Kathambari Novels
உள்ளே போகாமல் நின்ற அரவிந்த்… பூஜாவைப் கூர்ந்து பார்க்கவும், அவனை நோக்கி நடந்து வந்து, “கொஞ்சம் பேசணும்” என்றதும், ‘என்கிட்டயா?’ என்பது போன்று சைகையால் கேட்டதற்கு, “ம்ம்ம்” என்றாள்.
‘சற்று தள்ளிப் போய் பேசலாம்’ என்று அவன் சைகையில் சொல்ல, இருவரும் வாயிலில் நின்ற காவலரிடமிருந்து விலகி வந்து நின்றனர். ஒருசில நொடிகள் அமைதியாக கடந்தபின்னர், “என்னை உங்களுக்குத் தெரியுதா?” என்று பூஜா தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.
“தெரியுது! பேர் பூஜா. நான் மேரேஜ் வேண்டாம்னு சொன்ன பொண்ணு” என்று சொல்லவும், பூஜாவிற்கு உள்ளுக்குள் கோபம் வந்தது. இருந்தாலும் பொறுமை காத்துக் கொண்டு நின்றாள்.
அவள் தலைகுனிந்து கொண்டே இருக்கவும், “என்கிட்ட நீ என்ன பேசணும்னு சொல்லு?” என்றதும், “நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்றாள்.
“என்ன ஹெல்ப்?”
“அப்பா அரெஸ்ட் விஷயம் உங்களுக்குத் தெரியுமா?”
“ம்ம்ம். ஹெல்ப் என்னென்னு சொல்லு”
“நீங்க அந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கிட்ட வந்து பேசணும்”
“நானா? முதல நீ போய் பார்த்தியா?”
“போனேன். கான்ஸ்டபிள்தான்… மர்டர்… அதுக்குத்தான் அப்பாவை… ” என்று வார்த்தைகளை மென்று முழுங்கியவள், “பட்… எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் பேசவே இல்லை. அவங்களுக்குள்ள பேசினாங்க. அதுவும் பெங்காலியில” என்றாள்.
“எப்ஐஆர் போட்ருக்கதா சொன்னாங்களா?”
“அது தெரியலை”
“நீ எதும் கேட்கலையோ?”
“என்னை பேசவே விடலையே”
அவன் யோசிக்கவும், “ப்ளீஸ்… என் அப்பாவ நான் பார்க்கணும். நீங்க வந்து கொஞ்சம் பேசி… இதுக்கு அரேஞ்ச் பண்ணித் தாங்க. அப்புறம் இன்னொன்னு இந்த அரெஸ்ட் பத்தின விவரமெல்லாம் கேட்டுச் சொல்லுங்க. அதுக்கப்புறம் நான் லாயர் பார்க்கிறேன்” என்றாள்.
இன்னும் யோசித்தவன், “ரிலேட்டிவ்ஸ் யாரும் இல்லையா?” என்று கேட்க, “ம் இருக்காங்க. பட் தமிழ்நாட்டில இருக்காங்க” என்றாள்.
“அதுல யாரையாவது வர சொல்ல வேண்டியதுதான? ஏன் வர மாட்டாங்களா?”
“குளோஸ் ரிலேட்டிவ்னா… அத்தை மட்டும்தான். அத்தை வருவாங்க. பட் இப்ப அவங்க பொண்ணுக்கு டெலிவரி டைம். அதான் வரமுடியாது. அவங்க பையன் ஃபாரின்ல இருக்கான். வர்றதுக்கு நாளாகும். அதுவரைக்கும்… நான் சும்மாவே இருக்க முடியாதுல” என்று விளக்கமளித்தாள்.
“மாமா இல்லையா?”
“இருக்காரு”
“அவர் என்ன பண்றாரு? அவர் வரலாமே?”
எப்படிச் சொல்லவென்று ஒருநொடி தயங்கிவிட்டு, “வந்து மாமா… மாமாக்கும் எனக்கும் ஒத்துவராது” என்று சொன்னதுமே, “ஏன்… எதுக்கு?” என்று அவளைச் சந்தேகப்படும்படி கேட்டான்.
“இதெல்லாம் எதுக்கு? நீங்க ஹெல்ப் மட்டும் பண்ணுங்களேன்… ப்ளீஸ்” என்று காரணம் சொல்ல மறுத்தாள்.
“நீ யாருன்னே தெரியாது. இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் உன்னைப் பார்க்கிறேன். உன் அப்பா மர்டர் கேஸ்ல அரெஸ்ட் ஆகியிருக்காரு. இதுல உன்னைப் பத்தி எதும் தெரியாம எப்படி ஹெல்ப் பண்ணுவேன்னு நினைக்க” என்று கேட்டான்.
பிறகும் அவள் வாய் திறக்காமல் நிற்க, “உனக்கு நான் ஹெல்ப் பண்ணனும்னு எந்த அவசியமும் கிடையாது. ஸோ நிஜமா உனக்கு ஹெல்ப் வேணும்னா, ஏன் உனக்கும் உன் மாமாக்கும் ஒத்து வராதுனு சொல்லு?” என்றான்.
உடனே, “அவர் போலீஸ். அதான் அவர்கிட்ட ஹெல்ப் கேட்கலை” என்று அவள் சொன்னதற்கு, “அப்போ… நான் யாரு?” என்றான் பட்டென்று.
‘தவறாக போய்விட்டதோ?’ என்று தோன்ற, “அவர்… லஞ்சம் வாங்கிற போலீஸ். அதான்” என்று விளக்கம் சொன்னதற்கும், “நான்… லஞ்சம் வாங்க மாட்டேன்னு உனக்கு யாரு சொன்னா?” என்று கேட்டு நின்றான்.
ஒருநொடி பதில் கூறாமல் இருந்துவிட்டு, “அது… அது வந்து… உங்களைப் பத்தி அப்பா விசாரிச்சாங்களாம்” என்று ஆரம்பித்து, “அப்பா சொன்னாங்க… நீங்க நல்ல பையன்னு” என்று மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள்.
“அப்புறமும் ஏன் போலீஸ்னா வேண்டாம்னு சொல்லிருக்க? வேற எதும் ரீசன் சொல்லியிருக்கலாமே?” என சட்டென கேட்டுவிட்டு, “பர்சனல் கொஸ்டினோ?” என்றும் கேட்டுக் கொண்டான்.
‘இதற்காகத்தான் இவ்வளவு பேச்சோ?’ என்று தோன்ற, “இல்ல… இப்போ நீங்க வாங்கலை. பின்னாடி வாங்க ஆரம்பிச்சிட்டீங்கனா?” என்றாள்.
“விவரம்” என தனக்குள் முணுமுணுத்தவன், “சரி ஹெல்ப் பண்றேன்” என்று அவளிடம் சொன்னான்.
“தேங்க்ஸ்” என்றவள் காவலர் சீருடையில் இருக்கும் அவன் பெயரை வாசிக்க முற்பட, “என்ன ரீட் பண்ற?” என்று கேட்டதும், “உங்க பேர்” என்றாள்.
“என் பேர்கூட தெரியமாதான் ஹெல்ப் கேட்டு வந்தியா?” என்று ஆச்சரியமாக அவன் கேட்டதற்கு, “அன்னைக்கு அப்பா சொன்னாங்க. ஆனா… வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம்… எதுக்கு பேர் ஞாபகம் வச்சிக்கணும்னு, உங்க பேரை மறந்திட்டேன்” என்றாள்.
“இப்ப என்ன சொல்ல வர்ற? வேண்டாம்னு சொன்ன பொண்ணு பேரை, ஏன்டா நீ மட்டும் ஞாபகம் வச்சிருக்கன்னு கேட்கிறியா?” என்று கேட்டான்.
“அச்சோ… அப்படி இல்லை. சும்மாதான்… ” என்று சொல்லும் போதே, “நெட்ல பார்த்திருக்கலாம். இல்ல இந்த கான்ஸ்டபிள்கிட்ட கேட்டுருக்கலாமே?” என்று கேட்டு நின்றான்.
“அப்பாவைப் பத்தி மட்டும்தான் யோசிக்க முடியுது. வேற எதுவுமே யோசிக்க முடியல” என்று சொன்னவள், “உங்களை இன்சல்ட் பண்ணனும்னு நினைச்சி சொல்லலை. நிஜமாவே பேர் மறந்திடுச்சி” என்றும் சொன்னாள்.
அவன், “அரவிந்த்” என்றதும், “ரீட் பண்ணிட்டேன்” என்றாள் அவள்.
“சரி வெய்ட் பண்ணு” என்று உள்ளே செல்லப் போக, “ப்ச், இந்த ஊர்ல போலீஸ் எல்லாரும் இதேதான் சொல்லுவீங்களா?” என்று கேட்டுவிட்டாள்.
போகப் போன அரவிந்த் திரும்பி நின்று, “நான்தான சொன்னேன். நீ ஏன் இப்ப ஜெனரலைஸ் பண்ற?” என்று கேட்க, “அந்த ஸ்டேஷன்ல இப்படிதான்…” என்று ஏதோ சொல்ல வந்தாள்.
அதற்குள், “வேலை இருந்தா… வெய்ட் பண்ணத்தான் சொல்வாங்க. உனக்குத் தேவைனா நீதான் வெய்ட் பண்ணனும்” என்றான்.
“சரி வெய்ட் பண்றேன். நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க” என்று மீண்டும் வாயில் காவலர் அருகில் சென்று நின்று கொள்ள, அவன் உள்ளே சென்றான்.
அவன் போனதும் அந்தக் காவலர் இவளுடன் பேச்சுக் கொடுத்தார். தன் பெயர் தப்பான் ஷிண்டே என்று அறிமுகப்படுத்திவிட்டு, அவளது பெயரைக் கேட்டுக் கொண்டார். அவருக்கு ஓரளவிற்கு ஆங்கிலம் தெரிந்தது. அதனால் உடைந்த ஆங்கிலத்தில் அவளுடன் பேசியபடி இருந்தார்.
நேரம் பன்னிரெண்டைத் தாண்டும் போது அரவிந்த், “போகலாமா?” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தான். “ஜீப்… ஸ்டேஷன் யூஸ்க்குத்தான். ஸோ ஆட்டோல போயிடலாம்” என்று ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் காளிகாட் காவல் நிலையம் சென்றார்கள்
*********
காளிகாட் காவல்நிலையம்!
ஏற்கனவே ஒருமுறை வந்திருந்தாலும் ஏனோ அந்தப் பகுதி… அந்தச் சாலை பூஜாவிற்குப் பழக்கப்படவில்லை. தெரியாத இடத்திற்கு வந்தது போல ஒரு அந்நியமான உணர்வே இருந்தது.
கூடவே எப்படியாவது அப்பாவைப் பார்த்துவிட வேண்டும் என்ற தவிப்பு வேறு அதிகமாக இருந்தது! பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது!!
கடகடவென்று காவல்நிலையம் உள்ளே சென்ற அரவிந்த் காவலர் ஒருவரிடம், ‘இன்ஸ்பெக்டரைப் பார்க்கணும்’ என்று பெங்காலியில் சொல்ல, அவர் போய் சவுரவிடம் கூற, சவுரவ் அவர்களை ஐந்து நிமிடம் காத்திருக்க சொன்னார்.
இருவரும் காத்திருந்தார்கள்.
சரியாக ஐந்து நிமிடத்திற்குப் பின் இவர்களை உள்ளே வரச் சொன்னார். தன் பதவி போன்ற பதவியில் இருப்பவன் என்ற அர்த்தத்தில் ஒரு முறுவலோடே அரவிந்தை வரவேற்று அமரச் சொன்னார்.
அரவிந்த் பேச ஆரம்பித்தான். அவரும் பேசினார். இருவருமே பெங்காலியில் பேசினார்கள். பூஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியாகவே இருந்தாள். எப்படியாவது அப்பாவைப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.
பேச்சின் இடையே அவளைக் கைகாட்டி சவுரவ் ஏதோ பேசினார்.
பத்து நிமிடங்கள் சென்றிருக்கும், “வா போலாம்” என அரவிந்த் எழுந்தான்.
அப்பாவைப் பார்க்காமல் கிளம்பும் மனமில்லாமல், “அப்பா…” என்று சொல்ல, “வெளிய வா சொல்றேன்” என்ற பின்னுமே அவள் நகராமல் நின்று சவுரவைப் பார்க்க, “வா” என்று கைப்பிடித்து அவளை வெளியே அழைத்துச் சென்றான்.
போகும்முன் சவுரவிடம் இன்முகத்துடன் விடைபெற்றும் கொண்டான். இருவரும் வெளியே வந்து நின்றார்கள்.
“என்ன சொன்னாரு?” என்றாள் எடுத்தவுடன்.
“முதல நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லு. அன்னைக்கு உன்கிட்ட எஸ்ஐ வந்து டீடெயில்ஸ் சொல்வாருன்னு சவுரவ் சார் சொன்னாரா?”
“ம்ம். பட் ஒரு கான்ஸ்டபிள்தான் லாயர் கூட்டிட்டு வான்னு சொன்னாரு”
“லாயர் ஓகே. ஆனா எஸ்ஐ என்ன சொல்றாருன்னு கேட்டிருக்கணும்ல?!”
அமைதியாக இருந்தாள்.
“உங்கப்பாவ கூட்டிட்டு வர வீட்டுக்கு வந்த போலீஸ்கிட்ட, எப்படி நடந்துகிட்ட நீ?” என்று கேள்வி கேட்க, “அது, அது அப்போ இருந்த…” என்று அவள் தடுமாற, “அப்புறம் இங்க வந்துகூட சத்தம் போட்டுக்கிட்டு இருந்திருக்க. ஏன் இப்படி?” என்று அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.
அவள் ஏதும் பேசாமல் இருக்க, “போலீஸ்கிட்ட இப்படி நடந்துக்காத. அதுலயும் யூனிஃபார்ம்ல இருக்க போலீஸ்கிட்ட மரியாதையா நடந்துக்கோ” என அவள் செயலை குற்றம் சாட்டும் குரலில் சொன்னான்.
சிலநிமிடங்கள் அமைதியாக இருந்தவள், “ம்ம்ம் சரி” என்றாள்.
“ஸ்டேஷன்ல இதனால உன்மேல கோபமா இருக்காங்க”
“அதான் என்கிட்ட எதுவும் சொல்லலையா?”
“நீ வெய்ட் பண்ணிருந்தா… எஸ்ஐ வந்து சொல்லிருப்பாரு”
“இப்போ என்ன சொன்னாங்க?” என்று மெதுவாக கேட்டாள்.
“பாரு… உங்கப்பா லாக் அப்ல போலீஸ் கஸ்டடில இருக்காரு. இந்த மர்டர் பத்தி அவர்கிட்ட விசாரிக்கிறாங்க. பட் இப்படி கஸ்டடில இருந்தா டுவன்ட்டி ஃபோர் அவர்ஸ்க்கு அப்புறம் கோர்ட்ல சரன்டர் பண்ணனும். மேஜிஸ்ட்ரேட் முன்னாடி இன்னைக்கு ப்ரோடுயூஸ் பண்ணாலுமே, அகைன் அவரை போலீஸ் கஸ்டடில எடுக்கப் போறாதான் சவுரவ் சொல்லறாரு”
“அப்படினா என்ன அர்த்தம்?”
“விசாரணை இன்னும் கொஞ்ச நாள் போகலாம். மேஜிஸ்ட்ரேட் எவ்ளோ நாள் சொல்லப் போறாருனு தெரியலை”
“விசாரணைனா அடிப்பாங்களோ?” என்று பயந்து போய் கேட்க, “அடிச்சிலாம் விசாரிக்க மாட்டாங்க. இன்டெரகேஷன் எப்படி இருக்கணும்னு அவங்களுக்கு ரூல்ஸ் இருக்கு” என்றான்.
“இங்க வர்றதுக்கு முந்தின நாள், அப்பாக்கு பிபி ஷூட்அப் ஆனது. டேப்லட்கூட போட்டாங்க…” என்று தந்தையின் உடல்நிலைக்காக கவலைப்பட, “மெடிக்கல் எக்ஸாமினேஷன் ரெகுலரா நடக்கும். அவங்க பார்த்துப்பாங்க” என்றான்.
சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “அப்ப அ… அப்பாவை இ… இன்னைக்கு பார்க்கக… முடியாதா?” என்று கரகரப்பான குரலில் கேட்க, “இன்டெரகேஷன் டைம்ல விசிட்டர்ஸ் அலோவ் பண்ண மாட்டாங்க” என்றான்.
“நீங்க எதுவும் சொல்ல முடியாதா?”
“எப்படி சொல்ல முடியும்னு நினைக்கிற? நான் ஒன்னும் அவருக்கு சீனியர் ஆபிசர் கிடையாது. அதலாம் முடியாது. அன்ட் சார் பேசினதை வச்சி இதை சொல்றேன். நீ என்னை கூட்டி வந்து பேச சொன்னதுகூட அவருக்கு பிடிக்கல”
“ஏன் அப்படி?”
“ஏன்னா? இந்த ஸ்டேஷன் அவர் கண்ட்ரோல்ல இருக்கு. இன்னொரு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்து இப்படி கேட்கிறதை எப்படி எடுத்துப்பாரு சொல்லு? ஒரு பேசிக் கேர்டஸிக்கா பேசியிருக்காரு. அவ்ளோதான்”
அவள் அமைதியாகவே இருக்கவும், “கேஸ் டீடெயில்ஸ் சொல்றேன். நீ ஏதாவது லாயர் பார்த்துப் பேசு. லாயரை அலோவ் பண்ணுவாங்க. அவரை வச்சி உங்க அப்பாகிட்ட பேசு” என்று வழிமுறை சொன்னான்.
இன்னும் அமைதியாக இருக்க, “பூஜா, நான் சொல்றதைக் கேட்கிறியா?” என்று கேட்க, “லாயர் மட்டும்… நீங்க அரேஞ் பண்ணித் தர்றீங்களா??” என்று மீண்டும் ஒரு உதவி கேட்டாள்.
கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து, “நான் ஸ்டேஷன் போகணுமே” என்று சொல்ல, “ம், ஓகே” என்றவள், கைப்பையிலிருந்து மூன்று வழக்கறிஞர் பெயர் எழுதிய சீட்டைக் காண்பித்து, “இந்த லாயர்ஸ் பத்தி உங்களுக்குத் தெரியுமா? எப்படி? என்னென்னு? அபார்ட்மென்ட்ல சொன்னாங்க” என்றாள்.
“பேர் மட்டும் வச்சி என்ன சொல்ல முடியும்? தெரியாது” என்றவன், “நீயே பாரு. இன்ஸ்பெக்டரோட நல்ல அண்டர்ஸ்டாண்டிங்ல இருக்கிற லாயர்னா பெட்டர்” என்றும் சொன்னான்.
“ம்” என்றவள் வாழ்க்கை திடீரென இப்படிச் சரியில்லாமல் ஆனதை நினைத்து வருந்தினாள். கையிலிருந்த சீட்டை பார்த்து இதில் யாரை அடுத்துப் பார்க்க? அவரிடம் என்ன சொல்ல? அவரும் பெங்காலியில் பேசினால் என்ன செய்ய? இணையத்தில் வேறு வழக்கறிஞர் தேடிப் பார்ப்போமா என்று யோசித்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பூஜா இரு வர்றேன்” என்று மீண்டும் காவல்நிலையம் சென்று வந்து, “பக்கத்து ஏரியாதான் அலீபோர். அங்க ஒரு லாயர் இருக்காராம். இவருக்கும் அவருக்கும் டேர்ம்ஸ் நல்லா இருக்குமாம். கான்ஸ்டபிள் சொன்னாரு. போய் பார்க்கலாமா?” என்று கேட்டான்
“ஸ்டேஷன் போகணும்னு சொன்னீங்க”
“அதை நான் பார்த்துக்கிறேன்” என்று அரவிந்த் கூற, “தேங்க்ஸ்…” என்று மட்டும் பூஜா சொல்லவும் மீண்டும் ஒரு ஆட்டோவில் ஏறி அலீபோர் சென்றார்கள்.
அலீபோர் பகுதி!
‘டிஸ்ட்ரிக்ட் சிவில் அன்ட் செஷன் கோர்ட்’ என்று வாயில் முகப்பு வளைவில் எழுதியிருந்த இடத்திற்கு இருவரும் வந்திருந்தார்கள்.
பெரிய இரும்பு கேட் கொண்ட பிரதான வாயில் வடிவமைப்பு! கேட் முழுவதும் திறந்திருந்தது! அதன் வெளிப்பக்கத்தின் இரண்டு புறமும் பாலீதீன் ஷீட்டால் பந்தல் மாதிரி போடப்பட்டு, அதில் சிறு உணவகங்கள் இயங்கின. வாயிலின் உள்ளே ஷெராக்ஸ் கடை இருந்தது.
நிறைய மரங்கள் சூழப்பட்ட இடத்தின் நடுவே நீதிமன்றம் இருந்தது.
இருவரும் கேட் வெளியே இறங்கிக் கொண்டு உள்ளே நடந்தனர். ஒரு இடத்தில் பூஜாவை அமரச் சொல்லிவிட்டு, அவன் மட்டும் சென்று கேட்டு வந்தான்.
அவன் வந்ததும் எழுந்து நின்று, “என்ன சொல்றாங்க” என்று கேட்க, “சேம்பர்ல கேட்டேன். இது லஞ்ச் டைம். வெய்ட் பண்ண சொன்னாங்க” என்றான்.
“ம் வெய்ட் பண்ணலாம்” என்று மீண்டும் அவள் அமர்ந்து கொள்ள, “பூஜா இது லஞ்ச் டைம்” என்று அழுத்திச் சொன்னான்.
“சொல்லிட்டீங்களே…”
“அவங்களுக்கு லஞ்ச் டைம்னா… எனக்கும்தான? உள்ள கேன்டீன் இருக்கும். டீ மட்டும் குடிச்சிட்டு வருவோமா?”
அவள் சற்று யோசித்துவிட்டு, “ம்ம்ம்” என்றதும், நீதிமன்றத்திற்குள் இருக்கும் கேன்டீன் சென்றனர்.
அளவில் சிறியதாக இருந்தது. டீ, சிற்றுண்டிகள் மட்டுமே. அதனால் நின்றபடி சாப்பிடும் வசதிதான் உண்டு. சில வழக்கறிஞர்கள் வெளியே நின்று அவர்கள் கட்சிக்கார்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் உள்ளே இருந்த எல்சிடி டிவியில் அப்போதைய முக்கிய செய்திகளைப் பார்த்தபடி டீ குடித்தனர்.
களிமண் கோப்பையில் இரண்டு மசாலா டீ வாங்கி வந்து ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு, வழக்கறிஞரிடம் ‘என்ன, எப்படி சொல்ல வேண்டும்?’ என்று அவளிடம் பேசிக் கொண்டு டீ குடித்தான்.
பூஜா ஒரே இடத்தில் பார்த்தபடி இருந்தாள். இன்று அப்பாவைப் பார்த்திடலாம் என நம்பியிருந்தாள். ஆனால் இனி அது சாத்தியப்படுமா என தெரியாததால் அவள் மனம் மிகவும் கலங்கிப் போயிருந்தது.
அதனால் டீ குடிக்கவில்லை. கையில் அப்படியே வைத்திருந்தாள்.
அவன் பேசுவது கேட்டது. ஆனால் அவள் மனம் முழுதும் அப்பாவின் ஞாபகம் மட்டுமே. என்ன செய்கிறாரோ?’ என்ற கவலை மனதை அரித்தது. அப்படியே ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.
தீடீரெனதான் அவன் பேசவில்லை என்ற உணர்வு வந்தது. உடனே நிமிர்ந்து பார்த்தாள். டிவி இருக்கின்ற பக்கத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘என்ன பார்க்கிறான்?’ என்று திரும்பி டிவியைப் பார்த்ததுமே, “அப்பா… அப்பா பத்தின நியூஸ்… இதுல என்ன சொல்றாங்க?!” என்று பதற்றத்தில் கத்த, அங்கே இருந்தவர்கள் அவளை விகற்பமாக பார்க்கவும், “பூஜா அமைதியா இரு” என்று மெதுவாக சொன்னான்.
“இங்கிலிஷ் நியூஸ் வைக்கச் சொல்லுங்க. ஒண்ணுமே புரிய மாட்டிக்கு. ப்ளீஸ்”
என்று அவன் பேச்சைக் கேட்காமல் சத்தமிட்டாள்.
“ஏன் சத்தம் போடற? எல்லாரும் பார்க்கிறாங்க பாரு. நான் கேட்டுட்டு வெளிய வந்து உன்கிட்ட சொல்றேன்” என சொன்ன பின்னும், “இல்ல நான் கேட்கணும். ரிமோட் எங்க?” என்று பதற்றப்பட்டாள்.
சுற்றி இருக்கும் மக்களைப் பார்த்தவன், “பூஜா… ஒன்னு நீ வெளிய போய் இரு. இல்லைனா நான் போயிடுவேன்” என அவன் குரல் உயர்த்தவும், அதற்குமேல் அவள் பேசிக் கொண்டிருக்கவில்லை. வெளியே சென்றுவிட்டாள்.
சற்று நேரம் கழித்து வெளியே வந்தவன் முன் சென்று, “இப்போ சொல்லுங்க டிவில என்ன சொன்னாங்க?” என முடிந்தளவு பொறுமையாக, பதற்றத்தைக் குறைத்துக் கொண்டு கேட்க, அவன் அமைதியாக நின்றான்.
“ஏன் இப்படி நிக்கிறீங்க? எதுனாலும் சொல்லுங்க ப்ளீஸ்” என்று கேட்ட போது அவளுள் அப்படி ஒரு பயம் பரவியது.
“இதுக்கு முன்னாடி ரெண்டு கொலை நடந்திருக்கு. போலீஸ் அதுலயும் உங்க அப்பாவைதான் சந்தேகப்படுறாங்க. லைக்… சீரியல் கில்லர் மாதிரி நியூஸ்ல சொல்றாங்க” என்றான்.
பூஜா அதிர்ந்துவிட்டாள். என்னதான் நடக்கிறது அப்பாவைச் சுற்றி? தலையும் புரியாமல் வாலும் புரியாமல்… அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது!
