Kathambari Novels
அத்தியாயம் – 1
விச்சித்திர காதல் — இது
விதிகளை மீறிய தேடல்கள்!
பிரத்யேக காதல் – – இது
பிரியம் கேட்கும் குமுறல்கள்!
வினோதக் காதல் – – இது
விழிகள் வரையும் மடல்கள்!
தீண்டாத காதல் – – இது
தடுப்புச்சுவர் தாண்டும் வேர்கள்!
பரிசுத்தக் காதல் – – இது
பதில்கள் வேண்டா கேள்விகள்!
காணாத காதல் – – இது
கருத்தில் நிற்கும் பாடல்கள்!
இவள் – – கவனமாகக் காதலிக்கப்பட வேண்டியவள்!
அவன் – – அதைக் கண்டுபிடித்த காதலன்!
மொத்தத்தில் இது ஒரு காதல் கா(வி)யம்!
முதலில் கோவா பற்றி! பரப்பளவில் சிறிய நகரம்! மக்கள் தொகையிலுமே! ஆனால் ஆண்டவன் அளித்த இயற்கை எழில் அளப்பரியது. அதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடி எடுக்க வேண்டிய நிலைதான்.
கோவாவின் முக்கியமான சுற்றுலா அம்சம் வெள்ளை மணல் விரிப்புகளைப் போர்த்திக் கொண்ட கடற்கரைகள்தான். அப்படிப்பட்ட கடற்கரையோர நகரத்தில் ஒன்றுதான் பாகா!
இனி பாகா நகரைப் பற்றி!
கோவாவிற்கு கடற்கரையை மட்டும் காண விரும்பி வருவோர்களை ஈர்க்கும் மிக முக்கியமான கடற்கரைகளில்… இரண்டாவது இடம் இந்த பாகா நகரக் கடற்கரை உண்டு.
பரந்து விரிந்த பாகா நகர கடற்கரையோர வீதிகளிலுள்ள சிறு குறுகலான ஒற்றையடி நுழைவு வழியே சற்று சங்கடம் பார்க்காமல் நடந்தால், வந்த பாதையை விட கொஞ்சம் பெரிய சாலைக்கு வந்தடையலாம்.
அச்சாலையின் இருபுறமும் சிறியதும், மிகச் சிறியதுமாக பல கட்டிடங்கள், அங்காடிகள் உள்ளன… அதில் உள்ள ஒரு கட்டிடம்!
இனி அந்தக் கட்டிடம் பற்றி!
பழமை என்று நேற்றைக்குள் செல்ல முடியாமல், புதுமை என்று நாளைக்குள் புகுந்திட முடியாமல் நிற்கும் கட்டிடம்! வெளிப்புறமும்… உட்புறமும் மங்கிய விளக்கு ஒளியால் சூழ்ந்திருந்திருப்பதால்… கட்டிடம் பற்றிய வர்ணனைக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது!
சுவர்களில் எந்த ஒரு அலங்காரப் பொருட்களும் இல்லை. ஆனால் தரைகளில் அங்கங்கே சாதாரண மானிடர்களால் மதிப்பை இழந்த மாதுகள் அலங்காரப் பதுமைகளாக நின்றிருந்தனர். மற்றும் சில ‘பெண்பாலின் எதிர்பதங்கள்’ உள்ளே வந்தன! சில ‘எதிர்பதங்கள்’ வெளியே சென்றன!
இனி கட்டிடத்தின் அறைகள் பற்றி!
அந்த அறைகளுக்கு பெரிதாய் சொல்லும் அளவிற்கு வரலாறு கிடையாது. கற்புநிலை தவறும் காமுகன்களைத் தினம் தினம் சந்திக்கும் அறைகள் அவை… அவ்வளவே!!
அதில் ஒன்றில்தான் அவன் அமர்ந்திருந்தான். அவன் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்? இது அவனுக்கே எழும் சந்தேகம்! ‘ஏன் இங்கு வந்தோம்?’ என தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறான்.
இனி அவனைப் பற்றி!
சற்று பதட்டத்துடன் இருந்தான்! அவன் இங்கே வந்திருப்பது யாருக்கேனும் தெரிந்தால் என்ன நடக்கும் என்று பயப்படுகிறானா?? இல்லை! நிச்சயமாக இல்லை!! உலகத்தின் கேள்விப் பார்வைகளுக்கு… அவன் என்றுமே பயந்து, பதில் சொன்னதில்லை!
அதற்கு இன்று மட்டுமில்லை, என்றுமே பதில் சொல்லப் போவதுமில்லை!
இன்னும் நன்றாக சொல்ல வேண்டுமென்றால் அவன் அந்தப் வேலையற்றப் பார்வைகளை அலட்சியம் செய்பவன். பின் அவனுக்கு ஏன் இந்தப் பதட்டம்? ஏனெனில் அவன் உள்ளம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல என்றுமே கடமைப்பட்டவன்! அதனால் வந்ததே இந்தப் பயம், பதட்டம், இன்னபிற…!
இந்த முடிவு, அவன் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று பயப்படுகிறானோ?? இல்லை! எதிர் வரும் காலத்தில் என்ன நடக்குமென எக்கி நின்று கொண்டு எட்டிப் பார்க்கும் ஆசைகள் அவனுக்கு அறவே கிடையாது!
அப்படியென்றால் கடந்த கால கசப்பான நிகழ்வுகளை அசைபோடுகிறானா? இல்லை… கடந்து போன காலத்தைக் கழுத்து வலிக்கத் திரும்பிப் பார்க்கும் பழக்கமில்லாதவன்!
நேராக நின்று நிகழ்கால நிஜங்களுடன் பயணிப்பவன் அவன்! இப்பொழுது அவனுடைய முடிவுதான் என்ன? வருவது யாராக இருந்தாலும், ‘மன்னிப்பு கேட்டு, விருப்பமில்லை’ என சொல்லிவிட வேண்டும் என்பதே!
தாமதமாக எடுத்த முடிவென்றாலும் சரியான முடிவு அல்லவா!!
ஆனாலும் சில நொடிகளில் திரும்பவும் முடிவு மாற்றப்பட்டது. அந்த மாற்றம், எதற்காக யாரோ வரும்வரைக் காத்திருக்க வேண்டும். இப்பொழுதே எழுந்து சென்றுவிட்டால் என்னவென்று தோன்றியது.
அப்படித் தோன்றியதும் எழ முற்படும் பொழுதுதான், அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. சட்டென அமர்ந்து குனிந்து கொண்டான். முதல்முறையாக, தான் செய்த செயலுக்காகத் தலை கவிழ்ந்து இருக்கின்றான்!
திறந்த கதவுகளின் வழியே யவ்வன யுவதி ஒருத்தி நுழைந்தாள். யுகங்களாய் இந்த மனிதிகளின் அடையாளங்களுடன்!
இனி அவளைப் பற்றி!
ஆடவளின் அதரத்திற்குச் சாயமா?? சாயத்திற்கு அதரமா?? தெரியவில்லை! அங்கங்களின் அழகை எடுத்துக் சொல்லிடும் வகையில் கட்டப்பட்டிருந்தது பூவையவளின் புடவை!
வனிதையவள் வளமான கேசத்தை அடக்கிப் பின்னப்பட்டிருந்த பின்னல்கள்! மணக்கும் பூக்களால் நிரப்பப்பட்டிருந்தது மங்கையவள் அந்தப் பின்னல்கள்! புன்னகைகள் என்றும் அணிந்திராததால்… பொன்னகைகள் தேவைப்பட்டன அந்த நங்கைக்கு!
முக ஒப்பனைகளைச் செய்து கொண்டது வஞ்சியவள் வனப்பை கூட்டிடவா? இல்லை ஒளிந்திருக்கும் வலிகளைக் குறைக்கவா?? இதுவும் தெரியவில்லை, அவளிடம்தான் கேட்க வேண்டும்!
இத்தகைய நல்லாள் ஒருத்தி, அவன் முன்னே வந்து நிற்கின்றாள்… இருந்தும், தலைகுனிந்து இருந்தவன் இன்னும் நிமிரவே இல்லை!
இனி இருவரைப் பற்றி!
நிமிர்ந்து பார்க்கப் போகும் அவனின் நீலவிழிக் கடலுக்குள் நீந்தத் துடிக்கும் மீனாக – இவள்! அவளின் பழுப்பு விழிகளுக்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ள காதல் உணர்வுப் புதையலை, அகழ்வாராய்ச்சி செய்து எடுக்க வந்தவனாக -அவன்!
இருவருக்கும் இது தெரியாமல்… புரியாமல் காதல் உணர்ச்சி தொலைக்க தெரிந்தவர்களாய், இந்தக்கணம் மட்டும் இருக்கின்றனர்!
