Kathambari Novels
Intro
டப… டப… டப… என உறுமிக் கொண்டே ஆலிவ் வர்ண ராயல் என்பீல்டு ஒன்று விமானம் தரையிறங்கும் விசையின் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதன் அசூர வேகத்தில், சாலை ஓரத்தில் கிடந்த ஒன்றிரண்டு இலைகளும், ஓராயிரம் குப்பைகளும் பறவையைப் போலப் பறக்க யத்தனித்தன.
வந்த வேகத்தில் சரேலென்று ஒரு பெரிய சொகுசு மாளிகைக்குள் வாகனம் நுழைந்தது. பின்பும் வண்டியின் வேகம் குறையாமல் நிறுத்துமிடம் நோக்கிச் சென்றது. படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு, வண்டி நிறுத்தப்பட்டது.
என்பீல்டை ஓட்டி வந்த உருவம், அதிலிருந்து இறங்காமலே இரு கால்களைத் தரையில் ஊன்றி, கைகளில் ஒருவித அழுத்தம் கொடுத்து, வண்டியைப் பின்னோக்கி இழுத்துப் ‘பைக் ஸ்டேண்ட்’ போட்டது.
தலைக்கவசத்தைக் கலட்டி, என்பீல்டின் கைகளில் தொட்டில் போல் கட்டித் தொங்கவிட்டது. குனிந்து கண்ணாடியைப் பார்த்து, கேசத்தைக் கோதிச் சரி செய்தது. வலது காலைத் தூக்கி அரைவட்டமாகச் சுற்றிக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கி உருவம் நடக்க ஆரம்பித்தது.
இருபுறம் இருந்த புல்தரையின் நடுவே போடப்பட்டிருந்த கல் தரையில், ‘செல் விரைந்து’ என்று நடந்து வந்தது அந்த உருவம்.
தார் சாலையில் குதிரை ஓடும்போது மற்றும் வணிக வளாகங்களில் பெண்கள் குதிஉயர் காலணிகள் அணிந்து வரும்போது ஒரு சத்தம் வருமே ‘டொக்கு டொக்கு’ என்று. அதுபோல் இருந்தது அந்த உருவத்தின் ‘பூட்ஸ்’ ஒலி.
வானமே நகர்ந்து வருவது போல இருந்தது. இது உருவத்தின் எடை பற்றி அல்ல! அதன் உடை பற்றியது. அதாவது, நீல வர்ண பேன்ட்டும், வெள்ளை நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தது அந்த உருவம்.
உருவத்தின் நாடித்துடிப்பின் ஓசைக்கேற்ப நர்த்தனம் செய்து கொண்டிருந்தன மணிக்கடிகாரத்தின் நொடி முட்கள்.
மாளிகையின் வெளியே தோட்ட வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் கண் இமைக்க மறந்து அந்த உருவத்தின் தோற்றத்தை வியந்து பார்த்தனர். ஏன்? அவ்வப்போது சில ஆண்களும் அதனினது கம்பீரத்தை ரசித்தனர்.
உருவம் மிடுக்குடன் நடந்து வந்து, மாளிகைக்குள் நுழைய முற்படுகையில், வாயிலில் நின்ற பாதுகாவலர்கள் தடுத்தனர். தடுத்ததை அலட்சியப்படுத்தும் விதமாக உருவத்தின் நாக்கில் உழன்று, சுழன்று கொண்டிருந்தது ஒரு சுவிங்கம்.
சோதனையை ஆரம்பிக்கும் முன் பாதுகாவலர்கள் சுவிங்கத்தைத் துப்பிவிடச் சொல்லினர்.
அந்த உருவமும் சுவிங்கத்தை நாக்கின் நுனியில் பந்துபோல உருட்டிக் கொண்டு வந்து துப்பியது. அந்தத் துப்பலில், சுவிங்கம் ஹர்திக் பாண்டியாவின் மட்டையில் பட்ட பந்து போன்று பறந்து சென்று குப்பைத் தொட்டியில் விழுந்தது.
பாதுகாவலர் சோதனையை ஆரம்பிக்கும் போதுதான் உருவம் வாய் திறந்தது. “பொம்பளைய செக் பண்ண பொம்பள இல்லையா?” என்று கேட்டது பல்லைக் கடித்துக் கொண்டு.
இந்தக் கேள்வியில், தன் வேலைக்கான திமிர் இருந்ததா? இல்லை… அதன் இயல்பான நிமிர் இருந்ததா? தெரியவில்லை. ஆனால் ஒன்று, இது சாதாரண இலகு பேச்சல்ல!
அந்தப் பாதுகாவலர்கள் ‘மூன்றாவது’ மொழியில் பேசிக் கொண்டனர்.
‘சப் டைட்டில்’ போட்டு, அதைப் புரிந்து கொள்வதற்கு ஒருவித சோம்பல். அதனால் அந்தப் பெண் உருவம் அவர்களது பேச்சுகளைப் பொறுமையுடன் தவிர்த்தது. அந்தப் பொறுமையும் ஒரு கட்டத்தில் போய்விட்டது.
“என்ன? சன் டிவி பார்க்கிறப்ப சோனி டிவிக்கு மாத்ற?” – இது பெண் உருவம், எரிச்சலுடன். ‘என்ன’ என்று ஒலிக்கிறதா? இல்லை ‘இன்னா’ என்று ஒலிக்கிறதா? சரியாகப் பிரித்தறிய முடியவில்லை.
அவர்களுக்குள் சிறிது நேரத்திற்கு வீண்பேச்சுகள், விதண்டாவாதங்கள், வியாக்கியானங்கள் அரங்கேறின. அதற்குள் இந்தச் சலசலப்பு கேட்டு, ‘கோட்’ போட்ட மனிதர் ஒருவர் வெளியே வந்தார்.
இதுபோல் ‘கோட்’ அணியும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது, அந்தப் பெண் உருவத்திற்கு ஒன்று தோன்றும். அந்த ஒன்று என்னவென்றால், வியர்க்கும் என்று தெரிந்தும், இரவில் மேகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்குகின்ற சூரியன்தான்!
அந்த ‘கோட்’ போட்ட மனிதர், “வாட் ஹேப்பன்ட்? வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்” என்றார் உலக மொழியில்.
“நத்திங் சார். ஐ அம் சயனா, சிஐடி ஆபிஸர். ஐ பிரிஃபர் ஃபீமேல் செக்யூரிட்டி ஹார்டு. வில் யூ அரேஞ்ச் பார் இட்?” என்றாள், ‘உலகத்தோடு ஒத்து வாழ்’ என்ற பழமொழிக்கு இணங்க. ஆனால் ஒன்று, அவளின் அந்த ஆங்கில உச்சரிப்பில், அந்நிய நாட்டவரும் தோற்றுவிடுவார்கள்.
“யூ ஜஸ்ட் கெட் இன் மேம்” என்று சொன்னார் மரியாதையுடன்.
இந்தச் சலுகை, அவள் வேலைக்கா? அவள் பேசிய மொழிக்கா? தெரியவில்லை. ஆனால் உள்ளூர் மொழிகளுக்குள் அடித்துக் கொண்டு உலக மொழியிடத்து அடிமைப் பட்டிருக்கிறோமோ?
அந்த பெண் உருவம், மன்னிக்கவும்… ‘சிஐடி ஆபிஸர்’ சயனா, அந்தச் சொகுசு மாளிகைக்குள் நுழைந்தாள். இன்னாள் அமைச்சரின் இக்கட்டைத் தீர்க்கவா? இல்லை… தனக்கு இன்னலைத் தேடிக்கொள்ளவா? – இவளின் இந்த நுழைவு.
அத்தியாயம் – 1
அந்த ‘கோட்’ மனிதர், சயனாவை உள்ளே கூட்டி வந்து ஒரு அறையில் விட்டார்.
அங்கே இன்னொரு பெண் இருந்தாள். சயனாவைப் பார்த்தவுடன், அந்தப் பெண் முறுவலித்தாள். “என்ன ஆச்சரியமா இருக்கு? சுவிங்கம் இல்லாம வந்திருக்க”
அவளருகே வந்தமர்ந்து கொண்ட சயனா, “வெளிய ஒருத்தன் துப்ப சொன்னான், அதான் துப்பிட்டேன்” என்றாள்.
இதைக் கேட்ட ‘கோட்’ மனிதர், ‘உலக மொழிக்கு, மூத்த மொழி பேசுபவளா இவள்?’ என்பது போல் பார்த்தார்.
“என்ன? இப்ப செக் பண்ணனும்-னு தோணுதா?” என்றாள் சயனா அவரிடம்.
“நோ மேடம்” என்றார்.
“அப்ப கிளம்புங்க” என்றவுடன், அவரும் வெளியே சென்றுவிட்டார்.
“இப்படிப் பேசற சயனா? உட்காரு” என்று சொன்னாள் ரேவ். இவள் சயனாவுடன் பணிபுரிபவள். அதைத் தவிர அவளின் அடையாளம், சயனா தோழி.
“அம்மா, அப்பா கிளம்பியாச்சா?” – சயனா.
“ம்ம்ம், காலைல நாலரைக்கே”
“இந்தத் தடவை நார்த் இந்தியா முழுசும் கவர் பண்றாங்களா? எத்தனை நாளு”
“இருபத்தி அஞ்சு நாள்”
“காலைல ஸ்டேஷன் வந்திருப்பேன். நைட் தூங்க லேட்டாயிடுச்சி, சோ முடியல”
“ம்ம்ம்” என்று மட்டுமே பதில் வந்தது. ரேவிற்குத் தெரியும், சயனாவின் தூக்கம் தாமதமானதற்கு என்ன காரணமென்று. “சயனா, அம்மா எப்படி இருக்காங்க?”
சயனா, “வாழறதுக்கும் கஷ்டப்பட்டாங்க. இப்ப சாகறதுக்கும் கஷ்டப்படறாங்க” என்றாள். தாயின் உடல்நலக் குறைபாடு சிலநேரம் அவளைத் தூக்கம் வராமல் தவிக்க வைத்துவிடும். இதுதான் அவள் தூக்கத்தின் தாமதத்திற்குக் காரணம்.
“ஏன் இப்படிப் பேசற? எல்லாம் சரியாயிடும்” – ரேவ்.
“இங்க சரியாகிறது என்னன்னு தெரியும்ல? அதனால அப்படிப் பேசாத” என்றாள் சயனா. தாயின் வேதனைக்கு மரணம் ஒன்றே மருந்து என்பதால், அது எந்த மருந்துக்கடையிலும் கிடைக்கக் கூடாதென மன்றாடுகிறது மகளின் மனம்.
பயங்கரத் தயக்கத்துடன் ரேவ், “ஏன் சயனா இன்னும் அம்மா அந்தப் பேச்சு பேசிட்டுதான் இருக்கிறாங்களா?” என்று கேட்டாள்.
பதில் செல்லாமல் சயனா முறைத்தாள்.
“முறைக்காத. பேசறாங்களா?”
“தினமும் பேசறாங்க”
சயனா திருமணம் பற்றித்தான் அவள் அம்மா தினமும் அவளிடம் பேசுகிறார். ‘நீ என்ன முடிவு எடுத்திருக்க’ என்று கேட்க ரேவிற்கு ஆசைதான். ஆனால் ‘இவள் என்ன சொல்வாளோ?’ என்று அமைதியாக இருந்தாள்.
“ஏன் ரேவ், ஆப்பிரிக்கா காட்லருந்து ஆயில்தான வரும். நமக்கு மட்டும் எப்படி அலைன்ஸ் வருது?” என்றாள் சயனா சந்தேகமாக.
“எது வருதோ அத ஏத்து… ” என்று ரேவ் தேய்ந்து போனக் குரலில் ஆரம்பித்தாள்.
“ஆங் ஆங் என்ன சொன்ன? திரும்பச் சொல்லு” என்று பாய்ந்து வந்தாள் சயனா.
அந்தநேரம், பனிப்பூச்சு கொண்ட கண்ணாடி கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண்மணி வந்தார். காட்டன் புடவை, பெரிய பொட்டு, தூக்கிப் போடப்பட்ட கொண்டை என்று இருந்தார்.
அவர் சிஐடி பிரிவின் டிஎஸ்பி – கனகா! சயனா, ரேவ் இருவரின் நேரடி தலைமை அவர்தான்.
“ஹாய் மேம்” என்றாள் சயனா.
“அத நீயே வச்சுக்கோ. ஏன் லேட்?”
“ஸாரி மேம் டிராபிக்”
“உண்மையச் சொல்லு”
“வேணும்னுதான் லேட்டா வந்தேன். இவனுங்க கூப்பிட்டவுடனேலாம் என்னால ஓடி வரமுடியாது”
“சந்தோசம். சீக்கிரம் உள்ளே போ. நான் என் டீம்லருந்து ஒருத்தர் வருவாங்கனு மட்டும்தான் சொல்லிருக்கேன். நீயே உனக்கு ஒரு இன்ட்ரோ கொடுத்துக்கோ”
“ஓகே மேம்” என்று அறைக்குள் சென்றாள் சயனா.
அங்கே நால்வர் அமர்ந்திருந்தனர்.
அவர்களைப் பற்றிக் கூற நினைத்தால் அகரமுதலியே அலறிக் கொண்டு ஓட்டம் எடுக்கும். அவர்கள் பற்றி ஒரு நல்ல விஷயம்கூட கிடையாது. வேண்டுமென்றால் அவர்களது வேலையைப் பற்றிக் குறிப்பிடலாம்.
ஒருவர் அரசியல்வாதி. ஒருவர் தொழிலதிபர். ஒருவர் பத்திரிகையாளர். ஒருவர் காவல்துறை அதிகாரி.
நால்வரின் எதிரே சென்று அமர்ந்து கொண்டாள். நால்வரின் பார்வையும், ஏதோ ஒன்றை எதிர்பார்த்து ஏமாந்து போனது போலிருந்தது.
“மேல் ஆபீஸர் (male officer) யாரும் இல்லயா?” என்று அரசியல்வாதியான அந்த இன்னாள் அமைச்சர், அவரது உதவியாளரிடம் கேட்டார்.
“ஏன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறீங்களா?” என்று பட்டென்று கேள்வி வந்தது சயனாவிடமிருந்து.
நால்வர் பார்வையும் இப்போது ஏமாற்றத்தைத் தவிர்த்து, எதிர்ப்பைக் காட்டின. தங்களின் அதிகாரம் என்ன? பணபலம் என்ன? ஆனால் இவளுக்குத் தங்களிடம் எந்தப் பயமும் இல்லையே என்று எண்ணங்கள் வேறு ஓடியது.
“என்ன பிரச்சனை-னு சொன்னா கேட்பேன். இப்படியே பார்த்துக்கிட்டு இருந்தா போய்க்கிட்டே இருப்பேன்” என்றாள் பொறுமையில்லாமல்.
உடனே, இன்னாள் அமைச்சர் அவரது உதவியாளரைக் கூப்பிட்டுப் பிரச்சனை என்னவென்று சொல்லச் சொன்னார்.
“ஒரு நிமிஷம்” என்று அந்த உதவியாளரைத் தடுத்தாள்.
“ப்ச், இப்ப என்ன?” என்றது அரசியல்.
“பிரச்சனை என்னன்னு நீங்க சொல்றத கேட்கத்தான், நான் இங்க வந்திருக்கேன். உங்க அசிஸ்டென்ட் சொன்னா, எங்க ஆபீஸ்ல வந்து சொல்லச் சொல்லுங்க”
“ஏன்யா உனக்கு வேற ஆளே கிடைக்கலயா” என்று தோரணையாகத் தொழிலதிபர் கேட்டார்.
“இவங்க டிபார்ட்மென்ட்ல யாரைக் கேட்டாலும் இவங்க பேரதான் சொல்றாங்க” என்று அமைச்சரின் உதவியாளர் அடக்கமாகப் பதில் சொன்னார்.
சிறு யோசனையின் பின் அமைச்சர், “சரி நானே சொல்றேன்” என்றவர், “எங்க பேங்க் அக்கவுண்டல இருந்த பணத்தை யாரோ எடுத்திருக்காங்க” என்றார்.
“இதுதான் பிரச்சனைனா, நீங்க போலீஸ்கிட்ட சொல்லி இருப்பீங்க, லீகலா மூவ் பண்ணிருப்பீங்க” – சயனா.
நால்வரும் அமைதி காத்தனர்.
“பிரச்சனை என்னனு சொன்னாதான், என்னால எதும் பண்ண முடியும்” என்று எரிச்சல்பட்டாள் சயனா.
“எங்க நாலு பேர் பேங்க் அக்கவுண்ட்ட யாரோ ஹேக் பண்ணி, பணம் எடுத்து, வரி கட்டிட்டாங்க” என்று பத்திரிக்கை வாய் திறந்தது.
“வரியா? யூ மீன் டேக்ஸ். யாரோட டேக்ஸ கட்டினாங்க?” – சயனா.
“எங்களோட வரியைத்தான்” – போலீஸ்.
“அப்ப இவ்ளோ நாள் நீங்க வரி கட்டலயா?” – சயனாவின் குற்றம் சாட்டும் குரல்.
“இது உனக்குத் தேவையில்லாத விஷயம்” – இது அமைச்சரின் அதிகாரக் குரல்.
“ஓ… சரி இப்ப நான் என்ன பண்ணனும்?”
“அது யாருன்னு கண்டுபிடிக்கனும்”
“கண்டுபிடிச்சி என்ன பண்ணனும்? அதைச் சொல்லுங்க”
“கண்டுபிடிச்சி கொடுத்துட்டு நீ போய்கிட்டே இரு. அவ்வளவுதான் உன் வேலை”
“சோ… அன்அபிசியலா போகணும்னு நினைக்கிறீங்க”
“யெஸ், அதுவும் எலக்சனுக்கு முன்னாடி கண்டுபிடிக்கணும்”
“பட்…”
“இங்க பாரு உன்னோட டிபார்ட்மென்ட்லயும் நாங்க பேசியாச்சி. கவர்மென்ட் சைடலிருந்தும் எந்தப் பிரச்சனையும் வராது”
அதிகாரம் அவர்கள் கையில். அதை வைத்து எதையும் சாதித்துக் கொள்ள முடிகிறது. “ஓகே!” என்றாள்.
“முதல ஏதோ லிங்க் வந்திச்சி, அத கிளிக்…” என்று நடந்ததை விளக்க வந்தவரை சயனா இடைவெட்டினாள்.
“இல்ல, இல்ல. நமக்கு கம்ப்யூட்டர் மூளை கிடையாது. அதலாம் ரேவ் பார்ப்பா”
“ஏற்கனவே லேப்டாப் கொடுத்தாச்சி” என்று தொழில் சொன்னது.
“ஏதாவது ஃபோன் கால் வந்திச்சா?”
“இல்ல. இது வரைக்கும் எந்த ஃபோன் காலும் வரல” – அமைச்சர்.
“மத்தவங்களுக்கு?”
“யாருக்கும் வரல”
“சரி. நீங்க இப்ப என்ன செய்யணும்னு சொல்றேன். அத ஃபாலோவ் பண்ணுங்க”
சரி என்றபடி தலையாட்டினார் பேச்சைப் பேசிய அமைச்சர்.
“உடனே ஒரு பிரஸ்மீட் அரேஞ்ச் பண்ணுங்க”
“அது எதுக்கு?” – இது போலீஸின் விசாரணை.
“நான் பேசறப்ப குறுக்க பேசக்கூடாது. சொல்லுங்க அங்க… ” என்று கூறி, அமைச்சரிடம் போலீஸை நோக்கி கை காட்டினாள்.
“யோவ் சும்மா இருய்யா” என்று போலீஸ் வாய்க்கே விலங்கு மாட்டப்பட்டது அமைச்சரால்.
“நீங்களா முன்வந்து வரி கட்டினதா ஒரு ஸ்டேட்மென்ட் பிரஸ்கிட்ட கொடுத்திருங்க”
“நாங்க யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைக்கிறோம். நீ என்னடானா?”
“உங்கப்பணம் பேங்க்ல இருந்து போயிருக்கு. ஆனா திருடு போகல. வேற எப்படிக் கண்டுபிடிக்கிறது?”
“ஆனா, பிரஸ்மீட் வைக்காம கண்டுபிடிக்க முடியாதா?”
“முடியும். ஆனா டிலே ஆகும். நீங்க எலக்சனுக்கு முன்னாடி கண்டுபிடிக்கனும்னு சொல்றீங்கள. அதான் இந்த ஐடியா. இன்னொரு விஷயம் இதுல இருக்கு”
“என்னது?”
“நீங்க சொல்றதுக்கு முன்னாடி, யாரு ஹேக் பண்ணாங்களோ அவங்க போய் மக்கள்கிட்ட சொல்லிட்டா? அது ரொம்ப பெரிய பிரச்சனையாகும். கண்டிப்பா அத சால்வு பண்ணவே முடியாது. அது உங்க மேல ஒரு ப்ளாக் மார்க்”
இன்னாள் அமைச்சரின் எதிர்காலம் காண்பிக்கப்பட்டது இங்கே.
“அப்படி மட்டும் இருந்தா, உங்க கட்சியே உங்க மேல ஆக்சன் எடுப்பாங்க. அப்புறம் பதவியெல்லாம் போயிரும். இது மாதிரி எந்த ஒரு சிஐடி ஆபீஸருக்கும், ஹையர் அபிஷியல வச்சி பிரஷர் கொடுத்து, வீட்டுக்கே வரவைக்க முடியாது. அந்த நல்ல எண்ணத்திலதான் சொல்றேன்”
இவள் தன்னை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறாளா? அல்லது, தன்னை அழிக்க பிரச்சாரம் செய்கிறாளா? – இது அமைச்சரின் எண்ண ஓட்டங்கள்.
“விட்டா நீயே போய் சொல்லுவ போல” – போலீஸ் சயனாவிடம் கேட்டது.
“எனக்குத் தேவைனா அதையும் செய்வேன்” – கத்தி போல் பதில் வீசப்பட்டது.
அதிகாரத்தில் இருப்பதால் ஆணவச் சிரிப்பு சிரித்தது அரசியல்வாதியின் குரல்.
“எனக்குத் தெரியும், இப்ப நான் யார்கிட்ட சொன்னாலும் எதுவும் ஆகப் போறது கிடையாதுனு. நான் அத பத்திலாம் யோசிக்கல. உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். ஆனா நான் சொல்ற மாதிரி நீங்க கேக்கனும்” என்றாள், அந்த அதிகாரத்தைப் பார்த்து.
“ஆனா எப்படியும் மக்கள் கேட்பாங்கள?? அமைச்சரா இருந்துட்டு, இவ்வளவு நாளும் வரி கட்டலன்னு?” – காவல் கேட்டது.
“கண்டிப்பா கேட்பாங்க. அவர் பிரஸ்மீட்ல சொன்னதுனால, அத ஃபாலோவ் பண்ணி நாங்களும் வரி கட்டினோம்னு அடுத்தடுத்த நீங்க மூனு பேரும் பிரஸ்மீட் வச்சிச் சொல்லுங்க”
“இத உண்மைனு நம்பி வேற யாராவது இதயே பாலோவ் பண்ணாங்கனா?” – இது தொழிலதிபரின் கவலை.
“அமைச்சரே இன்ஷியேட்டிவ் பண்ணதாலதான், இவ்வளவு நடந்திருக்கின்னு மக்கள் நினைக்க ஆரம்பிப்பாங்க. உங்க எலக்சனுக்கு அது ஒரு பிளஸ்” என்ற சயனாவின் முழுப் பார்வையும் அமைச்சரிடத்து இருந்தது.
“ஆனா…” என்று காவல் சந்தேகமாக ஆரம்பிக்கும் போது,
“ப்ச் உங்கள அடுத்த எலக்சன்ல இவரே ஜெயிக்க விட மாட்டார் போல” என்று காவலையே கைதி ஆக்கினாள் சயனா.
“யோவ் என்னய்யா அப்படி ஏதாவது ப்ளான் பண்றீயா?” – இது இன்னாள் அமைச்சரின் இப்போதைய பயம்.
“ஐயோ, அப்படிலாம் இல்ல சார்” – காவல் வழிசல் சிரிப்பு சிரித்து சமாளித்தது.
சிறு சமயம் அவர்கள் அனைவரும் யோசித்தார்கள்.
“நீங்க யோசிச்சி ஒரு முடிவு எடுங்க. நான் கிளம்புறேன். பிரஸ்மீட் வைக்கறதும் வைக்காததும் உங்களோட இஷ்டம்”
“அட இரும்மா. நீ சொன்ன மாதிரி செய்றோம்” – அரசியல்.
“ஓகே என்ன பேசனும்? எப்படி பேசனும்? எந்தெந்த இன்டர்வெல்ல பிரஸ்மீட் கொடுக்கனும்னு… சொல்றேன்” என்று எல்லாம் சொல்லிவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினாள்.
“எலக்சன் வரதுக்குள்ள கண்டுபிடிச்சிருவியா? இல்லனா பெரிய பிரச்சினை ஆயிரும்” – தேர்தல் மட்டுமே தேவையாகிப் போன அமைச்சரின் கேள்வி இது.
“இத வரி கட்டாம இருக்கும்போதே யோசிச்சிருக்கனும்” என்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் சயனா.
‘உன் தேவைக்கெல்லாம் என்னால வேலை செய்ய முடியாது’ என்று சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்றாள்.
“சார், எப்படிப் பேசிட்டுப் போறா பாருங்க. நீங்க அவளுக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க.” – பொறாமையில் பொங்கிய காவல் அமைச்சரிடம் சொன்னது.
“எப்படிச் சொல்ற?”
“சார், அவ சொல்றத அப்படியே கேட்கிறீங்கள”
“ராத்திரி இந்த பிரச்சனைய உன்கிட்ட சொன்னப்ப, நீயும் என்கூட சேர்ந்துகிட்டு பணம் போச்சேன்னு பொலம்பத்தான செஞ்ச”
தலை குனிந்தது கேள்வி கேட்ட உருவம்! அந்த உருவம் காவல்!!
“ஏதாவது ஒரு யோசனை சொன்னீயா? ஆனா அந்தப் பொண்ணு வந்துச்சி, கடகடன்னு அத பண்ணுங்க… இத பண்ணுங்கன்னு… கண்டுபிடிச்சித் தரேன்னு சொல்லிட்டுப் போகுது”
“ஆனாலும் அது ரொம்பத் திமிரா பேசுது” – இது திமிரைத் தனக்கு மட்டுமே குத்தகைக்கு எடுத்த தொழிலதிபர் பேச்சு.
“ஆள் யாருன்னு மட்டும் கண்டுபிடிச்சிக் காட்டட்டும். அதுக்கப்புறம் இவளைப் பாத்துக்கலாம். இப்போதைக்கு, இவ சொல்றதைக் கேட்டுத்தான் ஆகனும்” – அரசியல்வாதியின் அறம்.
மேலும், “ஆனா யாருன்னு மட்டும் தெரியட்டும், நான் யாருன்னு காட்டறேன்” என்றவர் முகம் காட்டிய கோபத்தை, சயனா கண்டிருந்தால் பயந்திருப்பாளோ?
ஏனெனில் அவருடைய முகத்தில் அத்தனைக் கடுங்கோபம் வெளிப்பட்டது!!
வெளியே வந்த சயனா, நேரே கனகா மேமிடம் சென்றாள். இருவரும் பேசிக் கொண்டே வாசல் நோக்கி நடந்தனர்.
“அவங்கள பிரஸ்மீட் அரேஞ்ச் பண்ணச் சொல்லிருக்கேன் மேம்”
“சயனா அவங்க வெளியில தெரியக் கூடாதுன்னு நினைக்கிறாங்க”
“இப்படிப் போய் சொன்னாதான், யாரு ஹேக் பண்ணாங்களோ அவங்களோட அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு நமக்குத் தெரியும்”
“இது தொடர்ந்து நடக்கும்னு நினைக்கிறியா?”
“தெரியல மேம். பார்க்கலாம். சப்போஸ் தொடர்ந்து பண்ணாங்கனா, விஷயம் பெருசு. நம்ம தேடவேண்டிய சர்க்கிளும் பெருசாகும்”
“தொடரலனா?”
“அப்படினா அவங்களோட டார்கெட் இந்த நாலு பேரும்தான். அப்போ இவங்க நாலு பேரு…” என்று பாதியிலேயே நிறுத்தியவள், “அத இங்கே பேச வேண்டாம். நம்ம இடத்தில போய் பேசலாம்” என்றாள்.
இவர்கள் வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது, ரேவின் அருகே அந்தக் காவல்துறை நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தது. அந்தப் பேச்சும், பார்வையும் சரியில்லை என்று தோன்றியது சயனாவிற்கு.
“என்ன சயனா?” – கனகா மேம்.
“இது யாரு மேம்? எந்த ஏரியா?”
“ஏன் சயனா?”
“பார்வையே சரியில்ல” என்றவள், “ஒரு நிமிஷம் இருங்க” என்றாள் அவரிடம். “ரேவ், என்ன பண்ற?” என்றாள் சத்தமாக.
“இல்ல சயனா, இவங்க லேப்டாப்ப போலீஸ் ஸ்டேஷன்ல வந்து வாங்கிக்க சொல்றாங்க” என்றாள் ரேவ்.
இதுதான் சயனாவிற்கும் ரேவிற்கும் இடையே உள்ள நட்பு. யாராவது ரேவைத் தவறாக ஒரு பார்வைப் பார்த்தாலோ இல்லை, தவறாக ஒரு வார்த்தைச் சொன்னாலோ, சயனாவின் கோபம் எல்லைத் தாண்டிடும்.
“இங்க என்ன லேப்டாப் சர்வீஸ் பண்ணவா வந்தோம். அங்க வந்து வாங்கு… இங்க வந்து வாங்குனா… அவங்களுக்குத் தேவைனா நம்ம ஆபீஸ்ல வந்து கொடுக்கச் சொல்லு” என்றாள் அடங்காதக் கோபத்துடன்.
அதைக் கேட்டதும் காவல்துறை அதிகாரி மீண்டும் உள்ளே சென்றுவிட்டது.
“ரேவ், நீ ஏன் இங்க இருந்து பாத்துட்டு இருக்க. கிளம்பு ” – இன்னும் அவள் கோபம் குறையவில்லை.
சயனா சொன்ன அடுத்த நிமிடமே ரேவ் எழுந்து, அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்கு அருகில் வந்தாள்.
“நீ எதுல வந்திருக்க” – சயனா.
“கார்லதான். நீ ஏன் இவ்வளவு கோபப்படுற? ஜிம் பக்கமே போகாத. யோகா பண்ணு சயனா. அப்பதான் கோபம் குறையும்” என்றாள் ரேவ்.
“சரி சரி, நீ போ. ஹேக்கிங் டிடெயில்ஸ் கலெக்ட் பண்ணு”
“பேச்ச மாத்தாத சயனா!… பை மேம்” என்று இருவரிடமும் விடை பெற்றுச் சென்றாள், ரேவ்.
“உன்கிட்ட ஒன்னே ஒன்னு சொல்றேன். நீ மட்டும் கொஞ்சம் பார்த்துப் பேசு. அவங்க ஆட்சிதான் நடக்கு. அப்புறம் நம்ம டிபார்ட்மென்ட் ஹையர் அபிசியலும் சொல்லிருக்காங்க” – கனகா மேம்.
“என்ன சொல்லிருக்காங்க… நம்ம ஹையர் அபிசியல்ஸ்”
“எவ்வளவு ஸ்மூத்தா முடிக்க முடியுமோ, அவ்வளோ ஸ்மூத்தா முடிச்சிட்டு விலகிறனும்னு”
“ஓ” என்று புருவத்தை உயர்த்தினாள்.
“நீ மட்டும் கோபப்படாம இருந்தா, நீ என்ன கேட்டாலும்… நான் செய்றேன்”
“ரியலி, டெய்லி என் என்பீல்டுக்குச் சாப்பாடு போடுறீங்களா?”
‘என்பீல்டிற்கு சாப்பாடா?!’ என்று அதிர்ச்சியானவர், “ஹேகஹே, ஹேகஹே! நீ யாருகூட வேணாலும் மல்லுக்கட்டு… யாருகூட வேணாலும் சண்டை போடு. எனக்கென்ன?” என்று அவரும் கிளம்பத் தயாரானார்.
சிறிது தூரம் தள்ளிச் சென்றவர், “சயனா, அந்தக் கேமராமேனுக்கு ஓகே சொல்லு, அப்போ அவனே வந்து என்பீல்டுக்கு சாப்பாடு போடுவான்” என்று நக்கலாகச் சொல்லி, அவள் பதில் பேசுவதற்குள் விரைவாகச் சென்றுவிட்டார்.
சயனா சிரித்தபடி அவளது என்ஃபீல்டு இருக்கும் பக்கத்திற்குச் சென்றாள்.
ராயல் ராக்கெட்டாக மாறியது.
நகரத்தின் முக்கியமான இடத்தில் அமைந்திருந்தது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. இனிப்புக் கடைகளில் மைசூர்பாக் அடுக்கி வைத்திருப்பார்களே, அதுபோல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது அந்தக் கட்டிடத்தின் வீடுகள்.
‘மெட்ரோ ரயில்’ ஓடும் வேகத்துடன் என்பீல்டை ஓட்டி வந்து, அடுக்குமாடிக் கட்டிடத்தின் பார்க்கிங்கில் நிறுத்தினாள். அவள் பாணியிலே, ‘பைக் ஸ்டேண்ட்’ போடப்பட்டது.
கட்டிடத்தின் முழுஉயரம் கால் சதவீதத்தைத் தாண்டி இருந்தது. ஆனால் சயனாவின் முகவரி என்னவோ எட்டாவது தளத்திலேயே முடக்கப்பட்டது.
மின்தூக்கி இருந்தும் அதனை நாடாமல், கடகடவென படிகளில் ஏறினாள். எட்டாவது தளத்திற்கு வந்த பின்தான் நிற்கவே செய்தாள். மூச்செல்லாம் இரைக்கவேயில்லை. அத்தனை பழகிய விஷயம் இது. ஜிம் சென்று, இறுகிப் போன தேகம் அவளுடையது.
மொத்தத்தில் ‘ஜிம் கேர்ள்’!
சாவி கொண்டு வீட்டைத் திறக்கும் சத்தம்தான் வீட்டிலிருந்த அமைதியைக் கலைத்தது. லேசாக முகம், கைகள் மட்டும் கழுவினாள். முழுக்கைச் சட்டையை முக்கால் தூரம் வரை மடக்கிக்கொண்டு, நேராகச் சமையலறைச் சென்றாள்.
சண்டைக்குப் போகிறாளா? இல்லை, சமைக்கப் போகிறாளா?
வாயில் சுவிங்கத்தைப் போட்டு அரைத்துக் கொண்டே, தன் போக்கில் இரவு உணவு தயாரிக்க ஆரம்பித்தாள்.
“மேம்” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். அங்கு நின்றவள், சயனா தாயாரைக் கவனித்துக்கொள்ளும் செவிலியர்.
கையாலே ‘நீங்க கிளம்புங்க’ என்று சைகை செய்தபடி, மீண்டும் சமையலில் கவனம் தொடரப்பட்டது.
“அம்மா இன்னைக்கும் சரியா சாப்பிடல, மேம்”
‘நான் பார்த்துக்கிறேன்’ என்பது போல் இமை மூடித் திறந்தாள்.
அவர் சென்றவுடன், கஞ்சியைக் கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு, தாயின் அறையை நோக்கிப் போனாள் சயனா.
தாயின் அறைக் கதவைத் திறந்தவுடன் மருத்துவமனை உணர்வுதான் வந்தது. சுற்றிலும் அத்தனை உபகரணங்கள், அந்தத் தாயின் உயிரைப் பிடித்து வைத்திருக்க வேண்டி.
அவர் வாழ்க்கை கடந்த ஒரு வருடமாகவே இப்படித்தான் நகர்கின்றது. முதல் ஆறுமாதம் மருத்துவமனையில் இருந்தார். பின் மருத்துவர் அறிவுரைப்படி மாற்றத்திற்காக இந்தவாறு மாற்றி இருந்தார்கள்.
“சயனா வந்திட்டயா” – ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வருவது போல் இருந்தது, அந்தத் தாயின் குரல்.
அத்தனை மருந்தின் நெடியிலும் தன் மகளின் வாசத்தைக் கண்டறிய முடிந்தது, அந்தத் தாய்க்கு.
தன் தேகம் இறுகிப் போனது என்று நினைத்தாலும், அந்த அறைக்குள் வந்து, அந்தக் குரலைக் கேட்கும் போது முற்றிலும் உடல் தளர்ந்து விடுவது போல் உணர்வு சயனாவிற்கு.
“ம்ம்ம்” என்றாள் கஞ்சியை ஆர வைத்துக் கொண்டு.
“இன்னைக்கு நாள் எப்படி இருந்தது?” – குரல் ஓய்ந்து தேய்ந்து போய் வந்தது அவள் அம்மாவிடமிருந்து.
“நீ, ஒரு வாய் கஞ்சி குடிக்கனும் மா. அப்பத்தான் நான் சொல்லுவேன்” என்று கட்டளையிட்டு, ஒரு வாய் புகட்டினாள்.
அடுத்த வாய் புகட்டிக் கொண்டே என்ன நடந்தது என்று சொன்னாள்.
“எரிச்சலா இருக்கு. இதெல்லாம் ஒரு கேஸூன்னு? வருது பாரு எனக்குனு” – தன் ஆதங்கத்தை அம்மாவிடம் கொட்டினாள்.
“அப்படிச் சொல்லக் கூடாது. இந்த வேலையை வச்சி எத்தனை பேருக்கு நல்லது பண்ணிருக்க”
“அதுக்கு… இந்த மாதிரி கேவலமான காரியம் பண்ணனுமா?”
“நாலு நல்லவங்களுக்கு உதவனும்னா, ரெண்டு கெட்டவங்களுக்கு உதவுனாதான் முடியும்கிற நிலைமை. அத நீ புரிஞ்சிக்கனும். அதனால இதலாம் யோசிக்கக்கூடாது” – நடப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் தாய்.
“அதான் கேஸ கையில எடுத்திருக்கேன். நீ பேசாம சாப்பிடு மா”
“சயனா, நீ எப்படிப் பேசினன்னு அம்மாகிட்ட சொல்லிக் காட்டு”
வாழ்க்கையில் அடிபட்டே வாழ்ந்து வந்தவர். மகளின் அடாவடியைப் பார்க்க ஏங்கும் ஏக்கம் அவர் கண்களில் தெரிந்தது.
சிலவற்றைச் சொல்லிக் காட்டினாள். அதேபோல் சிலவற்றைச் செய்தும் காட்டினாள். அதில் அந்தத் தாய்க்கு அப்படி ஒரு ஆனந்தம்.
சில சமயம் தன்னையும் அறியாமல் கைதட்ட வேண்டும் என்று நினைத்து, அது அவர்க்கு முடியாமல் போனது.
அதைப் பார்த்த சயனா, “இன்னொரு வாய் குடி ம்மா” என்றாள் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு.
“வேண்டாம் சயனா, அம்மாவால முடியலைடா” என்று மறுத்துவிட்டார்.
கிண்ணத்தை எடுத்துப் பக்கத்தில் வைத்துவிட்டு, “சரி நீ தூங்கு மா” என்றாள்.
“இந்த ஆப்பிரிக்கா பையனப் பத்திப் பேசலாமா”
தாய் மகளுக்கு கடந்த பத்து நாட்களாக நடக்கும் பேச்சுகளில் இதைப் பற்றியும் பேச்சு இருக்கிறது.
“மனோகர் நல்ல பையன் சயனா”
“ம் ” – வழக்கம்போல ‘ம்’ கொட்ட ஆரம்பித்தாள்.
“காட்ல கேமராமேனா இருக்கிது. போட்டோவும் எடுக்குமாம். அந்தப் பையன் எடுக்கிற போட்டோ, புக்லகூட வருமாம்.”
“ம்”
“பாவம்டா… யாருமே இல்லாத பையன்”
“ம்”
“அதுக்குப் புடிச்ச வேலைங்கறதால, காட்டுக்குள்ள போய் இருக்குது”
ஒரு கட்டத்திற்கு மேல் ‘ம்’ கொட்ட முடியாமல், “போதும் ம்மா, நீ தூங்கு” என்று போர்வையைச் சரி செய்தாள். “இப்போதான் இந்த கேஸ எடுத்திருக்கேன். எப்ப முடியும்னு தெரியல. அதனால இந்த நேரத்தில இதைப் பத்தி பேச வேண்டாம்”
“இல்ல சயனா”
“எதயும் யோசிக்காம தூங்கு மா” என்று அவர் தலையைத் தடவிக் கொடுத்தபடி இருந்தாள்.
மகளின் அந்தத் தலைக் கோதலில் தாய் கண்மூடித் தூங்க ஆரம்பித்தார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கணவன் மறைவு… சுமையாய் நினைத்த சொந்தங்கள்… சோதனை போக்காத சுற்றங்கள்… இவற்றுக்கிடையில், தன் பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாரோ அதே போலவே உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.
ஆம்! சயனா பார்க்கும் வேலை அவளுடைய அம்மாவின் ஆசை, கனவு. மகளின் வேலையை நினைத்து பெருமை, கர்வம், பூரிப்பு எல்லாம் உண்டு அவருக்கு.
ஆனால் இன்று அவள் இந்த நிலைமையில் இருக்கும்போது, சந்தோஷமாக அதை உணர முடியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
சிறிது நேரம் சென்றதும், அவர் தூங்கிவிட்டார் என்று நினைத்து, சயனா எழுந்து கொள்ள நினைத்தாள்.
ஆனால் சயனாவின் தாயோ, அவளது கையைப் பிடித்து, “நீ அந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டனா, அம்மா சந்தோஷமா இருப்பேன்” என்றார்.
“நீ தூங்கு மா, நான் பார்த்துக்கிறேன்” என்று திரும்பவும் தட்டிக்கொடுத்துத் தூங்க வைத்தாள்.
அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார் என தெரிந்ததும், இரவுவிளக்கைப் போட்டுவிட்டு, அவளுடைய அறைக்குச் சென்றாள்.
இது இவளது அறையா அல்லது இரும்பு பட்டறையா என்பது போல் அறை முழுவதும் உடற்பயிற்சி உபகரணங்கள்.
அழுக்குப் போகவும், அசதி தீரவும் குளியல் போட்டுக் கொண்டு வந்தாள்.
தொலைக்காட்சிப் பெட்டியை ஓட விட்டாள். ஒரு சுவிங்கத்தை எடுத்து சுவைத்துக் கொண்டே, மெத்தையில் அமர்ந்தாள். நாலு கிலோ எடையுள்ள டம்பிலை(dumbell), ஒரு கரத்தில் பளு தூக்கிக் கொண்டே டீவியைப் பார்த்தாள்.
ஒவ்வொரு ஊடகங்களிலும் அந்த நாலு பேரின் பிரஸ்மீட் செய்திதான் ஓடிக் கொண்டிருந்தது. விமர்சினங்கள், விவாதங்கள், எதிர்ப்புகள், கண்டனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும்… மற்றொரு பக்கம் இது ஒரு முன்மாதிரிச் செயல் என்று கொட்டமடித்துக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது.
உண்மையைப் பார்ப்பது என்பது வேறு… பொய்யை உண்மையாகப் பார்ப்பது என்பது வேறு… ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டியது. அப்படியே டம்பிலைக் கீழே போட்டுவிட்டு டிவியை ஆஃப் செய்தாள்.
அமர்ந்திருந்தபடியே பின்புறமாக மெத்தையில் சாய்ந்தாள்.
இப்போது அவளுடைய எண்ணமெல்லாம், இப்படிச் செய்தவன் யார்? என்ன செய்து கொண்டிருப்பான்? இதையெல்லாம் பார்க்கும்போது அவன் எதிர்வினை எப்படி இருக்கும்… என்ற கேள்விகள் மட்டுமே!!
யாழோவியம்
ஊழலுக்கும் உணர்வுகளுக்கும் இடையே நடக்கும் ஒரு காதல் போராட்டம்! இது இந்தியாவில் நடந்த ஒரு ஊழலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை!!
Read Now →