Kathambari Novels
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம்!
காவல் நிலையத்தில் இறந்த மாணவனின் மறு உடற்கூறாய்வு அறிக்கை
வந்திருந்தது. இந்தச் சம்பவம் பற்றிய செய்திகள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வர ஆரம்பித்திருந்தன. ஆனால் விவாதப் பொருளாக எடுத்துக்
கொள்ளும் அளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை.
சில இயக்கங்கள் மட்டும் கண்டனக் குரல்கள் எழுப்பியிருந்தன. இருந்தாலும் பொதுமக்களிடம் பரவலாக இந்தச் செய்தி சென்று சேரவில்லை.
இந்த நிலையில் இது குறித்துப் பேசுவதற்காக, ஆட்சியர் அலுவலக கூட்டம் நடக்கும் அறையில் மாறன் மற்றும் சசி அமர்ந்திருந்தனர்.
உடற்கூறாய்வு நகலை வைத்துக் கொண்டு, “அன்னைக்கு சூசைட்னு சொன்ன சசி… இன்னைக்கு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வேற மாதிரி இருக்கு” என்று மாறன் ஆரம்பித்தான்.
ஆம்! அன்று சிறைக் கம்பிகளில் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்ததாக வந்த உடற்கூறாய்வு அறிக்கை, இன்று பின்னந்தலையில் அடிபட்டு இரத்தம் உறைந்து இறந்து போயிருப்பதாகக் கூறுகிறது.
ஆதலால்தான் சசி பதிலில்லாமல் இருந்தான். அப்படி இருந்தவனை, “இதுக்கு என்ன சொல்லப் போற?” என்று கேட்டான்.
“ஃபர்ஸ்ட் போஸ்ட் மார்ட்டம் பண்ண டாக்டர்ஸ் இதுக்கு ரீசன் இருக்குன்னு சொல்றாங்க மாறன்”
“என்ன ரீசன்?”
“ஃபர்ஸ்ட் போஸ்ட் மார்ட்டம், ஸ்டுடென்ட் இறந்தவுடனே நடந்திருக்கு. ஸோ, ஸ்வெல் தெரியல. இது இருபத்தி நாலு மணிநேரத்துக்கு அப்புறம் நடந்ததால, தெரிய வந்திருக்குன்னு சொல்றாங்க”
“இதை நீ நம்புறீயா?”
‘கண்டிப்பாக மாட்டேன்’ என்பது போல் மறுத்து தலையசைத்ததும், “அப்புறம் நான் மட்டும் எப்படி நம்புவேன்?” என்று மாறன் கேட்டான்.
சசி அமைதியாக இருந்தான்.
“ஓகே லீவ் தட்! எப்படி அடிபட்டதுன்னு தெரியுமா?”
“விசாரிக்கிறதுக்காக போலீஸ் அடிச்சிருக்காங்க. அப்ப வந்த காயம்னுதான் ஸ்டேஷன் ரைட்டர் சொல்றாரு”
“இதை ஏன் அன்னைக்கே அவர் சொல்லலை?”
“ஃபர்ஸ்ட் கேஸ் இந்த ஆங்கிள்ல போகலையே? செகன்ட் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்து ஸ்டேஷன்ல கேட்டப்ப… இதைச் சொன்னாரு”
“சரி! அந்த ஸ்டுடென்ட்ட அரெஸ்ட் பண்ணது யாரு?”
“சப் இன்ஸ்பெக்டர். பட் இன்சிடென்ட் நடந்த நேரத்தில ஸ்டேஷன்ல இருந்தது இன்ஸ்பெக்டர். அவரும் நைட் டூயூட்டி பார்த்த கான்ஸ்டபிளும் விசாரிக்கிறப்ப அடிச்சிருக்காங்க. இது ரைட்டர் சொன்னது”
“என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல காப்பி பண்ண ஹெல்ப் பண்ணவனை, ஏன் அடிச்சி விசாரிக்கணும்?!” என்று மாறனுக்குச் சந்தேகப்படத் தோன்றியது.
“நடந்தது இன்ஸ்பெக்டரோட கேர்லெஸ்னு நினைச்சாலும், அப்படியில்லைனு சொல்ற மாதிரி மேலருந்து ப்ரெஸ்ஸர் வருது” என தன்னுடைய சந்தேகத்தை சசி முன்னெடுத்து வைத்தான்.
“இது எப்போ?”
“நீ செகன்ட் போஸ்ட் மார்ட்டம்க்கு ஆர்டர் இஸ்யூ பண்ண பார்த்தியா? அப்ப வந்தது. கேஸ் கிளோஸ் பண்ணனும்னு சொன்னாங்க. பட், டிஎம் ஆர்டர் நான் எதுவும் செய்ய முடியாதுனு சொல்லிட்டேன்”
“யாருன்னு தெரியுமா சசி? நீ ஏன் என்கிட்ட சொல்லலை?”
“டிபார்ட்மென்ட்ல சிலர். பட் இதெல்லாம் பழகிடுச்சு. இதைப் பார்த்துக்கிட்டு இருந்தா, எதுவும் பண்ண முடியாது. நீ கேஸ் பத்தி பேசு”
“அந்தப் பையனோட அம்மா சொன்னாங்க, அவன் இன்ஜினீரியங் முடிச்ச பையன்னு. அப்புறம் ஏன் திரும்பவும் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதணும்? முதல எப்படி எழுத முடியும்? கேஸ் இங்க வேறயா சசி?” என்று வழக்கை வேறொரு கோணத்தில் இருந்து மாறன் பார்த்தான்.
ஏற்கனவே பொறியியல் படிப்பு முடித்தவன், ஏன் மீண்டும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்? என்ற சந்தேகம் சசிக்கும் வந்தது.
இருந்தாலும், “டிஐஜி கூட ஈவினிங் மீட்டிங் இருக்கு. அந்தப் பையன் பேமிலி, இன்ஸ்பெக்டர் மேல ஆக்சன் எடுத்தாதான் பாடியை வாங்குவோம்னு சொல்றாங்க. ஸோ, நான் இதை முதல சரி பண்ணனும் மாறன்” என்று தன் கடமைகளைச் சொன்னான்.
‘புரியுது’ என்பது போல் மாறன் தலையை அசைத்தாலும், “அப்போ கேஸ் ப்ரோசீட் பண்ண மாட்டிங்களா?” என்று கேட்டான்.
“அந்தப் பையன் இப்போ உயிரோட இல்லை. யார்கிட்ட விசாரிக்க? பட், இன்ஸ்பெக்டர் மேல என்கொய்ரி இருக்கும்”
“எனக்கு ஒரு டவுட் சசி. அரெஸ்ட் பண்ணது சப் இன்ஸ்பெக்டர். அப்போ அவர் அந்தப் பையனை விசாரிச்சிருப்பார்ல?”
“விசாரிச்சிருக்கலாம்” என்று உறுதியில்லாமல் சொன்னாலும், “அப்புறம் ஏன் இன்ஸ்பெக்டர் விசாரிக்கணும்?” என்ற வலுவான சந்தேகம் சசிக்கு வந்தது.
“ஒருவேளை சப் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறப்போ, அந்தப் பையன் ஏதாவது உண்மையைச் சொல்லியிருந்தா? அந்த உண்மை வெளிய வரக் கூடாதுன்னு, இப்படி பண்ணியிருந்தா?” என்று சந்தேகித்த மாறன், “இதை அப்படியே விட முடியாது சசி” என்று உறுதியாகச் சொன்னான்.
“சரி என்ன பண்ண?”
“இன்ஸ்பெக்டர் சஸ்பென்ஷன், என்கொய்ரின்னு நடந்தாலும், இங்க எக்ஸாம் ஹால்லதான் ஏதோ பிரச்சனைனு தோணுது. அதைப் பத்தின விசாரணை வேணும். நீ என்ன நினைக்கிற?”
“நீ சொல்றது கரெக்ட்தான்” என்று சொன்னதோடு சசி விட்டுவிட்டான்.
சில நொடிகள் யோசித்த மாறன், “ஹால் சூப்பர்வைசர் ஏன் டேரக்ட்டா போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணனும்?” என்றொரு கேள்வி கேட்டான்.
“ம்ம், இது யூஸ்வல்தான். கேஸ் ஆஃப் சீட்டிங் அன்டர் செக்ஷன் 420-ல எப்ஐஆர் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு” என்றவன், “சூப்பர்வைசர்கு ஏதோ தெரிஞ்சிருக்குனு சொல்ல வர்றியா?” என்று நெற்றி முடிச்சுகளுடன் சசி இருந்தான்.
“சூப்பர்வைசர்க்கு ஏதும் உண்மை தெரியுமா? சப் இன்ஸ்பெக்டர்கிட்ட அந்தப் பையன் எதாவது சொல்லிருப்பானா? விசாரிக்கிறது ஓகே. பட், அடிச்சி விசாரிக்கிற அளவுக்கு காப்பி பண்றது அவ்ளோ பெரிய க்ரைமா?
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இன்ஜினியரிங் முடிச்ச பையன் ஏன் திரும்ப என்ட்ரன்ஸ் எழுதணும்ங்கிறது புரியவே இல்லை” என்று சொல்லி மாறன் சற்று இடைவெளிவிட்டான்.
கடைசியில், “சசி! சீட்டிங் கேஸ் கிளோஸ் பண்ண வேண்டாம். நான் பர்தர் இன்வெஸ்டிகேஷனுக்கு ஆர்டர் இஸ்யூ பண்றேன்” என்றான்.
“தட்ஸ் பைன்! அப்போ ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர், ஹால் சூப்பர்வைசர் ரெண்டு பேரையும் விசாரணைக்குள்ள கொண்டு வரலாம்”
“அப்ப என்ன பிரச்சனைனு தெரிய வர்றதுக்கு சான்ஸ் இருக்கு!” என்று மாறன் நம்பிக்கையாகச் சொன்னதும், சசி எழுந்து கொண்டு, “கிளம்புறேன் மாறன். நீ ஆர்டர் இஸ்யூ பண்ணு. பார்க்கலாம்” என்றான்.
மாறனும் எழுந்து, “ம்ம்ம், சரி! பட், எதுனாலும் கேர்ஃபுல்லா பண்ணு சசி” என்று அவனை வழியனுப்பி வைத்தான். அவன் சென்றதும், மாறன் அதற்கடுத்து இருந்த வேலைகளில் கவனத்தைச் செலுத்தினான்.
செங்கல்பட்டு ஆட்சியார் பங்களா, இரவு நேரம்!
தனக்கான அரசு வாகனத்தில் வந்து இறங்கிய மாறன், ஒருசில கோப்புகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்லப் போகையில், “மாறன்! அப்பா இங்கே இருக்கேன்” என்று சொன்னதும், திரும்பிப் பார்த்தான்.
சுற்றுச் சுவருக்குள் போட்டிருந்த மூங்கில் நாற்காலியில் தியாகு இருந்தார். அங்கே வந்தவன், எதிரே கிடந்த நாற்காலியில் அயர்வுடன் அமர்ந்தான்.
பின், “என்னப்பா இங்கே உட்கார்ந்திருக்கீங்க? அம்மா இன்னும் வரலையா?” என்று கேட்டான்.
“வந்துக்கிட்டு இருக்கேன்னு சொன்னா” என்றவர், “ஏன் ஒருமாதிரி இருக்க? அந்த இன்ஜினீரியங் ஸ்டுடென்ட் டெத் கேஸ்?” என்று கேட்டார்.
“ம்ம்ம். ஸ்டேஷன் போலீஸ், டாக்டர்ஸ் இன்ப்ளுயன்ஸ் ஆகிருக்காங்க. அதான் ஃபர்ஸ்ட் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தப்பா வந்திருக்கு”
தன் அனுபவத்தில், “இதெல்லாம் நடக்கிறதுதான் மாறன்” என்றார்.
“பர்தர் இன்வெஸ்டிகேஷன் பண்ணச் சொல்லணும். சசிதான் பார்க்கிறான். அவனுக்கும் டிபார்ட்மென்ட்ல ப்ரெஷ்ஷர் இருக்கு போல” என்று இமைகள் மூடிக் கொண்டு இருகிப் போய்ச் சொன்னான்.
“இதுவும் நடக்கும்” என எழுந்தவர், “கம் ஆன்! கெட் அப். ஒரு வாக் போகலாம்” என்று, அவனை இலகுவாக்கும் முயற்சியில் இறங்கினார்.
“இப்போ வேண்டாம்-ப்பா” என்று மறுத்துவிட்டான்.
“ஷட்டில்??” என்று அவனுக்குப் பிடித்ததைக் கேட்டதும், “யெஸ்! ரொம்ப நாளாச்சு” என்று சோர்வு நீங்கிய குரலில் சொல்லி, எழுந்து கொண்டான்.
மேலும், “நீங்க இருங்க! நான் டிரஸ் சேஞ் பண்ணிட்டு, எல்லாம் எடுத்திட்டு வர்றேன்” என்று வீட்டின் உள்ளே ஓடினான்.
சற்று நேரத்தில் வேறு உடையை மாற்றி மாறன் வெளியே வரும் பொழுது, தியாகுவும் திலோவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“ம்மா! நீங்க எப்போ வந்தீங்க?” என்று கேட்டுக் கொண்டே, வலையைக் கட்ட ஆரம்பித்தான்.
“டூ மினிட்ஸ் முன்னாடிதான்” என்றவர், “விளையாடிட்டு இருங்க. ரெப்பிரஷ் பண்ணிட்டு வர்றேன்” என திலோ உள்ளே சென்றார்.
அரை மணிநேரம் வியர்க்க விறுவிறுக்க தியாகுவும், மாறனும் விளையாடிக் கொண்டிருக்கையில்… திலோ கணவரின் பக்கம் வந்து, “தியாகு! நானும்” என கேட்க, ‘ஷட்டில் பேட்டை’ கொடுத்துவிட்டு, தியாகு ஒதுங்கி நின்றார்.
விளையாடிக் கொண்டே, “ம்மா, டூ த்ரீ சர்வீஸ்தான். டயர்டா இருக்கு” என்றதும், “ஓகே” என்று திலோ விளையாட ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு, “நான் உள்ளே போறேன்” என்று மாறன் வீட்டிற்குள் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும், கணவரின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, “தியாகு! மாறன் ஏன் ஒரு மாதிரி இருக்கான்?” என்று கேட்டார்.
“நத்திங் மச்! ஒர்க் டென்சன் திலோ. ஹேண்டில் பண்ணிடுவான்” என்றதும், “உங்களை மாதிரியே” என்று புன்னகைத்து கணவரின் தோளில் சாய்ந்தார். அதன் பின்பும், இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
*************
லிங்கம் வீடு!
சுடரின் அறை! சேகரித்த தகவல்களைத் தட்டச்சு செய்து கொண்டிருந்தாள். வெகுநேரம் குனிந்தே இருந்ததால் கழுத்து வலித்தது. கண்கள் ஓய்வைத் தேடின.
தளர்விற்காக இருக்கையில் சாய்ந்து கண்மூடியவளுக்குள், ‘இவ்வளவு பெரிய நியூஸ்! ஏன் யாருமே பேச மாட்டிக்கிறாங்க?’ என்று நிறைய வினாக்கள் வந்து விழுந்தன.
அந்தக் கேள்விகளால் புருவ மத்தியில் வலி உண்டானது. உடனே தலையை உலுக்கி, ‘ரிலாக்ஸ் சுடர். நியூஸ் கொடுக்கிறது மட்டும்தான் உன் வேலை. அதை ஒழுங்கா பண்ணு’ என்று தனக்குள்ளே சொல்லும் பொழுது, கைப்பேசி அழைப்பு வந்தது.
திரையில் தெரிந்த ‘மாறா’ என்ற பெயரைப் பார்த்தவள், ‘ம், ரிலாக்ஸ் பண்ண சரியான ஆளு’ என்று சிரித்து, “ஹலோ யாரு?” என்றாள், அழைப்பவனை அலைக்கழிக்கும் எண்ணத்துடன்!
அன்றைய பொழுதின் அலுப்புத் தீர அக்கடா என்று படுத்திருந்தவன், “யாரா?” என்று எகிறிக் கொண்டு வந்தான்.
“ஹை! ஆரம்பமே அமர்க்களமா இருக்கே!!’ என எண்ணும் பொழுதே, “இந்த நேரத்தில நான் கால் பண்ணுவேன்னு தெரியாதா?” என்ற கேள்வி கேட்டான்
‘காதலனுடன் பேசுகின்றோம்’ என்ற கொண்டாட்டம் முகத்தில் தெரிய, “ஓ! நீதானா?” என சாதாரணமானக் குரலில் கேட்டாள்.
‘என்னது நீதானாவா??’ என்பது போல் எழுந்து அமர்ந்தவன், “என்ன பண்ற சுடர்?” என்றான்.
“ஒரு இம்பார்ட்டன்ட் ஒர்க்! டிஸ்டர்ப் பண்ற மாதிரி உன்னோட இன்கம்மிங் கால்” என, அவன் அழைப்பை இடைஞ்சல் என்று காட்டிக் கொண்டாள்.
முட்டி மோதிக் கொண்டு வந்த கோபத்தில், “இம்பார்ட்டன்ட் ஒர்க்னா எதுக்கு கால் அட்டென் பண்ற?” என்று சிடுசிடுத்தான்.
அந்தச் சிடுசிடுப்பை கிடுகிடுவென உயர்த்தும் வகையில், எங்கோ பார்த்துக் கொண்டு விசைப்பலகையின் மேல் வேகமாகத் தட்டச்சு செய்தாள்.
அந்தச் சத்தம் கேட்டதும், “ஹலோ சுடர்! நான் பேசறதைக் கவனிக்கிறியா? இல்லையா?” என்று எரிச்சலடைந்தான்.
அவன் பேச்சை ரசித்தபடி, “ஆங் என்ன சொன்ன?” என கேட்டு, ‘உன் பேச்சை கவனிக்கவில்லை’ என்று பாசாங்கு செய்தாள்.
‘நிஜமாவே இம்பார்ட்டன்ட் ஒர்க்கா?’ என குழம்பியவன், “என்ன ஒர்க் சுடர்?” என்று கரிசனமாகக் கேட்டான்.
அந்தக் கரிசனத்தில் கனிந்தொழுகினாலும், “ஒரு யூடுயூப் சேனலுக்கு நியூஸ் எடிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்?” என்று, ‘ஏதோ பதிலளிக்க வேண்டும்’ என்ற கணக்கிற்குச் சொன்னது போல் சொன்னாள்.
‘இதற்கு மேல் என்ன செய்ய?’ என்ற இயலாமையில், “ஓகே! குட் நைட்” என்று முடிக்கப் பார்த்தான்.
“குட் நைட் மட்டும் சொல்றதுன்னா, டெக்ஸ்ட் பண்ணியிருக்கலாமே மாறா? எதுக்கு கால் பண்ணி என்னோட டைம் வேஸ்ட் பண்ற?”
“வாட்! கலெக்டர் நானே டைம் ஒதுக்கிறப்போ, உனக்கென்ன?” என்று ஒரு வேகத்தில் கேட்டுவிட்டான்.
“ஆங்! ஆங்! ஆங் என்னது?”
‘அய்யயோ! இதுக்கு வேற சண்டை போடுவாளே’ என நினைத்தவன், “லவ்வர் ஃபோன் பண்றப்ப, டைம் வேஸ்ட்னு சொல்வாங்களா?” என்று சமாதானமாக கேட்டான்.
‘மாறா நீ பேசறது அழகு!’ என்று ஆனந்தம் கொண்டாலும், “ம்! இது கொஞ்சம் பெட்டர்” என்று அக்கப்போர் செய்தாள்.
‘ரொம்ப ஓவரா போறாளே?! இவளை இப்படியே விடவா?’ என்று புகைந்தவன், “ஓகே! இன்னைக்கு நான் சீக்கிரமா தூங்கணும். ஸோ… குட் நைட்” என்றான்.
கொஞ்சம் யோசித்தவள், “ஏன் சீக்கிரமா தூங்கணும்?” என்று கேட்டாள்.
‘உன்னை அலைக்கழிப்பது, இப்போது என் முறை’ என்று சிரித்து, “நாளைக்கு எனக்கொரு இம்பார்ட்டன்ட் ப்ரோக்ராம் இருக்கு சுடர்” என்றான்.
இலகுவாக படுத்திருந்தவள், “ப்ரோக்ராமா? என்ன ப்ரோக்ராம்?” என்று எழுந்து அமர்ந்து கேட்டாள்.
‘அப்படிக் கேளு’ என துள்ளியவன், “ஒரு காலேஜ்ல சீஃப் கெஸ்ட்டா என்னை கூப்பிட்டிருக்காங்க” என எளிதாகச் சொல்லி, மீண்டும் தலையணையில் தலை சாய்த்துக் கொண்டான்.
‘காலேஜ்ஆஆ??’ என்று கருவிழிகளை உருட்டி யோசித்தவள், “என்ன காலேஜ் மாறா?” என்று கனிவுடன் கேட்டாள்.
“ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ் சுடர். செங்கல்பட்லருந்து தாம்பரம் போற வழியில…” என அவன் விலாசம் சொல்லப் போகையில், “மாறா! நான் அதைக் கேட்கலைனு உனக்கே தெரியும்” என்று கடுகடுத்தாள்.
“வேற எதைக் கேட்கிற சுடர்? எனக்குப் புரியலையே!”
‘ஆஆ!’ என்று அடக்கப்பட்ட ஆத்திரத்தில் ஒருமுறை கண்மூடித் திறந்து, “அது விமன்ஸ் காலேஜ்ஆ?” என்று அமைதியான குரலில் கேட்டாள்.
“ஆமாங்க மேடம்” என்று கேலியாகச் சொன்னதும், “அதுக்கு எதுக்கு சீக்கிரம் தூங்கணும் மாறா?” என்று கீழ்க்குரலில் கத்தினாள்.
“அப்போதான் பேஸ் டல்லா தெரியாது” என்றதும், முகத்தைச் சுருக்கிக், ‘ஏன் இப்படிப் பண்ற?’ என்பது போல் அலுத்துக் கொண்டாள்.
“அப்புறம் சுடர்! என்ன டிரஸ் போட்டு போகலாம்? ஏதாவது ஐடியா கொடு??” என வெறுப்பேற்றினான்.
‘ரொம்ப முக்கியம்! சொல்ல மாட்டேன் போ’ என்பது போல் அமைதியாக இருந்தாள்.
“பார்மல்ஸ் போட்டுப் போகட்டுமா? இல்லை, உன் அண்ணன் மாதிரி வேஷ்டி சட்டைன்னு கலக்கலாமா?” என்று கேட்டவன், “சுடர், நீ என்ன சொல்றியோ அதான்” என்று வேறு சொன்னான்.
“இப்போ எதுக்கு ராஜாண்ணாவ இழுக்கிற?”
“அவனைப் பத்தி நல்லவிதமாதான சொன்னேன். அதுவும் தப்பா?” என கேட்க, ‘என்ன பேச?’ என்று தெரியாமல் மௌனமாக இருந்தாள்.
“சரி விடு. நீ ஏதோ இம்பார்ட்டன்ட் ஒர்க்னு சொன்னியே அதையே பாரு” என்று பேச்சை முடிக்கையில், “மாறா ஃபோன் வைக்காத” என அனலடிக்கும் குரலில் சொன்னாள்.
“ஏன்-ம்மா?” என்று அனுசரணையாகக் கேட்டான்.
“இன்னைக்கு ரொம்ப நேரம் பேசணும்”
“வெரி சாரி! ஏர்லி டு பெட் அன்ட் ஏர்லி டு ரைஸ் மேக்ஸ் எ மென் ஹெல்த்தி, வெல்த்தி அன்ட் வைஸ்”
உண்டான கோபத்தில், “என்னடா என்னை வெறுப்பேத்தி பார்க்கிறியா?” என்று கத்தினாள்.
‘ஐயோ இதெல்லாம் பக்கத்தில இருந்து கேட்கணும்’ என்று மனம் குதூகலமாக நினைத்தாலும், “என்னது டாவா?” என ஆட்சேபிக்கும் குரலில் கேட்க, “மாறா” என்று ஏகத்துக்கும் குழைந்து அழைத்துப் பார்த்தாள்.
“நீ எப்படிக் கூப்பிட்டாலும்… குட் நைட்தான்” என்றவன், “ஆனா ஒன்னு சுடர்?!” என்று நிறுத்தியதும், “என்ன?” என்று கேட்டாள்.
அதுவரை கேலி செய்யும் குரலில் பேசியவன், “காலேஜ் படிக்கிறப்போ எப்படி இருந்தியோ, அப்படியே இருக்க! மாறவேயில்ல” என அவளைக் காலி செய்யும் குரலில் பேசினான்.
ஒரு அமைதி. அந்த அமைதியில் அலைபேசி அலைவரிசையின் கம்பிகளில் அமர்ந்து இரு சிட்டுக்களின் அமைதியான அன்பின் பரிமாற்றங்கள் நடந்தன.
“என்ன பேச்சே காணோம்? பேசு! எவ்ளோனாலும் பேசு! மார்னிங் வரைக்கும் தூங்காம கேட்க ரெடி சுடர்” என்று காலாவதி ஆகிப்போகாத தன் காதலைக் காட்டும் குரலில் பேசினான்.
“நீ பேசு மாறா. லைஃப் ஃபுல்லா கேட்கிறேன்” என்று காலம் முழுமைக்குமான காதலைக் கொட்டும் குரலில் சொன்னாள்.
அவளின் பேச்சைக் கேட்டதும் எழுந்த ஆவலில், “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என்றான்.
“ம்ம்ம்! குட் நைட்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
கைப்பேசியை வைத்ததும் சுடரின் மனம், ‘மாறவேயில்லை’ என்று மாறன் சொல்ல காரணமான கல்லூரி நாட்களில் நடந்த நிகழ்வை நோக்கிச் சென்றது.
காதல் ஓவியம், அத்தியாயம் – 4
நீளமான கல்லூரி நடைகூடம்.
அதன் ஒருபக்கம் வகுப்பறைகள். ஒவ்வொரு வகுப்பறை வெளிபுறச் சுவரிலும் சுற்றறிக்கை மற்றும் சில துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்த பொது அறிவுப்பு பலகை இருந்தது.
மற்றொரு பக்கம் வரிசையாகத் தூண்கள் இருந்தன.
அந்தத் தூண்களில் ஒன்றின் மேல் மாறன் சாய்ந்து நின்றிருந்தான். கையில் திறந்து வைக்கப்பட்ட புத்தகம் இருந்தது. அவனைச் சுற்றி, அவனது தோழன் மற்றும் அவன் வகுப்பு மாணவிகள் சிலர் இருந்தனர்.
சுற்றி நின்றவர்கள் கவனமாகக் கவனிக்க… புத்தகத்தை வாசித்து வாசித்து அவர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தான்.
தற்செயலாக அந்தப் பக்கம் வந்த சுடர், மாறன் நிற்பதைப் பார்த்ததும், கை உயர்த்தி அசைத்து, அவனது கவனம் ஈர்க்கப் பார்த்தாள். ஆனால் அவன் கவனிக்கவில்லை.
‘ச்சே’ என்று குனிந்து கொண்டாள். ஆனால், அடுத்த நொடியே ‘பேர் சொல்லிக் கூப்பிடலாமே!?’ என யோசனையுடன் நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் சுற்றி நின்றவர்கள் தெரிந்ததும், ‘எப்படி எல்லோர் முன்னிலும்?’ என்று வாய் மூடிக் கொண்டாள்.
‘சரி! காத்திருந்து பேசலாம்?’ என்று முடிவெடுத்து, ஓடிச்சென்று ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டு மாறனைப் பார்த்தாள்.
கருத்தாகக் கைகளை அசைத்துப் பாடம் சொல்லிக் கொடுப்பவனை, சுடரின் கண்கள் படம் எடுக்கத் தொடங்கின. அவன் கைவிரல்கள் போய்விட்டு வரும் திசைக்கெல்லாம் அவள் விழிகளும் சென்றுவிட்டுத் திரும்பி வந்தன.
சிலசமயம் மாறன் சிரித்துப் பேசியதில், தன்னிடம்… தன் எதிரில் நின்றுதான் பேசுகிறான் என்பது போல் சிரித்துக் கொண்டாள்.
பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு, அவன் அருகில் நிற்கும் மாணவிகளைப் பார்க்கையில் பொறாமை உணர்வு பொங்கி வந்தது.
அவனைப் பார்ப்பதை விட்டுவிட்டு, சட்டென வேறு பக்கம் திரும்பி நின்றாள். அலைந்து திரிந்து வந்தது போல் மூச்சுக்காற்றுகள் வந்து போயின.
‘ஏன் இப்படி பொறாமை படுகிறோம்?’ என யோசித்தாள். சற்றுத் தொலைவில் நிற்பவனிடம் மனம் தொலைந்து விட்டதைக் கண்டுபிடித்தாள்.
சில்லென்று உணர்ந்தாள். சில்லு சில்லாய் ஆனாள். சிலாகித்துக் கொண்டாள். சிக்கித் தவிக்கத் தயாரானாள்.
மீண்டும் தூண் மறைவிலிருந்து சுடர் எட்டிப் பார்க்கையில் மாணவிகள் சென்றிருந்தனர். அதீத அன்பினால் உருவானக் கோபத்துடன் மாறனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
யாழோவியம் அத்தியாயம் – 5 தொடர்கிறது…
மெத்தையில் பொத்தென்று தலை சாய்த்தவள், அதற்கு அடுத்து தான் செய்த செயலை நினைத்துச் சிரித்துக் கொண்டிருக்கையில், “சுடர்” என்று லதாவின் குரல் கேட்டது.
பட்டென்று எழுந்தமர்ந்தாள். அதே வேகத்தில், “ம்மா” என்றழைத்து, கட்டிலில் இருந்து இறங்கினாள். அதே நேரத்தில், லதாவும் அவளருகில் வந்திருந்தார்.
“என்னம்மா என்ன வேணும்?”
“ராஜாக்கு ஃபோன் பண்ணேன். எடுக்கவே மாட்டிக்கிறான்” என்று ஒருவித சோர்வுடன் சொன்னார்.
“நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கிறீங்க?” என்று கண்டிக்கும் தொனியில் கேட்டாலும், “இந்நேரம் வீட்லதான் இருப்பாங்க. நான் ட்ரை பண்றேன்” என்று, தன் கைப்பேசியிலிருந்து ராஜாவிற்கு அழைத்தாள்.
முழு ‘ரிங்’ போன பிறகும் அழைப்பு ஏற்கப்படவில்லை. சுடர் முகம் ஒருமாதிரி ஆயிற்று. வெகு சில நாட்கள் தவிர, இதுவரை அவளது அழைப்பை ராஜா ஏற்காமல் இருந்ததேயில்லை.
அந்த வெகு சிலநாட்களும், ‘கட்சி வேலையாக வெளியே செல்கிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்ற நாட்களாகவே இருக்கும்.
‘இன்று ஏன் இப்படி?’ என்ற கேள்வி, ‘அம்மாகூட சரியா பேச சொன்னதுக்கு, கோபமோ?’ என்ற குழப்பம், ‘அம்மாகிட்ட நடந்துக்கிற மாதிரிதான் இனிமே என்கிட்டயும் நடந்துப்பாங்களோ?’ என்ற பயம்… இப்படிபட்ட உணர்வுகளின் கலவையாகத்தான் சுடர் நின்றாள்.
மகளின் முகத்தைப் பார்த்தே அழைப்பின் நிலை புரிந்ததும், “ஏன் இப்படி இருக்கானே தெரியலை?!” என்று வாட்டத்துடன் சொல்லி, ஒரு ஆயாச பெருமூச்சோடு கட்டிலில் சென்று அமர்ந்தார்.
பின், “சுடர்! அப்பா ஏதோ முக்கியமான நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்காரு. அதனால நான் இங்க கொஞ்ச நேரம் படுத்திருக்கேன்” என தலையணையில் தலை சாய்த்தார்.
அழுகை, கவலை என்பதெல்லாம் போய், ஒரு விரக்தியான குரலில், “பேசவே மாட்டிக்கிறான்” என்று தொடங்கி, புலம்பிக் கொண்டே இருந்தார்.
அதைக் கேட்டுக் கொண்டே அறைக் கதவை அடைக்க, கணினியை எடுத்து வைக்க, திரைசீலைகள் இழுத்துவிட என சுடர் உறங்குவதற்கான ஏற்பாட்டில் இருந்தாள்.
எல்லாம் முடித்து தூங்க வருகையில், “ஏதோ என்கிட்டருந்து மறைக்கிறான். அதான் முகத்தைப் பார்த்தே பேச மாட்டிக்கிறான். அம்மா-ன்னு கூட கூப்பிட மாட்டிக்கிறான். என்னவா இருக்கும்?” என்று மனச்சோர்வு நிறைந்த லதாவின் புலம்பலைக் கேட்டதும், சுடர் புருவ மத்தியில் மீண்டும் வலி எடுத்தது.
***************
தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் வீடு!
நேரம் இரவு பதினொன்றைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. வீட்டு உறுப்பினர்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். கல்வித் துறை அமைச்சர் ராகினி உறங்கவில்லை. அவர்மட்டும் தனியறையில் இருந்தார்.
தூக்கிப் போடப்பட்டிருந்த கொண்டை, உயர்தர வாயில் சேலை, லெதர் செருப்பு இப்படித்தான் இருந்தார். இப்படித்தான் எப்பொழுதும் இருப்பார்.
அறையின் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஒரு விளக்கு மட்டும் எரியவிட்டிருந்தார். அந்த ஒற்றை விளக்கும் ராகினி பதவிப்பிரமாணம் செய்யும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மீது இருந்தது.
அந்த அறையின் ஒற்றைச் சோஃபாவில் அமர்ந்து கால் மீது கால் போட்டுக் கொண்டு, அந்தப் புகைப்படத்தையே இமைக்காமல் பார்த்தார்.
செங்கல்பட்டு காவல்நிலையத்தில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டபடியே இருந்தார். அதன்பின் நடந்த ஆட்சியர் யாழ்மாறனின் உத்தரவுகளையும் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.
‘என்ன செய்ய?’ என யோசித்தவர், பிரத்யேக கைப்பேசி எடுத்து, ஒருவருக்கு அழைத்தார். மறுமுனையில் அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு, “ஹலோ” என்றொரு ஆண்குரல் பேசியது
அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் அமைச்சர் என்பதைப் பறைசாற்றும் அழுத்தம் நிறைந்த குரலில், “ஸ்டேட் நியூஸ் பாலோவ் பண்றீங்களா?” என்று கேட்டார்.
“பண்ணாம இருப்பேனா? எல்லாம் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்” என்று அடிக்குரலில் அத்தனை ஆத்திரங்களுடன் அந்த ஆண்குரல் ஒலித்தது.
“இந்த செங்கல்பட்டு நியூஸ்தான் ரொம்ப குடைச்சல் கொடுக்குது” என்று எரிச்சலின் உச்சத்தில் ஏறி உட்கார்ந்து ராகினி பேசினார்.
“ரெண்டாவது தடவை போஸ்ட் மார்ட்டம் நடத்த விட்ருக்ககூடாது. நீங்க ஏன் விட்டீங்க?” என ஆளுங்கட்சி அமைச்சரையே கேள்வி கேட்கும் ஆளுமையில் ஆண்குரல் வெளிப்பட்டது.
“அதுக்கு டிஎஸ்பி ஒத்துக்கல. எவ்ளோ பிரஷ்ஷர் போட்டுப் பார்த்தும், ஒன்னும் முடியல. டிஎம் ஆர்டர் இஸ்யூ பண்ணப்புறம் என்ன செய்ய முடியும்னு அவன் கேட்கிறான்”
“ஈரோடுல மாதிரி எவிடன்ஸ் சரியா இல்லைனு ரிலீஸ் பண்ண முடிஞ்சிருந்தா, அந்தப் பையனை கொன்றுக்கவே வேண்டாம். நமக்கு இந்தப் பிரச்சனையே வந்திருக்காது?” என, குற்றஉணர்வே இல்லாமல் ஆண்குரல் பேசியது.
“கரெக்ட்தான்! ஆனா சப்இன்ஸ்பெக்டர் கேட்டதும் உண்மையை அப்படியே உளறிருக்கான். அப்புறம் எப்படி அவனை விட முடியும்? அவனும் உயிரை விட்டு, நம்ம உயிரையும் வாங்குறான்” என, ஒரு உயிர் போயிருக்கிறது என்ற வருத்தமே இல்லாமல் ராகினியின் வார்த்தைகள் வந்தன.
“அட்லீஸ்ட் சூசைட்னு சொல்லி, கேஸ் கிளோஸ் பண்ண முடிஞ்சிருந்தா, நாம இப்போ நிம்மதியா இருந்திருக்கலாம்” என்று இரக்கமே இல்லாமல் அந்த ஆண்குரல் ஒலித்தது.
“நானும் ட்ரை பண்ணேன். பட் முடியலை. எல்லாம் அந்த கலெக்டர் பண்ற வேலை” என்று கோபப்பட்டவர், “அட்லீஸ்ட் இன்ஸ்பெக்டர் மேல ஆக்ஷன் எடுத்தப்புறமா கேஸ் முடியுதானு பார்க்கலாம்” என்ற ராகினியின் குரலில்,
‘எப்படியும் தப்பித்து விடலாம்’ என்ற திமிர் தெரிந்தது.
“எனக்கென்னமோ அந்த கலெக்டர் இதை இப்படியே விடுவான்னு தோணல” என்று அந்த ஆண்குரல் ஆட்சியர் மாறனைப் புரிந்து பேசியது.
“அந்த கலெக்டர் பெரிய பிரச்சனைதான். பேசாம… இனி இப்படி ஆர்டர் போட முடியாத மாதிரி, அவன்கிட்ட இருக்க டிஎம் போஸ்ட்ட எடுத்திடலாமா?” என்று, செங்கல்பட்டு ஆட்சியர் மாறன்மீது ஏதோ பெரும் பகை இருப்பது போன்று ராகினி கேட்டார்.
“இப்போ அது வேண்டாம். ப்ராப்பர் இன்வெஸ்டிகேஷன் நடந்தா, கண்டிப்பா மாட்டுவோம். அதனால நான் சொல்ற மாதிரி செய்ங்க” என, அந்த ஆண்குரல் தெளிவாக வழிகாட்டியதும், “சரி” என்று ராகினி அழைப்பைத் துண்டித்தார்.
நுழைவுத்தேர்வு சம்பந்தமாக பதியப்பட்ட வழக்கு, அந்த விசாரணையில் மாணவன் வாக்குமூலம், அதை மறைக்க நடத்தப்பட்ட மாணவன் மரணம், அதை மூடி மறைக்க முடியாமல் போனது என்று அனைத்தையும் நினைத்துப் பார்த்தார் ராகினி.
உடனே இப்படி நெருக்கடியான சூழ்நிலைக்குள் தங்களைத் தள்ளியிருக்கும் யாழ்மாறன் மீது கோபத்தீ கனன்று கொண்டு வந்தது.
இருந்தும் அதை அப்படியே உள்ளுக்குள் வைத்துக் கொண்டு… காலதாமதம் செய்யாமல் ஆளுங்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இதிலிருந்து வெளிவர அந்த ஆண்குரல் சொன்னதைச் செய்ய வேண்டும் என்று எழுந்து சென்றார்.
