Kathambari Novels
அவள் தோற்கிறாள்
கார்குழல் பின்னல் பிடித்தடைத்த
‘சடைமாட்டி’
நெற்றி வியர்வையில் வழிந்தோடும்
‘சாந்து பொட்டு’
அதரத்தில் சாயம் கொடுக்கும்
‘பஞ்சு மிட்டாய்’
கழுத்து சங்கிலியில் பிடித்து ஆடும்
‘அன்னபட்சி பதக்கம்’
விரல் பத்தை தழுவி நிற்கும்
‘மருதாணி’
கை இரண்டிலும் திருவிழாவின்
‘கண்ணாடி வளையல்கள்’
இடுப்பு வளைவில் எடுத்து சொருகிய
‘தாவணி முந்தானை’
இவையாவும்
அழகாகின அவளிடம்!
என் பார்வை உணர்ந்து
நெருங்கி வந்து
‘என்ன வேணும்? சொல்லு மாமா’
என்றாள்!
மண் மணம் மாறாத பேச்சில்
அவள் பேரழகியாகி நின்றாள்
தமிழிடம்!!
‘இக்கணத்தில்
உன்னழகு தோற்றதடி – என்
தாய் மொழி இடத்து’
என்றேன்!
மறுப்பு தலையசைப்புடன்
‘தோற்றது இங்கில்லை
முதல் வரியிலே’ – என்றாள்.
என் கற்பனையும் உணரும்
காதலுடன்!!

