Kathambari Novels
ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து வரலாம் என்ற வெற்றி, ஸ்வேதா அந்த ஒரு முறை மட்டும் மருத்துவமனைச் செல்லவில்லை. அடுத்தும் அது தொடர்ந்தது.
இருவருக்கும் சில பரிசோதனைகள் மருத்துவர் எடுத்துப் பார்த்தார். முடிவில் வெற்றியின் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகக் கரு உருவாவதில் சிக்கல் உள்ளது என்றார். அதற்குச் சிகிச்சை அளிக்க, டெஸ்டோஸ்டெரோன் அளவைச் சரிசெய்யும் மருந்துகள் பரிந்துரைத்தார்.
எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று நினைத்திருந்த குடும்பத்தினருக்கு இது பெரிய அதிர்ச்சி. கவலைப்பட்டார்கள். ஆனால் சிகிச்சை பலனளிக்கும்; குழந்தை உருவாகிவிடும் என்று நம்பிக்கையாக இருந்தனர்.
ஸ்வேதா, ‘நமக்கு ஏங்க இப்படிலாம் நடக்கு’ என்று நிறைய அழுதாள்.
அவளை வெற்றிதான் சமாதானப்படுத்தினான். அவனுக்குள்ளும், ‘ஏன் இப்படி’ என்று எக்கச்சக்க வருத்தம். இருந்தும் நம்பிக்கையுடன் சிகிச்சை எடுத்தான்.
மன வேதனை ஒருபக்கம்; மருந்துகளின் பக்க விளைவுகள், அதனால் ஏற்பட்ட மனநிலை மாற்றங்கள் ஒருபக்கம் என அவை அவனுக்கு கடினமான நாள்கள். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவர் அவனைப் பரிசோதித்து மருந்தின் அளவுகளில் சில மாற்றங்கள் செய்தார்.
ஆறு மாதம் சிகிச்சை தொடர்ந்தது.
ஆனால் அந்த ஹார்மோன் மருந்துகளை வெற்றியின் உடல் ஏற்கவில்லை. இந்தச் சிகிச்சைப் பலன் தராததால் ‘ஐயூஐ’ சிகிச்சைக்கு மருத்துவர் பரிந்துரைத்தார். இது எளிதானது, குறைந்த செலவு, ஆனால் வெற்றி விகிதம் சற்று குறைவாகவே இருக்கும் என்றும் சொன்னார்.
ஸ்வேதா, வெற்றி உட்பட வீட்டில் அனைவருக்கும் இது பெரிய ஏமாற்றமாகப் போனது. நாலைந்து நாள்கள் முடிவு எடுக்காமலே இருந்தார்கள். அதன்பின் மருத்துவர் சொன்னது போல் செய்யலாம் என்றார்கள்.
அப்போதும் வெற்றி தயங்கினான். மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றி அவனுக்குத் தெரியுமே. அதனால் மனைவிக்காக யோசித்து… தயங்கினான்.
ஆனால் ஸ்வேதா, ‘நான் சமாளிச்சுக்குவேன். டாக்டர் சொன்ன மாதிரி ட்ரை பண்ணலாம். அம்மாவும் அப்படித்தான் சொல்றாங்க’ என்றாள்.
அவள் அம்மா முடிவிற்கு மாறாக எதுவும் செய்ய மாட்டாளென வெற்றி அவளை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். சரி என்றுவிட்டான்.
அவனது சம்பளப் பணம்… வீட்டு வாடகை, மாதச் செலவுகள், அம்மாவின் மருத்துவத்திற்காக வாங்கிய கடன் என்று போகும். மீதமிருக்கும் பணத்தைச் சேமித்து வைப்பான். இதுவரை எடுத்துக் கொண்ட சிகிச்சைக்கு சேமிப்பு பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்கவில்லை.
இப்போது சேமிப்பு பணத்தை எடுத்தான். வெளியில் கடனும் வாங்கினான்!
ஒரு சுழற்சிக்கு முப்பதாயிரம் வரை செலவானது. மூன்று சுழற்சிகள் முடிந்த நிலையில், கரு இன்னும் உருவாகவில்லை என்று அடுத்ததாக ஐவிஎப்-ற்கு மருத்துவர் பரிந்துரைத்தார்.
சாந்தி, சந்திரன், கலை… ‘இவனுக்கு ஏன் இப்படிலாம்’ என்று வருந்தினார்கள்.
ஸ்வேதா அம்மா ஈஸ்வரிக்கு, ‘என்ன இது’ என்ற அதிருப்தி!!
‘மகள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே, வேறு வரன் பார்த்திருக்கலாமோ’ என்ற எண்ணமும் அவருக்கு வந்திருந்தது. ஆனாலும் மருத்துவர் சொன்னது போல் செய்யலாம் என்ற முடிவோடு இருந்தார்.
வெற்றிக்கு இதில் விருப்பமேயில்லை. ஐயூஐ சிகிச்சையின் போது ஸ்வேதா உடலில், மனதில் உண்டான மாற்றங்கள், வலிகள் பார்த்தவனுக்கு, இனிமேல் சிகிச்சைகள் எதுவும் வேண்டாமென நினைத்தான். மனைவியிடமும் அதைச் சொல்லி, அவளுக்குப் புரிய வைக்கப் பார்த்தான்.
அவளோ அம்மா முடிவுதான் தன் முடிவு என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்!
மாமியாரிடம் பேசிப் பார்த்தான் வெற்றி. அவரோ, ‘பணம் செலவாகும்னு பார்க்கிறியா நீ’ என்று சட்டென கேட்டுவிட்டார். ‘உங்க அம்மா ஆஸ்பத்திரில இருக்கப்ப கடன் வாங்கி வைத்தியம் பார்த்த, உன் பொண்டாட்டிக்கு பார்க்க மாட்டியா?’ என்று வேறு கேட்டார்.
‘என்ன இப்படிலாம் பேசறாங்க’ என்றாகிப்போனது வெற்றிக்கு. ‘நீங்களாவது அவங்களுக்கு சொல்லிப் புரிய வைங்க’ என்று அவன் வீட்டில் சொன்னான்.
அவர்களுக்கு… குறிப்பாக சாந்திக்கும், சந்திரனுக்கும் ஈஸ்வரி பேசிய பேச்சு துளியும் பிடிக்கவில்லை. ஆனால் தீர்வை நோக்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை வெற்றியிடம் வலியுறுத்தினர்.
கடைசியில் ஐவிஎப் சிகிச்சை எடுக்கலாம் என்று முடிவிற்குத் தள்ளப்பட்டான்.
ஸ்வேதா அண்ணன் நாகு, ‘நானும் பணம் தர்றேன்’ என்றான் தங்கைக்காக., ‘நானே பார்த்துக்கிறேன்’ என்று வெற்றி வங்கியில் கடன் வாங்கினான். முதல் முறை சிகிச்சை தோல்வியடைந்தது.
போதிய இடைவெளிக்குப் பின்பு இரண்டாவது முறை நடந்தபோது, வெற்றி மீண்டும் வெளியில் கடன் வாங்கித்தான் சிகிச்சைக்கானப் பணத்தைக் கட்ட முடிந்தது. அது போதாது என்றபோது நாகு பணம் கொடுத்தான்.
அந்த முறையும் சிகிச்சை வெற்றியடையவில்லை!
ஐசிஎஸ்ஐ என்று அடுத்த சிகிச்சை பற்றி மருத்துவர் சொன்னார். ஸ்வேதா உடல்நிலை மாற்றம், வேதனைகள் பார்த்த ஈஸ்வரி ‘கொஞ்ச நாளைக்கு இந்த ஆஸ்பத்தரி, மருந்து எல்லாம் வேண்டாம்’ என்றுவிட்டார்.
‘இததான முதலயே நான் சொன்னேன். இப்பவாது புரிஞ்சதே இவருக்கு’ என்று இருந்தது வெற்றிக்கு. ஈஸ்வரி மகளின் உடல்நிலை தேறும் வரை, அவர்கள் வீட்டில் வந்து இருக்கட்டும் என்று வெற்றியிடம் சொன்னார்.
‘டிரீட்மென்ட் நடக்கறப்ப பார்த்துக்கிட்டேன்ல, இப்பவும் பார்த்துப்பேன்’ என்று வெற்றி சொன்னதை அவரும் கேட்கவில்லை, அவர் மகளும் கேட்கவில்லை. கடைசியில் மகளை ஈஸ்வரி கூட்டிச் சென்றுவிட்டார்.
இது சந்திரனுக்கும் சாந்திக்கும் சரியாகப் படவில்லை.
நான்கு மாதங்கள் போனது. வெற்றி மனைவியை வீட்டிற்கு அழைத்தான்.
‘அவள் வர மாட்டாள்’ என்றார் ஈஸ்வரி!
இந்த நான்கு மாதங்களில் தினமும் மனைவியைப் பார்க்க வெற்றி போவான். அப்போதெல்லாம் அவளது பேச்சு, அவள் அம்மா பேசுவது, அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திலே அவனுக்கு சிலது புரிந்திருந்தது. அதனால் அதிர்ச்சி இல்லை.
ஆனால் வருத்தம் எக்கச்சமாக இருந்தது!
‘உன் முடிவும் இதானா’ என்று வெற்றி மனைவியைப் பார்த்தான்.
‘என் அம்மா முடிவுதான் என் முடிவு’ என்பதுபோல் அமைதியாக நின்றாள்.
அந்தநேரத்தில் என்ன பேச என்று தெரியவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
வெற்றி வீட்டில் விஷயம் தெரிந்தது. சந்திரனும், சாந்தியும் சென்று இரண்டு மூன்று முறை ஈஸ்வரியிடம் சமாதானமாகப் பேசிப் பார்த்தார்கள்.
அவரோ, ‘என் பொண்ணுக்கு இவனோட ஒரு வாழ்க்கை வேண்டாம்’ என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டார்.
அடுத்தடுத்த முறைகளில் கோபமாகப் பேசினார்கள்.
சாந்தி, ‘இதான் உங்க முடிவுனா, முதலயே இத சொல்லிருக்கலாம்ல, அவனை இவ்ளோ கடனாளி ஆக்கிட்டு இப்ப வந்து ஏன் சொல்றீங்க’ என்று தம்பிக்காகக் கோபப்பட்டாள்.
ஈஸ்வரியும் கோபப்பட்டு, வெற்றியை வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்தார்.
அதன்பின் அடிக்கடி இதுபோல் நடந்தது. ஒருவரை மற்றவர் மோசமாகப் பேசி, அந்தப் பேச்சு முற்றிப் போய் கடைசியில் சண்டையில்தான் முடிந்தது. அந்தச் சண்டை சிலநேரங்களில் தெரு வரைக்கும் வந்துவிடும்.
அப்போதெல்லாம் வெற்றிக்குத்தான் கஷ்டமாக இருக்கும்… தெருவே நின்று வேடிக்கைப் பார்ப்பது போல் என் வாழ்க்கை ஆகிவிட்டதே என்று.
ஒருமுறை இவர்கள் சண்டை முற்றி, விசயம் தெரிந்து ஓடி வந்த கலைக்கும் ஸ்வேதா அண்ணன் நாகுவிற்கும் இடையே பெரிய அடிதடி சண்டையாகிவிட, வெற்றியும், தெருவில் நின்றவர்களும்தான் இருவரையும் விலக்கிவிட்டார்கள்.
கலைக்கு, ‘என்னய இவன் அடிப்பானா’ என்று நாகுமீது கோபம். வீட்டிற்கு வந்ததும் அதை எல்லாரிடமும் காட்டினான். ‘டேய் அவங்க மோசமா பேசினா நீயும் பேச வேண்டியதான’ என்று வெற்றியிடம் கத்தினான். ‘முதல நீங்க இப்படி போய் போய் பேசறத நிப்பாட்டுங்க!!’ என்றான் அக்கா, அப்பாவிடம்.
அண்ணன் சொல்வது போல் பேச வெற்றிக்கு வரவில்லை. அப்படிப் பேசவும் மனமில்லை. ஆனால் அக்காவிடமும், அப்பாவிடமும், ‘இப்படிலாம் நீங்க பேச வேண்டாம், விட்ருங்க’ என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கிறான்.
அவர்கள்தான் கேட்கவில்லை.
இந்த அடிதடிக்குப் பின் சில நாள்கள் யாரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள், பின் திரும்பவும் பேசத்தான் செய்தார்கள்.
இப்படியே நாள்கள் போனது.
ஒருநாள் விவாகரத்து வேண்டுமென வெற்றியிடம் வந்து நின்றாள் ஸ்வேதா!
ஏனிந்த முடிவு என்று அவன் கேட்கவில்லை. இது நீ எடுத்த முடிவா என்றுகூட அவனுக்குக் கேட்கத் தோன்றவில்லை. ‘எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் கொடு’ என்று மட்டும் கேட்டிருந்தான்.
விசயம் தெரியவுமே சாந்திக்கு கோபம். ஸ்வேதாவிடம் போய், ‘என் தம்பி விவாகரத்து கொடுக்க மாட்டான்’ என்று சொல்லிவிட்டு வந்திருந்தாள்.
விவாகரத்து என்றானால், தம்பி இன்னொரு வாழ்க்கை பற்றி யோசிப்பானா, தனியாகவே நின்றுவிடுவானோ, அவனுக்கென குடும்பம் ஒன்று இல்லாமல் போய்விடுமோ என்று பயந்துவிட்டாள் சாந்தி. வெற்றிமீது உள்ள பாசத்தில் அவளுக்கு இந்தப் பயம் வந்திருந்தது.
தம்பியிடம், ‘டிவோர்ஸ்லாம் வேண்டாம். வேற ஹாஸ்பிட்டல்-ல பார்க்கலாம். எப்படியும் இந்த பிரச்சனைய சரி பண்ணிடலாம்’ என்றே சொல்லியிருந்தாள்.
இன்னும் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இன்றுகூட இதுபற்றிப் பேசத்தான் அவள் வந்திருக்கிறாள். தெரிந்தவர்கள், மருத்துவர் யாரையாவது பரிந்துரை செய்தால், உடனே வந்து தம்பியிடம் சொல்லிவிடுவாள்.
சந்திரன்… அம்பிகா ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து ஆசையாக நடத்திய கல்யாணம் ஒன்றுமில்லாமல் போகக் கூடாது; தன் மனைவி எடுத்த முடிவுகள் எப்போதும் தவறாகப் போக வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்.
அதனால் ‘இந்த விவாகரத்து பத்திலாம் நீ யோசிக்காத. நீ ஸ்வேதாகிட்ட பேசு, பேசி அவளுக்கு புரிய வைக்க பாரு’ என்று மகனிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ‘நாங்க உனக்காக யோசிக்கிற அளவுகூட நீ யோசிக்க மாட்டிக்க’ என்று கோபப்படவும் செய்வார்.
சாந்தி, சந்திரன் இருவருமே, ஸ்வேதாவை… இந்த உறவை இழுத்துப் பிடித்து வைக்கப் பார்க்கின்றனர். வெற்றி என்ன பேச வந்தாலும், ‘அம்மா இருந்தா, நாங்க சொல்றதத்தான் சொல்லிருப்பாங்க, இதுதான் உனக்கு நல்லது’ என்று அவனைப் பேச விடாமல் செய்துவிடுவார்கள்.
அப்பா, அக்காவின் இந்த முடிவு கலைக்குப் பிடிக்கவில்லை. தங்கள் குடும்பம் பற்றி இவ்வளவு மோசமாகப் பேசுகிற ஒரு குடும்பத்துடன் உறவை நீட்டிக்கப் பார்க்கிறார்களே என்று அவர்கள் மீது கோபம் இருக்கிறது.
கலை தம்பியிடம், ‘விவாகரத்து கொடுத்திடு வெற்றி, கொடுத்த கையோட நீ இன்னொரு கல்யாணமும் பண்ணிக்கோ டா, நான் முன்னாடி நின்னு நடத்தி வைக்கிறேன்’ என்று சொல்கிறான்.
கலைக்கு நாகுமீது, ‘என்னய இவன் அடிப்பானா’ என்ற கோபம் அடிமனதில் இன்னும், இன்றளவும் இருக்கிறது. அதனால்தான் அந்தக் குடும்பத்துடன் எந்த ஒட்டும் உறவும் வேண்டாமென்பதில் முடிவாக இருக்கிறான்.
வெற்றியின் முடிவு?
அவன் யோசிக்கிறான். முடிவு எடுக்கத் தயங்குகிறான். இன்னும் காலஅவகாசம் வேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் அவன் மனதைப் யாரும் புரிந்து கொள்ளாமல், அவர்கள் எடுத்த முடிவை அவனிடம் திணிக்கப் பார்க்கிறார்கள்… அதுதான் அவனுக்கு நல்லதென்று நினைத்து.
அம்மா இருந்திருந்தால் என்னை, என் மனதைப் புரிந்து இருப்பார்களே என்று பலநேரங்களில் அவனை நினைக்கவும் வைத்துவிடுவார்கள்.
முடிவெடுக்க வெற்றி யோசிப்பது… ஸ்வேதா அம்மா, அண்ணன் கோபத்தை, எரிச்சலை அதிகப்படுத்துகிறது.
ஸ்வேதா பேசாமல் நிற்க, அவள் பின்னாலயே வந்திருந்த ஈஸ்வரி, ‘என்னடி சொல்றான்’ என்று மகளைப் பார்க்க, பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னதாக ஸ்வேதா சொன்னதும், “உன்கிட்ட வாழ்த்து வாங்கத்தான் வந்து நிக்கிறானு நினைச்சியா” என்றார் வெற்றியிடம்.
அவரைப் பார்த்தவுடனேயே, ‘இன்னைக்கு என் நிம்மதி அவ்ளோதான்’ என்று நிலைக்கு வந்திருந்தான் வெற்றி.
ஈஸ்வரி பேசியதற்கு, “அப்புறம் எதுக்கு இங்க வந்து நிக்கிறீங்க” என்று சாந்தி கோபமாகக் கேட்டு வந்து நின்றாள்.
“ஏய் நான் உங்கிட்ட பேச வரல” என்ற ஈஸ்வரி, “இவன்கிட்ட பேசிட்டுப் போக வந்தேன்” என்று வெற்றியைக் காட்டினார்.
சந்திரன், “என்ன மா மருமகனை மரியாத இல்லாம பேசற” என்று வந்தார்.
“யார்ரு மருமகன்? நான்தான் இந்த உறவே வேண்டாம்னு சொல்றேன்ல, நீங்க என்னடானா மரியாத பத்தி பேசறீங்க” என்றார் நக்கலாக.
இவர்கள் பேசினால், பேச்சு எங்கே போய் முடியுமென்று தெரியுமென்பதால், “அவங்க என்ன சொல்ல வந்தாங்களோ சொல்லிட்டுப் போகட்டுமே. நீங்க பேசாம இருங்களேன்” என்று வெற்றி அக்கா அப்பாவிடம் சொன்னான்.
ஈஸ்வரி, “இங்க பாரு… இன்னைக்கு இவளுக்கு முப்பத்தி ரெண்டு ஆரம்பிக்கு. நீ விவாகரத்து கொடுத்தா இவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி, ஒரு பேர்காலம் பார்த்து, அவ வாழ்க்கையை செட்டில் பண்ணி விடுவேன். அப்பா இல்லாத பொண்ண அப்படியே விட முடியாது. என் நிலைமைய புரிஞ்சிக்கோ இத சொல்லத்தான் வந்தேன்” என்றார் வெற்றியிடம்.
சாந்தி, “என்ன பேசறீங்க அவன் பொண்டாட்டிக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைப்பீங்களா, அசிங்கமா இல்லையா உங்களுக்கு” என்றாள்.
சந்திரன், “அவன் ஏதோ ஸ்வேதாவ அம்போனு விட்ட மாதிரி பேச வேண்டாம், அவன் அவளை நல்லா பார்த்துக்க தெரியும்” என்றார்.
“இவர் ஒருத்தர் பேசினதயே திரும்ப திரும்ப பேசிகிட்டு” என்று எரிச்சல்பட்ட ஈஸ்வரி, “அந்த பொண்டாட்டிங்கிற உறவை அத்து விட்டுட்டு, இவளுக்கு… என் பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன். இப்படி சொன்னா போதுமா, இல்லை அது ஏன்னு சொல்லனுமா” என்றார்.
“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம், அதுக்காக டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டா, எல்லாம் சரியாயிடும்” என்றாள் வெடுக்கென்று சாந்தி.
“சரியாயிடுமா… என்னமோ பெரிய டாக்டர் மாதிரி பேசற. முதல எத்தனை நாளுதான் வைத்தியம் பார்த்துக்கிட்டே அலையறது சொல்லு” என்ற ஈஸ்வரி, “அதவிடு, ஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாம்னு உன் தம்பி சொல்றதை நீ ஒத்துப்பியா” என்று கேட்டதும், சந்திரன் இருவரும் அமைதியானார்கள்.
குழந்தை வேண்டுமென சிகிச்சை எடுத்துக் கொண்டது நிஜம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின், குழந்தையைத் தத்தெடுக்கலாம் என்ற எண்ணம் வந்திருந்தது வெற்றிக்கு. அனைவரிடமும் சொன்னான்.
ஆனால் அவன் வீட்டில் ஒருவர்கூட அதை ஏற்கவில்லை. அதுபற்றி பேசக்கூட அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதெல்லாம் சரிவராது. ஏதோ ஒரு குழந்தை எப்படி உன் குழந்தையாகும். இந்த எண்ணத்தை அப்படியே அழித்துவிடு. அது நடைமுறைக்கு, நம் குடும்பத்திற்கு ஒத்துவராது என்றுவிட்டனர்.
சந்திரன் பொறுமையாக, “பாரு ஈஸ்வரி… அவங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசட்டும், பேசினாலே புரிஞ்சிப்பாங்க. நீ இதுல தலையிடாத” என்றார்.
சாந்தி, “ட்ரீட்மென்ட் எடுக்கலாம்னு முதல சொன்னீங்க. தொடர்ந்து அவங்க ட்ரீட்மென்ட் எடுக்கவிடாம நீங்களா முடிவு எடுத்தீங்க. உங்க இஷ்டத்துக்கே எல்லாம் நடக்கணும்னு நினைக்காதீங்க” என்றாள்.
ஈஸ்வரி முதலில் சந்திரனிடம், “என் பொண்ணுக்கு இவன்கிட்ட பேசறதுக்கு ஒன்னுமில்லை” என்று வெற்றியைக் காட்டினார். அடுத்து சாந்தியிடம், “இந்த டிரீட்மென்ட்னால இவ எவ்ளோ கஷ்டப்பட்டானு தெரிஞ்சப்புறம், எப்படி நான் அதுக்கு திரும்பவும் சம்மதிப்பேன்.
உங்க யாருக்கும் இவ மேல அக்கறை இல்லை. நானும் அப்படி இருப்பேனா. முதல உன் தம்பிகிட்ட இதுக்காக செலவழிக்க பணம் இருக்கா?! ஏற்கனவே என் பையன்கிட்ட வாங்கின பணத்தை கொடுக்கவே படாத பாடு படறான். இதுல இவன் இன்னும் செலவழிப்பானாம்” என்றார்.
“நாகு, அவன் தங்கச்சிக்காக அவன் கொடுத்த பணம், இத வந்து திருப்பிக் கேட்கிறதுக்கு எப்படித்தான் மனசு வருதோ” என்றாள் சாந்தி கோபமாக.
ஈஸ்வரி, “ஏ சாந்தி, அவன் இவன்னு என் பையன மரியாதை இல்லாம பேசாத. ஒழுங்கா பேசு. கீழதான் நாகு நிக்கிறான். பிரச்சனை வேண்டாம்னுதான் அவனை இங்க கூட்டிட்டு வரல” என்றார்.
அந்தநேரம் மகளை அனுப்பிவிட்டு வந்த கலை, “பிரச்சனை வேண்டாம்னு நினைக்கிற ஆளா நீங்க. அதென்ன நாகு கீழதான் நிக்கிறான்-னா? அதுக்கு என்ன அர்த்தம், என்ன பயங்காட்டிறீங்களா, எங்க அவனை மேல வந்து பேச சொல்லுங்க பார்ப்போம்” என்று வீட்டிற்குள் வந்தான்.
ஈஸ்வரி பேசாமல் நிற்க, “இங்க வந்து நின்னு ஏன் கத்திக்கிட்டு இருக்கீங்க. வெற்றிகூட எதுவும் பேசணும்னா அவன் வெளிய வர்றப்போ பேசிக்கோங்க. இங்கலாம் வர வேண்டாம். இது என் வீடு” என்று கலை சொன்னதும், ஈஸ்வரி மகளை அழைத்துக் கொண்டு விறுவிறுவெனச் சென்றுவிட்டார்
அதுவரை அறைக்குள் இருந்த ஹரிணி வெளியே வந்து, “ரோகன் தூங்கறான். சத்தம் போடாம, கொஞ்சம் மெதுவா பேசுங்க” என்று பொதுவாகச் சொல்லிப் போனாள். கலையும் அலுவலகம் செல்லக் கிளம்பினான்.
சந்திரன் வெற்றியிடம், “அந்தம்மா பேசிட்டுப் போனதையே நினைக்காத; நீ ஸ்வேதாகிட்ட பேசிப் பாரு” என்று சொல்லிப் போய் அமர்ந்தார்.
சாந்தி, “ஃபீல் பண்ணாத டா. ட்ரீட்மெண்ட் எடுத்தா சரியாயிடும். இந்த டாக்டர போய் பாரு. இத சொல்லத்தான் உன்னய இருக்க சொன்னேன்” என்று ஒரு அட்டையைத் தம்பியிடம் கொடுத்துவிட்டு, வேலைக்கு நேரமாகிவிட்டதால் அப்பாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
வெற்றியும் உடனே கிளம்பிவிட்டான்.
வீட்டிலிருந்து இறங்கி தெரு முனைக்கு வந்த போது ஸ்வேதா நிற்பதைப் பார்த்தான். வெற்றி வருவதைப் பார்த்ததும், அவன் முன் வந்து, “உங்ககிட்ட பேசணும்” என்றாள்.
