Kathambari Novels
சைதாப்பேட்டை பகுதியில் ஒரு மேம்பாலம்!
பாலத்தின் மேல் பேருந்து, பைக், ஆட்டோ என்று பல வகையான வாகனங்கள் சரசரவெனப் போய்க் கொண்டிருந்தன. பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் மக்கள்தான்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஓட்டத்திலுள்ள இவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இந்தப் பாலம் இருக்கிறது!
பாலத்தின் அடியில்… இதுதான், இந்த இடம் மட்டும்தான் வாழ்வாதாரம் என்று வாழும் சில குடும்பங்களின் வாழ்க்கை அடங்கி இருந்தது!!
சீரான இடைவெளியில் நின்ற பெரிய தூண்களின் தலைக்கு மேல் பாலம் அமர்ந்திருந்தது. பாலத்தின் அடியில் இருந்த இடத்தின் ஒருபுறம் கால்வாய்… மறுபுறம் கிளைச் சாலை. இந்தச் சாலைக்கும் பாலத்தின் கீழ்ப்பகுதிக்கும் இடையே பராமரிப்பில்லா பாதசாரி பாதை இருந்தது.
அந்த நீண்ட பாதையின் சில இடங்களில் கம்பிவேலி அமைக்கப்பட்டிருந்தது. கம்பிவேலிகள் சேதமடைந்து, துருப்பிடித்து இருந்தன.
மேம் பாலத்தின் கீழ்ப் பகுதியின் ஒரு ஓரத்தில் நான்கைந்து மினி லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. மறு ஓரத்தில் குப்பை கொட்டி வைக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இடம் பெரிய காரைக்கற்கள், அழுக்கான தண்ணீர் கேன்கள், பழைய வாளிகள், கல் அடுப்புகள், விறகுகள், கழுவியும் கழுவாமலும் கிடக்கும் கரைப் படிந்த பாத்திரங்கள் என்று காட்சியளித்தது.
இவைகள்தான் இங்கே மக்கள் வாழ்கிறார்கள் என்பதற்கான அடையாளம். இதுதான் அவர்களின் உறைவிடம்… வீடில்லாத அவர்களின் வீடு.
அங்கே… இரண்டு பலகை போட்டு, அதற்குமேல் பருத்தி புடவை விரித்திருந்த இடத்தில் ஒரு சிறுமி படுத்திருந்தாள். விழித்துதான் இருந்தாள். ஆனால் எழவில்லை. எதையோ நினைத்தபடி ஒரு சாய்த்துப் படுத்திருந்தாள்.
குண்டு கண்கள், குழிவிழும் கன்னங்கள், எண்ணெய் பார்க்கா தலை முடி, அழுக்கேறிய நகங்கள், முட்டி வரை இருந்த சிறு பூக்கள் போட்ட கவுன் என்று இருந்தாள் அந்த ஆறு வயது பெண் குழந்தை.
அவள் பெயர் தமிழரசி.
அவளருகில் சிறிய கட்டப்பை மற்றும் துணியாலான தோள் பை கிடந்தது.
அவள் பக்கம் வந்து முகம் பார்த்து, “தமிழு எந்திரி நேராகுது” என்றாள் ராணி. அதற்கு குழந்தை சிறு அசைவுகூட இல்லாமல் படுத்திருக்க, ராணி மீண்டும், “எந்திரி தமிழு, நான் வேலைக்கு போனும் இல்ல” என்றாள்.
சொல்லிவிட்டு, சோற்றை வடிக்கப் போனாள் ராணி.
ராணிக்கு இரண்டு வருடத்திற்கு மேல் இங்குதான் வாழ்க்கை!
தள்ளுவண்டிக் கடை ஒன்றில் தட்டு, பாத்திரங்கள் கழுவும் வேலைக்குச் செல்கிறாள். கூடவே காய்கறிகள் வெட்டிக் கொடுக்க வேண்டும், தண்ணீர் பிடித்துக் கொண்டு வர வேண்டும்.
கடை நான்கு சாலைகள் தள்ளி இருக்கிறது. தூரம்தான். இருந்தும் நடந்தே சென்றுவிடுவாள்.
இதற்கு முன் கணவனுடன் கட்டிட வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். தினமும் வேலை கிடைக்காது. வாழ்க்கை மிகவும் சிரமமாக இருந்தது.
சமீபத்தில்தான் இந்த வேலை கிடைத்தது. இப்போது வாழ்வு சீக்கிரம் நான்றாகிவிடும் என்று நம்பிக்கை வந்திருக்கிறது.
பத்து மணிக்கு அந்த வண்டிக்காரர் வந்து கடையைத் திறந்துவிடுவார். எல்லாம் எடுத்து வைத்து வியாபாரத்தையும் ஆரம்பித்து விடுவார்.
ராணி பதினொரு மணிக்குச் சென்று கடகடவென்று அவருக்கு உதவி செய்ய தொடங்கிவிடுவாள்.
தினமும் ஒவ்வொரு வகையான சாப்பாடு! ருசியான வீட்டு உணவு என்பதால் நல்ல விற்பனை இருக்கும்!!
விற்பனை நடக்கும் வேகத்திற்கு ஈடு கொடுக்கும்படி ராணி வேலை செய்ய வேண்டும்.
ஒருநாளைக்கு இருபது குடத்திற்கு மேல் தண்ணீர் சுமப்பாள். சாப்பிட்ட தட்டு, டம்ளர்கள் கழுவுவாள். இடையிடையே அடுத்த நாளுக்குத் தேவையான காய்கறிகளையும் வெட்டி வைத்து விடுவாள்.
ஏழு மணி வரை கடை இருக்கும். எட்டு மணிக்குள் ராணி எல்லா பெரிய பாத்திரங்களையும் கழுவிக் கொடுத்துவிட வேண்டும். அதன்பின் வண்டியை உருட்டிக் கொண்டு அந்தப் பெண்மணி போவார்.
அடுத்து ராணி கிளம்பி, இங்கே நடந்து வருவதற்கு ஒன்பதாகிவிடும்.
ஐம்பது வயதை எட்டும் அந்தப் பெண்மணியை, ‘ஓனரம்மா’ என்றுதான் ராணி சொல்லுவாள்.
உடல் உழைப்பு நிறைந்த வேலை என்றாலும், மாதச் சம்பளம் என்று ஒரு சிறு நிம்மதி வந்திருக்கிறது. சாப்பாடு மிச்சம் இருந்தால் அவரிடம் கேட்டு எடுத்து வந்துவிடுவாள்.
சமைக்க வேண்டிய வேலை மிச்சம்… முக்கியமாக அதற்கான செலவும் மிச்சம் என்பதால்!
கடையில் வாங்கிய தேநீரை இரண்டு டம்ளரில் ஊற்றியவள், அதில் ஒன்றை, “இந்தா டீ” என்று கணவனிடம் போய்க் கொடுத்தாள்.
ராணியின் கணவன் பகவதி.
பகவதி கட்டிட வேலைக்குப் போவான். எல்லா நாளும் வேலை கிடைக்காது. கிடைக்கும் நாளில் மட்டும் செல்வான். தினக்கூலிதான். நிரந்தர வருமானம் அவனுக்கு இல்லை.
கணவன் பெயரைச் சுருக்கி, ‘பக்ஸ்’ என்றுதான் ராணி அழைப்பாள். அவள் மட்டுமல்ல, அங்கே அவனைத் தெரிந்தவர்கள் எல்லாரும் அப்படித்தான் அழைப்பார்கள்.
ஒரு கால் உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிக்கு… அணைவாக கற்கள் வைத்து கம்பிவேலிக்கு அருகே போட்டு வைத்திருப்பார்கள். சிலநேரங்களில் அங்கே அமர்ந்து சாலையில் வாகனங்கள் போவதை வருவதை வேடிக்கைப் பார்ப்பார்கள்.
மனைவி கொண்டு வந்த தேநீரை வாங்கிவிட்டு, “நீ உக்கார்ந்து குடி” என்று அவளை உட்காரச் சொல்லி, பக்ஸ் எழுந்துவிட்டான்.
கடகடவென தேநீர் குடித்தவன்… ராணி வடித்து வைத்திருந்த சோற்றை அவளுக்கும் அவனுக்கும் சம்படத்தில் எடுத்துக்கொண்டு சமைத்த பாத்திரங்களைக் கழுவினான்.
இப்படித்தான் சில காலைவேளைகளில் இவர்கள் வாழ்க்கை இருக்கும்!
இதற்குமுன் வீடு, வாசல் என்று இருந்தவர்கள்தான். கடலூரில் வந்த புயல், வெள்ளப் பெருக்கால் அனைத்தும் இழந்து நிற்கதியற்ற நிலைக்கு ஆளாகி சென்னை வந்தார்கள். முதலில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தார்கள். அங்கே துரத்தி விட்டதால், இங்கே வந்து இருக்கிறார்கள்.
நாடோடி போல்தான் இவர்கள் வாழ்க்கையும்! நிரந்தரமில்லா இடத்தில் நிச்சயமற்ற இந்த வாழ்க்கை சிறிதும் நிம்மதியாக இல்லை இவர்களுக்கு!!
சொந்த பந்தம் என்று யாரும் எவரும் இல்லை. அவனுக்கு அவள்… அவளுக்கு அவன் என்று வாழ்கிறார்கள்.
பாத்திரங்களைக் கழுவி முடித்தவன், மகளை எழுப்பச் சென்றான்.
ராணி, பக்ஸ்… மகள் பெயர் மீனா. மூன்றரை வயதாகிறது.
நான்கு பெரிய கம்புகள் நட்டு, அதில் தகரத்தை கட்டி வைத்து, உறங்க மட்டும் ஒரு இடம் அமைத்திருந்தான். அட்டைகள் வைத்து மேற்கூரை செய்திருந்தான்.
இங்கே இப்படித்தான்!
பழைய மரப்பலகைகள், அட்டைகள், துணிகள், மெத்தைகள், வாகனத்தின் இருக்கைகளைப் படுக்கையாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஒரு சிலர்… தார்ப்பாய், பிளாஸ்டிக் சாக்குகள், சேலைகளைக் கொண்டு உறங்குவதற்காக சிறு மறைவிடம் அமைத்துக் கொள்வார்கள்.
பலகைகள் போட்டு அதன் மேல் கிழிந்த பாய் விரித்திருக்க, பகவதி மகள் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“செல்லம் எந்திரிமா? கண்ணு ஏந்திரி. அப்பா வேலைக்கு போனும் இல்லை. அப்பாகூட நீயும் வர்றேல, ஏந்திரி ம்மா எந்திரி செல்லம்” என்று முத்தங்கள் வைத்து மகளைக் கொஞ்சியபடி எழுப்பினான்.
மெல்ல மெல்ல பகவதியின் செல்ல மகள் கண்களைத் திறந்தாள்.
மகள் தூக்கம் கலைந்தவுடன், ‘வா வா செல்லம்’ என்று அவளைத் தூக்கி வந்து, அங்கிருந்த வாளி தண்ணீரில் முகம் கழுவி, தோளில் போட்டிருந்த துண்டால் துடைத்துவிட்டு, சாலையைக் கடந்து சென்றான்.
இந்த இடத்தின் எதிர்ப்பக்கம் ஒரு பூங்கா இருக்கிறது. அதை ஒட்டி பொதுக் கழிப்பறை இருக்கும். இயற்கை உபாதைகளுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
சுத்தமாக இருக்காது. ஆனாலும் வேறுவழியில்லை!
குளிக்க, துவைக்க பின்னே இருக்கும் கால்வாய் ஒன்றுதான் வழி. துவைத்த துணிகளை கம்பிவேலியில் காயப் போட்டு விடுவார்கள்.
தினமும் குளியல் என்பதெல்லாம் சிரமம்தான்!!
திரும்ப வந்த பக்ஸ், மகளுக்குத் தண்ணீர் கொடுத்து, அவளுக்கு வேடிக்கை காட்டியபடி வாழைப்பழம் கொடுத்தான்.
முழுக்க முழுக்க மீனாவைக் கவனித்துக் கொள்வது பகவதிதான்.
ராணிக்கு நேரம் கிடைப்பதில்லை. மகள் சீக்கிரம் எழுந்தால், சற்றுநேரம் அவளைக் கையில் தூக்கி வைத்து விளையாட்டுக் காட்டுவாள். மற்றபடி ஞாயிறு மட்டும்தான் மகளைக் கவனிக்க முடியும். மகளைக் குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட என்று அன்று முழுவதும் அவள் பார்த்துக் கொள்வாள்.
வயர் கூடையில் சாப்பாடு எடுத்துக் கொண்டு, மகளையும் தூக்கிக் கொண்டு வந்து நின்ற பகவதி, “கெளம்புறேன்” என்றான் ராணியிடம்.
எழுந்து மகளை வாங்கி கன்னம், கைகளில் முத்தம் கொடுத்தவள், “சாப்பாடு, அங்க போய் சாப்ட போறியா இன்னிக்கு?” என்றாள்.
“ம், எடுத்துக்கினேன். மீனாக்கு போறப்ப எதுனா கடையில வாங்கிப்பேன்”
கல் அடுப்பில் சமைத்துக் கொள்வார்கள். மூன்று நேரமும் சோறுதான் சமைப்பார்கள். சமைக்க முடியும். மகளுக்கு மட்டும், காலையில் இட்லியோ, தோசையோ கடையில் வாங்கிக் கொடுப்பான் பகவதி .
இதற்கிடையே நடைபாதையில் சென்ற ஒருவர் நின்று, “பக்ஸ், உன்க்கு வேல உண்டா, வர்றியா” என்று கேட்டார்.
“இருக்கு… நீ போ ணா, வறேன்” என்றான்.
இன்று பக்ஸிற்கு கட்டிட வேலை கிடைத்திருந்தது. அதற்குத்தான் கிளம்புகிறான். கிடைக்காத நாள்களில் சாப்பாட்டிற்கு கஷ்டநிலை வராமல் இருக்க சில்லறை வேலைகள் செய்வான்… அருகில் இருக்கும் சிறு கடைகளில் மூட்டைகள், சாமான் நிறைந்த அட்டைப்பெட்டிகள் ஏற்ற இறக்கி என்று.
தேவை இருந்தால் கூப்பிடுவார்கள். அம்பது, நூறு, இருநூறு என்று வேலைக்கு ஏற்றபடி தருவார்கள்!
நிரந்தர வேலை தேடுகிறான். இன்னும் கிடைத்தபாடில்லை.
கொஞ்சம் பணம் சேமித்து, குறைந்த வாடகைக்கு வீடு எடுக்க வேண்டும் என்று கணவனும் மனைவியும் நினைத்திருக்கிறார்கள். அதனால் ராணியில் சம்பளத்தை வீட்டிற்கென சேமித்து வைத்துவிட்டு, பகவதியின் சம்பாத்தியத்தை வைத்து சாப்பாடு மற்றும் அன்றாட செலவுகளைப் பார்த்துக் கொள்வார்கள்.
மனைவியைப் பார்த்து, “சாப்ட்டு நீயும் கெளம்பு” என்றான் பக்ஸ்.
“ம்ம்” என்றாள்.
மகளை வாங்கி, “அம்மாக்கு டாட்டா சொல்லு செல்லம்” என்றான்.
மலர்ந்த முகத்துடன் மகளுக்கு கை காட்டினாள்.
ராணி மகளைக் கூட அழைத்துச் செல்ல முடியாது. அவள் ‘ஓனரம்மா’ இதை அனுமதிக்க மாட்டார். வேலையில் கவனம் கெட்டுவிடும் என்பார். ‘எந்த வேல சொன்னாலும் செய்யனும். சரியான டைம்க்கு வந்திடனும், லீவு கீவுனு வராம இருந்தா வேற ஆள நான் பார்த்துக்குவேன்’ என்று அத்தனை நிபந்தனைகள் போட்டுத்தான் அவளை வேலைக்குச் சேர்ந்திருந்தார் ‘ஓனரம்மா’.
எனவே பகவதிதான் மகளைப் பார்த்துக் கொள்வான்.
கட்டிட வேலை இருந்தால் கூடவே மகளை கூட்டிச் சென்றுவிடுவான். அங்கே வேலைக்கு வருபவர்கள் சிலர் பிள்ளைகளை அழைத்து வருவார்கள். அருகில் இருக்கும் சிறிய வெற்று இடத்தில், தங்கள் கண் பார்வையில் பிள்ளைகளை விளையாட விட்டுவிட்டு, வேலை செய்வார்கள்.
மீனாவிற்கும் அப்பாவுடன் இப்படிப் போவது, அங்கே சென்று விளையாடுவது வாடிக்கைதான். அப்பாவுடன் இருப்பது அவளுக்கு மிகப் பிடிக்கும். மகளுடன் நேரம் செலவிடுவது பகவதிக்கும் பிடிக்கும்.
வேலை இல்லை என்றால் மகளுடன் விளையாடுவது, அவளைக் கவனிப்பது என்றுதான் அவன் பொழுதுகள் இருக்கும்.
பகவதியின் ஒவ்வொரு முடிவுகளும், செயல்களும் மகளை மையப்படுத்தியே இருக்கும்.
மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். மகள் பள்ளி செல்லும் முன் வீடு, வாசல் என்று வாழ்க்கை மாறிவிட வேண்டும். அவளுக்கு ஒருசில நல்ல உடைகள் எடுக்க வேண்டும்.
எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டுமென… அவன் ஆசைப்படுகிறான்!
இன்னும் எழாமல் இருந்த தமிழைப் பார்த்தான் பக்ஸ். “அவள எந்திரிச்சி சாப்பிட சொல்லிக்கினு கெளம்பிரு. அவ எந்திரிச்சி, சாப்ட்டு முடிக்கனும்னு வெய்ட் பண்ணினா உனக்கு லேட் ஆகும்… இருக்க வேலைக்கும் எதுனா டேஞ்சர்ன்னு தெர்ஞ்சா நான் செம காண்டாயிடுவேன். புரிதா?”
அவன் சொன்னதும் மலர்ந்திருந்த ராணியின் முகம் மாறிவிட்டது. இருந்தும், “ம்” என்றாள்.
“தமிழ்ட்ட டேஷன் பக்கம் போ கூடாதுனு கண்டிசனா சொல்லிடு. கேக்காம போனானு மட்டும் தெர்ஞ்சது, அவ்ளோதான் சொல்லிட்டேன்” என்று எரிச்சல் பட்டவன், “இத்தலாம் தேவையா சொல்லு” என்றான்.
“பக்ஸ், நான் பாத்துகிறேன். காலங்காத்தால இப்டி பேசின்னு போனினா, நாள் பூரா இதான் மன்டைக்குள்ள ஓடிட்டு கஷ்டமா இருக்கும்”
எதுவும் சொல்லாமல் பக்ஸ் கிளம்பிவிட்டான். “ம்மா டாட்டா” என்ற மகளுக்கு மீண்டும் கையசைத்துவிட்டு வந்து தமிழை எழுப்பினாள் ராணி.
கண் திறந்துதான் இருந்தாள் தமிழ். ஆனாலும் தன்னைக் கவனிக்கிறாளா இல்லையா என்றே ராணிக்குத் தெரியவில்லை. தமிழின் முகம் அப்படித்தான் இருந்தது. பார்க்கப் பார்க்க ராணிக்கு கஷ்டமாகப் போய்விட்டது.
இன்னும் ஒருமுறை அவளை எழுப்பிவிட்டுச் சென்று, தட்டில் சோறு வைத்து… தமிழரசியைப் பார்த்தபடி சாப்பிட்டாள். தொண்டை அடைத்தது. சோற்றை விழுங்க கடினமாக இருந்தது. சாப்பிடாவிட்டால் பக்ஸ் திட்டுவான். அதனால் கடகடவென விழுங்கி வைத்தாள்.
சாப்பிட்டுத் தட்டைக் கழுவும் போது, ஒரு வயதான பெண்மணி வந்தார்.
மஞ்சள் பூசிய முகம். பெரிய சிவப்பு பொட்டு. கழுத்தில் கருமணிச் சங்கிலி. விசிறி மூக்குத்தி. கைகளில் கண்ணாடி வளையல்கள். சாதாரணச் சேலை என்றாலும், அதை நேர்த்தியாகக் காட்டியிருந்தார்.
உடலின் குறுக்காகச் சிறு பை தொங்கியது. உறங்கும் போதுகூட அந்தப் பையைக் கழட்ட மாட்டார்.
அவர் பெயர் அஞ்சலை!
கொண்டு வந்த தட்டையானக் கூடையை வைத்துவிட்டு, “ஏ ராணி, நீ உன்னும் கெளம்பலயா” என்று அஞ்சலை அவர் இடத்தில் சென்று அமர்ந்தார்.
தமிழ் படுத்திருக்கும் இடத்திலிருந்து சற்றுத்தள்ளி அவர் இடம். அரையடிக்கு பெரிய பெரிய கற்களை அடுக்கி வைத்து, அதன்மேல் பழைய மெத்தை ஒன்று போட்டிருப்பார். போர்வையும் வைத்திருப்பார். பாத்திர, பண்டங்கள் என்று வேறு எதுவும் வைத்திருக்க மாட்டார்.
வேலை முடித்து வந்ததும் இங்கே வந்து படுத்துக் கொள்வார். சாப்பிட மட்டும் எழுந்திருப்பார். கடையில்தான் சாப்பாடு. சமையல் எதுவும் செய்யமாட்டார். நவீன அலைபேசி இருக்கிறது. அதில்தான் பொழுதைப் போக்குவார்.
பக்ஸ் இருந்தால் அவனிடம் பேசிக் கொண்டிருப்பார்!
பூக்கள், மாலைகள் கட்டிக் கொடுக்கும் வேலை பார்க்கிறார். அதிகாலையில் சென்றுவிடுவார். யாரும் எழுந்திருக்ககூட மாட்டார்கள். பின்னே இருக்கும் கால்வாயில் குளித்துவிட்டுக் கிளம்பிவிடுவார்.
தமிழைத் தனியாக விட்டுப் போகணுமே என்று தயங்கியிருந்த ராணிக்கு, அஞ்சலை வந்ததும் ‘அப்பாடி’ என்ற உணர்வு வர, “கெளம்பனும் ஆயா, தமிழ் சாப்பிடல, சோறு வச்சிருக்கேன். பார்த்துக்கோ. நீ டிப்பன் சாப்ட்டியா” என்று கூடையை எடுத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பியபடி கேட்டாள்.
“சாப்டாச்சு” என்று மட்டும் ஆயா சொன்னார்.
ராணி தமிழ் முகம் பார்த்து, “டேசன் போ கூடாது, ஆயா கூடவே இருக்கனும் சரியா” என்றதும், “என்னமோ நீ சொன்னத அவ கேக்கிற மாதிரிதான், யார்னா சொல்றத அது கேட்குதா. பேசாம போவியா” என்றார் ஆயா.
அஞ்சலை பேச்சு இப்படித்தான் இருக்கும்!
அவர் வாழ்ந்த வாழ்க்கை அவரை இப்படி மாற்றிவிட்டது. பொறுப்பில்லா குடிகார கணவன், நாடோடி வாழ்வு, மூன்று பிள்ளைகளின் பொறுப்பு… கடமைகள், உதவ ஒருவருமில்லாத நிலை என்று ஒவ்வொரு நாளும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.
அந்த நிலையிலும் மனத்தை தளர விடவில்லை. கடினமாக உழைத்தார். மன அயர்வை, உடல் வலியை தனக்குள்ளே பொதித்து வைத்துக் கொண்டு ஓடி ஓடி உழைத்தார். அடிக்கடி பிரச்சனை செய்யும் கணவனையும் சமாளித்தார். முடிந்தளவு மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தார்.
அவர் மகன், மகள்கள் வேலை, கல்யாணம் என்று அவரவர் வாழ்க்கையைப் பார்த்துச் சென்றுவிட்டனர். கணவரும் இறந்துவிட்டார். இப்போது அஞ்சலை தனியாகத்தான் இருக்கிறார்.
முன்பு நிறைய வேலைகள் செய்வார். இப்போது அத்தனை வேலை செய்ய தேவையில்லை. உடலும் ஒத்துழைக்கப் போவதில்லை. பூ கட்டுதலில் வரும் வருமானம் அவருக்குப் போதும்.
ஆயா ராணி முகத்தைப் பார்த்தார். அதில் சங்கடம் தெரிந்தது. அப்போதும், ‘பார்த்துக்கிறேன்’ என்று சொல்லவில்லை. “இந்தா வச்சிக்கோ” என்று சான் அளவு பூவை நீட்டி, “பக்ஸ் கொடுக்க சொன்னான்” என்றார்.
கணவன் பேசிப் போனதில் இருந்த சங்கடம் போய், முகம் சற்றுத் தெளிய பூவை வாங்கித் தலையில் வைத்தவள், “எப்போ சொன்னாரு” என்றாள்.
“போன் போட்டு சொன்னான்” என்று படுத்தபடியே அலைபேசியைப் பார்க்க, மீண்டும், “தமிழ பார்த்துக்கோ ஆயா” என்றுவிட்டு ராணியும் கிளம்பினாள்.
சற்று நேரத்திற்குப் பின் தமிழ் மெல்ல எழுந்தாள். வாளி நீரில் முகம் கழுவி, வாய் கொப்பளித்து வந்து சோறு சாப்பிட்டு முடித்தாள்.
ஆயா இப்போது கண்ணயர்ந்திருந்தார். வயோதிகத்தில் சீக்கிரமாக எழுந்தது அவர் உடலை அழுத்தியிருந்தது.
தமிழ், தன் தோள் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். சாலையில் வேகமாகப் போகும் வாகனங்களைப் பார்த்துப் பார்த்து, பெரும் பயத்துடன் கடந்து, எப்படியோ ரயில் நிலையம் சென்றுவிட்டாள்.
அங்கிருந்து எழும்பூர் செல்லும் ரயிலில் ஏறி, அம்மாவை நினைத்தபடி போய்க் கொண்டிருந்தாள் தமிழ்.
