Kathambari Novels
கன்னியாகுமரி, சென்னை தேசிய நெடுஞ்சாலை!
இரண்டு வாகனங்கள். ஒன்று இனோவா. மற்றொன்று சஃபாரி.
முகப்பு விளக்கொளி சாலையைக் காட்ட, இரண்டு கார்களும் சீரான வேகம் மற்றும் இடைவெளியில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.
கட்சிக்காரர் வாகனமென்று பிரகடனப்படுத்தும் நோக்கில், இரண்டு காரிலும் எதிர்காற்றின் வேகத்திற்கு ஏற்ப கட்சிக்கொடி பறந்தது.
முன்னே செல்லும் இனோவாவில் இருக்கும் கட்சிக்காரரின் பெயர் ஜெகதீஷ். ஆளும் கட்சியின் பிரதிநிதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அமைச்சர் பொறுப்பிலும் இருக்கிறார்.
பின்னே வரும் சஃபாரியில் இருப்பவன் ராஜா. ஜெகதீஷின் மகன். கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர். ஓட்டுனரைத் தவிர்த்து அவனுடன் மூன்று கட்சி ஆட்களும் வருகின்றனர்.
குடும்பத்தாருடன் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்று விட்டு, ஜெகதீஷ் சென்னை திரும்புகிறார். இந்த இரவிலும் மனைவி மற்றும் மருமகளுடன் பேசிக் கொண்டே அவரது பயணம் இருந்தது.
முன்னிருக்கையில் இருந்தவர் பேசிக் கொண்டிருக்கும் போது, பின்னே அமர்ந்திருந்த அவர் மருமகள் கவிதா, தன் ஏழுமாத வயிற்றைப் பிடித்துக் கொண்டு கால்களை இப்படியும் அப்படியும் அசைத்தபடியே இருந்தாள்.
அவள் அருகிலே அமர்ந்திருந்ததால், அவளின் அசௌகரியத்தைக் கண்ட அமைச்சரின் மனைவி அனுசியா, “என்ன செய்து கவி?” என்று கேட்டார்.
“ரொம்ப நேரமா உட்கார்ந்தே வர்றதுனால கால் பிடிச்சிக்கிச்சு அனு-ம்மா” என்றதும், “முதல கால நல்லா நீட்டி உட்காரு” என்று சொல்லிக் கொண்டே, அவளது முட்டியில் நீவிவிட்டார்.
“வேணா கொஞ்ச நேரம் காரை நிறுத்தவா? இறங்கி நிக்கிறியா?” என்று ஜெகதீஷ் கேட்டார்.
“வேண்டாம்! இருட்டா இருக்குங்க. பூச்சி ஏதாவது அலைஞ்சிகிட்டு இருக்கும்” என்று அனுசியா மறுத்துவிட்டார்.
மருமகளின் அசௌகரியத்தைப் பார்த்த ஜெகதீஷ், “ஹெட் லைட் வெளிச்சம் இருக்குல? இன்னும் எவ்வளவு தூரம் போகணும், ரெண்டு நிமிஷம் இறங்கி நிக்கலாமே?” என்றார்.
அனுசியா, “சரிங்க” என்றதும், ஜெகதீஷ் கார் ஓட்டுபவனைப் பார்த்து, ‘ஓரமா நிறுத்து’ என்பது போல் சைகை செய்தார்.
உடனே காரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. முன்னே செல்லும் காரின் வேகம் குறைவதைக் கண்டதும், ‘என்னாச்சு?’ என்பது போல் ராஜா கண்கள் சுருக்கிப் பார்த்தான்.
காரை ஓட்டிக் கொண்டிருந்தவனிடம், “தினா! வண்டியை நிறுத்து” என்றதும், அடுத்த சில நொடிகளில் இரண்டு கார்களும் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
அமைச்சரின் தேவை என்னவென பார்க்க, ராஜா வந்த காரிலிருந்த இரண்டு கட்சி ஆட்கள் இறங்கி வந்து, அவர் அமர்ந்திருந்த பக்கமாக நின்றனர்.
“அட, ஒன்னுமில்லை-பா! நீங்க போங்க” என ஜெகதீஷ் சொல்ல, அங்கிருந்து நகர்ந்து, ராஜா இருக்கும் காரின் அருகே வந்தனர்.
வந்தவர்களிடம், “என்னவாம்?” என ராஜா கேட்க, “ஐயா ஒன்னும் சொல்லலை தம்பி” என்றதும், அவன் இறங்காமல் இருந்துகொண்டு, “நீ போய் என்னென்னு பாரு தினா” என்று கட்டளையிட்டான்.
அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இறங்கிச் சென்றவன், கவி இறங்கும் பக்கம் வந்து, “என்ன அண்ணி?” என்று கேட்டான்.
கட்சியில் கணவன் விசுவாசி என்பதால், “கொஞ்ச நேரம் இறங்கி நிக்கணும் தினா” என்று புன்னகைத்துக் கொண்டே சொல்ல, “சரி, பார்த்து இறங்குங்க” என அவள் இறங்க வசதியாக கதவைப் பிடித்துக் கொள்ள, சிறு சிரமத்துடன் கவி இறங்கி நின்றாள்.
இந்தச் சாலையிலும், எதிர்புறம் இருக்கும் சாலையிலும் கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் போய்க் கொண்டிருந்தன. இருட்டைக் கிழிக்கும் வேகத்தில் காற்று வேறு அடித்தது.
உள்ளிருந்தபடியே அனுசியா, “கவி இந்தப் பக்கம் வந்து நில்லு” என மைல்கல் வைக்கப்படும் சாலையின் ஓரத்தைக் காண்பிக்க, இருவருமே ஓரமாக வந்து நின்றனர். வாகனங்கள் செல்லும் வேகத்திற்கும், இரவுநேர காற்றுக்கும் உடை ‘அங்கும் இங்கும்’ பறந்தது.
இன்னும் இறங்காமல் இருந்த ராஜாவைப் பார்த்த தினா, ‘வா-ண்ணே’ என்பது போல் கையசைத்ததும், அவன் காரிலிருந்து இறங்கினான்.
கணவன் அருகில் வந்ததும், “கால் பிடிச்சிக்கிட்ட மாதிரி இருந்தது. அதான் ரெண்டெட்டு நடந்து பார்க்கலாம்னு” என இறங்கியதற்கான காரணம் கவி கூறியதும், ‘கேட்கிறேன்’ என்பது போல தலையசைத்தான்.
‘என்னாச்சு இவருக்கு? ஏன் இப்பெல்லாம் இப்படி இருக்கிறார்?’ என்று கேள்வி கவிதாவிற்குள் வந்தது.
அதே கேள்விதான் தினாவுக்கும்! முன்பு மாதிரி சுறுசுறுப்பாக, கலகலப்புடன் ராஜா இல்லை என்றே தோன்றியது. எனினும் “டீ வாங்கிட்டு வரவாண்ணே? பக்கத்தில ஹோட்டல் இருக்கு” என கேட்டான்.
‘வேணுமா?’ என்பது போல் ராஜா கவியைப் பார்க்க, ‘வேணும்’ என்று அவள் தலையாட்ட, “இருங்க அண்ணி வர்றேன்” என்று தினா வேகமாக சென்றான்.
அவன் போனதும் கணவன் கைப்பிடித்து சிறிது தூரம் நடந்தாள். கால்களில் ஏற்பட்டிருந்த பிடிப்புகள் நீங்கி, வயிற்றுச் சுமையைச் சற்று இலகுவாக உணர்ந்தாள்.
“இப்ப எப்படி இருக்கு?” என ராஜா கேட்டதற்கு, “பரவால்ல” என்றவள், “ஏன் இப்படி டல்லா இருக்கீங்க?” என்று கேட்டாள்.
‘ஒன்றுமில்லை’ என்கின்ற அர்த்தங்களுடன் தலையசைத்தான்.
கணவன் கொஞ்ச நாட்களாக எதையோ யோசித்துக் கொண்டே இருப்பது போல் தெரிந்ததால், “என்னாச்சு உங்களுக்கு?” என்று மீண்டும் கேட்டதற்கு, “ஒன்னுமில்லை கவி” என்று வாய் வார்த்தையாகச் சொன்னான்.
“அத்தை ஏதாவது சொன்னாங்களா?”
முகப்பு விளக்கொளியில் தெரிந்த மனைவியின் கவலை முகத்தைப் பார்த்து, “அம்மா என்ன சொல்லப் போறாங்க?” என்று கேள்வியிலே பதிலளித்தான்.
இங்கே ராஜா ‘அம்மா’ என்று சொல்வது, கவி ‘அத்தை’ என்று விளிப்பது லதா என்பவரை. அனுசியாதான் ராஜாவைப் பெற்றவர். லதா அவனை வளர்த்தவர்.
அனுசியாவிற்கு கணவரைப் போன்று அரசியலில் ஆர்வம், ஆசை அதிக அளவில் இருந்தது. எனவே ராஜாவிற்கு இரண்டு வயது ஆகும் போது, அவனை ஜெகதீஷின் நண்பர் மனைவி லதாவைப் பார்க்கச் சொல்லிவிட்டு, கட்சிக் கூட்டம், கட்சி அலுவலகம் என்று செல்ல ஆரம்பித்தார்.
முதலில் நாளின் சில மணி நேரங்கள் மட்டும் ராஜாவைக் கவனித்த லதா, அனுசியா தீவிர அரசியலில் ஈடுபடவும், முழுநேரமும் அவனைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றார்.
அப்போது லதாவிற்கு குழந்தை பிறக்கவில்லை என்பதாலும், அவர் பார்த்துக் கொண்ட விதத்தினாலும், இருவருக்கும் இடையே அம்மா, மகன் என்ற பந்தம் உருவாகியது. ஆதலால் அவரையும் ‘அம்மா’ என்றே அழைக்க ஆரம்பித்தான்.
லதாவிற்கு மகள் பிறந்த பின்னரும், ராஜாவுடன் இருக்கும் பந்தம் அப்படியே தொடர்ந்தது. வளர வளர லதாவின் மகள் அனுசியாவை, ‘அனும்மா’ என்று அழைத்தாள். இவளின் இந்த அழைப்பினாலே, கவி அனுசியாவை ‘அனும்மா’ என்றும், லதாவை ‘அத்தை’ என்றும் அழைக்கிறாள்.
தன் அரசியல் ஆர்வங்களையெல்லாம் அனுபவங்களாக மாற்றி, இன்று சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் அனுசியா, இன்றளவும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதற்காக ராஜா மீது பாசம் இல்லையென்று சொல்லிவிட முடியாது. தாய்க்கு மகன் மீது பாசமில்லாமல் போகுமா? அதெல்லாம் உண்டு. ஆனால் அதையும் தாண்டி அரசியல் களம் அவரை ஈர்த்திருந்தது. அவரது கனவாக இருந்தது.
அந்த கனவை நனவாக்க உறுதுணையாக இருந்த லதாவை அவருக்கு நிரம்ப பிடிக்கும். ஆதலால் என்றுமே லதா, ராஜா பந்தம் அனுசியாவிற்கு நெருடலாக இருந்ததே இல்லை.
அதே போல்தான் ராஜாவும். பெற்றவர் மீது பாசம் உண்டு. அதையும் தாண்டி லதாவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். ‘இது வேணும், அது வேணும்’ என்று அவரிடம் சென்றுதான் நிற்பான். அவனுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்று லதாவிற்கு அத்துபிடி!
இந்தப் பந்தத்தினால், லதா மகள் சுடர் மீதும் ராஜாவிற்கு அளவு கடந்த பாசம் உண்டு. இவர்கள் பாசம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சுடர், ராஜாவின் கூடப் பிறக்காத தங்கை!
இதோ இப்பொழுது கூட, இறுக்கமாக இருந்தவன் முகத்தில், சுடரிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்ததும் இதமான முறுவல் வந்து ஒட்டிக் கொண்டது.
கணவனின் முக மலர்ச்சியைப் பார்த்து, “சுடரா?” என்று கேட்டதற்கு, “ம்ம்ம்” என அழைப்பை ஏற்றான். ஆனால் அவன் பேசும் முன்னே, “கொடுங்க” என வாங்கி, “சொல்லு சுடர்” என்றாள் கவிதா.
“அண்ணி நீங்களா? ராஜாண்ணா இல்லையா? அவங்ககிட்டதான் பேசணும். எங்கே இருக்காங்க? என்ன பண்றாங்க?” என்று வரிசையாகக் கேள்விகள் கேட்கப்பட்டன.
“ஏய் சுடர்! என்கூட பேசமாட்டியா?”
“அண்ணி ப்ளீஸ் ராஜாண்ணா எங்க?”
“இரு! உன் அண்ணங்கிட்ட கொடுக்கிறேன்” என்று சொல்லி, கைப்பேசியை ராஜாவிடம் கொடுத்ததும், அதை வாங்கியவன், “நீ போ” என்றான்.
“நான் உங்ககூட நிக்கிறனே” என ஆசையாகக் கேட்டதற்கு, “காத்து அடிக்குது கவி. அதான் சொல்றேன். உள்ளே போய் உட்காரு” என்றான்.
சரியென திரும்பி நடந்து இனோவா நிற்கும் இடத்திற்கு வந்தவளிடம், “அவன் என்ன அங்கயே நிக்கிறான்?” என அனுசியா கேட்க, “ஃபோன்ல பேசிக்கிட்டு இருக்காரு” என்று சொல்லி, காரினுள் ஏறி கவி அமர்ந்தாள்.
“நல்லா கால் நீட்டி உட்காரு கவி” என அனுசியா சொல்லும் போது, “அண்ணி காஃபி” என்று ஒரு பேப்பர் கப்பைக் கொண்டு வந்து தினா நீட்டினான்.
அதை வாங்கியவள், “நீங்க போங்க” என்றதும், “அண்ணனுக்கு எலெக்ஷன் டென்சன் போல அண்ணி. அதான் இப்படி இருக்கு. சீக்கிரம் சரியாயிடும்” என்று சொல்லி, காலாற நடந்து கொண்டிருந்த கட்சி ஆட்களுடன் சேர்ந்து கொண்டான்.
தினா சென்றதும் மாமியாரின் முகத்தைப் பார்த்து, “அவர் ஏன் இப்படி இருக்கிறார்னு தெரியுமா அனும்மா?” என்று கேட்டுப் பார்த்தாள்.
ராஜா, ஜெகதீஷ் போல அவரும் கட்சி வேலைகள், தேர்தல் பரப்புரைகள் என்று பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருப்பதால், ‘தெரியலையே’ என்பது போல் தலையசைத்தார்.
முன்னேயிருந்த மாமனாரிடம், “நான் கேட்டுப் பார்த்தேன் மாமா. அவர் எதும் சொல்லலை. நீங்களாவது கேளுங்களேன்” என்றதற்கு, ஏனோ ஜெகதீஷ் பதில் பேசாமல் இருந்தார்.
‘மற்றதெல்லாம் மாமா நல்லா பேசுவார். ஆனா அவரைப் பத்திக் கேட்டா மட்டும் பதில் சொல்றதில்லை’ என நினைத்துக் கொண்டவள், அதன்பின் யாரிடமும் எதுவும் கேட்காமல் இருந்து கொண்டாள்.
மனதிற்குள், ‘அத்தைகிட்ட ‘ஏதாவது சொன்னாறா-னு?’ கேட்கணும். இல்லை, ‘ஏன் இப்படி இருக்காருன்னு?’ கேட்கச் சொல்லணும்’ என முடிவெடுத்த கவி, பின்னால் திரும்பி ராஜா நிற்பதைப் பார்த்தாள்.
கார் விளக்கொளியில் கணவன் உருவம் நன்றாகத் தெரிந்தது. இந்த வயதிலே கட்சி தகவல் தொழிநுட்ப அணி செயலாளர் பதவி. கட்சியில் அவனுக்கென்று இருக்கும் சிறு செல்வாக்கு. அடிமட்ட தொண்டர்களுடனும் சகஜமாகப் பேசும் குணம். எவ்வளவு கட்சிப் பணிகள் இருந்தாலும், தனக்காக அவன் ஒதுக்கும் நேரங்கள்.
இதையெல்லாம் நினைத்துப் பார்த்ததும் நிறைவான வாழ்கை தரும் நிம்மதி கவி முகத்தில் வந்தது. ஆனால் சமீப காலமாக அவனது நடவடிக்கைளில் தெரியும் மாற்றங்கள் அவள் நிம்மதியை விரட்டியது.
எப்போதும் எதையோ யோசித்துக் கொண்டு, ‘ஏன் இப்படி இருக்கீங்க?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருப்பவனைப் புரிந்து கொள்ள முடியாமல் கவி தவித்தாள்.
இதே நேரத்தில், ராஜாவும் சுடரும் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தனர்.
“என்ன சுடர் இந்த நேரத்தில ஃபோன் பண்ணியிருக்க?”
“ஒரு பிரச்சனை ராஜாண்ணா” என்று சோகமான குரலில் சொல்ல, “என்ன? லவ்ல ஏதாவது பிரச்சனையா?” என கேட்டான்.
‘தன் காதல் பற்றி வேறு யாருக்கும் தெரிந்திடுமோ?’ என்ற பயத்தில் “ஐயோ ராஜாண்ணா! பக்கத்தில யாராவது நிக்கிறாங்களா?” என்று சிடுசிடுத்தாள்.
“யாரும் இல்லை. முதல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு?”
“அப்படியெல்லாம் இல்லை! இது வேற ராஜாண்ணா” என்று சுடரின் குரல் கைப்பேசி வழியே வந்து கொண்டிருந்த சமயத்தில், ராஜா நின்ற இடத்தில் ‘டமால்’ என்றொரு சத்தம்!
அது கேட்டவுடனே கிரீச்சென்ற ஒலியுடன் வாகனங்கள் நிறுத்தும் சத்தமும் கேட்டது. சத்தம் கேட்ட அதிர்ச்சியில் ராஜா கைப்பேசி நழுவியது. ‘என்ன?’ என திரும்பிப் பார்த்தவன், கண் இமை அசையாமல் அப்படியே நின்றான்.
இதற்கிடையே நடந்த கோரத்தைப் பார்த்த தினாவிற்கு வாய் திறந்து பேச முடியவில்லை. மேலும் உடல் தள்ளாடியது. அவனால் நடந்ததை ஜீரணிக்கவே இயவில்லை. தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போலிருந்தது. கண்கலங்க நின்றான்.
சட்டென அவனுக்கு ராஜா ஞாபகம் வந்ததும், “அண்ணே, இப்படி ஆயிடுச்சே?” என்று துடிதுடித்தபடி அவனருகில் வந்து, அவனை ஆறுதலாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
ராஜாவை வலுவாகத் தன் கைக்குள் நிறுத்திக் கொண்டு, “இங்கயே நில்லு-ண்ணே. இப்படியே நில்லு. அங்க இப்ப போக முடியாது” என்று தினா திக்கித் திணறிச் சொன்னான்.
இன்னும் நடந்ததையே கருவிழி நகராமல் பார்த்த ராஜாவின் தாடையை அழுத்திப் பிடித்துத் திருப்பி, “அங்கேயே பார்க்காத-ண்ணே. கஷ்டப்படுவ” என்று சொல்லுகையிலே தினா கண்ணீர்விட்டு அழுதான்.
இதற்குள் நடந்த விபத்தை வேடிக்கைப் பார்க்கவென்று, நெடுஞ்சாலையில் சென்ற சில வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆட்களும் கூடியிருந்தனர். இருள் நேரத்தை வெளிச்சமாக்கும் வண்ணம் நிறுத்தப்பட்ட வாகனங்களின் விளக்கொளிகள் இருந்தன.
கட்சி ஆட்கள் காவல் துறை, 108, கட்சி மேலிடம் என்று நடந்த விபத்தைப் பற்றிய விபரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
விபத்திற்குக் காரணமான டேங்கர் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து, ஓட்டுநர் சாலையின் புதருக்குள் தூக்கி எறியப்பட்டிருந்தார். அந்த இருளிலும், ஒரு சிலர் துணிந்து புதருக்குள் இறங்கி, கைப்பேசி டார்ச் துணைகொண்டு அவனைத் தேடிக் கொண்டிருந்தனர்.
சிலர் விபத்து நடந்திருந்த இடத்தைக் காணொளிக் காட்சிகளாக மாற்றிக் கொண்டிருந்தனர்.
காணொளி காட்சி??
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பெரிய டேங்கர் லாரி, சாலை ஓரத்தில் நின்ற அமைச்சர் குடும்பம் இருந்த வாகனம் மீது மோதியிருந்தது. இதனால் வந்ததே அந்த ‘டமால்’ என்ற சத்தம்.
மோதிய வேகத்தில் லாரியின் முன்பாகம் முழுதும் இனோவாவின் மேல் ஏறி, பின்னால் நின்ற சஃபாரியையும் இடித்து தள்ளியிருந்தது. இதில் அடையாளம் தெரியாத அளவிற்கு இனோவா நசுங்கிப் போயிருந்தது.
இந்த விபத்து நடந்த அதிர்ச்சியினால் சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் கிரீச்சென்ற என்ற ஒலியுடன் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.
மூன்று வாகனங்களில் ஏதோ ஒன்றிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது.
தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் இருந்ததால் ஆட்கள் நெருங்கவே பயந்தனர்.
லாரியின் ராட்சச டயர்களுக்கு அடியில் சிக்கி இருக்கும் இனோவாவில் எந்தப் பாகமும் இனிமேல் உபயோகப்படுத்த முடியாது என்பது போல உருக்குலைந்திருந்தது.
காரில் இருந்த அமைச்சர் ஜெகதீஷ், அனுசியா, ராஜாவின் மனைவி கவி மற்றும் ஓட்டுநர் பையன் அனைவர்க்கும் அதே நிலைமைதான்.
ஒரே நொடியில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
என்னவொன்று பின்னால் நின்ற சஃபாரியில் இருந்தவர்கள் வெளியில் இருந்ததால் பிழைத்துக் கொண்டார்கள். இல்லாவிடில் அவர்களின் கதியும் இதேதான்.
சற்று நேரத்திற்குப் பின்…
காவலர்கள், தீயணைப்பு துறையினர் வந்திருந்தார்கள். ஆம்புலன்ஸ் ஒன்று நின்றது. லாரியை அகற்றி சடலங்களை மீட்கும் பணி நடந்தது. ஆட்கள் கூட்டம் குறைந்திருந்தது. நிறுத்தப்பட்ட வாகனங்கள் சென்றிருந்தன.
இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் பொழுது, சாலையின் ஓரத்தில் இருந்த மைல்கல் மேல் ராஜா சாய்ந்து அமர்ந்திருந்தான். அழலாம் செய்யவில்லை. ஆனால் அழுத்தமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
*********
அடுத்த நாள் காலை, அரசு மருத்துவமனை
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுனர் தப்பிச் சென்று விட்டதால், அவரைத் தேடும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
பிரதேப் பரிசோதனைக்காக, விபத்து நடந்த இடத்திலிருந்து உடல்கள் இங்கே எடுத்து வரப்பட்டிருக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் அங்கங்கே கூட்டம் கூட்டமாக கட்சி ஆட்கள் நின்றனர்.
நடைக்கூடத்தில் கிடந்த நாற்காலி ஒன்றில் ராஜா அமர்ந்திருந்தான். இன்னும் முகத்தில் அழுத்தம் அப்படியே இருந்தது. யாரிடமும் ஒரு வார்த்தைப் பேசவில்லை. யாரையும் அருகில் வரவிடவில்லை.
அதே நடைக்கூடத்தில் ஒரு ஓரத்தில் நண்பன் இழப்பைத் தாங்க முடியாமல் அமைச்சர் லிங்கம் இடிந்து போய் நின்றிருந்தார். அவரும் ஆளுங்கட்சியின் அமைச்சர்தான்.
இருவரும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்து, படிப்படியாக முன்னேறி இன்று ஆளுங்கட்சியின் அமைச்சர் என்ற பதவியை அடைந்தவர்கள். கட்சியில் இருப்பவர்கள் பொறாமை படும் வண்ணம் இருவரின் நட்பு இருக்கும்.
ஜெகதீஷை இழந்த சோகத்தில் மனிதர் ஓய்ந்து போயிருந்தார். சில சமயங்களில் தன்னை மறந்து, பொது இடம் என்று கூட பார்க்காமல் லிங்கம் கண்களில் நீர் கோர்த்தது.
அது போன்ற நேரங்களிலெல்லாம், அவர் மனைவி லதா-தான் ஆறுதலாகக் கைப்பிடித்துக் கொண்டார். லதாவும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்திக் கொண்டுதான் இருந்தார்.
லிங்கத்தை திருமணம் செய்து வந்ததிலிருந்து அனுசியா, ஜெகதீஷ் தம்பதியருடன் ஒரு குடும்ப உறவாய் வாழ்ந்து வந்தவர். இரத்த சம்பந்த உறவை இழந்தால் ஒருவரது மனம் எப்படி நிலைகொள்ளாமல் துடிக்குமோ, அதே நிலைதான் லதாவினுடையதும்!
அதுமட்டுமில்லாமல் ராஜா, அவர் கைகளில் வளர்ந்த பிள்ளை. ‘அவனுக்கு இப்படி ஒரு கஷ்டம்’ என்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
லதாவின் தேர்வுதான் கவி. ராஜாவிற்குக் கவியை அவ்வளவு பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும். அவள் இழப்பை எப்படி ஜீரணிக்கப் போகிறான்? என்று கவலையில் அவரின் கண்ணீர் இன்னும் அதிகமானது.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ராஜாவைப் பார்த்தார். சுடர்தான் அவன் அருகில் இருந்தாள். அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
கடுங்கவலையில் கண்கள் கலங்கியபடி, ‘இப்படி இருக்காத, அழுதிடு’ என சுடரும், தினாவும் அவனிடம் சொல்லிப் பார்த்தனர். இருந்தும் அழுத்தமாக இருந்தான்.
அக்கணம்… உடற்கூறு முடிவடைந்த நிலையில், “இதுல ஒரு சைன் போடுங்க” என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனை நபர் ஒருவர் வந்து நின்றார்.
அவன் கையெழுத்து போட்டுக் கொடுத்ததும் மருத்துவமனை நடைமுறைகள் எல்லாம் முடிவடைந்து, இறந்தவர்கள் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதன்பிறகான அந்த தினத்தை… அந்தக் குடும்பமும், கட்சி உறுப்பினர்களும் கண்ணீர் சிந்தி கவலைப்பட்டே கடந்து வந்தார்கள்.
****************
லிங்கம் வீடு
பதினைந்து நாட்கள் கழித்து…
லிங்கத்தின் ஆதரவாளர்கள் வீட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார்கள். நடந்த நிகழ்வு, கட்சியின் நிலை, தேர்தல் நிலவரம் என எல்லவாற்றைப் பற்றியும் பேச்சுகள் இருந்தன.
கட்சியில் லிங்கத்தின் செல்வாக்கு அதிகம் என்பதால், அவர் வீடு எப்போதும் இப்படித்தான் இருக்கும். அன்றைய விபத்திற்குப் பிறகு ஒரே ஒரு முறை கட்சி அலுவலகத்திற்குச் சென்று வந்தார். அதன் பிறகு போகவேயில்லை.
ஆனால் அந்த ‘ஒருமுறை’கூட ராஜா செல்லவில்லை. இந்த பதினைந்து நாளில் கட்சித் தலைவர், அமைச்சர்கள், தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினர்கள்… இவர்களில் யார் வந்து ஆறுதலாகப் பேசினாலும், விசாரித்தாலும் ‘வாய் திறப்பேனா?’ என்றிருந்தான்.
இப்போதும் லிங்கத்தையும் ராஜாவையும் பார்த்துப் பேசி தேர்தல் பணிகளில் ஈடுபட சொல்ல, கட்சித் தலைவர் அமைச்சர் ராகவனை அனுப்பியிருக்கிறார். இவர் கட்சியில் லிங்கத்திற்கு அடுத்தபடியாக செல்வாக்கு நிறைந்தவர்.
அவர், வரவேற்பறையில் இருந்து லிங்கத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். தலைவர் சொல்லி அனுப்பியதால், ராகவன் பேச்சு தேர்தலைச் சுற்றியே இருந்தது. ஆனால் அவர் என்ன பேசினாலும், லிங்கத்திடமிருந்து பெரிதாக எதிர்பேச்சுகள் வரவில்லை.
ஜெகதீஷ் பற்றி ராகவன் பேசினதும், விரக்தியின் விளிம்பில் நிற்பது போன்ற உடல்மொழியுடன், “என்ன செஞ்சாலும் ஜெகா திரும்பி வரமாட்டானே!?” என வருத்தத்துடன் லிங்கம் பேசினார்.
“நீங்களே இப்படி இருந்தா எப்படி லிங்கம்? நீங்க இப்படி இருக்கிறது கட்சிக்கு நல்லதில்லை-ன்னு தலைவர் நினைக்கிறாரு” என ராகவன் வந்த வேலையில் குறியாக இருந்தார்.
கலங்கியிருந்த கண்களைத் துடைத்து, “புரியுது. நாளையிலிருந்து என்னோட எலெக்ஷன் ஒர்க்க கன்டினியூ பண்றேன்” என்றார் லிங்கம்.
“நல்லது லிங்கம்” என்ற ராகவன் குரலில், தலைவர் சொன்ன வேலையைச் செய்தாயிற்று என்று நிம்மதி தெரிந்தது.
அடுத்து வரவேற்பறையின் மற்றொரு பகுதியிலிருந்த சாய்வு இருக்கையில் கண்மூடிப் படுத்திருந்த ராஜாவைப் பார்த்தார். பின் தன் அருகில் நின்ற கட்சி ஆட்களைப் பார்த்தார்.
அவர் பார்வையின் அர்த்தம் புரிந்து, “இன்னும் ராஜா அண்ணே யாரையும் பக்கத்தில சேர்க்கவோ, பேசவோ மாட்டிக்குது” என்று பதில் சொல்லப்பட்டது.
‘என்ன செய்ய இவன் சரியாக?’ என்று ராகவன் கட்சிக்காக யோசிக்கையில்,
“ராஜாண்ணா” என அழைத்தபடி, அவன் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கிச் சுடர் சென்றாள்.
அவள் அழைப்பைக் கேட்டு கண்கள் திறந்து பார்த்தவன், “என்ன சுடர்?” என்று சோர்வாகக் கேட்டதும், “முதல எந்திரி ராஜாண்ணா!” என்றாள்.
ஒரு சலிப்புடன் அவன் எழுந்து அமரவும், “ஷர்ட் கசங்கியிருக்கு. மாத்திக்கோ” என்று சட்டையைக் கொடுத்ததும், குனிந்து பார்த்தான். படுத்தே கிடப்பதால் சட்டையில் சுருக்கங்கள் அதிகமாகத்தான் தெரிந்தன. இருந்தும், ‘இப்படியே இருக்கேனே’ என்பது போன்று சுடரைப் பார்த்தான்.
எப்பொழுதும் சுறுசுறுப்பாக வலம் வருபவன் இப்படிச் சோம்பிப் கிடப்பதைப் பொறுக்க முடியாத லதா, “மாத்திக்கோ ராஜா” என்று சாய்வு இருக்கையின் பின்னே நின்று கொண்டு சொன்னார்.
அப்பொழுதும் சட்டையை வாங்காமல் இருந்தவனிடம், “ராஜாண்ணா” என்று அன்பின் குரலில் சுடர் அதட்டியதும், சட்டையை வாங்கி அங்கேயே மாற்றிக் கொண்டான்.
அதன்பின் சற்றுத் தள்ளி நின்ற வேலைக்காரப் பெண்மணியைப் பார்த்து, ‘வாங்க’ என்பது போல் சுடர் தலையசைத்தாள். அவர் வரவும், அவரிடமிருந்த காஃபி கோப்பையை வாங்கி ராஜாவிடம் நீட்டினாள்.
எதையும் செய்ய மனமில்லாதவன், “வேண்டாம் சுடர். பசிக்கலை” என்று சொன்ன போதிலும், வற்புறுத்தி கோப்பையை அவன் கைகளில் திணித்தாள்.
மறுத்திருந்தாலும், காஃபி கோப்பையைக் கீழே வைக்காமல் அவன் குடிக்க ஆரம்பித்ததும், “குடிச்சிக்கிட்டே இரு. வந்திடுறேன்” என்று சொல்லி, புத்தக அறைக்குச் சென்றாள்.
அலமாரியிலிருந்து அவனுக்குப் பிடித்தமான ‘அரசியல்’ என்ற தலைப்பிட்ட புத்தகத்தை எடுத்து வந்தவள், “கொஞ்சம் நேரம் படி ராஜாண்ணா. படுத்தே இருக்காத” என்று கொடுத்தாள்.
பலமுறை படித்திருந்தாலும் மறுக்காமல் வாங்கிக் கொண்டான். இரண்டு நிமிடங்கள் ஏனோதானோவென புத்தகத்தைப் புரட்டியவன், மூன்றாவது நிமிடத்திலிருந்து புத்தகத்திற்குள் மூழ்கினான்.
முன்னே நின்று பார்த்த சுடருக்கும், பின்னிருந்த லதாவிற்கும் அப்படியொரு நிம்மதி முகமெங்கும் பரவியது.
இதையெல்லாம், வரவேற்பறையின் மற்றொரு பகுதியில் இருந்த ராகவன் கவனித்துக் கொண்டே இருந்தார்.
யாரையும் நெருங்க விடவில்லை. யார்கூடவும் பேசவில்லை. ஆனால், இந்தப் பெண் சொன்னதும் கேட்பதைப் பார்த்தவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘அவனை எப்படிச் சரி செய்ய?’ என்று தெரியாமல் இருந்தவருக்கு வழி
கிடைத்திருந்தது. உடனே, “லிங்கம் உங்ககிட்ட ஒன்னு பேசணும்” என்றார்.
“சொல்லுங்க ராகவன்”
“ராஜா நிலைமை எனக்கு புரியுது. ஆனா ஒரு ஐடி விங் செக்ரட்டரி எலெக்ஷன் நேரத்தில இப்படி இருந்தா எப்படி?” என ராஜா நிலைமை புரிந்தும், அதைப் பொருட்படுத்தாமல் கட்சிக்காகப் பேசினார்.
லிங்கத்திற்குக் கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், “அசிஸ்டன்ட் செக்ரெட்டரி இருக்கிறாங்கள?! அவங்களை வச்சி மேனேஜ் பண்ண முடியாதா?” என்று மாற்று வழிகளைக் காட்டினார்.
“அவங்க செஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா ஐடி விங் பசங்கெல்லாம் இவனைத்தான தேடுறாங்க” என்று ராஜாவைக் கை காட்டினார்.
தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராய் இருப்பவனுக்கு தேர்தல் நேரப் பணிகள் பற்றித் தெரிந்ததால், அணி உறுப்பினர்களிடம் ராஜா பழகும் விதம் தெரியும் என்பதால், “சரி இப்போ என்ன பண்ண?” என்று லிங்கம் கேட்டார்.
“ராஜா… உங்க பொண்ணுகூட மட்டும்தான் பேசறான். அவங்க சொன்னதை அப்படியே கேட்கிறான். அதான் இப்படி…” என ஒரு பீடிகையோடு ஆரம்பித்து, “அவனை எலெக்ஷன் வேலையைப் பார்க்க சொல்லி, உங்க பொண்ண சொல்ல சொல்லுங்களேன்” என கோரிக்கையுடன் முடித்தார்.
ராகவன் அப்படிக் கேட்டும் லிங்கம் அமைதியாக இருந்ததும், “ஏதாவது சொல்லுங்க?” என்றார்.
“இதுவரைக்கும் அவ கட்சி விஷயத்தில இன்வால்வ் ஆனது கிடையாது” என்று நாசுக்காக மறுத்தார்.
“அவங்க எங்கே இன்வால்வ் ஆகப் போறாங்க. ராஜாவை இன்வால்வ் ஆக சொல்லப் போறாங்க” என்று விடமால் பேசினார்.
சுடரே மறுத்தால்தான் இவர் பேசமாட்டார் என்று நினைத்து, “இதுல நீங்களோ நானோ எதுவும் சொல்ல முடியாது. ஏன்னா அவ சுயமா முடிவெடுக்கிற பொண்ணு. அவகிட்டதான் கேட்கணும்” என்றார்.
“அப்போ கூப்பிடுங்க. நான் கேட்டுப் பார்க்கிறேன்” என்றதும், அடுத்த ஐந்து நிமிடங்களில் சுடரும் லதாவும் அங்கே வந்து நின்றார்கள்.
லிங்கத்திடம் கேட்டதை மீண்டுமொரு முறை ராகவன் சொல்ல, லதாவிற்கு இது நல்ல யோசனையாகத் தோன்றியது. ஆனால் சுடருக்கு தன் காதலனின் நிபந்தனைதான் ஞாபகத்திற்கு வந்தது.
மகள் பேசாமல் இருப்பதைக் கண்ட லதா, “என்ன சுடர் ஒன்னுமே சொல்ல மாட்டிக்கிற?” என்று கேட்டார். அதேபோல், ‘என்ன பதில் சொல்லுவாள்?’ என்று ராகவனும் சுடர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
கொஞ்சம் யோசித்தாள். பின், “இல்லை, என்னால முடியாது. படிச்சிக்கிட்டு இருக்கேன். ஸோ டைம் கிடைக்காது” என்று நேரடியாக மறுத்தாள்.
“இதுக்கு என்ன டைம் ஆகும்? இப்போ சொன்னீங்கள ‘சட்டை போடு, படி’ அப்படின்னு! அதேமாதிரி அப்பப்ப அவனை வேலை செய்யச் சொல்லணும். அவ்வளவுதான்” என்று ராகவன் எளிதாகச் சொன்னார்.
“கட்சி வேலை நான் பார்க்க மாட்டேன்” என்று கறாரான குரலில் மறுத்தாள்.
காரியம் ஆகவேண்டும் நோக்கில் சிரித்து, “உங்களை எப்படிக் கட்சி வேலை செய்ய சொல்லுவேன்? ராஜாவைத் தேர்தல் வேலை செய்ய சொல்லுங்கன்னு சொல்றேன்” என்றார்.
சுடர் யோசிப்பதைப் பார்த்த லதா, “அவனுக்காக இதுகூட செய்ய மாட்டியா? சரின்னு சொல்லு” என ராஜாவிற்காகப் பேசியதும், “லதா பேசாம இரு” என்று லிங்கம் கண்டித்தார்.
“அவன் இப்படி இருக்கிறது உங்களுக்கு ஓகேவா?” என ராகவன் கேட்டதும், ‘இல்லை’ என்று சுடர் தலையசைத்தாள்.
“அப்புறமென்ன? கட்சி வேலை பார்த்தா, மனசு கொஞ்சம் மாறுமில்லையா? அதுக்காகத்தான் கேட்கிறேன்” என்று சுடரின் மனதை மாற்றப் பார்த்தார்.
ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் அழுத்தமாக இருப்பவனைப் பார்த்து லதாவிற்கு மனம் பதைபதைத்தது. எனவே “ஒத்துக்கோ சுடர்! என் பையன் இப்படி இருக்கிறதைப் பார்க்கவே முடியலை. அவனை எந்திரிச்சி நடமாட வச்சிடு” என கண்ணீர் சிந்தினார்.
“நீங்க அழாதீங்க. அவங்களே யோசிச்சி முடிவெடுக்கட்டும்” என்று ராகவன் சொன்னதும், சுடர் தன் அப்பாவைப் பார்த்தாள்.
“யார் என்ன சொன்னாலும் உனக்கென்ன தோணுதோ அதை மட்டும் செய். ‘இதை செய்! அதை செய்’னு நான் சொல்ல மாட்டேன் சுடர்” என்று லிங்கம் சொன்னதும், ராகவனுக்கு ஒருமாதிரி போயிற்று.
ராஜாவின் மீதிருக்கும் பாசத்தால், ‘இவர் ஏன் இப்படிச் சொல்கிறார்?’ என்று லதாவிற்கு லிங்கத்தின் மேல் கோபம் வந்தது.
அப்பா சொன்னதைக் கேட்டவள், ராஜாவைப் பார்த்தாள். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மீண்டும் படுத்திருந்தான். அவனின் தோற்றம் மனதை ஏதோ செய்ததால், “சரி சொல்றேன்” என்று சுடர் ஒத்துக் கொள்ள, “அவ்வளவுதான்” என்று ராகவன் எழுந்து கொண்டார்.
வந்த வேலை ஓரளவிற்கு முடிந்து, தலைவரிடம் கூறுவதற்கு பதில் இருக்கிறது என்ற திருப்தியில், “படிக்கிறேன்னு சொன்னீங்கள!? என்ன படிக்கிறீங்க?” என சுடரிடம் கேட்டார்.
“ஜர்னலிசம் முடிச்சிட்டு, நியூஸ் எடிட்டிங் ரிலேட்ட் கோர்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். இங்கே சென்னையிலதான்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
படிப்பைப் பற்றிச் சொன்னதும், ‘ஜர்னலிசமா?’ என்று உள்ளுக்குள் எழுந்த கேள்வியை மறைத்து, “அப்ப நான் கிளம்புறேன் லிங்கம். நாளைக்கு கட்சி ஆபிஸ் நீங்க வரணும்” என்று ராகவன் சொல்லிச் சென்றார்.
அவர் கிளம்பியதும், கட்சி ஆட்களும் சென்றார்கள். அனைவரும் சென்றதும், கணவர் அருகில் வந்தமர்ந்து, “ராஜாக்கு ஹெல்ப் பண்ண வேண்டாம்னு ஏன் சொன்னீங்க?” என்று லதா கேட்டார்.
“எது ஹெல்ப் லதா? படிக்கிற பொண்ண போய் இந்தமாதிரி வேலை செய்ய சொல்லுவாங்களா?” என்று இன்னும் தனக்கு இதில் உடன்பாடில்லை என்பது போல் கேட்டார்.
“கொஞ்ச நாளாவே ராஜா ஒருமாதிரி இருக்கான். இப்ப இது வேற. இப்படியே இருந்தான்னா எப்படி? அவன் மனசு மாறதுக்காக ஏதாவது செய்யணும்ல?”
“நானும் கவனிச்சேன். நீ நினைக்கிறதுல தப்பில்லை! ஆனா ராகவன் அப்படி நினைச்சி சொல்லலை. அவங்களுக்கு எலெக்ஷன் நேரத்தில இறங்கி வேலை செய்ய ராஜா தேவைப்படறான். சுடர் சொன்னா, அவன் வேலை செய்வான்னு நினைக்கிறாரு.
கொஞ்சம் கூட அவனைப் பத்தி யோசிக்காம, கட்சிக்காக மட்டும் யோசிச்சுப் பேசிட்டுப் போறாரு. அவன் மேல இருக்கிற அக்கறைல அவர் பேசலை” என்று ராகவனைப் புரிந்து பேசினார்.
உடனே பதட்டமான லதா, “அப்ப சுடர் தெரியாம ஒத்துக்கிட்டாளோ?” என்று பயத்துடன் கேட்டார்.
“நிச்சயம் இருக்காது. ராகவன் கேட்டதுக்காக சரின்னு சொல்லியிருக்க மாட்டா. ராஜாக்காக மட்டும் யோசிச்சி சொல்லயிருப்பா” என்று மகளைப் புரிந்து கொண்டு பேசினார்.
பின்னரும் கவலையுடன் தெரிந்த மனைவி முகத்தைப் பார்த்தவர், “லதா இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ சாப்பிட்டியா?” என அக்கறையாகக் கேட்டதும், “எனக்கு ராஜாவை நினைச்சா கஷ்டமாயிருக்குங்க” என்றார்.
“சரியாயிடுவான். அவன் சரியாகிறதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்” என்று ஆறுதலாகச் சொன்னார்.
“வாயைத் திறந்து எதுவும் பேச மாட்டிக்கிறான். அழக் கூட மாட்டிக்கிறான். எனக்கு பயமா இருக்குங்க” என்று மீண்டும் கண்ணீர் வடித்தார்.
“லதா நீயே இப்படி கவலைப்பட்டா, அவனை யாரு சமாதானப்படுத்துவா? தைரியமா இரு” என்று மனைவிக்கு நம்பிக்கை ஊட்டினார்.
பின், “சரி! வெளியிலே கட்சி ஆளுங்க வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் போய் பார்த்திட்டு வர்றேன்” என்று சொல்லி, வீட்டு வளாகத்திற்குச் செல்லத் தயாரானார்.
இதே நேரத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு படுத்திருந்தவன் முன்னே போய் நின்ற சுடர், “ராஜாண்ணா எழுந்திரி” என்று சொன்னதும், அவன் எழுந்து அமர்ந்தான்.
அவன் அருகில் அமர்ந்துகொண்டு, தோளில் சாய்ந்து கொண்டாள். “என்ன சுடர்? என்னாச்சு?” என்று கேட்டதற்கு, நிமிர்ந்து ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையசைத்து, மீண்டும் சாய்ந்து கொண்டாள்.
இது கட்சி வேலை இல்லை என்று தெரியும். ராஜாவை தேர்தல் வேலைகள் செய்யச் சொல்லப் போகிறோம் என்று தெரியும். இதையெல்லாம் அப்பாவும் பார்த்துக் கொள்வார் என்றும் தெரியும்.
இவ்வளவு தெரிந்தும், ‘கட்சி ரிலேடட் ஆக்ட்டிவிட்டிஸ்ல இன்வால்வ் ஆகாத’ என்று காதலன் சொன்னது சுடரின் ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது.
அடுத்து வரப்போவது காதல் ஓவியத்தின் முதல் அத்தியாயமும்…