார்த்துவிட்டு வந்து, “போலாமா?” என்று பூஜாவைக் கூட்டிக்கொண்டு வெளியே வந்ததும், “உங்ககிட்ட பேசினாரா?” என்றுதான் கேட்டாள்.
“ம்ம்” என்றான் ஏதோ யோசனையோடே.
“என்ன சொன்னாரு?”
“மாஜிஸ்திரேட் விசாரணைக்கு எட்டு நாள் பெர்மிசன் கொடுத்திருக்காராம்”
“எட்டு நாளா?” என்று அதிர்ந்தவள், “அப்போ… என் அப்பாவை அதுவரைக்கும் பார்க்க முடியாதா?” என்று வருத்தமாக கேட்டாள்.
அதற்கு பதில் கூறாமல், “அப்புறம் ஃபர்ஸ்ட் ரெட்டை கொலை நடந்த இடத்தில உன் அப்பா கார் நின்றுக்குது. மூணு கொலை நடந்த இடத்திலயும் உன் அப்பா இருந்ததுக்கு போலீஸ்கிட்ட ஆதாரம் இருக்கு. இப்ப உன் கேள்விக்குப் பதில் கிடைச்சிருச்சா?” என்று கேட்டு, “நான் சொன்னேன்ல… சார் இன்வெஸ்டிகேட் பண்ணி கண்டுபிடிப்பாருன்னு?” என்றான்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியில் அசையாமலே நின்றவள், “நிச்சயமா என் அப்பா கொலை செஞ்சிருக்க மாட்டாங்க. ஆனா… ஏதோ நடக்குது. என்னென்னுதான் புரியவே மாட்டிக்கிது” என்றாள் குழப்பமான முகத்துடன்.
“ஏதோ நடக்குதா? உன் அப்பாவை சஸ்பெக்ட் பண்ணது தப்பே இல்லைங்கிற மாதிரிதான் எல்லாம் நடக்குது” என்றான் பட்டென்று.
“ஏன் இப்படிச் சொல்றீங்க?! நீங்களும் அப்பா கொலை பண்ணிருப்பாருன்னு நம்புறீங்களா?” என்று கேட்டாள்.
அவன் எதுவும் சொல்லாமல் இருந்தான்.
நேற்றே அவன், ‘சந்தேகப்படும் நபர் பக்கம் நிற்க யோசிக்கணும்’ என்று சொன்னது ஞாபகத்தில் வர, “தேங்க்ஸ். திரும்ப வந்து பேசினதுக்கு” என்றாள்.
“நேத்து லாயர் பார்த்தியா?” என்று கேட்டான்.
“உங்ககிட்ட லாயர் பேர் கேட்க மறந்துட்டேன். அதான் இன்னொரு லாயர்கிட்ட கன்சல்ட் மட்டும் பண்ணிக்கிட்டேன்” என்றவள், “லாயர் பேர் சொல்றீங்களா, இன்னைக்குப் பார்க்கிறேன்” என்றாள்.
“குணால் மித்ரா”
“ம்ம் சரி” என்று ஆட்டோ கிடைக்குமாவென பூஜா பார்த்தாள்.
அவளையே பார்த்து நின்றான். என்ன நினைத்தானோ, “பூஜா, லாயர் பார்க்க நானும் வரட்டுமா? ஆனா இன்னைக்கு வர முடியாது. வேணா நாளைக்குப் போகலாமா?” என்று கேட்டுவிட்டு, “உனக்கு டிலே பண்ற மாதிரி இருக்குதுனா இன்னைக்கே போய்க்கோ” என்றும் சொன்னான்.
“நிஜமா நாளைக்கு வருவீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம் வர்றேன்”
“சரி இங்கிருந்தே நான் வீட்டுக்குப் போய்க்கிறேன்”
“ம்ம்” என்றான்.
பயணிகள் இல்லாமல் வந்த ஆட்டோவை அவன் நிறுத்தியதும், வீடு இருக்கும் பகுதியை சொல்லிவிட்டு அவள் ஏறப் போன நேரத்தில், “பூஜா… உனக்கு இங்க தெரிஞ்சவங்க யாரும் இருக்காங்களா?” என்று கேட்டான்.
“இல்ல. நான் இங்க வந்தே ஒரு வாரம்தான் ஆகுது. இங்க யாரையும் தெரியாது. அதான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்டு வந்தேன்”
“நான் அதுக்காக கேட்கலை”
“அப்போ ஏன் கேட்டீங்க?”
என்னவென தெரியாமல் ‘அவர்கள்’ பற்றிச் சொல்லி அவளைக் குழப்ப வேண்டாம் என்று தோன்ற, “சும்மாதான். நீ ஏறிக்கோ” என்றவன், “இந்த கேஸ் விஷயமா எதுவும் பேசறதுக்காக என் நம்பர் நோட் பண்ணிக்கிறியா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்”
அவன் அலைபேசி எண்ணை சொல்ல, அதனைச் சேமித்துக் கொண்டவள், “இது என் நம்பர்” என்று அவள் அலைபேசி எண்ணைச் சொல்ல, அவனும் குறித்துக் கொண்டான்.
“எங்க அப்பா கார் அங்க நின்னதுனு யார் சொன்னாங்களாம்?”
“அது ஆளுங்க இல்லாத ரோடு. ஸோ யாரும் சொல்லிருக்க மாட்டாங்க. பட் மர்டர் நடந்ததும், அந்த இடத்தில தடயம் ஏதும் இருக்கானு பார்த்திருப்பாங்க. அன்னைக்கு மழை. அதனால டயர் பேட்டன்ஸ் இருந்திருக்கும். மூணு பேரோட பாடியிலிருந்து எடுத்த புல்லட் ஒன்னுதான்னு போரன்சிக் சயின்ஸ் சொல்லுது.
அன்ட் கிரைம் சஸ்பெக்ட் உன் அப்பா. ஆப்வியஸா கிரைம் சீன்ல இருந்த டயர் பேட்டன்ஸ உன் அப்பா கார் டயரோட மேட்ச் பண்ணி பார்த்திருப்பாங்க. அது மேட்ச் ஆகியிருக்கும்” என்று விளக்கினான்.
கேட்க அடுத்து ஏதும் இல்லாமல் அவள் இருந்தாள்.
“ஒன்னு சொல்லட்டுமா. நீ, எங்களை கேள்வி கேட்கிறதை விட்டுவிட்டு, உன் அப்பாக்கு ஃபேவரா எதுவும் இருக்குமான்னு கொஞ்சம் யோசி” என்றான்.
“ம் பார்க்கிறேன்”
அவள் ஆட்டோ போனதும், ஆட்டோ பிடித்து மானிக்டாலா காவல்நிலையம் சென்றான்.
ஆட்டோவில் போய் கொண்டிருந்த அரவிந்திற்கு ஒரே யோசனைதான். மூன்று கொலைகள். இதில் முதலிரண்டு கொலைகள் நடந்தது ஆளில்லா சாலையில்! சாட்சியாக யாரும் இருக்க வாய்ப்பில்லை.
இந்தக் கொலைகள் நடந்த இடங்களில் சேகரன் இருந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தாலுமே, இந்தக் கொலைகள் நடந்த நேரங்களிலும் அவர் அங்கேதான் இருந்தாரா?
இந்தக் கேள்விகள் யோசித்ததின் விளைவாக வந்தது. வேறு யோசிக்கும் முன் காவல்நிலையம் வந்துவிட அவனது வேலைகளில் ஈடுபட்டான். மேலும் நேற்று அவனுக்குத் தோன்றிய கேள்விகளுக்கு சவுரவிடமிருந்து பதில்கள் வாங்கியும் இருந்தான்.
***********
மானிக்டாலா பகுதி!
மணி எட்டு இருக்கும். வாணி சப்பாத்தி கேட்டிருந்தாள். அதற்காக கோதுமை மாவை பிசைந்து கொண்டிருந்த போது அவன் அலைபேசி அழைக்க, “க்கா அது யாருன்னு பாரு” என்று அரவிந்த் கத்த, ஹாலில் இருந்தவள் அவன் அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.
பூஜா என்று அழைப்பு வந்தது!
‘அடப்பாவி! நம்பர் ஷேர் பண்ணிருக்கியா?’ என்று சிரித்தபடி அலைபேசியை தூக்கிக் கொண்டு, “அரவிந்த்… ” என்று சமையலறை வந்தாள்.
“யாருக்கா?” என்று வாணி முகம் பார்த்து கேட்க, “நீ வேண்டாம்னு சொன்ன பார்த்தியா ஒரு பொண்ணு… அவதான்” என்றாள்.
‘இதுக்கும் ஏதாவது இட்டுக்கட்டி பேசுவாளே?’ என, “அச்சச்சோ” என்று குனிந்து கொண்டான்.
“என்னடா அச்சச்சோ? நேத்துதான என் நம்பர் தேவைப்படாதுனு சொன்ன”
‘என்ன சொல்ல?’ என்று தெரியாமல் நின்றான்.
“ஏன் இன்னைக்குத்தான் கொடுக்கணும் தோணுச்சா?” என்றாள் கேலியாக.
“ப்ச்… ஃபர்ஸ்ட் நீ கால் கட் பண்ணு. அப்புறமா பேசிக்கிறேன்” என்றான்.
“ஓ! தனியாதான் பேசணுமா?” என்று அதற்கும் கேலி செய்யவும், “க்கா, நீ கால் அட்டன் பண்ணி ஸ்பீக்கர்ல போடேன்” என்றான்.
அவளும் அதைச் செய்ய, “ஹலோ…” எதிர்முனையில் சொன்னதும், “ஹே பூஜா எதுனாலும் நாளைக்கு பேசிக்கலாம். வீட்ல இருக்கேன். அன்ட் அக்காகாக குக் பண்ணிட்டு இருக்கேன். அதான்” என்று சொல்லிவிட்டு, ‘போதுமா?’ என்பது போல் அக்காவைப் பார்த்தான்.
வாணி சத்தமில்லாமல் சிரிக்கும் போதே, “ஓ ஓகே… சாரி. வச்சிடறேன்” என்று பூஜா கூறினாள்.
சட்டென அரவிந்திற்கு அவளை கண்காணிப்பவர்கள் முகங்கள் நினைவில் வர, “அர்ஜென்ட்டா எதும் சொல்லணுமா?” என்று கேட்டதற்கு, “பரவால்ல. நான் நாளைக்குச் சொல்லிக்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
அடுத்த நொடியே, “என்னடா உங்களுக்குள்ள?” என்றாள் வாணி.
“ஒன்னும் கிடையாது. நீயா எதும் இமாஜின் பண்ணிக்காத க்கா. இந்த கேஸ் சம்பந்தமா பேசறதுக்குத்தான் நம்பர் கொடுத்தேன்” என்றான்.
“ஓ!”
“என்ன ஓ?”
“டெய்லி மீட் பண்ணுவீங்களா?”
“ரெண்டு நாள்தான ஆகியிருக்கு. அதுக்குள்ள என்ன டெய்லி?”
“இன்னைக்கும் பார்த்தியா?”
“ம்ம்ம்”
“எங்க மீட் பண்ணுவ?” என்றவள், “இல்லை பண்ணுவீங்க?” என்று திருத்தினாள்.
“ஏன் க்கா…” என்று அழுத்தி அழைத்தவன், “ஸ்டேஷன்! அங்க இல்லைனா கோர்ட்! அவ்ளோதான்” என்று பதிலும் சொன்னான்.
“ரொம்ப அமைதியான பொண்ணோ?”
“இப்ப பேசினதை வச்சி முடிவு பண்ணிடாத க்கா! சவுரவ் எப்படிப்பட்டவர்னு சொல்லிருக்கேன்ல. அவர்கிட்டயே நின்னு பேசுவானா… பார்த்துக்கோ”
புன்னகைத்தபடி, “போட்டோல அவளைப் பார்த்திருக்கேன். நேர்ல எப்படிடா இருக்கா?” என்று ஓர் ஆவலுடன் கேட்டாள்.
“உனக்கு சப்பாத்தி வேணும்னா, பேசாம போய் உட்காரு” என்று அரவிந்த் சொன்னதும், “போ, இன்னைக்குத் தப்பிச்சிட்ட” என்று வாணி வரவேற்பறை சென்றுவிட்டாள்.
***********
காளிகாட் காவல் நிலையம்!
நேரம் ஒன்பதைத் தாண்டியிருந்தது. சேகரன் வழக்கைப் பற்றித்தான் சவுரவ் யோசித்துக் கொண்டிருந்தார். இது குறித்து விசாரிக்க துணை ஆய்வாளரை அனுப்பியிருக்கிறார். அவர் வந்து விசாரணை முடிவுகள் தெரிந்தது பின்னே வீட்டிற்குப் போக வேண்டும் என்று இருக்கிறார்.
சற்று நேரத்தில் துணை ஆய்வாளர் வந்து, விசாரித்ததைச் சொல்லிவிட்டுச் சென்றார். அதன்பின்னுமே சவுரவ் கிளம்பவில்லை. சேகரன் வழக்கு பற்றிய யோசனைதான்.
முதலிரண்டு கொலை நடந்த சாலையில் சிசிடிவி கேமரா இல்லை. அதனால் அந்தச் சாலைக்குள் நுழைய இருக்கும் முந்தைய சாலையிலுள்ள கேமராவும், அங்கிருந்து வெளியே செல்லும் வழிகளில் இருக்கின்ற கேமராவும் சோதனை செய்யப்பட்டிருந்தது.
அந்த நேரக்கணக்கின்படி பார்த்தால், கொலை நடந்த நேரத்தில் சேகரன் கார் அங்குதான் இருந்திருக்கிறது.
அதேபோல் மூன்றாவதாக கொலை செய்யப்பட்ட பிரணாப் வீட்டின் ‘நெஸ்ட் கேம்’ மற்றும் அந்த அபார்ட்மென்ட் செக்யூரிட்டி பராமரிக்கும் பார்வையாளர் பதிவேட்டில் சேகரன் வந்துபோன நேரம் தெளிவாக இருந்தது. மேலும் அது கொலை நடந்த நேரத்தோடு ஒத்தும் போகிறது.
கொலைகள் நடந்த இடங்களில் மட்டுமல்ல… கொலைகள் நடந்த நேரத்திலும், சேகரன் அங்கே இருந்திருக்கிறாரென அவருக்கும் அரவிந்திற்கும் உண்டான கேள்விகளுக்கு விடை கிடைத்திருந்தது.
அப்படியென்றால் அவர்தான் கொலைகாரரா? என்ற கேள்வி வந்தது. நிறைய யோசித்துவிட்டு துணை ஆய்வாளரை அழைத்து, ‘பிரணாப் கொலை நடந்த வீட்டோட பால்கனி, அங்க பைப் இருந்தா அதுலயும் போரன்சிக் ஆளுங்களை ஃபிங்கர் பிரின்ட் கலெக்ட் பண்ணி பார்க்கச் சொல்லுங்க’ என்று உத்தரவிட்டார்.
பின், ‘லாக் அப் ரூம் 2’ சென்று சேகரனைப் பார்த்தார். இவ்வளவு யோசித்துக் கொண்டிருக்கிறோம், இவர் ஒருவார்த்தை பேசுகிறாரா? என்று கோபம்தான் வந்தது. காவலரை அழைத்து லாக்கப்பை திறக்கச் சொல்லி உள்ளே சென்று சேகரன் முன் அமர்ந்தார்.
சேகரன் அசையாமல் அமர்ந்திருந்தார். இன்று மட்டுமல்ல இங்கே அழைத்து வரப்பட்ட நாளிலிருந்து இவர் இப்படித்தான் இருக்கிறார். சேகரன் முகத்தைப் பார்த்து, ‘உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லுங்க’ என்று சவுரவ் ஆங்கிலத்தில் கேட்க, அவர் அமைதியாக இருந்தார்.
“நீங்க இப்படியே இருந்தீங்கனா, அப்புறம் என் விசாரணை வேற மாதிரிதான் இருக்கும்” என்று சொன்னபிறகும், சேகரன் ‘வாய் திறப்பேனா?’ என்றிருந்தார்.
உடனே சவுரவ் எழுந்துவிட்டார். ‘உங்க பொண்ணு உங்களைப் பார்க்கணும்னு டெய்லி வந்து நிக்கிறா” என்றார் பெங்காலியில்.
மகள் என்றவுடன் சேகரன் உடல் அசைந்தது.
‘அவளுக்கு ஏதும் தெரியுமா?’ என்று கேட்டதும், சேகரன் நிமிர்ந்து பார்த்தார்.
‘நீங்க மட்டும் பேசலைனா… அவளைத்தான் கூப்பிட்டு விசாரிக்கணும்’ என்று சொன்னதும், ‘சார் என் பொண்ணுக்கு எதும் தெரியாது. அவ இங்க வந்தே ஒரு வாரம்தான்’ என்று சேகரன் பேசும் போதே, சவுரவ் போய்விட்டார்.
காவலர் வந்து லாக் அப்பை பூட்டவும், ‘சார் என் பொண்ணு பூஜாவுக்கு எதுவும் தெரியாது சார்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் யாருமே அவர் பேசுவதைக் கேட்கவில்லை.
சொல்வதை நிறுத்திவிட்டு சேகரன் வந்து அமர்ந்தார். அவருக்கு இப்பொழுது தெரிந்ததை சொல்லவா, வேண்டாமா? என்ற குழப்பம் வந்தது. சொன்னனால் ‘அவர்களால்’ மகளுக்கு ஆபத்து ஏதும் வருமோ? என்ற பயம் வந்தது.
சொல்லவில்லை என்றால் சவுரவ் கோஷ் வழக்கிற்குள் மகளையும் கொண்டு வந்துவிடுவாரோ என்ற பயமும் வந்திருந்தது. ‘என்ன செய்ய?’ என தெளிவாக முடிவெடுக்க முடியாமல் சேகரன் தவிக்க ஆரம்பித்தார்.
***********
காளிகாட் பகுதி!
நேரம் பத்து மணி என கடிகாரம் காட்டியது. இன்னும் உறங்காமல் இருந்தாள். காவல் நிலையத்திலிருந்து வரவும், சேகரன் பற்றி அபார்ட்மென்ட் செக்ரட்டரி மனைவி கேட்டிருந்தார். இப்போதைய நிலைமையைச் சொல்லவும், ‘எப்படித் தனியாக சமாளிக்கிற?’ என்றும் கேட்டிருந்தார்.
‘அரவிந்த், இங்க இன்ஸ்பெக்டரா இருக்கிறாங்க. தமிழ் தெரியும். அவங்கதான் ஹெல்ப் பண்ணறாங்க’ என்று சொல்லிவிட்டு வந்திருந்தாள்.
சேகரனுக்குச் சாதகமாக ஒன்று கிடைத்ததில் அவளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வந்திருந்தது. அரவிந்திடம் அலைபேசி வழியே சொல்ல நினைத்தாள். ஆனால் முடியவில்லை. நாளை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கையில், அவள் அத்தை அழைத்தார்.
அழைப்பை ஏற்று, “சொல்லுங்க அத்தை” என்று கேட்டதும், “பூஜா… அப்பாவை பார்க்க முடிஞ்சதாமா?” என்றுதான் ஆரம்பித்தார்.
“இல்ல அத்தை” என்றவள், “நாளைக்குத்தான் லாயர் பார்த்து பேச போறேன். அவர்கிட்ட ரெக்யூஸ்ட் பண்ணிக் கேட்கணும்” என்றாள்.
“சரி கேளு. பெர்மிஷன் வாங்கித் தருவாரு… சரியா. நம்பிக்கையா இரு. சாப்பிட்டியா?”
காஃபி, டீ மட்டும்தான் குடிக்கிறாள். இருந்தும், “ம்ம்” என்றாள்.
“அப்புறம் தனியா அலையறதுக்கு கஷ்டமா இருக்காடி?”
“தனியா எங்கயும் போகலை அத்தை. இங்க ஒரு தமிழ்கார பையன் போலீஸா இருக்கிறாங்க. அவங்கதான் இப்போ ஹெல்ப் பண்றாங்க. நாளைக்கு லாயர் பார்க்கிறதுக்கும் என்கூட வருவாங்க” என்று அத்தையிடமும் அரவிந்த் பற்றிச் சொன்னாள்.
“சரி சரி நல்லது” என சொல்லிவிட்டு, “ஆனாலும் பூஜா, தெரியாத பையன், தெரியாத ஊர்… கவனமா இருக்கணும். புரியுதாடி” என்றும் சொன்னார்.
“புரியுது அத்தை. ஆனா அவங்க நல்லவங்கதான்”
“உன் வாய்லருந்து ஒரு போலீஸ்காரனை நல்லவன்னு சொல்ற… ஆச்சரியமா இருக்குதுடி” என்றதும், மின்னல் வேகத்தில் அரவிந்த் முகம் வந்து போனதில், பூஜா முகத்திலும் சிறு மலர்ச்சி வந்துவிட்டு போனது.
“நாளைக்கு வக்கீல் பார்த்திட்டு வந்து ஃபோன் போடணும்” என்றார்.
“ம், சரி, காயத்திரி எப்படி இருக்கா? அவகிட்ட பேசவேயில்ல”
“அதெல்லாம் நினைக்காத. நல்லா இருக்கா. நேரமாயிடுச்சி. நீ தூங்கும்மா”
“சரி அத்தை” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
அப்பாவை நினைத்தபடியே பால்கனியில் அமர்ந்தாள். இதுவரை ‘என்னதான் நடந்திருக்கிறது? என்று யோசித்துப் பார்த்தாள்.
காவல்நிலையம் அழைத்துப் போகையில் ‘இங்கிருக்க வேண்டாம். தமிழ்நாடு சென்றுவிடு’ என்று சேகரன் சொல்லிச் சென்றது ஞாபகத்தில் வந்தது. அப்படி என்றால் அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. அதை ஏன் மறைக்கிறார்? என்ற கேள்வி வந்தது.
அப்பாவிற்குத் தெரிந்திருப்பதை… அப்பா மறைப்பதை… தான் எப்படி அறிந்து கொள்ள முடியும்? – பூஜா யோசிக்க ஆரம்பித்தாள்.
