Kathambari Novels
அத்தியாயம் – 18(Final)
அதிகாலை விடியல் முடிந்த பிறகான காலைப் பொழுது! திரைச்சீலைகள் மூடப்பட்டிருந்த சன்னல்களின் வழியே சூரிய கதிர் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது! அந்த அறை முழுதும் அது பரவி, பார்ப்பதற்கு ரம்மியமான சூழலைத் தந்தது!!
காதலர்கள், தங்கள் காதல் பேச்சுவார்த்தையை தொடங்க தடுமாறினர்!
அவனைத் தவிர, அறையின் எல்லா பொருட்களிலும் அவள் பார்வை பட்டது! அவளைத் தவிர, மற்றதை பார்க்கும் திறன் தனக்கு கொடுக்கப் படவில்லை என்பது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்!!
சட்டென நரம்புகள் புடைக்க, “ஸாரி. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்றவள் குரல் கனத்திருந்தது!
“ச்சே ச்சே… நீ எதுக்கு ஸாரி கேட்கணும்? நான்தான் சொல்லணும்… நான்தான் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்” என்றவன் குரல் உடைந்திருந்தது.
விழிநீர் சுரக்க, “நான் சொன்னதுனாலதான… நீ அப்படி நடந்துக்கிட்ட” என்று காதலனுக்காக வாதம் செய்தாள்.
“நீ சொன்னாலும்… நான் யோசிச்சிருக்கணும் இல்லையா?” என காதலிக்காக பிரதிவாதம் செய்தான்.
அவர்கள் காதலுக்காக அதற்கு மேல் வாதம் செய்யாமல்… மௌன வாய்தா வாங்கிக் கொண்டனர்!
சிறிது நேரத்தில் திரும்பவும் அவளே ஆரம்பித்தாள். “ரெசார்ட் எப்போ ஓபன் பண்ண போற? வேலை எப்படி போய்க்கிட்டு இருக்கு… அன்னைக்கு ரொம்ப பிஸினு சொன்ன” என்று பொதுவான கேள்வி கேட்டாள்.
“அடுத்த வாரம்! பாட்டி, அப்பா, அண்ணா, அண்ணி எல்லாரும் வர்றாங்க” என்றான் ஆனந்தமாக.
“அடுத்த வாரமா? எல்லாரும் இருப்பாங்கள? அப்பவும்… நான் உன்கூடதான இருப்பேன்?” என்று கவலைக் கேள்வி கேட்டாள்.
“அன்னைக்கு மட்டுமில்ல என்னைக்குமே எங்கூடதான் இருப்ப. இருக்கணும்” என்று காதல் பதில் சொன்னான்.
“அவங்ககிட்டே என்னப் பத்தி, என்ன சொல்லுவ? எப்படி சமாளிக்கப் போற?”
“இந்தப் பொண்ண எனக்குப் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லுவேன்”
“ப்ச்… என்னைப் பத்திக் கேட்டா என்ன சொல்லுவ?”
“நான் லவ் பண்ற பொண்ணுனு சொல்லுவேன்”
“நான் கேட்கிறது புரியலையா? நான் யாருன்னு கேட்டா என்ன சொல்லுவ?”
“நல்லா புரியுது! என்ன பதில் சொல்லணும், யாரை எப்படி சமாளிக்கனும்னு எனக்குத் தெரியும். அதைப்பத்தி நீ கவலைப்படாத”
“அவங்களுக்கு ஃப்யூச்சர்ல எப்பயாவது தெரிஞ்சா…”
“எப்படி கடந்த காலத்த மறக்கணுமோ… அதுமாதிரி எதிர்காலத்த நினைக்க வேண்டாம். விடு!”
“ஆனா இந்த உலகம், என்ன நினைக்கும்? அதான் இன்னும் யோசிக்கிறேன்”
“எந்த உலகம்?” என்று தவித்துப் போய் கேட்டான்.
“நாம வாழப்போற உலகம்” என்று, அவன் காதல் தாகத்திற்கு சிறிது தண்ணீர் ஊற்றினாள்.
“கேட்கவே நல்லா இருக்கு” என்றான்.
மெல்ல சிரித்தாள். ஆனாலும் நிமிர்ந்து அவன் விழிகளைச் சந்திக்கவில்லை. பார்வையை வேறு திசையில் நிலை நிறுத்தியே பதில் சொன்னாள்.
“உலகம்? அன்னைக்கு நாம அஞ்சு நாள் சுத்தினோமே… யாராவது ஏதாவது சொன்னாங்களா?”
‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள்.
“நாம நமக்காக வாழப் போறோம். நீ சொல்ற உலகத்துல இருக்க எல்லாருமே ஏதோ ஒன்ன முதுகுல சுமந்துகிட்டு நடக்கிறாங்க. அது சந்தோஷமா இருந்தா, அதுல மூழ்கிறாங்க. அதுவே கஷ்டமா இருந்தா… அதுலருந்து எப்படி வெளிய வரலாம்னு பார்க்கிறாங்க. இதுல அவங்களுக்கு நிமிர்ந்து மத்தவங்களைப் பார்க்கிறதுக்கு நேரமில்லை! புரியுதா?”
“ஆனா…” என்று தயங்கினாள்
“நான் ஒன்னு கேட்கிறேன். இங்க சமையல் செஞ்சுகிட்டு இருந்தாங்கள ஒரு லேடி… அஞ்சு நாள் நீ இருந்தப்போ எதாவது உன்கிட்ட கேட்டாங்களா?”
“கேட்கலை. ஆனா மனசுல ஏதாவது நினைச்சிருப்பாங்கள?”
“இருக்கலாம். அதை என்கிட்ட வந்து தைரியமா கேட்க முடியாதவங்களைப் பத்தி நான் ஏன் கவலைப்படனும்?”
சிறிது நேரத்திற்கு அவளுக்கு என்ன கேள்வி கேட்பது என்றே தெரியவில்லை!
மீண்டும், “ஆனா…” என்றாள்.
“போதுமே… அங்க இருந்தவங்ககிட்ட பதினைஞ்சு நிமிஷம்தான் பேசினேன். உடனே முடிவெடுத்து வேலைக்கு ஓகேனு சொல்லிட்டாங்க. நீ என்னடானா?”
‘என்ன’ என்று புரியாதது போல் அவனைப் பார்க்கவும், அவன் நடந்தவற்றைக் கூறினான். அவளுக்கு அதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. ஏனெனில் அவனைப் பற்றி நன்கு புரிந்திருந்தாள்.
“அவங்க வேலை பார்க்க போறாங்க. நான் கூடவே வாழனும் இல்லையா? அதான் இவ்ளோ யோசனை… குழப்பம்” என அவள் இன்னும் தயங்கினாள்.
அவன் கணிப்பின்படி அவள் ஏதோ சொல்லிட தயங்குகிறாள் என்று புரிந்தது. “என்ன வேணும்னாலும் நீ கேளு. பதில் சொல்றேன். ஆனா இங்கிருந்த போக நினைக்காத. ஏன்னா… ஏன்னா எனக்கு எல்லாமே நீதான். உனக்கப்புறம்தான் மத்ததெல்லாம். நான்கூட…” என்றான் காதலாகி கசிந்து உருகி.
“எனக்கும் அப்படித்தான்… நீதான் எல்லாம்! மத்ததுனுலாம் எதுவும் இல்லை” என்று மருவக் காதல் காட்டினாள்.
“ஏன் உன் தம்பி இல்லையா?” என்றான் சிறு முறுவல் தந்து!
“இருக்கான். ஆனா சிலநேரம் ஏன் அவன் என்னைத் தேடி வரலைனு தோணும். நான்தான அவனைத் தேடிப் பார்க்க போனேன். காலேஜ்லாம் போறவனுக்கு, நான் எங்க இருக்கேன்னு கண்டுபிடிக்க முடியாதா… சொல்லு” என்று குரல் தழதழுக்க நிறுத்தினாள்.
பின் சமாளித்துக் கொண்டு, “அதுக்காக அவனைப் பிடிக்காதுனு சொல்லலை. ஆனா அவன் என்னைத் தேடி வந்திருக்கனும்னு எனக்கொரு ஏக்கம்” என்றாள், தம்பிக்கு… தன்னைப் பற்றி தெரியாது என்ற நினைப்பில்!
“ம்ம் புரியுது. ஆனா அவனுக்கு…” என்று அவள் தம்பியின் தேடுதல் பற்றிச் சொல்ல யத்தனிதான்.
அதற்குள் அவள், “இனிமே போய் அவன்கிட்ட எதும் சொல்ல வேண்டாம். உன் வீட்லயும் எதுவுமே சொல்லக்கூடாது. சரியா? சொல்லவே கூடாது” என்று ஒரு வேண்டுகோள் வைத்தாள்.
“ம்ம், சொல்ல மாட்டேன்”
“அவன் தேடி வந்திருந்தாலும்… அவனுக்கு என்னைப் பத்தி தெரிஞ்சி கஷ்டமா இருந்திருக்கும்ல? நானும் இந்த ஆறு மாசத்துல அவன்கிட்ட எதும் சொல்லாம இருந்தது நல்லதுதான். இப்ப போய் நம்மளைப் பத்தி அவன்கிட்ட சொன்னா சந்தோஷப்படுவான்ல?!” என்றாள் புன்னகையுடன்.
அவனுக்குத் தெரிந்தது. அவள் தம்பிக்கு… அவள் கடந்தகாலம் பற்றி தெரியும் என்பதை அவளிடம் மறைக்க வேண்டும். அதுபோல் அவன் குடும்பத்தாரிடம், அவளைப் பற்றிய விடயங்களை மறைக்க வேண்டும்.
இதெல்லாம் சொல்லத் தேவையற்ற உண்மைகளாகப் பட்டது அவனுக்கு!
அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை போல், “சரி நான் ரூம்க்கு போறேன்” என்று எழுந்தாள். அவனும் எழுந்து கொண்டான். இரண்டு மூன்று எட்டுகள் ஒருவித தயக்கத்துடன் வைத்துவிட்டு யோசனையாக நின்றாள்.
பின் திரும்பி அவனிடம் வந்தவள் “கல்யாணம் பத்தி?” என்றாள்.
“நானே கேட்க நினைச்சேன். கிராண்டா பண்றது பிடிக்கலைனா, மேரேஜ் சிம்பிளா நடத்தலாம். உன் இஷ்டம்தான்” என்றான் எளிதாக!
“இல்ல. நான் அதை கேட்கலை” என்று தயங்கினாள்.
“வேறென்ன…?” என்றவன் குரலில் வித்தியாசம் இருந்தது. அவள் என்ன கேட்க போகிறாள் என்று கொஞ்சம் புரிந்தது.
“இல்ல, மேரேஜ் நடந்தா… அஞ்சு நாள் மாதிரி கிடையாது இ… இல்லையா? நீ என… எனக்கு கொஞ்சம் டைம் கொடு. அதுக்கப்புறம் நீ நேத்து நடந்த…” என்று பாதியை மென்று முழுங்கி மீதியைத் தடுமாறிச் சொல்லி முடித்தாள்.
‘ம்ம்’ என்றான் கவல் கொண்டு. அதைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.
“ஸாரி… நான்” என்று விழிநீரை அடக்கியவளை, “போதும். வேற பேசு” என்று அதட்டிடான்.
அவள் கல்யாணம், அதன் பின்னரான வாழ்க்கைப் பற்றி பேசினாலும், அவன் விழிகளைப் பார்த்துப் பேசாதது… காதலில் குறையிருப்பது போல் இருந்தது.
“வேற… வேற என்ன பேச?” என்றாள் விழிகள் அலைப்புற!
திடுமென, “ம்ம்ம்… சரி, நான் ப்ரொபோஸ் பண்ணட்டுமா?” என்று கேட்டான்.
“ம்… எதுக்கு இப்ப?” என்று கேட்டாள். அவன் நிலைமையைச் சாதாரணமாக்க முயலுகிறான் என்ற எண்ணத்தில்!
“பண்ணனும்” என்றவனின் குரல், அது அவசியம் என்று சொன்னது!
“சரி” என்றவளின் விழிகள் அங்கும் இங்கும் சுழன்றன.
“இங்க பாரு… விருப்பம் இல்லாம நீ வாழ்ந்த இந்த பத்து வருஷ வாழ்க்கையும் கற்பையும் போட்டுக் குழப்பிக்காதே. தூக்கிப் போடு” என்றான் அழுத்தமாக!
அவளுக்கு உள்ளுக்குள் உதறியது. இவன் இதைப் பற்றியெல்லாம் பேசியதே கிடையாதே? இன்று மட்டும் ஏன்? என மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
“ரொம்ப ஈஸியா அழிஞ்சு போற ஒரு விசயத்தோட… கற்ப சம்மந்தப்படுத்திப் பேசறதே தப்புனு நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை அத மனசோட சம்மந்தப்படுத்திப் பார்க்கனும். அத வச்சித்தான் முடிவெடுக்கனும். ஏன்னா ஒருத்தரோட மனச அடையறது அவ்வளவு ஈசி கிடையாதுல?!
மனசுனு பார்த்தா, என்னோட மனசில, என் விருப்பத்தோட ஆறு மாசமா வேற ஒரு பொண்ணு இருந்திருக்கா. அவளைப் பத்தி நிறைய கனவுகள் இருந்துச்சி. ஆனா என்னோட விருப்பம் நிறைவேறல” என்று கொஞ்சம் இடைவெளிவிட்டு, தன்னை சமநிலைப் படுத்திக் கொண்டான்.
‘இன்னமும் அந்தப் பெண்ணிற்காக கவலைப்படுகிறானா?’ என அவள் காதல் மனம் வருந்தியது! அதை முகமே சொன்னது!
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “நீ தப்பா எடுத்துக்காத. அதுக்காக நான் கவலைப்படலை. என்னைக் கேட்டா கவலைப்பட வேண்டாம். அங்கயே நின்னுக்கிட்டு இருக்கவும் வேண்டாம். கண்டிப்பா கடந்து வரனும்.
ஏன்னா சில விஷயத்த மறக்கவும், மன்னிக்கவும் செய்யனும். ஆனா விரும்பி மனசை கொடுத்தது உண்மைதான். இது உனக்குப் புரியுதா?” என்று அவளை அர்த்ததுடன் பார்த்தான்.
அவளுக்கு, அவனை… அவன் கொள்கையைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது!
“இதை புரியற மாதிரி சொல்லனும்னா, இன்னொரு பொண்ணுக்கு கொடுத்த மனசைதான் நான் உனக்கு கொடுக்கிறேன். ஸோ என்னைப் பொருத்தவரை, காதல்ல கற்புநிலை தவறினது நான்தான்! அதை மறந்து, மன்னிச்சி என்னை ஏத்துக்குவியா?” என்று தன் காதலைத் தெளிவாக சொன்னான்.
அவன் அவளுக்காக பேசினானா? அல்லது அவனது இயல்பே இப்படித்தானா? தெரியவில்லை. ஆனால் சத்திய வார்த்தைகள் பேசினான்! அவள் மறுக்கவே முடியாத சத்திய வார்த்தைகள் பேசினான்!!
அலைப்புற்ற அவளின் விழிகள் ஒரு மையப் புள்ளியாக அவனது விழிகளைச் சந்தித்து நின்றது! அவனது விழிகளில் வழிந்த தனக்கான காதலை அள்ளிப் பருக ஆரம்பித்தாள்!
அவனுக்கு அந்த தருணமே வாழ்வில் போதும் என்றிருந்தது!!
தன் கரங்களால் அவனிரு புஜங்களைப் பிடித்துக் கொண்டே… தன் கால் பத்து விரல்களையும் தரையில் அழுத்தி ஊன்றி… அவன் விழியிருக்கும் தூரம் வரை எம்பி நின்று… அந்தக் காதல் நீலவிழிகளில் முத்தமிட்டன பழுப்பு விழிகள்!
அந்த மெளனநிலை சில நொடிகள் தொடர்ந்தது!!
அவள் இதழ் அணைப்பினால் வந்த ஈரமோ அல்லது அவனது விழிநீரால் வந்த ஈரமோ? ஆனால் இருவராலும் ஈரம் உணரப்பட்டது! விழியிலிருந்து தன் இதழ் பிரித்தவள்… அப்படியே சரிந்து வந்து அவன் நெஞ்சத்தில் தலைய சாய்த்துக் கொண்டாள்!
அவளது பரிபூரணக் காதலை உணர்ந்து கொண்டிருந்தான்! உணர்ந்து அதில் தன்னை அதில் தொலைத்துக் கொண்டிருந்தான்!!
“அழறியா?” என்றான் அவள் உச்சந்தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே!
அவனை நிமிர்ந்து பார்த்து, “ச்சே, சந்தோஷமா இருக்கு. உண்மையா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள், ஓரிரு துளி ஆனந்தக் கண்ணீரை விரலால் துடைத்துக் கொண்டே!
வெகு நேரங்களுக்குப் பிறகு சிரித்தான்!
மறுபடியும் அகவாளன் நெஞ்சத்தில் அடைக்கலம் கொண்டாள். அநுதினமும், அவன் உணர்த்திய காதலை அன்றைய தினமே… அவள் திருப்பிக் கொடுக்க போராடினாள்!
அவனை அண்டி நின்று கொண்டே அன்னாந்து அவன் கண்களைப் பார்த்து, “நான் ஒன்னு கேக்கலாமா?” என்றாள்.
“கேளு”
“அன்னைக்கு…” என்று இடைவெளிவிட்டு, “அன்னைக்கு கட்டிப்பிடிச்சிருந்த பாரு… அதே… அதேமாதிரி கட்டிப்பிடிச்சிக்கிறியா? வேணும்னு தோணுது” என்றாள்.
தன் நெஞ்சத்தில் நெருங்கியிருக்கும் நெஞ்சாத்தியை, நெக்குருகி நெகிழ்ந்து தழுவிக் கொண்டான்! அவனது உள்ளத்தின் காதல் ஆர்ப்பரிப்பை அவளுக்கு உணர்த்தினான்!!
அவளுக்கோ இழந்த உறவெல்லாம் ஒன்றாகத் திரும்பக் கிடைத்த மட்டற்ற மகிழ்ச்சி! தன் இன்னல்கள் இறக்கி வைத்த உணர்வோடு, அவன் இதயத்தில் இளைப்பாறினாள்.
“நான் உன்கிட்ட ஒன்னு சொல்லட்டா?”
“ம்ம்ம் சொல்லு”
“என் பேரு…” என அவனிடமிருந்து விலகிக் கொண்டாள். அவள் பெயர் கூறும் பொழுது, அவனுடைய முகத்தின் உணர்வுகளை உடனடியாக சிறைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தாள்! அதற்காகவே இந்த விலகல்!!
“தெரியும்… தெரியும்” என்றான் உணர்வற்றவனாய்.
“தெரியுமா, எப்படித் தெரியும்?” என்றாள்.
அவன் எதுவும் பேசாமலே அவன் அறையை நோக்கிச் சென்றான்.
“நில்லு…” என்று அவன் பின்னேயே சென்றவள், “மாவ்ஷி சொன்னாங்களா?” என்று கேட்டாள்.
“இல்ல” என்று அறையினுள் சென்றான்.
“பின்ன யாரு சொன்னா? சொல்லு” என்றாள் அவன் பின்னே சென்றவாறு.
“உன் தம்பி சொன்னான்”
“தம்பியா? நீ எப்போ அவனைப் பார்த்த?”
“பார்க்கலை. ஃபோன் பண்ணிக் கேட்டேன்”
“அவன் ஃபோன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?”
“நீ நேத்து தூங்கிறப்ப, உன்னைப் பார்க்க வந்தேன். அப்போ உன் மொபைல்ல இருந்து அவன் நம்பர் எடுத்தேன்… ஸோ” என அவன் முழுவதுமாக சொல்லும் முன், ஒருவித அர்த்தமற்ற புன்னகைகள் சிந்திக்கொண்டு, “நான் தூங்கிறப்ப வந்தியா? மாவ்ஷிக்கிட்ட சொன்னேன் தெரியுமா, நீ கண்டிப்பா போயிருக்க மாட்டேன்னு! அதேமாதிரி நீயும்…” என்று யோசித்தபடி நிறுத்தினாள்.
அவன் அவளையே, ‘சொல்லு’ என்பது போல் பார்த்து குறுநகை புரிந்தான்.
“நீ மொபைல் பார்த்தியா?” என்று நகத்தைக் கடித்தபடியே கேட்டாள்!
‘ஆம்’ என தலையசைத்தவன் முகபாவம் சொன்னது, ‘என்மீதான உன் இதய சறுக்கல்கள் அனைத்தையும், உனது கிறுக்கல்கள் சொல்லிவிட்டது’ என!
‘ஐயோ’ என்றிருந்தது அவளுக்கு. வெட்கங்கள் அவளை விரட்டின! அதிலிருந்து எப்படி விடுபட, விரட்ட என்று தெரியாமல் திண்டாடினாள்!!
அவனைப் பார்த்தாள். சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான். அவன் அள்ளி வீசிய வெட்கம்தானே என்று நினைத்து, அவனிடமே கொட்டி விடலாம் என்று எண்ணி… அவனைச் சரணடைந்தாள்!
“சரி சொல்லு. அந்த போட்டோஸ என்ன செய்ய?” என்று மறுபடியும் அவளுக்கு வெட்கத்தைப் பூசினான்.
“போ” என அவனைத் தள்ளியவளுக்கு, அறை பால்கனி கண்ணில்பட்டது.
அவனும் அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தான். அது இருவருக்குமே உணர்ச்சி பூர்வமான பல விடயங்களை ஞாபகப்படுத்தியது!
“அங்க போலாமா?” என்றான்
அவள் சம்மதித்ததும், இருவரும் பால்கனி சென்று கேனோப்பில் அமர்ந்தனர். எந்தவித கேள்விகளோ, தயக்கங்களோ இல்லாமல், ஒரு உரிமையுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவனும் அவளை வாகாக அணைத்துக் கொண்டான்!
அன்று… இரவு நிலவொளியில் காயம் பகிர்ந்திருந்தாள்! இன்று சுட்டெரிக்கும் சூரியன் முன் காதல் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்! காதல் வசப்பட்டோருக்கு, ஆதவனும், ‘அற்றைத் திங்கள் அந்நிலவு’ போலத்தானே!!
“அன்னைக்கே தோணிச்சி. உன்கூட இங்கிருந்து நான் சந்தோஷமா கோவாவ பார்க்கணும்னு. ஆனா மனசுல நடக்குமா நடக்காதானு பயம் இருந்தது. ஆனா இப்போ நடக்குறப்ப… ரொம்ப சந்தோஷமா இருக்குது. நினைச்சே பார்க்கலை இப்படியெல்லாம் நடக்கும்னு” என்று அவன் தோளில் துவண்டாள்.
அவன் சுற்றி வளைத்துக் கேட்ட காதல் கேள்விகளுக்கெல்லாம், அவனைச் சுற்றிச் சுற்றி வந்தே பதில் சொன்னாள்.!
“எனக்கு… உனக்கு மரியாதை கொடுத்து பேசணும்னு தோணுது. ஆனா நான் இப்படியே பழகிட்டு, இனிமே மரியாதை கொடுத்தா, ஒருமாதிரி இருக்கும்ல?” என்று காதல் முற்றிப்போன நிலையாய் புலம்ப ஆரம்பித்தாள்.
முதல்நாள் அவன் நினைத்தது இதைத்தானே! அவள் தன்னை மரியாதையாக அழைக்க வேண்டும் என்று! இருந்தும், “ச்சே… வேண்டாம்” என்றான்.
“ஒரே ஒரு தடவை உனக்கு மரியாத கொடுத்துப் பேசிக்கிறேன். ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொஞ்சினாள்.
“சரிம்மா” என்றான் சந்தோஷச் சலிப்புடன்.
அவன் செவி பக்கமாகச் சென்று, “உங்க பெயர் என்ன?” என்று ரகசியமாக கேட்டாள்.
அவளைப் பார்த்து மென்நகை புரிந்தவன்… அவள் செவி நோக்கிச் சாய்ந்து கொண்டு, அதைவிட ரகசியமாக தன் பெயரைச் சொன்னான்.
அது காதலர்கே தெரிந்த ரகசியம்!
