Kathambari Novels
அத்தியாயம் – 16
அவனை அனுப்பிவிட்டு, அவள் இருந்த அறைக்குள் வந்தார் மாவ்ஷி. இன்னும் சிறு விசும்பலில் இருந்தவளைப் பார்த்தார். எப்படியாவது இவளுக்கு எடுத்துச் சொல்லி அவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தார்.
அவளருகில் சென்று அமர்ந்தவர், “சொல்லு. என்ன பிரச்சனை உனக்கு? ஆனா அழமா சொல்லனும்” என்று கேட்டார்.
“ம் அழல. பிரச்சனையெல்லாம் இல்ல மாவ்ஷி. ஆனா…” என்றவள், அவனைப் பார்த்த நாளிலிருந்து நடந்தவற்றையெல்லாம் கூறினாள்.
“அஞ்சு நாள் கோவாவ சுத்திப் பார்க்கவா போன?” என்றார் நம்ப முடியாமல்!
“ம்ம், அவன்தான் கூட்டிட்டுப் போனான். அஞ்சு நாளும் அவனோட வீட்லதான் இருந்தேன். என்னை அவன் நல்லா பார்த்துக்கிட்டான். சந்தோஷமா இருந்தது. ரொம்ப பிடிச்சது” என்றாள், தன்னவனைப் பற்றி சொல்லும் பெருமை, அவள் முகத்தில் தெரிந்தது!
“அப்புறம் ஏன் இப்படி பண்ற? இப்ப உனக்கு அவனைப் பிடிக்கலையா?”
“இப்பவும் பிடிக்குது மாவ்ஷி. அன்னைக்கவிட, இன்னைக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா நான்… நான் எப்படி? என்ன மாதிரி பொண்ணு அவனுக்கு வேண்டாம்”
“என்ன நான் எப்படி? இங்க பாருமா, என்னை ஒருத்தன் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்து… கேட்கிறதுக்கு ஆள் இல்லைங்கிற தைரியத்தில இப்படி ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டான்.
ஆனா உன்னை… ஒருத்தன் இங்கிருந்து கூட்டிட்டுப் போறேன்னு சொல்றான். கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்த கால்ல நிக்கிறான். நீயே யோசி அவன் எவ்வளவு நல்லவனாக இருப்பான்னு?!”
“மாவ்ஷி, அவன் ரொம்ப நல்லவன்தான். நான், அவனை குறை சொல்லலை. ஆனா நான்?” என்று தயங்கினாள்.
“உனக்கு என்ன? உன்னைய இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டதே நான்! ஆனா என் மடியில படுத்து அழற. அதோட நல்லவன்னு காமிக்க அவனுக்கு உலகம் வாய்ப்பு கொடுத்திருக்கு. உனக்கு இந்த உலகம் என்ன வாய்ப்பு கொடுத்தது சொல்லு?” என்று, அவள் தயக்கத்தை விரட்டினார்.
“ஆனா மத்தவங்க என்ன நினைப்பாங்கனு நினைச்சா?”
“உனக்காக யோசிக்கிறவனப் பத்தி நினைச்சிப் பார்க்காமா… உன்னப் பத்தி யோசிக்காதவங்களை நினைச்சி… நீ, உன் வாழ்க்கையைக் கெடுத்துக்கிறது மட்டுமில்லாம, அவனோட வாழ்க்கையையும் சேர்த்தே பாழாக்கற” என்று கடுமையாகப் பேசினார்.
“மாவ்ஷி, நான் அவனோட சேர்ந்து வாழ்ந்தாதான், அவனுக்கு கஷ்டம்” என்று அவளுள் கலங்கினாள்.
“இப்படியே நீ இந்த வாழ்க்கையை தொடர்ந்தா… அதனால அவனுக்கு கஷ்டம் கிடையாதா?” என்று, அவனுக்காக அவளைக் கலங்க வைத்தார்.
“அதான், நான் எங்கயாவது போறேனு சொல்றேன்” என்றாள் தடாலடியாக.
“அப்படி நீ எங்கயாவது போய்ட்டா, அவன் கஷ்டப்பட மாட்டானா??” என்று தர்க்கம் செய்தார்.
“நான்… அவன் நிம்மதியா இருக்கனும்னு நினைக்கிறேன். நான் அவனோட இருந்தா அவனுக்கு கஷ்டம்தான்” என்றாள் சஞ்சலத்துடன்!
“நீ இப்படி நினைக்கிறதே அவனுக்கு கஷ்டம்னா என்ன பண்ணுவ சொல்லு?” என்று மேலும் சஞ்சலப்படுத்தினார்.
“அவன் சங்கடப்பட கூடாதுனுதான், நான் இந்த முடிவ எடுத்தேன்” என்றாள் சராசரி பதிலாக!
“உன்னோட முடிவைப் பார்த்தா… அப்படித் தெரியலை. அதோட அவன்தான் சமாளிப்பேன்னு சொல்றான்ல. அப்புறமும் ஏன்மா நீ சங்கடத்தைப் பத்தியே யோசிக்கிற?” என்றார் சரியானப் பதிலாக.
“ஆனா, இங்க வாழ்ந்த… இந்தப் பத்து வருஷத்த…” என்று ஒதுங்கினாள்.
“அப்போ நீ இங்க இருக்க வேண்டாம். உன்னை வேற எங்கயாவது கூட்டிட்டுப் போக சொல்லவாமா? நான் அவன்கிட்ட கேட்கிறேன்” என்று அவளை ஒட்டிப் பேசினார்.
“ஐயோ வேண்டாம். வீட்ட விட்டுட்டு இங்க வந்து ஆறு வருஷமா கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கான். இது அவன் கனவு. அதை உடைச்சிடக்கூடாது” என்று அவனுக்காகப் பேசினாள்.
“அவனோட கனவுக்கே இவ்வளவு அக்கறை கொடுக்கிறவ, ஏன் அவன் காதல மட்டும் அம்போன்னு விடுற?” என்று அவர்களுக்காகப் பேசினார்.
“நான் காதலிக்கலைனு சொல்லல. ஆனா முன்னாடி வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சா…” என்று சரணடைந்தாள்.
“சந்தோஷமா இருந்தா, அதை ஞாபகம் வைக்கிறதல அர்த்தம் இருக்கு. இது கஷ்டம்! மறக்கிறதான் நல்லது” என்று சத்தியம் பேசினார்.
அந்த வார்த்தைகள் அவளை யோசிக்க வைத்தது!
“சின்ன சின்ன சந்தோஷத்தில பெரிய பெரிய கஷ்டம் காணாம போயிடும்”
அந்த வார்த்தைகள்… பிற தேவையற்ற விடயங்கள் பற்றி அவளை யோசிக்க விடாமல் செய்தது!
“கண்டிப்பா அவன் உன்னை இங்க விட்டுட்டுப் போக மாட்டான்”
அந்த வார்த்தைகள்… யோசனையை களைந்து, அவளுள் ஒரு நம்பிக்கையை விதைத்தது!
“அப்படியே விட்டுட்டுப் போனாலும் நிம்மதியா இருக்க மாட்டான்”
அந்த வார்த்தைகள், அவள் நம்பிக்கையை நங்கூரமாகப் பற்றிக் கொள்ளச் செய்தது!!
“இத்தனை நாள் கழிச்சி… இங்க இருக்கிற பிள்ளைகளுக்கு வேற வாழ்க்கை கிடைக்காதானு அடிக்கடி நினைக்கிறேன். உனக்கு அது கிடைக்குதேன்னு சந்தோஷப்படும்மா” என்றார் கடைசியாக.
தான் விதைக்த வார்த்தைகள் வளர்ந்து, மரமாகி கனி தரும் என்ற நம்பிக்கை வர, “இதுக்கு மேல உனக்கு சொல்றதுக்கு ஒன்னுமே இல்லை. நீயே முடிவு எடு. இப்ப தூங்கு”என்று சொல்லிவிட்டு எழுந்தார்.
இப்படி ஒரு அறிவுறையைத் தானே இன்று காலையில் எதிர்பார்த்தாள்.
மாவ்ஷியிடம் காலையிலேயே சொல்லியிருந்தால், இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காதோ என்று அவளது மனம் யோசித்தது. இங்கே சற்றுமுன் அவன் செயல்களும், அவள் மறுப்புகளும்… நிறைய வினாக்கள் எழுப்பியிருந்தன!
ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட ரகசியங்கள்! அவன் மறைத்தது போல, அவளும் மாவ்ஷியிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள்!
பின் எப்படிக் கேட்க என்று நிறைய தயக்கங்களுடன், “அவன் போயிட்டானா மாவ்ஷி?” என்று சாதுவாகக் கேட்டாள்.
“வெளிய போ-னு சொன்னேல? அதான் அப்பவே அவன் போய்ட்டான்” என்று சாமர்த்தியமாகப் பதில் சொன்னார்.
சற்று ஏமாற்றம்தான்!! இருந்தாலும், “இல்லை மாவ்ஷி, போயிருக்க மாட்டான். நான் சொல்றதை என்னைக்குமே கேட்க மாட்டான்” என்றாள், அவனை நன்கு புரிந்தவளாக!
“அதான் அவன் இன்னைக்காவது கேட்கலாம்னு நினைச்சிருப்பான்” என்றார், அவளைப் புரிந்தவராக!
அவரின் அந்தப் பொய், அவள் மனதிற்குள் ஒளிந்திருக்கும் உண்மையைப் படம் பிடித்து… முகத்தில் ஒளிபரப்பியது.
அவர் சிரித்துக்கொண்டே, “அவன் போயாச்சு. நீ நல்ல முடிவா எடு. காலைல வர்றேன்னு சொல்லிருக்கான். சரியா… நிம்மதியா தூங்குமா” என்று, காலை வரையே முடிவெடுக்க உனக்கு அவகாசம் என்று… சொல்லாமல் சொல்லிச் சென்றுவிட்டார்.
அவனைக் காண அதிகாலை வரை காத்திருக்க வேண்டுமா!? என்று முதலில் வருந்தியவள்… ஆனால் அவன் வந்து நிற்கும்போது என்ன முடிவைச் சொல்ல என்று தடுமாறினாள். தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தபடியே உறங்கிப் போனாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு நன்றாக அவள் உறங்கியவுடன், “தூங்கிட்டா. நீ வா” என்று அவனை உள்ளே அழைத்து வந்தார் மாவ்ஷி.
“பேசிருக்கேன்பா. நல்ல முடிவா எடுப்பா. கவலைப்படாத” என்றார்.
“தேங்க்ஸ்” என்றவன் தோளில் தட்டிக்கொடுத்து விட்டு, வெளியே சென்றார்.
அவள் உறங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளருகினில் இருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அதனைப் பார்த்தவன் முகம் முழுவதும் அத்தனை ஆச்சரியங்கள்! அவள் கூறாத காதலை அந்த அலைபேசி கூறியது அவனிடத்து!
அலைபேசி முழுவதும் இந்த ஐந்து நாட்களில் அவள் அவனை ரகசியமாகப் படம்பிடித்த புகைப்படங்களால் நிரம்பியிருந்தது. ஒருசில படங்களில், சில வாசகங்களைக் கிறுக்கியிருந்தாள்.
என்
உயிர் செல்களைப் புதுப்பித்தவன்…
இந்த
உயிரற்றச் செல்லையும் நிரப்பியிருக்கிறான்!
இப்படி நிறைய கிறுக்கல்கள் அவள் காதலால் அவனைக் கிறங்க வைக்கும் அளவிற்கு! அவளையே பார்த்தவனுக்கு, சற்று யோசித்திருந்தால், அவளைக் காயப்படுத்தாமல் புரிய வைத்திருக்கலாம் என்று தோன்றியது!
தேவையில்லாமல் இந்த நிலையில், அவளைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோம் என்று கலங்கினான்…
அவனின் இப்போதைய ஏக்கம், ஏந்திழை எழுந்து அவன் கைவலிக்க எழுதிய காதல் கடிதங்களுக்கோ, கவிதைகளுக்கோ பதிலெல்லாம் எழுத வேண்டாம்! எப்போதும் போன்று அவனது எழிலான இரு விழிகள் பொழிந்திடும் காதலை, மொழிகள் ஏதுமின்றி வலிகள் இல்லா விழிகள் கொண்டு வழிமொழிந்தாலே போதும்!!
அவனுக்குச் சில முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது, ஆதலால் அதற்கு மேல் நிற்காமல் அங்கிருந்து கிளம்பினான்.
