Kathambari Novels
அத்தியாயம் – 15
காலை ஒன்பது மணி ஆகியிருந்தது. பக்ஸ் எழுந்து சமைத்து முடித்துவிட்டு மகளுக்கு கடையில் இட்லி வாங்கி கொடுத்துக் கொண்டிருந்தான். தமிழ் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குச் சாப்பாடு கொடுத்துவிட்டு வேலைக்குப் போகலாம் என்று ராணி தமிழை எழுப்பினாள்.
தமிழ் எழுந்திரிக்கவில்லை.
“நேத்து புல்லா வெளிய இருந்துருக்கா ராணி. அவ எந்திரிக்கிற நேரத்துல எந்திரிக்கட்டும். நான் சாப்பாடு வச்சி குடுக்குறேன். நீ கெளம்பு” என்றான் பகவதி.
ஆயா அப்போதுதான் பூ கட்டி முடித்துவிட்டு வந்தார்.
“ஆயா… நேத்து அந்த சார்ட்ட குணா ண்ணா பேசுனத சொன்னியா” என்று ராணி கேட்டாள்.
இல்லை என்று தலை அசைத்துவிட்டு அவரிடத்தில் போய் அமர்ந்தார்.
“ஏன் ஆயா” என்றாள்.
“நேத்து அந்த பையன் மொகமே சரியில்ல. இன்னிக்கி வரப்போ சொல்றேன்”
“அவர்ட்டயும் சொல்லல. குணா அண்ணாட்டயும் எதும் சொல்ல மாட்டிக்கிங்க. என்னதான் நினைக்கிறீங்க?” என்று ராணி புலம்பினாள்.
ஆயா, பக்ஸ் ஒன்றும் சொல்லவில்லை. வெற்றி, தமிழ் பற்றி குணாவிடம் பேச அவர்களுக்குச் சற்று பயம். குணாவை பக்ஸ் திட்டி இருக்கிறான். அடித்தும் இருக்கிறான். ஆயாவிற்கு அவனைச் சிறிதும் பிடிக்காது. அவனிடம் பேசுவதே இல்லை. குணாவிற்கும் அது தெரியும்.
இப்படி இருக்கையில் இவர்கள் எதுவும் சொல்லப் போய் வீம்புக்கென்று குணா எதையாவது செய்தால்? தமிழ், வெற்றி இருவருமே பாவம் இல்லையா? அதனால் வெற்றியே குணாவிடம் பேசட்டும் என்று இருக்கின்றனர்.
இன்று வெற்றி வந்ததும் அவனிடம் குணா பேசியதைச் சொல்லிவிடுவார்கள்.
இதை ராணியிடம் பக்ஸ் சொன்னான். சரி என்றவள், சற்றுநேரம் மகளைத் தூக்கி வைத்திருந்துவிட்டு வேலைக்கு கிளம்பினாள்.
அயர்வாக இருக்க ஆயா படுத்துக் கொண்டார். மகளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான் பக்ஸ். தமிழ் அப்போதுதான் முழித்தாள். எழுந்து கண்ணைத் திறந்ததுமே வெற்றியைத் தேடினாள். சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். அவன் இல்லை என்றதுமே அவள் முகம் வாடிவிட்டது.
பக்ஸ் அவளிடம் வந்து, “போ, மொகத்த கழுவிட்டு வந்து சாப்டு” என்றான்.
எழுந்து போய் முகம் கழுவியவள் கம்பித் தடுப்பைப் பிடித்து நின்று கொண்டு சாலையைப் பார்த்தாள்.
பக்ஸ் அவளைக் கூட்டி வந்து சாப்பாடு வைத்துக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னான். அடிக்கடி சாலையைப் பார்த்தபடி அரையும் குறையுமாகச் சாப்பிட்டு முடித்தவள் மீண்டும் கம்பித் தடுப்பின் பக்கம் சென்று நின்றாள்.
பகவதிக்குப் புரிந்தது. வெற்றியைத் தேடுகிறாள் என்று. ஏன் காலையிலேயே தேடுகிறார்கள் என்று யோசித்தான். போய் அவளைத் திருப்பி அவள் முகம் பார்த்து, “அந்த சார் சாயங்காலம் வருவாங்க. நீ வந்து உட்காரு” என்றான்.
அதன்பின்னும் அங்கேயே நின்றாள். மீண்டும் அவளைத் திருப்பி, “இன்னிக்கி காலைல வரேன்னு சொன்னாரா?” என்று அவள் தேடுவதை பார்த்து கேட்டான்.
ஆம் என்று தலையாட்டினாள்.
இப்படிச் சொல்லிட்டு போனவன் ஏன் வரவில்லை என்று யோசித்தான். “சரி நீ வா. அவர் வரட்டும்” என்று கைப்பிடித்துக் கூட்டி வந்து உட்கார வைத்தான்.
அவன் அவள் கையைவிட்ட அடுத்த நொடியே திரும்பவும் போய் கம்பியைப் பிடித்துக் கொண்டு வெற்றி வரும் பாதையை பார்த்திருந்தாள்.
சொன்னாலும் கேட்க மாட்டாள் என்பதால் பக்ஸ் திரும்பச் சொல்லவில்லை. அவளும் வந்து உட்காருவது போல் தெரியவில்லை. வெகு நேரமாக நின்று கொண்டே இருந்தவளைப் பார்த்தவனுக்கு மனது கேட்கவில்லை. அடிக்கடி போய் கூப்பிட்டுப் பார்த்தான்.
என்ன சொன்னாலும் அவள் வரவில்லை. கால்கடுக்க நிற்கத்தான் செய்தாள்.
மத்தியானம் சாப்பிடும் நேரம் வந்ததும் மீண்டும் போய், “வா தமிழ், வா வந்து சாப்டு” என்று கூப்பிட்டான்.
வர மாட்டேன் என்று அப்படியே நின்றாள். “தமிழ் எவ்ளோ நேரம்தான் நிப்ப” என்று சத்தம் போட்டான்.
அவன் சத்தம் கேட்டு திடுக்கென விழித்த ஆயா, “என்ன பக்ஸ்” என்றார்.
“இங்க பாரு ஆயா அந்த சார தேடிக்கினு தமிழு இங்கயே நிக்கிறா, நீயாவது வந்து அவள உட்கார சொல்லு” – அவ்வளவு நேரம் அவள் நின்றதாலும், அவள் கண்களில் இருந்த தேடலைப் பார்த்ததாலும் அவன் குரலில் பதட்டம் இருந்தது.
“எப்பவும் சாயங்காலம்தான அந்த தம்பி வரும்”
“இவட்ட காலைல வர்றதா சொல்லிக்கினு போயிருக்கான் அவன்” – எரிச்சலில் மரியாதையாகப் பேச தோன்றவில்லை. “நீ போன் அடிச்சி பாரேன் ஆயா”
ஆயாவும் உடனே வெற்றிக்கு அழைத்துவிட்டார். முழு அழைப்பு ஒலி முடிந்த பின்னும் அவன் அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் இருமுறை அழைத்துப் பார்த்தார். அப்போதும் அழைப்பு ஏற்கப்படவில்லை. “இன்னிக்கு வேலையா இருக்குமோ” என்றார் சந்தேகமாக.
“ஆயா இன்னிக்கி சனிக்கிழம, வேல இருக்குமா என்ன” என்றான் பக்ஸ்.
ஆயா யோசித்தார். வெற்றி அவன் வேலை செய்யும் அலுவலக எண் இருக்கும் அட்டை கொடுத்தது ஞாபகத்தில் வந்தது. எப்போதும் கூடவே வைத்திருக்கும் பைக்குள்தான் அதை வைத்திருந்தார். அந்த எண்ணிற்கு அழைத்தார். அங்கே யாரும் எடுக்கவில்லை. “வேல நாள் இல்ல போல” என்றார்.
“ப்ச்” என்று பக்ஸ் எரிச்சலானான். திரும்பவும் தமிழிடம் போய், “வா வந்து சாப்டு. வெயில்ல எவ்ளோ நேரம்தான் நிப்ப” என்றான் அவள் முகம் பார்த்து.
அவன் பேசி முடியும் வரை அவன் முகம் பார்த்து நின்றாள். பின் வெற்றி வரும் வழியைப் பார்த்து நின்றாள். அவனுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. அப்பா ஊட்டிவிடுவாங்க என்று மீனா காத்திருந்தாள். அதற்குமேல் தமிழிடம் பேசாமல் வந்து மகளுக்குச் சோறு ஊட்டிவிட்டான்.
ஆனால் அவன் சாப்பிடவில்லை. சாப்பிடத் தோன்றவில்லை.
ஆயா கடையில் வாங்கிச் சாப்பிட்டார். எப்போதும் மதியச் சாப்பாடு முடிந்த பின் ஓய்விற்காகப் படுப்பது போல் இன்று படுக்கவில்லை. தமிழ் நிற்பதைப் பார்த்தவருக்கு ஓய்வெடுக்கும் எண்ணமே வரவில்லை. ‘என்ன இந்த புள்ள இப்டி நிக்கிறா’ என்று பார்த்தார்.
மூன்று மணி இருக்கும். வெற்றி எப்போது வருவான் என்று பார்த்துப் பார்த்து ஏமாந்தவள், விறுவிறுவென்று வந்து அவளது தோள் பையை எடுத்து மாட்டிக் கொண்டு ரயில் நிலையம் கிளம்பிவிட்டாள்.
எங்கே போகப் போகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. ஓடிப் போய் அவள் போகாமல் பிடித்துக் கொண்டான். ’போவேன்’ என்று முரண்டு பிடித்தாள். கடைசியில் பக்ஸ் அவளை இழுத்துக் கொண்டு வர வேண்டியதாகிவிட்டது. “போ கூடாதுனா போற, , ஒழுங்கா இங்க இரு” என்று அதட்டினான்.
‘போவேன்’ என்பது போல் அவனிடமிருந்து விடுபட்டுச் செல்ல நினைத்தாள். அவன் விடவேயில்லை. எப்படி அவளைச் சமாளிக்க என்றும் தெரியவில்லை. அவன் விடவில்லை என்றதும் அழத் தொடங்கிவிட்டாள்.
ஆயா எழுந்து வந்துவிட்டார். “நீ வுடு பக்ஸ், நான் பாத்துக்கிறேன்” என்றவர், “டேசன் போ கூடாது. அழாத. போய் சாப்டு இல்லயா படு” என்று தமிழ் முகம் பார்த்துப் பேசினார். முகத்தை கடுமையாக வைத்துதான் பேசியிருந்தார்.
ஆயா அதட்டலில் பயந்த தமிழ், ‘போகணும்’ என்று முரண்டு பிடிக்கவில்லை. அசையாமல் அதே இடத்தில் நின்றாள். ஆனால் அழுகை நிற்கவில்லை. அது இன்னும் இன்னும் அதிகமானது.
‘என்ன செய்ய’ என்று யோசித்தார். அவருக்கும் இப்படி அழுபவளை எப்படிச் சாமளிக்க என்று தெரியவில்லை.
“இப்ப திரும்ப போன் அடிச்சி பாரு ஆயா” என்றான் பக்ஸ்.
ஆயாவும் வெற்றிக்கு அழைத்தார். “என்ன இது போன எடுக்க மாட்டிக்கிறான் இவன்” என்றுதான் அலைபேசியை வைத்தார். தங்களால் சமாளிக்க முடியாது என்றதும், “ராணிக்கு போன் போட்டு வர சொல்றியா” என்றார்.
“அவ வந்தாலும் அழாம இருப்பாளா இவ, வெற்றிய தேடுறா”
சற்று யோசித்துவிட்டு, “நீ வேணா டேசன் கூட்டிப் போறியா” என்று கேட்டார்.
“மீனா தூங்கிட்டு இருக்கா ஆயா, எந்திரிச்சா என்னய தேடுவா” என்றான்.
ஆயா ஒரு பெருமூச்சுடன் அங்கே கிடந்த கல்லில் அமர்ந்துவிட்டார்.
இதற்கிடையே தமிழ் மீண்டும் ரயில் நிலையம் செல்லக் கிளம்பினாள். பக்ஸ் அவளைப் பிடித்து, “நீ உட்கார வேணாம், இங்கயே நின்னு அவர் வர்றானு பாரு” என்று கம்பித் தடுப்பின் பக்கம் சென்று அவளை நிற்கவைத்தான்.
ஒரு தோளில் துணிப்பை; ஒரு கையில் வெற்றி வாங்கி கொடுத்த பலூன்; காலில் அவன் வாங்கிக் கொடுத்த செருப்பு; நேற்று போட்ட கவுன்; இன்னும் எடுக்காமல் இருந்த நேற்று வைத்த பூ; அதுவும் காய்ந்து போயிருந்தது. முகம் எங்கும் கண்ணீர் கோடுகள். உடல் எங்கும் வியர்வை வழிந்தது.
கம்பித் தடுப்பில் முகத்தை அழுத்திக் கொண்டு நின்றாள். ஏங்கி ஏங்கி அழுது கொண்டே அம்மா இறந்த இடத்தைப் பார்ப்பதும், வெற்றி வரும் வழியைப் பார்ப்பதுமாக இருந்தாள். கண்ணீர், மூக்கு வழிந்து கொண்டே இருந்தது.
அவளைப் பார்க்கப் பார்க்கப் பாவமாக இருந்தது பகவதிக்கு. உட்காரக் கூடத் தோன்றாமல் நின்று கொண்டிருந்தான்.
அங்கே இருப்பவர்கள் வந்து, ‘என்னாச்சு’ என்று கேட்டுப் போகும் அளவிற்கு குழந்தை கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள். ஆயா மீண்டும் வெற்றிக்கு அழைத்தார். இப்போதும் அவன் அழைப்பை எடுக்கவில்லை என்றதும், “நான் டேசன் கூட்டிக்கினு போறேன்” என்று எழுந்துவிட்டார்.
பக்ஸ் யோசித்தான். அவனுக்கு ஆயாவை அனுப்ப மனமில்லை. அவர் வயது ஒரு காரணம், இன்னொன்று தமிழ் அங்கே முரண்டு பிடித்தாலோ, எங்கேயும் ஓடிச் சென்றாலோ, அவள் பின்னேயே ஓட வேண்டுமே?
“ஆயா நான் போறேன். மீனா முழிச்சி அழுதா போன் போடு” என்றவன், “காசு இருக்கா ஆயா, அம்பது ருபா குடு” என்றான்.
பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். வாங்கிக் கொண்டு தமிழிடம் போய், அவளைத் திருப்பி நிறுத்தி, “டேசன் போலாம் வா, இனி அழ கூடாது” என்று அழைத்துக் கொண்டு போனான்.
ரயிலில் போகும் போதும் தமிழ் அழுது கொண்டே இருந்தாள். எழும்பூர் போய் இறங்கியதும், கூட்டத்திற்கு இடையே ஓட ஆரம்பித்தாள். வெற்றியும் அவளும் எப்போது போகும் நடைமேடைக்கு போய் தேடினாள்.
பக்ஸ் அவளுக்கு இணையாக பின்னேயே ஓடினான். வெற்றி இருக்கிறானா என்றெல்லாம் அவனால் பார்க்க முடியவில்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. சனிக்கிழமை, விடுமுறை நாள் வேறு… அதனால் தமிழைத்தான் பார்த்தான்.
அவள் பின்னேயே ஓடியவன், இவ்வளவு கூட்டத்தில் எங்காவது தொலைந்து விட்டால் என்று பயந்து, வலுவாக அவள் கையைப் பிடித்துக் கொண்டான். அப்போதும் ஓடத்தான் செய்தாள்.
பகவதிக்கு ஒரு பக்கம் வெற்றி மேல் கோபம் வந்தது. இன்னொரு பக்கம் தமிழைப் பார்த்துப் பாவமாக இருந்தது. அதனோடு அவள் கூடவே போனான்.
அங்கே இங்கே என்று சுற்றித் தேடினாள். இட்லி வாங்கும் கடையில் போய்ப் பார்த்தாள். பிஸ்கட் வாங்கும் கடைக்குப் போய்த் தேடினாள். ஒவ்வொரு நடைமேடை படிக்கட்டுகளிலும் ஏறி இறங்கி ஓய்ந்து போனாள்.
முக்கால் மணி நேரம் ஆகியிருக்கும். ஏற்கனவே அழுது வியர்த்திருந்த உடம்பு இன்னும் வியர்த்ததில் அயர்ந்து, நலிந்து போயிருந்தது. கையில் பிடித்திருந்த பலூன் உடைந்திருந்தது. இருந்தும் அந்த நூலை விடாமல் பிடித்திருந்தாள். மத்தியானம் சாப்பிடாத சோர்வு முகத்தில் தெரிந்தது.
“போதும் தேடுனது. அவர் இங்க இல்ல, வா போலாம்” என்றான். வரமாட்டேன் என்று அழுது நின்றாள். “அவரு அங்க வந்திருக்கலாம் வா” என்று எப்படியோ பேசி, அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
பாலத்திற்கு வந்ததும் அங்கே வெற்றியைத் தேடினாள். இல்லை என்றதும் அவளிடம் போய் உட்கார்ந்து விக்கி விக்கி அழுதாள்.
“ஆயா, போன் அடிச்சி பேசினியா? என்ன சொல்றான் அந்த மனுஷன்” – பக்ஸ் குரலில் அவ்வளவு கோபம் கொட்டிக் கிடந்தது.
“அவன் போன் எடுக்கல” என்று ஆயா வந்து தமிழருகில் அமர்ந்தார். அவளை சமாதானப்படுத்தப் பார்த்தார். பக்ஸூம் வந்து அமர்ந்தான்.
‘ப்ப ப்ப’ என்று சொல்லிச் சொல்லி அழுதாள்.
பக்ஸ் புருவம் சுருக்கி யோசித்தான். ஆயாவிற்குப் புரிந்தது. “வெற்றியதான் அப்பாங்கிறா” என்று சொன்னார். அவனுக்கு கஷ்டமாக போய்விட்டது. அவள் அழுவதைப் பார்க்க முடியாமல் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.
தமிழ் அவன் முட்டியைத் தட்டி, ‘ப்ப ப்ப’ என்று அழுதாள்.
வெற்றியைப் பார்க்க வேண்டும் என்கிறாள். பக்ஸ் அவளை ரயில் நிலையம் அழைத்துச் சென்றதால், அவனிடம் சொன்னால் வெற்றியை அவன் இங்கே கூட்டி வருவான் என்று கேட்கிறாள். எல்லாம் புரிந்தது.
ஆனால் என்ன செய்ய என்றுதான் தெரியவில்லை.
அவளின் அழுகையை அதற்குமேல் பார்க்க முடியவில்லை. எழுந்து போய் சற்றுத்தள்ளி நின்றான். ராயபுரம் என்று தெரியும், ஆனால் அங்கே எந்த வீடு. முகவரி தெரிந்தாலாவது போய் பார்த்து வரலாம் என்று தோன்றியது.
ஆயா கஷ்டப்பட்டு அவளைச் சமாதானப்படுத்தி, மடியில் படுக்க வைத்து அரைமணி நேரம் போராடி கடைசியில் தூங்க வைத்துவிட்டார்.
மாலை வந்தது. இரவும் ஆரம்பித்தது. வெற்றி இனிமேலாவது வருவான் என்று ஆயாவும் பக்ஸூம் அவன் வரும் வழியையே பார்த்துப் பார்த்து இருந்தனர். அவன் வரவேயில்லை.
மகள் தூங்கி எழுந்ததும் பக்ஸ் அவளைக் கவனித்தான். அவளை விளையாட விட்டுவிட்டு, இரவிற்காகச் சோறு பொங்கி வைத்தான். ஆயாவும் வெற்றிக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போயிருந்தார்.
ராணி வேலை முடிந்து வந்தாள். தமிழ் உறங்குவதைப் பார்த்து, “அதுக்குள்ள தூக்கிட்டாளா, இவ்ளோ சீக்கிரமா ஏன், வெற்றி சார் வந்திருந்தாரா, வெளிய எங்கனாது போய்ட்டு வந்தாங்களா, சாப்பிட்டாளா பக்ஸ், இல்ல சாப்பிடாம தூங்குறாளா” என்று கேள்விகளை அடுக்கினாள்.
ஆயாவும் பக்ஸூம் பேசாமல் இருந்தனர்.
“என்ன வாயவே தொறக்காம இருக்கீங்க, குணா ண்ணா பேசிட்டு போனத வெற்றி சார்ட்ட சொல்லிட்டீங்கள” என்றாள்.
“வெற்றி இன்னிக்கு வரல” என்றார் ஆயா.
“ஏன் வரல ஆயா, உன்கிட்ட அந்த சார் நம்பர் இருக்கும்ல? போன் அடிச்சு வர சொல்லு” என்றாள். அவளுக்கு இன்னும் நிலைமையின் தீவிரம் என்னவென்று தெரியாததால், சாதாரணமாகத்தான் பேசினாள்.
ஆயாவும் பகவதியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். “போன எடுக்கல அவன்” என்று காலையிலிருந்து நடந்ததை எல்லாம் ஆயா சொல்லிவிட்டார்.
கோபப்படுவாள் என்று நினைத்தனர். ஆனால் ராணி அமைதியாக தமிழைப் பார்த்து நின்றாள்.
“ராணி, மதியானத்திலிருந்து தமிழ் எதும் சாப்பிடல, தண்ணீ கூட குடிக்கல. நீ அவளை எழுப்பி சாப்பிட வையேன்” என்றான் பக்ஸ் .
“எந்திரிச்சா அழுகுமே பக்ஸ்” என்றார் ஆயா.
“அதுக்குன்னு அப்படியே வுட முடியுமா” என்றான்.
ராணி தமிழை எழுப்பினாள். விழித்த வேகத்தில் எழுந்து அமர்ந்தவள் சுற்றிச் சுற்றிப் பார்த்து வெற்றியைத்தான் தேடினாள். இல்லை என்றதும் அழுதாள்.
ராணி கணவனிடம், “சாப்ட வைக்றது கஷ்டம். கொஞ்சமா பால் வாங்கின்னு வரியா” என்றாள்.
நான்கு நாட்களாக அவனுக்கு வேலை இல்லை. கையில் இருக்கும் காசை வைத்து சாப்பாட்டுத் தேவையைச் சமாளித்து வருகிறான். அதனால்தான் அப்போது ஆயாவிடம் பணம் வாங்கிப் போனான். இப்போதும் அவரிடம்தான் ஐம்பது ரூபாய் வாங்கிப் போய் பால் வாங்கி வந்து தந்தான்.
ராணி, சூடாக இருந்த பாலை நன்றாக ஆற்றி தமிழைக் குடிக்கச் சொன்னாள். தமிழ் அழுதுகொண்டே இருந்ததால் ராணி அவளை அவசரப்படுத்தவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே குடிக்கட்டும் என்று இருந்தாள். நான்கு மிடறுதான் குடித்தாள். மீண்டும் படுத்துவிட்டாள். ராணி எழுப்பியும் எழவில்லை.
சாப்பிடவும் இல்லை; பாலும் இவ்வளவு குறைவாகக் குடித்தால் எப்படி என்று இருந்தது ராணிக்கு. ஆனால் இப்படி அழும் போது எதையும் கொடுக்கவும் பயமாக இருந்தது. தமிழுக்குத் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அழுது கொண்டே தமிழ் உறங்கிவிட்டாள்.
பக்ஸ் மகளுக்குச் சாப்பாடு கொடுத்து தூங்க வைத்தான். அடுத்து அவர்கள் சாப்பிட்டார்கள். மதியம் சாப்பிடாததால் பக்ஸ் கடகடவென்று சாப்பிட்டான். ராணி ஏதோ சாப்பிடணுமே என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு… கோபமா இருந்தா பேசிடு” என்றான்.
“வுடு பக்ஸ்” என்றாள். “உமா இருந்திருக்கலாம்” என்று கண் கலங்கினாள். “போதும்” என்று சாப்பாட்டைத் தள்ளி வைத்தாள். “நான் தமிழ் பக்கத்தில படுத்துக்கிறேன்” என்று படுத்துக் கொண்டாள்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை. பாத்திரங்களை எடுத்துப் போட்டுக் கழுவி வைத்தான். அங்கே கிடக்கும் நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டான். ராணி வெளியே படுத்திருப்பதால் ஒரு பாதுகாப்பிற்காக.
தூக்கம் வருமா என்று தெரியவில்லை. வாகனங்கள் இல்லாத வெறிச்சோடிக் கிடந்த சாலையை வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.
ஆயா சாப்பாடு வேண்டாம் என்று அப்போதே படுத்திருந்தார்.
அன்று மூவரும் சரியாக உறங்கவில்லை. ஆனால் விடிந்ததும் ஆயா பூ கட்ட போய்விட்டார். பக்ஸ் சோறு பொங்கி முடித்திருந்தான். எழுந்த ராணியை, ‘நீ உள்ள போய் கொஞ்ச நேரம் தூங்கு’ என்றுவிட்டான். மகள் அருகில் போய் படுத்துக் கொண்டாள்.
ஆயா பூ கட்டிவிட்டு வந்ததும், “போன் போட்டு பார்த்தியா” என்றான்.
“அவனை போ சொல்லு, இப்ப போட்டேன், சுச் ஆப்னு வருது” என்று கோபமும் எரிச்சலுமாகச் சொன்னார்.
அவர் பேச்சு சத்தம் கேட்டு ராணி எழுந்து வந்தாள். ‘இன்னிக்கும் அந்த சார் வரலனா, தமிழ் ரொம்ப தேடுவாளே’ என்ற பரிவில் தமிழ் அருகில் அமர்ந்து அவள் நெற்றியை வருடிவிட்டாள் ராணி. அப்போதுதான் தமிழ் உடலில் சூடு தெரிந்தது. உடனே கழுத்து, கை எல்லாம் தொட்டுப் பார்த்தாள்.
அவள் முக மாற்றம் பார்த்த பக்ஸ், “என்ன ராணி” என்று எழுந்து வந்தான்.
“காய்ச்சல் அடிக்குது” என்றாள்.
அதிகம் அழுததால் ஏக்கத்தில் காய்ச்சல் வந்திருந்தது.
அவனும் வந்து தமிழைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “என்ன இப்படி கொதிக்கு, இப்ப என்ன செய்ய” என்றான். ஆயாவும் எழுந்து வந்துவிட்டார்.
அவ்வளவு நேரம் அவர்களை எதுவும் சொல்லாமல் இருந்த ராணி, தமிழுக்குக் காய்ச்சல் என்றதும் அவள் கோபம் வெளிப்பட்டது. “என்ன பண்ணனு என்ட்ட கேட்டா, நான்தான் அப்பவே அந்த சார வர வேண்டாம்னு சொல்லுங்கன்னு. கேட்டிங்களா நீங்க…
யாரு என்னனு தெரில, இது எங்க போய் முடியும்னு பயந்தேனே, நீங்கதான் எல்லாம் சரிதான்னு சொல்லிட்டிங்க. இப்ப அது எங்க வந்து முடிஞ்சிருக்குனு பாருங்க” என்று சத்தம் போட்டாள்.
ஆயாவும் பக்ஸூம் அமைதியாக அந்தத் திட்டை வாங்கிக் கொண்டார்கள்.
“இந்த பையன் இப்படி பண்ண கூடாது” என்றார் ஆயா பொறுக்க மாட்டாமல். “பக்ஸ் நீ போய் மொதல்ல எதுனா மாத்திரை வாங்கின்னு வா, கொடுத்து காய்ச்சல நிறுத்த பார்ப்போம்” என்றார். அவனும் ‘சரி’ என்று கிளம்பப் போக, “துட்டு இருக்குதா” என்று கேட்டார்.
“நேத்து குடுத்தேல ஆயா, அதுல மிச்சம் இருக்கு” என்று ஓடினான்.
இருந்த ஒரு பெரிய சட்டியில் சோறு இருந்தது. ராணி பக்கத்தில் ஒருவரிடம் கேட்டு பாத்திரம் வாங்கி வந்து வெந்நீர் வைத்து, துண்டை அதில் நனைத்து தமிழ் நெற்றியில் ஒத்தி ஒத்தி எடுத்தாள்.
நேற்று வெற்றியை நினைத்து அழுததில், அதிகம் வியர்த்ததில், அவன் வராத ஏக்கத்தில் காய்ச்சல் வந்திருந்தது. அனத்திக் கொண்டே இருந்தாள் தமிழ்.
மருந்தகத்தில் இருந்து காய்ச்சல் மாத்திரை வாங்கி வந்தான் பக்ஸ். கூடவே ஒரு காகிதக் கோப்பையில் பாலும், ஒரு பன்னும் வாங்கி வந்திருந்தான்.
தமிழை எழுந்து உட்கார வைத்து எப்படியோ பாலை குடிக்க வைத்தாள் ராணி. அப்போதும் பன்னை சாப்பிட வைக்க முடியவில்லை. மாத்திரையை தண்ணீரில் கரைத்துக் கொடுத்தாள்.
இப்போது வெற்றியை தேடும் நிலையில் தமிழ் இல்லை. கண் பாதி முடியே இருந்தது. சோர்ந்து போயிருந்தாள். உட்காரக்கூடத் தெம்பில்லாமல் அடிக்கடி சாய்ந்து சாய்ந்து விழப் போனாள்.
மாத்திரைக் கொடுத்ததும் அவளைத் தூங்க வைத்தாள் ராணி.
“நீ இன்னிக்கு வேலைக்கு போகாம இருக்கியா” என்றான் பக்ஸ். அவள் இருந்தால்
தமிழ் கொஞ்சமாவது சாப்பிடுவாள் என்று நினைத்தான்.
“இன்னிக்கி சாயங்காலம் வரைக்குத்தான பக்ஸ், நான் போறேன். தமிழுக்கு காய்ச்சல் வுடலனா ஆஸ்பத்திரி கூட்டிக்கினு போணும்ல, நான் ஓனரம்மாட்ட கேட்டு கொஞ்சம் காசு வாங்கின்னு வர்றேன்” என்று கிளம்பினாள்.
“சாப்பிடலயா” என்றான்.
‘வேண்டாம்’ என தலையசைத்துவிட்டு, “அப்ப அப்ப கொஞ்சம் வெந்நி வச்சி ஒத்தனம் கொடுத்துக்கினே இரு, காய்ச்சல் இறங்கும். ஆயா பார்த்துக்கோ நீயும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
அவனுக்கும் சாப்பிடத் தோணவில்லை. ஆயாவையும் மகளையும் மட்டும் சாப்பிட வைத்திருந்தான். ஒரு மணி அளவில் காய்ச்சல் விட்டிருக்கிறதா என்று தமிழைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் குறையவே இல்லை.
அவனைப் பார்த்த ஆயா, “இப்போ எப்படி இருக்கு?”என்று கேட்டார்.
“அப்படியேதான் இருக்கு. சாயங்காலம் வரைக்கும் பாக்கலாம். சரியாகலனா ஆஸ்பத்திரி போலாம்” என்றவன், “ஆயா, லோடு வேல வந்திருக்கு. ஞாயித்து கிழமனால யாரும் இல்ல போல. கூப்டறாங்க, போனா மூணு மணி நேரம் ஆகும்” என்றான்.
தமிழையும் மீனாவையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரால் முடியுமா என்று கேட்கிறான். ஆயாவிற்குப் புரிந்தது. “அதெல்லாம் நான் பாத்துப்பேன். நீ சாப்பிட்டுக் கிளம்பு” என்றார்.
“பசியே இல்ல. போய்ட்டு வந்து சாப்ட்டுக்கிறேன். மீனா விளையாடுது, சாப்ட வச்சிட்டேன். தூக்கம் வந்தா அழும். எப்டியாது தூங்க வச்சு உள்ள போட்டுரு. நான் தமிழ தூக்கி உள்ள படுக்க போட்டுடவா” என்றான்.
“அசந்து தூங்குறா, தூங்கட்டும். பாத்துகிறேன்” என்றதும் கிளம்பிவிட்டான்.
ஆயா எழுந்தார். கொஞ்சம் வெந்நீர் வைத்து, அதில் ஒரு துணியை நனைத்து, தமிழின் நெற்றியில் ஒற்றி ஒற்றி எடுத்தார். விளையாடும் மீனா மீதும் ஒரு கண் வைத்துக் கொண்டார். வெற்றிக்கு அழைப்பதை விட்டுவிட்டார். என்ன ஆள் இவன் என்று அப்படியொரு கோபம் அவன் மேல்.
தூக்கம் வந்ததும் மீனா விளையாட்டை விட்டு வந்து அப்பாவைத் தேடினாள். அவளை மடியில் படுக்கச் சொல்லி, சமாதானப்படுத்தி, தூங்க வைத்த பின் தடுப்புக்குள் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்து அமர்ந்து கொண்டார்.
நான்கு மணி போல் ராணி வந்தாள். “அவர் எங்க ஆயா” என்று கணவனைக் கேட்டாள். சுமை தூக்கப் போயிருப்பதாகச் சொன்னார்.
தமிழுக்கு மருத்துவரைப் பார்க்கத் தேவைப்படுமென போயிருப்பான் என்று புரிந்தது. இவள் ‘ஓனரம்மா’விடம் இருநூறு ரூபாய் கேட்டாள். அவர் நூறு ரூபாய்தான் கொடுத்திருந்தார். ‘ஆஸ்பத்திரிக்கு, பாலு, பன்னு வாங்க எப்படி பத்தும்’ என்று கலங்கிக் கொண்டே வந்திருந்தாள்.
கணவன் வேலைக்குப் போனது ஒருவகையில் நல்லது என்று நினைத்தாள். ஆனால் சற்றுநேரத்தில் சோர்வாக வந்தவனைப் பார்த்தவளுக்கு கஷ்டமாக இருந்தது. அவன் முகத்தில் விரக்தியும் தெரிந்தது. “என்னாச்சு” என்றாள்.
“ஒன்னுமில்ல” என்றான்.
“மொதல சோறு வச்சி குடு, அவன் உன்னும் சாப்டல” என்றார் ஆயா.
கடையில் இன்று தக்காளி சாதம் மிச்சமிருந்தது. ‘ஓனரம்மா’ அதை எடுத்துப் போகச் சொல்லி இருந்தார். எடுத்து வந்திருந்த சோற்றில் கொஞ்சம் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆயாவிற்கு கொடுத்தாள்.
“அவனுக்கு குடுனு சொன்னேன்ல” என்றார்.
“நீ சாப்டு, அவருக்கு குடுக்கிறேன்” என்று கணவனுக்குப் பொட்டலத்தை அப்படியே கொடுத்தாள்.
“உனக்கு” என்றான்.
“பசிக்கல. சூடா எதுனா குடிக்கணும் போல இருக்கு” என்றதும், தேநீர் வாங்கப் போக எழுந்தான்.
அவனைப் பிடித்து உட்கார வைத்து, “நீ மொதல சாப்டு. மீனாக்கு நைட்டுக்கு எதுனா கடையில வாங்கிக்கலாம். நீ இத எல்லாம் சாப்பிடு” என்று தமிழைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “இன்னும் இவளுக்கு காய்ச்சல் குறையல” என்றாள். “ஆஸ்பத்திரி போனும் போல” என்றாள்.
“ஏழு மணிக்கு மேல போலாம், இப்ப கைல காசு இருக்கு” என்றான்.
காய்ச்சல், சளி தொந்தரவு என்றால் வழக்கமாக அவர்கள் போகும் ஒரு சின்ன கிளினிக் இந்தப் பகுதியில் இருக்கிறது. ஏழு மணிக்கு மேல் திறப்பார்கள். அதைத்தான் பக்ஸ் சொன்னான். அதுவரைக்கும் அப்படியே விட முடியாது என்று, ராணி வெந்நீர் வைத்து தமிழுக்கு ஒத்தனம் கொடுத்தாள்.
சாப்பிட்டு முடித்த பக்ஸ் அருகிலிருந்த கடையில் தேநீர் வாங்கி வந்தான். ஒரு காகிதக் கோப்பையை ஆயாவிடம் கொடுத்தான். இன்னொன்றை மனைவி கையில் கொடுத்துவிட்டு, மகளை எழுப்பப் போய்விட்டான்.
வெற்றியைப் பற்றி அவர்கள் பேசிக் கொள்ளவேயில்லை. அவன் மீதிருந்த கோபத்தை அப்படித்தான் வெளிப்படுத்தினார்கள். அதேநேரத்தில் அவர்கள் இன்னொன்றை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். அது குணா வந்து நின்றுவிடுவானோ என்ற பயம்தான்.
ஏற்கனவே அழுது கரையும் குழந்தை மேலும் மேலும் அழுமோ என்ற பயம் அவர்களுக்கு அதிகம் இருந்தது.
