Kathambari Novels
அடுத்தடுத்து வந்த நாட்களிலும் வெற்றி தமிழைப் பார்க்க வந்தான்.
ஆயாவிடம் சற்று சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தான் வெற்றி. பக்ஸிடமும் பேசினான். பக்ஸூம் சாதாரணமாகப் பேசினான். தமிழை வெற்றி பார்த்துக் கொள்ளும் விதம், வெற்றியைப் பார்த்தால் மட்டும் தமிழிடம் வரும் துள்ளல், துடிப்பை பார்த்தபின், பகவதிக்கு வேறு யோசனைகள் வரவில்லை.
இதில் பகவதிக்கு சிறு புரிதல், தெளிவு வந்தது போல இருந்தது. ராணிக்கு இன்னுமே குழப்பம் இருக்கிறது.
வெற்றி வந்தால், ஒன்று தமிழைக் கூட்டிக் கொண்டு ரயில் நிலையம் சென்று வருவான். இல்லையா இங்கே பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு இடத்திற்குக் கூட்டிப் போவான். எங்கே போனாலும் அவளுக்கு இரவு உணவு ஊட்டிவிட்டு, தூங்க வைத்த பின்தான் வீட்டிற்குச் செல்வான்.
சிலநாள்கள் அவளுக்காக வீட்டிலிருந்து உணவு எடுத்து வருவான். காலையில் சமைக்கின்ற உணவை மாலையில்தான் அவளுக்குக் கொடுக்க முடியும்.
இப்படி இல்லாமல், அவன் சமைக்கும் போது காலைச் சுற்றிக் கொண்டு வந்து வந்து அவள் நின்றால், டிவியில் பொம்மை படம் பார்த்துக் கொண்டிருந்தால், விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடினால்… எப்படி இருக்கும்?
அவளைச் சமாளித்தபடியே சமையல் செய்து, அதை அவளுக்கு ஊட்டிவிட்டு, அவனும் சாப்பிட்டு முடிக்கும் வாழ்வுக்கு… ஆசைப்படுகிறான்.
‘என் மகள்’ என்ற உணர்வு அவனுக்கு மேலோங்கி இருந்தது.
யாரும் ‘எப்படி இந்த பந்தம்’ என்று கேட்டால், வெற்றியால் இது இப்படித்தான், இதனால்தான் என்று விளக்கிச் சொல்ல முடியாது. இது மன நெகிழ் உணர்வு, அதற்கு மொழி உருவம் கொடுக்க என்றைக்குமே அவனால் முடியாது.
தமிழும் அவனிடம் இன்னும் இன்னும் ஒட்டிக் கொள்கிறாள்.
மாலை நேரம் வெற்றி வருவதிற்காக குழந்தை காத்திருப்பாள். தாமதமாக அவன் வந்தால் கோப்படுவாள். அதுவும் கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு, கண்கள் சுருக்கி அவள் கோபத்தை வெளிப்படுத்தும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும் வெற்றிக்கு.
ஆனால் அப்படியே விட்டால் அழுதுவிடுவாள். அவளைத் தூக்கிக் கொண்டு அந்தப் பகுதியை இரண்டொரு முறை சுற்றி வந்து அவன் சாமாதனப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அந்தக் குட்டி முகத்தில் கோபம் போகும்.
அவளைத் தூக்கிச் சுமக்கும் நேரங்களில் எல்லாம், இத்தனை நாளாக அவன் மனம் தூக்கிச் சுமக்க நேர்ந்த பாரங்கள் லேசானது. குழந்தையில்லை என்ற குறை குன்றிப் போனது. பற்றற்ற இருந்த வாழ்வில் பற்றுதல் வந்திருந்தது.
இருந்த பிரச்சனைகளால்… உயிர்ப்பசையில்லாமல் ஒரு கயிற்றில் ஊசலாடிக் கொண்டிருந்த அவன் உயிர், தமிழ் வருகைக்கு பின் ஊஞ்சலில் உட்கார்ந்து அசைந்தாடுவது போல் இதத்துடன் இருக்கிறது.
அந்த இதம் இரட்டிப்பாகிடும்… அவளுக்கு அவன் ஊட்டிவிடும்போது அவளும் அவனுக்கு ஊட்டிவிடுகையில், அவள் அவனிடம் காட்டும் அன்பில்.
ஐஸ்கிரீம், பலூன், சாக்லேட் வேண்டுமென்று சிலநேரம் அடம்பிடிப்பாள். பேசு மொழி இருக்காதுதான். ஆனால் அவளது குண்டு கண்களும், கைவிரல்களும் பேசும் மொழிக்கு ஈடே இல்லை என்று வெற்றிக்குத் தோன்றும். உமாவிடம் போல் ஒன்றிரண்டு வார்த்தைகள் இவனிடமும் பேச முயற்சிக்கிறாள்.
அம்மாவைப் போல் யாராலும் ஆக முடியாதுதான். அம்மாவின் அன்பு போல் யாராலும் தர முடியாதுதான். ஆனால் வெற்றியின் பாசத்தில், அம்மாவின் நிழலில் இருப்பதைப் போலத்தான் தமிழ் உணர்கிறாள்.
சிலநேரங்களில் ஆயா, “தமிழு, அவ அம்மாட்ட இருக்க மாறிதான் உன்ட்டயும் இருக்கா தம்பி’ என்று வெற்றியிடம் சொல்வார். அதைக் கேட்க கேட்க அவனுக்கு, ‘தமிழ் என் பொண்ணு’ என்ற உரிமையும் வந்திருந்தது.
இப்படி இருவருக்குமான பிணைப்பு ஒரு பந்தமாக மாறியிருந்தது.
சிலசமயம் அவளைத் தூங்க வைத்துவிட்டு, படுக்க வைக்கும் போது தூக்கம் கலைந்து முழித்து விடுவாள். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனைப் போகவும் விடமாட்டாள். மீண்டும் அவள் ஆழ்ந்து உறங்கும் வரை அவள் பக்கத்திலேயே படுத்திருப்பான். தட்டிக் கொடுப்பான்.
நடுஇரவு எழுந்துவிட்டால் என்னைத் தேடுவாளே என்ற கலக்கத்துடன்தான் அங்கிருந்து போவான்.
அடிக்கடி ஆயாவிடம் குணா பற்றி விசாரிப்பான். அவனுக்குள் ஒரு சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கிறது. அவன் வீட்டை நினைக்கையில், குணாவை நினைக்கையில்… ஒரு குழப்பம் வந்துவிடுகிறது முடிவெடுக்க முடியாமல்.
கோவில் கூட்டிச் சென்ற பின், தமிழை வேறெங்கும் கூட்டிச் செல்லவில்லை. ஒரு நாள் முழுதும் அவளுடன் நேரம் செலவிட வேண்டுமென நினைத்தவன், இன்று விடுமுறை எடுத்துவிட்டு, காலையில் சீக்கிரமே தமிழைப் பார்க்க வீட்டிலிருந்து கிளம்பியிருந்தான்.
மகனை விட வந்திருந்த சாந்தி, ” வெற்றி எங்கப்பா” என்றாள்.
“இன்னிக்கு லீவ் போட்டுருக்கான், வெளிய போனும்னு சொல்லிட்டு அப்பவே கிளம்பிட்டான்” என்றார் பேரனை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு.
அப்பா சொன்னதைக் கேட்டவள் யோசனையில் இருந்தாள்.
“என்ன சாந்தி, என்ன யோசிக்கிற?”
“ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்பா, உங்க கிட்ட சொல்லணும்” எனும்போதே ஹரிணி அங்கே வந்தாள். வந்தவள் திரும்பப் போகவில்லை. அலமாரியில் எதையோ எடுப்பதுபோல் அங்கேயே நின்றாள்.
“அப்புறமா சொல்றேன் ப்பா” என்றுவிட்டாள் சாந்தி.
சட்டென்று திரும்பிய ஹரிணி, “என்னய பத்திதான சொல்ல வந்தீங்க, நான் வந்ததும் நிறுத்திட்டீங்களா” என்றாள்.
‘இவ ஒருத்தி’ என்று எரிச்சல் வந்தது சாந்திக்கு.
“என்ன பேச மாட்டிக்கிறீங்க? பேசுங்க” – ஹரிணி.
“ப்ச் உன்னய பத்தி இல்ல, வெற்றிய பத்தி பேச நினைச்சேன்” – சாந்தி.
“ஓ, உங்க தம்பிய பத்தியா? வெற்றி பத்தி எனக்கும் ஒரு விசயம் தெரியும், உங்ககிட்ட சொல்லவா”
‘இவளுக்கு என்ன தெரியும்’ என்பது போல் சாந்தியும், சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“உங்க தம்பி யாருக்கோ சாப்பாடு செஞ்சி எடுத்துட்டு போறாரு. அதுவும் சின்ன பிள்ளைங்களுக்கு பிடிக்கிற மாதிரி நூடுல்ஸ் பாஸ்தா மாதிரி. எனக்கு தெரியாதுனு நினைச்சுக்கிட்டே இருக்காரு. அது எப்படி எனக்கு தெரியாம போகும்? குப்பையில கவர் பார்த்தே கண்டுபிடிச்சிட்டேன்” என்றாள்.
ஹரிணி எழுந்து கொள்ளும் முன் எழுந்து சத்தம் வராமல் வெற்றி சமைத்து முடித்துவிடுவான். புழங்கும் பாத்திரங்களை கழுவியும் வைத்துவிடுவான். தேவையான பொருட்களை அவனே வாங்கிக் கொள்வான். இருந்தும் ஹரிணி அவன் வழக்கத்தைக் கண்டுகொண்டாள்.
அவள் சொல்வதை நம்ப முடியாமல் இருந்தனர் சாந்தியும்.
அப்போது அறையிலிருந்து ரோகன் அழுகுரல் கேட்க, “இதோ அம்மா வர்றேன் டா” என்று ஹரிணி போய்விட்டாள்.
சந்திரன், “என்னம்மா இது?” என்று மகளைப் பார்த்தார்.
“தெரியலப்பா, என்னென்னு வெற்றிகிட்ட கேட்கலாம்”
“இவன் என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கான், சின்ன புள்ளைக்கு மாதிரி சாப்பாடுனா… எதும் குழந்தை…” என்று பாதியிலே நிறுத்தியவர், “என்னால அதலாம் ஒத்துக்கவே முடியாது” என்றார் கோபமாக.
“நீங்க ஏன் ப்பா இப்படி யோசிக்கிறீங்க, நம்மளுக்கு அதலாம் பிடிக்காதுன்னு அவனுக்குத் தெரியும்ல” என்று தந்தைக்கு ஆறுதல் சொன்னாள்.
“ஸ்வேதாவோட சேர்ந்து வாழற எண்ணமே இல்லயா இவனுக்கு, அவகூட பேசற மாதிரியே தெரியல. அம்பிகா இருந்தா அவனை இப்படியே விட்ருக்க மாட்டா” என்றார் புலம்பலாக.
சாந்தி யோசனையோடு இருக்க, “நீ என்ன சொல்ல வந்த மா, வெற்றி பத்தினு ஹரிணிகிட்ட சொன்ன. அவனை பத்தி இன்னும் என்ன” என்று கேட்டார்.
அப்பா முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்தாள். தான் சொல்ல வந்ததைச் வருந்துவார். “நீங்க ஏன் டென்சன் எடுத்துக்கிறீங்க ப்பா, நம்ம வெற்றிகிட்ட பேசலாம். லேட் ஆயிடுச்சு, நான் அப்புறம் உங்ககிட்ட பேசறேன். நீங்க எதும் அவன்கிட்ட கேட்டுக்க வேண்டாம்” என்று அப்பாவிற்கு காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு, கொஞ்சம் அவளும் குடித்துவிட்டுக் கிளம்பினாள்.
போகும் வழியெல்லாம் ஹரிணி சொன்ன விடயத்தை, அவள் கேள்விப்பட்ட விடயத்தை யோசித்துக் கொண்டே சென்றாள். உடனே வெற்றியிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
வெற்றி வந்து தமிழைக் கிளப்பிக் கூட்டிச் சென்றிருந்தான். வழக்கம் போல் ஆயா, “எப்ப கொண்டு வந்து விடுவ தம்பி?” என்று கேட்டிருந்தார். வெற்றி, “சாயங்காலமா” என்றுவிட்டுச் சென்றிருந்தான்.
தமிழை வெற்றி பக்கத்தில் இருக்கும் இடத்திற்குக் கூட்டிப் போனாலும், ‘எப்ப கொண்டு வந்து விடுவ தம்பி’ என்று கேட்டுக் கொள்வது அவர் வழக்கம்.
பக்ஸ் மதியத்திற்கு சமைத்துக் கொண்டிருந்தான். அவன் மகள் விளையாடிக் கொண்டிருந்தாள். ராணி இன்னும் வேலைக்குப் போகவில்லை. ‘ஓனரம்மா’ உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால், இன்று மாலை மட்டும்தான் கடை திறக்கப் போகிறார். காலையில் கிடையாது.
வெற்றி வந்து தமிழைக் கூட்டிச் செல்வதைப் பார்த்தவள், யோசனையோடு அங்கிருந்த கல்லில் உட்கார்ந்துவிட்டாள்.
“என்னத்த யோசிச்சுகின்னு இருக்க” என்று ராணி அருகில் அமர்ந்தார் ஆயா.
“நீ எதுனா அந்த சார்கிட்ட கேட்டியா, டெய்லி வந்து தமிழ பாக்கிறாரு, என்ன முடிவுல இருக்காருன்னு”
‘கேட்கலை’ என்று தலையசைத்தார்.
“கிளிரா கேட்டுக்கணும்ல ஆயா”
“கேக்கலாம்”
“எப்ப ஆயா, வெற்றி சார் டெய்லியும் வர்றாரு, பெத்த புள்ளய பாத்துகிற மாதிரி தமிழ பாத்துக்கிறாரு. இது எங்க போய் முடியுமோனு நெனைச்சா பயமா இருக்குது” என்று இத்தனை நாள்களாக அவள் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டாள்.
“இது முடியுமானே எனக்கு தெரில”
“நீ என்ன சொல்றன்னு புரிது, ஆனா குணா அண்ணா வந்து கேட்டா நாம என்ன சொல்ல”
“புள்ள என்ன செய்யுதுனு ஏது செய்யுதுன்னு யோசிக்கிறவனா அவன். அவன் எங்க வந்து கேக்க போறான், அவனுக்கு எதுக்கு பதில் சொல்லணும்”
“அன்னிக்கு நீதான ஆயா சொன்ன, தமிழ் மேல உரிமைபட்டவங்க நாங்க இல்ல, குணா அண்ணாதான்னு”
ஆயா அமைதியாக இருந்தார்.
“எனக்கு ஒன்னு மட்டும் புரியல, எப்படி தமிழ் அவர்கிட்ட இப்படி ஒட்டிக்குது, வெளிய கூட்டிப் போனா பயமே இல்லாம போகுது… ரத்த பந்தமே கிடையாது ஆனா அவங்க ரெண்டு பேர பாத்தா அப்படியா தெரிது… எப்படித்தானோ”
“இரு உனக்கு புரிய வைக்கேன்” என்றவர் புளிச்சோறு செய்து கொண்டிருந்த பகவதியிடம், “பக்ஸ், இந்த ஆயா செத்தப்புறம் நீதான் கொல்லி போடணும், சரியா” என்றார்.
“அறிவில்லயா ஆயா? என்ன பேசுற? நல்ல பேச்சு பேசி பழகு. இப்ப எதுக்கு இந்த பேச்செல்லாம் வருது? இன்னொரு தடவ இப்டி பேசினா, அவ்ளோதான். கண்டிஷனலா சொல்றேன், இப்படி பேசாத” என்று கத்திவிட்டு, “உடம்புக்கு எதுனா செய்துனா சொல்லிடு ஆயா, டாக்டர்ட்ட காட்டலாம்” என்றான்.
“சரி சரி பேசல பக்ஸ்” என்றுவிட்டு, ராணியைப் பார்த்தார்.
அவர் பேசியது பிடிக்காமல் அவள் முகத்திலும் கண்டனம் தெரிந்தது.
“அதான் பேசலனு சொல்லிட்டேன்னே, வுடு” என்றவர், “இவனுக்கும் எனக்கும் ரத்த பந்தமா சொல்லு, அப்புறம் எப்படி இந்த பாசம்?” என்றார்.
“நீ சொல்ல வர்றது புரியுது. ஆனா இங்க எனக்கு நீ யாரு, பக்ஸ் எப்படின்னு டீடைல் தெரியும். இதே தமிழ் விஷயத்துல அப்படியா? வெற்றி சார் பத்தி முழுசா தெரியாது, அவர் குடும்பம் பத்தியும் தெரியாது. அவர் வீட்டுல இது தெரியுமா? அவங்க என்ன நினைப்பாங்க? இதலாம் யோசிக்கணும்ல”
சட்டென்று ஆயா எழுந்து கொண்டார். “எந்திரி ராணி” என்றார் அதிகாரமாக.
அவர் தொனியைக் கேட்டு உள்ளே போன குரலில், “ஆயா” என்றாள்.
“எந்திரினு சொன்னேன்” என்றதும், ராணி எழுந்துவிட்டாள். “பக்ஸே எல்லா வேலையும் பார்க்கணுமா, போ போய் நீயும் பாரு. ஊற வெச்சிருக்க துணிய துவச்சி போடு, வெயில் அடிக்கப்பவே காயட்டும்” என்றார்.
“என்னத்துக்கு ஆயா இப்ப இது, அவ ரெஸ்ட்ல இருக்கட்டும், ஒரு நாள்தான் இப்டி உக்காந்திருக்கா, அதும் சாயங்காலம் வேலைக்கு போனும், வுடு” என்று மனைவிக்காகப் பக்ஸ் பேசினான்.
“அவ ரெஸ்ட் எடுத்தது போதும். சும்மா இருந்தா எதுனா யோசிச்சுக்கினே இருப்பா. வேல பாக்கட்டும். நீ வந்து கொஞ்சம் நேரம் உக்காரு, உன் மக வந்துட்டா அவளை தூக்கி வெச்சிகிட்டே சுத்துவ, உக்கார மாட்டா”
பக்ஸ் சமையலை முடித்திருந்தான். ஆயா சொன்னதும் வந்து உட்கார்ந்தான். ஆயாவும் வந்து கால்நீட்டி அமர்ந்தார். வரும்போதே ஆடு புலி ஆட்டத்தின் கட்டம் வரையப்பட்டிருந்த அழுக்கேறிய பழைய கார்டு போர்டை எடுத்து வந்தார். இருவரும் அதை விளையாட ஆரம்பித்தனர்.
இவர்களைப் பார்த்தாள் ராணி. துணியை வாளிக்குள் வைத்தே கசக்கிக் கொண்டு, “நல்லா இருக்கு ஆயா, நீ நல்லா உக்காந்துகிட்டு என்னய வேலை வாங்குற. மாமியார் கொடுமைனு கேஸ் கொடுக்கறேன் பாரு” என்றாள்.
பக்ஸ், ஆயா சிரித்தனர். “எது இந்த நாலு துணியை அலசிப் போடுறதுக்கு கேஸா உனக்கு” என்றார் ஆயா.
ராணியும் சிரித்தாள். சிரித்துக்கொண்டே கணவனிடம், “எதுனா புது சாங்ஸ் போட்டு வுடு பக்ஸ்” என்றாள்.
“ஆயா என் போன்ல நெட் இல்ல. குடு உன் போன” என்று ஆயாவிடமிருந்து அலைபேசியை வாங்கி அதில் மனைவிக்காகப் பாட்டு போட்டான்.
ஒருபக்கம் பாட்டு கேட்டபடி, மறுபக்கம் ஒருவரை ஒருவர் கேலி பேசியபடி இருந்தனர். வெகுநாளுக்கு பிறகு மூவரும் இப்படி இருக்கின்றனர். தமிழின் நிலை நினைத்து வருந்தி இருந்ததால், இப்படியெல்லாம் இதற்கு முன் இருக்க முடியாமல் போயிருந்தது.
இப்போது வெற்றியின் கைகளில் தமிழ் பத்திரமாக இருக்கிறாள், இருப்பாள் என்று புரிந்ததும், அவர்கள் இயல்பாக இருந்தனர்.
அவர்கள் இயல்பிற்கு ஆயுள் மிகக் குறைவு போல. குணா வந்து நின்றான். மூவருக்கும் ‘இவன் எதுக்கு இங்க வந்து நிக்கறான்’ என்று தோன்றியது. பக்ஸ் ஆயா எழுந்து போய் குணா முன் நின்றார்கள். கை ஈரத்தை புடவையில் துடைத்தபடி ராணியும் வந்தாள்.
கம்பித் தடுப்புக்கு வெளியேதான் நின்றான் குணா. அங்கே நின்றபடி அந்த இடத்தைச் சுற்றி பார்வையைச் சூழல விட்டான். “என்ன பக்ஸ் இன்னும் எத்தினி நாளு இதே இடத்தில இருக்க போற, வுடு கீடு பாத்து போற ஐடியா இருக்கா உனக்கு” என்றான்.
“அடி வாங்காம போ மாட்ட போல, என்னத்துக்கு இங்க வந்து நிக்க” – விட்டால் அடித்து விடும் தோரணையில் பக்ஸ் நின்றான்.
‘எதுக்கு வம்பு’ என்று குணா, “தமிழ் எங்க” என்றான்.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பதில் சொல்லவில்லை.
“என்னாச்சு உங்களுக்கு… தமிழு எங்க” என்றான் மீண்டும் குணா.
ராணி, “அது… வந்து அண்ணா…. அவ” என்று வெற்றியுடன் போனதை சொல்ல வர, அவளைத் தடுத்த பக்ஸ், “என் பொண்ணு கூட பார்க்ல விளையாடிட்டு இருக்கா தமிழ்” என்றான்.
உடனே குணா திரும்பிப் பூங்காவைப் பார்த்தான்.
அங்கே போய் பார்ப்பானோ? இவன் அப்படிச் செய்ய மாட்டான் என்றாலும், பார்த்தால்… பார்த்துவிட்டால் என்ற பயம் வந்தது பகவதிக்கு. அடுத்தநொடி ‘இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்கு ஏன் நான் பயப்படனும்’ என்றும் தோன்றியது. “என்ன விசயம்னு சொல்லு” என்றான் குணாவிடம்.
“தமிழ ஆசிரமத்துல கொண்டு போய் நானே வுட முடிவு பண்ணிருக்கேன். அத சொல்லத்தான் வந்தேன்”
மூவருக்கும் அதிர்ச்சி. ‘என்ன, திடீர்னு இப்படி வந்து பேசுறான்’ என்று. பக்ஸ் அதைக் குணாவிடம் கேட்கவும் செய்தான்.
“இல்லாட்டி நீயும் உன் பொண்டாட்டியும் என் வீட்டு முன்ன வந்து நின்னு கண்ணா பின்னானு பேசுவீங்க. அதான் இப்டி ஒரு முடிவு. ரெண்டு மூனு இடத்துல கேட்டிருக்கேன். எதுல சுளுவா முடியுதோ அதுல கொண்டு போய் தமிழ வுட்ருவேன்” என்றான் குணா.
அன்று குணாவை பக்ஸ் சத்தம் போட்டுப் போனபின் கோமதி யோசித்தாள். அவனோ, ராணியோ தமிழுக்காகப் பேசுவது, அதை அக்கம்பத்து ஆட்கள் வேடிக்கைப் பார்ப்பது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதில் பக்ஸ் கோபத்தில் குணாவை திட்டுகிறான். அடிக்க வேறு செய்கிறான்.
இது இப்படியே தொடர அவள் விரும்பவில்லை. இதற்கு முடிவு வேண்டுமென யோசித்தாள். அவள்தான், ‘பேசாம தமிழ எங்கயாவது கொண்டு போய் நீயே தள்ளிட்டு வந்திடு, அப்பத்தான் நமக்கு நிம்மதி’ என்று சொல்லிருந்தாள்.
மனைவி சொன்னதை அப்படியே செயல்படுத்த நினைத்துவிட்டான் குணா.
வெற்றியையும் தமிழையும் நினைத்து ஆயாவிற்கு மனது என்னவோ போல் ஆயிற்று. பக்ஸிடம், ” நாங்க பாத்துகிறோம்னு சொல்லு, ஆசிரமத்தில வுடுறது கூட நம்மளே பார்த்துக்கலாம்” என்று முணுமுணுத்தார். அதை அப்படியே குணாவிடம் சொன்னான் பக்ஸ்.
“ஆங்ங்… இந்த கதயே வேணாம் பக்ஸ். அப்புறம் அதுக்கும் வந்து எதுனா சொல்லிக்கினே இருப்பீங்க. நான் பிக்கல் பிடுங்கல் இல்லாம இருக்கணும், அதுக்கு இதான் ஒரே வழி” என்றான் உறுதியாக.
“இவ்ளோ நாள் எப்படி இருந்தியோ அப்படியே ஒதுங்கிக்கோ குணா. புதுசா என்னாத்துக்கு தேவையில்லாத வேல பாக்குற” என்றான் பக்ஸ்.
பகவதியை மேலும் கீழும் பார்த்தான் குணா. “என்ன நீ அப்படி இருந்தப்போ திட்டிட்டு, இப்போ வந்து அப்படியே இருனு பேசுற… என்ன விசயம்” என்றான்.
பதில் சொல்ல பக்ஸ் தடுமாறினான். வெற்றி பற்றி குணாவிடம் சொல்ல கணவன் விருப்பப்படவில்லை என்று ராணி புரிந்து கொண்டாள். “இல்ல ணா நீங்க திடீர்னு சொல்லவும் அவரால நம்ப முடியல” என்றாள்.
“உன் புருசன நம்ப சொல்லு ராணி, மெய்யாலுந்தான் சொல்றேன்” என்று சிரித்தபடி ஆயாவைப் பார்த்தான் குணா.
குணாவிடம் ஆயா பேசவே மாட்டார். உமாவிற்கு அவன் செய்தது துரோகம். அந்தக் கோபம் அவருக்கு அதிகம் உண்டு. அவர் அவனைப் பார்க்கையில் எல்லாம் அவர் கண்களில் கோபம், கண்டனம் வெளிப்படும். ஆனால் இன்று அந்தக் கண்களில் யோசிப்பும்… குழப்பமும் இருந்தது.
‘எப்பவும் இந்த கிழவி என்னய வெட்டுற மாதிரியே பார்க்கும். இன்னிக்கு என்ன இப்படி’ என்று குணா யோசித்தான். உடனே ‘நீ எப்படியோ இருந்துட்டு போ எனக்கென்ன’ என்று மாறிவிட்டான்.
“டீடெயில் பார்த்துட்டு ரெண்டு மூனு நாள்ல வந்து தமிழ கூட்டிட்டுப் போறேன் ராணி. இனிமேட்டு வூட்டாண்ட வந்து நிக்காதீங்க. என் பொண்டாட்டி அத ரொம்ப அசிங்கமா நினைக்கிறா” என்று சொல்லவிட்டுப் போனான்.
அவன் அந்தப் பக்கம் போனதும், இந்தப் பக்கம் பக்ஸ், ஆயா அப்படியே தரையில் அமர்ந்துவிட்டனர். “இந்த பையன் வெற்றி… அடிக்கடி என்ட்ட தமிழ் அப்பா வந்துச்சா வந்துச்சானு கேட்டுக்கினே இருப்பான்” என்றார் ஆயா… இதை எதற்கு சொல்கிறோம் என்று தெரியாமல்.
“ஆயா நீ குணாட்ட பேசிப் பாரேன்” என்றான் பக்ஸ்.
“அவன்ட்ட பேசவே இஷ்டமில்ல. இருந்தாலும் பேசலாம்னு தோணுது. ஆனா என்ன பேச, வெற்றி தம்பி என்ன முடிவுல இருக்கான்னு தெரியனுமே மொதல. அப்படியே தெரிஞ்சாலும் அப்பன்ட்ட புள்ளய குடுக்க முடியாதுனு நாம எப்படி சொல்ல முடியும்?”
“இவன்லாம் ஒரு அப்பனா? இங்கன இருக்க பார்க்-ல புள்ள விளாண்டுகிட்டு இருக்குனு சொல்றேன், போய் பாத்தானா அவன்” என்றான் பக்ஸ் கோபமாக.
“குணா அண்ணா போய் பாத்தாலும், பாக்கலைனாலும் அவருக்குத்தான் தமிழ் மேல உரிமை இருக்கு” என்றாள் ராணி.
இன்னும் கோபமாக, “சொம்மா இதயே பேசாத ராணி. இவன் சொல்றான்னு இப்ப மட்டும் நாம தமிழ தூக்கி கொடுத்தோம்னு வை, அந்த புள்ள மனசு நொடிஞ்சிடும். அது பாவம்” என்றான் பக்ஸ்.
சற்று நேரத்திற்கு முன் இருந்த மனநிலை மாறி, மூவரும் யோசனையில் இருந்தார்கள்.
இதற்கிடையில் வீட்டில் நடப்பதும் தெரியாமல், குணா முடிவும் தெரியாமல் தமிழை மடியில் வைத்து… அவளுக்கு வேடிக்கை காட்டியபடி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான் வெற்றி.
