Kathambari Novels
அறையில் இருந்த அம்மாவின் புகைப்படம் முன் சென்று நின்றான் வெற்றி. புகைப்படத்தையே பார்த்து நின்றவன், ‘ஆளாளுக்கு ஒரு பக்கம் இழுக்கிறாங்க, என்னால முடியல ம்மா’ என்று மனம் வெம்பிச் சொன்னான்.
அம்பிகா இருந்தால், இப்படி அவன் வருந்தி நிற்கத் தேவை இருந்திருக்காது. மகனைப் புரிந்து… அவனுக்கு ஆறுதலாக, ஆதரவாக இருந்திருப்பார்.
அம்மாவின் அந்த ஆறுதல்தான்… இப்போது அவனுக்குத் தேவை.
அம்பிகா, மூன்று பிள்ளைகளையும் ஒரே மாதிரிதான் கவனித்துக் கொள்வார். அந்தக் கவனிப்பில் கண்டிப்பும் இருக்கும். கனிவும் இருக்கும்.
மகள் எப்போதும் அவள் அப்பா செல்லம். எதுவென்றாலும் அப்பாவிடம்தான் போய் நிற்பாள்.
மகன்கள் இருவரும் ‘அம்மா அம்மா’ என்று அம்பிகாவைச் சுற்றி வருவார்கள். வேண்டியதைக் கேட்பது, பேசுவது, என்று எல்லாம் அம்மாவிடம்தான்.
வளர்ந்த பின் கலையிடம் அது சற்று மாறியது. அம்மாவிடம் அதிகமாகப் பேச, பகிர்ந்து கொள்ள மாட்டான். அதற்காகப் பாசம் இல்லை என்று கிடையாது. வேலை, நண்பர்கள், வெளியுலகம் என்று வந்த பிறகு பெற்றவர்களிடம் ஒரு இடைவெளி வருமே… அதுதான்.
ஆனால் வெற்றி அப்படிக் கிடையாது. சிறுவயதில் எப்படியோ அப்படித்தான் வளர்ந்த பின்னும் இருந்தான்.
வார நாள்கள் வேலை, அலைச்சல் என்றே அவனுக்குப் போய்விடும். வார இறுதிகளில் கோவிலுக்கோ, கடைத்தெருவிற்கோ அம்மாவை அழைத்துக் கொண்டு போவான்.
சில சனி, ஞாயிறுகளில் வீட்டைச் சுத்தம் செய்ய அம்மாவிற்கு உதவுவான்.
அம்மா புகைப்படம் பார்த்தபடி இருந்தவனுக்கு, அவர் சொன்னது போல் முடிவு எடுத்துப் பழகியிருக்க வேண்டுமெனத் தோன்றியது.
அம்பிகா அடிக்கடி மகனிடம் சொல்வார்… ‘முடிவு எடுத்து பழகு வெற்றி’ என்று. அவர் அவ்வளவு சொன்னாலும், ‘என்ன செய்யனு நீங்களே சொல்லுங்க மா’ என்றுதான் கேட்பான்.
மகன் அப்படிக் கேட்டபின், அவரால் மறுக்க முடியாது. என்ன செய்ய என்று சொல்லுவார். ஆனால் மகன் விருப்பம் என்ன என்று பேசித் தெரிந்து கொண்டு, புரிந்த கொண்டுதான்… அவனுக்கான முடிவுகளை எடுப்பார்.
அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் எல்லாம் அம்மாவிடம் அது… இது என்று எதையாவது பேசிக் கொண்டே இருப்பான்.
ஏதாவது மகிழ்வான தருணம் என்றால், மாடிமுகப்பில் நின்று அம்மாவுடன் பேசுவது அவனுக்குப் பிடிக்கும். அவர் தொட்டிச் செடிகளைப் பார்த்தபடியோ, துணிகளைக் காயப் போட்டபடியோ… மகன் பேச்சைக் கேட்பார்.
வாளியில் தண்ணீர் நிரப்பி வைப்பது, துணியை எடுத்துக் கொடுப்பது என்று அம்மாவிற்கு சிறு சிறு உதவிகள் செய்தபடி வெற்றி வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பான்.
ஏதேனும் கவலை என்றால், பொது அறையில் இருக்கும் எஃகு இருக்கையில் அம்மாவை அமரச் சொல்லி, அவரது மடியில் தலைவைத்துப் படுத்திருப்பான். மனம் சமாதானம் ஆகும் வரை, எதுவும் பேசாமல் அப்படியே இருப்பான்.
அம்பிகாவும் மகன் எழும் வரை, அவன் தலை கோதிவிட்டபடி அமைதியாக இருப்பார். அதன்பின்தான் என்ன ஏதென்று கேட்டு ஆறுதல் சொல்வார்.
இப்போதெல்லாம் அடிக்கடி அன்னை மடியை, ஆறுதலை மனம் தேடுகிறது. அதிக நேரமெல்லாம் வேண்டாம். ஒரு ஐந்து நிமிடம்கூட போதும். அந்தளவிற்கு மனம் துவண்டு போயிருக்கிறான்.
அம்மா இருந்திருக்கலாம் என்று பலவேளைகளில் தோன்றிக் கொண்டே இருக்கிறது!
தோன்ற வைத்துவிடுகிறார்கள்!!
இதற்கிடையே வெளியே வெற்றி அக்கா சாந்தி வந்திருந்தாள்!
சாந்தி வீடு இங்கிருந்து ஐந்து தெரு தள்ளி இருக்கிறது. அவள் கணவனுக்கு நெய்வேலியில் வேலை. அங்கேதான் இருக்கிறான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சனி, ஞாயிறுகளில் இங்கே வந்து போவான்.
கணவனின் பெற்றோர்கள், இரு மகன்கள் என்று குடும்பப் பொறுப்புகளை இவள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாள்.
காலையில் சமையல் செய்து, பெரியவர்களுக்கு எல்லாம் எடுத்து வைத்து, வீட்டு வேலைகள் முடித்து, மூத்த மகனைப் பள்ளிக்கு அனுப்பி, சின்ன மகனை அப்பாவிடம் கொண்டு வந்து விட்டுவிட்டு, வேலைக்குப் போவாள்.
ஓய்வே இல்லாமல் ஓடுவது போல்தான் ஒவ்வொரு நாளும் இருக்கும்.
மாமியாருக்கு நிறைய உடல் உபாதைகள் இருக்கிறது. எழுந்து நடமாடுவதே அவருக்குச் சிரமம். அவரைக் கவனிப்பதற்கே சாந்தி மாமனாருக்கு நேரம் சரியாக இருக்கும். அவர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்க முடியாது.
அதனால்தான் இரண்டரை வயது மகனை அப்பாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி, தினமும் வந்து விடுகிறாள்.
சந்திரனும் பொறுப்பாகத் தன் பேரனைப் பார்த்துக் கொள்வார். எப்போதுமே மகள், மகள் வயிற்றுப் பிள்ளைகள் மீது அவருக்குத் தனிப்பிரியம் உண்டு.
சாந்தி வந்ததும், மகளின் புத்தகப் பையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த கலை, “வா க்கா, பெரியவன் ஸ்கூல் போயாச்சா” என்றான்.
“ம்” என்றவள், அப்பாவிடம் மகனைக் கொடுத்துவிட்டு, தம்பி மகள் கன்னத்தை விளையாட்டாகக் கிள்ளி, “என்ன பாப்பா ஸ்கூலுக்கு கிளம்பிட்டியா” என்று கேட்டபடி அமர்ந்தாள்.
‘கிளம்பிட்டேன்’ என்று தலையாட்டிய பாப்பா, சந்திரனிடம் போய், “தாத்தா கங்குலியை இறக்கி விடுங்க” என்றாள். பள்ளிக்குச் செல்லும் முன் ஒரு சிறு விளையாட்டிற்கு ஆசைப்பட்டு.
“அவனுக்கு வச்ச பேர் சொல்லி கூப்பிடு” என்றான் மகளிடம் கலை.
“மாமா இப்படித்தான் அவனைக் கூப்பிடுவாங்க ப்பா” என்று விளையாட்டு மும்முரத்தோடு பதில் சொன்னாள்.
சாந்தி கணவனுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம். கங்குலிதான் அவனது ஆஸ்தான கிரிக்கெட் வீரன். அதனால் மகனைச் செல்லமாக கங்குலி என்று அழைப்பது அவன் வழக்கம்.
அதுவே கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் பழக்கமாகிக் கொண்டிருக்கிறது!
சாந்தி, “வெற்றி எங்கடா” என்று கலையிடம் கேட்டாள்.
“ரூம்லதான் இருக்கான்” என்று கலை சொல்லும் போதே, “வெற்றி இங்க வா, அக்கா வந்திருக்கா பாரு” என்று சந்திரன் குரல் கொடுத்தார்.
வெளியே வந்த வெற்றி அக்கா அருகில் போய் அமர்ந்தான்.
அவனிடம் ஒரு சம்படத்தை நீட்டி, “இட்லி டா, நீ சரியா சாப்பிட்டிருக்க மாட்டேன்னு அக்கா எடுத்து வந்தேன்” என்றாள் சாந்தி.
அண்ணி என்ன நினைப்பார்கள் என முதலில் வெற்றி வாங்கத் தயங்கினான். பின் அக்கா பாசமாகக் கொடுக்கும் போது எப்படி வாங்காமல் இருக்க என்று வாங்கிக் கொண்டான்.
‘ரெண்டு தோசையில் எப்படி வயிறு நிறையும்’ என்று சங்கடப்பட்டிருந்த சந்திரன் மனம் இப்போதுதான் ஆறுதலாக உணர்ந்தது.
மகள் சாப்பாட்டுப் பையை எடுத்து வந்து வைத்த ஹரிணி, “என்ன பேசறீங்க, சரியா சாப்பிட்டிருக்க மாட்டானா? எந்த அர்த்தத்தில பேசறீங்க? இப்பதான் தோசை சுட்டுக் கொடுத்தேன். என்னமோ சாப்பாடே கொடுக்காம பட்னி போடற மாதிரி பேசறீங்க” என்று சாந்தியிடம் எகிறினாள்.
அத்தோடு நிற்காமல் மாமனாரையும் கணவனையும் பார்த்து, “நீங்க ரெண்டு பேரும் இங்கதான இருந்தீங்க… சொல்ல மாட்டிங்களா” என்றாள்.
கலை, சந்திரன் பேசாமல் இருந்து கொண்டனர்.
வெற்றி, “க்கா, நான் சாப்பிட்டேன். அண்ணி தோசை சுட்டுக் கொடுத்தாங்க” என்றான்.
“நானும் நீ சாப்பிடலைனு சொல்லல, நல்லா சாப்பிட்டிருக்க மாட்டன்னுதான் சொன்னேன்” என்ற சாந்தி, “ஏம்மா என் தம்பிக்கு நான் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்ததுக்கு நீ இவ்ளோ பேசணுமா” என்றாள் ஹரிணியிடம்.
தன் கணவனைக் காட்டி, “ஏன் இவரும் உங்க தம்பிதான், அப்ப அவருக்கும் எடுத்திட்டு வந்திருக்கலாம்ல. ஏன் எடுத்திட்டு வரல. அவர்மேல உங்களுக்குப் பாசம் இல்லையா” என்றாள் ஹரிணி.
“பாசம் இருக்கா இல்லையானு கலைக்குத் தெரியும், நீ பேசாத” என்று சாந்தி சொன்னாள். தம்பி இருவர் மீதும் பாசம் இருந்தாலும், எப்போதும் வெற்றிமீது சாந்திக்கு பாசம் சற்று அதிகம்தான்.
கலைக்கும் இது தெரியும். பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான். “அவ ஏதோ டென்சன்ல சொல்லிட்டுப் போறானு விடு க்கா” என்றான் சாந்தியிடம்.
“நான் பேசறத சொல்றாளடா உன் பொண்டாட்டி, அவளால வெற்றிக்கு ஒரு காஃபி போட்டுத் தர முடியாதா, கடைல போய் குடிச்சிருக்கான் இன்னைக்கு, சாரதா ஃபோன் போட்டு சொல்றா” – வெற்றியை நினைத்து சாந்திக்கு நிறைய வருத்தங்கள். அது அவள் குரலில் வெளிப்பட்டது.
கடையில் சாரதா பார்த்தபோதே வெற்றி நினைத்திருந்தான். அக்காவிடம் இவர் சொல்வாரோ என்று. இப்போது சொல்லி இருக்கிறார் என்று தெரிந்ததும் ஐயோ என்றிருந்தது வெற்றிக்கு.
ஹரிணி, “எல்லாருக்கும் காஃபி போடனும்தான உன்னய பால் வாங்கிட்டு வர சொன்னேன், எனக்கு திட்டு வாங்கிக் கொடுக்கணும்னு வேணும்னே கடைல டீ குடிச்சியா” என்று வெற்றியிடம் கோபத்தைக் காட்டினாள்.
“அப்படியில்ல அண்ணி, அந்தநேரம் குடிக்கணும்னு தோணுச்சி, குடிச்சேன். அவ்ளோதான்” என்று பாவமானக் குரலில் சொன்னான்.
ஹரிணி, “கடைல டீ குடிக்கணும்னு தோனிச்சா, இல்ல இங்க வீட்ல குடிக்க வேண்டாம்னு தோனிச்சா, சரியா சொல்லு வெற்றி” என்றாள்.
என்ன சொல்ல என்று வெற்றிக்குத் தெரியவில்லை. அமைதியாக இருந்தான்.
கலைதான், “ஒரு டீ வெளிய குடிச்சதுக்கு இவ்ளோ பேசணுமா, விடேன்” என்று மனைவியிடம் சொன்னான்.
அப்போதும் ஹரிணி, “நான் எங்க பேசறேன், உங்க அக்காதான்” என்றாள்.
சாந்தி, “உன்கூட சண்டை போட்டுக்கிட்டு நின்னா, எனக்கு வேலைக்கு லேட் ஆகிடும். சும்மா இரு கொஞ்ச நேரம்” என்றாள் ஹரிணியைப் பார்த்து.
“நான் வீட்ல சும்மா இருக்கிறத சொல்லிக் காட்டறீங்களா. உங்களுக்கு என்ன பையனை கொண்டு வந்து இங்க விட்டுட்டு நிம்மதியா வேலைக்கு போவீங்க. எனக்குத்தான் இந்த மாதிரி உதவி செய்ய யாரும் இல்லயே” என்றாள்.
சாந்திக்கும், ஹரிணிக்கும் ஒருபோதும் ஒத்துப் போனதில்லை!
அம்பிகா இருந்த போது மருமகள்… மகளைச் சமாளித்து, இருவரையும் சமமாக நடத்தி, சண்டை சச்சரவு என்று எதுவும் வராமல் பார்த்துக் கொண்டார்.
ரோகன் பிறப்பதற்கு முன் ஹரிணி வேலை பார்த்தாள். அப்போது சமையல் எல்லாம் அம்பிகாதான் பார்ப்பார். மேலும் ஹரிணி மகளையும் கவனித்துக் கொள்வார்.
மற்ற வீட்டு வேலைகளைக்கூட அவரும், சந்திரனுமே பகிர்ந்து பார்த்து விடுவார்கள்.
வெற்றிக்கு திருமணம் ஆனபின், மனைவியுடன் அவனைத் தனிக்குடித்தனம் வைத்திருந்தார் அம்பிகா.
வாரம் முழுவதும் இங்கே ஹரிணிக்கு உதவியாக இருப்பார். வாரக் கடைசியில் கணவருடன் வெற்றி வீட்டிற்குச் சென்றுவிடுவார்.
அந்த நாள்களில் ஹரிணி அம்மா இங்கே வந்து மகளுக்கு உதவியாக இருந்து கொள்வார். அவரே எல்லா வேலைகளையும் பார்த்து விடுவார்.
இந்த நடைமுறை ஹரிணிக்கு மிக வசதியாக இருந்தது!
அம்பிகா இறந்த பின், வீட்டின் பொறுப்புகள் எல்லாவற்றையும் ஹரிணிதான் பார்த்தாக வேண்டிய நிலை. ஹரிணி… அவள் வீட்டில் ஒரே பிள்ளை. அப்பா இப்போது இல்லை.
அதனால் தனியாக இருக்கும் தன் அம்மாவை, தனக்கு உதவியாக இங்கே வரச் சொல்லலாம் என்ற எண்ணத்தோடு இருந்தாள்.
ஆனால் வெற்றி வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளால், சாந்தியும், சந்திரனும் அவனை இங்கே வந்து இருக்கச் சொல்லிவிட்டார்கள்.
ஹரிணியால் அம்மாவை இங்கே கூப்பிட்டுக் கொள்ள முடியவில்லை. சிறிய வீடு… அத்தனை பேர் இருந்தால் புழங்குவதற்கு கஷ்டமாக இருக்கும்.
உதவிக்கு அம்மாவை இங்கே அழைத்து வர முடியவில்லையே என்ற கோபம் ஹரிணிக்கு. வெற்றியால்தானே அது முடியாமல் போனது என்று அவன்மீது அந்தக் கோபத்தைக் காட்டுகிறாள்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ‘எங்க அம்மா இங்க இருந்தா எனக்கு ஈஸியா இருக்கும்’ என்று கணவனிடமும் சொல்லிவிடுவாள்.
சாந்தி, தன் மகனை இங்கே விட்டுப் போவதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. என்னதான் சந்திரன் முழுக்க முழுக்க பேரனைப் பார்த்துக் கொண்டாலும், சில நேரங்களில் ஹரிணியிடம் உதவி கேட்பார்.
சிறு சிறு உதவிகள்தான் என்றாலும் அவளுக்கு எரிச்சல் வந்துவிடும்!
அந்த எரிச்சலை… சாந்தி வரும் நேரங்களில் சூசகமாகவோ, நேரடியாகவோ வெளிப்படுத்திப் பேசுவாள்.
சாந்தியும் விடமாட்டாள். திரும்பப் பேசுவாள்!
கோபத்தில் வார்த்தை வளர்ந்து கொண்டே போகும்!!
அம்பிகா இருந்த போது… இவர்கள் இப்படிப் பேச ஆரம்பித்தால், மகளுக்கும் மருமகளுக்கும் பொதுவாகப் பேசி, அழகாகச் சூழ்நிலையைக் கையாண்டு, வார்த்தைகள் கூடுவதைக் குறைத்து விடுவார்.
ஆனால் சந்திரனால் அது முடியவில்லை!
வெற்றியை நடத்தும் விதங்களில், மகளிடம் ஹரிணி நடந்து கொள்ளும் விதத்தில்… மருமகள் மீது சந்திரனுக்கு அதிருப்தி உண்டு. அதைச் சிலநேரம் பேச்சிலும் காட்டிவிடுவார்.
என்ன அதிருப்தி இருந்தாலும், அவர் அதை அவள் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதில் காட்ட மாட்டார்!
ஹரிணி பேசியதற்கு, “ரோகன் வளந்ததும் என்கிட்ட விட்டுட்டு வேலைக்குப் போ, நான் பார்த்துப்பேன்” என்றார்.
அதற்கு ஹரிணி, “ப்ச் அவன் வளந்தப்புறம் எங்க அம்மாகிட்டயே விட்டுட்டுப் போயிப்பேன்” என்றுவிட்டாள்.
சந்திரன் எதுவும் பேசவில்லை; அமைதியாகிவிட்டார்.
ஆனால் சாந்தியால் பேசாமல் இருக்க முடியவில்லை. அப்பாவிடம் ஹரிணி பேசிய விதம்… அவளை அமைதியாக இருக்க விடவில்லை.
ஹரிணியைப் பார்க்கையில், ‘உன்னைவிட எனக்குப் பொறுப்புகள் அதிகம். வேலைகளும் அதிகம். நான் என்ன இப்படியா பேசிக்கிட்டு இருக்கேன், நீ மட்டும் ஏன் இப்படி’ என்ற எரிச்சல் வந்துவிடும் சாந்திக்கு.
வெற்றி இங்கே வந்தது ஹரிணிக்குப் பிடிக்கவில்லை என்றும் சாந்திக்குத் தெரியும். நீ எப்படி அதைச் சொல்லலாம், இங்கேதான் அவன் வளர்ந்தான், இங்கே வராமல் வேறு எங்கே போவான்… என்று எண்ணம் சாந்திக்கு.
கோபமாக, “இங்க பாரு, அப்பாகிட்ட இப்படி எடுத்தெறிஞ்சி பேசற வேலை வச்சிக்காத” என்று ஹரிணியிடம் சொல்லிவிட்டு… கலையிடம், “ஏன்டா நீ இவளை எதுவுமே சொல்ல மாட்டியா…” என்று கேட்டாள்.
“க்கா நீ ஏதோ பேசணும்னு சொன்னேல, அத பேசு. வெற்றி வேலைக்கு போ வேண்டாமா” என்று கலை பேச்சை மாற்றினான்.
வெற்றி இங்கே இருப்பதில் கலைக்கு உடன்பாடு இருக்கா, இல்லையா என்று சரியாகச் சொல்ல முடியாது!!
திருமணத்திற்கு முன் வெற்றி இங்கே இருந்தபோது வீட்டின் வாடகை, மற்ற செலவுகள் எல்லாம் அண்ணனும் தம்பியும் பகிர்ந்து கொள்வார்கள். வெற்றி தனிக்குடித்தனம் போனபின், வீட்டுச் செலவுகளை கலைதான் பார்த்தான்.
‘என் வீடு, நான்தானே பார்க்கணும்’ என்று அதை ஏற்றும் கொண்டான்!
இப்போது எந்தச் செலவுகளுக்கும் வெற்றியைப் பொறுப்பேற்க சாந்தியும், சந்திரனும் விடுவதில்லை. கடன் அடைத்து, அவன் சிக்கல்கள் சரியாகட்டும் என்கிறார்கள்.
ஒரு அண்ணனாக… தம்பிக்கு அவனது கஷ்ட காலத்தில் அனுசரணையாக இருக்க வேண்டுமென்று முதலில் தோன்றியது. இருக்கவும் செய்திருக்கிறான்.
இப்போது, ‘எப்படி முடியும்; ஏன் அப்படி இருக்கணும்’ என்ற கேள்வி வருகிறது!
அடிக்கடி அப்படி இருக்கத் தோன்றாமல் போகிறது!!
பிள்ளைகள் படிப்பு இருக்கிறது. சொந்த வீடு வாங்கும் ஆசையும் இருக்கிறது. அதற்குச் சேர்த்து வைக்க நினைக்கிறான். சமையல், வீட்டு வேலைகள் என்ற பொறுப்புகளை ஏற்க மனைவி சுணங்குவதால், அவள் அம்மா இங்கே வந்து இருந்தால் அவளுக்கு எளிதாக இருக்கும் என்றும் தோன்றுகிறது.
ஆனால் வெளிப்படையாக எதையும் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டான்!
முதலில் வெற்றியை ‘இங்கே வா’ என்று சொல்லிவிட்டு, இப்போது ‘போ’ என்று சொல்வது நியாயமாக இருக்காது என்று நினைக்கிறான். ‘அவன் என் தம்பி, எப்படிப் போகச் சொல்வேன்’ என்ற எண்ணமும் ஒரு ஓரத்தில் இருக்கிறது.
இந்த இரண்டக மனநிலையில் இருப்பதால், வீட்டில் எதும் பேச்சுகள் வந்தால் யார்பக்கம் நின்றால் சரியாக இருக்குமென யோசிக்க மாட்டான்.
அவனுக்கு அந்தநேரம் என்ன தோன்றுகிறதோ… அதைப் பேசிவிடுவான்!!
பெரிய மகன் சொன்னதை அடுத்து சந்திரனும் மகளிடம், “நீயும் ஸ்கூலுக்கு போணும்ல, என்ன சொல்லணுமோ சீக்கிரமா சொல்லு” என்றார்.
அப்போது ஹரிணி, “அவங்க என்ன புதுசாவா சொல்லப் போறாங்க…” என்று சொல்லும் போதே, “போதும்! நீ ரோகனை போய் பாரு” என்று அவளை அதட்டி கலை உள்ளே அனுப்பிவிட்டான்.
வெற்றியை… ஹரிணி பேச வந்ததிற்கு, அவள் மட்டும் இங்கே நின்றிருந்தால், அவளை ஒரு வழி பண்ணியிருப்பாள் சாந்தி. அந்தளவிற்கு கோபம் இருந்தது. வெற்றியை யாரும் எதுவும் பேசினால், அவள் அப்படித்தான் ஆகிவிடுவாள்!!
ஹரிணி பேச்சில்… சந்திரனுக்கும் கோபம் வந்திருந்தது.
காலையிலே இவ்வளவு பேச்சுகளா என்று கலைக்கு ஒரு சலிப்பு!
ஹரிணி வார்த்தைகள் தம்பியைக் காயப்படுத்தி இருக்குமே என்று எரிச்சல்!
தம்பியிடம், “அண்ணி பேசினது நினைச்சி கஷ்டப்படாத” என்றான்.
அக்காவிடம், “க்கா கோபப்படாத, விடு. சீக்கிரம் பேசிட்டு கிளம்பு, ரெண்டு பேரும் வேலைக்குப் போகணும்” என்று புத்தகப் பையை எடுத்தவன், “ஸ்கூல் வேன் வந்திடும் வா வா” என்று மகளை கூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
சாந்தி எழுந்து வெற்றி அருகில் சென்று, “லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்கா, விடுடா” என்றாள் தம்பிக்கு ஆறுதலாக.
ஆறுதல் அடையாமல், வெற்றி முகம் வேதனையை வெளிப்படுத்தியது.
வெற்றிக்கு ஆறு வருடம் முன்பு திருமணம் நடந்தது. அவன் மனைவி பெயர் ஸ்வேதா. பக்கத்துப் பகுதியில் அவளது வீடு இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லித்தான் ஸ்வேதா வரன் வந்தது.
அதன்பின் அம்பிகா ஸ்வேதா பற்றி விசாரித்தார்!
வேலைப் பார்க்கவில்லை என்றாலும் படித்திருந்தாள். அவளைப் பார்த்தபோது அமைதியான குணமாக தெரிந்தது. விசாரித்த போது, அப்படித்தான் என்றார்கள். நல்ல லட்சணமான முகம்.
வெற்றிக்கு ஏற்ற பெண்ணாகத் தெரிந்தாள்!!
குடும்பம் பற்றியும் விசாரித்தார். அவள் அப்பா இரண்டு வருடத்திற்கு முன்பு தவறி இருக்கிறார். அம்மா, அண்ணனுடன் இருக்கிறாள். அவள் அண்ணனுக்கு வேலை இருக்கிறது. அவன்தான் குடும்பத்தைப் பார்க்கிறான்.
எல்லாம் திருப்தியாக இருந்தது. அவருக்கும் ஸ்வேதாவை பிடித்தது. எதுவும் முடிவாகும் முன்பே, ‘வெற்றிக்கு இந்த பொண்ணுதான் சரியா இருக்கும்’ என்று கணவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.
வெற்றியிடம் ஸ்வேதா புகைப்படம் காட்டினார். அவனுக்குப் பிடித்திருந்தது. இருந்தும், ‘உங்களுக்கு பிடிச்சிருக்கா ம்மா’ என்று கேட்டான். ‘பிடிச்சிருக்கு, உனக்குப் பிடிச்சிருக்கானு சொல்லு பா’ என்றார்.
மகன் பிடிக்கிறது என்றதும், அம்பிகா ஸ்வேதா வீட்டில் பெண் கேட்டார்.
ஸ்வேதா வீட்டிலும் வெற்றியைப் பற்றி விசாரித்தார்கள். அவள் அண்ணன், அம்மாவிற்கு வெற்றியின் வேலை, தோற்றம் திருப்தியாக இருந்தது.
ஸ்வேதா வீட்டிற்கு அம்பிகா, சந்திரன், சாந்தி சென்று பார்த்தார்கள். பேசிப் பார்த்தபோது பழகுவதற்கு நல்ல குணமாகவே தெரிந்தார்கள். அவர்களுக்கு வெற்றியைப் பிடித்திருக்கிறது என்று சொன்னார்கள்.
அம்பிகா முகம் முழுவதும் சிரிப்புடன் இருந்தார். நிச்சயம், திருமணம் என்ற பேச்சை எடுக்கும் முன், ‘பொண்ணுகிட்ட கேட்டு முடிவை சொல்லுங்க’ என்று ஸ்வேதா அண்ணன் அம்மாவிடம் சொன்னார்.
“நாங்க சொல்றதுதான், அவ கேட்டுப்பா” என்றார்கள். இருந்தாலும் அம்பிகா ஸ்வேதாவை அழைத்து, ‘என் பையனை பிடிச்சிருக்கா’ என்று கேட்டு, அவள் ஆமாம் என்ற சொன்னபின்தான் திருமணத் தேதியைக் குறித்தார்.
வெற்றி, ஸ்வேதா திருமணம் நல்லபடியாக நடந்தது!
முதலிலேயே அம்பிகா மகனிடம், ‘வீடு பாரு, கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க அங்கதான் இருக்கனும்’ என தெளிவாகச் சொல்லியிருந்தார்.
இந்த வீடு மிகச் சிறியது. மகன்கள் இருவருக்கும் அவர்களுக்கென குடும்பம் வந்துவிட்டதால், ஒன்றாக இருப்பது வசதிப்படாது என்று நினைத்தார்.
அதோடு வெற்றி தனியாகப் பொறுப்புகளைப் பார்த்துப் பழகட்டும் என்றும் அம்பிகா நினைத்தார்.
வெற்றிக்கும், அம்மா ஏன் சொல்கிறார் என்று புரிந்தது.
அம்மா இங்கே இருக்கவே நினைப்பார். அண்ணன், அண்ணிக்கு இப்போது அம்மா உதவி தேவைப்படும். எனவே வெற்றி அம்மாவை தன்னுடன் வந்து இருக்குமாறு சொல்லவில்லை.
அண்ணனிடம் ‘நான் இங்க இருக்கேன்; நீ வீடு பார்த்துப் போ’ என்றும் சொல்லவில்லை.
சூழ்நிலையைப் புரிந்து, அவனுக்கும் ஸ்வேதாவிற்கும் இதே பகுதியில் வீடு பார்த்திருந்தான். அங்கேதான் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். வாழ்க்கை அவர்களுக்குச் சுமுகமாக, மகிழ்ச்சியாகச் சென்றது.
இரண்டு மாதத்திற்குப் பின் வெற்றி மனைவியிடம், ‘வேலைக்குப் போக நினைக்கிறியா’ என்று கேட்டான்.
‘இப்ப வேண்டாம், அப்புறம் பார்த்துக்கலாம்னு என் அம்மா சொல்லிட்டாங்க’ என்றாள். அவனும் சரியென்று அதன்பின் அதுபற்றிப் பேசவில்லை.
வார இறுதிகளில் அம்பிகா சின்ன மகன் வீட்டிற்கு வந்துவிடுவார். சில முறை மகனுக்கு, மருமகளுக்கு சமைத்துக் கொடுப்பார். மற்றபடி பலநேரங்களில் இங்கே வந்தால் ஓய்வுதான் எடுப்பார்.
எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த போது, அம்பிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அடிக்கடி மருத்துவமனைச் செல்ல வேண்டியதாக ஆனது.
சில பரிசோதனைகளை எடுத்துப் பார்த்த மருத்துவர், சிறுநீரகத்தில் பிரச்சனை, தீவிர தொற்று இருப்பதாகச் சொன்னார்.
அதன்பின்… மருத்துவமனை, மருந்து, மாத்திரைகள், அதன் பக்க விளைவுகள், உடல் உபாதைகள் என்றானது அம்பிகாவின் நாள்கள். அவர் கணவர், மகள், மகன்கள் எல்லாரும் அவரைப் பார்த்துப் பார்த்துக் கவனித்தார்கள்.
இருந்தும் அவர் உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றமில்லை.
இப்படியே நகர்ந்தன நாள்கள். ஒருநாள் என்ன தோன்றியதோ அவருக்கு, ‘நான் வெற்றிகூட போய் இருக்கணும்’ என்றார். சரியென்று அங்கே கூட்டிச் சென்றார்கள். அவர் விருப்பப்படி இருந்தால், உடல்நிலைத் தேறிவிடும் என்று நினைத்தார்கள்… நம்பினார்கள்.
ஆனால் திடீரென அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது. மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். சாந்தியும் சந்திரனும் அழுதழுது துவண்டு விட்டார்கள்.
எப்படியாவது அவரைக் காப்பற்றிவிட வேண்டுமென வெற்றியும், கலையும் முயற்சித்தார்கள். வேறு பெரிய மருத்துவமனையில் சென்று ஆலோசனைக் கேட்டார்கள். சக்திக்கு மீறி செலவு செய்தார்கள்.
அம்மாவிற்காக ஓடிக் கொண்டிருந்தாலும், வெற்றி மனதளவில் தொய்ந்து போயிருந்தான். மருத்துவ உபகரணங்கள் சூழ அம்மாவைப் பார்க்க பார்க்க, மனதில் பெரிய பயம் வந்திருந்தது.
‘எப்படியாது என் அம்மாவ காப்பாத்திக் கொடு’ என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருந்தான்!
அம்பிகாவும் பதினைந்து நாள்கள் போராடிப் பார்த்தார். அதன்பின் போராட தெம்பில்லாத அளவிற்கு உடல்நிலை மோசமாகி, அவர் உயிர் பிரிந்தது.
உயிர் போகும் முன்னர்… கணவர், மகள், மருமகன், மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்தி என்று அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்துப் பார்த்தார். ஓரிரு வார்த்தைகள் கஷ்டப்பட்டுப் பேசவும் முயற்சித்தார்..
வெற்றியைப் பார்த்தார். அவனிடம் எதுவும் பேசவில்லை.
அவனாலும் எதுவும் பேச முடியவில்லை. அம்மாவை இப்படிப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. கண்கள் கலங்கி தொண்டை அடைத்ததில் அவனுக்கு குரலே வரவில்லை. அழுகைதான் வந்தது.
மகன் மனநிலை புரிந்த அம்பிகா, ‘வெற்றிய பார்த்துக்கோங்க’ என்றார் அங்கிருந்தவர்களிடம்.
அதுதான் அவர் கடைசியாகப் பேசியது!
அவருக்கு இப்படியாகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாரும் மன வேதனையில் உழன்றார்கள். வீடே துக்கமாகக் கிடந்தது.
நாள்கள் வாரங்களாக ஆயின. வாரங்கள் மாதங்களாகப் போயின. சந்திரன், சாந்தி, கலை, ஹரிணி என்று எல்லாரும் தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு தினசரி வாழ்வை வாழ ஆரம்பித்தனர்.
அப்போதும் அம்மாவின் மறைவை எண்ணி வெற்றி இறுக்கமாக இருந்தான்!
ஸ்வேதாதான் அவனைப் பார்த்துக் கொண்டாள். ஆறுதலாகப் பேசினாள். அவனை இயல்பிற்குக் கொண்டு வர முயற்சிகள் செய்தாள்.
சில மாதங்கள் கடந்த பின், அவனும் இலகுவானான்!
மனைவி, வேலை, வீட்டுப் பொறுப்புகள் என்பதைச் சுற்றி அவனுடைய வார நாள்கள் சென்றன. சனி, ஞாயிறுகளில் அண்ணன், அக்கா வீட்டிற்குச் சென்று வருவான். அவர்கள் பிள்ளைகளை வெளியே அழைத்துப் போவான்.
சந்திரன் பெரும்பாலும் கலை வீட்டில்தான் இருப்பார். அவருக்கு இங்கேதான் இருக்கத் தோன்றியது, மனைவியுடன் வாழ்ந்த நினைவுகளை சுமந்திருக்கும் வீடு என்பதால். எப்போதாவது வெற்றி வீட்டிற்குப் போவார்.
அவன் தினமும் தவறாமல் வந்து அப்பாவைப் பார்த்துவிடுவான்!
வெற்றி, ஸ்வேதா திருமணம் நடந்து முடிந்து ஒன்றரை வருடத்திற்கு மேல் ஆகியிருந்தது. இருவர் வீட்டிலும் குழந்தையைப் பற்றிய கேள்விகள் வந்தன. இப்போது குழந்தை வேண்டாமென்ற முடிவில் இருக்கவில்லை என்பதால் அவர்களுக்கும் அந்தக் கேள்வி இருந்தது.
அதனால் ஒருமுறை மருத்துவரைப் பார்த்துவிடலாம் என்று சென்றார்கள்.
அன்றைக்கு ஆரம்பித்த பிரச்சனை இன்னும் முடியாமல் தொடர்கிறது.
அந்தப் பிரச்சனையை எப்படியாவது சரிசெய்துவிட வேண்டுமென்றுதான் சாந்தி தம்பியிடம் பேச வந்திருக்கிறாள். அவள் பேச நினைக்கும் போது, திறந்திருந்த கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
சந்திரன், சாந்தி, வெற்றி மூவருமே வாசலைப் பார்த்தார்கள்!
அங்கே ஸ்வேதா நின்று கொண்டிருந்தாள்.
சந்திரன் எதுவும் பேசவில்லை.
‘இவ ஏன் இங்க வந்து நிக்கிறா’ என்பது போல் தம்பியைப் பார்த்தாள் சாந்தி.
“அவளுக்கு இன்னைக்கு பிறந்தநாள்” என்று எழுந்து போய் மனைவி முன் நின்ற வெற்றி, “ஹேப்பி பெர்த்டே” என்றான்.
என்ன சொல்ல என்று தெரியாமல் ஸ்வேதா நின்றாள்!
