Kathambari Novels
அத்தியாயம் – 5
அதிகப்படியாக கோபம் கொண்டோமோ என்று நினைத்தவன், “நீ கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்னு தோணுச்சி. அப்படி இருந்திருந்தேனா நிறைய ப்ராப்ளம்ம அவாய்ட் பண்ணிருக்கலாம்” என்றான் அக்கறையாக.
“ம்ம். எங்களை கூட்டிட்டு அங்கிருந்து கிளம்பிறப்பகூட போலீஸ் ஸ்டேஷன்ல, யாராவது திருச்சியிலருந்து வந்து கேட்டா, இங்க கொண்டு வந்து விடனும்னு சொல்லித்தான் விட்டாங்க. அப்பகூட எனக்கு நம்பிக்கை இருந்தது, யாராவது நம்மளைத் தேடி வந்து கூட்டிட்டு போய்டுவாங்கனு! இன்னைக்கு வரைக்கும் யாரும் வந்தாங்களா… வரலையானு தெரியல” என்றாள் ஏமாற்றமாக.
“தம்பிக்கு என்னாச்சி?”
“கூட்டிட்டு வரும்போதே, அவன ஒரு ஆர்பனேஜ்ல விட்டுட்டு, என்னை மட்டும் இங்கே கூட்டிட்டு வந்துட்டாங்க. நானும் தம்பிகூட இருப்பேன்னு எவ்வளவோ சொன்னேன். யாரும் கேட்கவே இல்லை. வலுக்கட்டாயமா இங்க இழுத்திட்டு வந்திட்டாங்க”
“தம்பிய வேற இடத்தில விட்டுட்டாங்களா?”
“ம்ம்… ஆக்சிடென்ட் ஆனது, தம்பிய பிரிஞ்சதுதான் கஷ்டமனு நினைச்சேன். ஆனா அதுக்கப்புறம் நடந்தது அதவிட கஷ்டமா இருந்தது”
“ம்ம்”
“இங்க யாருக்கும், எந்த கஷ்டமும் போறதில்ல தெரியுமா? அதைவிட பெரிய கஷ்டமா வந்து, ஏற்கனவே இருக்க கஷ்டத்தை மறச்சிக்குது. அவ்ளோதான்”
“நல்லா பேசுற”
“நான் பேசலை. எனக்குள்ள இருக்கிற வலிதான் பேசுது”
“திரும்பவும் சொல்றேன், நல்லா பேசுற”
“முதல எனக்கு என்ன நடக்குதுனே புரியல. அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சது. ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டோம்னு தோணுச்சி. இதுலருந்து வெளிய போக முடியாதுனு தெரிஞ்சது. அப்படியே என் வாழ்க்கை இதான்னு ஆயிருச்சி. பத்து வருஷமும் போயிருச்சு. இப்போதான் கொஞ்சம் பிரச்சனை இல்ல:
“பிரச்சனை இல்லையா?”
“ம்… இப்ப ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் மாவ்ஷியோட ஹஸ்பண்ட் செத்துப்போனான்”
“அது யாரு மாவ்ஷி?”
“நீ உள்ள வரும்போது ஒருத்தங்ககிட்ட, சிலது பேசிருப்பியே… அவங்கதான்”
‘ஏன்டா கேட்டோம் என்று இருந்தது? இங்கே வந்ததை வாழ்க்கை முழுவதும் சொல்லிக் காட்டுவாளா? என்று கேள்வி கேட்டது அவனது அறிவு! வாழ்க்கை முழுவதுமா? என்று யோசித்தான் அவன்!
ஆம் வாழ்க்கை முழுதும்தான் என உறுதியாக பதில் சொன்னது அவன் மனம்!
“அவங்களை ஏன் அப்படி கூப்பிடற?” என்றான்.
“ஏன் கேட்கிற? நான் இங்க வர்றப்ப எல்லாரும் அப்படித்தான் கூப்பிட்டாங்க.
அதான் நானும்… அப்படினா என்ன?”
“அம்மா கூடப்பிறந்தவங்கள கொங்கணில அப்படித்தான் சொல்வாங்க”
“ஓ… உனக்கு கொங்கணி தெரியுமா?”
“பிஸ்னஸ் பண்றேன். அதெப்படி தெரியாம இருக்கும்?”
“ம்ம், நீ எப்ப இங்க வந்த?”
“படிச்சி முடிச்சதுமே… அப்பாகிட்ட கொஞ்சம் பணம் வாங்கிட்டு வந்திட்டேன். ஃபர்ஸ்ட் பைக் ரென்ட்டுக்கு விடுற ஷாப், சின்னதா வச்சேன். அப்போ ஹிந்தி, கொங்கணி கத்துக்கிட்டேன்! நீ கேட்ட கேள்விக்கு பதில், ஆறு வருஷத்துக்கு முன்னாடி”
“ஆறு வருஷமா நீ கோவாலதான் இருக்கியா?” என்றாள்.
அந்த வார்த்தைகளின் உள்ளர்த்தம், என்னவாக இருக்கும்?
“சரி… நீ சொல்லு” என்று பேச்சை தொடர்ந்தான்!
“அந்த ஆளு இருக்கிறவரைக்கும் ஒவ்வொரு நாளையும் கடக்கிறது அவ்ளோ கஷ்டமா இருக்கும். ஆனா இப்ப அப்படி இல்ல”
“இதான் நீ சொன்ன பிரச்சனை இல்லைங்கிறதா?”
“நான்தான் சொன்னேன்ல, கொஞ்சம்னு”
“தம்பி பத்தி ஏதாவது தெரிஞ்சதா… எங்க இருக்கான்? என்ன செய்றான்? டிரை பண்ணியா??
“ம்… இப்ப நாலு மாசத்துக்கு முன்னாடி மாவ்ஷிகிட்ட கேட்டேன். அவங்கதான் தம்பியை அன்னைக்கு விட்ட ஆர்பனேஜ் பத்தின விவரமெல்லாம் சொல்லி, நாங்க பார்க்கிறதுக்கு ஹெல்ப் பண்ணாங்க தெரியுமா?!”
“பெரிய உதவிதான். சரி அங்க போய் பார்த்தியா?”
“போனேன். ஆனா நான் போய் பார்க்கிறப்ப அவன் அங்க இல்லை. காலேஜ்ல படிக்கிறான்னு சொல்லி, காலேஜ் அட்ரஸ் கொடுத்தாங்க”
“காலேஜ்ல படிக்கிறானா? ஓ பத்து வருஷம்னா, நவ் ஹீ ஸ் ட்வென்டி!”
“ம்ம்… காலேஜுக்குப் போனேன். பார்த்துப் பேசினேன்”
“வாவ் சூப்பர்”
“ம்ம்ம்… முததடவ பார்த்தவுடனே, அன்னைக்கு எப்படி அழுதானோ அப்படியே அழுதான்”
“அக்கா, தம்பி பாசமா?”
“ம், அப்புறமா அப்பப்ப போய் பார்த்துக்கிறேன். ஆனா நல்லா வளந்திட்டான். பயங்கற ஸ்டைலா இருக்கான். வித்தியாசமா முடி வெட்டியிருந்தான். அதுவும் கலரா இருந்திச்சி. சின்னதா தாடிகூட வஞ்சிருந்தான்! ஜீன்ஸ் பேன்ட், டீ-ஷர்ட் போட்டுகிட்டு… அழகா இருந்திச்சி பார்க்கவே”
இவ்வளவு கவனிக்கின்றாளே?! ஆனால் தனது தோற்றம் மட்டும் ஏன் இவளது கருத்தை தொடவில்லை? ஆம் விழிகள் தாண்டி அவனிடம், அவள் எதையும் வேண்டுவதில்லை! அது ஏனென்று அவனுக்கே புரியவில்லை!?
“என்ன படிக்கிறான்? எந்த காலேஜ்?” என்றான்.
“பேஷன் டிசைனிங்னு சொன்னான். ஏதோ சில்வர் இன்ஸ்டிடியூட் அப்படினு பேரு… நிறைய செலவாகுமோ”
“ம்… ஆகும்”
“நீ என்ன படிச்ச?”
“டிராவல் அன்ட் டூரிஸம் MTTM (master of travel and tourism)”
“ப்ச்… நான்தான் ஒன்னும் படிக்கல”
“படிக்கிறதுக்கு ஏஜ் லிமிட் இருக்கா என்ன?” என்றான் எதிர்காலத்தை எட்டிப் பார்த்து!
“என்ன சொல்ற? புரியல”
“புரியறப்ப புரியட்டும். பீஸ் எப்படி மேனேஜ் பண்றான் சொல்லு?”
“பார்ட் டைம் ஜாப் செய்றானாம். யாரோ ஸ்காலர்ஷிப்ன்னு கொஞ்சம் பணம் கொடுக்கிறாங்களாம். நானும் இப்பெல்லாம் கொஞ்சம் காசு கொடுக்கிறேன் தெரியுமா?”
“உன்னப்பத்தி அவனுக்குத் தெரியுமா?” என்றான் தயக்கமாக.
“இப்பெல்லாம் கேட்கிறான். என்ன செய்ற, எங்க இருக்க, இவ்ளோ நாள் என்ன பண்ணனு?! நான் வந்து உன்னை பார்க்கனும்னு சொல்வான். இனிமே தனியா இருக்க வேண்டாம், நாம சேர்ந்து இருக்கலாம்னு சொல்றான்.
ஒவ்வொரு தடவை பார்க்க போறப்ப அவன சமாளிக்கிறதே பெரிய விஷயம். நீ கேட்ட கேள்விக்கு பதில், என்ன சொல்லனும்னு தெரியும். ஆனா அத எப்படி சொல்றதுனுதான் தெரியல” என்றாள் அவனைப் போலவே.
“தம்பிய பார்த்ததுக்கு அப்புறமாவது இதுலருந்து வெளிய போயிருக்கலாமே?”
“மாவ்ஷியோட ஹஸ்பன்ட் இறந்தப்பவே இங்க இருக்க பதினைஞ்சி பேருமே, இதைவிட்டு எங்கயாவது போயிடலாம்னுதான் நினைச்சோம். ஆனா எங்க போகனும்தான் சரியா தெரியல”
“வெளில போயி, வேற ஏதாவது வேல செய்யலாமே?” என்றான் எளிதாக.
“ரொம்ப ஈசியா சொல்லிட்ட. இந்த உலகத்துல நமக்கொரு அடையாளம் குத்திட்டா, அதிலிருந்து நம்மள மாத்திக்கிறது அவ்வளவு ஈசியில்ல”
வலிகளைக் கொன்று சமாதி கட்டி… அதன்மேல் வாழும் பெண்களுக்கு ஒரு அழகு உண்டு தெரியுமா? அவன் அதை, இப்போது அவளிடம் கண்டான்!
“கஷ்டமா இருக்கா?” என முதன்முதலாக, அவளுக்காக கவலைத் திவலைகள் ஏந்தி வந்தன அவனது வாக்கியமும்… அவனும்!
ஆனால் அவன் கவலையில் அவள்தான் கலவரப்பட்டுப் போய்விட்டாள்! “ம்ம் கஷ்டமாதான் இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு. கோவாவை சுத்திப் பார்க்க வந்திட்டு, பத்து வருஷமா நான் இங்கயே இருந்தும் சுத்திப் பார்க்கல. அந்த கஷ்டம்தான் எனக்கு. வேற ஒன்னுமில்ல” என்றாள் அவனை இலகுவாக்கும் முயற்சியாக!
“நான் சுத்திக் காட்டவா?”
ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். பின் அவனிடம் அடுத்து அவள் காட்டிய வெளிப்பாடுகள்… அதாவது அவளுடைய முகபாவமும், முறுவலும், கைகளின் அசைவுகளும், ‘பொய் சொல்லாத’ என்பது போல் இருந்தது,
“சீரியஸா கேட்கிறேன். யோசிக்காத” என்றான்.
ஆனால் அவளோ காதல் புத்தகத்தில் மௌனப் பக்கங்களைப் படித்தாள்.
“இங்க ஏதாவது சொல்வாங்களா?”
“ச்சே ச்சே! இதெல்லாம் இங்க…” என்று பாதியிலேயே நிறுத்திவிட்டாள்.
“ப்ளீஸ் கிளம்பி வா. ஒரு பைவ் டேய்ஸ். நீ வெளில வந்திட்டனா, மிச்சதை நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“அஞ்சு நாளா??”
“அஞ்சு நாள் போதும் எனக்கு” என்றான், காதலைக் கரை சேர்த்திட அவன் கேட்கும் அவகாசமாக!
“என்ன சொல்ற, உனக்குப் போதுமா? புரியல”
“ஐ மென்ட், கோவாவ சுத்திக் காட்ட அஞ்சு நாள் போதும்னு சொல்ல வந்தேன்”
“உன்கூட இருக்கிறவங்க… உன்னோட வீட்ல இருக்கிறவங்க எதுவும் சொல்ல மாட்டாங்களா?”
“நீ நான் பேசறதை கவனிப்பியா… மாட்டியா?”
“ஏன் இப்படி சொல்ற? நீ பேசற ஒவ்வொரு வார்த்தையும் மனப்பாடம் எனக்கு” என்றாள், அவன்தான் அவள் படிக்கின்ற காதல் புத்தகம் என்பது போல!
சந்தோஷத்தில் அவன் மனம் காற்றில் பறந்து, உறைந்து… பாடல் பாடி, ஆடல் செய்து, களைத்தப் பின்னரே தரையில் கால் வைத்தது!!
“எங்க வீட்ல எல்லாரும் தமிழ்நாட்ல இருக்காங்க. ஆனா எனக்கு என்னைக்கும் சுத்தி இருக்கிறவங்க… மத்தவங்களப் பத்தியெல்லாம் கவலையே கிடையாது! அவங்க என்ன நினைப்பாங்க, இவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சே வாழ முடியாது! புரியுதா? நாம நமக்காக வாழனும்” என்றான் தீர்க்கமாக.
“ம்ம்ன்?” என்று முழித்தாள், அவன் கடைசி வாக்கியம் தந்த பொருளிள்!
பேசியதன் பொருளை யோசித்தவன், “ஆமாம், நாம நமக்காக வாழனும்னு நினைக்கிறவன் நான்! நீ உனக்காக… நான் நமக்காக… நான் எனக்காக… நீ நமக்காக… ஸோ, நாம நமக்காக… கரெக்டா?” என்று படபடவென சொல்லி முடித்தான்.
“குழப்பமா இருக்கே!”
“இப்ப அப்படித்தான் இருக்கும். போகப் போக புரிஞ்சிடும்”
“சரி. இன்னொன்னு, இப்பதான் புது பிசினஸ் ஆரம்பிச்சிருக்க. இதனால அது டிஸ்டர்பாகாதா?”
“பிஸ்னஸும் வாழ்க்கையும் ஒன்னா… சொல்லு?”
“வாழ்க்கையா?”
“ம்ம்ம்… நம்ம லைஃப்”
“லைஃபா?”
“ஆமா… அஞ்சு நாள்னாலும் அதுவும் லைஃப்தான! அதாவது வாழ்க்கை”
“ஓ… எந்தெந்த இடத்தைப் பார்க்கப் போறோம்” என்றாள் உற்சாகமாக.
“நான் என்ன… பேக்கேஜ் டூரா கூட்டிட்டுப் போப்போறேன். லிஸ்ட் போட்டுத் தர? நமக்கு எங்க தோணுதோ, அந்த இடத்துக்கு போவோம்”
“ஆனா, எனக்குதான் எங்க போகனும்னு தெரியாதே” என்றாள் அப்பாவியாக.
“நல்லதாபோச்சி”
“நல்லதா… ஏன்?”
“ம்… நல்லதுதான். ஏனா நாம எங்க போகனும்னு, எனக்குத் தெரியும்ல!! நீ என்னோட கூட நடந்தா போதும்”
“கூடவா?”
“ஆமாம்… அப்பதான நான் நினைச்சது நடக்கும்”
“நீ என்ன நினைக்கிற?”
“உனக்கு கோவாவ சுத்திக் காட்ட! அதுக்குதான் இந்த அஞ்சு நாளே”
“அஞ்சு நாளா?!!”
“இஃப் ஐ அம் நாட் ராங்க், இதே கேள்விலதான் நீ உன்னோட கான்வெர்சேஷன ஸ்டார்ட் பண்ண”
கடிகாரத்தின் முட்களை மிதித்து, சில வினாடிகளைக் கடந்து பின்னோக்கிச் சென்று பார்த்தாள். அது ‘ஆம்’ என்றே மணி அடித்தது!
திரும்பவும் இந்த வினாடிக்குள் வந்து, யோசித்தாள். எவ்வளவு எளிதாக முடிவு எடுக்கிறான். பின் நிமிர்ந்து அந்த நீலவிழிகளைப் பார்த்தாள், அதில் தெரிந்த உறுதி, அவளுக்கு நம்பிக்கை தந்தது.
‘சரி’ என தலையசைத்தாள். அவன் எழுந்து கொண்டான்.
“சரி ஈவினிங், இந்த ரோட்ல ஆப்போசிட் சைட்ல வந்து நிற்கிறேன். நீ வரனும் சரியா?” என்று கிளம்ப ஆரம்பித்தான்.
“ஈவ்னிங்கா… ஏன் காலைல வேண்டாமா?”
“ஃபார் யுவர் கைன்ட் இன்பர்மேஷன்… இதான் மார்னிங்”
காதல் புரவியில் ஏறிக்கொண்டு காலங்கள் ஓடுவது இதுதான் போல! காதலா? ஆம் காதலேதான்! காதலின் அகரமுதலிக்குள்… அடக்க முடியாத அர்த்தங்கள் கொண்ட காதல்!!
“பை… பை! ஈவினிங் பார்க்கலாம்”
“கண்டிப்பா வந்திடுவியா?” என்று யாசித்தன பழுப்பு விழிகள்.
நிகழ்கால சாவியைப் பிடித்திருப்பவள் இவள்தான் என்று அவனுக்கு நன்றாக தெரிந்தது! “உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன்” என்று காதல் யாவும் கூறிய நீலவிழிகள், மற்றொன்றும் செய்தன.
அது… சாவியை அவளின் கரத்தோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டன. இனி அவளால் சாவியிலிருந்து கையை எடுப்பது அவ்வளவு எளிதல்ல!
