Kathambari Novels
அவன் அப்படிச் சொன்னதும், “ரொம்ப பண்ணாத மாறா!” என கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு கோபப்பட்டாள்.
அந்தக் கோபத்தில் குஷியானவன், “நான் என்ன பண்ணேன்? மேடம்தான் கட்சி வேலையில பிஸி” என்று அவளை வம்பிழுத்தான்.
“மாறா?!” என்று அடிக்கும் தொனியில் ஆரம்பித்தவள், “ராஜாண்ணாவ கட்சி வேலை செய்ய சொல்றேன். அவ்வளவுதான்” என்று தன்மையாக முடித்தாள்.
“சரி அதை விடு. இப்ப எங்க இருக்க?” என்று கேட்டதும், கட்சிக் கோடி, கட்சித் தலைவர்களின் சிலைகள், அங்கங்கே நின்று கொண்டிருக்கும் கட்சி ஆட்கள் என அனைத்தையும் சுற்றிப் பார்த்தாள்.
பின் மெதுவாக, “கட்சி ஆபிஸ்” என்றதும், அழைப்புத் துண்டிக்கப்பட்டது. ‘ப்ச்! கட் பண்ணிட்டான்!’ என சொல்லி நிமிர்ந்தவளுக்கு, ராஜா தினாவுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
‘உடனே மாறாகிட்ட பேசணுமே’ என்ற அவசரத்தில் கார் ஹாரனை அழுத்தி ராஜாவின் கவனத்தைக் கலைத்தாள். திரும்பியவன், ‘வர்றேன்’ என்று சைகை செய்தான்.
‘ஐயோ’ என்றிருந்தாலும் சுடர் அமைதியாக இருந்தாள்.
சற்று நேரத்தில் கார் கதவைத் திறந்த ராஜா, “காலைல டேரைக்டா ஏர்போட் வந்திடு” என்று தினாவிடம் சொல்லிவிட்டு, காரில் ஏறி அமர்ந்தான்.
சுடர் முகத்தைப் பார்த்தவன், “என்னாச்சு? ஏன் ஹார்ன் அடிச்ச?” என்று கேட்க, “ராஜாண்ணா சீக்கிரமா கார்-அ வெளிய எடு” என பரபரத்தாள்.
“எதுக்கு?” என்று கேட்டாலும், காரை கிளப்பியிருந்தான்.
“மாறா ஃபோன் பண்ணியிருந்தான்” என்றதும், “ஓ! டிசிகிட்டருந்து ஃபோனா? அதுக்கு எதுக்கு இவ்ளோ டென்சன்?” என சாலை போக்குவரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
“ப்ச், அவனோட?! எங்க இருக்கன்னு கேட்டான். கட்சி ஆபிஸ்லனு சொன்னேன். உடனே ஃபோன் கட் பண்ணிட்டான்” என சிடுசிடு குரலில் சொல்லிமுடித்தாள்.
இலகுவான குரலில், “இதுல இன்வால்வ் ஆகாதனு அன்னைக்கே சொன்னேன். நீதான் கேட்கலை” என்றதும், முகத்தை உம்மெமன்று வைத்துக் கொண்டாள்.
“ஒரு நியூஸ் கலெக்ட் பண்ண கட்சி ஆபிஸ்க்கு வந்தேன்னு சொல்லி, டிசியை சமாளிச்சிருக்கணும்” என்று யோசனை சொல்லிப் பார்த்தான், அதன்பின்னும் வாயை இறுக மூடிக் கொண்டிருந்தாள்.
‘கோபம் வந்திருச்சி போல’ என நினைத்து, “ஆனாலும் டிசி ரொம்ப ஸ்ட்ரிக்ட்! இல்லையா?” என்று அவளை வாய் திறக்க வைக்கும் கேள்வியைக் கேட்டான்.
“ச்சே! ச்சே! அப்படியில்லை. இந்த விஷயத்தில மட்டும்தான் இப்படி! மத்தபடி ஓகே” என முகத்தில் பிரகாசத்துடன் சொன்னவள், “ராஜாண்ணா, எங்கயாவது நிறுத்த முடியுமா? அவன்கிட்ட பேசிட்டுப் போகலாம்” என்று கேட்டாள்.
“ம்ம்” என்றவன், சற்று நேர பயணத்திற்குப் பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தினான். பின், “பேசிட்டுக் கூப்பிடு. நான் வெளிய நிக்கிறேன்” என்று இறங்கிக் கொண்டான்.
அவன் போனதும்… மாறனுக்கு மீண்டும் அழைத்து, “மாறா” என உரிமையாக அழைத்ததும், “இப்ப எங்கே இருக்கிற?” என்ற கேள்வியோடே ஆரம்பித்தான்.
“கட்சி ஆபிஸ்ல இல்லை!! அது போதும்ல உனக்கு?” என்று கோபத்துடன் சொன்னாள்.
“சரி விடு” என்றவன், “நீ ஏன் அங்க போன? உன் அண்ணனுக்காகவா? ஸ்கூல் பையன் மாதிரி இன்னைக்கும் கட்சி ஆபிஸ் போக மாட்டேன்னு சொன்னானா?” என்று கேலியாகக் கேட்டான்.
“இப்படிப் பேசாத மாறா! அவங்களைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? இந்த வயசில ஐடி விங் செக்ரட்டரி தெரியுமா?” என்று பெருமையாகச் சொன்னாள்.
“ஐடி விங் செக்ரட்டரி அவ்ளோதான். அவன் ஏதோ ஐடி வேர்ல்ட்கே கிங் மாதிரி பில்ட்அப் கொடுக்காத” என்று, தங்கையை விட அண்ணனை வம்பிழுப்பதில் அலாதி ஆனந்தம் போன்ற குரலில் பேசினான்.
“நீ இப்படியே பேசிக்கிட்டு இரு! நான் ஃபோன் கட் பண்றேன்” என்றதும், “சுடர்! சுடர்! கட் பண்ணிடாத ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.
அழைப்பிலே அவள் இருந்தாலும் அமைதியாக இருந்ததால், “சரிம்மா! இனி என் மச்சானைப் பத்தி ஒரு வார்த்தை பேசலை. போதுமா சுடர்?” என அவள் வசத்திற்கு வந்தான்.
அப்படிச் சொன்னபிறகும் அவள் பேசாமல் இருந்ததால், ‘சரி டாப்பிக் சேஞ் பண்ணலாம்’ என நினைத்தவன், “சாப்டாச்சா சுடர்?” என்று கேட்டான்.
“ஏன், சாப்பிடலைன்னு சொன்னா, கேண்டில் லைட் டின்னர் அரேஞ் பண்ணப் போறியா??” என்று அவனை வார ஆரம்பித்தாள்.
‘அய்யயோ! அவ அண்ணனைப் பேசினதுக்கு, என்னை பேசுவாளே!! என்ன செய்ய?’ என்று யோசித்ததால் அமைதியாக இருந்தான்.
மீண்டும் அவளே, “சொல்லுங்க கலெக்டரே! என்ன பண்றீங்க?” என்று கேட்க, ‘நார்மலா பேச ஆரம்பிச்சிட்டாளா? இல்லயா?’ என்ற குழப்பத்தில், “மார்னிங் டைம் கிடைக்கலை சுடர். அதான் இப்ப ஜிம் ஒர்க்கவுட் பண்றேன்” என்று உண்மையைச் சொன்னான்.
“ஏன் நல்ல கலெக்டர்ன்னு சொன்னா போதாதா? நல்லா இருக்கிற கலெக்டர்-ன்னு சொல்லனுமா?” என்று மீண்டும் வாரினாள்.
“அப்பவே உன் அண்ணன் பத்திப் பேச மாட்டேன்னு சொல்லிட்டேன். ஸோ நீயும்…” என்று கட்டளை போல் சொன்னதும், “ஸோ நீயும்?” என அதையே சுடர் தோரணையாகக் கேட்டதும், “ஒழுங்கா பேசேன் சுடர்” என்று விருப்பத்துடன் வேண்டினான்.
சிரித்தபடி, “அதெல்லாம் விடு மாறா! இன்னைக்கு, ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் நம்ம மீட் பண்ணதை நினைச்சிப் பார்த்தேன்” என்கையில் அதுவரை கலாய்த்துக் கொண்டிருந்தவள் குரல் காதலாக மாறியிருந்தது.
“ஓ! Very funny இல்லையா?”
சிரித்த முகம் அப்படியே சுருங்கிப் போக, “அதுல என்ன funny-யா இருக்கு?” என்று கேட்டாள்.
“நீ தூங்கி எழுந்திரிச்சி உட்கார்ந்திருந்தது அது funny-யாத்தான் இருந்தது”
“அன்னைக்கு அப்படிப் பார்த்திக்கிட்டு நின்ன, இன்னைக்கு இப்படிச் சொல்ற?”
“இப்ப கூட நீ பக்கத்தில இருந்தா, அப்படித்தான் பார்ப்பேன்” என்று காதலன் குரலில் சொல்ல, அந்தக் குரலின் மடியில் சுகமாய் தலைசாய்த்துக் கொண்டு, சுடர் மௌனமாக இருந்தாள்.
“ஹே சுடர்! என்ன பிளெஸ்ஸிங்கா?” என்று கேட்க, “இரு பார்த்துச் சொல்றேன்” என கார் கண்ணாடியைப் பார்க்க எம்பி வரப்பார்த்தாள்.
உடனே, “அது தேவையேயில்லை. நானே சொல்வேன். அப்படியெல்லாம் எதும் இருக்காது” என்று உறுதியாகச் சொன்னான்.
“எப்படிச் சொல்ற?”
“ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறப்பவே வரலை. இப்போ எப்படி வரும்?”
சிரித்துக் கொண்டே, “அதுவும் சரிதான்” என்று சாதாரணமாகச் சொன்னதும், அவனும் சிரித்துக் கொண்டான்.
பின் சில நொடிகள் அமைதி நிலவியது. அது முடிந்ததும், “மாறா” என்று கடகடவென அவன் உயிரை உருட்டும் குரலில் அழைத்தாள்.
அதை உணர்ந்து சிலிர்த்துக் கொண்டே, “சொல்லு சுடர் என்ன வேணும்?” என்று புரிந்து கேட்டான்.
“மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு மாறா. பார்க்கணும் போல இருக்கு” என்று ஆசை, ஏக்கம் கலந்த ஒரு குரலில் கேட்டாள்.
“ஓகே… டைம் டேட் சிச்சுவேஷன் பார்த்துட்டு சொல்றேன். கண்டிப்பா மீட் பண்ணலாம். சரியா?” என்று காதலையும் காதலியையும் வழிநடத்தும் குரலில் சொன்னான்.
“ம்ம்! ராஜாண்ணா வெயிட் பண்றாங்க. ஸோ நாளைக்குப் பேசலாம்”
“சரி” என்றவன், அவள் திரும்பச் சொல்ல மாட்டாள் என்று தெரிந்திருந்தும்,
“விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.
பேசிவிட்டு, கைப்பேசியை வைத்த மாறனுக்கு முதல் சந்திப்பைப் பற்றிச் சுடர் பேசியது இரண்டாவது சந்திப்பு எங்கே, எப்படி நடந்தது? என்று நினைத்துப் பார்க்க வைத்தது.
காதல் ஓவியம் அத்தியாயம் – 2
முதல் சந்திப்பிற்கு அடுத்த நாள்!
கல்லூரி முடிந்திருந்ததால் மாணவர்கள் அதிகம் இல்லாத மாலை நேரத்தின் அமைதியில் கல்லூரி வளாகம் இருந்தது.
தினமும் வந்து போய் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கிளம்பிச் சென்றிருந்தார்கள். ஒருசில மாணவர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலும், சிற்றுண்டிச் சாலையிலும் நின்று விடுதி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
ஏதோதோ எண்ணங்களுடன் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த சுடரின் கண்கள், எதேச்சையாக நேற்று பார்த்தவனைப் பார்த்தன. கல்லூரி நிறுவனர் சிலை இருந்த மண்டபத்தின் திண்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
‘இவனுக்கு என்னோட ஐடி கார்ட திருப்பி கொடுக்கணுங்கிற ஐடியா இருக்கா? இல்லயா? ரொம்ப கூலா உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருக்கான். அது இல்லாம எனக்கு எவ்வளவு கஷ்டம்?’ என்ற எண்ணத்துடன், அவனை நோக்கி நடந்தாள்.
அவன் அருகில் வந்து சுடர் நின்றபின்பும், புத்தகத்திலே அவனது முழுகவனம் இருந்தது. ‘இப்படிப் படிக்கிறானே! என்ன செய்ய?’ என்று தெரியாமல், அவன் பக்கத்தில் கிடந்த புத்தகங்கள், ‘காலேஜ் பேக்’, அவன் அடையாள அட்டை என ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே நின்றாள்.
இன்னும் அவன் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை என்றதும், அவன் தன்னைப் பார்க்க வேண்டுமென தொண்டையைச் செருமினாள்.
அந்தச் சத்தத்தில்… புத்தகத்தின் பக்கங்களில் இருந்தவன் கவனம் கலைந்து, நிமிர்ந்து பார்த்தான். நின்றிருந்தவளைப் பார்த்தவன் முகத்தில் சட்டென்று ஒரு முறுவல் வந்தது.
‘இப்பவாவது பார்த்தானே!’ என்று சுடரும் லேசாக முறுவலிக்கும் பொழுதே, ‘ஒரு நிமிஷம்’ என்று சைகையில் சொன்னவன், தன் ‘காலேஜ் பேக்’-லிருந்து சுடரின் அடையாள அட்டையை எடுத்து நீட்டினான்.
‘கேட்காமலே கொடுத்திட்ட’ என்று மெச்சுவது போல் தன் முறுவலை சற்றே விரிவுபடுத்தி, அதை வாங்கிக் கொண்டாள்.
அதன்பின், ‘என்ன பேச?’ என்ற தயக்கத்தில் மீண்டும் குனிந்து கொண்டான்.
ஆனால், ‘ஏதாவது பேச வேண்டும்?’ என்ற ஆர்வத்தில், அவள் அந்தத் திண்டில் அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததை உணர்ந்ததும், ‘பெயரைக் கேட்பாள். அப்படியே பேச்சை ஆரம்பிக்க வேண்டும்’ என்று உள்ளுக்குள் திட்டமிட்டான்.
ஆனால் சுடரோ ஏதும் பேசாமல், இருவருக்கும் இடையே கிடந்த அவனது புத்தகங்களை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் இருப்பவளை ஓர விழிகளால் பார்த்தபடியே, அவனும் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
சட்டென புத்தகத்தை வைத்துவிட்டு, அவன் அடையாள அட்டையை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். இக்கணம், நன்றாகத் திரும்பி அவளைப் பார்த்தான்.
அவன் பார்க்கிறான் என உணர்ந்ததும், அடையாள அட்டையில் எழுதியிருந்த
‘யாழ்மாறன்’ என்ற அவனுடைய பெயரை ஓசை வராமல் உதட்டை மட்டும் அசைத்து வாசித்தாள், ‘ஓவியச்சுடர்’.
அவளின் உதட்டசைவு, அவனை அசைத்துப் பார்த்தது. அவள் உதடுகளுக்கு இடையே உச்சரிக்கப்பட்ட அவன் பெயர், அவனது உள்ளத்தை நச்சரிக்கத் தொடங்கியது.
அடையாள அட்டையைக் கீழே வைக்காமல், அவனிடம் நீட்டினாள். அவன் வாங்க வருகையில், கையைப் பின்னோக்கி எடுத்து, அவனை ஏமாற்றினாள்.
‘அட!’ என்பது போல் அவன் அவளைப் பார்த்ததும், கண்களால் சிரித்தாள். அவனும் புன்னைகைத்துக் கொண்டான்.
தயக்கங்கள் குறைந்து, சுடர் ஏதோ பேச வருகையில், ‘சுடர்! இங்கே என்ன பண்ற?’ என்றொரு தோழியின் குரல் வந்தது. உடனே அவனது அடையாள அட்டையைப் போட்டுவிட்டு, திண்டிலிருந்து குதித்து ஓடப் பார்த்தாள்.
சட்டென, ‘சொல்லாமல் போகிறோமே’ என்று நியாபகம் வந்ததும், திரும்பிப் பார்த்தாள். அவனும் ‘பேசாமல் போகிறாயே?’ என்பது போல் பார்த்தான்
அதற்குள், ‘சுடர் வா’ என்று மீண்டுமொரு முறை அழைப்பு வந்தது.
புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தவனை, புரட்டிப் போடும் வண்ணம், ‘பிரண்ட்ஸ்! போகணும்?’ எனக் கண்களால் பேசி, சைகையால் ‘பை’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
அந்தச் சந்திப்பின் முடிவில் இருவருக்குள்ளும் எழுந்த ஈர்ப்பு இன்னும் அதிகமானது.
யாழோவியம் அத்தியாயம் – 3 தொடர்கிறது…
நிகழ்கணத்திற்கு வந்தவன், சுடர் சொன்னது போல் ‘யாழ்மாறன்’ என்று சொல்லிப் பார்த்தான்.
காதலால் தன்னை புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பவளை நினைத்து, இன்று தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கப் போவது உறுதி என்று சிரித்துக் கொண்டே உடற்பயிற்சியில் ஈடுபட்டான்.
சற்று நேரத்தில், “மாறன்” என்று அறையின் வெளியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது.
உள்ளிருந்தே, “வர்றேன்ம்மா” என்று சொல்லி கதவைத் திறந்ததும், “இன்னும் ஒர்க் அவுட் முடியலையா? இவ்வளவு நேரம் என்ன பண்ண?!” என்று அவனது அம்மா திலோ கேட்டார்.
தன் காதல் பற்றி வீட்டில் தெரியாததால், “சாரி சாரிம்மா! பைவ் மினிட்ஸ் கொடுங்க. வந்திடுறேன்” என்று சமாளிக்க பார்த்தான்.
“எதுக்கு இவ்வளவு நேரம் ஒர்க் அவுட்? சாப்பிட வேண்டாமா? பசிக்காதா?” என்று அலுத்துக் கொண்டே கேட்டவர், “தியாகு! இவனைப் பாருங்க” என்று கணவரிடம் முறையிட்டார்.
“ப்பா! பைவ் மினிட்ஸ்தான். கொஞ்சம் அம்மாகிட்ட சொல்லுங்களேன்” என்று அவனும் அப்பாவைத் துணைக்கு அழைத்தான்.
இன்னும் சமாதானமாகாமல் நிற்கும் மனைவியைப் பார்த்த தியாகு, “திலோ இங்கே வா” என்று அழைத்ததும், ‘இனி அப்பா பார்த்துக் கொள்வார்’ என்ற எண்ணத்தில், மாறன் மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டான்.
தியாகுவை நோக்கிச் சென்ற திலோ, “ஹி…” என தொடங்கும் போதே, “ஒர்க் டென்சன் இருக்கும். ரிலாக்ஸ் ஆகிட்டு வருவான். அதுவரைக்கும் நாம பேசிக்கிட்டு இருக்கலாம்” என்றதும், கணவர் அருகில் திலோ அமர்ந்தார்.
இதுதான் மாறனின் தாயார் திலோத்தமா. கணவர் தியாகுவால் திலோ என்று அழைக்கப்படுபவர். பூச்செண்டு விற்பனை தொழில் செய்து வருகிறார்.
திலோவிற்கு தியாகுமீது அளவுகடந்த அன்பு உண்டு. தியாகுவைச் சார்ந்தே வாழ்ந்து பழகியவர். தியாகுமீது அவ்வளவு காதல். தியாகுவை அவருக்கு அவ்வளவு பிடிக்கும். ‘தான், மகன், கணவர்’ என்ற உலகத்தில் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டு வருகிறார்.
அடுத்து மாறனின் தந்தை தியாகு. துணை காவல் பொது ஆய்வாளர், காவல் ஆணையர், குற்றப்பிரிவு துணை ஆணையர் என சில மாநிலங்களில் பணி புரிந்திருக்கிறார். கடைசியாக ஜார்கண்ட் மாநில காவல்துறை தலைமை இயக்குனராக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.
சில விசாரணை ஆணையக் குழுவில் உறுப்பினராக இருந்து பணியாற்றிய அனுபவமும் உண்டு. மகனின் கல்வித்தகுதி, அவனது ஆட்சியர் பணி, அதில் அவன் செயல்பாடுகள் குறித்து மிகவும் பெருமைபட்டுக் கொள்வார்.
சற்று நேரம் திலோவும் தியாகுவும் பேசிக் கொண்டிருக்கும் போதே, மாறன் வந்து விட்டான். அவர்களுடன் சேர்ந்து பேசியபடியே இரவு உணவையும் எடுத்து முடித்தான்.
********************
லிங்கம் வீடு
வீட்டு வளாகத்திற்குள் ராஜாவின் கார் வந்து, நுழைவாயில் முன்னே இருந்த இடத்தில் நின்றது. சுடர் நன்றாகத் தூங்கியிருந்தாள்.
“சுடர் வீடு வந்திருச்சு. எந்திரி” என்று ராஜா எழுப்பியதும், சரியாகக் கூட கண்களைத் திறக்காமல் எழுந்தாள். அதே கணத்தில், கார் சத்தம் கேட்டு லதா வெளியே வந்தார்.
நுழைவாயில் படிக்கட்டுகளில் இறங்கியபடி, “வா ராஜா! நீ வருவேன்னுதான் தூங்காம இருந்தேன்” என்று ஓட்டுனர் இருக்கை சன்னலருகே வந்து நின்றார்.
எதும் பேசாமல் இருந்தான். அவனை முறைத்துப் பார்த்தபடியே சுடர் இறங்கி, அவள் அம்மா அருகே வந்து நின்றாள்.
“ராஜா சாப்பிட்டுப் போகலாம்ல?” என்று லதா கேட்டதற்கு, “வெளியவே சாப்பிட்டோம்” என யாருக்கோ சொல்வது போல் சொன்னான்.
“சாப்பிட்டாச்சா?” என ஏமாற்றத்துடன் சொன்னவர், “சுடரை விட வருவேன்னு இவ அப்பா சொன்னாரு. அதான் உனக்கும் சேர்த்து சமைச்சி வச்சிருந்தேன்” என்றார்.
லதாவிற்குப் பதில் சொல்லாமல், “லேட்டாயிடுச்சி…” என ராஜா ஆரம்பிக்கும் போதே, “இது என்ன பழக்கம் ராஜாண்ணா?” என்று சுடர் அதட்டிட, இருவரும் அவளைத்தான் பார்த்தனர்.
“அம்மா பேசிக்கிட்டு இருக்காங்க. நீ உள்ளே இருந்தே பதில் சொல்ற!? இறங்கி நின்னுகூட பதில் சொல்ல மாட்டியா?” என்று சுடர் கேட்டதும், “ஏய் சுடர்! இதுல என்ன இருக்கு? சும்மா இரு” என்று லதா கண்டிக்கும் தொனியில் சொன்னார்.
லதா சொன்னதைப் பொருட்படுத்தாமல், சுடர் சொன்னதற்காக வேஷ்டியை சரி செய்தபடியே ராஜா காரில் இருந்து இறங்கினான்.
“அவ சொல்லறான்னு நீயும் ஏன் ராஜா?” என லதா சொன்னாலும், “அப்படியே ஒரு வாய் சாப்பிட்டுப் போயேன்” என்று கெஞ்சத்தான் செய்தார்.
“வேண்டாம்” என சொல்லி, காரில் ஏறப் போகையில், வெளியே வந்த லிங்கம்,
“தலைவரைப் பார்த்துப் பேசிட்டியா ராஜா?” என்று கேட்டார்
“ம்ம் பேசிட்டேன்”
“என்ன சொன்னாரு?”
“ஐ.டி விங் டிஸ்ட்ரிக்ட் செக்ரட்டிஸ் கூட மதுரையில மீட்டிங் இருக்கு. அதைப் பத்திதான் பேசினாரு. நாளைக்கு மதுரைக்குப் போறேன்” என விளக்கமாகச் சொன்னான்.
“சரி போயிட்டு வா” என்றதும், காரில் ஏறிக் கொண்டான். பின், “கிளம்புறேன்” என பொதுவாகச் சொன்னவன், “குட் நைட் சுடர். ரெண்டு மூணு நாளாகும் வர்றதுக்கு” என்று சொல்லிச் சென்றுவிட்டான்.
தன்னிடம் சரியாகப் பேசாமல் போகிறவனையே பார்த்த லதாவை, “வாங்க-ம்மா” என்று சுடர் அழைத்துக் கொண்டு போனாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும், “ஏன் இப்படி பண்றான்?” என்று வருத்தப்பட்ட லதா, ராஜாவிற்காக சமைத்திருந்த சமையல் வகைகளைப் பார்த்துவிட்டு, அங்கே இருந்த வேலை ஆட்களிடம், “இதெல்லாம் என்ன பண்ணணுமோ பார்த்துப் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு, அறைக்குள் சென்றார்.
லிங்கமும் சுடரும், அவர் பின்னேயே அறைக்குள் வந்திருந்தனர். எப்போதும் போல் லதா புலம்ப ஆரம்பித்திருந்தார்.
“மனசுக்குள்ளயே கஷ்டப்படுறானோ? ஆனா சின்ன வயசிலருந்து எந்தக் கஷ்டமானாலும் என்கிட்டதான சொல்லி அழுவான். இப்ப ஏன் அதைச் செய்ய மாட்டிக்கிறான்?” என்று லதா கவலைப்பட்டதும், “ம்மா! கொஞ்ச கொஞ்சமா ராஜாண்ணா சரியாகிட்டு வர்றாங்க” என்று சுடர் தேற்றினாள்.
“அப்ப ஏன் என்கூட பேச மாட்டிக்கிறான்?” என்று லதா கேட்ட கேள்விக்கு, சுடரிடம் பதில் இல்லை.
“சாப்பிடத்தான சொன்னேன். ஏன் அதைக்கூட செய்ய மாட்டிக்கிறான்?” என கண்கலங்க புலம்பியதும், “ம்மா! நிஜமாவே நானும் ராஜாண்ணாவும் வெளிய சாப்பிட்டோம்” என்றாள்.
கலங்கிய கண்களைத் துடைத்தபடியே, “அவனுக்காகச் சமைச்சிருக்கேன்னு தெரிஞ்சா… ஒரு வாயாவது சாப்பிட்டுத்தான் போவான். இப்போ ஏன் இப்படி இருக்கான்னு தெரியலை?” என்றார்.
மேலும், “கட்சி வேலைல கவனமில்லாம இருக்கானாமே? அப்பா சொன்னாரு.
நம்ம ராஜாவா இப்படி?!” என்றவருக்கு அதற்குமேல் பேச முடியவில்லை.
ஆறுதலாக அம்மா தோளில் தட்டிக் கொடுத்தபடி சுடர் லிங்கத்தைப் பார்த்து, “தலைவர் சொல்லித்தான ராஜாண்ணா நாளைக்கு மதுரைக்குப் போறாங்க. அப்புறம் என்னப்பா?” என்று அண்ணனுக்காகப் பேசினாள்.
“இது என்னைக்கோ செய்ய வேண்டிய வேலை” என்றவர், “கட்சில எல்லாரும் ராஜா ஏன் இப்படி இருக்கான்னு? என்கிட்ட வந்து கேட்கிறாங்க. எனக்கும் என்ன பதில் சொல்லன்னு தெரியலை” என்று வருத்தப்பட்டார்.
அம்மா, அப்பா இருவரின் முகத்திலும் கவலையைக் கண்டவள், “போதும். ரெண்டு பேரும் இப்படி இருக்காதீங்க. ரொம்ப லேட்டாகிடுச்சி. தூங்குங்க” என உத்தரவு போல் சொல்லி, அறையைவிட்டு வெளியே வந்தாள்.
என்னதான் அவர்களைக் கவலைப்படாமல் இருக்கச் சொன்னாலும், ‘எதற்கு ராஜாண்ணா அம்மாகூட பேச மாட்டிக்கிறாங்க?’ என்ற கேள்வி தலைக்குள் வந்து நின்று கொண்டு, அவளைக் கவலைப்படச் செய்தது.
**************
இரண்டு நாட்கள் கழித்து, லிங்கம் வீடு
சுடரின் அறை
கீழே சாப்பிடக் கிளம்பும் போது ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. யாரென்று பார்த்தாள். கல்லூரியில் இளங்கலை பயிலும் போது அவளது ஜூனியர் என்பதால், அழைப்பை ஏற்று, “சொல்லு மதி” என்றாள்.
“எப்படிக்கா இருக்கீங்க?” என சம்பிரதாய கேள்வி கேட்டு பேச்சை ஆரம்பிக்க,
“நல்லா இருக்கேன். என்ன விஷயமா ஃபோன் பண்ண?” என்றாள்.
“ஒரு ஹெல்ப் வேணும்க்கா… முடியுமா?”
“என்னென்னு சொல்லு பார்க்கிறேன்?”
“இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாம் நியூஸ் பத்தி சில டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிருக்கேன். நீங்க அதை எடிட் பண்ணித் தரணும்”
“எந்த டிஸ்ட்ரிக்ட்ல நடந்தது? ஏன்னா அரியலூர், ஈரோடு செங்கல்பட்டு-ன்னு மூணு டிஸ்ட்ரிக்ட்ல இந்த நியூஸ் வந்திருக்கு. கேஸ் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு”
“நான் சொல்றது ஈரோடு டிஸ்ட்ரிக்ட்ல. நான் கலெக்ட் பண்ண டீடெயில்ஸ் தர்றேன். அதை டுவென்ட்டி மினிட்ஸ் வர்ற மாதிரி எடிட் பண்ணனும்”
“நீ மெயில் பண்ணு. பார்க்கிறேன். பட் நானும் இந்த நியூஸ் பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிருக்கேன். ஸோ தேர்ட்டி டு போர்ட்டி மினிட்ஸ் வர்ற மாதிரி பண்ணா உனக்கு ஓகேவா?” என்றதற்கு, “பரவால்ல பண்ணுங்கக்கா” என்று மதி சம்மததித்ததும், விடைபெற்று அழைப்பைத் துண்டித்தாள்.
எதிர்காலம் பற்றித் திட்டமிடும்படி வீட்டுச் சூழல் இல்லாததால், இது போன்று கல்லூரியில் பழக்கமானவர்கள் கேட்கும் பொழுது செய்திகளைத் திருத்தி தந்து கொண்டிருக்கிறாள். பேசியதை அசைபோட்டுக் கொண்டிருக்கையில்,
“சுடர்” என்று அழைத்தபடியே லதா அறைக்குள் வந்தார்.
“ம்மா! நானே சாப்பிட கீழே வரணும்னு நினைச்சேன். நீங்க என்ன மேல வந்திருக்கீங்க?” என்று அவரை நோக்கிச் சென்றபடியே கேட்டாள்.
அதற்கு பதில் சொல்லாமல், “சுடர்… ராஜாகிட்ட எனக்காக ஒன்னு கேட்கணும். கேட்கிறியா?” என்று தயங்கியபடியே கேட்டார்.
“என்னம்மா கேட்கணும்?”
“நான் கேட்டுப் பார்த்திட்டேன்… பதில் சொல்ல மாட்டிக்கிறான்… அதான்…” என மீண்டும் தயங்கியவர், “ஏன் என்கூட… பேச மாட்டிக்கிறான்னு… கேட்கிறியா?” என்று வருத்தத்துடன் கேட்டார்.
ஒரு பெரு மூச்சு விட்டபடியே அம்மாவின் முக வாட்டத்தைப் பார்த்து, “நீங்க இதையே நினைச்சிக்கிட்டு இருக்காதீங்க” என்றவள், “சாப்ட்டீங்களா?” என்று கேட்டாள்.
அமைதியாக நின்றவரிடம், “ராஜாண்ணா மதுரை போயிருக்காங்க. அவங்க வந்தப்புறம் கேட்கலாம். இப்ப சொல்லுங்க, சாப்டாச்சா?” என்று கேட்க, அவர் ‘இல்லை’ என்று தலையசைத்ததும், “சரி. வாங்க சாப்பிடலாம்” என்று கீழே கூட்டிச் சென்றாள்.
******************
ஒருநாள் கழித்து மாலைநேரம்!
‘மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செங்கல்பட்டு’ என பதாகை வைக்கப்பட்ட நுழைவாயிலுக்குள் யாழ்மாறன் வாகனம் நுழைந்தது.
புதிதாக கட்டப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தின் திறப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றுவிட்டு வருகிறான்.
வாகன முகப்பில் பொருத்தப்பட்ட தேசியக்கொடி ஒரு பெருமித தோற்றத்தை தந்தது. வாகனத்தின் முன்புறம் சிவப்பு நிற பின்னணியில், ‘அரசு வாகனம்’ ‘மாவட்ட ஆட்சியர் & மாவட்ட நீதிபதி’ என்ற பொன்னிற எழுத்துக்கள் கூடுதல் கம்பீரத் தோற்றத்தைக் கொடுத்தது!
இது வாகனத்திற்கு மட்டுமல்ல, வாகனத்தில் வந்தவனுக்கும் சேர்த்தே!!
கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கியவன், விறுவிறுவென்று அலுவலக கட்டிடத்தில் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றான்.
அறையில் இருந்த இருக்கையின் முன்னே ஓர் கண்ணாடி மேசை இருந்தது. அதன் இடப்புறம் ஒரு கணினி வைக்கப்பட்டிருந்தது. மேசையின் வலப்புற ஓரத்தில் சிறிய அளவிலான மரத்தாலான அசோகத்தூண் இருந்தது.
மேசை நடுவில் நீள் வட்டவடிவ மரப்பலகையில் இந்திய ஆட்சிப் பணி சேவை சின்னக் கொடி, தேசியக் கொடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனருகில், ‘யாழ்மாறன் IAS’ என்று எழுதப்பட்டிருந்த பெயர் பலகை!
அறைக்குள் நுழைந்தவன் நேரத்தைப் பார்த்தபடியே வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டான். பின் சுற்றுலா தளங்களின் வளர்ச்சிக்காக மாநில அரசின் திட்டங்கள் அடங்கிய கோப்புக்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அக்கணம், அவன் உதவியாளர் காசி வந்து, “சார் கட்அவுட் வைக்கிறதுக்கு பெர்மிஸன் கேட்டு ஆளுங்க வந்திருக்காங்க” என்றதும், ‘வரச் சொல்லுங்க’ என்று சைகை செய்தான்.
சில நொடிகளில், இரு ஆளுங்கட்சி உடன்பிறப்புகள் உள்ளே நுழைந்ததும், “உட்காருங்க” என்றான்.
அவர்கள் உட்கார்ந்ததும், “சொல்லுங்க என்ன விஷயம்?” என்று கேட்டான்.
“அதான் சார், கட்அவுட் வைக்கிற விஷயமா பெர்மிஷன் வாங்கிட்டுப் போகலாம்னு வந்தோம்” என்று ஒரு படிவத்தைக் கொடுத்தனர்.
வாங்கியவன், “எந்த ஏரியா? பர்டிகுலரா எந்த ரோடுன்னு சொல்லுங்க” என்று கேட்டான்.
அவர்கள் சொன்னதும், “அது ரொம்ப சின்ன ரோடு ஆச்சே?! பத்தடிக்கு கம்மியாதான இருக்கும்” என்று யோசித்தான்.
“அமைச்சர் தொகுதிக்கு வர்றாரு. அதுக்காகத்தான் இந்த ஏற்பாடெல்லாம். ஒரு நாள்தான??” என்று கேட்டு, சலுகையை எதிர்பார்த்தனர்.
படிவத்தை அவர்களை நோக்கித் தள்ளி, “பதினாலடிக்கு மேல இருக்கணும். அப்படியே இருந்தாலும், அதுக்கும் நிறைய ரூல்ஸ் இருக்கு. இந்த ரோட்டுக்கு கண்டிப்பா பெர்மிஷன் கொடுக்க முடியாது” என்று மறுத்துவிட்டான்.
“நான் வேணா அமைச்சர் பிஏ-வ பேச சொல்லவா?” என்று அதிகாரத்தை வைத்து, அவனை சரிசெய்ய பார்த்தனர்.
கொஞ்சமும் இசைந்து கொடுக்காமல், “கேள்வி இதுதானா, யார் கேட்டாலும் பதில் ஒன்னுதான்” என்று சொல்லும் பொழுதே, வெளியில் கூக்குரல் கேட்டது.
“சார்” என்று மீண்டும் உடன்பிறப்புகள் இழுத்தபோது, “நீங்க போகலாம்” என முடித்துவிட்டான்.
‘கொஞ்சம் கூட வளைஞ்சே கொடுக்க மாட்டிக்கிறானே. கட்சி மேலிடத்துல சொல்லணும்’ என நினைத்துக் கொண்டே, ஆளுங்கட்சியின் உடன்பிறப்புகள் இடத்தைக் காலி செய்தன.
அவர்கள் சென்றாலும், வேலையில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு, வெளியிலிருந்து சத்தம் வந்ததும், “காசி!” என்று உதவியாளரை அழைத்தான்.
அழைத்த குரலுக்கு உள்ளே வந்தவர், “என்ன சார்?” என்று கேட்டு நின்றார்.
“வெளியில என்ன சத்தம்?”
“சார்! மனு கொடுக்க வந்திருக்காங்க”
“அவங்ககிட்ட இன்னைக்கு இல்லை. திங்கட்கிழமைதான்னு சொல்லி அனுப்ப வேண்டியதான? அதுக்கு எதுக்குச் சத்தம்??”
“சொன்னேன் சார். கேட்க மாட்டிக்கிறாங்க. ஒரு லேடி ரொம்ப அழறாங்க” என்றதும், எழுந்து வெளியே போனான். காசியும் பின்னயே சென்றார்.
அவன் அறையிலிருந்து வெளியே வரும் பொழுது, பாதுகாவலர்கள் அந்தப் பெண்ணிற்குப் புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
அழுதுகொண்டே இருந்த பெண் ஆட்சியரைப் பார்த்ததும், “ஐயா ஐயா!” என்று அவன் முன் வந்து நின்று கொண்டார்.
“இங்க பாருங்க! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க” என பொறுமையாக ஆரம்பித்தான். இப்பொழுது பாதுகாவலர்கள் அவன் அருகில் வந்து நின்று கொண்டனர்.
அவன் சொல்ல வருவதைக் கவனிக்காமல், “ஐயா, நீங்கதான் உதவனும்” என அழுதிட, “அவரைப் பேச விடுங்கம்மா” என காசி சொன்னதும், அந்தப் பெண் சற்று கொஞ்சம் அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சித்தார்.
“மனு கொடுக்கிறதுக்கு முன்னாடி, ஃபர்ஸ்ட் ரெஜிஸ்டர் பண்ணனும்” என்று சொல்லும் பொழுதே, “புரியலைங்க” என்றார்.
“திங்கட்கிழமை வந்து மனுவைப் பதிவு பண்ணுங்க, அதுக்கப்புறமா…” என்று விளக்கையில், “ஐயா! என் பையனைக் கொன்னுட்டாங்க” என்று சொல்லி, சுவரில் சாய்ந்து அழுது, அப்படியே சரிந்து தரையில் உட்கார்ந்துவிட்டார்.
அவர் சத்தமாக சொன்னதும், ஆட்சியர் அலுவலகத்திற்கு வேறு வேலையாக வந்தவர்கள் அங்கங்கே நின்று வேடிக்கைப் பார்த்தனர். அதைக் கண்ட மாறன், பாதுகாவலர்களைப் பார்த்தான்.
ஆட்சியரின் பார்வை புரிந்தவர்கள், வேடிக்கைப் பார்க்க நின்றவர்களை வேலையைப் பார்க்கும்படிச் சொன்னார்கள்.
அழுபவரைப் பார்த்த மாறன், “கொஞ்சம் எந்திரிங்க. என்ன செய்யணும்னு சொல்றேன்” என்று கேட்டுப் பார்த்தான். அவன் குரலைக் கேட்காத அளவிற்கு, அவர் அழுது புரண்டு கொண்டிருந்தார்.
‘என்ன செய்ய?’ என்று நின்றவனைக் கண்ட காசி, “எம்மா, அவர் பேசறார்ல! கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க” என்று சொன்னார்.
அப்பொழுதும் அரற்றிக் கொண்டிருந்தவரைப் பார்த்தவன், லேசாக அமர்ந்து, “இங்க பாருங்க, இது போலீஸ் கேஸ். மனு கொடுக்க அவசியமில்லை. நீங்க போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பளைண்ட் கொடுங்க” என்று விளக்கினான்.
பின் எழுந்து நின்று காசியிடம், “அவங்களுக்கு ஸ்டேஷன் தெரியலைனா” என சொல்லும் பொழுதே, “ஐயா… கொலை நடந்ததே போலீஸ் ஸ்டேஷன்லதான்” என்று, அந்தப் பெண்மணி கதறினார்.
மாறனுக்கு அதிர்ச்சி என்றில்லை. இருந்தாலும் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை முகம் காட்டியது. அவனுக்கு மட்டுமில்லை, கேட்டுக் கொண்டிருந்த காசி மற்றும் காவலர்களுக்கும்தான்.
இன்னும் இன்னும் அரற்றியவரை மாறனும் மற்றவர்களும் பார்க்கவும், “ஐயா இன்ஜினீரிங் முடிச்ச பையன். அநியாயமா கொன்னுட்டாங்க” என்று அந்தப் பெண்மணி ஆரம்பித்தார்.
