Kathambari Novels
தமிழைப் பார்த்தபடி வந்த ராணி சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த கணவனையும் மகளையும் பார்த்தாள்.
பகவதி மகளை மடியில் உட்கார வைத்திருக்க, அவள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஐஸ்க்ரீம் உருகி மகள் விரல்களில் வழிவதை அடிக்கடி துண்டால் துடைத்துவிட்டான்.
ஏற்கனவே குணா மீது ராணிக்கு கோபம் இருந்தது. தமிழ் ஓரமாக நிற்பதை, சலுகையாக அப்பா மடியில் அமர்ந்து மீனா சாப்பிடுவதைப் பார்த்ததும், தமிழுக்கும் வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது.
மீனா குழந்தை. இது அவளுக்குத் தெரியாது. ஆனால் கணவனுக்குத் தெரிய வேண்டுமல்லவா? பக்ஸ் மீதும் கோபம் வந்துவிட்டது.
விறுவிறுவென்று கணவன் அருகே சென்றவள், “ஐஸ்க்ரீம் வாங்குறப்ப, அந்த புள்ளைக்கு சேர்த்து வாங்கி இருக்கலாமே பக்ஸ். ஏன் வாங்காம வுட்ட, கல்லு மனசா உனக்கு” என்று கத்தினாள்.
பகவதிக்கு அப்படியொரு கோபம். அங்கே நின்றால் அவளைத் திட்டி விடுவோம் என்று மகளைத் தூக்கிக் கொண்டு எதிரே பூங்கா வாசலில் போட்டிருந்த பெஞ்சில் போய் அமர்ந்துவிட்டான்.
ராணி கத்தியதைக் கேட்ட ஆயா, “ஏய் இன்னா ஓவரா பேசற” என்று எழுந்து வந்து, “கல்லு மனசா? அவன் வேல முடிஞ்சி வந்து உனக்கு சோறு ஆக்கி வச்சி, துணிமணிய துவைச்சு போட்டு, புள்ளய பாத்துக்கிட்டா, நீ உன் இஷ்டத்துக்கு வந்து நின்னது மட்டுமில்லாம… அவனை பேசுவியா?” என்று கத்தினார்.
ராணி பகவதியைப் பேசியதும் ஆயாவிற்கு கோபம் வந்துவிட்டது. அவர்கள் இருவரின் பிணைப்பு அப்படியானது. ஆயா பகவதியை மகன் போல, இல்லை மகனாகவே பார்க்கிறார்.
ஆயாவின் மூன்று பிள்ளைகளும் படிப்பு, வேலை என்று வந்ததும் அவரை விட்டு விலகிச் சென்றுவிட்டனர். அவர்கள் வசதிக்கு ஏற்றாற்போல் அவர்கள் இருக்கிறார்கள் என்று மனத்தை திடப்படுத்தினாலும், இந்த வயதில் பிள்ளைகள் யாரும் இல்லாமல் இருப்பது மனதை என்னவோ செய்யத்தான் செய்கிறது.
வேலை வேலை என்று அவரைப் பற்றி ஒரு நொடியும் யோசிக்காமல் ஓடிய வாழ்க்கை; தனியாகவே பிள்ளைகளைப் பார்த்தது; கணவன் வேறு சரியாக இல்லாததது அவரை ஒருமாதிரி பழகுவதற்கு கடினமானவராகக் காட்டியது. அதனால் யாரும் அவருடன் பேசக்கூட மாட்டார்கள். ஒதுங்கிக் கொள்வார்கள்.
அதையும் தாண்டி சிலர் பேசுவார்கள். இங்கே யாரும் எதுவும் உதவி என்று வந்து கேட்டால், செய்யலாம் என்று மனத்திற்குத் தோன்றினால் செய்வார். இல்லையா, முகத்திற்கு நேராக முடியாது என்று மறுத்துவிடுவார்.
பகவதி இந்தப் பகுதி வந்தபோதும் அப்படித்தான் இருந்தார்.
அவன்தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசினான். அவருக்கு எதுவும் தேவை என்றால் அதைக் கவனித்துச் செய்தான். இதற்குமுன் வேறு யாராவது உதவி செய்ய முன்வந்தால் வேண்டாம் என்று ஆயா மறுத்துவிடுவார்.
ஆனால் பக்ஸ் செய்யும் போது அப்படிச் சொல்ல முடியவில்லை.
ஏற்றுக்கொண்டார். ஏனோ ஏற்றுக்கொள்ள தோன்றியது. அவனுடன் பேசுவது போல் வேறு யாருடனும் அவர் பேசுவதில்லை.
பிள்ளைகள் உட்பட அவர் யாரிடமும் எதுவும் கேட்டுக் கொண்டது இல்லை.
ஆனால் பக்ஸிடம் கேட்பார்.
‘எனக்கு முடியல. இன்னிக்கு டிப்பன் வாங்கி வந்து குடு; முட்டி வலிக்கு மருந்து எதுனா வாங்கின்னு வா;’ இப்படி அவனிடம் மட்டும்தான் உரிமையாகக் கேட்பார்.
அவனுமே அப்படித்தான். சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. வீட்டில் ஒரு பெரியவர் இருந்தால் இப்படிச் செய்யலாமா என்று ஒரு அறிவுரை கேட்போமே. அதுபோல் அவன் ஆயாவிடம் கேட்பான்.
சிலநேரம் சிறுபிள்ளை போல, ‘நெட் கொடு ஆயா, ரீல்ஸ் பாக்கணும்’ என்று அவரிடம் வந்து நிற்பான்.
ஏன், எப்படி, எதற்கு என்றெல்லாம் தெரியவில்லை. ‘அவருக்கு வயசாயிடுச்சு. நான்தான் பாத்துக்கணும்’ என்று ஒரு நினைப்பும் அவனுக்குள் வந்துவிட்டது.
அப்படித்தான் பார்த்தும் கொள்கிறான். வீட்டிற்கு என்று அவன் சேமிக்கும் பணத்தை ஆயாவிடம்தான் கொடுத்து வைப்பான். அவர்தான் பூ சந்தையில் நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து வைத்திருக்கிறார். இங்கே வைத்தால் திருட்டுப் பயம் இருக்கிறது என்று.
வீடு பார்த்துப் போகும்போது ஆயாவையும் கூட்டிப் போக நினைக்கிறான். இங்கே தனியே விட்டுச் செல்ல முடியாது. வாய் வார்த்தையாக இதை அவன் அவரிடம் சொல்லவில்லை.
ஆனால் ஆயாவிற்கு அது தெரியும்; புரியும். அவன் விட்டுப் போக மாட்டான் என்று பெரிய நம்பிக்கை, எதிர்பார்ப்பு இருக்கிறது.
இருவரும் உரிமையாகப் பேசுவார்கள். சண்டையும் போடுவார்கள். ஆயா அவனைக் கேலியும் செய்வார். நல்ல மனநிலையில் இருந்தால் சிரித்துக் கொள்வான். இல்லையென்றால் எரிச்சல்படுவான்.
பகவதிக்கு கட்டட வேலை கிடைக்காத நாட்களில் தாயக்கட்டம், ஆடு-புலி ஆட்டம் விளையாடியபடி அரசியல், உலகம், சினிமா என்று பேசுவார்கள்.
எத்தனை தைரியமாக கடுமையாக உழைத்து பிள்ளைகளின் வாழ்க்கையை உயர்த்திவிட்டார் என்று அவரை அண்ணாந்தும் பார்ப்பான்.
அவருக்கும் அவனைப் பற்றி, ‘நல்ல பையன்; பொறுப்பான பிள்ளை’ என்ற எண்ணம். மனைவி, மகளை அவன் பார்த்துக் கொள்வதை தினமும் அவரும் பார்க்கிறார் அல்லவா. அதுதான் ராணி பேசியதுமே கோபம் வந்துவிட்டது அவருக்கு. கத்திவிட்டார்.
ஆயா திட்டியதைக் கேட்டு, ராணி கண்கள் விரித்து அசையாமல் நின்றாள்.
அவரும் விடவில்லை. “உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கா? அவனுக்கு போய் கல்லு மனசுனு சொல்ற. அறிவில்ல. சோறு குழம்பு செஞ்சு வச்சுட்டு, சாப்பிடாம அப்பனும் மகளும் நீ வரணும்னு காத்துக்கினு இருந்தா, நீ வந்து புருசன் சாப்பிட்டானா புள்ள சாப்பிட்டாச்சானு பார்க்காம பேசற.
மத்தவங்கள பாரு! ஒரு பைசாகூட செலவுக்கு குடுக்காம குடிச்சி குடிச்சி வீணாகிறாங்க; பொண்டாட்டி, புள்ளய கவனிக்காம இருக்காங்க. உன்னய கைல வச்சி தாங்கினா, இப்டித்தான் பேசுவியா நீ!” என்றுவிட்டு, “போ, போய் அவன்கிட்ட ஒழுங்கா பேசு” என்று தமிழைக் கூட்டிக் கிளம்பப் பார்த்தார்.
தமிழின் கை பிடித்துப் அழைத்துப் போகப் பார்க்கையில் அவள் வரவில்லை என்பது போல் ஆயாவிடமிருந்து கையை உருவிக் கொள்ளப் பார்த்தாள்.
ராணி, “அவள எங்க கூட்டிப் போற ஆயா” என்றாள்.
“நாங்க கடைல சாப்ட்டு வாறோம். நீ உன் புருசனயும் புள்ளயும் பாரு” என்று தமிழை அழைத்தார்.
‘சாப்பிட’ என்று சைகையால் அவளிடம் சொல்லி ‘வா போகலாம்’ என்று எப்படியோ அழைத்துக் கொண்டும் போய்விட்டார்.
ராணி யோசித்தாள். ஆயா சொல்வது சரிதான். கோபத்தில் பக்ஸை இப்படிப் பேசியிருக்கக் கூடாது. தன்னையும், மகளையும் அவன் எப்படிப் பார்த்துக் கொள்கிறான் என்று தெரியும். அவர்கள்தான் அவன் உலகம். அவனை ஏன் இப்படிப் பேசினேன் என்று மனம் நொந்தாள்.
பேசியது தவறு என்று புரிந்ததும், இருபுறமும் வாகனம் வருவதைக் கவனித்து சாலையை கடந்து கணவனின் அருகில் சென்று அமர்ந்தாள்.
பக்ஸ் மனைவியைக் கண்டு கொள்ளவில்லை. அவள் பக்கம் முகம் திருப்பக் கூடவில்லை.
அவன் கோபப்பட்டு பேசுவான் என்று ராணி இருக்க, அவனோ மகளுடன் பேசி, அவளுக்கு விளையாட்டுக் காட்டியபடி இருந்தான். ராணிக்கு அழுகை வந்துவிட்டது. சத்தமில்லாமல் கண்ணீர் சிந்தினாள்.
அம்மா அழுவதைப் பார்த்த மீனா, “ப்பா அம்மா அல்றங்க” என்றாள் மழலைக் குரலில்.
அப்போதும் மனைவி முகம் பாராமல், “நம்மள திட்டிட்டு உன் அம்மா எதுக்கு அழறா” என்று மகளிடம் கேட்டான்.
ராணிக்கு அழுகை அதிகரிக்க, “குணா அண்ணாவ போய் பாத்து பேசின்னு வந்தேன்” என்றாள்.
அடுத்த நொடியே பகவதி மனைவியைப் பார்த்து, “அவன் உன்னை எதுனா சொன்னானா” என்றான் கோபத்துடன் எரிச்சலுடன்.
இதற்காகத்தான் குணா ராணியிடம் மரியாதையாகப் பேச நினைத்தது. அவளிடம் மட்டும் எடுத்தெறிந்து பேசிவிட்டால் பகவதி வந்து தொலைத்துக் கட்டிவிடுவான் என்று அவனுக்கு தெரியும்.
‘அப்படிலாம் இல்ல’ என்று ராணி தலையசைத்த பின்தான் பக்ஸ் சாந்தமானான்.
ஒரு சிறு அமைதிக்குப் பின் பக்ஸ் பேசினான்.
“ஒரு வாரமா எனக்கு வேல இல்ல. இன்னிக்குதான் வேல கெடைச்சு கைல காசு பார்த்தேன். நாலு நாளா மீனா ஐஸ்க்ரீம் கேட்டுக்கினே இருந்தா. புள்ள ஆசையா கேட்டதும் வாங்கிக் கொடுக்க முடியலனு மனசு வலிச்சது.
சரி இன்னிக்கு வாங்கிக் கொடுத்து அது ஆசைய நிறைவேத்துவோம், நானும் மனசு ஆத்திக்கலாம்னு நினைச்சா நீ வந்து மறுபடியும் வலிக்க வச்சிட்டு. ஏன் ராணி எனக்கு கல்லு மனசா சொல்லு” என்றான் மனைவியிடம்.
உமா இறந்தபோது அவளுக்கு முறையாகக் காரியம் செய்யக்கூட அவளது குடும்பத்தில் யாரும் இல்லை. குணா, என்னால் முடியவே முடியாது என்று ஒதுங்கிக் கொண்டான்.
உமா தம்பி, அவர்கள் அம்மா அப்பா இறந்த பின்னர் ஆந்திரா பக்கமாகச் சென்றுவிட்டான். அதன்பின் அவன் உமாவிடம் பேசியதே இல்லை. ஏதோ ஒரு வேலை, வாழ்க்கை என்று ஆந்திராவிலே இருந்து கொண்டான். இந்தப் பக்கம் அவன் வருவதேயில்லை.
இப்போதும் அவன் அங்குதான் இருக்கிறானா, இல்லை வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டானா என்று யாருக்கும் தெரியாது.
உமாவின் இறுதிச் சடங்குகளைச் செய்ய யாருமில்லா நிலையில், கடைசியில் பகவதியும் ஆயாவும்தான் எல்லாம் எடுத்துச் செய்தனர்.
தன்னைப் போல் ஒரு ஜீவன் என்று ஆயாவிற்கு உமாவைப் பிடிக்கும். ‘நம்ம எடுத்து செய்யலாம் பக்ஸ்’ என்றார் மகனிடம். அதன்பின் பக்ஸ் குணாவை எதிர்பார்க்கவில்லை.
ராணி பேசாமல் இருக்க, “சொல்லு உன் புருசனுக்கு கல்லு மனசா” என்றான் பக்ஸ்.
இல்லை என்று தலையாட்டினாள்.
“என்னய என்ன பண்ண சொல்ற, இன்னொரு புள்ளய காப்பாத்துற அளவுக்கு எங்கிட்ட என்ன காசு கொட்டியா கெடக்கு. நானே அஞ்சுக்கும் பத்துக்கும் அலைஞ்சுகிட்டு இருக்கேன். உருப்படியா ஒரு வேலை கிடையாது.
இப்பதான் நீ வேலைக்கு போற. நாமளும் வீடு வாசல்னு போக முடியும், ரோட்லயே வாழ்க்க முடிஞ்சுடாதுன்னு நம்பிக்கை வந்திருக்கு.
ஒரு சின்ன புள்ளைக்கு சாப்பாடு போட முடியாதானு நீ நினைக்கிறது புரியுது. ஆனா என் நிலமையே மோசமா இருக்கே.
ஆனாலும் இப்ப வரைக்கும் ஆரும் இல்லாத புள்ளைன்னு அவளை பார்த்துக்கினுதான் இருக்கேன்.
அதுக்காக என் புள்ளய பாத்துக்குற மாதிரி அந்த புள்ளய என்னால பாத்துக்க முடியாது. பாத்துக்கோனு நீ சொல்லாத. அது நடக்காது.
சரி அத விடு. தமிழ் என்ன பண்றா, நம்ம அந்த பக்கம் வேலைக்கு போனதும், இந்த பக்கம் டேசன் ஓடி போகுறா. போகாதனு சொன்னாலும் கேட்கிறாளா. நீ யோசி ராணி, கார் பஸ்னு வேகமா வர்ற ரோடு, சின்ன புள்ள எப்படி பார்த்து போகும், போறப்ப எதுனா ஆயிடுமோனு எனக்கு பயமா இருக்கு.
என் பயம் அது மட்டுமில்ல.
இந்த வயசில எப்படி சரியா ட்ரெயின் பாத்து போ முடியும்? தப்பா ட்ரெயின் ஏறி வேற எங்கயாவது போயிட்டா… டேசன்ல எதுனா தப்பு நடந்துச்சுனா, யார்னாவது கடத்திக்கின்னு போயிட்டா… என்ன செய்ய சொல்லு?
அய்யோ நம்மளால ஒரு சின்ன புள்ளய ஒழுங்கா பாத்துக்க முடியலயங்கிற குற்றஉணர்வு காலம் புல்லா இருந்து, வாழ்க்கைய வாழ வுடாம பண்ணிடும். இந்த விசயத்தில நாம குணா சொல்றத கேட்டுக்கலாம்” என்றான்.
தமிழ் இப்படித் தனியாக ரயில் நிலையம் போவதில் பகவதிக்குப் பயம். எந்த அசம்பாவிதமும் இதுவரை நடந்திருக்கவில்லை. அதற்காக இனியும் எதுவும் நடக்கவே நடக்காது என்று இருக்க முடியுமா?
ராணி இன்னும் அழுது கொண்டே, “உமா இருந்திருக்கலாம்” என்றாள்.
ராணிக்கு இளகிய மனது. பகவதிக்கு அது நன்றாகத் தெரியும். அவளுக்குத் தமிழின் நிலையை நினைத்துக் கவலை. அத்தோடு உமாவுடன் அவளுக்கு நல்ல பழக்கம் இருந்தது. உமா இல்லையே என்ற வேதனையும் அவளுக்குள் இன்னமும் இருக்கிறது.
தாயில்லா பிள்ளை, தந்தையும் கைவிட்ட நிலையில் அடைக்கலம் தரலாம் என்று ராணி நினைக்கிறாள். மனைவியைப் புரிந்தாலும், அவள் சொல்வது போல் தமிழைப் பார்த்துக் கொள்ளும் நிலையில் அவன் இல்லை.
மனைவி அழுவதைப் பார்த்த பக்ஸ், “இங்க பாரு ராணி ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ” என்று சொல்லும் போதே, “அதுவே சின்ன புள்ள. அத போய் ஆசிரமத்தில தனியா விட சொல்றியா நீ?” என்றாள் கோபமாக.
பட்டென்று பக்ஸ், “நான் எங்க சொல்றேன், அவளை பெத்தவன் சொல்றான். நான் அது சரிங்கிறேன். அதும் ஏன் சொல்றேன்னு உங்கிட்ட சொல்லியாச்சு” என்றான் கோபமாக.
அவன் குரல் உயர்த்தியதும், ராணி பேசாமல் இருந்தாள். அவனும் சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, பின் பேசினான்.
“இன்னொன்னு சொல்றேன், நீ தமிழ கொண்டு போய் எங்க வுட்டாலும் அது உன்னய தேடும்னு நினைக்கிற. ஆனா தேடாது, திரும்ப உன்னய தேடி வரவும் செய்யாது. அத முதல நீ புரிஞ்சிக்கோ”
அப்போதும் ராணி, “அதுக்காக தனியா… எப்படி” என்றாள்.
“தமிழ் இங்கயும் அப்படித்தான் இருக்கா. யார்கூடனா ஒட்டுறாளா சொல்லு. நீதான் அவளை பாத்துக்கிற, ஆனா உன்கிட்டருந்தும் தள்ளிதான இருக்கா”
ராணிக்கும் அது தெரியத்தான் செய்தது. அவள் என்னதான் கவனித்தாலும், தமிழுக்கு அவளிடம் எந்த ஒட்டுதலும் இல்லை. ஒரு சிறு பிணைப்புகூட வரவில்லை. அதுதான் அவள் அப்பாவிடமாவது குழந்தைக்கு ஒரு ஆறுதல் கிடைக்குமா என்று குணாவிடம் போய் பேசி வருகிறாள் ராணி.
மனைவியின் முகத்தைப் பார்த்தான். கண்ணீரும் கவலையுமாக இருந்தாள். “எத்தினி டைம் உன்ட்ட சொல்லிருக்கேன்? குணாகிட்ட போய் பேசாதன்னு, கேக்க மாட்டியா நீ” என்றான்.
“ப்ச் எனக்கு என்ன செய்யன்னே தெரியல. பேசி பாக்கலாம்னு நினைச்சேன். பேசினா குணா அண்ணன் மனசு மாறும் இல்ல”
“என் பொண்டாட்டி இவ்ளோ விவரம் இல்லாம இருக்காளா? அவன்லாம் ஒரு ஆளுன்னு அவன்ட்ட போய் பேசற. அவன் தமிழ சுமையாதான் பார்ப்பான். நீ எவ்ளோ பேசினாலும் அவ பொறுப்ப ஏத்துக்க மாட்டான். இது புரியலயா”
“பெத்த புள்ளைய பாத்துக்க முடியாதா? ஆசிரமத்தில வுட சொல்றது, காது கேக்காததை, வாய் பேச முடியாததை ஒரு அப்பா சொல்லிக் காட்டறதுலாம் ரொம்ப தப்பு” என்று கோபமாகப் பேசினாள். அழவும் செய்தாள்.
“முதல அழறத நிறுத்து ராணி. நீ என்னத்துக்கு இப்ப அழுதுக்கின்னு இருக்க. என்னமோ நம்ம பெத்த புள்ளய நான் பாத்துக்காத மாதிரி. உனக்கு குணா பேசினதுல கோபம். அத என்ட்ட வந்து காமிக்கிறியா” என்றான்.
அடுத்தும், “மீனாவுக்கு எதுனா நிம்மதியா வாங்கி கொடுக்க முடியுதா, ஒத்த புள்ளய பெத்துட்டு அதயும் ஒளிஞ்சி மறைஞ்சி கொஞ்ச சொல்ற. அப்படிலாம் என்னால இருக்க முடியாது” என்றான்.
பகவதி மகளைச் செல்லம் கொஞ்சினால், மகளுக்கென்று ஏதாவது வாங்கிக் கொடுத்தால் தமிழுக்கு ஏக்கம் வந்துவிடுமோ என்று ராணி சொல்லுவாள். அதுவும் எப்போதாவதுதான். எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டாள்.
மகளுக்கு அவள் கேட்பதை வாங்கிக் தரும் ஆசை அம்மாவாக அவளுக்கும் இருக்கும். அதைக் கணவன் செய்யும் போது நிறைவுதான் வரும்.
ஆனாலும் தமிழை நினைத்து மனம் வருந்துவதால், ராணி அப்படிச் சொல்லி விடுகிறாள். அது சரியல்ல என்று புரிகிறது. அமைதியாக இருந்தாள்.
பக்ஸ் மனைவியைப் பார்த்தான். சோர்ந்து போயிருந்தாள். வேலை முடிந்து குணா வீட்டிற்கு நடந்தே போயிருப்பாள். “சாப்டலாம் வா” என்றான்.
முந்தானையால் முகத்தைத் துடைத்துவிட்டு, “ஆயா திட்டிச்சு” என்றாள்.
“வுடு, நம்ம ஆயாதான” என்றான். அவனுக்குத் தெரியும், தன்னை ஏதாவது கோபமாகப் பேசினால், அவளை ஆயா திட்டிவிடும் என்று. அப்படியா என்று கேட்டுக் கொள்வானே தவிர, வேறு எதுவும் சொல்ல மாட்டான்.
“எப்ப பாத்தாலும் ஆயாக்குதான் சப்போர்ட் பண்ற. அத பத்தி கம்ப்ளைன்ட் பண்ணா நீ கண்டுக்கிறதே இல்ல” என்றாள்.
பக்ஸ் சிரித்துக் கொண்டான்.
“ஆயா சொல்றது கரெக்ட்தான். உன்னய அப்படி பேசி இருக்க கூடாது” என்று கண்ணீரைத் துடைத்து, “குணா அண்ணா பேசுனத கேட்டு வந்த கோபத்துல உன்னயும் பேசிட்டேன், தப்புதான்” என்று மன்னிப்பாய் சில வார்த்தைகள் கேட்டும் கொண்டாள்.
பகவதியும் அவன் மகளும் அவள் செயலில் சிரித்துக்கொண்டார்கள். “நாங்க இதுக்கெல்லாம் சமாதானமாக மாட்டோம் இல்லயாடா” என்றான் மகளிடம்.
“வேற என்ன செய்யணும் அப்பாவுக்கும் மகளுக்கும்”
“நீங்கதான பெர்மனென்ட் வேலைல இருக்கீங்க. இந்த வாரம் எங்கள பீச்சுக்கு கூட்டிட்டு போய் மீன் பிரியாணி வாங்கி குடுங்க” என்றான். “ப்பா எனக்கு பலூன்” என்றாள் மகள் செல்லமான குரலில். “அம்மா வாங்கி தருவாங்கடா” என்றுவிட்டு, ‘என்ன சொல்ற?’ என்று மனைவியைப் பார்த்தான்.
“ம், ஓனரம்மாகிட்ட முன்னூறு ரூபா, இல்ல இல்ல இர்நூறு ரூபா அட்வான்ஸ் கேட்டு பாக்கிறேன், அது குடுத்தா போய்ட்டு வரலாம்” என்றாள்.
அப்பாவும் மகளும் மகிழ்ச்சியில் குதித்தார்கள்.
வாழ்வுநிலையை ஓரளவிற்குச் சரிசெய்ய சேமித்து வைக்க வேண்டும்தான். ஆனால் இப்படிச் சின்னச் சின்னச் சந்தோஷங்களைத் தொலைத்து சேமித்து என்ன பயன்?
அதன் வெளிப்பாடுதான் அவர்கள் மகிழ்ச்சி.
சாப்பிட பாலத்திற்கு அடியில் வந்தார்கள். ரசமும் இரண்டு முட்டை அவித்தும் வைத்திருந்தான் பக்ஸ். தட்டில் சோறு வைத்து, ரசம் ஊற்றி, ஒரு முட்டையை வைத்து, மனைவிக்கு கொடுத்தான். இன்னொரு முட்டையை உரித்து, அதை மகளுக்கு ஊட்டிவிட்டான்.
“பக்ஸ் உனக்கு” என்றாள் ராணி. “நீ சாப்பிடு” என்று கொஞ்சம் கொஞ்சமாக மகளுக்கு சோறும் முட்டையும் வாயில் கொடுத்தான்.
அவனுக்கு மனைவி மெலிவது போல் தெரிகிறது. இந்த இரண்டு மாதமாகத் தொடர்ந்து வேலைக்குப் போகிறாள். வேலை அதிகம். சத்தான சாப்பாடும் இல்லை. அதனால்தான் மெலிகிறாள் என்று தோன்றியது.
நாள் முழுவதும் தண்ணீருக்கு நடக்க வேண்டும், குடம் தூக்க வேண்டும் என்பதால், ‘வேலைக்கு நான் சேர்ந்துகிறேன்’ என்றிருந்தான் பக்ஸ். ஆனால் ‘ஓனரம்மா’ பெண்தான் இந்த வேலைக்குச் சரியாக இருக்கும் என்றுவிட்டார். இல்லையென்றால் பக்ஸ் அந்த வேலைக்குப் போயிருப்பான்.
கிடைத்த வேலையை விடக்கூடாது என்று சொல்பவன்தான். ஆனால் மனைவி உடல்நிலை, மனநிலையைத் தாண்டி அவனுக்கு எதுவும் முக்கியமில்லை.
ராணி முட்டையை கொஞ்சம் பிய்த்து எடுத்து, கணவன் கையைத் திருப்பி உள்ளங்கையில் வைத்து, ‘சாப்பிடு’ என்பது போல் பார்த்துவிட்டு வேகமாகச் சாப்பிட்டாள். கட்டிட வேலைக்குப் போயிருக்கிறான் இன்று. ஐந்து மாடிக் கட்டிடம் அது. எத்தனை முறை ஏறி, ஏறி இறங்கினானோ? அவனுக்கும் உடல் வலி இருக்குமே… சத்தான ஆகாரம் தேவைப்படுமே.
மனைவியை அன்பாக ஒரு பார்வை பார்த்து பார்த்துவிட்டு, சாப்பிட்டான். மகளுக்கு சாப்பாடு கொடுத்து, அவனும் சாப்பிட்டு, பாத்திரம் கழுவி வைத்து உறங்குவதற்கென்று செய்து வைத்திருந்த தடுப்புக்குள் வந்து படுத்தான். அதற்குள் ராணி மகளைத் தூங்க வைத்து இருந்தாள்.
அவன் வந்து படுத்ததும், “இன்னும் ஆயா வரலயா” என்று மகள் புறம் திரும்பி படுத்திருந்தவள், கணவனைப் பார்த்துப் படுத்துக் கொண்டாள்.
“தமிழ தூங்க வச்சு கொண்டு வந்து போடறேன், இல்லனா அம்மாவ நினச்சி தூங்காம நிக்கும்னு சொல்லிச்சி, நீ தூங்கலயா” என்றான்.
அவன் முகத்தையே பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். கணவன் மனைவி ஊடலுக்குப் பின் எப்படியும் ஒரு கூடல் இருக்கும். இங்கே அதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது. ஆசை, அவசியம், அவசரம், அன்யோன்யம் எல்லாமே எட்டா கனிதான்.
“அப்படியெல்லாம் என்னய பார்க்க கூடாது” என்றான்.
ராணிக்கு சிரிப்பு வர, “பக்ஸ் நம்ம சீக்கிரம் வீடு பாத்து போகணும்” என்றாள்.
“குடியிருக்க வீடு கேக்குறியா… குடும்பம் நடத்த வீடு கேக்குறியா”
“ரெண்டுக்கும்தான்” என்று இன்னும் சிரித்தபடி சொன்னாள்.
மனைவி முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அழுததில் கண்கள் சிவந்து வீங்கி இருந்தது. சோர்வில் முகம் வாடிப் போயிருந்தது. எனினும் இப்போது சிரித்து இருப்பது அவனை ஈர்த்தது. மனைவியின் முகத்தருகே கையைக் கொண்டு சென்று, ஐவிரலால் அவள் முகத்தை அள்ளுவது போல் அள்ளி, முத்தமிடுவது போல் அவன் உதட்டில் வைத்தவன், “தூங்கு” என்றான்.
அவளும் கண்களை மூடி அயர்வில் உடனே உறங்கியும்விட்டாள்.
அவனுக்குத்தான் உறக்கம் வரவில்லை. என்ன வாழ்க்கை என்று தோன்றியது. மகள் ஆசைப்பட்டுக் கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்க முடியவில்லை. மனைவியுடன் உரிமையுடன் பேசி இருக்க முடியவில்லை. ‘ச்சே’ என்றானது. யோசனையோடு படுத்திருந்தான்.
சற்றுநேரத்தில் எழுந்து, ஆயா, தமிழ் வந்துவிட்டார்களா என்று பார்த்தான். அவர்கள் வந்து படுத்திருந்தார்கள். கொசுவர்த்தி ஒன்று பற்ற வைத்து, தமிழ் உறங்கும் இடம் பக்கம் வைத்தான். குழந்தை தூக்கத்தில் தொட்டு விடாமல் இருக்க வேண்டி, கவனமாகத் தள்ளியே வைத்தான்.
அதன்பின்னும் உறங்கப் போகவில்லை. அங்கேயே நடந்தான். சட்டென, ‘ப்ச் இப்படியே இருந்தா எப்படி’ என்று போய் படுத்தவன், கண்களை இறுக்க மூடி தூங்குவதற்கு முயற்சித்தான்.
இப்போது உறங்கினால் பன்னிரெண்டு மணியளவில் எழுந்துவிடுவான். அந்த நேரத்தில் திருட்டுப் பயம் அதிகம். குடிகாரர்களாலோ, மற்றவர்களாலோ தொல்லைகள் வேறு இருக்கும். தவறுகள் அதிகமாக நடக்கும் நேரம்.
அதனால் பன்னிரெண்டில் இருந்து, மூன்று மணிவரை தூங்க மாட்டான். அந்த உடைந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொள்வான். அசந்தால், எழுந்து நடப்பான். ஆயா உறங்கும் இடத்திலிருந்து, அவன் மனைவி மகள் உறங்கும் இடம் வரைக்கும் நடமாடிக் கொண்டே இருப்பான்.
அந்தப் பகுதியில் மீண்டும் வாகனப் போக்குவரத்து ஆரம்பிக்கும் வரை இப்படித்தான் இருப்பான். அதன்பின்தான் வந்து படுத்து, சற்று நிம்மதியாக அவனால் உறங்க முடியும்.

ஒரு வாரம் போயிருந்தது. எழும்பூர் ரயில் நிலையத்தில் வெற்றி இருந்தான். எப்போதும் போல் வீட்டிற்குப் போக மனம் இல்லை. இன்று காலை சாந்தி வந்து, ‘ஹாஸ்பிடல் போனியா’ என்று கேட்டிருந்தாள். இவன் போகவில்லை என்றதும், ‘என்னடா இப்படி பண்ற’ என்று கோபப்பட்டுப் போனாள்.
சந்திரனும், ‘உன் நல்லதுக்காக அக்கா சொன்னா கேட்க மாட்டியாடா’ என்று ஆரம்பித்து, மகனைத் திட்டி இருந்தார்.
தினமும் இதே பேச்சா என்று அவன் மனம் சலிப்படைந்து போனது. கூடவே மனம் நிம்மதியைத் தேடி நாடோடியாய் அலைந்து களைத்துவிட்டிருந்தது. இதில் ஸ்வேதா வேறு அவனைப் பார்த்து இன்று பேசியிருந்தாள்.
பேசிவிட்டு, ‘நீங்க யார்கிட்டயும் இத சொல்லிடாதீங்க’ என்று சொல்லிவிட்டுப் போனாள். அவள் சொன்ன விடயம்! நினைக்க நினைக்க அவன் மனத்தை என்னவோ செய்தது. ஓர் இடத்திலேயே பார்வையை நிலைநிறுத்தி வெற்றி வெகுநேரமாக அமர்ந்திருந்தான்.
தமிழும் இன்று ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். எப்போது வந்தாலும் இருட்ட ஆரம்பிக்கையில் இங்கிருந்து கிளம்பிவிடுவாள். இருட்டில் தனியாக இருக்க, ரயிலில் போக பயம். ஆனால் இன்று தாமதம் ஆகிவிட்டது. அம்மாவை நினைத்து அப்படியே அமர்ந்துவிட்டது குழந்தை.
சீக்கிரமாக, அவள் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும் என்று ஓடி வந்து கொண்டிருந்தாள். அடுத்த நடைமேடையில்தான் அவள் செல்ல வேண்டிய ரயில் நிற்கும். இந்த நடைமேடையிலிருந்து அங்கே செல்ல வேக வேகமாகப் படிக்கட்டில் ஏறியவள், கால் தடுமாறி விழுந்துவிட்டாள்.
தமிழின் தோள்பையில் இருந்த விளையாட்டுப் பொருட்கள் சிலது விழுந்து, சத்தம் எழுப்பியது.
அந்த நடைமேடை அமைதியாக இருந்தது. பெரிய அளவில் ஆட்கள் யாரும் இல்லை. அடிக்கடி ரயில்கள் வராத ஒரு நடைமேடை அது. சின்ன சத்தம் ஒன்று கேட்டாலே பெரிதாகத் தெரியும். பொருட்கள் விழுந்த சத்தம், அங்கே அமர்ந்திருந்த வெற்றியின் எண்ணவோட்டத்தைக் கலைத்தது.
தலையை உயர்த்தி, ‘என்ன’ என்று வெற்றி பார்த்தான். அதேநேரத்தில் தான் விழுந்ததை யாரும் பார்க்கிறார்களோ என்று தமிழும் பார்த்தாள். இருவரும் தற்செயலாக பார்த்துக் கொண்டார்கள்.
தற்செயல்களால் தகவமைக்கப்பட்டதுதானே இந்தத் தரணி!!
